தேசீயச் சின்னமான அசோக ஸ்தூபியில் நான்கு சிங்கங்கள் உண்டு. நாம் தினமும் புழங்குகிற நாணயத்திலோ ரூபாய் நோட்டிலோ மூன்று சிங்கங்கள் இருப்பதாகவே நம் –இரு பரிமாண-“ஒரு தளப்பட்ட பார்வை”க்கு தெரியும். முப்பரிமாணத்தில் நான்கு சிங்கங்கள் இருக்கின்றன.அதே போல காந்திஜியின் பிரபலமான மூன்று குரங்குகள், ”தீயவற்றைப் பார்க்காதே, தீயவற்றைப் பேசாதே, தீயவற்றைக் கேட்காதே”, உணமையில் நான்கு. நான்காவது குரங்கு தனது அடிவயிற்றருகே பிறப்பு உறுப்பை மறைத்தது போலிருக்கும். அதன் பெயர் ’ஷிஸாரு’. ஏதோ ஒரு ‘நாகரிகம்’ கருதி அதை மறைத்து வைத்து விட்டார்கள். உண்மையில் அதைவிடச் சிறந்த “பிராண்ட் அம்பாசடர்” எய்ட்ஸ் கட்டுப்பாட்டு விழிப்புணர்வுக்கு இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.
கண்களைப் பொத்திக் கொண்டிருக்கும் குரங்கின் பெயர், ’மிஸாரு’, காதுகளைப் பொத்திக் கொண்டிருப்பதின் பெயர், ‘கிகாஸாரு’, வாயைப் பொத்திக் கொண்டிருப்பதன் பெயர், ’இவாஸாரு’.இவை, ஜப்பானில் உள்ள ‘தோஷோ-கோ’ என்ற விஹாரையின் மரக்கதவில் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்திலிருந்து உலகெங்கும் பரவியது. இதன் ஆதி ஊற்று, கன்பூஸியஸ் காலத்தது; சீனாவிலிருந்து புறப்பட்டது என்கிறார்கள்.உலகின் பல மதங்களிலும் இந்தத் தத்துவம் இருக்கிறது.
நமது ஊர்களில் காணப்படும் சிகப்பு முகக் குரங்குகள் செய்யும் அட்டகாசம் சொல்லி முடியது.” பாபநாசத்துக் குரங்கு படியை விட்டு இறங்கு, குற்றாலத்துக் குரங்கு கொப்பை விட்டு இறங்கு..” என்று, குரங்கை முதன்முதலில் அல்லது அபூர்வமாய்ப் பார்க்கும் குழந்தைகள், தவறாமல் பாடும். எதையாவது பிடுங்க வந்தால் “ராம ராம’’ என்று கூக்குரலிட்டு விரட்டும். இவை படுத்தும் பாடு சாதரணப் பயணிகளையும், ஊர்க்காரர்களையும் மட்டும் என்றில்லை. குடியரசுத் தலைவர் மாளிகையிலும் அட்டகாசம் செய்தனவாம். அவற்றை விரட்ட, கருப்பு முகம் கொண்ட சிங்க வால்க் குரங்குகளை காவலுக்கு நியமித்து அடக்கினார்களாம்.”பிளாக் கேட்ஸ்” போல ”பிளாக் மன்கீஸ்’.
சமீபத்தில் கான்பூர் ஈ.எஸ்.ஐ கார்ப்பரேஷன் அலுவலகத்தில் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு, அங்கு அட்டகாசம் செய்யும் சிகப்பு முகக் குரங்குகளை விரட்ட ’மங்கல் சிங்’ என்றொருவர் நியமிக்கப் பட்டு, அவரும் வெற்றிகரமாக பணியை நிறைவேற்றி வருகிறார். அவர் வேறு யாருமல்ல, லங்கூர் இனத்தைச் சேர்ந்த கருப்பு முகக் குரங்கு. அதன் பயிற்சியாளர், ”முகம்மது ஃபரீத்”. குற்றாலத்துக் குரங்குகள், ’கேட்டாபுல்ட்’ என்கிற உண்டிவில்லுக்கு அநியாயமாய்ப் பயப்படும். எவ்வளவு பெரிய ‘தாட்டான்’ குரங்காய் இருந்தாலும்சரி, நேற்றுப் பிறந்த குட்டிக் குரங்காய் இருந்தாலும் சரி, உண்டிவில்லைக் கையில் எடுத்ததைப் பார்த்தாலே பயந்து ஓடி விடும்.அதன் ஜீனிலேயே ’அந்தப் பயம்’ இருக்கும் போல. அதே போல், தண்ணீரைக் கோதி ஊற்றினாலும் பயப்படும்.
ஆவி பறக்கும் சாப்பாட்டைக் கண்டால் பெரிய குரங்கு,தானே தொடாது, தன் குட்டியின் கையைப் பிடித்து அதற்குள் வைக்கும் அது ’வ்வீய், வ்வீய்’ என்று கத்தினால், “ஓஹோ சுடுகிறது” என்று தெரிந்து கொள்ளும்.அதே போல ஒரு குரங்கு, மற்ற குரங்கின் மீதிருந்து பேனை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும், திடீரென்று சுகமாய்ப் பேனெடுக்கக் கொடுத்துக் கொண்டிருக்கும் குரங்கின் காதைப் பிய்த்து விடும். அதனால்த்தான் “குரங்கு பேன் பர்த்தலும் பார்க்கும், காதை அ(று)த்தாலும் அ(று)க்கும்” என்று ஒரு பழமொழி இருக்கிறது. குரங்கு, எல்லா மரத்து இளநீரையும் விரும்பிக் குடிக்காது.அது தேர்ந்தெடுத்துக் குடிக்கிற தென்னையின் இளநீர் அவ்வளவு சுவையாய் இருக்கும்.
