”ரகசிய சினேகிதனே….”
ஆனி மாதமென்றால், தேரோட்டமும் பொருட்காட்சியுமாக திருநெல்வேலி ஊர் களை கட்டி விடும்.தேரைச் சுற்றி மறைத்திருக்கும் தகரத்தை நீக்கிவிடுவார்கள்.தகரத்தை நீக்குவது அவ்வள்ளவு சுலபமில்லை. அதன் மேல் ஒரு வருடத்து சினிமாப் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். அதன் மேல் தண்ணீரைத் தெளித்து ஊற வைத்துக் கிழிக்கவேண்டும். தேரைக் கழுவி அதன் பெரிய மரச்சக்கரங்களைக் கழற்றி ஒரு பக்கம் ரிப்பேர் நடக்கும். வடத்தை கோயிலின் உள்ப் பிரகாரத்திலிருந்து தூக்கிவரவேண்டும், கோயில் பணியாளர்களும் திருத்தொண்டர்களும் தூக்கி வந்து தேரருகே போடுவார்கள். நனும் புண்ணியம் கட்டிக் கொள்கிறேன் என்று சிலர் வடத்தின் இறுதிப் பகுதியை லேசாகத் தொட்டுக்கொள்வார்கள்.பெரும்பாலு
தேர் திறந்திருக்கும்போது மாலையில் பள்ளிக்கூடம் விட்டு வீடு வருகையில் ஒரு நாளாவது அதன் அருகே சென்று விளையாடமல் எந்த பிள்ளைகளும் இருக்க மாட்டார்கள்.தேரில் ஒன்றிரண்டு ”கஜுரஹோ” சிற்பங்கள் உண்டு.அதை ரகசியமாக ’சேக்காளிக்கு’க் காண்பித்து ‘புளகாங்கிதம்’ அடையாத இன்னொரு ’பிஞ்சிலே பழுத்த’ சிநேகிதன் இல்லாமல் இருக்க மாட்டான். சுவாமி சன்னதியிலும், அம்மன் சன்னதியிலும் கோயிலுக்குள் நுழையும் ’கொடரவாசலி’ன் விதானத்தில், இருபுறமும் அழகான வேலைப்பாடுடன் மரச் சிற்பங்கள் இருக்கும். அதில் வரிசைக்கு பதினாறாக அறுபத்திநாலு காம சூத்திரச் சிற்பங்கள். உண்டு.
இதைக் காண்பிக்கப் போகிற போது, யாராவது பெரியவர்கள், “ஏல தூரப் போங்கலே, படிக்கிற புள்ளைகளா லட்சணமா இல்லை...” என்று விரட்டுவார்கள். ஆனால் அவர்களில் பாதிப்பேராவது, சிறியவர்களாக இருக்கும் போது நிச்சயமாக இதே போல் விரட்டப் பட்டவர்களாகத்தான் இருந்திருப்பார்கள்.தேரின் உட்புறமாக ஏறி சாமி சிலை வைக்கிற இடம் வரை போய்விட, வட்டக்கிணற்றில் இருப்பது போல் வசதியான படி போன்ற அமைப்பு உண்டு. அதிலும் பாதி ஏறும்போதே, ”ஏல கொரங்குகளா இறங்குங்கடா’’ என்று யாராவது சத்தம் போடுவார்கள்.
அந்த வருடம், தேர் சீக்கிரம் ’நிலையம்’ சேர்ந்து தேரோட்டம் திருவிழாவெல்லாம் முடிந்து விட்டது.ஆனால் பொருட்காட்சி முடியவில்லை.பொதுவாக அது ஸ்கூல் திறந்த நேரமாக இருக்கும், அதனால் நிறைய ஹோம்வொர்க் எதுவும் இருக்காது. நான் பொழுது போகாமல், வீட்டு முற்றத்தில் சோலோவாக, தென்னை வாரியல்க் குச்சியை வைத்து, தூணுடன் வாள்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்தேன். ”ஏய், எக்ஸிபிஷன் போலாமாடே” என்று ஒரு சினேகிதமான குரல் கேட்டது. சந்தோஷமாகக் கிளம்பினேன். அன்று நரி முகத்தில் விழித்திருக்க வேண்டும்.சினேகிதனுக்கு ஏகத்துக்கு செலவு.பொருட்காட்சியின் எல்லா ஸ்டால்களுக்கும் ஒன்று விடாமல்ப் போனோம்.பட்டாணி சுண்டல், சமோசா என்று கேட்டதெல்லாம் கிடைத்தது.
முதன் முதலில் “உருகும் பெண்” ஸ்டாலுக்குப் போனோம். ஏதோ கோயில் சாமி கும்பிட நிற்பது போல், இருபுறமும் வரிசையாக நின்று ’கர்ப்பக்கிரகத்’தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு பெண் பிரகாசமான வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தாள்.பத்து நிமிடம் கழித்து திடீரென்று உள்ளே எங்கேயோ போய் விட்டாள். பார்த்துக் கொண்டே இருந்த இருபதிச் சொச்சம் பேரும் ஹோவென்று கூச்சல் போட்டார்கள்.மீண்டும் வந்தாள்.ஐந்து நிமிடத்தில்.கண்ணைக் கூசவைக்கும் வெளிச்சத்தில், வெறும் எலும்புக்கூடுதான் தெரிந்தது. எல்லோரும் கைதட்டி விட்டு வெளியேறினோம்.
