Wednesday, January 9, 2013





கேள்வியின் நாயகனே ......

நகராட்சி அலுவலகத்திற்கு எதிர்த்த வயல்வெளிகளில்தான் ஆண்டுதோறும் ஆனித் திருவிழா பொருட்காட்சி நடை பெறும்.அதனால் அந்த வயல்களில் நடவு நட சற்றுப் பிந்தி விடும்.கிட்டத்தட்ட 40 நாட்கள்,ஒருமண்டலம், ஆயிரக் கணக்கானவர்களின் லட்சம் தடவையிலான காலடிகள் பட்டு அந்தக் களிமண் பூமியே இறுகிப் போயிருக்கும். உழுவது சுலபமில்லை. சிலர் அந்தப் பூவில் (பிசானம் பருவத்தில்) நடுகையே  செய்யாமல் தரிசாகக் கூடப் போட்டு விடுவார்கள். “ எம்பூட்டு மகசூல் வம்பாப் போச்சு.. என்று தாலுகா ஆஃபீசுக்கு வரும் கிராமத்து சனங்கள் ‘வாப்பாறுவதைக் கேட்கக் கஷ்டமாக இருக்கும்.பழைய இடத்திலேயே நடத்தலாம் என்றால் அங்கே பார்வதி டாக்கீஸ் வந்து விட்டது.பொருட்காட்சி 1960-க்கு முன்னால்,  ரத்தினா டாக்கீஸுக்கு எதிர்த்த ஆசிரிய பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடைபெறும்.நாடகங்களுக்கான தகரங்கள் வைத்து மறைத்த அரங்கம், பார்வதி தியேட்டர் இருக்கும் இடத்தில் தனியே இருக்கும். அங்குதான் தினமும் நாடகங்கள்,இசைக் கச்சேரிகள் நடைபெறும்.அருமையான கர்நாடக இசைக் கச்சேரி நடை பெறும் அன்றைக்கு அந்தப் பக்கம் ஆள் நடமாட்டமே இருக்காது.அதிலும் நீண்ட காலமாக நகர் மன்ற உறுப்பினர் ஒருவரின் அம்மாதான் முதல் நாள் பாடுவார்கள்.மாமி என்னவோ நன்றாகத்தான் பாடுவதாகச் சொல்லுவார்கள்.ஆனால் ரசிகனுக்கு ஞானம் வேணுமில்லையா.
     ஒரு வருடம், காங்கிரஸ் ஆட்சி தன் முடிவை நெருங்குகிற நேரம் என்று நினைவு. நகராட்சி தி.மு.க வசம் இருந்தது.அதனால் நகராட்சிக்கு எதிர்த்த வயல் வெளிகளின் உடைமையாளர்களில் சிலர் தங்கள் வயலைத் தர மறுத்து விட்டார்கள்.அதனால் நகராட்சிக்குப் பின்னாலுள்ள வயல் வெளிகளில் ( அவற்றில் சில வயல்களில் தண்ணீர் பாய்ச்சி, தொழி, மரம் எல்லாம் அடித்து முடித்து நாற்றுப் பாவும் வேலைதான் பாக்கி இருந்தது. அதையெல்லாம் நிறுத்தி வைத்து) அவசர அவசரமாகப் பொருட்காட்சி ஏற்பாடுகள் நடந்தன.நாடக அரங்கெல்லாம், ஒன்றரை ஆள் உயரத்திற்கு, சுற்றி மட்டுமே, தகரத்தால் மறைக்கப் பட்டிருந்தது. மேலே திறந்த வெளிதான்.அந்த வருடம் பிரபல நடிகர்களின் நாடகங்கள் எதுவும் இல்லை. எம்.ஜி.ஆர் நாடோடிமன்னன் படத்திற்குப் பின் நாடக மன்றத்தையே கலைத்து விட்டார். அதனையெல்லாம் விற்று படத்தில் போட்டு விட்டார்.சிவாஜி வரமறுத்து விட்டதாக சேர்மன் மஜீத் அண்ணாச்சி பொருமிக் கொண்டிருந்தார். நகராட்சி சார்பாக எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தது ஒரு காரணம், என்று பேசிக் கொண்டார்கள்.அப்போது சிவாஜி “தேன்கூடு “, நீதியின் நிழல்” ஆகிய நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார். கட்டபொம்மன் திரைப் படமாகிவிட்டது.