அலெக்ஸ் என்று ஒரு அண்ணன். வீட்டிற்கு அவ்வப்போது வருவார். பெரும்பாலும் மதியம் பன்னிரெண்டே முக்காலுக்கு தவறாமல் பார்க்கலாம். வேலை தேடிக் கொண்டிருக்கும் காலங்கள் அவை. அந்த நடுப்பகலில் அப்போது ஒலிபரப்பாகும் சிலோன் தேசீய சேவையின் உலகச்செய்தி,(இப்போது இலங்கையின் செந்நீர்ச்செய்திகள் நான்கு திசையிலும் பிரசித்தம்.) அப்போது பிரபலம். அலெக்ஸுக்கு அதைக் கேட்பது ரொம்ப விருப்பமான செயல். அதே போல் காடும் வேட்டையும். குரங்கு பிடிப்பவர்கள் பற்றி விஸ்தாரமாகச் சொல்லுவார்.ஒரு இளநீரைக் கண் சீவிக் குடித்த பின், அதனுள் பொறி கடலைய அடைத்து, காட்டில் போட்டு விட்டால், குரங்கு அதை எடுத்து கடலைக்காகக் கையை நுழைத்து அள்ளும். கடலையை அள்ளிய கைப்பிடி பெரிதாகி, சிறிய துவாரத்தின் வழியே வெளியே வராது. கடலையையும் விட மனசிருக்காது, கையை நுழைத்த படியே இளநீரைத் தூக்கிக் கொண்டு ஓடும். அப்போது அதைச் சுடுவதும், பிடிப்பதும் எளிது.அதே போல் ஒரு செத்த தண்ணீர்ப் பாம்பை இலையில் சுற்றி, தாளில் பொதிந்து போட்டு விட்டால், அதை எடுத்துப் பிரிக்கும் குரங்கு, பாம்பைக் கணடதும்’ குரங்குப் பிடியாய்’ அதன் தலையைப் பிடித்துக் கொள்ளும். தான் செத்தாலும் விடவே விடாது.அப்போது அதைப் பிடிப்பது எளிது என்பார்.
நிறையச் சொல்லுவார். சொல்லும் போதே வேட்டையாடுகிற உத்தியும்,மூர்க்கமும் வார்த்தையிலும் உடல் மொழியிலும் வெளிப்படும். மற்றப்படி ரொம்ப அன்பானவர். ”குரங்கைச் சுட்டால், அது கைகளைக் ‘கும்பிட்டபடியே’ மரத்திலிருந்து விழுவது பரிதாபமாக இருக்கும்” என்பார். “அது சாபம் கொடுத்த படியே செத்து விழும், குரங்கு ரத்தத்திற்காக அப்படிச் செய்தவன் குடும்பம் இதுவரை விளங்கியதே இல்லை” என்பார்.குரங்கிலிருந்து பிறந்த மனிதரில் சிலர் விலங்குகளைக் கொன்று பழகி, இன்று சக மனிதனையே கொன்று கொண்டிருக்கிறார்கள்.... (சொந்தச் சகோதரர்களையிழந்தும் சிந்தையிரங்காமல் சிலர்.குரங்காகவே இருந்திருந்தால் இன்னொரு...தகனம் சாத்தியப்பட்டிருக்குமோ)
5 comments:
நல்ல பகிர்வு. நிறைய விசயம் செரிந்ததாக இருக்கு.
நிறைய அறிய விஷயங்கள்.
குட்டி குரங்கை வைத்து சூடு இருக்கா, இல்லை என்ற சோதனை- மனதை வருடுகிறது.
பொதுவாக மனிதர்களின் எண்ணம், நாம் கஷ்ட பட்டாலும் பரவா இல்லை, நமது குழந்தைகள கஷ்டப் பட கூடாது என்று நினைக்கிறோம்.
ஒரு வேளை இதுதான் ஆறறிவின் பயன் பாடோ.
You are an interesting narrator. You remind me my younger days, when sit along with the elders in the "thinnai" listening to their stories. Thanks.
அன்புள்ள கலா பிரியா ,
நான் பாளையங்கோட்டை சேர்ந்தவன்...
உங்கள் நினைவின் தாழ்வாரங்கள் படித்ததும் இனிமையான தருணங்களாக உணர்ந்தேன்.. உங்கள் ஒவ்வொரு எழுத்தும் நெல்லையின் மண்ணை பரப்புவதா இருந்தது, நாம் வாழ்ந்த இடங்கள், பார்த்த இடங்கள் ஒரு கட்டுரையிலோ கதையிலோ வரும்போது மனது மிகவும் சந்தோசமாக இருக்கிறது..
வண்ணநிலவன் கதையை படிக்கும் போது இருக்கும் மகிழ்ச்சி, உங்கள் புத்தகத்தை பற்றி படிக்கும் போது இருந்தது .
நான் வங்கி வேலை காரணமாக வெளியூரில் இருக்கிறேன், இந்த மாதிரி படித்து பாழ்ய நினைவுகளை மீட்டு கொள்ளவேண்டும்.
" பெண்கள் கையால் தண்ணீரை விலக்கிவிட்டு, ஆற்றில் இறங்கும் அழகு , தலைமுறையா ஆறும் , படித்துறையும் , ஆண்களும் ரசிக்கிற அழகு"
ஜெபா
அந்த மூன்று குரங்குகள் நான்கானதே ஆச்சர்யம் அவைகளுக்கு பெயர் வேறு இருப்பது நீங்கள் சொல்லி தான் தெரிகிறது.
Post a Comment