Tuesday, June 22, 2010

ஓடும் நதி-37


.காந்த லாரி ரதவீதியில் போவதாக அவன், ஓடியே வந்து சொன்னான். தேரோடும் ரத வீதியிலிருந்து பிரியும் தெருக்களில் ஒன்று எங்களுடையது. சுமார் ஐநூறு, அறுநூறு அடி தூரம் இருக்கும், நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து, இரண்டு நிமிடத்தில் வீதிக்கு ஓடிச் சென்று விடலாம். விளையாடிக் கொண்டிருந்த கம்புத்தட்டிவிளையாட்டை அப்படியே விட்டு விட்டு.,ஓடினோம்.நான்தான் தெரு நடுவில் கிடக்கும் சிறிய கம்பைக் காத்துக் கொண்டிருந்தேன்.மற்றவர்கள் அதைத் தட்டுவதற்கு நீளக்கம்பை வைத்திருந்தார்கள்.தட்டி விட்டுவிட்டு அவர்கள் கம்பை ஏதாவது கல்லில் வைத்து விடவேண்டும்.அதற்குள் நான் அவர்களைத் தொட்டுவிட்டால் அவர்கள் நடுவிற்கு வந்து கம்பைக் காவல் காக்க வேண்டும்.சட்டையைத் தொட்டால், “ஐயா, சட்டை வண்ணானுக்கு, நான் அவுட் கிடையாது என்று வாதிடுவான்.அப்படீன்னா உடம்பு வெட்டியானுக்கு...நீ அவுட்தான் என்று எதிர்வாதம் வரும். யாராவது தலையிட்டு வழக்கைத் தீர்ப்பார்கள். அதிலும் ஏதாவது அரசியல் இருக்கும்.இதற்காக விளையாட்டு ஆரம்பிக்கும் போதே ‘ரூல்ஸ்பேசிக்கொள்வோம்.

நான் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஓடினேன். விளையாட்டில் தெரியாத்தனமாக அகப்பட்டுக் கொண்டிருந்ததிலிருந்து விடுதலை கிடைத்ததே,என்று. சொல்ல முடியாது, திரும்பி வந்ததும் விளையாட்டை மறுபடி ஆரம்பித்தால், “ரூல்ஸ்என்ன சொல்கிறதோ. நாங்கள் ரதவீதியை அடைந்தபோது, தெருமுனையில் ‘காந்தலாரியைக் காணோம்.பள்ளிக்கூட சிநேகிதன், வாசமுத்து எதிரே வந்தான்.ஏலே காந்த லாரியையா தேடுதீங்க, அது இந்நேரம் தெப்பக் குளத்துக்கிட்ட போயிருக்கும்...ஏயப்பா என்னமா இரும்பை இழுக்கு தெரியுமா, லாரிக்கு முன்னால பெரிய காந்தம் இருக்கு, அதில ஆணி, லாடம், நட்டு, ஸ்க்ரூ, ஒத்தைரூவா துட்டு, சப்புச்சவரு (கண்டது கழியது) எல்லாம் ஒட்டிக்கிட்டிருக்கு. ஒரு பையன், அரைநாண் கயிற்றில் ஊக்கு தொங்க விட்டுருப்பான் போல, அவனையே இழுத்துட்டு...என்று புருடா வேறு விட்டான். வாசமுத்துவின் அப்பா ரயில் டிரைவர். நன்றாகப் பாட்டுப் படிப்பான். ஆள் என்னவோ என்னைவிட நரையானாக (ஒல்லியாக)த்தான் இருப்பான், ஆனால் சவடால் பலமாக இருக்கும்.ஏல எங்கப்பாட்ட சொன்னேன்னா ஒன்னைய ரயில் இஞ்சினை ஏத்தி நசுக்கிருவாரு என்று அடிக்கடி பயமுறுத்துவான்.போடா நான் தண்டவாளம் பக்கமே போக மாட்டேனே.., எங்க அப்பா யாரு தெரியுமாலே, ரோட்டு இஞ்சின் டிரைவர், நீ ரோட்டுப் பக்கமே போக முடியாதுலே.. என்று யாரோ பதிலடி கொடுத்தப்புறம்தான் அடங்கினான்.காந்தலாரி அதைவிட பயங்கரமானதாக இருக்குமோ என்று கோயில் வழியாக ஓடினோம். கடைசியில் ரத்னா டாக்கீஸ் பக்கம் கண்டு கொண்டோம்.ரத்னாவில் வீரக்கனல்சினிமா ஓடிக் கொண்டிருந்தது.