     மனோகரின் இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், காடகமுத்தரையன், எல்லாம் சினிமாவை விட  பிரபலமான, கூட்டம் மொய்க்கும் முக்கியமான நாடகங்கள்.அவை வழக்கமான வரவேற்புடன் நடைபெற்றன.மற்றப்படி உள்ளூர் அமெச்சூர் ஆர்டிஸ்டுகள் நாடகம் நடந்தது. “நெல்லை எஸ்.கே இரணியணின்சீமான் பெற்ற செல்வங்கள், நெஞ்சில்பட்ட வடு, இரண்டும் பிரபலம்.திருநெல்வேலியைச் சேர்ந்த ‘பிரபல சினிமா நடிகை, நாஞ்சில் நளினி கதாநாயகி.சீமான் பெற்ற செல்வங்கள் ஆர்.ஆர்.சந்திரனால் சினிமாவாக எடுக்கபட்டது.கல்யாண் குமார்,எஸ்.ஏ. அசோகன் நடித்தது. தேவிகா உண்டா நினவில்லை.அந்த வருடம் கலைவாணர் என்.எஸ்.கேவின் மகன் கோலப்பன் புதிதாக ஒரு நாடகக் கம்பெனி ஆரம்பித்து ஒரு நாடகம் போட்டார். பெரிய இடத்துப் பெண், பணக்காரக் குடும்பம் போன்ற எம்.ஜி.ஆர் படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்திருந்தார். என்.எஸ்கே வின் நாடகக் கம்பெனி அவர் காலத்தில் பிரபலமானது.கோலப்பன் நாடகம் ரொம்ப சுமார் ரகம்.mak மக்கள் அவ்வளவாய் ரசிக்கவில்லை.அவரிடம் என்.எஸ்.கே வையே எதிர் பார்த்தார்களோ என்னவோ.
அந்த வருடம் எஸ்.எஸ்.ஆரின் மணிமகுடம் நாடகம்தான் ஹை லைட். பொதுவாக சிவாஜி, எம்.ஜி.ஆர் நாடகங்களை கடைசி மூன்று நாட்களுக்கு ‘ஹைலைட் ஆகப் போடுவார்கள்.எம்ஜி.ஆரின் நாடகங்கள்,அட்வகேட் அமரன், சுமைதாங்கிஇன்பக்கனவு.அவை நடந்து முடிந்த பின் அரங்கமே கூட்டத்தினால் நொறுங்கிப் போயிருக்கும். இந்த முறை கடைசி நாளன்று எஸ்.எஸ்.ஆர் நாடகம்.அநேகமாக எல்லா நாடகங்களையும், நகராட்சியில் பணிபுரிந்த என் அக்கா கணவர் வாங்கித் தந்த ஓசிப் பாஸில் பார்த்தவனுக்கு,மணிமகுடத்திற்கு பாஸ் கிடைக்கவில்லை.எஸ்.எஸ்.ஆர் மிக மிக தாமதமாக வந்தார். வரவேமாட்டார். வரும் நிலையில் அவர் இல்லை என்று ஏகப் புரளியாகக் கிடந்தது. அதனால் அரங்கமே கூச்சலில் மூழ்கி இருந்தது.
