சுவரொட்டி....(1)
(’கா
சினிமா நிறுவனங்கள், -சினிமாக் கம்பேனி, நாடகக்
கம்பேனி என்பதுதான் வழக்கமான, பழக்கமான சொல்லாடல்- ஏகப்பட்ட கனவுகளுடன் உருவாவதும்
அவை பிரபலமாவதும், அப்புறம் தடம் தெரியாமல் அழிந்து போவதும் ஒரு பெரிய தொடர்கதை. ஒரு
படத்துடனேயே அழிந்து விடுபவையும் உண்டு.சிலர் உண்மையிலேயே அடுத்த படத்திற்கான
தயாரிப்புகளில் இறங்குவார்கள்.சிலர் எடுத்த படத்தையாவது விற்க வேண்டுமே என சில
போலி அறிவிப்புகள் வெளியிடுவார்கள். இன்று
முதல் என்று வரும் வ்ளம்பரங்களுக்கு அடியில் இப்படிப் போலி அறிவிப்புகள் இருந்தாலே
சொல்லி விடுவோம் ஆகா இந்தப் படம் கூவப் போகுதுடா என்று. கத்தியை எடுத்தவனுக்கு
கத்தியாலேயே மரணம் என்கிற கதை சினிமா எடுக்கிறவர்களுக்கும் பொருந்தும்
போலிருக்கிறது சினிமா தொழிலில் தலை கொடுத்தவர் அதை விட்டு வேறு தொழில் போக
முடியுமா... தெரியவில்லை. அரசியலுக்குப் போனவர்களிலும் அவ்வளவு பேரும் வெற்றி
பெற்றதில்லை.
நான் அந்த
விஷயத்திற்கெல்லாம் நேரடியாகப் போகப் போவதில்லை. என் பள்ளிப்பருவத்தில் நானும் ஒரு
சினேகிதனும் சேர்ந்து எம்.ஜி.ஆர் பட ஆல்பம் ஒன்றைத் தயாரித்து வந்தோம். தினத்தந்தி
பேப்பரில் வரும் விளம்பரங்கள்,பேசும்படம் இதழில் வரும் படங்கள், எல்லாவற்றையும்
வெட்டி ஒரு அரைக்குயர் நோட்டில் ஒட்டுவது. இது எங்கள் படிப்பை முழுதாக விழுங்கியது
என்றே சொல்லவேண்டும். இதை அவ்வப்போது பார்க்கிற பள்ளித் தோழர்களும் அவர்களுக்கு
கிடைக்கிற அபூர்வப் படங்களைத் தருவார்கள்.அப்படிச் சேகரிக்கையில் பேசும்படம்
இதழில் இருந்து ஸ்ரீதர் தயாரிக்கும் “அன்று சிந்திய ரத்தம்” படத்தின் ஒரு ஸ்டில் கிடைத்தது. முற்றிலும்
வித்தியாசமான ஒரு மேக் அப்புடன் எம்.ஜி.ஆர் ஒரு கூட்டத்தினரைப் பார்த்து ஏதோ
‘எழுச்சிஉரை (!)
ஆற்றுவதுபோல கையை உயர்த்திக்
கொண்டு நிற்பார். இது 1963-64 என்று நினைவு.. அது ஒரு பொக்கிஷம்.
தென்காசியில் ஒரு மாமா ஒருவர் இருந்தார்.அவரிடம்
பழைய காலத்து ’பேசும்படம்’, இதழ்கள் இருக்கும். அவரிடம் பல அருமையான சினிமாப்
புத்தக சேகரிப்புகள் இருந்தன. ’நாரதர்’ என்று ஒரு சினிமா பத்திரிக்கை.நாரதர் ஸ்ரீனிவாசராவ்
என்பவர் நடத்தியது. அவர் விகடனின் சினிமா நிருபர் என்று நினைவு. அதிலிருந்து பிரிந்து
வந்து இந்த இதழை நடத்தினார்.அவரிடம், ’பேசும்படம்’ போன்ற அமைப்பிலேயே ’குண்டூசி’, ’சினிமாக்கதிர்’, ’கலை’ போன்ற
சினிமா பத்திரிக்கைகள் உண்டு. பேசும்படம்
தான் நிறைய இருக்கும். ‘PICTURE POST’
என்று ஒரு ஆங்கில இதழ் கூட ஒன்று வைத்திருப்பார்.
