Sunday, August 16, 2009

.......மலர் ஜாடையில் சிரிக்கும்......

பேட்டையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின். இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது. 1964 என்று நினைவு. உண்மையிலே பிரம்மாண்டமான ஊர்வலம். ஜங்ஷனிலிருந்து தொடங்கி டவுண் வழியாக பேட்டை செல்ல வேண்டும். ஊர்வலத்தில் ரெட்டை மாட்டு வண்டியில் தான், டேப்லோக்கள்(tableau) எல்லாம். மூட்டை தூக்குகிற, லாரி லோடு மேன் மாக்கான், ஆள் உயரமும் சதையும், உழைத்துக் கறுத்த உடம்புமாய், திண்ணென்று இருப்பார். அவர்தான் இந்தி அரக்கி, வேடம் போட்டிருந்தார்.ஒரு மாட்டு வண்டியில் அவர் ஒரு மாணவனின் கழுத்தை நெறிப்பது போல் போஸ் கொடுத்த படியே நின்றார்.இளைஞர் காங்கிரஸ் என்று ஒரு வண்டி,அதில் நாலைந்து பொக்கை வாய் ஆட்கள் அமர்ந்து வெறும் வாயை மென்ற படி வந்தார்கள்.இரண்டுக்கும்தான் அதிக வரவேற்பு இருந்தது.மாக்கனுக்கு மாநாட்டில் அண்ணா, ஒரு மோதிரம் போட்டார். ஏகப்பட்ட மாணவர்கள் ஊர்வலத்தில் ஜங்ஷனிலிருந்து வந்தோம். பெரிய கோபால் அன்று ரத்னா தியேட்டரில் ஞாயிறு காலைக் காட்சியில், MYSTERIOUS ISLAND என்று ஒரு படம் போட்டிருந்தார்கள். அதற்குப் போய்விட்டான்.அது நல்ல படம் என்று சனிக்கிழமை மதியக் காட்சி பார்த்தவர்கள் சொன்னதாகச் சொல்லியிருந்தான். ரத்னா, பார்வதியில் சனிக்கிழமை, மதியமும் ஞாயிறு காலையும், ஆங்கில இந்திப் படங்கள் போடுவார்கள்.குறைந்த கட்டணம்.தரை டிக்கெட் பதினெட்டு பைசா. படம் பாதி நடந்து கொண்டிருக்கும் போது, ஊர்வலம் தியேட்டரை தாண்டியது.ஊர்வலத்தில் இப்போது நல்ல கூட்டம் சேர்ந்திருந்தது.
என் கையில் வைத்திருந்த தி.மு.க கொடியை,புதிதாய் ஊர்வலத்தில் சேர்ந்திருந்த ஸ்ரீபுரம் மரக்கடை நாடார் பையன் வாங்கிக் கொண்டான். அவன் அப்பாவுக்கு தெரிந்தால் வீட்டில் நடையேற்ற மாட்டார்.ஏதொ உற்சாக மிகுதியில், அவன் வீட்டை கடக்கும் போது ஊர்வலத்தோடு இணைந்து கொண்டான்.அவன் என்னை விட ஒரு கிளாஸ் முந்திப் படித்தான்.பெயர் மறந்து விட்டது அவன் அண்ணன் பெயர் ஜவஹரோ, போஸோ என்று நினைவு. தியேட்டரை விட்டு எல்லோரும் வெளியே வந்து வேடிக்கை பர்க்க நின்று கொண்டிருந்தார்கள்.படத்தை நிறுத்தி விட்டார்கள், மெயின் கேட் மட்டும் அடைத்திருந்தது அதுவரை பார்வையாளர்களோ வீடுகளோ இல்லாத நிழலான நெடுஞ்சாலையில் சற்று சோர்வாய், அவ்வளவாய்க் கோஷங்கள் போடாமல் வந்து கொண்டிருந்தது. .தியேட்டர் முன்புறம் வரும் போது, ஆதிக்க இந்தி ஒழிக, அன்னைத் தமிழ் வாழ்க,விரட்டுவோம் விரட்டுவோம் இந்தி அரக்கியை விரட்டுவோம். வேண்டவே வேண்டாம் இந்தி வேண்டாம்.பிடிக்காதே பிடிக்காதே இந்திக்கு வால் பிடிக்காதே, பார்வையாளர் கூட்டம் கண்ணில் பட்டதும், இயல்பாக ஊர்வலத்தின் சத்தம் திடீரெனக் கூடியது.நாங்கள் கொஞ்சப் பேர் இந்தி வெறியன் சேத் கோவிந்த தாஸ் ஒழிக என்று கோஷமிட்டுக் கொண்டு வந்தோம்.
தியேட்டர் உள்ளிருந்து சிலர் சுவரேறிக் குதித்து ஊர்வலத்தில் சேர்ந்தது கொண்டனர். ஒரு சின்ன பரபரப்பு ஏற்பட்டது. அதே போல் சிலர் வெளியிலிருந்து உள்ளேயும் குதித்தனர். பெரிய கோபால் , படம் பிரமாதமா இருக்கு உள்ள குதிச்சுருலெ என்றான். நான் யோசனை செய்வதற்குள் தியேட்டரில் சமயோசிதமாக பெல் அடித்து விட்டார்கள்.கோபால் உள்ளே ஓடிவிட்டான்.அதே போல் அநேகமாய் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்,நிறையப் பேர் உள்ளே ஓடினர். நான் தொடர்ந்து ஊர்வலத்தில். ஊர்வலம் செல்லும் வழியான பேட்டை ரோட்டில் எங்கள் தெரு சேருமிடத்தில் சாலைக்கு ஊடாக ஒரு நீளத் தட்டியில் மஞ்சள் செவ்வந்திப் பூ ஒட்டி, நடுவில் கருப்பு- சிவப்பில் முக்கிய செவ்வந்திப் பூவில் `தமிழ் வாழ்க’ என்று எழுதிக் கட்டியிருந்தோம்.