சேர்மன் அறையை ஒட்டி ஒரு சிறிய பாதை அமைத்திருந்தார்கள்.அதை பிரப்பம் தட்டியால் மறைத்திருந்தார்கள். அவரது அறையின் பின் புறம் வழியாகவும் அந்த மறைப்பினூடாகவும்தான்  நடிகர்கள் ஸ்டேஜுக்குச் செல்ல ஏற்பாடு.நாங்கள் சிலர் ஓசிப்பாஸுக்காக சேர்மன் அறையருகே நின்று கொண்டிருந்தோம்.திடீரென்று ஒரு கார் வந்தது. எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி இருவரும் வேகமாக இறங்கிச் சென்றார்கள்.இன்னொரு ஜீப் மாதிரி வண்டியில்,நாலைந்து பேர் சில பெட்டிகளுடன் வந்தார்கள்.அதில் முன் தலை வழுக்கையாய் இருந்த ஒருவர், தம்பி, இந்தப் பெட்டிய கொஞ்சம் உள்ளே கொண்டு வாங்க.... என்று என் அருகே நின்றிருந்தவரிடம் சொன்னார்.இதுதான் சாக்கு என்று சற்றே பெரிதாக இருந்த அதை நாலு பேரும் தூக்கிக் கொண்டு மேக் அப் ரூமுக்குள் போனோம்.அதை வைத்த விருத்தியில் ஒருத்தன் அரங்கத்திற்குள் நுழைய, ....ஏல ஏல எங்கலெ உள்ள வாரீங்க.... என்று எங்களை விரட்டி விட்டு தட்டிக்கதவைச் சாத்தி விட்டார்கள். சரியான இருட்டாகிவிட்டது அந்தப்பாதை. நாடகத்திற்கு மணிஅடித்து ஆரம்பமாகி விட்டது. அங்கேயே நின்று பிரப்பம் தட்டியின் இடுக்குகள் வழியே பார்த்துக் கொண்டிருந்தோம். கொசு காலைப் பிடுங்கிக் கொண்டிருந்தது. விஜயகுமாரி டச் அப் செய்து கொண்டிருந்தார். முகமெல்லாம் ஒரே ஜிகினா பளபளத்தது, சுருண்ட முடி, செக்கசெவேலென்று இருந்தார்.மேலே போர்த்தியிருந்த ஷா(வ்)லை பட்டென்று நீக்கி விட்டு, ஆச்சரியமான வேகத்தில் ராஜரீகமான உடையொன்றை அணிந்து கொண்டார். இதையும் நாடக ஒத்திகையில் சொல்லித் தருவார்களோ என்னவோ.அதே வேகத்தில் ஸ்டேஜுக்கும் போய் விட்டார்.
நாடகம் ஏற்கெனவே துவங்கி இருந்தது. தாடியுடன் எஸ்.எஸ்.ஆர் ஸ்டேஜிலிருந்து வந்தார். இவர் எப்படி அதற்குள் தாடிக்கு மாறினார் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர், ஃப்ளாஸ்க் போல ஒன்றிலிருந்து  எதையோ தம்ளர் ஒன்றில் ஊற்றிச் சாப்பிட்டார்.எங்களிடம் பெட்டியை எடுக்கச் சொன்னவர், -அவரும் விக் எல்லாம் வைத்து மேக் அப்புக்கு மாறி இருந்தார்,கையில் ஸ்கிரிப்ட் வைத்திருந்தார்-ஃப்லாஸ்கை அவசரமாக வாங்கி விட்டு அதைக் கொடுத்தவரை சத்தம் போட்டார்.எஸ்.எஸ்.ஆர் மறுபடி ஸ்டேஜுக்குப் போய் விட்டார்.தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அவர்தான் டி.வி நாராயணசாமி என்று சொன்னார்கள். திராவிட இயக்கத்தின் மூத்த சினிமாக் கலைஞர்.அவர் சிறந்த நடிகர். கொஞ்ச நாளிலிலேயே அவர்  ‘அவன் பித்தனா?’ படத்தில் நடித்ததை முதல்நாள், முதல்க் காட்சியில் பார்த்த போது ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்தோம்.மீண்டும் விஜய குமாரி வந்தார்.இப்போது அவருக்கு நீண்ட ஸ்லீவ்ஸ் கொண்ட, இடுப்புக்கும் கீழ் வருகிற  ஒரு கருப்பு மேலுடையும், சிகப்புப் பாவாடையையும் தயாராக ஒரு பெண், (சந்திரகாந்தா போலிருந்தார்) எடுத்து நீட்டிக் கொண்டிருந்தார்.நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த தட்டி நெளிந்து, சரசரத்து, சத்தமெழுப்பியது. அதை உணர்ந்தாரோ என்னவோ, சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, விளக்கை அணைக்கச் சொன்னார்.விளக்கு அணைந்ததும் இங்கே கூச்சல் எழுந்தது...” ஏல நல்ல கட்டத்துல கெடுத்திட்டீங்களேலெ...” அதற்குள் முனிசிபல் பியூன் இரண்டு பேர், ஓடுங்கலே என்று சத்தம் போட்டுக் கொண்டே வந்து, அவர்கள் அங்கே நின்று கொண்டு விட்டார்கள்.மறுநாள் தந்திப் பேப்பரில் அதே கறுப்பு சிகப்பு டிரஸ்ஸில், மேடையில் விஜயகுமாரி நடிக்கும் காட்சியை, (கறுப்பு வெள்ளை) போட்டோவாகப் போட்டிருந்தார்கள்.எங்களில் சிலர் பெருமூச்சோடு அதைப் பார்த்தார்கள்.
