Saturday, August 8, 2009

தீயிந்த உயிர்க் கூட்டை எரித்தாலும்......



ஓய்வின் முதல் வாரம் ஒரு நண்பர் சொன்னார் , எங்கள் இருவருக்கும் பொதுவான மிகச்சிறந்த கலைஞரொருவர், ஓய்வு பெற்ற பின் என்னைப் போலவே ஏகப்பட்ட திட்டங்கள் வைத்திருந்து, மதியத்தூக்கம், சற்று பேச்சு,இலக்கியக் கூட்டங்கள் என்று பொழுது கழிப்பதாக.அவர் மீண்டு வந்து விடுவார் என்று எனக்கு தெரியும்.இரண்டு நாளாய் மத்தியானம் பழைய படங்கள் டி.வி.யில் போடுகிறார்கள்.அதைப் பார்ப்பதில் மதியத் தூக்கத்தை விரட்ட முயற்சிக்கிறேன்.திடீரென்று ஒரு சேனலில் டி.ஆர் மகாலிங்கமும் ஈ.வி சரோஜாவும் மழையில் நனைந்து கொண்டு ஒரு பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.அது பட்டுக் கோட்டையின் வரிகள் போலவே இருக்கிறது.ஆனால் அது அ.மருதகாசி எழுதியது. படத்தின் பாடல்கள் எல்லாமே மருதகாசி எழுதியதாக நினைவு.மருதகாசி எழுதிய பல பாடல்கள், பட்டுக்கோட்டை எழுதியது போலவே இருக்கும். ஆனால், மருதகாசி பட்டுக் கோட்டைக்கு முந்தியவர். அந்தப் படம் ஏதோ ஒரு திருநாள் அன்று வந்தது,அதில் கடைசியாக ஒரு சுசீலா பாடுகிற பாடல் ஒன்று வரும்,
‘நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்,
நீயே எந்நாளும் என் காதல் கீதம்’.
பிரமாதமான பாடல்.என் பழைய கவிதை நோட்டுகளிலெல்லாம் அங்கங்கே எழுதி வைத்திருப்பேன்.அதில் கடைசி வரிகள் அற்புதத்தின் உச்சம்.
‘தீயிந்த உயிர்க் கூட்டை எரித்தாலும்-அது
நீ இருக்கும் என் நெஞ்சை நெருங்காது
நீ என்றும் வாழ வேண்டுமே-அதுதான்
இன்பமே....’
என் நடுவுள்ள அண்ணன் கூட்டிப் போயிருந்தான். பெயர் தி.க.மீனாட்சி சுந்தரம்.அவன் பள்ளிக்கூட மேகசீன் ஒன்றில் ‘காலத்தின் அருமை’ என்று ஒரு கட்டுரை எழுதியிருப்பான். அந்தப் பிரதியை அவன் பீரோலில் பத்திரமாக வைத்திருப்பான்.
அவன் தான், என்னை பல சினிமாக்களுக்கு கூட்டிக் கொண்டு போவான். மாயா பஜார், அலிபாபா,மிஸ்ஸியம்மா என்று பல சினிமாக்கள். அவன் ம.பொ.சி யின் தமிழரசுக் கழக அபிமானி.சேலம் எம் ஏ வி பிக்சர்ஸ் படமென்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எம் ஏ வி பிக்சர்ஸ்’ சம்பூர்ன ராமாயணம் படத்திற்கும் அழைத்துப் போனான்.கே சோமு இயக்கம். ஏ.பி.நாகராஜன் வசனம்.அதற்கடுத்து அவர்களே சிவலீலா என்று பிரம்மாண்டத் தயாரிப்பாக ஒன்றை அறிவித்தார்க்ள், அது வரவில்லை. ஆனால் அதுதான் பின்னாளில், திருவிளையாடல் பெயரில் ஏ பி என் தயாரித்து இயக்கி, மாபெரும் வெற்றி கண்டது. ம.பொ.சி கண்ணகிக்கு ஒப்ப‘மாதவி’யை, மேடைகளில் பிரபலப் படுத்திய போது எம். ஏ வி பிக்சர்ஸ் மாதவி என்று ஒரு படம் எடுத்திருந்தார்கள். வி.கோபாலகிருஷ்ணன் அவர்களது ஆஸ்தான நடிகர். அதில் அற்புதமான பாடல்கள் உண்டு.ஏ.