முத்துக் குமாருப்பிள்ளை பூக்கடையில் சொல்லித்தான் செய்தது. எங்கள் ஆர்வம் காரணமாக ராத்திரிப் பூராவும் அவரது பூக்கூட வீட்டில் போய் நாங்களும் கூட மாட ஒத்தாசை செய்வதாக கொஞ்ச நேரம் ஒட்டிக் கொண்டிருந்தோம்.. அவர்கள் வீட்டில் பூ, அம்பாரமாய் குவிந்து கிடந்தது.ஏதோ கல்யாணத்துக்கோ கோயிலுக்கோ பூ கட்டுகிறாகள்,
எனக்கு அமுதவல்லி சினிமா திடீரென நினைவு வந்தது... அதில், பூ பறித்துக் கொண்டிருக்கும் போது வரும், ஜோடிப் பாம்புகளில் ஆண் பாம்பை, டி ஆர். மகாலிங்கத்தின் அப்பா கொன்று விட, உன் மகனுக்கு திருமணம் ஆனதும் அவன் பாம்பு கடித்து இறந்து விடுவான் என்று சாபமிட்டு விட்டு மறைந்து விடும் பெண்பாம்பு. ஜூபிடரின் படம்.(அநேகமாய் கடைசிப் படம்). ஆர்ட் டைரெக்டர் ஏ.கே. சேகர் தான் இயக்குநர்.ஜி.ராமனாதன் இசையமைப்பு. அது கே.வி.மஹாதேவன் , விஸ்வநாதன்- ராமமூர்த்தி காலம். .ஆனாலும் ஜி ராமனாதனின் இசையில்,கண்ணிரண்டும் ஒன்றையொன்று காண முடியுமா, கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா என்று ஒரு பாட்டும். ஆடை கட்டி வந்த நிலவோ பாடலும், சிலோன் ரேடியோவில் அடிக்கடி போடுவார்கள்.டி ஆர் மகாலிஙகமும், நாககன்னிகையாக வரும் தாம்பரம் லலிதாவும், ஆடிப் பாடுகிற பாடல்.(எம்.என் ராஜம் கதாநாயகி).சத்தியவான் சாவித்ரி மாதிரி கதை.
குளிரோடையில் மிதக்கும்
மலர் ஜாடையில் சிரிக்கும்-இவள்
காடு விட்டு வந்த மயிலோ-நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ..... (வேகமான டியூன், பக்காவான வெஸ்டெர்ன் இசை,சுசீலாவின் அற்புதமான ஹம்மிங், துள்ளலான பாடல் வரிகள்.வருடம் ஐம்பது ஆனாலும் காலத்தையும் நினைவையும் காவல் காக்கும் பாட்டு)

