Monday, January 19, 2009

பனி தீராத வீடு....


இனி இதுதான் வாழ்க்கை, இனி மேல் கனவுகளுக்கு இடமில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.வீட்டில் இரண்டு நாளாக அம்மாவும், குழந்தைகளும் மூன்று நேரமும் வெறும் சீனிக் கிழங்கை, வெந்து தின்று தோட்டத்திற்கும் வீட்டிற்கும் போவதும் வருவதுமாக இருந்தார்கள்,கையில் தண்ணீர்ச் செம்புடன். அதற்கு கக்கூஸ்ச் செம்பு என்றே பெயர், நிறைய வீடுகளில் அப்படியொன்று இருக்கும். கனத்த பித்தளைச் செம்பு. அதிகம் துலக்காமல் களிம்பு ஏறிப் போயிருக்கும்.அதை மறந்து கூட வீட்டிற்குள் கொண்டு வரமாட்டார்கள். பின் புறத் தார்சாலில்த் தான் எப்போதுமிருக்கும்.இது போக, கழிப்பிடத்தின் அருகேயே எல்லாக் குடித்தனக்காரர்களுக்குமான கல்கத்தா வாளி இருக்கும்.ஆனால் வீட்டின் பெண்கள், குழந்தைகள் எல்லாரும் செம்பைத்தான் தேர்வு செய்வார்கள்.அந்தச் செம்பை எப்படி இன்னும், எனக்குத் தெரியாமல், விற்காமல் இருக்கிறார்கள் என்று இரண்டு நாளுக்கு முந்தித் தான் நினைத்திருந்தேன்.ஏதோ கிராமத்திலிருந்து கொஞ்சம் நெல் வருகிறது.மேல்ச் செலவுக்கு குச்சு வீடுகளின் வருமானம் இருக்கிறது.எல்லாரும் இரண்டு வேளை சாப்பிட்டு விடுகிறார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இரவுச் சாப்பாட்டை எனக்கு அநேகமாக நண்பர்கள் வாங்கித் தந்து விடுவார்கள்.நான் சாப்பிட்டு விட்டேன் என்று தெரிந்ததும், அம்மா சாப்பிடுவாள், கொஞசம் பருக்கைகளை.
நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளவில்லை.அவ்வப்போது சாமான்கள் சில காணாமல்ப் போகும்.ஏதோ அடுப்பெரியும்.சீனிக் கிழங்கைத் தின்று எல்லாரும் வெளிக்கிப் போன வண்ணமாய் இருக்கிறார்கள், என்பதை பெரிய அண்ணன் தான் கோபத்தில் சொன்னான்.கோபம் என்று கூடச் சொல்லமுடியாது.மெத்தப் படித்த என்னிடம் அவன் கோபப் பட்டுப் பிழைக்கவா. அவன் கெந்திக் கெந்தி நடமாடிக் கொண்டிருந்தான்.மடி கனமாக இருந்தது.என்னமாவது பொருளை மடியில் ஒளித்து எடுத்துச் செல்கிறானோ, விற்பதற்கு என்று, ``அது என்னத்தை மடியில வச்சுருக்க,‘’ என்றேன். ஒன்னுமில்லை,ஆப்பரேஷன் பண்ணி இருக்கேன், நடக்க முடியலை என்றான்.``ஆப்பரேஷனா, எதுக்கு’’ என்றேன், அதான்,அந்த ஆப்பரேஷன்.சொல்லும் போது முகத்தில், கோபம் கரைந்து, ஒரு திருப்தி தெரிந்தது. நூறு ரூபாய அம்மாட்ட கொடுத்துட்டேன், அரிசியையும் பொங்கித் தின்னாச்சு,வீட்ல வேற என்னமும் இல்லை, நீயும் நானும் தான் சோறு திங்கோம்.ஐம்பது ரூபாய் கரண்டுப் பணம் கட்டியாச்சு. பீஸைப் புடுங்கிட்டுப் போய்ட்டான்.அதுக்கு வேற தெண்டம் அஞ்சு ரூபா என்றான்.மனைவியைப் பறி கொடுத்து எட்டு வருஷமாச்சு.இது என்னடா கொடுமை, இப்பப் போய் குடும்பக் கட்டுப்பாடு பண்ணீட்டு வந்து நிக்கானே. இது வரை அவன் வேலை எதற்கும் போனதே இல்லை.இது தான் அவன் குடும்பத்திற்கு சம்பாதித்துக் கொடுத்த முதல்ப் பணம்.என் முன்கோபத்திற்குப் பயந்து என்னிடம் யாரும் இதைச் சொல்லவில்லை.அவன் சொல்லி முடிக்கும் வரை அம்மா அடுப்படியிலேயே நின்று கொண்டிருந்தாள்.அப்புறம் சற்றே வெளியே வந்து `` ஆமா ‘’ என்று மட்டும் சொன்னாள், சொல்லும் போதே அழுகையில் முகம் கோணலாகிப் போனது. எனக்கும் தாங்க முடியவில்லை.பட்டாசலுக்கு வந்து தலையில் தலையில் மடார், மடாரென்று அடித்துக் கொண்டேன். இப்படி நானும் செய்ததில்லை.