எல் ராகவன் பாடுகிற ‘ஒரு முறை பார்த்தாலே போதும், உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்’ என்ற பாட்டு., அற்புதமாயிருக்கும்.எஸ்.சி கிருஷ்ணன் குழுவினர் பாடுகிற பாட்டில் தமிழ் நாட்டின் பல மறக்கப் பட்ட தலைவர்கள் பற்றி வரும்.’ நல்லறிவாளர் திரு வி க, தமிழ்நாட்டின் செல்வம் திருவிக, தொல்லை படும் பாட்டாளியின் தோழனாக வந்துதித்த நல்லறிவாளர் திருவிக....என்று வில்லுப்பாட்ட்டு பாடுகிறது போல் வரும். ‘இந்த நாட்டின் பெருமைகளை எடுத்து மேற்பேசி வருபவர் யாரென யோசி, அவர்தான் சிலம்புச் செல்வர் ம பொ சி’ என்கிற மாதிரியில் முடியும்.
எம்.ஏ. வேணு ஒரு தமிழரசுக் கழக அனுதாபி., ஜி உமாபதி, டி என் சிவதானு என்று மபொ.சிக்கு திரையுலகில் கொஞ்சப் பேர் உண்டு. ம.பொ சி வெளிநாடு போன போது அவருக்கு இவர்கள் தான் கோட் சூட் எல்லாம் தைத்து வழங்கினார்கள் என்று செய்தி. அண்ணன் எழுத்துப் போடும் போதே பல விஷ்யங்களைச் சொல்லுவான். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள், நூற்றுக்கும் மேற்பட்டவை, ஒவ்வொன்றிலும் எழுத்து (டைட்டில்) போடுவது புதுமையாக இருக்கும்.அதற்காகவே மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் என்றால் எழுத்துப் போட்டுவிட்டர்களா என்று கேட்டு விட்டு டிக்கெட் எடுப்பது வழக்கம்.தரை டிக்கெட்டுக்கு அலை மோதி,டிக்கெட் ஜன்னலுக்கு நெருங்குவதற்குள்,படம் போட பெல் அடித்து விடுவார்கள். மனோன்மணி படத்தில் ஒரு பெரிய மணி, ஆராய்ச்சி மணி போல்., ஒலிக்க அதிலிருந்து எழுத்துகள் வரும்..காட்டு ரோஜா படத்தில் தரையில் பூக்களால், படத்தில் இடம் பெறும் கலைஞர்களின் பெயர்களை அமைத்திருப்பார்கள். அலிபாபா படத்தின் எழுத்துக்கள் பூராவும் ஆங்கிலத்திலேயே இருக்கும். இந்திப் படங்களின் பாணி அது.அந்தக் காலத்தில் நடிகர்கள் பெயரும், அவர்கள் ஏற்றுள்ள பாத்திரத்தின் பெயரும் டைட்டிலில் போடுவார்கள்.எல்லாமே ஆங்கிலப் படங்களின் பாதிப்பு.மர்ம யோகி (முதல் அடல்ட்ஸ் ஒன்லி தமிழ்ப் படம்.) படத்தில் வேடிக்கையாக இருக்கும். ராஜா & மர்மயோகி – செருகளத்தூர் சாமா என்று போடுவார்கள்.படத்தில் ‘மர்ம’யோகி, யார் எனபதுதான் சஸ்பென்ஸ்.
ஹாதிம்தாய் அல்லது மாயமோகினி என்று ஒரு இந்தி டப்பிங் படம். அராபியன் நைட்ஸ் கதை, ஏழு வாக்கியங்களுக்கு, அலைந்து திரிந்து பொருள் தேடவேண்டும், அப்போதுதான் சிலையாக மாறிய இளவரசி உயிர் பெறுவாள்.அந்தப் படத்தின் எழுத்தில், எடிட்டிங் உதவி- எம். ஏ. திருமுகம் என்றிருந்தது. சாண்டோ சின்னப்பா தேவரின் (சகோதரர்) படங்களை இயக்கியவர்.படம் ரொம்ப ந்ன்றாக இருக்கும். ‘நல்லதை செய்து நதியில் போடு’ என்று ஒரு வாக்கியம், மட்டும் நினவிருக்கிறது. இப்படி வாக்கியங்களின் அர்த்தத்தை தேடிப் போவது போன்ற தூக்குத் தூக்கி, தங்கமலை ரகசியம், வா ராஜா வா போன்ற படங்களுக்கு இதுதான் மூலம் என்று நினைக்கிறேன்.