அந்த வயதுக்கு அவ்வளவு விஷயங்கள் அதிகமோ அதிகம் என்று தோன்றுகிறது.ஆனாலும் முழுதுமாக வெம்பி விடாமல் எதோ (ஏதோ இல்லை) ஒரு சக்தி காப்பாற்றி வந்திருப்பதாகவே படுகிறது.சேர்மானம் சரியில்லாமல் கெட்டுப் போகாம அப்பப்ப ஒரு ராக்கெட் என்னிலிருந்து கழன்று சுமாரான சுற்று வட்டப் பாதையில் ஆளைக் கொண்டு செலுத்தியிருக்கிறது.ஆனலும் சில சங்கதிகளை நினைச்சுப் பார்த்தா வெட்கம் பிடுங்கித் திங்கத்தான் செய்யும். சங்கரநாராயணன், ஆள் நரம்பு மாதிரி இருப்பான்..நல்லாப் படிப்பான்.ஆனா அவனுக்கு எங்கே இருந்து விஷயங்கள் தெரியுமோ.... காலைலே பாடசாலைக்கு வந்ததுமே வாய்ப்பாடு கிளாஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால ரீசஸ் போக ரெண்டு பேரும் போகும் போது ஏதாவது ஆரம்பிச்சுருவான்.ஏல பொம்பளைங்க பழைய துணியெல்லாம் சதுரஞ் சதுரமா கிழிச்சு வச்சுருப்பாங்க தெரியுமால என்பான். விடை சொல்றதுக்கு முன்னால மணியடிச்சுரும்,,, வாய்ப்பாடு கிளாஸ் ஆரம்பிச்சுரும்.சீக்கிரம் போனா சின்ன வாய்ப்பாடா சொல்லி தப்பிச்சிரலாம். ஆறாம் வாய்ப்பாடு வரைக்கும் ரொம்பக் கஷ்டமில்லை பத்தாம் வாய்ப்பாடுன்னா ஈஸி. ஒரு நாள் பதிமூணாம் வாய்ப்பாடு சொல்லும்படியாயிட்டு.வாய்ப்பாடு சொல்றதுன்னா, மொத்த ஸ்கூலும் உக்காந்திருக்கும், நாம மட்டும் எந்திரிச்சி நின்னு ஒரு பதிமூனு பதிமூனுன்னு சொன்னா மத்த பிள்ளைகளெல்லாம் பின்னாலாயே சொல்லும். பத்து பதிமூனு நூத்தி முப்பது சொல்லியாச்சு....பதினோரு பதிமூனு......திக்க ஆரம்பிச்ச சமயம் சங்கர நாராயணன் காலுக்கு அருகிலிருந்து நூத்திநாப்பத்தி மூனு என்று சொல்லிக் கொடுத்தான். பிடிச்சது வினை.வாத்தியார் ஏல நீ சொல்லுலே இன்னமே என்று என்னை உட்கார வைத்து விட்டு அவனை எழுப்பி விட்டார்...காணாததுக்கு பத்து தடவை எழுதிட்டுவரணும்ன்னார் எனக்கு சிரிப்பாணிய அடக்க முடியல.கக்கா பிக்கான்னு சிரிக்கவும் வாத்தியார் நீ பதிமூனு தடவை எழுதிட்டு வாலேன்னார்.எல்லாரும் சிரிச்சாங்க. மூஞ்சி இஞ்சி தின்ன குரங்காயிட்டு எனக்கு. இப்ப நினைச்ச்சாலும் ஒரு மாதிரியா நளுக்குது. மீனாட்சி மட்டும் சிரிக்கவே இல்லை.இத்தனைக்கும் எப்பவும் சிரிச்ச முகம் அவளுக்கு அப்பவே மூக்குத்தி போட்டிருப்பா. நல்ல உயரமுங்கூட. நாராயணன் ரெண்டு மூனு நாள் பேசவே இல்லை....துணி விவகாரம் தெரிவது தள்ளிப்போனது. இப்பல்லாம் பத்தாம் வாய்ப்பாடு வரை தெரிஞ்சா போதுமே....