அதுவும் பேசும்படம் வெளியீடு என்று நினைவு.பேசும்படம் வெளியிட்ட ஒரு மலர் பெரிய
சைசில் உள்ளது ஒன்று அவரிடம் உண்டு. அதன் பல பக்கங்கள் இருக்காது. எம்.ஜி.ஆர். பம்பை
முடி, ஓவர்கோட் அணிந்து ஒரு படம் “மலையாளம் தந்த மாணிக்கம்” என்ற தலைக்குறிப்புடன் இருக்கும். எல்லா பிரபலங்களுடைய
படங்களும் இருக்கும். மற்றவர்களுக்கு என்ன ‘டைட்டில்’ போட்டிருந்தது நினைவில்லை.அதை எவ்வளவு கேட்டும் தர
மறுத்துவிட்டார்.
அவர் கோ ஆப்டெக்ஸில் வேலை
பார்த்தார். ஞாயிற்றுக்கிழமை காலையில் அவருக்கு வேலை, அவரது மாடியறையில் ஒரு
டிரங்குப்பெட்டியைத் திறந்து பழைய இதழ்களைப் பார்ப்பது. அப்படிப்பார்க்கும்போது
மட்டும் நம்மையும் அனுமதிப்பார்.அதற்கே அவரது அப்பா ஏசுவார், ”ஆரம்பிச்சுட்டானா சின்னப்புள்ளைகளை வச்சுக்கிட்டு
கூத்தடிக்க “ என்று. அவ்வப்போது அவர் வீட்டு அத்தை மரப்படிகளில் பாதிக்கு ஏறி மாடியை
எட்டிப் பார்ப்பதும் வழக்கம். அங்கே ஒரு ’கேம்ப்
கட்டில்’ உண்டு.
அதில் அவர் அருகே உட்கார்ந்து கொண்டு, நானும் இன்னொரு அத்தை மகனும்
பார்ப்போம். அவர் காண்பிக்கும் இதழ்களைத்தான் பார்க்க முடியும். எட்டிப்பார்க்கும்
அத்தை ”ஏம்ல தரையில உக்காந்து பார்த்தா ஆகாதா” என்று சொல்லிவிட்டு
தலை மறைவாள். மாமாவுக்கு பல் நீளம். காதில் ஒரு பஞ்சு வைத்திருப்பார்.காணாததற்கு
ஒரு இரண்டுங்கெட்டான் வாசனை வீசுகிற எண்ணையொன்று தேய்த்துக்
குளித்திருப்பார்.அவரிடம் ஒரு முறை ஆல்பத்தைக் காண்பித்து படங்கள் கேட்டேன். ஒரே
ஒரு விளம்பரப்படம் தந்தார். ’மாலையிட்டமங்கை’யைத் தொடர்ந்து கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,
எம்.ஜி.ஆர் நடிக்கும் “ஊமையன் கோட்டை” . ஒரு
கோட்டையை நோக்கி குதிரை வீரன் விரைவது போல வரையப்பட்ட படம். ஏதோ அம்புலிமாமா
படக்கதையில் வருகிற மாதிரி இருந்தது. அதை மட்டும் தந்தார். ’வேலுத்தேவன்’ என்று ஒரு
பட விளம்பரம். எம்.ஜி.ஆர் பட்டாளத்துச் சிப்பாய் மாதிரி உடையில் கையில் ஒரு
கைத்தடி வைத்துக் கொண்டு நிற்பார்.இந்தப் பாடல்க் காட்சி ”தட்டுங்கள் திறக்கப்படும்/ கேளுங்கள் கொடுக்கப்படும்/
கொட்டுங்கள் அளக்கப் படும்/ கூறுங்கள் திருத்தப்படும்..” என்று தற்போது யூ டியூபில் காணக்கிடைக்கிறது. அதையும்
ஒரு ’இந்துநேசன்’ பத்திரிக்கையையும் நான் அவரிடமிருந்து சுட்டுக் கொண்டு
வந்தேன். இந்துநேசனுக்கு ஏகப்பட்ட வரவேற்பு பள்ளிக்கூடத்தில். ”செட்டிப்பயல் கண்ணதாசனோடு செக்ஸ் போஸ் கொடுத்தாளாம்