பஸந்த் பிக்சர்ஸ் தயாரிப்பு என்று நினைவு. மஹிபால் கதாநாயகனா என்று நினைவில்லை.பஸந்த் பிக்சர்ஸ் படங்கள் ஒளிப்பதிவு, தந்திரக் காட்சிகள், இயக்கம் எல்லாம் அநேகமாக பாபுபாய் மிஸ்திரி என்று போடுவார்கள்.தயாரிப்பு ஹோமிவாடியா.ஹதிம்தாய் அதற்கப்புறம் பல தயாரிப்புகள் வந்துள்ளது. ஒன்றில் ஜிதேந்திரா நடித்திருப்பார்.அறுபதுகளில் ஹோமி வாடியா தயாரிப்பாக,பெரோஸ்கான் நடித்து, ரிப்போர்ட்டர் ராஜு என்று ஒரு படம் வந்தது. அதன் நகல் தான் ஜாவர் சீதாரமன் கதை வசனம் எழுதிய ‘ஆனந்த ஜோதி’ எம்ஜியார் நடித்தது. எம்ஜியாரும் தேவிகாவும் சேர்ந்து நடித்த ஒரே படம்.
இதைத் தொடர்ந்து ஃப்ரெண்ட் ராமசாமி தயாரித்த காஞ்சனா பிக்சர்ஸ்’ உடன் பிறப்பு என்று ஒரு படம் எம்ஜியார் தேவிகா நடிப்பதாக விளம்பரமெல்லாம் வந்து, படம் பாதியிலேயே நின்று போனது.ஃப்ரெண்ட் ராமசாமி என்ன ஆனாரென்றே தெரியவில்லை. அண்ணனின் பீரோலில், அவனது தூத்துக்குடி நண்பன், சேது அனுப்பிய பல பொங்கல் வாழ்த்துக்கள் இருக்கும். திராவிட நாடு திராவிடருக்கே, என்று எல்லாவற்றிலும் எழுதியிருப்பார், நிறைய இருக்கும். எல்லாம் கே மாதவன் வரைந்த ஓவியங்கள்.சகுந்தலையின் குழந்தை பரதன் சிங்கக் குட்டிகளோடு விளையாடுவது போல ஒரு படம் போட்ட பொங்கல் வாழ்த்து, அப்புறம் எம்ஜியார் ஓவியம் போட்ட ஒன்று. அதுவும் மாதவன் வரைந்ததா நினைவில்லை.அது போக பழைய நடிகன் குரல் பத்திரிக்கைகள் நாலைந்து இருக்கும்.
எம்ஜியார் அதன் பதிப்பாசிரியர்.அதில் அவரது சுய சரிதை வந்து கொண்டிருந்தது.இதையெல்லாம் அவனது மேக்சீன் கட்டுரையை காண்பிக்கும் போது கண்ணில் காட்டுவான்.தவிரவும் பெரிய அண்ணன் கல்யாணத்திற்கு பரிசாக வந்த வந்த பல புத்தகங்களும் இருக்கும். அண்ணா, கருணாநிதி, கே.ஜி ராதாமணாளன், நாரண துரைக்கண்ணனின், (ஜீவா) உயிரோவியம்,ரகுநாதனின் கன்னிகா.உயிரோவியம் அருமையான நாவல். கே எஸ் கோபாலகிருஷ்ணனின் சாரதா படம் இதை உல்ட்டா பண்ணியது.அப்போது திருமணத்திற்கு பரிசாக புத்தகங்களைத் தருவது வழக்கம்.பெரிய அண்ணன் திருமணத்திற்கு வந்த மற்ற பணம் பரிசுகளை விட புத்தகங்களே அதிகம். அதை அழகாக ஒரு நோட்டில் எழுதி வைத்திருக்கிறார்கள், புத்தககம்-ஆசிரியர்-அன்பளீப்பு வழங்கியவர்-விலை என்று விவரமாக, குறித்து வைத்திருக்கிறார்கள். அவன் திருமணமாகி ராஜவல்லிபுரத்தில் கர்ணம் வேலைக்கு போனபோது, என்னிடம் எல்லாவற்றையும் தந்து விட்டான்.அது 1961-62 வாக்கில் இருக்கும். அதையும் தந்து நாலணாவும் தந்தான், யானைப் பாகன் படம் பார்த்து வரும்படி அனுப்பினான்.ஆறரை மணி படத்துக்கு ஐந்து மணிக்கே போய் காத்திருந்தேன்.அதிலும் பாடல்கள் மருதகாசி. பிரமாதமான பாடல்கள்.

