குழந்தை சீதை தன் சக வயது குழந்தைகளுடன், மிதிலை அரண்மனையில், ‘கழச்சிக் கல்’லை வைத்து (அம்மானை) விளையாடிக் கொண்டிருக்கிறாள். விளையாடும் போது, ஒரு கழச்சிக் கல் பெரிய, நீளமான பெட்டி ஒன்றிற்கு அடியில் உருண்டு, கைக்கு எட்டாமல் சென்று விடுகிறது.அந்தப் பெட்டியில்தான், யாரும் தூக்கவே முடியாத சிவதனுசை பத்திரமாக வைத்திருக்கிறார் ஜனகன். ஆனால் சீதை அந்தப் பெட்டியை இடது கையால் அநாயசமாக நகர்த்தி வைத்து விட்டு கழச்சிக் கல்லை எடுத்து, சகஜமாக மறுபடி அம்மானை ஆட ஆரம்பித்து விடுகிறாள்.இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனகமகாராஜா ஆச்சரியத்தில் உறைந்து போய், அப்போதே தீர்மானிக்கிறார், “யார் இந்த சிவதனுசை நாணேற்றி உடைக்கிறானோ, அவனுக்கே சீதையை மணம் முடித்துத் தரவேண்டும்” என்று. இது செவி வழிக்கதை. இந்த மாதிரிக் கதைகளுக்கு முடிவே கிடையாது. தோண்டத் தோண்ட வரும்.
இது போல் உலகம் முழுக்க கதைகள் இருக்கிறது. லண்டனில் நடப்பதாக ஒரு கதை. அன்று விடுமுறை, கணவன் சோம்பலாக வீட்டில், மனைவியின் வேலைகளுக்கு தொந்தரவு தந்தபடி இருக்கிறான். மனைவி, ”லீவு என்றால் என்ன, போய் வேலை செய்தால் ‘ஓவர்டைம்’ கிடைக்குமில்லையா” என்று சத்தம் போடுகிறாள். கணவனுக்கு சுவரில் வர்ணம் பூசும் வேலை.அப்போது லண்டனின் மிகப் பெரிய டவர் ஒன்றில், கம்புகளால் சாரம் கட்டி வேலை நடந்து கொண்டிருக்கிறது. மனைவியிடம் கோபித்துக் கொண்டு உபகரணங்களுடன் கிளம்புகிறான்.சாரத்தின் மேல் ஏறி உயரமாகப் போய் வெள்ளையடிக்க ஆரம்பிக்கிறான், தனி ஆளாய்.திடீரென்று கம்புகளைக் கட்டியிருந்த கயிறுகள் அறுந்து, மொத்தச் சாரமுமே விழுந்து விடுகிறது. இவன் மட்டும் டவரின் ஒரு விளிம்பில் தொற்றிக் கொள்கிறான்.ஏதோ ஒண்டிக் கொண்டு நிற்பதற்கு கொஞ்சம் இடம் கிடைக்கிறது.
சாரம் குலைந்து விழுந்த சத்தம் கேட்டு ஊரே திரண்டு விடுகிறது.அவனோ உதவி கேட்டு கூக்குரலிடுகிறான்.அவ்வளவு உயரத்திற்குச் சென்று உதவ யாராலும் முடியவில்லை. செய்தி கேட்டு அவன் மனைவி ஓடி வருகிறாள்.’கூறு கெட்ட மனுஷனை சத்தம் போட்டது தப்பாய்ப் போயிற்றே’ என்று தவிக்கிறாள். சில நொடிதான்.எல்லோரையும் சற்றே விலகச் சொல்லிவிட்டு அவனை சத்தமாக அழைக்கிறாள், ”அன்புக் கணவனே, உன்னுடைய இடது கால் உறை சிறிது கிழிந்திருக்கும், அதில் ஒரு நூலை லேசாகப் பிரித்து அதில் உன் காலணியை நன்றாகக் கட்டு, மெதுவாக ஷூவைக் கீழே விடு, காலுறையை நன்றாகப் பற்றிக் கொள், நான் சொல்லும் வரை, விட்டு விடாதே” என மளமளவென்று சொல்லுகிறாள். ஒரே நூலில் பின்னப்பட்ட காலுறை பிரிந்து பிரிந்து காலணி மெதுவாகக் கீழே வருகிறது. அதை நீக்கி விட்டு நூலில் நீளமான, பருமனான கயிற்றைப் பிணைத்து, “இப்போது நூலை மேலே மெதுவாக இழு” என்கிறாள்.அவனும் சர்வ ஜாக்கிரதையாக இழுக்கிறான். இப்போது அவன் கையில் கீழே இறங்கத் தோதுவான கயிறு கிடைத்துவிட்டது; அதை உபயோகித்து பத்திரமாக கீழே இறங்கி வந்து மனைவியைக் கட்டி அணைத்துக் கொள்ளுகிறான்.அவளும் முத்தமழை பொழிகிறாள். திரண்டிருக்கும் மக்கள் வெள்ளமே கை தட்டுகிறது.
