Wednesday, July 16, 2008

உதிரிகள்

நான்கு ரத வீதியும் பர பரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் போல்,. இதயத்திலிருந்து ரத்தம் பாயும் நாளங்கள் போல தெருக்கள். சித்தர் தெரு. செங்கோல் முடுக்கு, சுந்தரத் தோழர் தெரு அப்பர் தெரு சங்கரோஜித பண்டிதர் தெரு கழுவேற்றி முடுக்கு, காவல் பிறைத் தெரு, குளப்பிறைத் தெரு, நாலு திசைக்கும் எட்டுத் திக்கிற்கும்....தெருக்கள்.தெருக்களிலோ அவ்வளவு பதட்டமோ பர பரப்போ இல்லாமல்....சற்று அமைதியாய்....தெரு.... வீடுகள்...பெரிய வீடுகள், தெரு நீளத்திற்கும் அரண்மனை போல வீடு,கிருஷ்ணன் வைத்த வீடு வேப்ப மரத்து வீடு...ஏழு வளவு, சாவடிப்பிள்ளை காம்பவுண்ட், நடுச் சாவடி வீடு.....பண்ணைய வீடு .பெரிய வீட்டுக்கு எதிர்த்தாற் போல மங்களா வீடு...புழக்க டை அல்லது புற வாசல் தோட்டம் சின்னச் சின்னதாய் குச்சு வீடு.....எல்லாவற்றையும் உள்ளடக்கி காம்பவுண்ட். பெரிதாய்த் தலை வாசல்க் கதவு . தெரு வாசல் கதவு.”எல்லா ஊர்களையும் போல் இங்கும்/ படிக்கும் போது தூங்கிவிழுந்து/ இப்போது விழித்து விட்ட/ பிள்ளைகளால் அறைந்து சாத்தப் படுகிற தெரு வாசல்க் கதவுகள்.....”ரத வீதிகளின் ஜவுளிக் கடைகளில், பல சரக்குக் கடை, மளிகை, போஸ் மார்க்கட்....என்று புதுமைப் பித்தன் ராமச்சந்திரன் (வண்ண நிலவன்) கதா பாத்திரங்கள் ராத்திரி பத்து மணிக்கும் கடையடைக்காத முதலாளிகள்... புது ரிலீஸ் சிவாஜி எம் ஜி
ஆர் படங்களை வெள்ளிக்கிழமையே பார்க்க முடியாமல் ஞாயிறு காலைக் காட்சிக்கு ஒத்தி வைக்கும்,அகாலமாய் வீடு திரும்பும் கடைச் சிப்பந்திகள், கணக்கு (கோமதிநாயகம்)ப் பிள்ளைகள்.....அடையும் கூடு ,,, இந்தக் குச்சு வீடுகள். படம் பார்த்த வேகத்தில் குச்சு வீட்டு தகரக் கூரையின் மத்தியான வெக்கையையும் பொருட் படுத்தாமல் தாம்பத்திய சுகம் காணத் துடிக்கும்....வாலிபம் கதவடைத்துக் கொள்ளும் ஞாயிறு.
தெருவும் ஊரும் பெயர்களில் தான் வேறு. வாழ்க்கை ஒன்றுதான்.....சித்திரங்களும் சிக்கல்களும் ஒன்றுதான் ஒரே கோட்டுச் சித்திரங்கள்தான்


கோட்டுச் சித்திரம்
________________________

தெரிந்தவர் தெரியாதவர்
போனஸ் கிடைத்தவர்
பொங்கல்ப் படி ’வசூலித்தவர்’
புதிய கடன் கிடைத்தவர்

யாவருக்கும் நிறுத்து
பொட்டலங்கள் கட்டித் தந்து
வீடு வந்த போது
அடகுக்குப் போனவை
தவிர்த்து அத்தனை
பாத்திரங்களும்
பொங்கல் விடத் தயாராய்
பானையும் கழுவி
வைத்து விட்டு,
இடி பட்டு மிதி பட்டு
இலவச வேட்டி சேலை
வாங்கின அலுப்பில்
வீடு முழுக்க அடைத்துக்
கொண்ட இரட்டைப்பாயில்
துவண்டு தூங்கிக்
கொண்டிருந்தாள்
தூக்கம் கெடுக்கத்
தோன்றாமல் ஒன்னும்
தின்னாமல் தானும்
உறங்கிப் போனான்

காலையில் எழுப்பிய போது
இஷ்டமின்றி எழுந்து
எரிச்சலுடன்
பாயைச் சுருட்டி வைத்தான்.
பளீரென்று
மாக் கோலம்-
தரையில்
(இடுக்கண் வருங்கால்
நகுக என்கிற மாதிரி)

(18.01.1994)(உதிரி நம்பர் -3)
உதிரிகள்(2)

இரவில் எடுத்து
வந்து
நன்றாகப் பார்க்கும் முன்
வரும் வழியிலேயே
தைக்கப் போட்டு விட்ட
சட்டைத் துணி

எவ்வாறெல்லாமோ
தினம் தினம்
நினைவக்கு வரும்
தீபாவளி வரை

(பிப்ரவரி-1993)