பதினாறும் நிறையாத பருவ மங்கை-காதல்
பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை

வண்டுகளே கண்டிடாத வசந்த முல்லை-அவள்
வந்ததுமே பற்ந்தோடும் காதல்த் தொல்லை
எண்ணம் போல வாய்த்து விட்டால் ஈடு இல்லை-இனி
இனபத்திற்கு என்றைக்குமே ஏழை இல்லை

வண்ண முகக் கண்ணிரண்டும் நட்சத்திரமோ=அது
வாவென்று அழைப்பதென்ன விசித்திரமோ
மின்னுகின்ற பல்வரிசை முத்துச் சரமோ-யாரும்
மெச்சுகின்ற குணங்களேதான் சொத்து சுகமோ

இன்னொரு சரணம் இப்போதைக்கு நினைவில்லை. இதை, இன்றைய பாடலாசிரியர் நா.முத்துக்குமாரிடம், அவர் அறையில் வைத்து ஒரு கொண்டாட்டமான மன நிலையில் பாடிக் காண்பித்த போது, ஆடிப் போய் விட்டார். லலிதானந்த் உடனிருந்தான். இன்னொரு டூயட்,சீர்காழியும் சுசிலாவும் ‘செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய், தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே...’ டூயட், சோலோ, ஹம்மிங், விருத்தம் எல்லாம் அண்ணன் தி.க.மீ சொல்லித் தந்தது.
கர்ணம் (கிராம நிர்வாக கணக்குப் பிள்ளை) பதவியை, எம் ஜி ஆர் அரசு ஒழித்த போது வேலையில்லாமல் பெரிதும் கஷ்டப் பட்டான். அப்பாவுக்கு அவனை அதிகம் பிடிக்காது, ஏன் என்று இன்று வரை புரியவில்லை. ஆனால் அப்பா இறந்த சமயத்தில் அவன்தான் குடும்பத்தை தாங்கிக் கொண்டான்.அவன் வேலையிலிருந்த சமயம்,ராஜவல்லிபுரம் வீட்டில் இருக்க வேண்டாம் என்று அப்பா சொல்லிவிட்டதால், மீனட்சி புரத்தில் வாடகைக்கு குடி இருந்தான்.நாங்கள் நண்பர்களெல்லாம் யார் பையன் படத்திற்கு,அது எத்தனையாவது முறையோ, ஜங்ஷன் பூர்ணகலா திய்யேட்டரில் ஒரு செகண்ட் ஷோ, பார்க்கப் போயிருந்தோம். அது வந்த புதிதில்,அண்ணன்தான் கூட்டிப் போயிருந்தான்.ஒண்ணாம் நம்பர் நகைச் சுவைப் படம். ஸ்ரீதர் கதை வசனம், டெய்சி ராணி, பையனாக(!) நடித்திருப்பாள்.இன்னொரு படம் ஜெய கோபி, அதற்கும் அவன் தான் கூட்டிக் கொண்டு போனான்.இன்று யார்பையன் படத்திற்கு நண்பர்களை, அது பிரமாதமான படம் என்று சொல்லி நான் தான் கூட்டி வந்தேன்.அதில் முதல் காட்சியில், ஒரு டாகடர் வருவார். அது பின்னாளில் பிரபலமான இயக்குநர் பி. மாதவன், ஸ்ரீதரின் உதவியாளராயிருந்தவர் அவர்.அதைப் பார்த்ததுமே நண்பர்களுக்கு சிரிப்பு வந்து விட்டது. படத்தை வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