நம்முடைய நாட்டுப் புறத்துக்கு வருவோம். ஓலைக் குடிசையின் கூரை வேய்ந்து நாளாகி விட்டது. ஒழுகுகிறது.. வெயில் ஒளி வட்டத்தை குடிசையெங்கும் காசு காசாக இறைக்கிறது. தாய்க் கிழவி மகனிடம் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டாள். அதற்கென்று ஒரு நாள் வாய்க்க வேண்டாமா....அன்று வேறு வேலை இல்லை. காலையிலேயே அதற்கான தயாரிப்புகளில் இறங்கி விட்டான். பழையதை நீக்கி விட்டு, புது ஓலை வேய்ந்து கொண்டிருக்கிறான், வெயில் ஏற ஆரம்பிக்கிறது.வியர்வை உருகி வழிகிறது.தாய்க் கிழவிக்குப் பொறுக்கவில்லை, ”ஏ ராசா, செத்த (கொஞ்ச)நேரம் கீழே இறங்கி இந்த மரத்தடிக்கு வாய்யா, இந்த நீத்துப் பாகத்தை ஒரு மடக்கு குடிச்சுட்டுப் போய், ஓலை வேயற வேலையப் பாருடா” என்று அழைக்கிறாள். பலமுறை அழைத்தும் மகன் கருமமே கண்ணாயிருக்கிறான். ”ஏ கிழவி சும்மா இரேன்’” என்று சத்தம் போடுகிறான்.
கிழவி குடிசைக்குள் போகிறாள்.கையில் பேரக் குழந்தையை எடுத்து வருகிறாள். அதை மகன் பார்க்க, வெயிலில் ஒரு துணியை விரித்துப் போடுகிறாள். குழந்தை சிறிது நேரம் கழித்து அழத் தொடங்குகிறது. மகன் கூரை மேலிருந்து சத்தம் போடுகிறான், ”ஏய், ஏய், கிழவி உனக்கு என்னாச்சு, பச்சைப்புள்ளைய வெயிலில் போட்டிருக்கிறாயே’ என்று கூச்சல் போடுகிறான்.கிழவி அசரவில்லை. பேசாமல், வேறு வேலை பார்ப்பதாகப் போக்குக் காட்டுகிறாள்.குழந்தை கொஞ்சம் வலுவாக அழுகிறது..மகன் கூரை வேயும் வேலையைப் பாதியில் விட்டு விட்டு வேகமாக இறங்கி வருகிறான். கிழவி, சட்டென்று குழந்தையை அள்ளி எடுத்துக் கொண்டு சொல்லுகிறாள்,”ஓம் புள்ளை வெயிலில் காய்ந்தால் மட்டும் உனக்கு வலிக்குதே, ஏம் புள்ள, நீ எம்புட்டு நேரமா வெயிலில் நிற்கிறாய், எனக்கு எப்படி இருக்கும்” என்கிறாள். மகன் தலை தொங்கி விடுகிறது.
காவிய காலமோ, கடல்கடந்த நாடோ, நாட்டுப்புறமோ....சிறுகுழந்தையாய், மனைவியாய், தாயாய்.... பெண்ணால் செய்ய முடியாதது எதுவுமில்லை..பிறகு ஏன் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு தர தடையாய் நிற்கிறார்கள்.. தெரியவில்லை!