இவ்வளவுக்கும் அப்போ நயா பைசா வந்தாச்சு.1957-ல் அது வந்த சமயம் தெப்பக் குளத்தெரு போத்தி டிரஷரியில் வேலை பார்த்தார், அப்பாவுக்கு சினேகிதம். நூறு, இரு நூறு ரூபாய்க்கு அப்பா புதூ சில்லரையா மாத்திட்டு வாந்தார். அப்பா வரும் வரை அன்றிரவு ரொம்ப நேரம் விழித்தே இருந்து விட்டு எப்படியோ தூங்கிப் போனேன். திடீர்ன்னு முழிச்சுப் பாத்தா எல்லாரும் பட்டாசலில் அமர்ந்து மஞ்சள் வெளிச்சத்தில் புது நாணயத்தை எண்ணியும் துழாவியும் பாத்துக்கிட்டுருக்காங்க...அம்மா மட்டும் தள்ளி இருந்து என்ன இது சல்லிய விட சிறுசால்ல இருக்கு என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்...அந்த மஞ்சள் வெளிச்சமும்..(அப்பல்லாம் டியூப் லைட் ஏது) செக்கச் சிவந்த ஒரு பைசாக்களும் தள்ளியே இருக்கிற அம்மாவும், நல்லா நினைவிருக்கு...அப்ப உள்ளது எதுதான் மறக்கும்....வகுப்பில் (மூனாம் வகுப்பு) சத்தம் கூடிப்போன ஒரு நாள் கடேசிப் பீரியடுல, சார், கிளாஸ்ஸையே மாத்தி விட்டார்..ஒரு ஆம்பிளப் பையன்..ஒரு பொம்பிளப் பிள்ளை..என்று உட்கார வைத்து விட்டார்...மீனாட்சிக்குப் பக்கத்தில் சங்கரநாராயணன். அவ உயரத்துக்கும் இவன் நறையான் மாதிரி இருக்கிறதுக்கும் ஏழாம் பொருத்தமாய் இருந்தது.மறு நாள் காலையில நாராயணன் சேக்கா போட்டு விட்டான். நைசா,”ஏடே மீனாக்ஷி பக்கத்துல நீ உக்காந்துக்கயேன் ”என்றான். தட்டமுடியவில்லை. எங்க மறுபடி பேசாம இருந்துருவானோன்னு பயம்தான்.ஆனாலும் வாத்தியார் என்னமுஞ் சொன்னா, என்ன செய்யறதுன்னும் யோசனைதான்.அவர் கண்டுக்கிடலை.மீனாட்சியும் ஒன்னும் சொல்லலை எனக்கும் அவ கிட்ட உட்கார்றது கூச்சமாய்த் தானிருந்தது.நானும் அவ அளவுக்கு உயரமானவனில்லை.மத்தியானம் பள்ளிக்கூடம் முடியப் போற நேரம். சங்கர நாராயணன் முகத்தை அஷ்ட கோணலா வச்சுகிட்டு எந்திரிச்சு சுட்டு விரலை கொஞ்சம் வளைச்சு சாரிடம் காமித்தான். அதுக்குள்ள மொத்த கிளாஸுமே கோரஸா சார் இவன் ஓன்னுக்கிருந்துட்டான் சார் என்று பாடியது..அவன் பாவப்பட்ட பையன். டிராயர் விறைப்பான துணியில் இருக்காது,,ட்ராயர் சுத்தமா நனைஞ்சு வகுப்பறையில் தரையில் ஒரு செம்புத் தண்ணியக் கவுத்தமாதிரி ஓடுது. சார் ஏல ஏல ஒடுல என்றதும் அவன் ஓடவும் பள்ளிக் கூட மணி வீட்டுக்கு விடவும் சரியா இருந்தது. மத்தியானம் மொத்த கிளாசையும் மீனாட்சி கழுவி விட்டுக் கொண்டிருந்தாள்.பயலை ஆளையே காணும்.மீனாக்ஷி மத்தியானம் சொன்னாள், நல்ல வேளைப்பா நீ பக்கத்துல உக்காந்திருந்தே என்று. மறுநாள் அப்பா புதிதாய் எடுத்திருந்த ராஜா ராணி வேஷ்டியைச் சுற்றியிருந்த தங்கத்தாளை அவளுக்கு கொடுத்தேன்.முன்பே அவள் சசியிடம் கேட்டு ஏமாந்திருந்தாள்.