சிங்காரி கே.ஆர். விஜயா”
என்று விஜயாவின் தலையை மட்டும்
ஒட்டி மார்ஃபிங் செய்த படத்துடன் உள்ள செய்தியை மனப்பாடம் செய்யாதவர்களே அந்த்
ஒன்பதாம் வகுப்பில் கிடையாது.இந்து நேசனில் யாருக்கும் எந்த மரியாதையும் கிடையாது.”கை படாத ரோஜாவை கசக்கி எறிந்தான் பி.எஸ். வீரப்பா”என்பது போலத்தான் வரும். இது இருக்கட்டும், வெளிவராத படங்களின்
சுவாரஸ்யமான பின்னணிகளையும், சினிமாவில் தோன்றி மறைந்த தயாரிப்பாளர்களையும்
பார்க்கலாம்
மதுரை வீரன் 1956-ல் வெளிவந்து
பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. 33 நகரங்களில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம். பல
சாதனைகள் முறியடித்த ‘பணமா பாசமா’ கூட இவ்வளவு
அதிக நகரங்களில் 100 நாள் ஓடியதா நினைவில்லை. அதற்கு முன் கிருஷ்ணா பிக்சர்ஸ்
‘லேனா செட்டியார்’ சிவாஜிகணேசனை வைத்துத் தயாரித்த ‘காவேரி’ என்றொரு படம் வந்திருந்தது. (அதற்கு முன் ‘கிருஷ்ண
பக்தி’)காவேரி படத்திலேயே எம்.ஜி.ஆர் நடிப்பதாக
இருந்தது என்று சொல்லுவார்கள். காவேரி படம் ஓடவில்லை. அப்புறமாய் எம்.ஜிஆரை வைத்து
மதுரை வீரன் வெளிவந்தது. லேனா பிக்சர்ஸின் ஆஸ்தான இயக்குநர் ‘யோகானந்த்’, என்ற தெலுங்கு இயக்குநர் இயக்கி இருந்தார்.
(கூட்டிக்கழித்துப் பார்த்தால் எல்லாருமே தெலுங்குக்
காரர்களாய்த்தான் இருந்திருக்கிறார்கள்.) மலைக்கள்ளன்
படத்திலிருந்து எம்.ஜி.ஆருக்கு ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டிருந்தது.
மலைக்கள்ளன், 1954 –ல் தொடங்கிய
மத்திய அரசின் தேசீய சினிமா விருது திட்டத்தின் கீழ் அகில இந்திய அளவில் இரண்டாவது
சிறந்த படமாக வெள்ளிப் பதக்கம் பெற்றது. ஒருவேளை, அன்று அரசவைக் கவிஞரான நாமக்கல்
கவிஞரின் கதை என்பதனால்க் கூட இருக்கலாம். இந்தப் பரிசு பற்றி ஏனோ யாராலும்
குறிப்பிடப்படுவதில்லை.
தேசீய
விருதுக்கு எம்.ஜிஆர் படங்கள் தகுதியுடையவை, தகுதியானதல்ல என்ற சர்ச்சைக்கு
அப்பாற்பட்டு தேசீய விருதில் அதிகமும்
சிவாஜி படங்கள் இடம் பெற்றதில் ஒரு அரசியல் இல்லாமல் இல்லை. ’பழநி’ திரைப்படம்
1965 பொங்கலுக்கு வெளிவந்து தோல்வி கண்டது. வழக்கமான பீம்சிங் படமாக அது
அமையவில்லை. ஆனாலும் அதற்கு 1964-ம் ஆண்டுக்கான பிராந்திய விருது கிடைத்தது.அதற்குச்
சொல்லப்பட்ட காரணம், அது 1964 டிசம்பரிலேயே தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. பரிசைக்
குறித்து விளம்பரம் செய்தும் படம் ஓடவில்லை.
