Sunday, October 5, 2008

”தோளசைத்தங்கே நடம் புரிவாள்.......”

கொலு பொம்மைகள் வைப்பதெற்கென்றே அந்த பெரிய பீரோலை அப்பா செய்ததாக அம்மா சொல்லிக் கொண்டிருப்பாள்.மாடியின்- அதை மச்சு என்று சொல்வதுதான் வழக்கம்- கடைசிக் கட்டில் நடுவில் நிற்கும் சற்று பிரம்மாண்டமாய்....அந்தக் கட்டையே இரண்டாக பிரித்து இரண்டு அறைகள் போல ஆக்கி வைத்திருக்கும் பீரோல். அதை பெரும்பாலும் கொலு வரும் போதுதான் திறப்பார் அப்பா.அதற்குள் பெரிய மண் பொம்மைகள் தவிர, நிறைய சிறிய ஆனால் அபூர்வமான விளையட்டுச் சாமான்கள் இருக்கும்.அப்பா நடத்தி வந்த திருநெல்வேலி டெயிலரிங்க் ஹவுஸ்-மூடிய பின் சிங்கர் மிஷினில் உள்ள நல்ல உதிரிப் பாகங்கள் இருக்கும் ஜெர்மன் கத்திரிக்கோல்கள். கூர் மழுங்காமல் இரண்டு மூன்று இருக்கும்..(அதில் ஒன்றை 9.01.1972-ல் நீண்ட நாட்களாகக் கேட்டு வந்த கார்மேகம் டெயிலருக்கு விற்று எனக்கு எம்.எஸ் சி பீஸ் கட்டக் கொடுத்தார் 121 ரூபாய்க்கான அந்த ரசீது இன்னமும் திருக்குறள்(மு.வ) உரை நூலுக்குள் இருக்கிறது.குடும்பம் சிறுகச் சிறுக அழிந்து கொண்டிருந்த நேரம்..மொத்த நம்பிக்கையையும் என் மீது வைத்து ஒவ்வொன்றாகக் காலியாகிக் கொண்டிருந்தது வீடு.)
புரட்டாசி அம்மாவசை வந்ததுமே மச்சின் நடு ஹாலை தூத்துப் பெருக்கி மொழுகி எடுத்து வைத்து விடுவாள் அம்மா... திருமணமாகும் வரை அக்காதான் அந்த வேலையைச் செய்வாள். கொலுவே அவளுக்காகத்தான்.. நன்றாக ஹார்மோனியம் வாசிப்பாளாம். ஹார்மோனியத்திற் கென்று தனியாய் ஒரு மரப்பெட்டி. எனக்குத் தெரிந்து அது பெட்டிக்குள்ளேயேதான் இருந்தது. ஏதோஒரு கொலுவிற்கு யாரோ மாமியாத்துப் பொண் வாசித்து “குயிலே உனக்கனந்த கோடி நமஸ்காரம் குமரன் வரக் கூவுவாய்...” என்று பாடிய நினைவு... அநேகமாய் வி.எஸ். கிருஷ்ணன் அக்கா சிண்டாளுவாய் இருக்கும். அந்த ஆர்மோனியப் பெட்டியையும் அப்பா விற்க வேண்டிய சூழல் . அக்காவிற்குத் தெரியாது.. பெட்டி மட்டும் இருந்தது..நீண்ட நாள் கழித்து வந்திருந்த போது தெரிந்து கொண்டு ரொம்பவும் கோபப்பட்டாள்...அழுதாள்..அப்பா அமைதியாக இருந்தார். அவர் முகத்திலும் அழுகையின் ரேகைகள்..”ஏன் விக்கிறதுக்கு ஒன்னுமே இல்லையாங்கும்...ஏண்ட்ட சொல்லிருந்தா நானாவது குமார் அப்பாட்ட சொல்லி வாங்கியிருப்பேனே..” என்றாள் நானும் அப்பாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்...எனக்கு நான் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று தோன்றியது..பேசாமல் ஏதாவது வேலைக்குப் போயிருந்தால் இந்த சங்கடமெல்லாம் அப்பாவுக்கு இல்லாமலிருந்திருக்கும்...என்று ஒரு குற்ற உணர்ச்சி. இன்று வரை அது மறையவே இல்லை....அன்றும் சசி நினைவுக்கு வந்தாள்.. இன்றும்....
“வெற்றி அடைந்தவன் நான்
அதைக் கொண்டாட விடமாட்டாய்
நீ...”.என்ற.(Charles Ghasley)யின் கவிதை வரிகளினூடே அவளது அந்த நேரத்து முகம் இப்போது நினைவில் தோன்றுகிறது. ராமச் சந்திரனுக்கும் பிடித்த வரிகள் இவை.

