Sunday, March 15, 2009

உச்சி வெயில்..அப்பாவின் ஆத்மார்த்தமான சினேகிதர்களில். ஷாப் கடை சங்கரன் பிள்ளை ஒருவர்.முதலில் அவரும் அவரது தம்பியும் சேர்ந்து கடை வைத்திருந்தார்கள், அப்புறம் இரண்டு பேருக்கும் பிடிக்காமால்ப் போனதாலோ என்னவோ கடையை பாகம் பிரித்துக் கொண்டார்கள்.கடை சந்திப் பிள்ளையார் கோயிலுக்கு எதிரில் இருந்தது.அப்புறமாக அதை தம்பிக்கு கொடுத்துவிட்டு போத்தி ஒட்டலுக்கு அடுத்த கடையை எடுத்து நடத்திக் கொண்டிருந்தார்.அவரது பழைய கடையின் முகப்பு உயரமாய் இருக்கும்.கடையின் முகப்பில் நீளமான பலகை. கடையினுள் அவர் ஏறிச் செல்ல பலகையின் முடிவில் ஒரு ஆள் நுழைகிற அளவு இடமிருக்கும்.என்னைப் போல் சின்னப் பையன் அதில் உட்கார்ந்து கொள்ளலாம்.நாடோடி மன்னன் நூறாவது நாள் விழாவுக்கு எம் ஜி ஆர் அந்த வழியாகப் போன போது அங்கிருந்துதான் பார்த்தேன்.எவ்வளவோ கெஞ்சியும் அப்பா தியேட்டருக்கு அழைத்துப் போக மறுத்து விட்டார்.சங்கரன் பிள்ளை அண்ணாச்சி, கடையை பாகம் பிரித்த போது, அப்பாவும் உடனிருந்தார்.நிறையப் பொருட்களை தம்பி விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டார்.கடையை நான் தான் பெரும்பாலும் பார்த்துக் கொண்டேன் என்பது அவரது வாதம்.கிட்டத்தட்ட சங்கரம் பிள்ளை அண்ணாச்சி புதிதாகத்தான் கடைக்கு பொருட்கள் சேகரிக்க வேண்டி இருந்தது.புதிதாய்ப் பார்த்த இடத்தில் பரமசிவம் பிள்ளை என்றொருவர் கடை வைத்திருந்தார். அது நொடித்துப் போனது. கடை, அட்டம், ஒரு கண்ணாடி அலமார், கல்லாப் பெட்டி எல்லாவற்றையும் சேர்த்தே விலை பேசி இருந்தார். தம்பி, கல்லாப் பெட்டியை தருவதாகச் சொன்னவர் கடைசியில் மறுத்து விட்டார்.அது மட்டும் வருத்தம் அவருக்கு. நொடித்துப் போனவரின் கல்லாப் பெட்டியை வைத்துக் கொள்ளவும் சிறிய தயக்கம்.இதே போல தயக்கம் தம்பிக்கும் இருக்காதா என்று அப்பாவின் நண்பரான குற்றாலிங்கம் செட்டியார் சொன்னார்.அதுவும் சரிதான், என்று அண்ணாச்சி விட்டு விட்டார். ஒரே ஒரு பொருளை கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டார். அதைத் தர தம்பி மறுக்கவில்லை. மறுப்பதற்கு அது என்ன காசு பெருமதியானதா என்று குற்றாலிங்கம் செட்டியார் சொன்னார், வாயில் பெர்க்லி சிகரெட்டை வைத்துக் கொண்டே சொன்னார்.சரி அதை வாங்கி தாங்க இந்தா இவனை கூட்டிட்டுப் போங்க என்று புதுக் கடை முன் அப்பாவுடன் நின்று கொண்டிருந்த என்னைக் காட்டினார்.