விஷயம்
அதுவல்ல. கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த மதுரை வீரன் வெற்றியைத் தொடர்ந்து லேனாச்
செட்டியார் ராஜா தேசிங்கு படம் எடுத்தார். படத்தை முடிப்பதற்குள் படாத பாடு
பட்டுவிட்டார் என்பார்கள். படமும் வருகிறது வருகிறது என்று அவ்வப்போது
விளம்பரங்கள் வருமே தவிர படம் நான்கு வருடம் கழித்து வந்தது. திருநெல்வேலி ரத்னா
டக்கீஸில் இடைவேளையின் போது, பலத்த விசில் கொண்டாட்டங்களுக்கு நடுவே ”விரைவில் வருகிறது ”ராஜா தேசிங்கு” என்ற ஸ்லைடு
காண்பிப்பார்கள். அப்புறம் அதைக் காண்பித்தாலே கிண்டலும் கேலியுமான ஊளைச்சத்தங்கள்
எழும்பிய வேடிக்கையும் நடந்தது. அங்கே காண்பித்துக் கொண்டிருந்த ஸ்லைடை ரத்னா
டாக்கிஸின் ‘சகோதரிநிறுவன’மான பார்வதி டாக்கீஸில் (1960-ல் புதிதாகத்
திறக்கப்பட்ட தியேட்டர். காங்கிரஸ் எம்.எல்.ஏவான சங்கர் ரெட்டியார் என்பவருக்குச்
சொந்தமானவை இரண்டும்.நிறைய ஊர்களில் காங்கிரஸ்காரர்களுக்கு பல தியேட்டர்கள்
இருந்தன) காண்பிக்கப்பட்ட போது அந்த
கேலிக்குரலும் அதற்கு எதிரான கண்டனக் குரல்களும் எழும்பியது. ஒரு வழியாய் படம்
1960-ல் வெளியாகி தோல்வி கண்டது. லேனாச் செட்டியார் அநேகமாக திவால் ஆகி இருந்தார்.
இதே போல்
‘நாவல் ஃபிலிம்ஸ்’
‘மகனே கேள்”, வருகிறது
வருகிறது என்று ஸ்லைடு காட்டி கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பின்
வந்தது.பாப்புலர் டாக்கிஸில் ஸ்லைடோடு, படத்திலுள்ள சீர்காழி கோவிந்த ராஜன் பாடிய
‘கோஷ்டி கான’ப் பாட்டுக் கூடப் போடுவார்கள்
.” ஓரோன்
ஒன்னு, உள்ள தெய்வம் ஒன்னு
ஈரோன் ரெண்டு ஆண் பெண்ஜாதி ரெண்டு
மூவோன் மூனு முத்துத் தமிழ் மூனு
நாலோன் நாலு நன்னிலம் நாலு
அஞ்சோன் அஞ்சு
அஞ்சுவதற்கு அஞ்சு
ஆறோன் ஆறு
நல்லறிவுகள் ஆறு
ஏழோன் ஏழு
இசைக்குலங்கள் ஏழு
(ஸ ரி க ம ப த நி....
ஸ...)
எட்டோன் எட்டு
எட்டும் வரை எட்டு
ஒன்பதோன் ஒன்பது
நவ மணிகள் ஒன்பது
பத்தோன் பத்து
பாடல்கள் பத்து ”- என்று ஒரு நல்ல பாடல் போடுவார்கள். பாடல் வெளிவந்தும்
படம் வெளிவரவில்லை. எஸ்.எஸ்.ஆர் நடித்தது. அது போட்டால் இடைவேளை வியாபாரம்
தியேட்டர் ஸ்டாலில் இன்னும் கொஞ்ச நேரம் கூடுதலாக நடக்கும்.அங்கே நீண்ட நாட்களாகக்
காட்டிய இன்னொரு ஸ்லைடு ’செந்தாமரை’. சிவாஜிகணேசன் நடித்தது..நீண்ட நாள் தயாரிப்பில்
இருந்து வெளிவரக் கஷ்டப்பட்டு, ஒருவாறாக வெளிவந்து நன்றாக ஓடிய படங்கள் என்பது
மிகக் குறைவு.
