Friday, August 20, 2010
சிற்பி இலக்கிய விருது-2010 (8.8.2010)
Monday, August 16, 2010
ஓடும் நதி-45
அது கொஞ்சம் தணிந்த வீடு. ஜன்னல் இல்லாத பட்டாசல், சற்று இருட்டாகவே இருக்கும்.முன்புறத் தார்சாலில், அதற்கு முன் விரிந்த தோட்டத்திலிருந்து காற்று நன்றாக வரும். தோட்டத்தில் எப்படியும் ஒரு பீர்க்கங்கொடி நிற்கும். சிறுவயதில் மார்கழிப்பனியில், பனிக்குல்லா மாட்டிக் கொண்டு காலையில் போய், கொப்பரைத் தண்ணீரில், குழந்தைகள் கேட்டால் தரவென்றே மிதக்க விட்டிருக்கிற பீர்க்கம் பூக்களை வாங்கி வருவோம்.வீட்டின் எல்லோருக்கும், அநேகமான எல்லா வேலைகளுக்கும், படிக்க, திருவையில் மாவு திரிக்க, கீரை குப்பை பார்க்க,வந்தவர்களுடன் புழக்கம் பேச, என்று எல்லா வேலைகளுக்கும், தார்சால்தான் வசதி. “இங்கே உட்கார், உட்கார்” என்று சொல்வது போலிருக்கும் சுவரோரத்துத் திண்ணை.வீட்டின் மூத்தவன் எனக்கும் எல்லோருக்கும் ரொம்ப சினேகம்.அவன் அப்பா திடீரென இறந்த பிறகு, அவன்தான் குடும்பத்தையே கவனித்து வந்தான். படிப்பை பள்ளியிறுதி வகுப்போடு நிறுத்தி விட்டான்.வாழ்க்கை திடீரென்று சுமத்திய சுமைகளைக் கண்டு துவளவில்லை. ஆனாலும் ஒரு விட்டேத்தியான மனம் இருந்தது. சைக்கிளில் போனால், அவ்வளவு வேகமாகப் போவான்.
பஜாரில் அவனைத் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள்.’மின்னல்’ போல ஏதோ ஒன்று தங்களையோ, தங்கள் கடையையோ கடந்து போனால், அது சைக்கிளில் போகிற அவனாய்த்தான் இருக்கும் என்பார்கள்.உதவி செய்வதென்றால் அவனைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.ஒரு நிபந்தனையோ, எதிர்பார்ப்போ ஒன்றும் கிடையாது. ஒரு முழுக்கல்யாணத்தையும் அவன் ஒருவனே நடத்தி வைப்பான். உண்மையில் அவன் கால்களை நான் பார்த்ததில்லை, நிச்சயம் அதிலே சக்கரம் இருக்கும்.ஏனென்றால் யாரானாலும் “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்..”என்று கண்ணனாகவே மனதுக்குள் கொண்டாடுவார்கள்.ஆற்றையும் கோயிலையும் விட்டு விலகி வேற்றூருக்கு வந்ததற்கு வருந்துவதை விட அவனை விட்டு, விலக வைத்த உத்தியோக நிர்ப்பந்தமே அதிகமாக மனதைக் கஷ்டப் படுத்தும்.
அவன் வீடு நிறைந்திருந்தது, அவன் தங்கைக்கு திருமணம் உறுதி செய்கிறார்கள். வழக்கம் போல் திண்ணையில் அமர்ந்திருந்தேன். நாம் ஏதாவது உதவலாம் என்றால் அதையும் செய்ய விட மாட்டான்.”நீ பேசாம உக்காரு, ஏய் பெரியவனே, மருமகனுக்கு, அந்த விசிறிய எடுத்துக் கொடு, வேக்குது பாரு” என்று தன் தம்பியிடம் சொல்ல,அவனும் அந்த கூட்ட நெரிசலுக்குள்ளும் போய் ஒரு விசிறியை எடுத்து வந்தான்.பெண்கள், பட்டாசலில், வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நான் போன சிறிது நேரத்தில் அவனது தூரத்து உறவான அக்கா வந்தார்கள்.ஏற்கெனவே பழக்கமானவர்கள்தான், தன் அசாத்திய அழகையும் மீறி கலகலப்பாக பழகுவார்கள்.அவர்களால் உள்ளே உட்கார முடியவில்லை போலிருக்கிறது. நெற்றிச் செந்தூரம், வியர்வையில் கரைந்து, கன்னம், கழுத்து என்று ஆறாய் வழிந்து. அவர்களின் நிறத்தை இன்னும் சிவப்பாகக் காட்டிற்று.