அப்பா தன் மரணப் படுக்கையில் இருக்கையில் ஒரு நாள் சொன்னார் ``அவன்ல்லாம் என்னை எங்கே பாக்கப் போறான்’’ என்று. நான் அப்படி நினைத்ததே இல்லை.அப்பா மேல்த்தான் எனக்குப் பிரியம்.அப்பா படுக்கையில் விழுந்த சமயம் தான் நான் சிகரெட்டுக்குப் பழகி இருந்தேன்.இதனால் சற்று அருகில்ப் போவதை தவிர்த்தது வாஸ்தவந்தான்.ஆனால் அவரை நெருங்கக் கூடாது என்று நினைத்ததே இல்லை. இப்படி அவர் சொன்னதைக் கேட்டதும், கையாலாகத் தனத்தின் வெளிப்பாடாய் தலையில் அடித்துக் கொண்டு கத்தி அழுதேன் காணாததற்கு அன்று க்ரூப் -2 தேர்வின் கடைசிப் பரீட்சை வேறு.பரீட்சை எழுதப் போகிறவன் இப்படியொரு மன நிலையிலா போவது என்று அக்காவிடம் அழுதேன். அக்காவும் அம்மாவும் சமாதானப் படுத்தி மாடிக்கு அழைத்துப் போனார்கள்.அதிலிருந்து அப்பாவிடம் பேசுவதே இல்லை.அந்த அனுபவம் வேறு விதமான வெறுப்புகளை வீட்டிலுள்ளவர்கள் மேல் ஏற்படுத்தி இருந்தது. செய்யவே நினைக்காத செயலுக்கு ஏன் இப்படியொரு பழிச் சொல் என்கிற நினைப்பு.
அப்பாவிடம் பேசவே இல்லை.பட்டாசலில் கட்டிலில் படுத்த படுக்கையாகி விட்டார்.மேலெல்லாம் படுக்கைப் புண். காச நோய் கடுமை கொள்ளத் தொடங்கி இருந்தது. நண்பனும் உறவினனுமான டாக்டர் பாலு தினமும் வந்து ஊசி போட்டுச் செல்வான். காசு எதுவும் வாங்கிக் கொள்ளமாட்டான்.அந்த நேரத்தில் தான் சுப்ரமணிய ராஜு திருமணம் சுவாமி மலையில் நடந்தது.ராஜுவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்.ஏற்கெனெவே அவன் எனக்காக அவனது டி.டி.கே கம்பெனியில் வேலைக்கு முயன்று கொண்டிருந்தான்.வேலைக்கு விண்ணப்பம் வாங்கி வைத்து, வாசு சாரிடம் சொல்லி இருந்தான். ``இன்னும் ஓரிரு வாரத்தில் நீ சென்னை வாசியாகப் போகிறாய், நம்பிக்கையோடு இரு, எப்படியும் உனக்கு வேலை கிடைக்காமலே போகாது.’’ என்று கடிதம் எழுதி இருந்தான். அத்தோடு யாரிடமாவது பணம் வாங்கிக் கொண்டு கட்டாயம் திருமணத்திற்கு வந்து விடு,நான் திரும்பும் போது பணம் தந்து அனுப்புகிறேன்.என்று எழுதி இருந்தான்.