     எஸ்.எஸ்.ஆர் ஏற்கெனவே அவரது முத்து மண்டபம்நாடகத்தைப் படமாக எடுத்து விட்டார். மணிமகுடம் ஒன்றைத்தான் அவ்வப்போது நடித்து வந்தார்.அதையும் விஜயகுமாரி ரோலில் ஜெயலலிதா நடிக்க படமாக்கினார்.அதில் இலட்சியத் தம்பதிகளுக்கிடையே சற்று பிரிவு ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பின. படம் ஓடவே இல்லை.ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நடித்த புதுமைப் பித்தன் கதையும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.இரண்டுமே கலைஞர் கதை வசனம். முத்து மண்டபம் படத்தில்தான் சந்திரகாந்தா வில்லியாக நடித்துப் பேர் வாங்கினார். அப்புறம், அவர் தெய்வத் திருமகள்,(தேவர், தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் எடுத்த முதல்ப்படம்) அம்மா எங்கே, இது சத்தியம் என்று சில படங்களில் கதாநாயகியாக நடித்தார்.நல்ல நடிகைதான்.அப்புறம் 67-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், சிறு சேமிப்பு திட்ட துணைத்தலைவராக எம்.ஜி.ஆரை அண்ணா நியமித்தார்.கிட்டத்தட்ட ஒரு கேபினட் அந்தஸ்துள்ள பதவி.அப்போது சிறு சேமிப்பை ஊக்குவிக்க ஊர் ஊராக சந்திரகாந்தா நாட்டிய நாடகங்கள், (சிவகாமியின் சபதம்?) எம்.ஜி.ஆர் தலைமையில் நடந்தது.அப்புறம் அவர் தன் சகோதரர் ‘கரகாட்டக்காரன் புகழ் சண்முகசுந்தரத்துடன் நாடகக் குழு  ஒன்றை அமைத்து ‘மணியனின்’ இலவு காத்த கிளி கதையை நாடகமாக நடித்தார்.கவுண்ட மணி படங்களுக்கு காமெடி ட்ராக் எழுதும் ஏ.வீரப்பன் நாடகக்கதை வசனம் எழுதியிருந்தார்.அதையே மணியன் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்று பாலசந்தர் திரைக்கதை வசனத்தில் படமாக எடுத்து வெற்றி கண்டது. வீரப்பன் ட்ரீட்மெண்ட் என்பதாலோ என்னவோ பாலசந்தர், சினிமாவில் வீரப்பனுக்கு ஒரு முக்கியமான ரோல் (சமையல்காரன்) கொடுத்தார்.     வீரப்பன் ஒரு அருமையான படைப்பாளி.கடவுளைக்கண்டேன், போலீஸ்காரன்மகள் படங்களில் சந்திரபாபு-நாகேஷ் இரட்டைக் காமெடி ரொம்பபிரபலம்.அதற்குப் பின் ‘பணத்தோட்டம்படகோட்டி கலங்கரை விளக்கம் படங்களில் நாகேஷ் –வீரப்பன், ,காமெடி பிரபலம்.சில நல்ல படங்களுக்கு கதையும் எழுதுவார்.