செட்டியார் அண்ணாச்சி சிகரெட் பிடிப்பதைப் பார்ப்பது எனக்கு அலாதிப் பிரியம்.எழுபது வயது வரை கூட அவர் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.அப்பா இறந்த துக்கம் விசாரிக்க வந்தவர், மாடியில் என் புத்தக மேஜை அருகேயே வந்தார்.கல்லூரிப் புத்தகங்கள் தவிர ஜே. கிருஷ்ணமூர்த்தியின் commentaries on living.புத்தகத்தை பார்த்து விட்டு இது எப்படிப்பா இருக்கு, எல்லாரும் ரொம்பச் சொல்லுதாங்களே.,என்று எடுத்துப் பார்த்தார்.வேணுன்னா படிச்சுட்டு தாங்களேன் என்று கொடுத்தேன், என்னை கூர்மையாகக் கவனித்தார். என்னிடமிருந்து சிகரெட் வாசனையை உணர்ந்திருக்க வேண்டும். வேண்டாண்டே என்றார்.சொல்லிவிட்டு புத்தகத்தை வைத்துக் கொண்டார்.அப்புறம் தான் புரிந்தது அவர் சொன்னது சிகரெட்டை என்று.மாடியைச் சுற்று முற்றும் பார்த்தார் ஏயப்பா எப்பிடி கலகலன்னு இருந்த இடம், சீட்டு என்ன, கச்சேரி என்ன.ஆமா இந்த ஃபேனை எங்க, வித்துட்டாரா ச்சேய், அருமையான ஜி யி ஸி ஃபேன்ல்லா, கொலுபொம்மை பீரோ இருக்காடே, வோர்ல்ட் வார் சமயத்தில அதில உங்க அப்பா கோல்ட் ஃப்ளேக் சிகரெட்டா வாங்கி டின் டின்னா அடுக்கியிருந்தாரு பாக்கணும்.சொல்லிக் கொண்டே ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். இது சிஸர்ஸ் சிகரெட். இப்போது பெர்க்லி வழக்கொழிந்திருந்தது..உனக்குத் தெரியுமாடே உங்க அப்பா ரத்தக் கொதிப்பு வந்து கவர்ன் மெண்ட் ஆஸ்பத்திரியில் ரொம்ப சங்கடப் பட்டாரு, அப்பவே போயிருவாருன்னாங்க, தப்பிச்சிட்டாரு, அப்ப அவரு விட்டுட்டாரு சிகரெட்டை, இப்ப நானும் ராமானுஜமும்தான் குடிக்கிறோம்.நீ ஆரம்பிச்சுராதப்பா. எந்த வகையிலாவது விட்டுரு என்று அருமையான ஆங்கிலத்தில் சொன்னார்.தொடர்ந்து, எத்தனை பையங்க ஹாஸ்டல் மாதிரி இருந்து படிச்ச இடம், ஆமா வீட்டையும் விலை பேசியாச்சுல்லா, ச்சே ச்சே என்று தலையை இட வலமாக ஆட்டினார், அப்படியே இறங்கிப் போய் விட்டார். துஷ்டி கேட்க வந்துட்டு விடை சொல்லக் கூடாதுன்னு நினைச்சாரோ, இல்லேன்னா பழைய நினைவுகளோ.