1958 –ல்
’நாடோடிமன்னன்’ இமாலய வெற்றிக்குப் பின் அதன் கதை வசனகர்த்தாக்களில்
ஒருவரான ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகக் கம்பெனியில் இருந்தவர், கதை, வசனம் எழுதிய ‘கலையரசி’. ஐந்து வருட இடைவெளிக்குப் பின் வந்து தோல்வி கண்டது.
தமிழின் முதல் சயின்ஸ் பிக்ஷன் படம் இது. சின்ன
அண்ணாமலை ஒரு காங்கிரஸ்காரர். அவர் எம்.ஜி.ஆர் நடித்த திருடாதே படத்தை “’பாக்கெட்மார்’(தேவானந்த்,
கீதாபலி நடித்தது) இந்திப்படத்தைத் தழுவி எடுத்தார்.ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அப்படியே
பல இடங்களில் இருக்கும். அது பாதியில் நின்றது.அதை ஏ.எல்.சீனிவாசன் தொடர்ந்து
எடுத்தார், மிகப்பெரிய வெற்றி பெற்றது.அதே போல சின்ன அண்ணாமலை தயரித்த “ஆயிரம்
ரூபாய்’ படமும் பாதியிலேயே நின்றது.கே.எஸ்.
கோபாலகிருஷ்ணன் பிரபலமான சமயம், அவர் அதை மறுபடி ‘ஒக்கிட்டு’ ஒரு சுமாரான படமாக்கினார்.அவர் அப்படி ஒக்கிட்டு நல்ல
வெற்றி பெற்ற இன்னொரு படம், வி.கே ராமசாமி தயாரித்து, ‘திண்டாடிக் கொண்டிருந்த
‘செல்வம்’ படம். அதையும் பெயர், திரைக்கதை எல்லாவற்றையும்
மாற்றி கே.எஸ்.ஜி வெற்றிப் படமாக்கினார்.
வெளிவராமலே போன படங்கள் இன்னும் நிறைய உண்டு.
அதிலெல்லாம் யாராவது ஒரு மாபெரும் கலைஞன், நடிகன் தயாரிப்பாளராகி அழிந்தே
போயிருப்பார்.’மாடி வீட்டு ஏழை’ என்று சந்திரபாபு எடுத்த படம் ஒரு சான்று.தட்டுங்கள்
திறக்கப்படும் என்று அவர் எடுத்த படம், ரொம்ப பிரமாதமாக ஓடும் என்று வியாபாரம்
ஆனது.படம் ஓடவில்லை. பாதிக்குப்பின் அது ஒரு துப்பறியும் படம் போல ஆகிவிட்டது.
“க்ளூ ஆஃப் தி நியூ பின்”
என்ற ஆங்கிலப் படத்தின் தழுவலில்
கொலைக்காட்சிகள் அமைந்திருக்கும்.அதே யூனிட் எடுக்க முயற்சித்த ‘மாடி வீட்டு ஏழை’ சரியாக வியாபாரம் ஆகாமல் எம்.ஜி.ஆரும் ஒத்துழைக்காமல்
சந்திரபாபு காலியானார்.