அப்பொழுதெல்லாம், சினிமாவில் நடிப்பவர்கள் நாடகக் கம்பெனியும் வைத்திருப்பார்கள்.உண்மையில் நாடகத்திலிருந்து வந்ததுதான் தனித்த அடையாளமுள்ள தமிழ் சினிமா உலகம். திராவிட இயக்கங்களின் பெரிய பங்களிப்பைத் தவிர்த்து,டி.கே.எஸ் சகோதரர்களின் சமூக நாடகங்கள் ஒரு பெரிய திருப்புமுனை.அதற்கு முன் பிரபலமாயிருந்த நாடகங்கள் பெரும்பாலும் சரித்திர சம்பவங்களையே கருவாகக் கொண்டிருந்தவை. டிகே.எஸ்.கூட அரு.ராமனாதன் எழுதிய ‘ராஜராஜ சோழன் நாடகத்தை நடித்தார்கள். எனக்குத் தெரிந்து நாடகத்திற்கு சவுன்ட் ட்ராக் வெளிவந்து இசைத்தட்டுகள் நன்கு விற்றது இதற்கு மட்டும்தான் என்று நினைவு.அந்தக் காலத்தில் விடியற்காலை ஐந்து மணிக்கு,தென் கிழக்கு ஆசிய நேயர்களுக்காக’ டில்லியிலிருந்து ஒலிபரப்பப்படும் ஒரே தமிழ் நிகழ்ச்சியில் அவ்வப்போது இந்த நாடகத்தைப் போடுவார்கள்.எப்போதாவது ஒரே ஒரு தமிழ் சினிமாப்பாட்டு போடுவார்கள். ‘கொய் என்ற இரைச்சலுக்கு(அதுதான் அப்பாவுக்கு சுப்ரபாதம்) நடுவே அதைக் கேட்க நாங்களும் விழித்துக் கொண்டே படுக்கையில் படுத்திருப்போம். ஐந்தரை மணிக்கு அவர், போத்தி ஓட்டல் திறந்ததும்,முறுகலான ரவாதோசை திங்கப் புறப்பட்ட பின் நாங்கள் கேட்டுக் கொண்டிருப்போம்.பெரும்பாலும் சீன எதிர்ப்புப் பிரச்சாரங்களும் அதையொட்டிய நாடகங்களும் போடுவார்கள். ராஜ ராஜ சோழன் நாடகம், சிவாஜி நடிக்க பிரம்மாண்டமான செட்டுகளுடன் ஏ.பி.நாகராஜன் இயக்க தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமாக வந்தது.உமாபதியின் பணத்தைப் பூராவும் விழுங்கிக் கொண்டு படம் ஊத்திக்கொண்டது.படமும் நாடகம் போலவே இருந்ததுதான் காரணம்.டி.கே.எஸ் கம்பெனியிலிருந்து என்.எஸ்.கே பிரிந்து, தனியாய் கம்பெனி நடத்தினார். எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.ஆர் ராமசாமி,ஆகியோர் சிவாஜியுடன்  அவரிடமிருந்து பிரிந்து தனியே கம்பெனி ஆரம்பித்து நடத்தினார்கள். அவருக்காக அண்ணா எழுதிய ஓர் இரவு,வேலைக்காரி ஆகியவை படமாகும் போது பெரு வெற்றி பெற்றன. நாடகம் திரைக்கதையாகும் போதுதான் இயக்குநரின் சாமர்த்தியம் தெரியும்.ப.நீலகண்டனும் ஏ.எஸ்.ஏ.சாமியும் முறையே இந்த இரு படங்களையும் வெற்றிப் படமாக்கினார்கள்.ஆனால் இதே நீலகண்டன், தனது சொந்தத் தயாரிப்பாக எம்.ஜி.ஆரின் (சுமைதாங்கியா, அட்வகேட் அமரனா நினைவில்லை) நாடகத்தைப் படமாக்கினார். படம்,நல்லவன் வாழ்வான்,கதை  அண்ணா. படம் படுதோல்வி அடைந்தது.அதே போல் அண்ணாவின் காதல் ஜோதி நாடகமும் படமாகும்போது தோல்வியே கண்டது.இத்தனைக்கும் ஜெய்சங்கர் ரவிச்சந்திரன்,காஞ்சனா என்று நடிகர் பட்டாளம் நடித்தும்,பீம்சிங்கின் உதவியாளர்கள் திருமலை மகாலிங்கம் இயக்கியும்,வெற்றி பெறமுடியவில்லை.
