Sunday, October 19, 2008

தேர் வந்தது போலிருந்தது நீ வந்த போது.......

”திருநெல்வேலியான் தேர் பாரான் திருச்செந்தூரான் கடலாடான்”ங்கிறது சொலவடை.(சொலவடைன்னா சும்மாவா,”சொந்தம் பொய்த்தாலும் சொலவடை பொய்க்காது” ம்பா” அம்மா)தேரோட்டம் ஒரு அருமையான விஷயம்.என் இரண்டு மகள்களும் இன்னும் திர்நவேலித் தேரோட்டத்தைப் பார்க்கவில்லை.நானுமே தேரோட்டம் பார்த்து முப்பது வருடம் ஆகப் போகிறது.திருநெல்வேலித் தேரோட்டம் பார்த்த பின் வேறு ஊரின் திருவிழாக்கள் ரசிக்காது.உள்ளபடியே திரு(வி)ழான்னாலே அது சொந்த ஊர்த் திருழாதான்.சொந்தம் பந்தம் அதையெல்லாம் விட ஸ்னேகிதம்,. எல்லாம் சொந்த ஊர் மாதிரி வராது. தேருக்கு அருகே நின்று பார்த்தாலும் சரி தூர நின்று பார்த்தாலும் சரி தேரின் அழகே அழகு.. வீதி நிறைந்த ஜனத்திரளின் உயரம், தேரின் சக்கரங்கள் வரைதான் இருக்கும். தூரத்தில் நின்று பார்க்கும் போது தேர், அதன் அலங்காரத் தட்டுக்கள், .கொடி, பிரம்பு வளையங்களின் மேல் சுற்றித் தைத்த துணிக் குழல்கள் (குட மாலைகள்) எல்லாம் மெலிதாக அசைய, தலைகள் மேலாக தேர் ஆடி ஆடி வரும்போது ”தேர் வந்தது போலிருந்தது நீ வந்த போது” என்று பாடியது சரிதான் என்று தோன்றும்.தேர், வடக்கு ரத வீதியிலிருந்து கீழ ரத வீதிக்கு (கீழைத் தேர்த் தெரு என்று சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடுகளில் போட்டிருப்பார்கள்) திரும்பும் போது நான்கு வடங்களில் இரண்டு தெப்பக் குளத்தெருவுக் குள்ளும் இரண்டு கீழ ரத்வீதிக்குள்ளும் போயிருக்கும்.ரத வீதியின் நான்கு முனைகளிலுமே இப்படி வடம் போக வாகாக தெருக்கள் இருக்கும்.மதுரையில் இதற்கு வடம் போக்கித் தெரு என்றே பெயர். சற்றே வயது வந்த பின்,. தேரை வடம் பிடித்து இழுக்கிற சந்தோஷங்களை எல்லாம் தொலைத்த பின், நானும் கல்யாணியண்ணனும் தெப்பக் குளத்தெருவில் நின்று கொண்டு தேர் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்...அப்போதும் அண்ணன் சொன்னார்கள், ”தேர் வந்த மாதிரி”ங்கிறது சரியாத் தானே இருக்கு என்று..பொதுவாகவே தேர் கீழ ரத வீதிக்கு திரும்பி விட்டால் கொஞ்ச தூரம் தான், சில நுறு அடிகள்தான், நிலைக்கு வர.. வாலிபப் பசங்களுக்கு அந்த நேரம் தெரியும், நைசாக நகண்டு விடுவோம்...தேர் நிலையம் சேர்ந்த உடனே போலீஸ் கண்ணு மண்ணு தெரியாம அடிக்க ஆரம்பிச்சுருவாங்க..ஒரு வருஷம் அப்ப்ரி நடந்தது..அப்புறம் அப்படி நடக்கவில்லை ஆனாலும் பயம் மட்டும் வருடா வருடம் வந்து விடும்.
தேரோட்டம் நடந்துக் கிட்டிருக்கும் போது போலீசை பசங்க படாத பாடு படுத்திருவாங்க. அவங்களும், ”நடக்கட்டும், நடக்கட்டும்”ங்கிற மாதிரி சிரிச்சுக் கிட்டே பொறுத்திருப்பாங்க. இல்லேன்னா தேர் இழுக்க ஆள் இருக்காது. தேரை இழுத்து தெருவில விட்ட மாதிரின்னு நின்னுரும்..ஒரு வருஷம் அப்படிக் கிடந்து கணபதி மில்., சங்கர் மில், நெல்லை காட்டன் மில் எல்லாருக்கும் லீவு கொடுத்து அந்த தொழிலாளிங்கள வச்சு இழுக்க வச்சாங்க. ஆனா அவங்க லீவு கிடச்ச சந்தோஷத்தில.. இருபது முப்பது அடி இழுத்துட்டு, வெயிலா இருக்குன்னு சொல்லீட்டு ஜாலியா வீட்டைப் பார்க்கப் போயிட்டாங்க..அப்புறம் என்ன, எங்கள மாதிரி பசங்களை தாஜா பண்ணுச்சு போலீஸும் ஆஸ்திகப் பெருமக்களும்...இது 1965-ல்.இதே மாதிரி ஒரு வருஷம் ”காந்தி கொடி” (காங்கிரஸ் கொடிக்கு அப்ப அதான் பேராம்) கட்டினாத்தான் இழுப்போம் ன்னு தேர் நடு வீதியில் நின்று விட சுயராஜ்ஜியக் கொடி கட்டின அப்பறந்தான் ஒரே மூச்சில இழுத்து நிலையம் சேர்த்ததாச் சொல்லுவாங்க.
