பொருநைப் பதிவுகளும் பன்முக எழுத்தாளுமைகளும்
-
கலாப்ரியா
பொருநைப் பதிவுகளும் பன்முக எழுத்தாளுமைகளும் என்கிற இந்தக் கட்டுரையில் ஐம்பது ஆண்டுகளாக எழுதி வரும்
நான் இந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக நம்முடைய நெல்லை மாவட்டத்தில்
நிகழும் இலக்கிய நிகழ்வினை ஓரளவு நன்கு அறிவேன் என்பதனாலும்
என் தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகள் பெரும்பாலருடனும் நேரடியான பழக்கம் உண்டு
என்பதனாலும் இவர்களைப் பற்றி உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இந்தக் கால கட்டத்தின் சமூகப்
பொருளாதார மாற்றங்கள் எப்படி ஒட்டு மொத்த தமிழ் இலக்கியத்தையும், நமது பகுதியின் இலக்கியத்தையும் பாதித்துள்ளன என்று விரிவாக ஆராயவும் இந்தக் கட்டுரை உங்களுக்குப் பெரிதும் உதவும் என்று
நம்புகிறேன்
`பொருளாதார மாற்றம் என்கையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்தக் காலம். பன்னாட்டு
முதலீடுகள் பெருகிப் போன தாராள மயமாக்கலின் காலம். இந்தக் கார்ப்பரேட் உலகில்,
மனித வளம் குறித்த பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகில்
மிகச் சிறந்த அறிவு மிக்க உழைப்பாளர்கள் யாரெல்லாம் என்று மேற் கொள்ளப்பட்ட
சமீபத்திய ஒரு ஆய்வறிக்கையில் முதல் மூன்று இடத்தைப் பெறுபவர்கள் யார் யார் என்று
கார்ப்பரேட் முதலாளிகள் கணக்கெடுத்திருக்கிறார்கள். முதல் இடத்தில் சீனாக்காரர்கள்,
இரண்டாவது இடம் ஜப்பானியர்கள். மூன்றாவது இடம்? ஆச்சரியப்படாதீர்கள், தென் இந்தியர்களான நாம்தான். இதற்கான
காரணம் என்ன என்றும் ஆராய்ந்திருக்கிறார்கள். அது இந்த மூன்று நாட்டினரும் விளைவிக்கும்
உணவுப் பயிர் நெல் என்பதுதான் காரணம். நன்றாகக் கவனியுங்கள் சாப்பிடுவது அரிசி
என்ற காரணமல்ல. அரிசிதான் உற்பத்தி செய்வதற்கு கடினமான உழைப்பைக் கோரும் தானியம்,
அப்படி உழைப்பதைப் பல தலைமுறைகளாகச் செய்து வருவது இந்த மூன்று நாட்டினரும்தான்.
அதனால் இயற்கையிலேயே நம் உழைக்கும் திறன் அதிகம் என்கிறார்கள்.
இதையே கலைக்கும் எழுத்துக்கும் பொருத்திப் பர்த்தாலும் சரியாகவே
இருப்பதாகவும் சொல்கிறார்கள். தஞ்சையும் நமது நெல்லையும் நெல் அதிகம் விளைகிற
இரண்டு தமிழ்நாட்டு மாவட்டங்கள். தமிழின் மிகச் சிறந்த எழுத்துகளும் ஆளுமைகளும்
அதிகமும் இங்கிருந்தே அதிகமும்
தோன்றியிருக்கிறார்கள். அதிலும் இந்த மாவட்டத்தின் பெயரே திரு’நெல்’வேலி. அதனால் இங்கே பல காலமாக பல தரமான
இலக்கியவாதிகளும் பன்முகப் படைப்புகளும் உருவாகியுள்ளன. இந்த இரண்டு நஞ்சைக்
கழனிக்காரர்களுக்கும் எப்படி நல்ல படைப்புகளை உருவாக்குகிறார்கள்?. ஒரு முறை குமுதம் அரசு கேள்வி பதில் பகுதியில் அதன் ஆசிரியர் எஸ்.ஏ.பி இந்தக்
கேள்விக்குப் பதில் எழுதியிருந்தார். இவர்கள் இரண்டு மாவட்டத்துக் காரர்களும்
ஒளிவுமறைவின்றி தங்கள் வாழ்க்கை அனுபவத்தை வெளிப்படுத்துகிறவர்கள். இரு ஊர்க்காரர்களும்
யதார்த்தமான பேச்சு மொழி கைவரப் பெற்றவர்கள். பேசுவது போலேயே கதை
சொல்கிறவர்கள், கவிதைக்கும் அதை விரிவு படுத்தியவர்கள்
நெல்லை மாவட்டத்துக்காரர்கள் என்று எழுதியிருந்தார். ஆம் அதுதான் உண்மை. இரண்டிலும் தஞ்சாவூர்
எழுத்துக்கும் நம்முடைய எழுத்துக்கும் என்ன வேறுபாடு. தஞ்சை எழுத்துக்களில் அக
வாழ்க்கைச் சிக்கல்கள் மனப்பிறழ்வுகள், ஆண் பெண் உறவின் நளினமும் பாலியல் வேட்கையும் மறைவாகச் சொல்லப்பட்டும் காணப்படும்.