’ஆனந்த ஜோதி’ எம்.ஜி.ஆர்
தேவிகா நடித்து வெளிவந்த ஒரே படம் அடுத்து அவர்கள் இருவரும் இணைந்து நடித்த ”உடன்பிறப்பு” படம் அதன்
தயாரிப்பாளர் ’ஃப்ரெண்ட் ராமசாமி’ என்ற நடிகரைப் பலி வாங்கியது.எம்.ஜி.ஆரின் வராத
படங்களின் பட்டியல் வெகு நீளம். சியமாளா ஸ்டுடியோஸ் தயாரிப்பான சிலம்புக்குகை,
டி.என்.ஆர் ப்ரொடக்ஷன்ஸ் ராணி லலிதாங்கி(இது சிவாஜிகணேசன் நடித்து வெளிவந்தது.) கே.எஸ்
கோபாலகிருஷ்ணனின் ‘பிரம்மாண்ட தயாரிப்பு’ என்று
அறிவிக்கப்பட்ட “தங்கத்திலே வைரம்”. ரவீந்தர்
கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் “இணைந்த கைகள்” என்ற சரித்திரப்படம். ’பொன்னியின் செல்வன்’ படத்தையும் பலமுறை அறிவித்து, அவர் தயாரிக்க
முயற்சித்து நடை பெறவே இல்லை. சதானந்தவதி
பிக்சர்ஸ் ’ரிக்ஷா ரெங்கன்’ என்று ஒரு படம். தேவர் பிலிம்ஸ் மறுபிறவி என்று
ஒருபடம்.தேவர் படங்களின் இடைவேளையின்போது எமது அடுத்த தயாரிப்பு என்று ஒன்றைப் போடுவார்கள்.
ஆனால் அடுத்த தயாரிப்பு அதுவாக இருக்காது. யானைப்பாகன் பட இடைவேளையின் போது (அல்லது
தாய் சொல்லைத் தட்டாதே படமா சரியாக நினைவில்லை.) எமது அடுத்த தயாரிப்பு எம்.ஜி.ஆர்
சரோஜாதேவி நடிக்கும் “ வெங்கிமலை ரங்கன்” என்று பலத்த
கைதட்டலுக்கிடையே போடுவார்கள்.அப்படியெல்லாம் ஒரு படம் வரவே இல்லை. தாயைக் காத்த
தனயன் படத்தின் இடைவேளை விட்டவுடன் தொடந்து அரங்கில் வெளிச்சம் பாய, மங்கலான
திரையில் ஓடும், எமது அடுத்த தயாரிப்பு எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி நடிக்கும் ’தாய்க்குத் தலைமகன்’ என்று. ஆனால் அடுத்து வந்தது ‘குடும்பத்தலைவன்”. தாய்க்குத்தலைமகன் அதற்கு ஐந்து வருடம் கழித்து
ஜெயலலிதா நடிக்க 1967-ல் வந்தது. படகோட்டி படத்திற்கு அப்புறம் எம்.ஜி.ஆர்
சரோஜாதேவி நடிக்கும் ‘பரமபிதா’ என்று
படகோட்டி பாட்டுப் புத்தகத்தில் மேக் அப் டெஸ்ட் படங்கள் கூட அச்சிட்டிருந்தார்கள்.
ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ’ஐ கன்ஃபெஸ்’( I, CONFESS )
படத்தின் தழுவல் என்று பேச்செல்லாம் அடிபட்டது. ம்ஹூம் வரவில்லை.(அகாதா கிறிஸ்டி எழுதிய ’மர்டர் ஷி
ஸெட்’ (“MURDER, SHE SAID”) என்ற படத்தின் தழுவல்தான் எம்.ஜி.ஆரின் “என் கடமை”)
சிவாஜி நடித்து ஸ்ரீராம் என்ற நடிகர் தயாரித்த ஜீவ பூமி
வெளி வ்ரவேஇல்லை. சாண்டில்யணின் நாவல் ஜீவபூமி. கர்ணன்’ படத்திற்கு அடுத்து பத்மினி பிக்சர்ஸ் மகத்தான
தயாரிப்பு “ கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன” என்ற கோஷத்துடன் சிவாஜி கணேசன் என்.டி ராமாராவ் நடிக்கும்.
“சந்திரகுப்த சாணக்யா” என்று அறிவிப்பு வந்தது. ஆனால் முரடன் முத்து
வெளிவந்து பந்துலுவும் சிவாஜியுமே பிரிந்து விட்டனர். பந்துலு எம்ஜி.ஆருடன்
இணைந்து ஆயிரத்தில் ஒருவன் வெளிவந்தது. இன்னும் பல நடிகர்களின் பல படங்க்ள் பாதித்
தயாரிப்பில் நின்று போயிருக்கின்றன. என்னத்தெ கன்னையா மாதிரியில் “ வரும்..... ஆனா..
வராது...” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
”
(’