65-ல ஏற்கெனெவே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில பசங்க மேல போலிஸுக்கு ஒரு கண்ணு...எங்களுக்கும் இந்த விளையாட்டு ரொம்ப பிடிச்சிருந்தது. சாயங்காலம் தேர் இழுக்க ஆரம்பிச்சதும் விளையாட்டும் ஆரம்பிச்சது..வடத்தை தூக்கறது.. கூச்சலா ”நெல்லையப்பா சோத்துக்கு இல்லையப்பா”ன்னு சொல்லிக் கிட்டே தொம்முன்னு கீழே போட வேண்டியது..இந்த கோஷத்தை யார் ஆரம்பிச்சாங்கன்னு தெரியல..ஆனா வலுவா பரவி விட்டது.அந்த வருஷந்தான் சுகாதாரத் துறையிலே இருந்து நிரோத்துகளை இலவசமா பெரியாஸ்பத்திரி வேனில் வைத்து விநியோகம் பண்ணினார்கள். அதைப் பெரிசா ஊதி முடிச்சுப் போட்டு பறக்க விட்டு ஒரு கலாட்டா ஆரம்பிச்சுது..சாதாரண பலூனை விட இது ஸ்ட்ராங்கா இருந்துது...கடைசியில் ஒரு எஸ். பி யோ, டி.எஸ் பி யோ உங்களுக்கு என்ன வேணும்பான்னு சமாதனத்துக்கு வந்தார்...உடனே யாரோ ஒரு கோஷ்டி எங்களுக்கு பாயாசம் வேணும்ன்னு ஆரம்பிச்சுது... ‘அப்ப ஆயிரத்தில் ஒருவன்” வந்த புதுசு.அதில நாகேஷ் இப்படி கலாட்டா பண்ணுற மாதிரி ஒரு காட்சி வரும். அப்புறம் அந்த எஸ்.பி தலை தெரியும் போதெல்லாம் பாயாசம் பாயாசம்ன்னு ஒரே சத்தமா கிடந்தது...நான் கூட்டத்தோட கூச்சல் போட்டதோட சரி. ஆனா யாருமே தலைமை தாங்கின மாதிரியும் கிடையாது.ஏதோ ஒரு விஷயம், தானா தன்னையே உருவாக்கிகிட்டு. எப்படியோ ஒரு வழியா தேர் நிலயத்தை நெருங்கியது. இன்னும் பத்து அடி இருக்கும்... இன்னம வெறும் தடி போட்டே தேரை நிலையத்தில் நிறுத்தி விடலாம்ங்கற கட்டம் வந்ததும், அடிக்க ஆரம்பிச்சுது பாக்கணும் போலீஸ்...சின்னப் பசங்களா பாத்து அடி சும்மா விழுது.யாத்தா அம்மான்னு குதிங்கால் பிடறில பட ஓடுது கூட்டம்..நல்ல வேளையா நான் பக்கத்து கல்லத்தி முடுக்குத் தெருவுக்குள் புகுந்து விட்டேன் அங்கயும் போலீஸ் விரட்டுச்சு..நான் என் ஃப்ரெண்ட், நாகராஜன் வீட்டுக்குள் நுழைஞ்சிட்டேன்.. அவனோட அப்பா என்னை வீட்டுக்குள் விடவில்லை....அவன் அம்மாதான் சின்னப்பய விடுங்க என்று உள்ளே அழைத்து தாழ்ப்பாள் போட்டார்கள்.அவன் அப்பா ஒரே ஏச்சு,.எனக்கும் வீட்டில இல்லாத நாக ராஜனுக்கும்.(இப்ப அவன் போலீசில்தான் வேலை பார்க்கிறான்.)ஒரு, ஒரு மணி நேரம் கழிச்சு.. அவன் வந்தான்..அவன் சினிமா போய்விட்டு பயந்து பயந்து வாரான்...விஷயம் இப்படீன்னு அவனுக்கு தெரியாது... ”நான் சினிமா போயிருந்தேன்னு”அவன் சொன்னதும், அவன் அப்பாவுக்கு சமாதானம் ஆயிட்டு. சரி சரி இவன் வீட்டுக்குப் போயிருவானா இல்லேன்ன நான் கொண்டு போய் விட்டுட்டு வந்துரவா..என்றார். அதற்குள் என் அப்பாவைப் பற்றி விசாரித்து வைத்திருந்தார் என்னிடம்..அப்பாவை நன்றாகத் தெரியும் என்றார்.நானே போய் விடுவேன் என்று பயந்து பயந்து வந்தேன்...வீட்டுக்குப் போகும் வழியில்தான் கச்சேரி வாசல் (போலீஸ் ஸ்டேஷன்) அதுக்காக நான் சற்று சுற்றி வளைச்சு தெற்கு ரத வீதி வழியா வந்தேன்..வீட்டில் பல இடங்களிலும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. தெருவில் மத்த சேக்காளிகளெல்லாம் எங்கலே போன, போலீஸ் கொஞ்ச நேரந்தாம்ல விரட்டுச்சு...சட்டிப் போலீஸெல்லாம்(இரும்புத் தொப்பி போட்ட ரிசர்வ் போலீஸ்) சீக்கிரமே போய்ட்டாங்க..சரி வீட்டுக்கு போ வீட்ல வேற பூசை இருக்கு என்றார்கள். நல்ல வேளையா அப்படி ஒன்னும் இல்லை.
சாப்பிட்டு வெளியே வந்து ஒவ்வொருத்தரும் எந்த திசைக்கு எப்படி ஓடி தப்பித்தோம் என்று பேசிக் கொண்டிருந்து விட்டு, காலில் காயம் பட்டிருந்த முத்தையா தேர் பார்க்க வரவில்லை. நாங்கள் தெருவில் வழக்கமாக உட்காரும் `காடினா’(வில் வண்டி அல்லது குதிரை வண்டி நிறுத்தி வைக்கும் இடம்)வின் நீள நடையில் உட்கார்ந்த படியே அவன் எல்லாவற்றையும் ஆ வென்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தான்.. நாய்களை கல்லெறிந்து விளையாடினதாக்ச் சொன்னான் அவனை யாருமே கவனிப்பாரில்லை
அவ வந்தாளா,இவ வந்தாளா என்று அவனவன் ஆளைப் பற்றிப் பேச்சு வந்தது.இவள் எந்த திருவிழாவுக்கும்,கூட்டத்திற்கும் வர மாட்டாள் என்ற நினைவு மேலோங்கியது....தேரோட்டத்தில் வழி தப்பி அழுது கொண்டிருந்த ஒரு சுருண்ட கூந்தலுள்ள குழந்தை நினைவு வந்தது...அதை பெரிய கோபால் அதன் அம்மாவிடம் சேர்த்து விட்டதாகச் சொன்னான்..என்னை உன்னிடம் சேர்ப்பாரில்லை....