நாளை நமதே - 75-ஜூலை 4- படம் பார்த்து விட்டு, முருகானந்தத்தோடு, அவன் வீட்டிற்குப் போனேன்.ரொம்ப அருமையானவன்.அவனைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது.அவன் அம்மாவிடம் சொல்லி அவன் வீட்டுக்கு அடுத்த அடகுக் கடைச் செட்டியாரிடம்மோதிரத்தை வைத்து ஐம்பது ரூபாய் கேட்கச் சொன்னேன். நானும், அவனும் கேட்ட போது, நாற்பதுக்கு மேல் தர முடியாது என்று சொல்லி விட்டார்.அவனதான் வா அம்மாவிடம் சொல்லி கேட்டுப் பார்ப்போம் என்றான்.அம்மாவிடம் சொன்னதற்கு, ஏல நாயி, மோதிரத்த அடகு வச்சாலே கல்யாணத்துக்குப் போகணும் அப்படீன்னாங்க. அவனுடைய அம்மா எப்பவும் அப்படித்தான் கூப்பிடுவா. சிரிச்ச மானிக்கித்தான் பேசுவா, நல்ல சங்கீதம் தெரியும்,வீணை வாசிப்பாள். வாசிச்சுக் கேட்டதில்லை.ஆனால் வீணை வாசிக்கிற மாதிரி போட்டோ இருக்கும்.ஏதாவது ராகத்தை முனு முனுத்துக் கொண்டிருப்பாள்.சஷ்டிக்கு விரதம் இருந்தால், கவசம் பூராவையும் (முழுவதையும்) ராகத்தோடு பாடிக் கொண்டிருப்பாள். `மனமே முருகனின் மயில் வாகனம்’ பாட்டென்றால் ரொம்பப் பிரியம்.இது இந்தோளம் தானே என்று ஒரு முறை கேட்டேன், இல்லையே, அப்படித்தானா என்று ம்னசுக்குள் பாடிப் பார்த்துக் கொண்டு, ஆமா இந்தோளம் தான். ஆமா, உனக்கு ராகமெல்லாம் ரொம்பத் தெரியுமோ என்றாள்.எனக்கு சினிமாப் பாட்டை வச்சு கொஞ்சம் தெரியும் லாலா மணி எப்பவாவது சொல்லுவான். இது இன்ன ராகம் என்று படம் பார்க்கையில்.நான் கெத்தாக ஏன் உங்களுக்கு மட்டும்தான் தெரியணுமோ, நாய்க்கும் ராகம் தெரியும், என்றேன்.எங்கே, அம்சத்வனிக்கு ஸ்வரம் சொல்லு பார்ப்போம். என்றாள்.நான், அகத்தியர் படத்தில் வருகிறதை வைத்து ல லா லா என்று ஏதோ உளறினேன்,. ஏய் மூதேவி, பாடீட்டு என்று தலையைப் பிடித்து ஆட்டி, நாடியைத் தொட்டு முத்தமிட்டுக் கொண்டாள்.ஆமா, கொஞ்சு, இருபத்தி அஞ்சு வயசு நாயை, என்று முருகானந்தமும் சிரித்துக் கொண்டான்.அவன் கதை விடுதாம்மா, ஒரு எளவும் தெரியாது பயலுக்கு என்றான் முருகானந்தம்.