     கே ஆர் ராமசாமியிடம் இருந்து பிரிந்து வசனகர்த்தா டி.கே கிருஷ்ண சாமி சக்தி நாடக சபா ஆரம்பித்தார்.சிவாஜியும் அதில் உண்டு. அதனாலேயே  ‘வீரபாண்டியகட்டபொம்மன்’ நாடகத்தை சிவாஜி கம்பெனிக்கு எழுதினார், அவர்.படத்திற்கும் அவர்தான் கதை வசனம்.அப்புறம் அவர், எம்.ஜி.ஆரின் பெரிய இடத்துப்பெண் படத்திற்கு கதை வசனம் எழுதினார்.அதிலிருந்து பணக்காரக்குடும்பம், படகோட்டி, எ.வீ பிள்ளை,என்று நிறைய எழுதினார். கர்ணன் படத்திற்கு வசனம் மட்டும் எழுதினார். எம்.ஜி.ஆரின் பாசம் படத்திற்கு கதை வசனமெழுதிய துறையூர் கே. மூர்த்தி, ஆர்.எஸ்.மனோகர் நாடகமான இலங்கேஸ்வரனுக்கு கதை வசனம் எழுதியவர்.காத்தவராயன் படத்திற்கும் பின்னாளில் ராமண்ணாவின் சக்தி லீலை படத்திற்கும் வசனம் எழுதினார்.மனோகரின் சில நாடகங்களுக்கு மதுரை திருமாறன்கதை வசனம் எழுதினார்.அவருக்கும் ரோஷக்காரி படம் எடுக்கும் வரை, தனிப்பிறவி, சூதாட்டம், திருடி,வாயாடி, என்று கிரகம் நன்றாக இருந்தது. பெரிய பெரிய நடிகர்கள், நாடகத் தொடர்பை அறுத்துக் கொண்டு சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் தங்கள் நாடக மன்றத்தினரை தங்களுடன் சினிமாவிலும் நடிக்க வைத்துக் காப்பாற்றி வந்த கதைகளுண்டு. எம்.ஜி.ஆர் தன் நாடகங்களுக்கு இசை அமைத்த என்.எஸ்.பாலகிருஷ்ணனின் இசையை நாடோடிமன்னனில் பயன் படுத்திக் கொண்டார்.முத்துக் கூத்தன்(செந்தமிழே வணக்கம்...) இலக்குமணதாஸ்(உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலாஇன்பம்...)ஆகிய பாடலாசிரியர்களை,நாடகத்தோடு விடாமல் படத்திலும் எழுத வைத்தார். சிவாஜியும் செந்தாமரை,எம்.ஆர் சந்தானம், போன்றவர்களைத் தன்னுடனேயே வைத்திருந்தார்.
     80கள் வரை கூட மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.ஏ.அசோகன், மனோரமா போன்றோர் நாடகக் குழுக்கள் ஆரம்பித்து நடத்தி வந்தார்கள்.சிவாஜியும் தங்கப்பதக்கம்,வியட்நாம்வீடு எல்லாம் நடத்தினார் ஆனால் சென்னையை விட்டு மற்ற ஊர்களில் நடந்ததாகத் தெரியவில்லை. இரண்டுமே படங்களாக உருப்பெற்று பிரம்மாண்ட வெற்றி பெற்றன.மேஜர் சுந்தரராஜன் நாடகக் குழுவின் ஞான ஒளி, கல்தூண், ஆகியன சினிமாவாகவும் வந்தன.இரண்டிலுமே.மேஜரின் ரோலை சிவாஜி செய்தார்.ஞான ஒளி வெற்றி பெற்றது.வியட்நாம் வீடு சுந்தரம், கெட்டிக்காரக் கலைஞன்.அவருக்குள் ஒரு இயக்குநன் எப்போதுமே இருந்தான்.கௌரவம் படம்தான் அவரது முதல் இயக்கத்தில் வந்ததென்றாலும்.நம்ம வீட்டு தெய்வம்படம் அவர்தான் செய்ததாகச் சொல்லுவார்கள்.ஆனால் படத்தின் அதிகாரபூர்வ இயக்குநர், தயாரிப்பாளரான ஜி.என்.வேலுமணி. வியட்நாம் வீடு, ஞானஒளி சினிமாக்களின் வெற்றிக்கு சுந்தரமும் அவரது திரைக்கதையும் ஒரு காரணம்.
