Tuesday, December 1, 2009

ஓடும் நதி-8


தி.ஜானகிராமன் எழுதியிருப்பார், ஒரு நாள் பூராவும் உள்ளங்கை ரேகைகளையே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று. பார்ப்பதற்கும், வியப்பதற்கும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அபூர்வம் எங்கேயும் எப்பொழுதும் நம்மைச் சுற்றியும் நம்மிடமுமே இருக்கிறது.நாமோ ``பூர்வமானவைகளைப் பற்றியே யோசித்து, முந்தினவைகளையே நினைத்துக்’’ கவலைக் குழியில் விழுந்து கிடக்கிறோம்.
ஒரு தனிமையான மதியப் பொழுது, தொலைக்காட்சி செய்திகளில் மனம் பதியவில்லை.மறுநாள் அருகில் உள்ள பராசக்தி மகளிர் கல்லூரியில் கவிதை பற்றி ஒரு உரையாடலுக்கு கூப்பிட்டிருந்தார்கள். ஜானகிராமனின் வரிகள் நினைவுக்கு வர, கை ரேகையையே பார்த்துக் கொண்டிருந்தேன். (என்ன பேச என்று கைகளைப் பிசைந்து கொண்டிருந்தேன் என்பதே பொருந்தும்) தொலைக்காட்சியில் அமெரிக்க அதிபர் இடது கையால் கையொப்பமிடும் காட்சி ஒன்றைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.இதற்கு முன்னிருந்த இரண்டு மூன்று அமெரிக்க அதிபர்களும் (இப்போது ஒபாமாவும்) இடது கைக்காரர்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் இடதுசாரிச் சிந்தனை என்றால் ஜென்மப் பகை.
இடதுசாரி என்ற பெயர்ச்சொல், ப்ரிட்டிஷ் பார்லிமெண்டிலிருந்து ஏன், எப்படி உருவாகி வந்தது, வலது கை கொடுப்பதைக் கண்டு கொள்ளாத ”கர்ணனின் இடது கை”, ஆண்டு தோறும் ஆகஸ்ட் 13 இடது கைக் காரர்களின் நாளாகக் கொண்டாடப் படுவதாக ரீடர்ஸ் டைஜெஸ்டில் படித்தது......என்று இடது கை பற்றிய யோசனைகளாய் மனதுக்குள் ஓடிற்று.


கைகளிரண்டில்
இடது கையை எனக்குப் பிடிக்கிறது
ஏனெனில்
இதற்கே உடலின் அந்தரங்கங்கள்
நன்கு அறிமுகம்

விளையாட்டு மும்முரத்தில்
சாக்கடையில் விழும் பமபரங்கள்
கோலிக்காய், குச்சிக் கம்பு
எதுவானாலும் யோசியாமல்
துழாவி எடுத்துத் தரும்.

சாமி படக்காலண்டர் மாட்ட
சுவரில் ஆணி அடிக்கையில்
அதைப் பிடித்துக்கொள்ளும்
வலது கை தப்புச்செய்தால்
வலுவாய்ச் சுத்தியலடி வாங்கிக் கொள்ளும்......

என்று பரபரவென்று மனசிற்குள் கவிதை வரிகள் ஓடியது. இன்னும் கொஞ்சம் வரிகளும் உணடு.... இப்போது சரியாய் நினைவில்லை.
உடனேயே கல்லூரி முதல்வர் அவர்களுக்குப் போன் செய்து நாளை, மாணவிகளை ``இடதுகை’’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி வரும்படிச் சொல்ல முடியுமா என்று கேட்டேன்.அவர்கள் தயங்கினார்கள். இப்போது சொன்னால் எங்கே எழுதப் போகிறார்கள் என்று. பரவாயில்லை, ஒன்றிரண்டு பேராவது எழுதி வந்தால்கூடப் போதும், அதை வைத்துக் கொண்டு உரையாடலைத் தொடர்வது சுலபம்.நன்றாகவும் இருக்கும் அவர்களுக்கும் விவாதத்தில் ஒரு ஈடு பாடு இருக்கும், முடியாவிட்டாலும் பாதகமில்லை என்றேன்.அரை மனதாய் சம்மதித்தார்கள்.
மறுநாள் மேடையில் அமர்ந்ததுமே பத்துப் பதினைந்து கவிதைகளைக் கொடுத்தார் முதல்வர். வேகமாக வாசித்தேன்.எல்லாமே நல்ல முயற்சியாக இருந்தது.
``தலைப்பைப் பார்த்ததுமே
மளாரென்று
எழுதி விட்டேன்”.- என்று ஒரு கவிதை.இன்னொரு கவிதையில் –வயலில் உழும்போது
இடதுகைதான் ஏரைப் பிடிக்கிறது.
வலது கை சாட்டையைப் பிடிக்கிறது....என்று அற்புதமான படிமம் ஒன்று வந்திருந்தது. தொடர்ந்து, அறுவடையிலும் வலது கை அரிவாளைத்தான் ஏந்துகிறது... என்று எழுதியிருந்தார் ஒரு கிராமத்து மாணவி.எனக்கு என் கவிதை வரிகள் குறித்து வெட்கமாய் இருந்தது.அவற்றை வைத்துக் கொண்டு, கொஞ்சம் எனக்கே திருப்தி வருகிற மாதிரிப் பேசி முடித்தேன்.முதல்வருக்கு வியப்பு, நம் மாணவிகளா இதை எழுதியது என்று. இரண்டாவது சரி சார், முதல்க் கவிதை புரியவில்லயே, அதனால்த் தான் தேர்ந்தெடுத்தீர்களா என்று சிரித்துக் கொண்டே கேட்டார். இல்லை அந்த மாணவியை அழையுங்கள், அவருக்கு இடது கைப் பழக்கம் இருக்கும் என்றேன். அழைத்தார். சிரித்தபடியே வந்த மாணவியிடம் கேட்டேன், நீங்கள் இடக்கை பழக்கம் உள்ளவரா?, என்று. இல்லையே என்றார். அப்படியானால்..... என்று தயங்கிய போது சொன்னார், நான் இரண்டு கையாலும் நன்றாக எழுதுவேன் என்று.முகத்தில் ஒரு அசாத்தியக் குறும்பு தென்பட்டது.நான் சொன்னேன், கால் என்று தலைப்புச் சொன்னால், நீங்கள் காலால் கூட கவிதை எழுதுவீர்கள் என்று.சுற்றி நின்ற எல்லோரும் சத்தமாகச் சிரித்துப் பலமாய் கரவொலி எழுப்பினர்கள், இரண்டு கைகளாலும்.