சங்கரம் பிள்ளை அண்ணாச்சி கேட்டது ஒரு புகைப் படத்தை. ஏற்கெனெவே தம்பி அதைக் கழற்றி வைத்திருந்தார்.இந்தாங்க என்று ரெடியாகக் கொடுத்தார். நான் வாங்கிப் பார்த்தேன்.மூன்று பேர் ஒரே போல் மீசையும், தொப்பியும் வைத்து நாற்காலியில் உட்கார்ந்திருந்தனர்.இது என்ன படம் தெரியுதாடா என்று செட்டியார் அண்ணாச்சி கேட்டார்கள்.தெரியாது என்று தலையை ஆட்டினேன். இதுதான் பகத் சிங், சுதந்திரப் போராட்ட வீரன்னாங்க.கட்ட பொம்மன் மாதிரியா என்றேன். ஆமா அவனை விட பெரிய வீரருங்க. என்றார்.நான் சிவகங்கைச் சீமையில வாறவங்க மாதிரியா என்றேன்.அவர் சிரித்தார்.உனக்கு சிவாஜி புடிக்காதுல்லா என்றார். சங்கரன் பிள்ளை அண்ணாச்சி அதை சந்தோஷமாக வாங்கினார்.அவரும் இது யாரு தெரியுமா என்றார். நான், தெரியும் பகத் சிங் என்றேன். பராவாயில்லையே, அண்ணாச்சி இவன் ரொம்ப கெட்டிக்காரன் அண்ணாச்சி என்று அப்பாவிடம் சங்கரம் பிள்ளை சொன்னார். நான் பாவமாக செட்டியார் முகத்தைப் பார்த்தது இன்றும் நினைவில் இருக்கிறது. ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.
சங்கரன் பிள்ளை அண்ணாச்சிக்கு என் மீது அபார நம்பிக்கை.அப்பா இழந்ததை எல்லாம் நான் ஒருவனே மீட்டு விடுவேன் என்று. அதை சொல்லவும் செய்வார்.(இப்படியெல்லாம் சொல்லக் கேட்டுக் கேட்டு தலைக் கனம் ஏறியிருந்தது.)சாயந்தரம் ஸ்கூல் விட்டு வந்தால் போத்தி ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, அண்ணாச்சி கடையில் ஒரு பாரிஸ் லாக்டோ பான் சாக்லெட் வாங்குவது வழக்கம். அந்தச் சாலெட்டை சுற்றியிருக்கும் பச்சைத்தாளை சிவசங்கரனிடம் கொடுக்க வேண்டும். அவன் அதை சேகரித்துக் கொண்டிருந்தான். நூறு காலி உறைகள் சேர்ந்ததும் கொடுத்தால், பாரி கம்பெனியிலிருந்து ஒரு கேரம் போர்டு பரிசு தருவார்கள் என்று நிறைய பேர் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட எண்பது சேர்த்திருந்த நிலையில் தினமணியில் விளம்பரம் வந்தது.காலி யுறைகளைக் கட்டி வைத்திருப்பது போல் படம் போட்டு. இந்த மாதிரி பரிசுத்திட்டம் எதையும் பாரி கம்பெனி அறிவிக்கவில்லை. குழந்தைகளும் பெரியவர்களும் தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டும் என்கிற மாதிரி.