     தமிழின் சிறந்த இயக்குநர்கள் வரிசையில் ஸ்ரீதருக்கும் பாலசந்தருக்கும் முன்னணி இடங்கள் உண்டு.ஸ்ரீதர் டி.கே.எஸ் கம்பெனியின் ரத்த பாசம் நாடக வெற்றிக்குப் பின்னரே அவரது கனவான சினிமாவுக்குள் வர முடிந்தது. பாலசந்தரும் நாடகங்களின் மூலமாகவே சினிமாவைப் பிடித்தார்.அவரும் சென்னை சுற்றுப்புறங்களைத் தவிர்த்து வெளியூர்களில்,பாமர ரசிகர்கள் மத்தியில் தன்  நாடகங்களை நடத்தினாரா தெரியவில்லை.நாகேஷ் அவருக்குப் பெரிய சொத்துநாகேஷ். அதற்கு முன்பே, சென்னை வானொலியின் சுகி.சுப்பிரமணியன் அவர்களின் மாஸ்டர் பீஸ் படைப்புக்களான ’’துபாஷ் வீடுகாப்புக்கட்டிச்சத்திரம்போன்ற ’ஹாஸ்ய நாடகங்களில் நாகேஷ் (குரலால்) பிரமாதமாக நடிப்பார். karpagamkakkமத்தியானம் ஒரு மணி வாக்கில் ஒலிபரப்பாகும் இந்த ரேடியோ நாடகங்கள் நேயர்கள் மத்தியில் பிரபலம்.பாலசந்தர் தன் நாடகங்கள் தவிர, ஜோசப் ஆனந்தன் நாடகமொன்றை (‘கலெகடர் மாலதி)என்று நினைவு.இருகோடுகள்’ என்று எடுத்து வெற்றி கண்டார்.அப்புறம் அவரது கதைகள் நாடக உலகிலிருந்து பிரிந்து விட்டது.
     என்.எஸ்கே யிடமிருந்து பிரிந்தவர்களில் சேவா ஸ்டேஜ் எஸ்.வி சஹஸ்ர நாமம் ஒருவர். அவர் கம்பெனியின் தயாரிப்புகள், தேவிகா, முத்துராமன், அற்புதமான கலைஞன் வி.கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள். அவருக்கு பிரபல நாவலாசிரியர் தி.ஜானகிராமன்,வடிவேலு வாத்தியார், நாலுவேலி நிலம் போன்ற நாடகங்களை எழுதிக் கொடுத்தார்.நாலு வேலி நிலம் சேவா ஸ்கிரீன் என்ற பேனர் பெயரில் படமாகி வந்தது ஓடவில்லை. அவரது ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்.என்ற சினிமா .(ஜானகிராமன்எழுதியது) ஓடவில்லை.ஆனால் ரொம்ப காலத்துக்குப் பின்,பாஸுசட்டர்ஜி ‘சிட் சோர்’ என்ற பெயரில் அதையே இந்தியில் தயாரிக்க அங்கே பிரமாதமாய் பிய்த்துக் கொண்டு போயிற்று.சஹஸ்ரநாமத்தின் ‘தேரோட்டிமகன்’ ஒரு கவிதை நாடகம். அதையும் நாடக ரசிகர்கள் நன்றாகவே ரசித்தார்கள்.