நெல்லை எழுத்துகளில் அவையும் இருக்கும் அவற்றைத் தொட்டுக் கொண்டு சமுதாயக்
கருத்துகளும் இருக்கும். இக்கருத்துக்கு உதாரணமாக மௌனியையும் புதுமைப்
பித்தனையும் சொல்லலாம். நெல்லை மாவட்டப் படைப்புகளில் அந்தந்தக் காலம் பதிவு செய்யப்படுவது
போலவே அந்தந்தக் காலத்து, அந்த நேரத்து மக்கள் மனமும்
உணர்வுகளும், அவர்களுக்கும் சமூகத்துக்குமான உறவுகளும்
வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அருமையான உதாரணங்கள்
புதுமைப் பித்தனின் சிறு கதைகள் மற்றும் தொ.மு.சி ரகுநாதனின் பஞ்சும் பசியும் என்ற நாவல்
இந்த பொருநைப் பூமியின் படைப்பாளிகள் வரிசை, சரித்திரம் எங்கு ஆரம்பிக்கிறது .
கால்டுவெல்1881ம் ஆண்டு எழுதிய நூலில் அவர் அகத்தியரிலிருந்தே ஆரம்பிக்கிறார்.
அகத்தியரது தமிழ் இலக்கணம், மருத்துவ நூல்கள், ரசவாதம் பற்றியெல்லாம் அவர் காலத்து மக்கள் பேசிய கதைகளைச் சொல்லி அவரைக்
குறிப்பிடுகிறார். கால்டுவெல் இந்த மாவட்டத்திற்கு கிறித்துவ சங்கத் தொண்டராய்
வந்தவர் அவரைத் தன் மகனாகவே ஏற்றுக் கொண்ட மாவட்டம் இது. அதற்கு நன்றிக் கடனாக
அவர் திருநெல்வேலி சரித்திரம் என்ற நூலை எழுதியுள்ளார். அவர் அடுத்து நான்கு
நெல்லை மாவட்ட இலக்கியவாதிகளைக் குறிப்பிடுகிறார்.
நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் ஆயிரம் பாடல்கள் எழுதிய நம்மாழ்வார்
பற்றிப் பேசுகிறார் இவர் 12 நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவர் குறிப்பிடுகிற
மற்றவர்கள் வில்லி பாரதம் எழுதிய வில்லிப்புத்தூரார், குறளுக்கு
உரை எழுதிய பரிமேலழகர், இவர் காலம் 13
நூற்றாண்டு. அடுத்து நீதிநெறி விளக்கம் எழுதிய குமரகுருபர
சுவாமிகள். குமரகுருபரரது காலம் பதினேழாம் நூற்றாண்டு என்கிறார்.
இந்த நான்கு பேரும் பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
அதாவது தெற்குச் சீமை என்றழைக்கப்பட்ட நெல்லைச் சீமையைச் சேர்ந்தவர்கள்.
கால்டுவெல் காலத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நெல்லை மாவட்ட ஆட்சியாளருக்குக் கீழ்
இருந்துள்ளது. தூத்துக்குடி 33ஆண்டுகளுக்கு முன் 1985இல்
பிரிக்கப்பட்டது. நம்மாழ்வாரும் குமரகுருபரரும் பொருநைக் கரையில் வாழ்ந்தவர்கள்.
குமரகுருபரர் ஸ்ரீவைகுண்டத்திலும், நம்மாழ்வார் அதையடுத்த
ஆழ்வார்திருநகரியிலும் வாழ்ந்தவர்கள்.
கால்டுவெல்லைக் கடந்து நவீன காலம் என்பதை நாம் பாரதியிலிருந்து ஆரம்பித்தோமானால், பாரதி ஒருவன் மட்டுமே நம் அத்தனை பெருமைக்கும் பன் முகத்தன்மைக்கும்
போதுமானவன். தேசியக் கவிஞராக அறியப்பட்ட அவர் சிறுகதை நாவல், கட்டுரை என்று பல தளங்களிலும், கவிதையின் எல்லா
வானங்களிலும் சிறகடித்த கவிக்குயில்.