ஏனோ அந்தப் பூவிற்குள்ளிருந்து ஒரு குட்டிப் பாம்பு வந்து விடுமென்று தோன்றியது...அதைப் பற்றி வேடிக்கையாய்ப் பேசுவதை அங்கே பூ கட்டும் பெண்கள் வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது அங்கு பூ கட்டும் அவரது வீட்டு பெண்களுக்கு பெருத்த இடைஞ்சலாயிருந்தது என்று நினத்தாரோ என்னவோ, முத்துக் குமாருப்பிள்ளை, என்ன சொல்லறது எல்லாம் பெரிய வீட்டுப் புள்ளைகளால்லா இருக்கு, ஏய், போங்கப்பா சோலிக்கு எடைஞ்சலா இருக்குல்லா என்ற பின்னரே நாங்கள் வந்தோம்.தெருவுக்கு வந்ததும் பேச்சு பாம்பைப் பற்றி மாறி, அது மண்ணுள்ளிப் பாம்பாக மாறி, வேறேங்கோ திசை மாறியது.
மிஸ்டீரியஸ் ஐலண்டைப் பற்றி பெரிய கோபால் பிரமாதமாகச் சொன்னான்.பிரமாதமான படம்ப்பா, விட்டுட்டியே என்று. இரண்டு மூன்று வாரங்கள் கழித்து, ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க மறுபடி ரத்னாவிலேயே போட்டார்கள். முதல் வேலையாகப் போய்விட்டேன்.படம் உண்மையிலேயே நன்றாயிருந்தது.ராட்சஸ நண்டு, ராட்சஸ தேனி,போன்ற மிருகங்கள் உள்ள ஒரு தீவில், சிறையிலிருந்து பலூனில் தப்பிப் போய் மாட்டிகொள்ளுகிறார்கள். வழக்கமான கதை தான். கதாநயகன், கதாநாயகி இரண்டு துணை நடிகர்கள்,(அதில் ஒருத்தன் இடையிலேயே பரிதாபமாகச் செத்துப் போகிற கதை தான்.) கடலில் மூழ்கிக் கிடக்கும் ஒரு பழைய கப்பலுக்குள் பலூனை, நுழைத்து,காற்றடைத்து அதை வெளியே கொண்டு வந்து, எரிமலை வெடித்துச் சிதறுகிற கடைசி நொடியில் எல்லாரும் தப்பி, ஊர் சேர, சுபம் போடுவதற்குப் பதிலாக ஆழமான முத்ததுடன் படம் முடியும். இதே மாதிரி ஜேசன் அண்ட் தி அர்கோநாட்ஸ் என்று ஒரு படம். கிரேக்க புராணக் கதை, நான் முதலில் பார்த்து விட்டு லாலா மணிக்குச் சொன்னேன்.இரண்டாம் முறையாக அவனுடன் அதைப் பார்த்தேன்.
இந்த காலை காட்சிகளுக்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும்.எம்.ஏ.சார்வா என்கிற அருணாசல சார், எனக்கும் எங்கள் வீட்டுக்கும் நெருங்கின கனிவான மனிதர்.அத்தான் முறை, அவர் காலைக் காட்சியில் நல்ல படங்கள் பார்க்க வருவார். தமிழ் வாணனின் தீவிர ரசிகர். தமிழ் வாணனின் அவ்வளவு தொடர் கதைகளையும் அழகாக பைண்ட் செய்து வைத்திருப்பார்.தமிழ்வாணன் போலவே கருப்புக் கண்ணாடி அணிந்து புகைப்படம் எடுத்து வீட்டில் மாட்டியிருக்கும்.நிறைய பேர் இப்படி படம் எடுப்பது அப்போது ஒரு ஃபேஷன். ஏப்ரல் மாதம் வந்து விட்டால் போதும் கல்கண்டு பத்திரிக்கையில், தமிழ்வாணனை கழுதை போலோ குரங்கு போலோ கர்ர்ட்டூன் வரைந்து ரசிகர்கள் அனுப்புகிற `ஏப்ரல் ஃபூல்’ படங்களைப் போடுவார்.வித்தியாசமாக் இருக்கும்.வண்ணதாசனின் அண்ணன் கணபதி அருமையாய் படம் வரைவார், அவர் அனுப்பிய படம் ஒன்று கல்கண்டில் வந்திருந்தது., அதைப் பற்றி, எம்.ஏ சார் அத்தான், கேட்டார்கள், இது யாருப்பா, சிவசங்கரண்ணாச்சி மகனா, என்று. ஆமா என்றேன்,நானும் வரைஞ்சு அனுப்பியிருக்கென் என்றேன். சிரித்துக் கொண்டார்கள். அன்றுதான் நான் ரொம்ப நாளாகக் கேட்டு, தராமலே இருந்த துப்பாக்கி முனையில் பைண்ட் வால்யூமை தந்தார்கள்.அதுவரை சங்கர்லால் , கத்திரிக்காய், கமிஷனர் வகாப் வருகிற புத்தககங்கள் மட்டுமே தருவார். துப்பாக்கி முனையில் உண்மையிலேயே அருமையான துப்பறியும் நாவல்.(இப்போது ஜெயமோகன் எழுதுகிற கன்னி நிலம் படிக்கையில் ஏனோ அது நினைவுக்கு வருகிறது.)
காலைக் காட்சிக்கு இன்னும் சில 377-வது பிரிவுக் கிழவர்கள்/ஆட்கள் யாரையாவது அகப்பட்ட பையனைத் தள்ளிக் கொண்டு வருவார்கள்.அது அநேகமாக இனக் கவர்ச்சி கொப்பளிக்கிற படங்களாய் இருக்கும். இவர்கள் அநேகமா உயர் வகுப்பு டிக்கெட் போய் விடுவார்கள். அங்கே மூட்டைப் பூச்சியும் இவர்களும் தான் இருப்பார்கள்,வசதியாக அறுக்கலாம். இது அவர்களின் பரி பாஷை. தொண்டர் சன்னதி முக்கில் ஒரு கமிஷன் மண்டிக் காரர், அவரைக் கண்டாலே,பசங்க எவ்வளவு வீரமானவனா இருந்தாலும் ஓடிருவாங்க, பாலுன்னு ஒரு அண்ணன், அவன் ஒரு தசராவுக்கு சப்பரம் பாத்துகிட்டு இருக்கும் போது, கூட்டத்தோட கூட்டமா, யாரோ தொடையத் தடவிருக்காங்க கொஞ்ச நேரம் சும்மா இருந்துட்டானாம், கை வேகமா முன்னேறினதும் தான்,பின்னால பாத்துருக்கான், கமிஷன் கடை. சாமியும் வேண்டாம் சப்பரமும் வேண்டாம்ன்னு ஓடியே வந்துட்டான். இவ்வளவுக்கும் அண்ணனுக்கு கல்யாணம் ஆகிட்டு.