1976 பொங்கலுக்கு ஊரும் தெருவும் தயாராகிக் கொண்டிருந்த சமயம் என் துயரங்களுக்கும் 26 வயசு முடிந்து போன சமயம்.நடுப்பகல் கழிந்து ஒரு மணி வாக்கில் தெருவில் ஆள் அரவமே இல்லை ஒரு இண்டர்வியூவுக்கு கிளம்பி பாதித்தெரு வந்திருப்பேன் இடது புறமிருந்து தெருவில் இணையும் ஒரு சின்னச் சந்திலிருந்து மீனாட்சி வந்தாள்.கையில் பழைய சேலைத் துணியில் வெயில் சற்றும் தாக்கி விடாமல் சுற்றிய, செம்பஞ்சுக் குழம்பிட்ட மாதிரி கால்கள் மட்டும் லேசாக வெளித் தெரியும் தன் சிசுவுடன் வந்தாள். திடீரென்று என்னைப் பார்த்ததில் நாணம் முகம் முழுக்க ரத்தம் பாய்ச்ச, பழைய சிரிப்பு மின்னலாய் சுழித்தது....பத்தொன்பது வருடங்கழித்து பழைய குரல் கேட்டது. ”பொம்பளப்பிள்ளை” என்று நான் கேட்காமாலே சொல்லி பதிலுக்கு காத்திராமல் தன் அம்மாவுடன் கடந்துபோனாள்.அவள் அம்மாவும் ஆமாய்யா என்று சொல்லிப் போனாள்.மனசுக்குள் சொல்ல முடியாத சந்தோஷம். அந்த வேலை கிடைத்து இன்று ஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.
அந்நியம்
அம்மாவின்
‘சகுனம் பார்த்துப் போ’
வாசல்ப் படியில் விட்டு விட்டு
தெருவுக்கு வந்த போது
நீ தங்கத் தாள் தந்து
வாத்சல்யம் கொட்டின
பால்ய கால ஸ்னேகிதி
பெயரிடப் படாத தன்
சிசுவுடன் எதிர்ப் படுவாள்
கண் முழுக்க
கானல்ப் பிரியம் குளமிடும்.
......................................................
.......................................................
(ஞான பீடம் –குறுங்காவியம்)
1976
2 comments:
அன்புள்ள கலாப்ரியா,
உங்கள் பதிவுகள் இப்போதுதான் சூடு பிடிக்கிறது. பேரறிஞர் அண்ணாவின் நூற்றண்டு விழாவுக்கு உங்கள் பதிவும் ஒரு நினைவுகளின் தடம். ஒவ்வொரு கவிதைக்குப் பின்னாலும் ஒரு நினைவு. இந்தப் பகுதியில் வெளியாகும் அஞ்சல்களை முன் அனுமதிப் பெற்று வெளியிடவும் என்பது posts என்பதற்கான மொழிபெயர்ப்பா? அதை பதிவுகள் என்று மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும். ஒரே ஊரில் இருந்து அடுத்த அடுத்த தெருவில் வாழ்ந்தால் பழைய ஸ்னேகிதங்களைப் எப்போதாவது பார்க்கலாம். பல மைல்கள் தாண்டி வந்த பிறகு அந்தச் சாத்தியங்களுக்கு இடமேயில்லை என்றான போது பழையத் தோழிகளைத் தேடிப் பிடித்துப் பார்த்தால் கூட சா கந்தசாமியின் தொலைந்து போனவர்கள் கதை சமய சந்தர்ப்பம் தெரியாமல் நினைவுக்கு வருகிறது. பெண்கள் ஒரு காலகட்டத்தில் நட்பு நட்பு என்று உயிரையே விடும் அளவுக்கு அன்பைக்கொட்டுவார்கள். பிறகு நட்பெல்லாம் வசதிக்கும் சந்தர்ப்பத்துக்கும் தேவையான போது மட்டும் என்று வட்டத்தை குறுக்கிக் கொண்டுவிடுவார்கள்.
வாரம் ஒருமுறையாவது உங்கள் வலைப்பூவில் பதிவுகளை போடவும்.
சித்ரா
Etharthamana pathivu ithu. Eppothume balyakathaigalai ketkira pothu oru alathiyana magilchi erpadukirathu.
Post a Comment