”நீ
சிரிக்கையில் நடக்கும்
திருவிழாக்களில் நான்
வழி தப்பும்
குழந்தையாகிறேன்.”
____________________
தலைகள் மேலாக
தேர் வருவதை
நினைவில்ப் பிடிக்காமல்
ரசிக்கும் தோள்க்
குழந்தையின் கைப் பலூன்
தப்பிக் காற்றில் போகும்

வானம் கைப்படாது
கீழே வரும்

கூட்டங்களிடையே
குறு முலை பிடித்த கைகள் பட்டு
மீண்டும் தப்பி,
மீண்டும் வந்து
வெடித்துச் சாகும்
கற்போடு.
....... ...... ...... .....
...... ...... ..... ..... ........

காலடிகளுக்குப் பயந்து
சந்துக்குள்
ஒதுங்கியோடும்
நாயைப் பார்த்ததும்
திண்ணையின் நொண்டிப் பையன்
கீழிறங்கிக் கற்களைச்
சேகரிப்பான்-இன்னும்
சிலதை எதிர் பார்த்து

வாய்ப் பண்டம்
மேலெல்லாம் வழிய
வழி தப்பின குழந்தையொன்று
அழுது கரையும்
என்னைப் போல,
என் தேசத்தைப் போல.

(ஜூலை-1973-தீர்த்த யாத்திரை தொகுதியிலிருந்து....)
-”வடமோடிய தூரம் இன்னும்
தேரோடவில்லை...”-இன்னும் இழுக்க வேண்டி இருக்கிறது...

Visitors