பாரதியின் எழுத்து முன்மாதிரி இல்லாத எழுத்து. அதைப்போல தன்னளவில்
புத்தம் புதிய கதைகள் எழுதி சிறுகதைகளில் உச்சம் தொட்டவர் புதுமைப்பித்தன். அவர்
மரபுக் கவிதைகளோடு தமிழில் புதுக்கவிதை தோன்றிய போது சொற்பமான அளவில் அவற்றையும் எழுதியுள்ளார்.
’அன்னை இட்ட தீ..” என்கிற ஒரு நாவல் முயற்சி பாதியிலேயே நிற்கிறது.
தமிழின் முதல் நாவல், மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம்
என்பார்கள். ஆனால் அதற்கும் முந்தியது ”ஆதியோர் அவதானி” என்கிற நாவல். எழுதியவர்
சேஷய்யங்கார். ஆனால் இது செய்யுள் வடிவில் எழுதப்பட்ட புனைகதை. ஆதி நாவல் வடிவங்களைத்
தந்தவர்களில், அ.மாதவையாவும்(பத்மாவதி சரித்திரம்)
சேஷையங்காரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.நாடக இலக்கியம் தந்த மனோன்மணியம்
சுந்தரம் பிள்ளை, நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள், நவீன நாடகத்தின் முன்னோடிகளில் ஒருவரான மு.ராமசாமி என்று நெல்லையைச்
சேர்ந்த இலக்கிய முன்னோடிகளின் பட்டியல் ஏராளம்.
இதழியல்துறையினை எடுத்துக் கொண்டால்., அங்கேயும் பாரதி முன் வருகிறான்,
தென்காசி டி.எஸ்.சொக்கலிங்கம் பிள்ளைஏ.என்.சிவராமன், மாலன், , கீழாம்பூர் என்று அதிலும் நெல்லையே முன்னோடி
மாவட்டம். தினசரிப் பத்திரிகையை பாமரனுக்கென்றே வடிவமைத்த ஆதித்தனார் இம்மாவட்டம்
தானே. மேடைப் பேச்சை ஒரு நிகழ்த்துக் கலையாக்கியவர்கள் ரா.பி.சேதுப்பிள்ளையும்,
நாவலர் சோமசுந்தர பாரதியும். இவர்களைப் பேச்சில் வெல்வதே என் குறிக்கோள்
என்று அண்ணாவே குறிப்பிட்டுள்ளார். மேடைப் பேச்சில் வலம்புரி ஜான், போன்று பலரைச் சொல்லலாம் இதில் இன்றும் திருநெல்வேலியின் பெயரைப் பறை
சாற்றுபவர்கள் வைக்கோ, நெல்லை கண்ணன்.
அதிகம் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியலில் திருநெல்வேலியே
முதலிடம் பெறும். 1955 இல் அந்த விருது ஆரம்பிக்கப்பட்ட போது முதல்
விருதைப் பெற்றவரே ரா.பி.சேதுப்பிள்ளைதான். பிரிக்கப்படாத நெல்லை
மாவட்டத்திலிருந்து சுமார் 14 பேர் இவ்விருதினைப்
பெற்றுள்ளார்கள். இம்மாவட்ட எழுத்தாளர் பட்டியல் என்பது மிக நீளமானது. பாரதி,
மாமா என்று அழைத்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி சிறந்த எழுத்தாளர். மனோன்மணியம்
சுந்தரனார், கா.சு.பிள்ளை, வையாபுரிப்
பிள்ளை, வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார், மனோன்மணியம்
சுந்தரனார் கம்பர் என்றழைத்த இரட்சணிய யாத்திரிகம் எழுதிய ஹெச்.ஏ.
கிருஷ்ணபிள்ளை, சைவசித்தாந்தக்கழகம்நடத்தி பல புத்தகங்களப்
பதிப்பித்த வ.சுப்பையா பிள்ளை, சி.சு.மணி, ரசிகமணி டி.கே.சி, நீதியரசர் மகாராஜன், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி,தேவநேயப் பாவாணர்,குணங்குடி மஸ்தான் சாகிப், பெ.ந.அப்புசாமி, அ.சீனிவாசராகவன், பி ஸ்ரீ ஆச்சார்யா தொ.மு.பாஸ்கரத்
தொண்டைமான், தொ.மு.சி.ரகுநாதன்,( செக்
மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பஞ்சும் பசியும் நாவல்
எழுதியவர்,) மீ.ப சோமசுந்தரம், சுகி.சுப்பிரமணியன்,
எம்.எஸ்.பெருமாள், ர.சு நல்ல பெருமாள்.
