Sunday, October 11, 2009
நினைவின் தாழ்வாரங்கள்-50
``பாட நினைத்தது பைரவி ராகம்
பாடி முடித்தது யாவையும் சோகம்’’
கண்ணதாசனின் இந்த வரிகள் படத்தில் வரும். இசைத் தட்டில் இருக்காது. `மயங்குகிறாள் ஒரு மாது’ படம் என்று நினைவு.
அந்திமழை.காமிற்காக திரு இளங்கோவன் எழுதுங்கள், எழுதுங்கள் என்று வருடக் கணக்காக கேட்டுக் கொண்டிருந்தார்.சந்தியா பதிப்பகம் நடராஜனும் உரை நடை எழுதுங்கள் என்று பல காலமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
முயற்சிப்போமே என்று ஆரம்பித்து ஒரு வருடம் ஓடி விட்டது.முசல் புடிக்கிற மூஞ்சியத் தெரியாதா என்ன, அண்ணாச்சி வேட்டைக்காரன் பற்றி எழுதுவாரு என்றார் ஒரு நண்பர்.. நாற்பதோடு முடித்து விட நினைத்திருந்தேன்.அதை நெருங்கும் போது இன்னொருவர்,இப்போது தான் புதிய பூமியே வருகிறது. இனிமேல் ரிக்ஷாக் காரன், இதயக் கனி எல்லாம் வர வேண்டுமே..... என்று மெயில் அனுப்பியிருந்தார், கடல் கடந்து. ஒரு தரை டிக்கெட் ஆசாமி எழுதும், வெறும் எம். ஜி. ஆர் புராணம் என்று நினத்து இருக்கலாம், அந்த ட்ரெஸ் சர்க்கிள், கிங்ஸ் சர்க்கிள்ஸில் அமர்ந்து படம் பார்க்கும் எலைட் ஆடியன்ஸ்.
அது உண்மையாயும் இருக்கலாம், போதுமடா சாமி என்று வணக்கம் போட நினைத்த சமயத்தில் சிலர் ரொம்ப நல்லாருக்கு.சினிமாவை வைத்து காலகட்டத்தை நன்றாகக் கொண்டு வருகிறீர்கள் என்றனர். வண்ணதாசன் ஒரு விடியற்காலம், தூக்கத்திலிருந்து எழுப்பி வாழ்த்தை மட்டும் சொல்லுகிறேன் வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை என்று சொன்னார்.நெகிழ்ச்சியில் தொண்டை அடைத்தது.
என் கவிதையில் சொல்லமுடியாததை, அதன் பின் புலம் என்று நான் நினைத்த, நான் என்ன வாக என் ஆதிகாலத்தில் இருந்தேன் என்று பாசாங்கில்லாமல் சிலவற்றைச் சொல்வது தான் என் நோக்கமாயிருந்தது. ஆனால் நினவின் ஆழத்திலிருந்து ஏதேதோ, எடுக்க எடுக்க வந்து கொண்டே இருந்தது.பெரும் பாலும் (99 சதவிகிதம்?) உண்மை சார்ந்த நிகழ்வுகளையே எழுதினேன்.சில நெருங்கிய நண்பர்களின் அவலங்களை, குறிப்பாக அவர்கள் வீட்டுப் பெண்களின், என் பட்டினி நேரங்களில் சோறு போட்டவர்களின், துயரங்களைச் சொல்லும் போது மட்டும் பெயர் இடம் என்று சற்று புனைவு கலக்க வேண்டியிருந்தது. தவிரவும் புனைவு இல்லாமல் எழுத்து சாத்தியமே இல்லை. ஜி.நாகராஜன் சொல்லாததை நான் சொல்லி விடவில்லை. கல்யாணியண்ணன் எப்பொழுதும் எனக்குச் சொல்வது போல், வண்ண நிலவன் எழுதாததை நான் எழுதி விடவில்லை.
சிலவற்றை எழுதி விட்டு இரண்டு மூன்று நாட்கள், பழைய வலியை, பட்டினியைப் புதுப்பித்துக் கொண்டு அவஸ்தைப் பட்டிருக்கிறேன்.எனக்குப் பிடித்தமான பழைய நண்பர்களை இதன் மூலம் திடீரென்று கண்டடைந்தேன்.சுகுமாரன் போன்ற நண்பர்கள் இதன் ஆரம்பத்தில் சில திருத்தங்கள் சொன்னார்கள். எல்லோருக்கும் என் நன்றி. கொஞ்ச நாள் கழித்து இது வேறு ரூபத்தில் தொடரக் கூடும் என்று சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.
Subscribe to:
Posts (Atom)