அண்ணாச்சி கடையில் அப்போது கல்கத்தாவிலிருந்து ராஃபில் டிக்கெட் வரும்.தமிழ் நாட்டில் அப்போது லாட்டரி டிக்கெட் கிடையாது.அதற்கு பணம் அனுப்ப ஒரு ஃபாரத்தை நிரப்பி மணி ஆர்டர் ரசீது எண்ணைக் குறிப்பிட்டு எழுத வேண்டும்.அதை எழுதவும், கவரில் ஆங்கிலத்தில் விலாசம் எழுதவும் நான் உதவி செய்வேன்.ஏதோ ஒரு சாரிட்டீஸ் நடத்திய ராஃபில் டிக்கெட்.சிட்போர் ரோடு என்றோ என்னவோ ஒரு ஞாபகம்.நானும் சிவசங்கரன் மற்றும் தோழர்கள், காமராஜர், விருதுநகரில் தோல்வி அடைந்த செய்தியை ஃபோன் மூலம் கேட்டதும் ஒரு தட்டி போர்டு எழுதி போத்தி ஓட்டல் முன்னாலிருந்த தி.மு.க கொடிக் கம்பத்தில் கட்டினோம்.ஒரே பரபரப் பாகி விட்டது, அந்த இடம்.எங்களை ஒதுங்கிப் போகும்படி மூத்த கழகத்துக்காரர்கள் சொன்னார்கள். நாங்கள் கலையவில்லை.நான் சற்றே ஒதுங்கி சங்கரம் பிள்ளை கடைப் பக்கம் வந்தேன்.அவர் சொன்னார், பாத்துகிட்டே இரு நான் சொல்லற மாதிரி ஜெயப்ரகாஷ் நாராயணன் ஆட்சிதான் வரப் போகுது.இதெல்லாம்தான் அதுக்கு முன்னோடி, என்று. அண்ணாச்சி பிரஜா சோசலிஷ்ட் கட்சி.ஒருமுறை வார்டு கவுன்சிலரா இருந்தவர்.குடிசை சின்னத்தில் நின்று ஜெயித்தார்.எப்போதும் கதர் வேஷ்டியும், காலர் இல்லாத வட்டக் கழுத்து கதர் சட்டையும் தான் போடுவார்.ஜே. பி தலைமையில் ஒரு புரட்சி வெடிக்கப் போவதாகச் சொல்லுவார்.ஜே பி லோகியாவெல்லாம் இந்தி ஆதரவாளர்களாக நினைத்துக் கொண்டிருந்தோம். அண்ணாச்சி சொல்லுவார் ஜே பி தான் பிரதமர் பதவிக்கு லாயக்கு.அவர் இந்திக்கு ஆதரவாளர் இல்லை என்று. எம.என் ராய் பற்றிப் பேசுவார்.அவரெல்லாம் சொன்னா யாரு கேக்கா. டாங்கேக்குக்கும், ஈ எம் எஸ்சுக்கும்தான் மரியாதை.ராஜாஜியைப் பிடிக்காது, அவரு சும்ம ஒட்டுக் கட்சி நடத்துதாரு. பாரேன் காங்கிரஸ் கூடச் சேந்துருவாரு ஒரு நாளு என்பார்.
ஆனால் இதெல்லாம் எப்போதாவதுதான்.அநேகமாய் காலையில் கடை திறந்ததும் போய் விடுவேன்.தினமணி பார்ப்பேன்.தினமணியும் express பேப்பரும்தான் வாங்கி விற்பார். மற்றபடி வாரப் பத்திரிக்கைகள் எல்லாம் வரும் .ராணி வராது.தீபம், அணில் எல்லாம் வாங்கிப் போடுவார்.பேப்பரைக் கேட்காமலே தருவார். தள்ளி நின்னுக்க, யாவாரத்தை கெடுக்காத என்பார்.அந்தப் பகுதியில், என்.வி.எஸ் பட்டணம் பொடி அவர் கடையில்தான் கிடைக்கும். அதற்காக வாழைத்தடை வாங்கி வைத்திருப்பார். நாகர் கோயிலிலிருந்து வரும்,நூறோ இரு நூறோ கொண்டது ஒரு சக்கரம். அதை ஒவ்வொன்றாக எடுத்து, அதற்கென்றே இருக்கிற ஒரு வழு வழுப்பான கட்டையால் தேய்த்து சுருக்கங்கங்களை நீக்குவார். இது வியாபாரமில்லாத நேரத்தில் நடக்கும். அப்போது ஏதாவது நாட்டு நடப்பு பற்றி யாரிடமாவது பேசுவார்.மாசப் பிறப்பு என்றால் நான் வருவதை எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்.