Friday, February 3, 2012

நன்றி: பண்புடன்.காம், இணைய இதழ்


                        


ஒவ்வாமை
முந்தும் கெட்டிக்காரத்தனம்
     வாய்க்கப் பெறாதவர்கள்
     வரிசைகளைத் தவிர்க்க
விரும்புவது இயல்புதான்

யோனித் திரவத்திடையே
விரையும் உயிரணுக்களுக்கே
வரிசைச் சாமர்த்தியம்
உண்டுமா தெரியவில்லை

ஆனால் அம்மாவுடன்
மருத்துவ மனையில்
கருப்பை அண்டத்துயிராய்
காத்திருப்பதில் துவங்கும்
வரிசை வாழ்வு

அன்று வேறு யாரேனும்
சாகாவிட்டால் மயானத்தில்
காத்திருக்க வேண்டியதில்லை
பாடையில் நீ

அமர்ந்து கொண்டோ
அடுக்குப் படுக்கையில்
தூங்க முயன்று கொண்டோ
புகைவண்டியில்
போகும் போதும் நீ
ஒரு வரிசையில் இருக்கிறாய்

போக்குவரத்து நெரிசலில்
நிற்பதுவும் நடப்பதுவும்
நகர்வதுவும் தாமறியாமல்
வரிசையையே மேற்கொள்கின்றன

தவிர்க்க முயன்றாலும்
கவி வரிகள்
கால வரிசையொன்றைக்
கைக்கொள்கின்றன

வரிசை ஒவ்வாமை தவிர்க்க
வழி உபதேசிக்கிறார்களாம்
வரிசையில் நில்.
                      -கலாப்ரியா