இடைவேளையின் போது வெளியே நின்று தம்மடித்துக் கொண்டிருந்தோம். ஒரு சிகரெட்டை ரெண்டு மூன்று பேர் மாற்றி மாற்றி இழுத்துக் கொண்டிருந்தோம்.சண்முக நாதன் என்னிடமிருந்து அவசர அவசரமாக சிகரெட்டை வாங்கினான். ரொம்ப கெட்டிக்காரன் அவன். அவன் கேட்டால் ஏதாவது அர்த்தமிருக்கும் என்று அவனிடம் வேண்டாவெறுப்பாய்க் கொடுத்தேன்.உங்க அண்ணன் நிக்காருப்பா அந்தா பாரு, என்றான்.சண்முகநாதனுக்கு, குடும்ப நிலைமை எல்லாம் நன்றாகத் தெரியும்.அண்ணனைப் பார்த்த பிறகு அவனை நோக்கிப் போனேன். பார், நீ அழைத்துச் சென்று காண்பித்த படம், என்று சொல்லாமல் சொல்வது போல அவனருகே சென்று பேசாமல் நின்றேன். பக்கத்தில் நின்ற ஒருவரிடம், அவர் படத்தை எண்ணி சிரித்த படி இருந்தார், அநேகமாய் தியேட்டர் வளாகத்தில் எல்லார் முகமும் சிரிப்பாய் இருந்தது, எங்கும் சிரிப்பாணி நிறைந்திருந்தது.அவரிடம், தம்பி என்று அறிமுகப் படுத்தினான்.அம்மா எப்படியிருக்கா என்றான்.நான் தலையை மட்டும் ஆட்டினேன்.உன்னை வரச் சொன்னாள் என்று ஏதோ பேச்சுக்குச் சொன்னேன்.சரி வாரேன்னு சொல்லு,என்று சொல்லிவிட்டு, அந்தப் புதிய நண்பரிடம் ஏதோ சொன்னான், அவர் சட்டைப் பை, கை மடிப்பு என்று எங்கிருந்தெல்லாமோ ரூபாயை எடுத்தார், ஏழு ஒரு ரூபாய் நோட்டுகள்.வாங்கி என்னிடம் கொடுத்தான்.வாங்கிக் கொண்டேன்.போகும் போது சுல்தானியா ஓட்டலிலொரு டீ குடிக்க வேண்டும் சண்முகநாதனுடன் என்று நினைத்துக் கொண்டேன்.அவன், வேண்டாம் நிறைய பேர் இருக்கிறோம் என்று தடுத்து விட்டான்.
மறு நாள் சீட்டாட்டத்தில், அதில் இரண்டு ரூபாய் தோற்றதும், அடுத்த ஆட்டத்தில் சேரும் முன், சண்முக நாதன், வா டீ குடிக்கப் போவோம்,என்று அழைத்துப் போனான். இந்தக் காசை வைத்து இன்னமெ விளையாட வேண்டாம், என்று டீ குடித்து முடித்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்த படி சொன்னான்.மட்டமான நேவி ப்ளூ சிகரெட். ஐந்து பைசாவோ என்னவோ விலை.நான் அவன் முகத்தைப் பார்த்த படி பேசாதிருந்தேன்.இந்தா என்று ஒரு இழுப்பு இழுத்து விட்டு கனிகிற சிகரெட்டை நீட்டினான்.அழுகை வரும் போலிருந்தது, சற்றே நடுங்குகிற கையோடு சிகரெட்டை வாங்கும் போது.
கடைசியாய் அண்ணன், நெல்லையப்பர் கோயிலில் நவக்கிரக சன்னதியில் சனீஸ்வரனுக்கு எள்ளுப் பொட்டலமும் எண்ணெயும் விற்கும் குத்தகை எடுத்திருப்பவரிடம் வேலைக்கு இருந்தான்.அதைக்கூடத் தற்செயலாய்த் தான் பார்த்தேன். அப்போது வேலை கிடைத்து, திருமணமாகி இடைகால் வந்து விட்டேன்.பல இடங்களில் வேலைக்கு முயற்சிக்கிறான் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஒரு வார்த்தை கூட பணம் வேண்டுமென்று கேட்டதில்லை.நானும் வேண்டுமா என்று கொடுத்ததில்லை.அதே சன்னதியில் நான் ஒரு காலத்தில் சுற்றிச் சுற்றி வருவேன்.அவன் ஒரு எள்ளுப் பொட்டலத்தை அமைதியாய் நீட்டினான்.வாங்கி பொருத்தி வைத்தேன். எந்த வேண்டுதலும் இருக்க வில்லை.ஊர் திரும்பிய இரண்டு மூன்று நாள் கழித்து கண்டக்டர் ராமையா அதி காலையில் வந்தான். வா, ஊருக்கு புறப்படு., 'கணக்காப் பிள்ளை' அண்ணாச்சி செத்துப் போயிட்டாரு,கடுமையான நெஞ்சு வலி.