என்னை கடையில் வைத்துவிட்டு சந்திப் பிள்ளையார் கோயிலுக்குப் போவார். மூன்று தேங்காய் உடைப்பார். அது என்ன கணக்கோ. பெரும்பாலும் நான் கடையில் ஏறி உட்கார மாட்டேன்.ஒரு நாள். 1968 நவம்பர் மாதம் கார்த்திகை மாசப் பிறப்பு அன்று நான் தினமணி பார்த்துக் கொண்டிருந்தேன். அண்ணாச்சி கோயிலுக்குப் போயிருந்தார்,யாரோ பெண்குரல், கடையில் ஆளில்லையா என்று கேட்டது.என்ன வேணும் என்று கேட்டுக் கொண்டே பேப்பரைத் தாழ்த்தினேன்.எக்ஸ்பிரஸ் பேப்பர் வேணும், என்ற பதிலைக் கேட்டதுமே, இரண்டு பேருக்குமே தெரிந்து விட்டது ஒருவருக்கொருவர் யாரென்று. பத்து வருடம் கழித்துக் கேட்கிற குரல்.அதே நாலாம் வகுப்புக் குரல்.நீல நிறத்தில் புடவை கட்டிக் கொண்டு., சசி.(இப்ப தெரிஞ்சுருக்குமே எப்படிடா இவ்வளவு கரெக்டா தேதி மாசம் எல்லாம் சொல்லுதாரு புள்ளையாண்டன்னு.) கடையில் இருப்பது ஒரு பேப்பர். அது யாருக்காவது வழக்கமாக வாங்குபவர்களுக்காக இருந்தால் என்ன செய்வது ஒன்றும் பதில் சொல்லாமல் நின்றேன், அடுத்த கடைக்குப் போய்விட்டாள்.அப்புறம் மாசா மாசமும் தினந்தோறும் தவம் கிடக்க வைத்த காதல் அன்று தான் மறு உதயமாயிற்று.
அண்ணாச்சி கடை அருகே நின்று விகடனோ குமுதமோ பார்த்துக் கொண்டிருந்தேன்.அண்ணாச்சி கூப்பிட்டு நூறு ரூபாய்க்கு சில்லறை மாற்றி வரச் சொன்னார்.போத்தி ஒட்டலுக்குச் சென்று சில்லறை மாற்றி வந்து கொடுத்தேன்.அதில் ஐம்பது ரூபாய் போல எடுத்து இதை வச்சுக்க, போதுமா இல்லேன்னா இந்தா எல்லாத்தையுமே வச்சுக்க என்று ஒருவனிடம் கொடுத்தார். அப்போதுதான் பார்த்தேன்.அவன் எனக்கு நன்கு தெரிந்தவன்.பெயரை நினைவுக்கு கொண்டு வரும் முன்,நீ கிளம்பு என்று அவனிடம் சொன்னார், அண்ணாச்சி.இவன் அப்பாவும் உங்க அப்பா மாதிரி நல்ல பழக்கம் என்று சொன்னார்.சரி பேப்பர்ல ஏதாவது வேலைக்கி வழி இருக்கான்னு பார்த்தியா என்று பேச்சை மாற்றுகிற தொனியில் சொன்னார்.எனக்கு போனவனைப் பற்றிய சிந்தனையாகவே இருந்தது.அதைப் பற்றி யோசித்தத படியே நகர்ந்தேன்.காலேஜ் வாழ்க்கையெல்லாம் முடிந்து அப்பாவையெல்லாம் வழி அனுப்பிய நேரம்.வீட்டுக்குப் புறப்படும் முன் போஸ்ட் மேன் எதிரே வந்து விட்டார், பஜாரிலேயே பார்த்து விட்டேன். ஒரு புத்தகக் கட்டு கொடுத்தார்.இந்திரா/ இந்தியா 75. தமிழ்நாடன் எழுதிய புத்தகம்.பிரமாதமான அச்சு.அங்கேயே பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். பார்த்தபடியே நடந்தேன். பின்னால் யாரோ வருகிற மாதிரி இருந்தது.திரும்புவதற்குள் சத்தம் கேட்டது. என்னா சோமு, வீட்டுக்குத்தானா.தானாகவே பெயர் நினைவுக்கு வந்து விட்டது. ஏய் வீரவாகு, வா வா என்றேன்.
வீரபாகுவும் மாயாண்டியும் தான் அந்த நோட்டீஸுடன் ஒரு நாள் வீட்டிற்கு வந்தார்கள். செண்ட்ரல் டாக்கிஸுக்கு எதிர்த்த சந்திரவிலாஸ்காரரின் காலி மைதானத்தில் வைத்து ஒரு மாநாடு நடக்கிறது, கோல் வால்க்கர் என்று ஒரு பெரிய பேச்சாளர் வருகிறார்.நீ கண்டிப்பா வா என்றார்கள்.நோட்டிசில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க் என்று போட்டிருந்தது. முடியுமானால் சாயந்தரம் மந்திரமூர்த்தி ஸ்கூல் கிரவுண்ட் பக்கம் வாயேன் என்றார்கள்.இரண்டு பேருமே ஹைஸ்கூலோடு நின்று விட்டவர்கள்.நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த ஞாபகம். மாயாண்டி நன்றாகப் படிப்பான்.எப்போதுமே நான் `சி’ செக்‌ஷன் என்றால், அவன் `டி’ செக்‌ஷனாக இருப்பான். நான் இங்கே முதல் ரேங்க் என்றால் அவன் அங்கே.கையெழுத்து அழகாக இருக்கும்.எஸ்.எஸெல் சியில் நானூறுக்கு மேல் வாங்கினான்.ஆனால் கல்லூரியில் சேரவில்லை என்று நினைக்கிறேன். மேலப் பாளையத்தில் ஒரு பீடி கம்பெனியில் வேலை பார்க்கிறான்.வீரபாகு படிப்பில் சுமார். பத்து வரை கூட படித்தானா நினைவில்லை.என்னுடன் சினிமா போட்டு விளையாட வருவான்.
இரண்டு நாள் கழித்து இன்னொரு நண்பனுடன் ரயில்வே பீடர் ரோடிலிருந்த மந்திர மூர்த்தி ஸ்கூலுக்குப் போனேன்.பத்து இருபது பேர் கபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். எல்லாருமே காக்கி அரை டிரவுசரும் வெள்ளைச் சட்டையும் போட்டிருந்தார்கள்.கண்ணாடி போட்டு ஒல்லியாக நெற்றியில் கோபி போட்ட ஒருவர் ரெஃப்ரியாக நின்று கொண்டிருந்தார்.அவரும் டிரவுசரும் சட்டையும் தான் போட்டிருந்தார்.கபடி கபடி யென்று பாடி விளையாடுவதற்குப் பதிலாக `ர்ராம்ம்ம்ம்’ (ராம்) என்று ஒருஅணியும் `ராவண்ண்ண்ண்’ என்று ஒருஅணியும் விளையாடிக் கொண்டிருந்தனர். வீரபாகு என்னைப் பார்த்ததும் ரெஃப்ரியிடம் சொன்னான்.அவர் சிரித்த படியே நல்வரவு என்றார்.போய் கொடி வணக்கம் செஞ்சுட்டு வாங்க என்றார். என்னுடன் வந்த நண்பனுக்கு அங்கே போய்ப் பழக்கம்.அவன் என்னையும் அழைத்துக் கொண்டு கொடி பக்கம் போனான்.வலது கையை வயிற்றோடு மடித்து வைத்து தலயை சாய்த்து ஒரு மஞ்சள்க் கொடியை வணங்கினான்.அதில் தீபமோ எதுவோ போட்டிருந்தது.நானும் வணங்கி விட்டு, விளையாட்டில் கலந்து கொண்டேன். நல்ல வேளை நான் போன நேரம், விளையாட்டு முடிகிற நேரம். சீக்கிரமே கிளம்பி விட்டோம்.நாங்கள் தெருவுக்குள் வந்து கொஞ்ச நேரத்தில் `போடுங்கம்மா ஓட்டு பானைச் சின்னத்தைப் பாத்து’ என்று ஒரு பத்து இருபது பேர் வந்தார்கள்.எல்லாரும் காக்கி டிரவுசர்.கொஞ்ச நேரம் முன்பு பார்த்தவர்கள்.அப்போதுதான் முனிசிபல் தேர்தல், தி மு க ஆட்சிக்கு வந்து, நடக்கப் போகிறது. ஜன்சங்க் சார்பாக ஒரு ஐயர் எங்கள் வார்டில் தேர்தலுக்கு நிற்கிறார்.நாங்கள் தி.மு.க ஆதரவு சுதந்திரா கட்சிக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தோம்.அவரகளைப் பார்த்து அருகே போவதற்குள் அவர்கள் கொஞ்ச நேரம் சத்தம் போட்டு விட்டு அமைதியாகப் போய்விட்டார்கள்.அந்த கோஷம் எங்களுக்கு புதிதாகவும் , பிடித்தமானதாகவும் இருந்தது.அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.ஆர் எஸ் எஸ் மாநாட்டைப் பற்றி மறந்தே போய் விட்டது.
வீரபாகு தயங்கித் தயங்கி வந்தான்.வீட்டுக்குள் வந்தான்.நாங்கள் பெரிய வீட்டை விற்று விட்டு எதிர்த்தாற் பொல்லிருந்த சின்ன வீட்டில் இருந்தோம். வீர பாகு அந்த வீடு என்னாச்சு என்றான். நான் கதையைச் சொன்னேன்.அவன் கதை பெரிய கதையாய் இருந்தது. பீகாரில் இருந்து வருவதாகச் சொன்னான். தமிழ் நாட்டில்தான் தற்போது சற்று பாதுகாப்பு என்று சொன்னான்.இங்கேயும் திடீரென்று சூழல் மாறிக் கொண்டிருப்பதாகவும் சொன்னான்.ஓட்டலில் எல்லாம் சாப்பிட முடியாது, வீட்டில் ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்றுதான் பின்னாலேயே வந்ததாகச் சொன்னான். அண்ணாச்சியிடம் பணம் வாங்கிக் கொளும்படிச் சொன்னதால் டவுணுக்கு வந்தேன், அவரை எனக்கு பழக்கமே கிடையாது, இல்லையென்றால் அப்படியே கன்னியாகுமரி போகிறவன் என்றான்.கேந்திரத்துக்குள்ள போய்ட்டா கவலையில்லை என்றான். அவன் சொன்ன பிறகுதான், அவசர நிலையின் தன்மை விளங்கிற்று.ஜே.பி கைது பற்றியும், ஜார்ஜ் பெர்னாண்டஸ் கைது பற்றியும் சொல்லும் போது ரொம்ப உணர்ச்சி வசப்பட்டான். ஜார்ஜ் பெர்ணாண்டஸ் கையில் விலங்கிட்டு சங்கிலியால் பிணைத்திருக்கும் படம் ஒன்றைக் காட்டினான். பார்க்கவே கஷ்டமாயிருந்தது.சாப்பிட ஒன்றுமில்லை என்றாள் தயங்கியபடி அம்மா.ரேஷன் அரிசி வேக நேரம் ஆகுது என்றாள். நம்ம, சினிமா போட்டு விளையாடுற எடம் அப்படியே இருக்கா என்று அவன் பேச்சை மாற்றினான். நானும் ஆமா என்றேன். பெரிய அண்ணன் வந்தான், வீரபாகு, காசு தருகிறேன் சாப்பிட ஏதாவது வாங்கி வரச் சொல்கிறாயா என்றான்.நான் அம்மா அண்ணன் மூன்று பேரும் பேச முடியாமல் இருந்தோம். அவர்கள் இரண்டு பேருக்கும் விஷயமே புரியவில்லை.வீரபாகு கிளம்பிவிட்டான். அண்ணன், வேணுன்னாநான் போய் ஏதாவது வாங்கி வருகிறேன், என்றான். தெருவுக்கு அவசரமாக வந்து பார்த்தேன்.உச்சி வெயிலில் தெருவில் நிழல் கூட இல்லை.

Visitors