கூட்டமெல்லாம். பூமி டிக்கெட்டுக்குத் தான் இருக்கும். பூமி டிக்கெட்டில் படம் பார்க்க வருகிற விஸ்வநாத தாத்தா முதலில் செய்கிற காரியம் மேனேஜர் ரூமுக்குப் போய் படப் பெட்டியுடன், படத்தைப் பற்றி வருகிற சைனாப்சிஸ் கேட்டு வாங்கிப் படிக்கிறதுதான்.அவர் சொல்லித்தான் அப்படியொரு சமாசாரமே தெரியும்.GUNS OF BLACK WITCH என்றொரு படம். ஏல பேரப்புள்ள இதாம்ல உங்க ஆயிரத்தில் ஒருவன் படம் என்றார் அவர் கூட்டுறவு அதிகாரியாய் இருந்து ஓய்வு பெற்றவர்.இப்போதும் திருநெல்வேலி நகர கோஆப்பரேடிவ் அர்பன் பாங்கில் ஏஜண்டாக இருக்கிறார். அழகான எட்டுமுழ மல் வேஷ்டியும் வெள்ளைச் சட்டையும் நைஸ் துணியில் வல்லாட்டும் போட்டுக் கொண்டு வருவார்.ஆனாலும் தரை டிக்கெட்டுக்குத் தான் வருவார்.ஏல நாம பூமியிலதானலெ இருக்கோம்,அப்புறம் பூமி டிக்கெட் போறது என்ன தப்பு என்பார்.அவர் தான் பூமி டிக்கெட் என்கிற வார்த்தையை முதலில் சொல்லிக் கொடுத்தவர்.I CONFESS.என்றொரு ஹிச்காக் படம், அநேகமா இதுதாம்ல்லெ எம்சியாரு நடிக்கிற பரம பிதாவா இருக்கணும் என்றார். படகோட்டி படத்தை அடுத்து,சரவணா பிலிம்ஸ் வேலுமணி தயாரிப்பதாக அறிவித்த படம் மேக் அப் டெஸ்ட்டோட சரி,படம் வரவே இல்லை.எடுக்கவே இல்லை.நாங்கள் ரொம்ப ஆசையா இருந்தோம்.
கடைசியில் பார்த்தால் விசு தாத்தா எங்க மங்களா வீட்டுக்கெ குடி வந்துட்டார்.அப்பாவுக்கு அவர் வந்தது பற்றி சந்தோஷம். அந்த பேங்க்கில் ஈசியா கடன் வாங்கலாமே.அவருக்கு பொங்கிப் போட ஸ்ரீவைகுண்டம் பக்கமிருந்து அவருக்கு உறவினர் ஒரு அம்மா வந்தார்கள். அவர்களும் மூன்று பிள்ளைகளும்.இரண்டு பையன்கள். ஒருவன் என்னை விட ரெண்டு மூத்தவன், திருவடி,அடுத்து, செல்லப்பா என்னை விட ரெண்டு வயது சின்னவன்.இன்னொரு பெண். ஏழு எட்டு வயதிருக்கும்.அவரது கணவர், கருங்குளமோ, சிவகளையோ, ஒரு கிராமக் கணக்குப் பிள்ளை. அவர் வாராவாரம் ஞாயிறு மட்டும் வருவார்.ரொம்ப கலகலப்பான ஆள்.
தார்சாலில் வந்து, காலையில் உட்கார்ந்து கொள்ளுவார்.பெர்க்லி சிகரெட் குடிப்பார். சிகரெட் பெட்டியும், தீப்பெட்டியுமாகத் தான் உட்காருவார்.சிகரெட்டை இழுப்பாரே தவிர துளிப் புகை வெளியே விடமாட்டார்.ஆச்சரியமாக இருக்கும்.திருவடி இந்து காலேஜில் பி.யு.சி சேர்ந்தான். நான் ஒன்பது படித்துக் கொண்டிருந்தேன்.என்னை பார்த்ததுமே, வே தம்பியா புள்ள வாரும், செல்லப்பவுக்கு கணக்கே வர மாட்டெங்காமெ நீரு சொல்லிக் குடுமே, உம்ம பழைய நோட்டெல்லாம் வச்சுருக்கேறாமெ என்று சொல்லுவார். அப்புறம் ஒரு தம்.அது நுரையீரலுக்குள் முழுதுமாக குடியேறிய பின்னர் மறு பேச்சு. ஊரிலேர்ந்து வந்ததுமே உம்ம மதினி, உம்ம புராணத்தை ஆரமிச்சுருதாவே...நல்லவேளை வே, நான் முந்திட்டேன், இல்லென்னா உம்மத்தான் கட்டுவென்னு சொன்னாலும் சொல்லிருப்பா உங்க மதினி. என்று சொல்லிவிட்டு சிரிப்பார்.