6 comments:

துபாய் ராஜா said...

குதூகலமாக கூடவே அழைத்துச்சென்று கடைசி வரிகளில் கண்ணீர்விட வைத்து விட்டீர்கள்.

kalapria said...

அழுகை ஏழைகளின் பிதுரார்ஜித சொத்து
கண்ணீர் விட வசதியில்லாதசொர்க்கம் எனக்கு வேண்டாம் என்று தாகூர் சொல்லியிருக்கிறார்.தாகூர் எவ்வளவோ சொல்லியிருக்கிறார்.

முரளிகண்ணன் said...

தங்களை இங்கே வாசிப்பதில் மிகுந்த உவகை அடைகிறேன்

பகிர்தலுக்கு மிகுந்த நன்றிகள்

Maniz said...

வண்டுகளே கண்டிடாத வசந்த முல்லை-அவள்
வந்ததுமே பற்ந்தோடும் காதல்த் தொல்லை
எண்ணம் போல வாய்த்து விட்டால் ஈடு இல்லை-இனி
இனபத்திற்கு என்றைக்குமே ஏழை இல்லை

வண்ண முகக் கண்ணிரண்டும் நட்சத்திரமோ=அது
வாவென்று அழைப்பதென்ன விசித்திரமோ
மின்னுகின்ற பல்வரிசை முத்துச் சரமோ-யாரும்
மெச்சுகின்ற குணங்களேதான் சொத்து சுகமோ

Arumaiyana varigal....forgive me for english fonts....You are always taking me to the yester years...thank you so much :)

வித்யாஷ‌ங்கர் said...

நெகிழ்ச்சியான அண்ணன்
தமிழ் சினிமாவுக்குத்தான் நம் வாழ்க்கையில் எத்தனை பங்கு

உங்கள் துரை (எ) வித்யாஷங்கர்
என்னை சாமக்கொடை ப்ளாக் ஸ்பாட்டில் சந்திக்கலாம்.

enRenRum-anbudan.BALA said...

kalapria,
அழகான மலரும் நினைவுகள், வாசிக்க நெகிழ்ச்சியாக இருந்தது. நன்றி பகிர்தலுக்கு.

//அதிலும் பாடல்கள் மருதகாசி. பிரமாதமான பாடல்கள்.

பதினாறும் நிறையாத பருவ மங்கை-காதல்
பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை
//
இந்தப்பாடலை எழுதியது மருதகாசி இல்லை என்று நினைக்கிறேன்! எழுதியவர் கவிஞர் குமாரதேவன். அவர் எழுதிய இன்னொரு திரைப்பாடல்

" கண்ணிரெண்டும் வெல்லக்கட்டி , உன் கன்னம் மின்னும் தங்கக்கட்டி "

எ.அ.பாலா
http://balaji_ammu.blogspot.com