     எம். ஆர். ராதாவின் நாடகங்கள், தமிழின் உண்மையான கலகக்காரன் அவர்தான் என்று நிரூபித்தவை.ரத்தக்கண்ணீர் சினிமாவாகவும் சக்கை போடு போட்டது.திருவாரூர் தங்கராசு கதை-வசனம். அவர் பின்னர் எழுதிய “அண்ணி’ படம் சுமாராக ஓடியது.அதுவே பின்னால் தங்க துரைஎன்ற பெயரில் மாஸ்டர் சேகர்,எஸ்.எஸ்.ஆர், சௌகார் நடிக்க வந்தது.ஓடவில்லை.
     தேங்காய் சீனிவாசன் ஒரு ட்ரூப் வைத்து நடத்தி நாடகங்கள் போட்டார்.அவை படமான போது, உள்ள முதலும் இழந்ததுதான் மிச்சம். கிரேசி மோகன்,எஸ்வி சேகர் ஆகியோரைக் குறிப்பிடாமல் விடுவது பெரிய தவறு. இந்த வகையில் சோ மிக முக்கியமானவர். அவரது நாடகங்கள் அரசியல்wed நெடியுடனானவை. ஆனால் அவை எதிர்பார்த்த விளைவை உண்டாக்கினவா தெரியவில்லை.அவர் நாடகங்களில் ‘காமன் ஆடியன்ஸுக்கு, ’மெசேஜ் இல்லை. அது அவர் தவறா தெரியவில்லை.அவர் அவர்களைக் கணக்கெடுக்கவே இல்லை என்பதிலும் உண்மையில்லாமல் இல்லை .இங்கே சோவுக்கு முக்கியமான எதிடையாக நாம் ‘கோமல் சுவாமிநாதனை வைக்க வேண்டும். அவரது தண்ணீர் தண்ணீர் ஒன்றே போதும்.
சோவின் நாடகங்கள் படமான போது பெரிய வெற்றியைப் பெறவில்லை. ’’’’யாருக்கும் வெட்கமில்லை படத்தின் மூலம் அவர் ஜெயலலிதாவுடனும் அவரது ‘மூளை பலத்துடனும்” நெருக்கமானது ஒரு முக்கிய நிகழ்வு. (அதன் நீட்சியாகவே இன்றைய தமிழ்நாட்டு அரசியலைப் பார்க்க முடியும்.) அதற்குப் பின்னர்தான், அல்லது அதனால்த்தான் துக்ளக் இதழில் “ஜெயலலிதா” என்ற பெயரில் தொடர் கட்டுரைகள் வந்தன. சும்மாதான் ஜெயலலிதா பெயர் போட்டிருக்கிறோம், இதை எழுதுவது யார் என்று யூகியுங்கள் வாசகர்களே, என்று பரிசில்லாத போட்டியும் அறிவித்தார் சோ’. மூன்று நான்கு இதழ்கள் வந்ததுமே, அவர் ‘எரிக் செகால்அல்லது எரிக்கா யங் போன்ற ஒரு ஆங்கிலப் படைப்பாளி பற்றி எழுதியிருந்ததைப் படித்ததும் சொன்னேன், உண்மையிலேயே இதை எழுதுவது ‘ ஜெய லலிதாதான் என்று. ஏனெனில் அவர் ஏதோ சினிமா பத்திரிக்கையில் அவர்களைப் பற்றி ஒரு பேட்டி தந்திருந்தார். ஆனால் நண்பர்கள்,இவரு எல்லாந் தெரிஞ்ச ஏகாம்பரம், போடா..”” என்று கிண்டலடித்தார்கள். சாக்ரட்டீஸ்களுக்கு எப்போதுமே சோதனைதான் என்று சொல்லித் தேற்றிக் கொண்டேன்.சாக்ரட்டீஸ் இல்லடா, ஆர்க்கி மிடீஸ்...ஓடு...நாலு ரத வீதிக்கும்...என்றார்கள்.
     இந்த நினைவலைகள் முன் வைக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்.இன்றைய சினிமா நாயகர்கள் அல்லது நாயகிகள் யாராவது, ரியாலிட்டி ஷோக்கள் தவிர்த்து ஒரு நாடகக் குழு போல் ஏதேனும் கூட்டு முயற்சியினை ஆரம்பிப்பார்களா...?


Visitors