Saturday, September 27, 2008

ஒரு பத்தியில் எழுதுக

அழகான கையெழுத்தில் அந்தக் கேள்விகளுக்குப்பதில் எழுதி இருந்தேன். முதல்ப் பக்கத்தில் இரண்டு பதில்களும் புதிதாய் ஒரு டியூஷன் வாத்தியார் தயாரித்துக் கொடுத்தவை, அவரே நன்கு மனப்பாடம் செய்ய வைத்து எழுதிப் பார்த்ததுதான். நிறைய மார்க் (மதிப்பெண்) வரும் வி.எஸ். கிருஷ்ணனை இந்த முறை பீட் அடித்து விடலாம் என்று நினைத்திருந்தேன். பரீக்ஷை லீவு முடிஞ்சு முத நாள் பேப்பரைக் கொடுத்ததும் பார்த்தால் முதல்ப் பக்கம் முழுக்க சிவப்பு மையால் ஒரு குறுக்குக் கோடு மட்டும் போட்டு வைத்திருந்தது. மார்க் போடவே இல்லை. அது அரையாண்டுத் தேர்வு என்பதால் அடுத்த கிளாஸ் சார் தான் திருத்துவார். அதனால் கிளாஸ் வாத்தியார் மேல குத்தம் சொல்ல முடியாது . இருந்தாலும் அவர்ட்ட போய் கேட்டேன். ”ஏல பரமசிவம் பிள்ளை தான்ல்ல திருத்திருக்காரு போய் அவர்ட்ட கேட்டுட்டு வால” என்று அனுப்பினார். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் ரொம்ப சீனியர். அப்பாவுக்குக் கூட நல்ல நெருக்கம். அவர் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார்.. ஆங்கிலமும் சமூகவியலும் எடுப்பார்.பெரும்பாலும் கோபப் படாமல் வயசின் தன்மைக்கேற்ப சற்று நிதானமாகவே வகுப்புகளை நடத்துவார். எங்களுக்கு நீதி போதனை வகுப்புக்கு வருவார்.வெள்ளிக்கிழமை காலை கடைசி வகுப்பு. பசியும் தூக்கமுமாய்த்தான் அவர் வருவார்.
நாங்க அவரிடம் ஒவ்வொரு சமயமும் மாரல் கிளாஸில கதை கேட்டு தொந்தரவு பண்ணுவோம். ஏல சும்மாருங்கலே என்று தூங்கறதும் தெரியாம வகுப்பறையில் சத்தமும் கிளம்பிராமப் பாத்துகிறதில் கில்லாடி. நாங்க, சார் கதை சொல்லுங்க கதை சொல்லுங்க என்று நச்சரிப்போம்.ஏல பேசாம இருங்கலே....என்று சொல்லி விட்டு அசந்தாப்பல நாற்காலியில் சாய்ந்து கொள்ளுவார்.இல்லையென்றால் யார் கதை கேட்கிறோமோ அவனைப் பிடித்துக்கொள்ளுவார். ஏல நீ முதல்ல ஒரு கதை சொல்லுலெ என்பார் இல்லைன்னா நீ ஒரு பாட்டு படிலெ என்பார் அவன் நாணிக் கோணி உட்கார்ந்து விடுவான்.
நான் கையில் பேப்பருடன் வகுப்பு வாசலில் நிற்பதைப் பர்த்ததும் உள்ளே கூப்பிட்டார்.நான் ”சார் இதுக்கு மார்க்கே போடலை” என்றதும் பேப்பரைத்தூக்கி மூஞ்சியில் விட்டெறிந்து விட்டு போயி உங்க வாத்தியாரையே கேளுல என்று சத்தம் போடவும் அந்த கிளாஸ் பசங்க சிரிக்கவும் சரியா இருந்தது.கேவலாமாப் போச்சு எனக்கு. ஏதோ கனவு கண்டா வெளில சொல்லக் கூடாதுங்கற மாதிரி கிளாஸ்ல வந்து உக்காந்துகிட்டேன். எங்க கிளாஸ் வாத்தியாரும் ஒன்னும் கேட்கலை.எனக்கு ஞாபகமே இல்லை, அன்னிக்கி வெள்ளிகிழமைன்னு. காலையில கடேசிப் பீரியடுக்கு பரமசிவம் பிள்ளை சார்வா வந்தாங்க.எனக்குன்னா எரிச்சலும் கோவமும். இன்ன மட்டும்ன்னு இல்ல.கிளாஸ் அமைதியாயிருந்தது....சார் கண்ணையும் தலையையும் அசைச்சு இந்தா அவனைப் பாருங்கல என்று என்னை நோக்கி சைகையாலேயே சொன்னார்.கிளாஸ் லேசாச் சிரிச்சுது. ஏல நீ இன்னக்கி ஒரு கதை சொல்லு இல்லேன்னா ஒரு பாட்டு பாடு என்றார்.எனக்கு அழுகை வராத குறைதான். பேசாம எந்திரிச்சு நின்னுகிட்டே இருந்தேன்.ஏல இங்கிலீஷ் பேப்பரை எடுத்துக் கிட்டு இங்க வாலேன்னார் நான் அருகே போனேன். ஏல என்னலே கேள்வியில கேட்டிருக்கு......ரைட் எ பேராக்ராஃப் அபௌட் ஸிட்னி கார்ட்டன்னு தானல கேட்டிருக்கு. நீ இரண்டா எழுதியிருக்கியல. அர்த்தமிருக்கால....அதான் ஒரே கோடா போட்டுட்டேன். முழுப் பரீக்ஷை வரைக்கும் இதை மறக்க மாட்டேல்லா என்றார். எனக்கு மன்சு சமாதனமாகலை... சரி போனாப் போது....அஞ்சு மார்க் வச்சுக்க அழகா வேற எழுதியிருக்கே என்று தடியான பிரெஸிடெண்ட் பேனாவை எடுத்து அஞ்சு அஞ்சும் பத்து மார்க் போட்டார். அப்பவும் வி எஸ்கிருஷ்ணனை பீட் பண்ண முடியல(அவனை யாருமே பீட் பண்ணலை 600 க்கு 516 மார்க் வாங்கியிருந்தான். நான் 378 மட்டும்)அதை இன்றும் மறக்கலை குழந்தைகளுக்கும் சொல்லுகிறேன் எ பேரக்ராஃப்ன்னா ஒரு பேராதான் எழுதனும்ன்னு.