எனக்கு கூச்சமா இருக்கும். மதினிக்கு முப்பத்திஐந்து வயதாவது இருக்கும். சுருட்டை முடி,மார்பின் ஒரு பக்கத்தை மூடவே தோன்றாதா என்று நமக்குத் தோன்றும். யாரோ சேக்காளிகள், ஒரு சமயம் `ஒன் சைடு பார்டர்’ என்று பேர் வைத்தார்கள்.அவர் சொல்லும் போதே சிரித்தபடி வாசலுக்கு வந்து விடுவாள். இப்ப கொழுந்தப் பிள்ளை ஓடீருவாரே....என்று சொல்லிய படி....புடிங்க அவரை என்பாள். அவர் சத்தமாகச் சிரிப்பார்.அவர் போட்டிருக்கும் காதுக் கடுக்கண் மின்னும். உண்மையிலெயே ஓடத்தான் தோன்றும்.அவளுக்கு காதுக்கு பின்னால் ஒரு சின்ன கட்டி மாதிரி ஒரு வீக்கம் இருக்கும். அது இல்லையென்றால் மதினி அழகுதானோ என்று சமயத்தில் தோன்றும்.அவர்கள் இருக்கும் போதுதான் சின்ன அக்கா கல்யாணம் நடந்தது. ரொம்ப ஒத்தாசை என்று வீட்டில் பேசிக் கொண்டார்கள்.அக்காவுக்கு சற்று சிறிய வயது.அந்த மதினி தான் அக்காவை சமாதானப் படுத்தியது.உன் வயசில எங்க பெரியவன் பள்ளிக்கூடம் போய்ட்டான் என்று.
திருவடியும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தீவிரமான தி.மு.க காரன்., நெல்லை நெடுமாறன், கே ஆர் பி மணிமொழியன், திருவை அண்ணாமலை, என்று எல்லா தி.மு.க பேச்சாளர்களெல்லாம் அவனுக்கு நல்ல அறிமுகம். பி.யு.சி, வழக்கம் போல் ஃபெயில். அப்புறம் கரை வேட்டியுடன் தான் அலைவான்.எப்படியோ கட்சி ஆட்சிக்கு வந்ததும், பொதுப் பணித்துறையில் ஒரு வேலை வாங்கி விட்டான். எனக்கு தெரிந்து கட்சியை வைத்து வேலை வாங்கியது அவன் ஒருத்தன் தான்.
ஒரு நாள் செல்லப்பா அம்மா, முற்றத்து மடையில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள். நான் அம்மாவிடம் போய்ச் சொன்னேன்..அம்மாவும் சமையல் சம்முவத்தாச்சியும் வேகமாய் வந்தார்கள்.அவளைக் கைத்தாங்கலாய் வீட்டுக்குள் கூட்டிப் போனார்கள்.சற்று நேரம் கழித்து நான் தயங்கித் தயங்கி உள்ளே போனேன். வாடிக் கிடந்தவள், இன்னா சித்தப்பன் வாராறே என்று சிரித்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தாள்.எனக்குப் புரியவில்லை. மார்பே மூடவில்லை, முந்தானை மடியில் கிடந்தது வயதானவர்கள் போல, பின் கொசுவம் வைத்துத்தான் சேலை கட்டுவாள்,.நன்றாக வியர்த்திருந்தது.சம்முவத்தாச்சி விசிறிக் கொண்டிருந்தாள்.. திருவடி உள்ளேதான், நின்று கொண்டிருந்தான்.