என்னிடம் ஒன்றிரண்டு வார்த்தை பேசிக்கொண்டிருந்து விட்டு, “உனக்கெதுக்கு ‘விசிறி’ கொண்டா அதை” என்று வாங்கி இரண்டு பேருக்குமாக வீசினார்கள்.நீங்களே வீசிக்குங்க என்று சொல்லி முடிக்கும் முன் அவர்களை உள்ளிருந்து கூப்பிட்டார்கள்.
கொஞ்ச நேரத்தில், அற்புதமான நலுங்குப்பாட்டு வந்தது, உள்ளிருந்து.”......வள்ளி கல்யாண வைபோகமே...” என்று வரிகளை மாற்றி பெண்ணுக்கேற்றவாறு பாடியதும், பலத்த சிரிப்புச் சத்தம் வந்தது.எட்டிப் பார்த்தேன், அந்த அக்காதான் பாடிக் கொண்டிருந்தார்கள். கலகலப்பானவர்கள் என்றாலும் முகத்தில் ஒரு கூச்சம் தெரிந்தது.என்னைக் கண்டதும் இன்னும் கொஞ்சம், முகத்தில் செம்பருத்தி பூத்தது.அதற்கப்புறமும் பாடினார்கள்..
தலை நிறைய மல்லிகைப் பூவைச் சூடியபடியே வெளியே வந்தார்கள்.”என்னிடம் உன் மருமக ஒரு பூ வைக்க விடமாட்டாள், வாசலில் விற்கும் பூவைக் கூப்பிட்டால், வாங்ககறதே அவதான்,வாங்கின உடனே போய், சாமி படத்துக்குப் போட்டுருவா,அதுவும் எட்டுகிற உயரத்தில இருக்கா,போட்டுட்டு வெறுங்கையால தீவாரனை(தீபாராதனை) வேற, காமிச்சுருவா”என்றார்கள். வெட்கத்துடன் குழந்தை அவர்கள் சேலைக்குள் மறைந்து கொண்டாள்.. ”அப்போ அத்தான் இன்னும் ரகசியமாத்தான் பூ வாங்கீட்டு வாராகளா” என்றதும், ”அடி படுக்காளியை..” என்று என்னை நோக்கி கையை ஓங்கினார்கள்.அந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் பணம் சேகரிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டிருந்தோம். அதெல்லாம் விலகி, மனம் லேசாகி விட்டது. பஸ்ஸில்,வழியெல்லாம் வரிகள், கவி வரிகள் மின்னலாய் வந்து கொண்டேயிருந்தது....
” நலுங்கு பாடுகிற பெண்ணின்
சௌந்தர்யக் கூச்சம்...”
”பனிக்குல்லாவுக்குள்
மூக்கு வடிக்கிற
நிலாக்களெனப் பிள்ளைகள்...”
”ரகசியம் தெரியாமல்
மனைவிக்கு வாங்கின பூவை
சாமிக்குப் போட்டு வெறுங்கையால்
தீவாரனை காட்டுகிற குழந்தைகள்”
“நளினமின்றிக் கீழே வைக்கிற போது
வீணை அதிர்ந்துதிர்க்கிற ராகப்பூ”
”ஒவ்வொன்றய்ச் சேர்த்த பீர்க்கம் பூக்கள்
மார்கழி வாசலில்
மறுபடி பூக்கும்”
வாழ்க்கையின் அற்புதமான தருணங்களும், பேரைச் சொல்லக்கூட அனுமதிக்காத அருமையான மனிதர்களும், மனசுக்குள் மறுபடி மலர்விக்கிறவைதானோ தலைப்பற்ற கவிதைகள்.