ஆராய்ச்சி இதழ் நடத்திய பேராசிரியர் நா.வானமாமலை, வல்லிக்கண்ணன்,
தி.க. சி, மேலும் சிவசு என்று இது தொடரும்.
கி.ராஜநாராயணன், கு.அழகிசாமி, பூமணி பா.செயப்பிரகாசம் சோ.தர்மன்,
கோணங்கி, தேவதச்சன் எனப் பலர் கரிசல் நிலத்தின் ஜீவ வித்துகளாக உள்ளார்கள்.. உலகத்தரத்திற்கான கதைகளை,
கவிதைகளை எழுதியவர்கள்.
சமூக இலக்கிய ஆய்வாளர் தூத்துக்குடி ஆ.சிவசுப்பிரமணியன்,
பண்பாட்டுஅசைவுகளைப் பதிவு செய்கிற தொ.பரமசிவன், மார்க்ஸீய
இலக்கியவாதி எஸ்.தோத்தாத்ரி, , தோப்பில் முகம்மது மீரான்,
வண்ணதாசன் , வண்ணநிலவன், கலாப்ரியா, விக்ரமாதித்யன், தேவதேவன், தமயந்தி,
வரலாற்றாசிரியர் செ.திவான், கார்லோஸ் என்கிற
தமிழவன், பேராசிரியர்
சி.வ,சு, எம்.டி.முத்துக்குமாரசாமி,
நெல்லை சு.முத்து, கவிஞர் நெல்லை ஜெயந்தா, அவரது சகோதரர்,மத்திய
அரசு மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேவுகளில் பெரிதும் உதவக்கூடிய பொது அறிவுப் புத்தகங்களையும் தகவல் களஞ்சியங்களையும்,
எழுதிக் குவித்து அவர்களுக்கு வகுப்பும் எடுத்து அதைப் பெரும் பணியாகவே செய்து வரும்
திரு சங்கர சரவணன் . எழுத்தாளர் வழக்கறிஞர் மாவட்ட, மாநில மக்களின் பல உரிமைகளுக்காகப்
போராடும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,
சுகா, போகன் சங்கர், கார்த்திக் புகழேந்தி, மாரி செல்வராஜ், என்று இன்றைக்கு வரை எழுதுகிற,
என் நினைவுக்கு வருகிற சுமார், 50, 60 பேர்களைக்
குறிப்பிடுகிறேன். இந்தப் பட்டியல் ழுமையானதில்லை.
எந்தப் பட்டியலுமே முழுமையானதில்லை.ஏதாவது முக்கியமான பெயர் விடுபட்டுப் போவதற்கான
கணக்கீடே பட்டியல் என்பது.
இவர்களில் பலரையும் என்னுடைய 50 வருட எழுத்து வாழ்க்கையில் நான் நன்கறிவேன். இவர்களது
படைப்புகள் குறித்து பதிவுகள் என்ற இலக்கிய அமைப்பின்
சார்பில் கவிதைப் பட்டறையும் கருத்தரங்குகளும் குற்றாலத்தின் அழகிய சூழலில் நானே
நடத்தியிருக்கிறேன். ஆனால் மீதமுள்ள ஏராளமான பேர்களையும் அவர்கள் எல்லோரின்
வாழ்க்கைக் குறிப்பு மற்றும் படைப்புகளைத் தொகுப்பது, ஆராய்வது
என்பது இன்றையத் தமிழ் மாணவர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் பணி.
இவர்களில் பெரும்பாலானோர் பன்முக ஆளுமைகள் உடையவர்கள். தங்களது துறைகளில் முன்னோடியான படைப்புகளைப் படைத்தவர்கள்.ஆசிரியர்களும்
எழுத்தாளர்களும்தான் எப்போதும் படித்துக் கொண்டே இருக்கும் வாய்ப்பு பெற்றவர்கள். மேற்குறிப்பிட்ட
நூல்;ஆசிரியர்கள் எழுதிக் குவித்திருக்கும் அனைத்தையும் படிக்கும் நற்பேறு பெற்றவர்கள் இளைய தலைமுறை
மாணவர்களாகிய நீங்கள். இந்தக் கட்டுரையைப் படிக்கிற நீங்கள் தமிழ்ப் படைப்பாளிகள் பற்றிய ஆய்வினை மேலெடுத்துச் செல்வது உங்களுக்கும்
உங்களுக்குப் பின் வரும் சந்ததிகளின் தமிழ் வாசகர்களுக்கும்
எப்போதும் இருக்கிற அன்னைத் தமிழுக்கும் செய்கிற மாபெரும்
தொண்டு. அதைச் செய்யும்படி உங்களிடம் வேண்டிக் கொள்கிறேன்.