அப்பா கொலு வைக்கும் அழகே தனி சில வீடுகளைப்போல் கொலுப்படி கிடையாது. மாடியின் நடு நாயகமான ஹாலின் நாலு வாசலின் எட்டு கதவுகளையும் கழற்றி எடுத்து எட்டு தட்டுக்களாயிற்று. இரண்டு அண்ணன்களின் இரண்டு சிறிய பீரோல். இரண்டும் இரட்டைப் பிள்ளை மாதிரி இருக்கும். இரண்டு மேஜைகள்...அப்புறம் இரட்டை அலமாரி, இரட்டை ஸ்டூல்கள் என்று எல்லாமே கச்சிதமாக இருக்கும்.அவற்றின் மீது கதவுகளைக் கவிழ்த்தி மேல் தட்டில் இரண்டு பிஸ்கட் டின்களை வைத்து ஒரு சிறிய பலகை ஒன்பது தட்டுக்களாயிற்று.இனித்தான் எனக்கு வேலை வரும் ஏற்கெனெவே பீரோலில் இருந்து எடுத்த பொம்மைகள் ஹாலில் ஓரமாய் தரையில் இருக்கும். அதை ஒவ்வொன்றாய் அப்பாவும் சின்ன அண்ணனும் எடுத்துத்தர பொடியனான நான் மேலே ஏறி அப்பபா சொல்கிற விதத்தில் வைப்பேன். எப்பவும் எல்லாத்துக்கும் டாப்பில தக்ஷிணா மூர்த்தி பொம்மை. அதன் அழகே தனி. வர்ணமும் வித்தியாசமானது.பள பளவென்றிருக்காது.. பன்ருட்டி பொம்மைகள் ...அப்பறம் அழகான வெள்ளை நிறத்தொரு பசு அதன் கன்று.....அடுத்த தட்டில் முப்பெரும் தேவியர் தங்கள் இணைகளுடன் பிரம்மா பொம்மை மட்டும் தனியா சற்று சிறியது. அடுத்த தட்டில் அஷ்ட லக்ஷ்மிகள் இவையும் அழகோ அழகாயிருக்கும்.அடுத்த தட்டில் தலைவர்கள் காந்தி, நேரு, படேல், போஸ். பாரதி. என்று இரண்டு போஸ் சிலைகள் இருந்தது... ஒன்று அப்பாவின் நண்பர் ஒரு I .N. A போராளி தந்தது...அப்பாவுக்கும் போஸை கொஞ்சம் பிடிக்கும் ஒரு வேளை அவர் காரணமோ என்னவோ.. அவர் நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியில் வேலை பார்த்தார்.. கணக்கு வழக்கு பரார்ப்பவராக அவரைப் பற்றி தனியே நிறைய எழுதலாம்....(ஆனால் இன்று ஒரு போஸ் பொம்மை கூட இல்லை மற்றவை சில இருக்கின்றன)

காலையில் ஆரம்பித்த இந்த வேலைகள் மதியம் ஒரு மணி வாக்கில் சரியாக முடியும். அப்பா அன்று ரொம்ப உற்சாகமாயிருப்பார். “ஏல கூலக்ககடை பஜார் முக்கில போய் சல்லிப் பக்கடா வாங்கிட்டு வாரியா என்பார் அந்தக் கடையிலதான் மத்யான நேரத்துக்கு பக்கடா கிடைக்கும்..(அதுக்கு அடுத்த பெட்டி கடையில தான் பின்னாளில் இஞ்சி அடித்து விட்டு தசராவுக்கு விடிய விடிய முழிச்சு பத்துப் பதினைந்து அம்மன் கோயில் போவோம். கடைசியாய் விடியப் போகிற ப்ரம்ம முஹூர்த்தத்தில் சப்பரம் பார்ப்போம் லாலா சத்திர முக்கில் பன்னிரண்டு சப்பரங்கள் ஒரே நேரத்தில் கூடி நிற்கும்...பார்க்க அற்புதமாயிருக்கும். அதைப் பார்க்கிற ஒவ்வொரு வரிடமும் எங்கெங்கு காணினும் சக்தியடா பாடல் வரிகள் மன்சுக்குள் ஓடும்.நம்ம வீட்டுத் தெய்வம் படப் பாடல். அதெல்லாம் அப்பா செத்ததுக்கு அப்புறம்) இல்லைன்னா போத்தி ஓட்டலிலேயே சூடா உருளக்கிழங்கு போண்டா போட்டிருப்பாங்க அதை வாங்கிட்டு வரச் சொல்லி மத்யானம் சாப்பாடுக்கு சேர்த்துக் கிடுவோம்.
(தொடரும்)

சிறுத்தொண்டம்
விடுமுறைக்கு
அக்கா தன் குழந்தைகளுடன்
வருவாள்

வெறுங்குழி துடைத்து
அடுத்த குழி: எதிர்க் குழியின்
முத்தள்ளுகிற
பால்லாங்குழி லாவகத்தோடு
சிதறிக் கிடக்கிற
வீடு நேர்ப்படும்
...... ....... ........ ......
...... ....... ......... ......
அக்காவின் ஆர்வம்
அவளின் ஆர்மோனியத்தையும்
விற்றுத் தின்றதிற்கான
நளினச் சீறலில்
சுருதியற்றுப் போகும்

உன் வேலையற்ற
பொழுதுகளின்
வழக்கமான சீறல் கூட
அவளிடம் பணிந்து
சிரிக்கும்

ஆனாலும்
தனக்கு பொங்கல்ப் படி
தர முடியாததை
மாமியார் சொன்னதாய்ச்
சொல்லி
உன் மூளையில் முளைத்த
மீசையை
இரக்கமின்றிச்
சுட்டெரிப்பாள்

என் தோழனே
‘அக்காக்களால்
பிரியங் கொட்ட
முடிகிறதே தவிர
பால் தர முடிகிறதில்லை’
(ஞான பீடம் –குறுங் காவியத்திலிருந்து)

1 comment:

இனியாள் said...

கொலு பற்றிய உங்கள் பதிவுகள் வெகு அற்புதம். அக்காகளின் பிரியங்களை சொல்லும் கவிதை அருமை. மதனி, சப்பரம், செக்காளி இன்னும் பல வார்த்தைகளை கேட்க நேர்கிற் போது இந்த சென்னையின் இயந்திர வாழ்வில் எவ்வளவு தொலைத்து கொண்டிருக்கிறோம் என்று புரிகிறது. எனக்கும் அம்பாசமுத்திரம் தான்.

Visitors