ஞாவகமா அடுத்த பேராவுக்குப் போயிர்றேன்....இது வேற மாதிரி விஷயம்.....கொஞ்சம் உற்சாகம் வந்துது. ஏல இப்ப சுகமா இருக்கா என்றார்.பரமசிவம்பிள்ளை சார். கேட்ட உடனேயே இன்னொரு கேள்வி கேட்டார்உலகத்திலேயேஎதுசுகம்ல என்று.சரீ கதை ஏதோ ஆரம்பமாகப் போகுது என்று தோன்றி உற்சாகம் தொற்றத் தொடங்கியது வகுப்புக்குள். ராஜா கிருஷ்ண தேவராய மஹாராஜாவுக்கு இப்படி ஒரு கேள்வி தோனுச்சு.சபையோரைப் பார்த்துக் கேட்டார் ஆமா உலகத்திலேயே எது ரொம்ப சுகமான விஷயம்ன்னு ஒருத்தர் கடவுளை துதித்துக் கொண்டு இருப்பதே சுகம்ன்னார். அப்பாஜி ஏழையின் சிரிப்பு தான் சுகமான விஷயம்ன்னார்...இன்னொரு மந்திரி நல்ல காவியங்களைப் படிக்கிறது சுகம்ன்னார் இன்னொரு புலவர் நல்ல நிலாவில அழகான அப்ஸரஸ் கூட சப்ர மஞ்சக் கூடத்துல சயனம் பண்றது சுகமோ சுகம்ன்னார்.....தெனாலி ராமன் முறை வந்தது.......அவன் அமைதியாயிருந்தான்.....அவன் சத்தம் போடாம இருந்தா ஏதோ ...வில்லங்கமாச் சொல்லப் போறான்னு எல்லாருக்கும் தோனுச்சுல...அது மாதிரியிலே அவன், ராசா திரும்பத் திரும்ப கேட்டதும் சொன்னாம் பாரு. சபையே மூக்கைப் பொத்திக்கிட்டு.....அவன் சொன்னான் ராஜா, உலகத்திலேயே கொல்லைக்கிப் போறதுதான் சுகம் அப்படீன்னு...ராஜாவுக்கு கோவம் சண்டாளமா வந்துட்டு....இந்த மாதிரி பேசறத நீ விடவே மாட்டியா என்று சத்தம் போட்டார். இல்ல ராசா எனக்கு கொஞ்சம் அவகாசம் தாங்க...ன்னு சொல்லீட்டு சபையிடம் மன்னிப்பு கேட்டுட்டு பின்னாலயே நகர்ந்து வெளியே போய்ட்டான்.தெனாலி ராமன் பெரிய ஆளுலே....சபைக்கே வரலை கொஞ்ச நாளைக்கி. ராஜாவுக்கு தேட்டம் கொடுத்துட்டு ...அவனைக் கூட்டியாங்கலே என்று ஆணை போட்டார். அவனும் வந்தான்...வரும் போதே ரொம்ப வருத்தமாஇருக்கற மாதிரி முகத்தை வச்சுக்கிட்டான்....அதாம்ல்ல அவன் கெட்டிக்காரத்தனம்.
ராஜா, குசலமெல்லாம் விசாரிச்சாரு. இவனும் நல்லாப் பதிலெல்லாம் சொல்லிட்டு..ராஜாட்ட சொல்லுவான். ‘ராஜா இந்த ஏழை வீட்டுக்கு நாளைக்கி விருந்துக்கு வரனும் அப்பத்தான் எம்மேல உங்களுக்கு கோவம் இல்லேன்னு அர்த்தம்’ அப்படீன்னான் ராஜா உருகிப்போய் அப்படியேன்னார்.