சாலையோரமாக நின்றது. அப்போதுதான் பிரபலமாகியிருந்த சப்பைமூக்கு லாரி மாதிரித்தான் இருந்தது. முன்னாலும் பின்னாலும், லாரி அகலத்துக்கு கனமான இரும்புச் செவ்வகம். அதில் முன்னாலிருந்ததில் மண்ணிலேயே இருக்கிற இரும்புத்துகள் கொத்தாக முடி மாதிரி அப்பியிருந்தது, அதனிடையே நிறைய நிறைய பழைய இரும்பு ஆணி, தேய்ந்து போன மாட்டு, குதிரை லாடங்கள்,தகர டப்பா மூடிகள், ஏகப்பட்ட துருப்பிடித்த சாவிகள் இருந்தன.எவெரவர் தொலைத்துத் திண்டாடிய சாவிகளோ’’ தேய்ந்து போன குதிரை லாடங்களை வீடு, கடை வாசலில் மாட்டி வைத்தால் நல்லது என்பதால் அதை கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார்கள் சிலர். ரொம்பத் தேய்ந்து போயிருந்ததை அதிலேயே மறுபடி போட்டார்கள்.அவை ஒட்டவில்லை. டிரைவர் போலிருந்தவர் டீ சாப்பிட்ட படியே, போங்கய்யாஎன்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். ஒன்றிரண்டு ஒரு ரூபாய், கால் ரூபாய் நாணயங்களும் இருந்தன....அவையெல்லாம் ராஜா தலைத் துட்டு. அவையும் கள்ள நாணயம் என்றும் யாரோ சொன்னார்கள்.ஏல, ஊக்கு மாட்டீருக்கனுவங்கள்ளாம் பக்கத்தில போகாதீங்கலே...என்று யாரோ கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். என் டிரவுசர் பையில் ஒரு ஓரணா நாணயம் இருந்தது. சொன்னேன்.’’ஏல காந்தம் அதையெல்லாம் இழுக்காதுலே, சும்மா பக்கத்துல போடா என்று லேசாகத் தள்ளிவிட்டார்கள்.நான் தடுமாறி, டிரவுசர்ப் பையை இறுகப் பிடித்துக் கொண்டபடி தள்ளி நின்று கொண்டேன்.. அது பயனில்லை என்று கடைசியில் தெரிந்தது.

டி.வி.எஸ். கம்பெனிக்காரங்க ஏற்பாடு இது என்று பேசிக் கொண்டார்கள். அப்போது தென் மாவட்டங்களில்,அவர்கள் பஸ்தான் நிறைய ஓடியது. (கலைஞர்தான் தனியார் பஸ்களை நாட்டுடைமை ஆக்கினார்.) லாரி கிளம்பியதும்,மறுபடி காந்தம் வேலை செய்ததோ என்னவோ, கீழே கிடந்த லாடங்கள் சப்பக் என்று ஒட்டியது..கொஞ்ச தூரம் கூடவே ஓடினோம்.பெரும்பாலும் லாடமும் ஆணிகளும் வந்து ஒட்டிக் கொண்டன.லாரி வேகமெடுத்தவுடன் நின்றுவிட்டோம்..அப்புறம்தான் உரைத்தது. எங்களில் பாதிப்பேர் சட்டையே போட்டிருக்கவில்லை. திரும்பி ரத்னா டாக்கீஸ் அருகே வரும்போது, வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்தார்கள்...ஏல ஒரணாவுக்கு, கடலை வாங்குடா என்று சொன்னார்கள். நான் மறுத்தபோது, இப்போ போனதும் கம்புத்தட்டி விளையாட்டை ஆரம்பிச்சுருவோம்..என்ற மிரட்டடலுக்குப் பணிய வேண்டியதாயிற்று. “ஒரணா ‘காந்த லாரியிலஒட்டிக்கிட்டுலேஎன்று கேலியையும் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இன்னும் கொஞ்ச நாளைக்கு எனக்கு விளையாட்டு ரூல்ஸ்கள் தளர்த்தப்படலாம்.