அவள் போய் செட்டியாரிடம் சொல்லி ஐமபது ரூபாய் வாங்கி வந்து விட்டாள்.ராத்திரி பத்து மணிக்கு எக்ஸ்பிரஸ் பஸ், திருச்சிக்கு.அப்பாவிடம் போய் ரொம்ப நாளைக்கு அப்புறம் பேசினேன். , ``நான் தஞ்சாவூர் வரை போய்ட்டு வாரேன்., ஃப்ரெண்டோட கல்யாணம், அவன் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இருக்கிறான்.’’ என்றேன்.``இப்பவா, எனக்கு உடம்பு ரொம்ப முடியலையே’’ என்றார்.அதெல்லாம் ஒன்னும் ஆகாது, என்று சொல்லிவிட்டுக் கிளம்பும் போது, கட்டில் அடியிலிருந்த ஒரு சின்ன டிரங்குப் பெட்டியை எடுக்கச் சொன்னார்.அதில், வீட்டு வாடகை ரசீதுகள், ஏதோ சில அடையோலைகள்,(நிலத்தைப் பயிர் வைக்கிற சம்சாரி எழுதித் தரும் ஒப்பந்தம்). ``டிருநெல்வேலி டூட்டிகுரின் எலக்ட்ரிக் சப்ளைஸ்”ரெஸிடெண்ட் எஞ்சீனியர் சீனிவாசன் கையெழுத்துப் போட்ட, தனியார் மின்சாரக் கம்பெனியின், அது தமிழ்நாடு மின் துறையுடன் இணைக்கப் பட்டு விட்டது., டிப்பாஸிட் ரசீது, இடையே திருநெல்வேலி நகர்க் கூட்டுறவு பாங்கு கடன் புஸ்தகம். அதிலிருந்து ஒரு ஐந்து ரூபாயை எடுத்து தந்தார்.வாங்கிக் கொண்டேன். அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
வழியெல்லாம் நல்ல தூக்கமில்லை பஸ்ஸில்.கண்ட கண்ட கனவு. விபத்து நடக்கிற மாதிரி, வாட்ச் கட்டிய, மணிக்கட்டிலிருந்து துண்டாகிக் கிடக்கும் ஒரு கை தோன்றிக் கொண்டே இருந்தது, கனவில். தெருவில் நடந்து கொண்டிருக்கிறேன், தெரு அகலத்துக்கு ஆள் உயரத்துக்கு தூரத்தில் வாய்க்கால்த் தண்ணீர் போல வெள்ளம், தூரத்தில் வருகிறது.எப்படியோ திருச்சி போய், கும்மோணம் பஸ் பிடித்து ஸ்வாமி மலை சேர்ந்த போது நல்ல பசி. ஜெய பாரதி(குடிசை ஜெய பாரதி) இருந்தான்.அவன் தங்கை பாரதி தான் மணப்பெண்.சற்றுப் பொறு சாதம் ஆகிவிடும் சாப்பிடலாம் என்றான்.காபி சாப்பிட வெளியே போனோம்.அவன் அப்போது தினமணி கதிரில் இருந்தான்.என்னுடைய சிறுகதை ஒன்று அதில் வந்திருந்தது.-கண்ணாடி ஜன்னலில் விட்டெறிந்த கல்-அதற்காக 75/- ரூபாய் விரைவில் வரும் என்றான். மோதிரத்தை மீட்டு விடலாம், என்று நினைத்தேன். கும்மோணம் போய் காவேரியைப் பார்க்கணும், அதற்காகவே சீக்கிரம் வந்து விடு என்று ராஜு சொல்லி இருந்தான்.ஆனால் காவேரியில் சொட்டுத் தண்ணீர் இல்லை.ராஜுவும் மாலையில்தான் வருவான் என்றார்கள்.சாமி மலைக் கோயிலேறி இரவில், காத்தாட உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.நான், ஜெய பாரதி, அலிடாலியா ராஜாமணி, ``இடைவெளி’’ எழுதிய சம்பத்,.ராஜுவின் தம்பி ஆர்,விசுப்பிரமணியன்,நா விச்வநாதன்.என்று எல்லோரும். அநேகமாய் எல்லாரும் சம்பத்தைத் தான் கேலி செய்து கொண்டிருந்தர்கள், அவன் மனைவிக்கு அட்ங்கி ஒடுங்கி நடப்பதாக.அவனும் கூச்சமாக சிரித்துக் கொண்டிருந்தான்.அவனது அந்த பிரபலக் குறுநாவலும் , எனது `சுயம் வரம்’ குறுங்காவியமும் ஒரே தெறிகள் இதழில் வெளி வந்திருந்தது.அவனா அந்த நாவலை எழுதியது என்று எனக்கு ஆச்சரியம்.எனக்கு டி.டி.கேயில் கிடைக்க இருந்த வேலையை, திடீரென்று தற்கொலை செய்து கொண்டுவிட்ட ஒரு வாட்ச் மேன் பையனுக்கு கொடுக்க வேண்டி வந்து விட்டதாக ராஜு சொன்னான்.பர்ச்சேஸ் டிபார்ட்மெண்டில், அசிஸ்டண்ட் வேலைக்கு உத்தரவெல்லாம் தயாராகிக் கடைசி நேரத்தில் மாறி விட்டதாகச் சொன்னான். அந்தப் பையனுக்கு டைப் அடிக்கத் தெரிந்திருந்தது ஒரு காரணம் என்று சமாதானம் சொன்னான்.என்னை ஏதோ வெள்ளம் அடித்துக் கொண்டு போவதாக உணர்ந்தேன்.
காலையில் ஒரு பம்ப் செட்டுக்குப் போய் குளித்து விட்டு,காபி சாப்பிட்டோம். மாலன் வந்து விட்டான்.அவன் அப்போது தஞ்சாவூரில் இருந்தான்.அவன் ராஜாமணி, நான், எல்லோரும் காலையில் கோயிலுக்குக் கிளம்பினோம்.அவர்கள் சற்று முன்னே நடந்து கொண்டிருந்தார்கள்.நான் முழுக்கை சட்டையை மடித்து விட்டபடியே தொடர்ந்து கொண்டிருந்தேன்.கோயிலின் அடிவாரத்தை ஒட்டிய, வடக்கு வீதி.பாதித் தெரு வந்திருப்பேன், தெரு ஓரமாய் இருந்த குப்பைத் தொட்டி அருகே நின்றுகொண்டிருந்த ஒருவன், ஒரு கையில் அரிவாள், இன்னொரு கையில் நல்ல உருட்டுக் கட்டை, திடீரென்று எங்களை விரட்டத் தொடங்கினான். அவர்கள் எல்லோரும் கிழக்காக ஓடி விட்டார்கள்.நான் மாட்டிக் கொண்டேன்.திரும்பி ஓட முயற்சிக்கையில்,கால் இடறிக் கீழே விழ்ந்து விட்டேன். அருகில் யாரும் இல்லை.அவன் கட்டையை ஓங்கினான்.நான், அந்தா அ அவங்க அங்க ஓடிட்டாங்க என்று அலறினேன்.அதற்குள் ஒரு பலமான அடி,தலையில் விழ வேண்டியது. இடது கையால் தாங்கிக் கொண்டேன்.நல்ல வேளை அரிவாள் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்தது.. அதற்குள் மேற்கே நின்று கொண்டிருந்த சிலர் பிடிலே, பிடிலே என்று ஓடிவந்ததும் அவனும் ஓடி விட்டான். அவன் ஒரு துப்புரவுத் தொழிலாளியாம், மனைவி ஓடிப் போனதில் பைத்தியமாகி விட்டவனாம்.
கோயிலுக்குப் போகாமல் கல்யாண மண்டபத்திற்கு வந்து, (சாமண்ண செட்டியார் சத்திரம்.) படுத்து விட்டேன்.கை வலியெடுக்க ஆரம்பித்தது. சாப்பிடத் தோன்றவில்லை.இடுப்பிலும் அடி பட்டிருந்தது.யாரோ கட்டாயப் படுத்தி சாப்பிட வைத்தார்கள். ராஜாமணி என்று நினைவு, அயோடெக்ஸ் வாங்கி வந்து தடவி விட்டான்.கல்யாணம் முடிந்து சீட்டுக் கச்சேரி ஆரம்பித்ததுசம்பத்துக்கு சந்தோஷமோ சந்தோஷம். அவன் மனைவி சீட்டு விளையாட அனுமதி தந்து விட்டதாக யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.என்னால்.சீட்டைக் கையில் பிடிக்கக் கூட முடியவில்லை.வேறு யாராவதுதான் எனக்குப் பதிலாக சீட்டைக் கலைத்துப் போட்டார்கள்.ஆனால் அப்படி கார்டு பிடித்தது. கார்டுக்கு பத்துப் பைசா.பணம் நூற்றுக் கணக்கில் சேர்ந்தது. வலி சற்று குறைந்த மாதிரி இருந்தது.கோயிலுக்குப் போனோம். எனக்கு பயமாயிருந்தது.இருந்தாலும் போனோம்.நல்ல கூட்டம்.இரண்டு மூன்று பேர் அர்ச்சனைக்கு பூ, பழம் எல்லாம் வாங்கினார்கள். நான் ஒரு நாளும் வாங்காதவன் அன்று வாங்கினேன்.அர்ச்சனைத் தட்டை பூசாரியிடம் கொடுக்கும் போது பேரும் நட்சத்திரமும் கேட்டார். நான் அப்பா பெயரையும், நட்சத்திரத்தையும் சொன்னேன்.சொல்லி முடிக்கவும் பவர் கட் ஆகியது.கோயிலே இருண்டது.
மணி பதினொன்றரை இருக்கும்.மனசை என்னவோ செய்தது.சப்பாடு சரியாகவே இல்லை.ராஜுவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினேன். அவன் தம்பியிடம் சொல்லி நூறு ரூபாயும், வாத்தியாரிடம் சொல்லி வெற்றிலை பாக்குடன் நாலணாவும் தரச் சொன்னான். நா.விச்வநாதனுடன் பேராவூரணிக்குக் கிளம்பினேன்.அவனும் ராஜு மாதிரி ஒரு நல்ல ஃப்ரெண்ட்.அவனுடன் அன்று பூராவும் தங்குவதாகத் திட்டம். கை வேதனை கூடியது. அவன் வீட்டில் வெண்ணீர் ஒத்தடம் எல்லாம் கொடுத்தும் கேட்கவில்லை.மனசும் கேட்கவில்லை.ஊருக்கு கிளம்பறேண்டா என்று சொன்னேன். அவனும் தஞ்சாவூர் வரை வருவதாகச் சொல்லி, வந்தான்.அங்கே பிரகாஷைத் தேடிப் போனோம்.உடையார் காலனி வீடு.அவரது அம்மா டாக்டர். அவரிடம் காண்பித்து ஏதாவது ஊசி போட்டால் தேவலாம் போலிருந்தது.அவர்கள் இல்லை. பிரகாஷும் கூடவே வந்து திருச்சிக்கு பஸ் ஏற்றி விட்டார். திருச்சியில் எப்படியோ மதுரைக்கு பஸ் கிடைத்தது. மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு பஸ் பிடித்து வந்து வீட்டருகே இறங்கும் போது, சொந்தக் காரக் கூட்டம் ஒன்று பஸ் ஸ்டாப்பிலேயே காத்திருந்தது. பஸ்ஸை விட்டு இறங்கியதும் யாரோ என்னிடமிருந்து பையை வாங்கினார்கள்.வாங்கிக் கொண்டே தந்தி கிடச்சுத்தான் வாறியா, அப்பா போய்ச் சேர்ந்தாச்சு என்றார்கள்.போத்தி ஓட்டல் பக்கம் கூடி நின்றவர்களெல்லாம் வந்துட்டான், வந்துட்டான் என்று சொல்வது கேட்டது.பையை வாங்கிக் கொண்டது ஒரு முறையில் மாமா, அவனிடம் மெதுவாகக் கேட்டேன்.எப்ப என்று, ``அது நேத்து காலையில் பதினோரு, பதினொன்னரை மணி இருக்கும்’’ என்றான். .கோயிலில் கரண்ட் கட் ஆனதும் இதே நேரம்தான்,அப்பாவின் ஈமச் செலவுக்கு இரு நூறு ரூபாய்க்கு மேலிருந்தது..பாதிப் பணம் சீட்டு விளையாட்டில் கிடைத்தது.சம்பாதித்தது.சடங்கை சரியாகக் கூட செய்ய முடியவில்லை. கை வலி. பைத்தியக்காரனை பைத்தியக் காரன் பார்த்த பர்வை.அப்பாவைக் குளிப்பாட்டக் கொண்டுபோகும் போது, எங்கிருந்தோ வந்த கோயிலாச்சியும் சங்கம்மாளும் மேலேயே விழுந்து அழுதார்கள்.இன்னும் நேரமாவதற்காக எல்லோரும் சலித்துக் கொண்டார்கள்.அம்மா என்னைப் பெத்த தங்கக் கட்டி என்று அழுது கொண்டிருந்தாள், யாரை அப்படிச் சொல்கிறாள் தெரியவில்லை.நேற்றுக் கூட அவள் அதிகமாய் அழவில்லை என்று பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இன்று சீனிக்கிழங்குப பஞ்சத்தைக் கேட்டதும் கொதித்துப் போயிற்று மனசு. இன்னம் கொஞ்ச நாளில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கு.அதற்குள் என்ன செய்வது. திடீரென்று நினைவு வந்தது. அப்பா அபூர்வமாய்க் கடன் கேட்கும் கோயிலாச்சியின் வீடு.அடுத்த தெருவில் இருந்தது.பெரிய பணக்காரக் குடும்பம். தூரத்து உறவு.ஒரு ஆச்சியும் அவள் மகளுமிருந்தார்கள் அம்மாவையும் அந்த ஆச்சிக்கு ரொம்பப் பிடிக்கும்.மகள் இங்கே இப்போது இல்லை. தந்தி ஆபீஸில் வேலை.ஆச்சிக்கு சில பண வரவு செலவுகளில் அப்பாதான் உதவுவார்கள்.ஆனால் ரொம்பக் கண்டிப்பானவள். புருஷன் இல்லாத சொத்து, யாராவது ஏமாற்றி விடக் கூடாது எனபதில் சர்வ ஜாக்கிரதையாய் இருப்பாள்.
விளையாடப் போன மகனைக் காணோம் என்று தேடிக் கொண்டு வந்த சங்கம்மாளை,கருக்கலில் அரைப் பைத்தியமாய்த் திரிந்து கொண்டிருந்த சொக்கன்,திடீரென்று கட்டிப் பிடித்துக் கொண்டு விட்டானாம். நல்ல வேளை, விளக்கு வைக்கிற நேரமாயிருந்ததால்,தெருவில் நடமாட்டம் அதிகமில்லை. வேற யாரும் பார்க்க வில்லை. பைத்தியக்காரன் ரொம்ப முன்னேறும் முன், தற்செயலாக வந்த அப்பா, அவனிடமிருந்து சங்கம்மாளைக் காப்பாற்றினாராம். யாரும் பார்க்கவில்லையே தவிர அரசல் புரசலாக விஷயம் பரவி விட்டது.சங்கம்மாள் வேறு ஊருக்கு மாறுதல் வாங்கி விட்டுப் போய் விட்டாள்.ஆச்சி தினமும் பெரிய கோயில் போகாமல் இருக்க மாட்டாள். திருவிழா என்றால் சாமி புறப்பாடு செய்வதிலிருந்து தொடங்கி, வீதி வலம் வரும் போது கூடவே வந்து, கோயிலில் கொண்டு போய் சப்பரத்தைச் சேர்த்த பின்னர் தான் வீடு வருவாள்.அதனால்த்தான் கோயிலாச்சி என்றே பேர் அவளுக்கு. இதற்குப் பின் அவளும் கோயிலுக்கே போவதில்லை. கோயிலாச்சியிடம் போய் நின்றேன்.விஷயத்தைக் கேட்டாள். அடப்பாவி மக்களா, படிச்ச பய நீ வீட்டில இருந்தும் இந்தப் பஞ்சமா?கோமுக்குத்தான் புத்தியில்லையா ஏண்ட்ட கேக்கதுக்கு என்ன.இந்தா இன்னக்கித்தான் மணி ஆர்டர் வந்துது.,சங்கம்மாள்ட்ட இருந்து. வச்சுக்கோ, வேலை காயம் ஆயிரும்ன்னு ஆவு வீட்டில சொன்னாகளே, ஆனதும் குடு.உங்க அப்பாவோ சங்கம்மாவோ இங்கே இருந்தா எனக்கு உதவியாயிருக்கும். என்ன செய்ய, வீட்டுக்கு வீடு வாசப்படி, என்ற படி, நீயாவது கூறோட இரு என்றாள்.
இனிமேல் கனவுகளுக்கு இடமில்லை என்று முடிவு செய்தேன்.ராஜு சொன்னது மாதிரி எப்படியும் ஒரு வேலை கிடைத்து விடும், பனி விலகி விடும் என்று நம்பிக்கை வந்தது.