மறு நாள் தட புடலா ஏற்பாடு நடக்கு.ராஜா கொடுத்த புதூ வீடு.மூனு மாடி வீடு.... மத்தியானம் ராஜா வந்து இற்ங்கினாரு.. பிரமாதமான சாப்பாடு...நல்லா சாப்பிட்டார். ராமன் கூட பேசிக் கொண்டிருந்தார்.. ராமன் சொன்னான் ராஜா ராஜாங்கம் ராஜாங்கம்ன்னு ஒரே வேலை உங்களுக்கு இன்னிக்கு கொஞ்சம் நல்லா ஓய்வெடுங்க...இதுவும் உங்க வீடுதானே மகாராஜா அப்படீன்னான்.ராஜாவும் சரீன்னார். ராஜாவை மூனாவது மாடிக்கு அழைத்துச் சென்றான்..ஒரு அறையில் நல்ல ஏற்பாடெல்லாம் பண்ணி தயாராய் இருந்தது... ராஜா கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனார். இவன் நைசா வெளிய வந்து கதவைப் பூட்டி அங்கன காவலுக்கு இருந்தவங்க கிட்ட ராஜா நல்லா துங்கறதுக்காகவே இங்க வந்திருக்காரு..அவர தொந்தரவு பண்ணாதிங்க அவரா கூப்பிட்ட பிறகு என்னயக் கூப்பிடுங்க நன் வந்து திறக்கிறேன்....னு சொல்லீட்டு கிழே போய்ட்டான்..கொஞ்ச நேரம் ஆச்சு. ராஜாவுக்கு வயிறு கட முடாங்கு..சமாளிச்சுப் பாக்காரு முடியலை...தெனாலி ராமன் சாப்பாட்டில எல்லாத்திலையும் கொஞ்சம் கொஞ்சம் விளக்கெண்ணைய சேர்த்திருந்தான்..அதான் இப்ப வேலையக் காமிக்க ஆரம்பிச்சுது.ராஜா கதவைத்தட்டி காவக்காரனைக் கூப்பிட்டு கதவைத் திறங்கடா ன்னாரு..சாவி ராமன்ட்டல்லா இருக்கு...ஒரு ஆள் ஒடிப் போய் சொன்னான். ராமன் சௌகரியமா வாரான்.வந்து மெதுவா கதவைத் திறக்கான்...ராஜா பதட்டமா விஷயத்தச் சொல்லி கக்கூஸ் எங்கடாங்காரு .அப்படியா ராஜா வாங்க வாங்கன்னு கீழ கூட்டிட்டுப் போறான் அதுவும் சுத்திச் சுத்தி புறவாசலுக்கு கூட்டிட்டுப் போய் கக்கூஸில கொண்டு போய் விட்டான் ராஜா உள்ளே ஓடியே போய் சரியா தாழ்ப்பாள் கூடப் போடாம காரிய்த்தைக் கவனிக்காரு.ராமன் வெளியே இருந்து மெதுவாக் கேட்டான் ராஜா எப்படியிருக்கு..அப்படின்னு ராஜா சொன்னாரு ரொம்ப சொகமாருக்கப்பா அப்படீன்னு......கிளாஸ்ல் குபீர்ன்னு சிரிப்பு பக்கத்துக் கிளாஸெல்லாம் என்ன என்ன அப்படீன்னு கேக்கறமாதிரி ஆயிட்டு..நல்ல வேளை மதியம்ரீசஸுக்கு பெல் அடிச்ச்சுட்டு..
சாரை காலையில் புட்டாரத்தி அம்மன் கோயில்ல பாத்தா அப்படி உருக்கமா பாடி சாமி கும்பிடுவாரு.இந்த மனுஷனா இப்ப்டி கதையெல்லம் சொல்லுதாருன்னும் தோனும்.....அந்த பதினாறு வயசுகளில் அப்படி அழகான மனுஷர்களையும் இப்ப்டிக் கதைகளையும் கேட்டுத்தானோ என்னவோ
அதென் அசிங்கங்களுக்கான அழகான கவிதை....என்று எழுதினேனோ என்னவோ. யார் கண்டது.

1 comment:

இனியாள் said...

en appavin palli kathaigalai ketkira unarvu enakul...... intha pathivukaga ungalukku nadri udaivalakiren.

Visitors