இப்போது சென்னையில் பழைய இரும்புகளைப் பொறுக்க தனியே காந்தம் விற்கிறார்கள் என்று எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரையில் படித்தேன்...எந்த ரூல்ஸுக்கும் கட்டுப்படாமல் சமூகம் தன் போக்கில் உண்டாக்கும் அடுத்தடுத்த தருணங்களைத் துருவி யெடுத்து, வயிறு கழுவுவதும், வெற்றி காண்பதும்தானே வாழ்க்கை.

13 comments:

nellai அண்ணாச்சி said...

வீரக்கனல் படம் எந்த வருசம் வந்துச்சி அண்ணாச்சி

kalapria said...

தங்ககக் கிளியே மொழி பேசு
சர்க்கரை இதழால் கவி பாடு
சிங்கத்தமிழன் மார்பினிலே
சிரிக்கும் கொடியே விளையாடு... என்ற் பாட்டுக்கள் எல்லாம் கே.வி.மகதேவன் இசையில் அழகாக இருக்கும்.பி.எஸ் வீரப்பா தயாரிப்பு-1960 என்று நினைவு.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நிகழ்ச்சியை அப்படியே கண் முன்னே கொண்டு வரீங்க.
சின்ன பையன்களின் அந்த விளையாட்டெல்லாம் இப்போ காணாமே போயிருச்சு. யாராவது கண்டு பிடிச்சு கொடுத்தால் தேவலாம்.

Unknown said...

சார் வணக்கம்,
இது வரைக்கும் உங்க இடுகைகளை அப்படியே கூகுள் படிப்பான் - ல படிச்சுகிட்டே வந்தேன். இன்னைக்கு படம் மட்டும் தான் வந்துச்சு. எதோ பிரச்சினை போலனு நினச்சுகிட்டு வலைப்பதிவை வந்து பாத்தா எல்லாம் சரியாத் தான் இருக்கு. என்னாச்சுனு தலையை சொறிஞ்சுகிட்டே திரும்பவும் படிப்பான்ல போயி படத்துக்கு கீழே உள்ள பகுதியைச் சுட்டியால் தேர்வு செய்தால் எழுத்து தெரிகிறது. இது எழுத்து நிறம் வெள்ளையாக இருப்பதால் வருது போல தெரியுது.

என்னை மாதிரியே படிப்பான்ல படிச்சுட்டு அப்படியே போறவங்களையெல்லாம் உள்ளே வர வைக்கும் உத்தியாக இருந்தால் அப்படியே இருக்கட்டும். நாங்க இங்கன வந்தே படிச்சுட்டு போயிருதோம்.

அப்படியெல்லாம் இல்லனா தயவுசெஞ்சு எழுத்து நிறத்தை மாத்தினா ஒங்களுக்கு புண்ணியமாப் போவும்.

kalapria said...

@ பின்னூட்டம் பெரியசாமி,
இப்போ சரியாவந்திருக்கா பாருங்க....நன்றி

உயிரோடை said...

ஒரு விளையாட்டு கிட்ட‌த‌ட்ட‌ ஏழுக‌ல் விளையாட்டு போல‌(உங்க‌ ப‌திவில் ப‌டிச்ச‌ அப்ப‌றம் தான் இப்ப‌டி ஒரு விளையாட்டு இருக்க‌ற‌து தெரிஞ்ச‌து), கூட‌வே ச‌ட்டை வ‌ண்ணானுக்கு என்ற‌ அறிவு பூர்வ‌மான‌ வாத‌ங்க‌ள், காந்த‌ லாரி. க‌ண்முன் விரியும் காட்சிக‌ள். க‌டைசியாக‌ வாழ்க்கை த‌த்துவ‌ம்(ப‌ன்ஞ்) ம்ம் ந‌ல்ல‌ ப‌கிர்வு. ந‌ன்றி

ராம்ஜி_யாஹூ said...