எம்மா வேண்டாம் சொன்னாக் கேளு, அப்புறம் நான் என்ன செய்வேன்னு தெரியாது என்று மெதுவாக, ஆனால் கோபமாகச் சொன்னான்.சொல்லிக் கொண்டே மிதித்து விடுவது போல் அவள் அருகே வந்தான். எனக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. என்னவென்றும் புரியவில்லை.அவள்., அம்மாவை லேசாக கட்டிக் கொண்டாள். `எத்தே’ என்று அழத் தொடங்கினாள். அம்மா எப்போதும் போல் வாயில்லாப் பூச்சியாக நின்றாள்.
திருவடி விருட்டென்று வெளியே போனான். நானும் பின்னால் போனேன்.தெருவுக்கு வந்தோம், தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை. நல்ல உச்சி வெயில்.என்னப்பா ஏன் கோவமாருக்கே என்றேன். கேவலமாருக்குப்பா, இந்த வயசில புள்ள உண்டாகியிருக்கா,கலைச்சுருன்னு சொல்லுதேன் அழுதா என்றான்.எனக்கு புரிந்த மாதிரியும் இருந்தது. புரியவும் இல்லை.மேற்கொண்டு பேசுவதற்குள், யாரோ வந்து விடவே, யார்ட்டயும் சொல்ல வேண்டாம் என்றான். சொல்லவேயில்லை.
மறுநாளே மதினி ஊர்ருக்குப் போய்விட்டாள்.தாத்தவுக்குப் பொங்கிப் போட மதினியின் தங்கை மகள், சிந்து பூந்துறையிலிருந்து வந்தாள். விசாலாட்சி மூக்கும் முழியும் அழகாக இருந்தாள். உடலில் அங்கங்கே லேசாய் வெள்ளைத் தீற்றல்.லூகொடெர்மா.என் சம வயது தான்.நான் அவளுடன் சிநேகமானதும், அப்புறம் புறமடைத் தெருவிலிருந்து இன்னொரு தங்கை மகள் வந்ததும், நான் அவளுடன் பேசின போது இரண்டு பேரும் அடி பிடிச் சண்டை போட்டதெல்லாம் பெரிய கதை.அதோடு அவள் சிந்து பூந்துறை போய் விட்டாள்.விசுத் தாத்தா பாடுதான் சங்கடமாய் இருந்தது.ஒரு வழியாய் ஒரு ஆண் குழந்தையுடன் மதினி வந்து சேர்ந்தாள்.
சம்முவத்தாச்சியும் அம்மாவும் குசு குசுவென்று பேசிக் கொண்டிருந்தார்கள், யாச்சி, அன்னக்கே சொன்னாக நான் நம்பலை, இப்படி நடக்கும்ன்னு கேள்விப் பட்டிருக்கேன். ஆனா நெசந்தான் போல்ருக்கு.நான் அடுக்களைக்குள் நுழைந்ததும் பேச்சை நிறுத்தி விட்டார்கள்.
நான் வாசலுக்கு வந்த போது திருவடியின் அப்பா திண்ணையில் உட்கார்ந்திருந்தார். வே தம்பியாபுள்ள, குட்டி விஸ்வத்தைப் பாத்தேரா, உம்ம நினச்சுகிட்டே பெத்துருக்கா உங்க மதினி, உம்ம சாடைதாங்காங்க எல்லாரும், என்று சத்தமாக கடுக்கண் மின்ன சிரித்தார். எனக்கு திருவடி என்ன சொல்லுவானோன்னு இருந்தது. அவன் வீட்டுக்குள்ள இருக்கானா வெளியில போயிருக்கானா தெரியலை.இந்தாரும், ரெண்டு பயலுகளையும் காணலை, ஒரு பாக்கெட் பெர்க்லி சிகரெட் வாங்கீட்டு வாரும், என்று ஒரு ரூபாய்த் தாளை நீட்டினார்.வாங்கிக் கொண்டு தெருவைப் பார்த்து ஓடினேன், ஏதோ தப்பித்த மாதிரியில்..