அடுத்து சூடன் கொளுத்தி வைத்தால் நந்தனுக்கு, கோயில் வாசல் கதவு திறந்து நடராசர் காட்சி தரும் ஸ்டால்.. சிதம்பரம் கோயில் மாதிரி ஒரு மினியேச்சர் செட். முதலில் கோயில் நடை அடைத்து இருக்கும். போதுமான கூடம் சேர்ந்ததும் கோயில் வாசலுக்கு நேராக பெரிய சூடனைக் கொளுத்தி வைத்தார்கள்....ஓரிரு நிமிடத்தில், மணியொலி முழங்க கோயில் கதவம் தானாகத் திறந்து சிவ கோஷம் முழங்கியது. சிலர் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். சினேகிதனின் சிரிப்புக்கிடையே, நானும் தன்னை மறந்து கும்பிட்டேன்.அடுத்து சின்ன மிருக காட்சி சாலை, ‘ஜலக் கன்னி’, ‘கையில்லாத கண்ணம்மா’ காலாலேயே, தலை வாரி, அலங்காரம் செய்து, ஸ்டவ் பற்றவைத்து காபி போடும் ஸ்டால். அதில் சினேகிதனிடம், கண்ணம்மா போட்ட காபியைத் தந்தார்கள்.மேஜிக் ஸ்டாலில்தான், நான் மூலைக்கொன்றாக தலை வேறு, கைகள், கால்கள் வேறு வேறாக, வேப்பிலைக் குவியலுக்குள், கிடக்கும் பெண்ணைப் பார்த்து பயந்து போய் வெளியே போயிருவோம் என்று சொன்னேன், பயப்படாத சினேகிதன், சரி வா என்று அழைத்துக் கொண்டு வந்து ராட்டினங்களில் ஏறிச் சுற்றினோம்.
வழக்கமாகப் போடுகிற ’சைபால்’ சர்வரோக நிவாரணக் களிம்பு ஸ்டாலுக்குப் போட்டியாக அந்த வருடம் ’சோனால்’ என்றொரு களிம்பு ஸ்டால் போட்டிருந்தார்கள்.அதில் பரிசுக் குலுக்கல் வைத்திருந்தார்கள்.என்னையே பரிசுக்கான டோக்கனை எடுக்க சினேகிதத்துடன் அனுமதி கிடைத்தது. அழகான ஒரு ப்ளாஸ்டிக் தாஜ்மஹால் பரிசு கிடைத்தது. அதுவும் எனக்கே எனக்கே என்றாயிற்று. சுல்தானியா ஓட்டல் ஸ்டாலில் மட்டும் எனக்கு பிரியாணி சாப்பிட்டுப் பழக்கமில்லை என்று இன்னொரு சமோசா கிடைதது. சுற்றிச் சுற்றிக் கால் வலித்தது. தூக்கமும் கண்ணைச் சுழற்றிற்று. ”பஸ்ஸில் போயிரலாமா வீட்டுக்கு’’, என்றேன். இன்னும் கொஞ்சம் சின்னப் பிள்ளை போல் சுற்றலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாரோ என்னவோ, என் சோர்வைக் கண்டதும் ஒரு சினேகிதச் சிரிப்புடன், ரொம்ப கால் வலிக்கிறதா, சரி பஸ்ஸிலேயே போயிரலாம்” என்றார் அப்பா.
5 comments:
எங்க அப்பா போலதான் உங்க அப்பாவுமா
மறந்து போன பல விஷயங்களை நினைவு படுத்துகிறது உங்கள் பதிவு. எங்கள் வீட்டுப் பக்கமும் ஒரு தேர் உண்டு, ஆனால் அது நெல்லை தேர் போல் பெரியது இல்லை, சிவன் கோயில் சின்னத் தேர் அது.
ம்ம் நல்ல சினேகிதர் உங்களுக்கு. கண்காட்சியை தேரை நேரில் கண்டது போல இருக்கு.
அப்படியே நான்கு ரத வீதிகளும் கண் முன்னே கொண்டு வந்து விட்டர்கள்.
தேரோட்டம், தேர் பூத்தான் முக்கு, வாகையடி முக்கு, மேல ரத வீதி காவல் நிலையம் பஸ் நிறுத்தம் முன்பு நின்று விடல், லாலா சத்ர முக்கில் நின்று விடல், ராயல் திரை அரங்கம் ஆண்டி நாடார் பாத்திரக் கடை முன்பு நின்று விடல் போன்றவை குறித்து இன்னும் விளகாமாக பதிவிட வேண்டுகிறேன்.
தேரில் அமர்ந்து மத்தளத்துடன் ஹர ஹர நாம பார்வதி பதையே என்று முழங்கும் ஓதுவார் பற்றியும் எழுதுங்கள்
அப்பாவை விட அருமையான சிநேகிதன் கிடையாது.
எனக்கு ஸ்ரீ வில்லிபுத்தூர்
தேர் தான் நினைவிருக்கிறது. அதில் ஏறி விளையாடியதும் உண்டு. தேர்த்தூண்களில் சுற்றியதும் உண்டு.
இதெல்லாம் தேர் எங்க வீட்டு வாசலிலேயெ நின்று விட்டதால் கிடைத்த பாக்கியம்.
இப்ப எல்லாம் தேர் நிற்காமலயே ஆண்டாளையும்.மன்னாரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போய் விடுகிறதாம்:(
வேறு எந்தத் தேர் பார்த்தாலும் வில்லிபுத்தூர் தேர் அழகு போல,எனக்குத் தோன்றவில்லை.
Post a Comment