என் நினைவுகள் அப்படியே டவுன் நைனார் குளத்து கரை லாரி சர்வீஸ் ஆபிசிற்கு சென்று விட்டது

தென்காசி சுரண்டை பாதைக்கு போகும் எஸ் எஸ் கே லோர்ரி, கோவில்பட்டி சாத்தூர் மதுரை போகும் கோஹிலா லாரி சர்வீஸ், அம்பை, முக்கூடல், வீ கே புரம் போகும் பாப்புலர், பாகியலச்மி, தென்காசி போகும் கிருஷ்ணா லாரி (நெல்லை அப்பர் கோயில் வடக்க வாசல்- ஷ்யாமளா புக் டெபோ எதிரில்)

லேகா said...

அன்பின் கலாப்ரியா,

உங்களின் ஓடும் நதி கட்டுரைகள் பால்யத்தின் மீதான ஏக்கத்தை கூட்டுவதோடு,எங்கள் தலைமுறையில் இழந்தவற்றை குறித்தும் அதிகம் யோசிக்க வைக்கின்றன...

வண்ணதாசன் மற்றும் வண்ணநிலவன் கதைகளில் அறிமுகமான நெல்லை நகர இடங்கள் பலவும் சமீபத்தில் நேரில் பார்க்க வாய்த்தது.இந்த கட்டுரையில் ரத்னா டாக்கீஸ்,ரத வீதி என வாசித்ததும் ஒரு மகிழ்ச்சி..ஏனோ வண்ணதாசனின் "நிலை" சிறுகதையை மீண்டும் வாசிக்க வேண்டும் என தோன்றுகிறது இப்பொழுது..!

மிக்க நன்றி சார்.

லேகா

kalapria said...

”சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறோமோ...” என்று சோர்வு தட்டுப்படும் போது... உங்களைப் போன்ற எல்லோரின் பின்னூட்டங்கள்..மகிழ்ச்சியளிக்கின்றன..அனைவருக்கும் நன்றி

லேகா said...

"இப்படியே கதை எழுதினாலும்,கவிதை எழுதினாலும்,கடிதம் எழுதினாலும் நேற்று வரை நடந்தவற்றை திரும்ப திரும்ப நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது"

-- வண்ணதாசன்


இவ்வரிகள் எனக்கு பிடித்தமானவை... ஓடும் நதி கட்டுரைகள் அவ்வகையில் சிறந்ததோர் வாசிப்பனுபவம் எங்களுக்கு :-)

இனியாள் said...

அந்த சட்டை இல்லாத சிறுவர் கூட்டத்தோடு ரூல்ஸ் பேசி விளையாட எனக்கும் ஆசை வருகிறது.

Unknown said...

ஒரு பத்து நாள் இணையத்தின் பக்கமே வரலை.

இப்போம் உங்க எழுத்துக்கள் படிப்பானிலும் தெளிவாத் தெரியுது.

என்ன காரணம்னு தெரியலைன்னாலும், மாத்துனதுக்கு நன்றி, ரொம்ப மகிழ்ச்சி.

Manikandan AV said...

கலாபிரியா சார், தாங்களும் வண்ணதாசனும் இருக்கும் புகைப்படங்களை எடுத்த சண்முகசுந்தரம் தங்களுடன் இருகின்றாரா? எனில் தயவு செய்து அவரின் தொலைபேசி எண்ணோ மின்னஞ்சல் முகவரியையோ தர இயலுமா? நான் அவரின் கல்லூரி கால நண்பன்..எங்கள் தொடர்பு அறுந்து வெகு நாட்களாக அவரை தொடர்பு கொள்ள தேடிக் கொண்டிருகின்றேன்...இயலுமெனில் சந்தோஷமாக இருக்கும்.