3 comments:

துபாய் ராஜா said...

'பரமபிதா' பட ஸ்டில்கள் பற்றியும் எம்ஜியாருக்கு அந்த வேடம் மிகவும் பொருத்தமாக இருந்ததாகவும் எனது அப்பாவும் கூறியுள்ளார்.

நெல்லை மக்களை மகிழ்வித்த சென்ட்ரல்,ரத்னா,பார்வதி தியேட்டர்கள் எல்லாம் தற்போது ஆளில்லாமல் வெறுமையாக இருப்பதை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

மதினிகள் எல்லோருமே மர்மங்கள் நிறைந்தவர்கள் தான்.

குப்பன்.யாஹூ said...

நெல்லை பற்றிய பதிவிற்கு நன்றிகள் பல. இன்னும் நிறைய எழுத வேண்டுகிறேன். பேட்டை தி மு க என்ற வுடன், என் நினைவுகள் என் மாணவ காலத்தை நினைவு கூர்ந்தன. ஷேக் தாவூத், பொன் பசுங்கிளி போன்றோரை வைகோ வளர்த்த நேரம் அது. அப்போது கட்சியில் டி எ கே லச்சுமணன், டி பி எம் மைதீன்கான், சுப்பு ரத்னம், நம்பி, குட்டி, எ எழ எஸ், ஆவுடியாப்பன்.

வைகோ தான் பேட்டை பகுதியில் எத்தனை சைக்கிள் பேரணி, பொதுக்கூட்டம். செக்கடி, மீனட்சி திரை அரங்கு பக்கம்.

பேட்டை அருமையான ஊர். அதுவும் பேட்டை முதல் டவுன் வரும் வைழ்யும் அருமை, இப்போது அங்கும் வீடுகள் வர ஆரம்பித்து உள்ளன போல.

kalapria said...

நன்றி ராம்ஜி.1996-70 எனது இந்துக் கல்லூரி வாழ்க்கை அற்புதமானது.அங்கே கிடைத்த சுதந்திர உணர்வுதான் என் கவிதைகளின் அடி நாதம். கடந்த திங்கள் கிழமை வைக்கொ குட்டி எல்லோரையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது