வழக்கொழிதல்..
இனிப்பு அதிகமுண்ணும்
குழந்தையைத் திருத்த
அழைத்து வருகிறாள் தாய்
ஒரு தீர்க்கதரிசியிடம்
சிலர் கதையில் அது புத்தர்
சில சொல்லாடலில் அவர் முகம்மது நபி
அனைத்து இனைத்தவரையும்
ஆளுக்கொரு செம்பு நீர் குடத்துள்
அளந்து விடச் சொன்னவர் கேட்டார்
யார் கவிழ்த்த நீர் எதுவென
இனிக் கண்டுபிடிக்க முடியுமா
சிலருக்கு அவர் ராகவேந்திரர்
சில வழக்காறில் அவர் காந்தி
இனக்குழு அரசியலால்
இல்லாமலாகலாம் ஒரு மொழி
ஆனால் என்றும்
குழந்தைமை இனிப்புத் தின்னும்
தாய்மை கவலைப் படும்
நேற்றும் இன்றும்
நீருடன் நீர்
பேதமின்றிச் சேர
நிறமற்றிருக்கிறது நீர்.
வழக்கொழிந்த
மொழியில்க் கூட
வாழும் கதைகள்
-கலாப்ரியா
3 comments:
//ஆனால் என்றும்
குழந்தைமை இனிப்புத் தின்னும்
தாய்மை கவலைப் படும்//
'இனிப்புத் தின்னுதல்' என்பதைத் தமக்கு உவப்பானதை (உகப்பானதை அன்று) விரும்பிச் செய்யும் அரசியலாகப் பொருள்கொண்டு வாசிக்கிறேன். அச் செயல், கருணை விழிகளில், குழந்தைத்தனம்தானே?
'கவலைபடும் தாய்'ஆகிக் கவிஞன்.
ஆமாம். வாழ்வின் அரசியல்தானே “தத்துவவாதியை’த் தேட வைக்கிறது- நன்றி ராஜ சுந்தர ராஜன்
குழந்தைமை இனிப்புத் தின்னும்
தாய்மை கவலைப் படும் //
இன்று தாய் இனிப்பு தின்ன குழந்தைகள் கவலைப்படுகின்றன
அசல் இனிப்பும், ராஜா சார் சொன்ன இனிப்பும் எல்லாம் சேர்த்துத் தான்
Post a Comment