Tuesday, December 22, 2009

ஓடும் நதி-11


அது என்ன வேடிக்கையோ. காலையில் உத்தியோகக் கத்தி தலையை நெருங்குகிற எட்டரை, எட்டேமுக்கால் மணிக்குத் தான், மனசுக்குள் ஏதாவது எழுத வேண்டும் போல, பல பொறிகள் தோன்றும். இன்னும் கால் மணி நேரத்துக்குள் குளித்து, சாப்பிட்டுக் கிளம்ப வேண்டும் என்னும் போது அருவியாய் யோசனை கொட்டும். ஒரு காலையில் “தசாவதானியின் மீதெறிந்த பூக்கள்” என்று ஒரு ‘வார்த்தைக் கூட்டம்’ மனதில் தோன்றியது.
பசி வேறு. ”இன்னும் குளிக்கப் போகலையா” என்ற மனைவியின் எச்சரிப்புக் கேட்டவுடன், ”அரைத் தம்ளர் காபி கொடேன் இந்தா வந்துருதேன்...” என்று மேசையடியில் அமர்ந்து பேனாவைத் தேடினால், காணும்; ஒளிந்து கொண்டு விட்டது. சூடான காபியைக் கையில் பத்திரமாய்த் தந்து விட்டு, மேசைக் குப்பைகளுக்கிடையேயிருந்து இரண்டு பேனாக்களை தேடியெடுத்து சிரித்தபடி கையில் திணித்து, ஏற்கெனவே மேசையில் இருந்த எச்சில்த் தம்ளர்கள் இரண்டை எடுத்துக் கொண்டு போனாள். அவ்வளவுதான் மணி எட்டேமுக்கால், எங்கே பேனாவைத் திறக்க என்று நினைத்தேன். ”துண்டும் புது சோப்பும் பாத் ரூமில் வச்சாச்சு,கைக்குட்டையைத் தேடாதீங்க பேண்ட் பாக்கெட்டிலெயே வச்சுட்டேன்..... மீதிக் காஃபி ஃப்ளாஸ்கில் இருக்கு...” அடுக்களையிலிருந்து குரல் வந்து கொண்டே இருந்தது.யோசனை முந்தின நாளுக்குப் போனது.
நேற்று அவள் பணியாற்றும் பள்ளிக்கு ஒரு தசாவதானி வந்திருந்தார்.அவதானிகளுக்குப் பெயர் பெற்றது இந்தப் பகுதி. அஷ்டாவதானம் (எண் கவனகம்) செய்வது சற்று சாதாரணமானதாகக் கருதப்படும். ஆனால் அதுவே ரொம்பக் கடினம். தசாவதானத்தை நேரில் பார்க்கும் ஆவலில் நான் போன போது நேரம் கடந்து விட்டிருந்தது.அநேகமாக முடியும் நிலை.ஐந்து இலக்க எண்ணை இன்னொரு ஐந்து இலக்கத்தால் ஒரு ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப் பெருக்கிக் கொண்டிருந்தார். அதற்கான விடையை கவனகர் ஏற்கெனவே சொல்லி இருந்தார்.அவர் கையில் இருந்த சாக் பீஸ் துண்டில் ஒரு சிலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு இடது புறம், வலது புறம், பின்னாலிருந்து மூன்று மாணவர்கள் செவ்வந்திப் பூவை அவர் மேல் எறிந்து கொண்டிருந்தார்கள். அந்தப் பூக்களின் எண்ணிக்கையை கடைசியில் சொல்வாராம்.
பாரதியாரின் பாடல்களில் முதல் எழுத்தைச் சொன்னால் பாடலைப் பாடினார். யாரோ `ஆ’ என்று சொல்ல “ஆஹா கரும்புத் தோட்டத்திலே....” என்று பாடினார்.”புளியோதரை....என்று ஆரம்பித்து சுண்டல்” என்று முடியும் வெண்பா ஒன்று, யார் அப்படிக் கேட்டது தெரியவில்லை, பாடினார்.மாணவர்கள் எல்லாம் பலமாகச் சிரித்தார்கள். அதைக் கேட்டு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தேன், அவர் பெயர் விபரங்கள் எல்லாம் வாங்க வேண்டுமென்று நினைத்தேன். ஒன்றும் செய்யவில்லை. இராமையா என்று லேசாக நினைவு. இதே பெயரில் பிரபலமான கவனகர் உண்டு. அவரும் பதின் கவனகர் (தசாவதானி). செய்குத் தம்பி பாவலர், ஒரு சதாவதானி (100 கவனகங்கள் செய்வாராம்)அவருடைய நூல்களை கலைஞர் நாட்டுடமையாக்கி இருக்கிறார்.
நிகழ்ச்சி முடிந்ததும் அருகில் போய் நானும் இன்னும் சில ஆசிரியர்களும் பேசிக் கொண்டிருந்தோம். அவரால் சோடசோஅவதானம் (பதினாறு கவனகங்கள்)கூடச் செய்ய முடியும், ஆனால் அதற்கு மூளைக்கு நிறைய காற்று, அதாவது ஆக்ஸிஜன் தேவை, கொட்டாவி விட்டுட்டா கவனம் எல்லாமே போயிரும், அதற்காக சிரசாசனம் செய்த படியே கவனகம் செய்ய வேண்டும் என்று சொல்லிகொண்டிருந்தார். எல்லோருக்கும் ”அப்பாடியோவ்” என்றிருந்தது. அப்போது மாணவர்களிடம் வசூலான பணத்தை ”இவ்வளவு இருக்கிறது” எனச் சொல்லிக் கொடுத்தார்கள். பணிவுடன் வங்கிக் கொண்டார். அருகில் நின்ற என்னிடம், மெதுவாக நான் இன்னும் அதிகமாக வரும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் என்றார்.கஷ்டமாக இருந்தது.
நேரம் நிற்கவா செய்யும், மணி ஒன்பது. அவசர அவசரமாக நாட் குறிப்பில்

”தசாவதானியின்
மீதெறிந்த
பூக்கள்....”

மேடையேறிய
தசாவதானி
வீட்டுக் கவலை பற்றியும்
‘எண்ணி’க்கொண்டிருந்தால்
அது எத்தனையாம்
அவதானம்.-

என்று ஒரு குறிப்புப் போல எழுதி வைத்துவிட்டுக் குளிக்க விரைந்தேன். நேற்று ஊறுகாய் வைக்கவில்லை இன்றும் மறந்து விடாதே: கொஞ்சம் குளிர்கிற மாதிரி இருக்கே வெண்ணீர் போட்டிருக்கலாமோ என்று சொன்ன படியே அவளைக் கடந்து போனேன். ”ஆமா பத்து கை இருந்தாலும் உங்களுக்கு காணாதே” என்று அவள் சொல்லவும், நான் தலையில் தண்ணீரை விடவும் சரியாய் இருந்தது.