Wednesday, October 8, 2008


கொலு வைக்கும் வீடுகள் தெருவில் நாலைந்து உண்டு. கிழக்கிலிருந்து வந்தால். ”கிருஷ்ணன் வைத்த வீட்”டை விற்று விட்டு அவரது இன்னொரு சிறிய வீட்டில் குடியிருந்தார். அங்கே கொலு வைத்திருக்கும். அவர் வீட்டுக் கொலுவில் பொம்மைகள் ரொம்ப அற்புதமாகவும் பெரிதாகவும் இருக்கும். பார்த்தசாரதியும் அர்ஜுனனும் பொம்மையைச் சிலை என்றே சொல்லலாம். அது கொலுத் தட்டில் இருக்காது. சுவர்கள் கூடும் இடத்தில்(அதை மூலை என்று சொல்ல மனசு ஒப்ப மாட்டேங்கு.) ஒரு அழகான அரை வட்ட ஸ்டாண்டில் இருக்கும்.. அவர், கிருஷ்ணன் செட்டியார், நன்றாக வீணை வாசிப்பார்.வண்ணதாசன் வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு வீணை சார் உண்டு...அவரும் இவரும் ஒரு வருடம், அந்தக் கொலுவில் வாசித்துக் கொண்டிருந்தார்கள்....அப்போது எட்டோ ஒன்பதோ படித்துக் கொண்டிருந்தேன் என நினைவு. இசை பத்தியெல்லாம் ஒன்றும் தெரியாது...ஆனால் அந்த நாதம் இன்னும் நினைவில் ரீங்காரிக்கிறது. அதற்கு அடுத்த வீட்டில் ஒரு மதினி இருந்தார்கள்.. அவர்கள் அப்படியொரு சிகப்பு..வெள்ளிக்கிழமை காலையில் நான் விகடன் வாங்கி வரும் போது தெரு வாசலில் நின்றால் ஆசையாய்க் கேட்டு வாங்கி ஒரு புரட்டு புரட்டி விட்டுத் தருவாங்க. (அவங்களுக்கு நண்பர்கள் வைத்திருந்த பெயர் P.W.D-Pure White Department).அப்ப “கலங்கரைத் தெய்வம்” என்று ஒரு சரித்திர நாடகம் வந்து கொண்டிருந்தது..கோபுலுவின் படங்கள் நாடகத்தை விட அழகாக இருக்கும். அத்தி- ஆதி மந்தி கதை..இது என்ன மன்னாதி மன்னன் படக் கதை மாதிரி இருக்கே என்று கணபதி அண்ணனிடம்(வண்ணதாசனின் அண்ணன் பெயருக்கு ஏற்ற மாதிரி எங்கள் எழுத்துகள் எல்லாவற்றிற்கும் பிள்ளையார் சுழி போட்டது அவர்தான்.(ஓம் கஜானனம் பூத கணாதி ஸேவிதம்....) கேட்ட போது ஆமாம் கண்ணதாசனின் ஆட்டனத்தி கவிதை தான் மன்னாதி மன்னன் சினிமாக் கதை என்று சொன்ன நினைவு.P.W.D மதினி மற்ற நேரம்; தெரியாத மாதிரி நின்று கொண்டிருப்பாங்க...அவங்க வீட்டில் எல்லாரும் திராவிடர் கழகம்.பொட்டு ஒன்றும் வைக்க மாட்டார்கள் தெருவே திரண்டு ஆனித்திருவிழா சப்பரம் பார்க்க,. தெரு முனையில் அல்லது சந்திப் பிள்ளயார் முக்கில் கூடியிருக்கும்...இந்த மதினி மட்டும் வீட்டு வாசலிலேயே நின்று,ஒரு சலனமும் இல்லாம, போற வாற சனங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்..நம்ம சப்பரம் வேற எங்கேயோ போகுது. கொலுவுக்கு வருவோம்...
சாவடி வீட்டு கொலுவை சன்னல் வழியே மட்டும் பார்க்க முடியும். அவர்கள் வீட்டில்,கொலுவில் ஒரு தெப்பக் குளம் குட்டியாய், முன்னால் தரையில் இருக்கும். அது சுட்ட மண், தண்ணீர் விட்டு வைக்க முடியும் நடுவில் நீராழி மண்டபம். படிக்கட்டுகள் என்று கச்சிதமாய் இருக்கும். இன்னிய பாஷையில் சொன்னா ஒரு மினியேச்சர் தெப்பக் குளம்..அப்பறம் மில்லுப் பிள்ளை வீட்டுக் கொலு. அது எல்.எஸ்.மணி வீடு.தெருவிலேயே அவன் மட்டுந்தான் சிவாஜி ரசிகன்னு சொல்லலாம்.என்னோட தோள் மட்ட நண்பனும் இனிய சண்டைக்காரனும் அவன்தான்.அவர்கள் வீட்டில் எப்போதும் அவல் பொரிகடலை தான்..அதுவும் கடை(மில்) கணக்கப்பிள்ளை எல்லாரையும் முற்றத்தில் வரிசையாய் நிற்கச்சொல்லி ஒரே தரம் கொடுத்து அனுப்பி விடுவார்..எங்க வீட்டில் நிறைய கோலாட்டுக்கள் இருக்கும். கொலுவுக்கு வருகிற பெண்பிள்ளைகள் ஒன்றோ இரண்டோ பாட்டுப் பாடி கோலாட்டம் ஆடி விட்டு சுண்டல் வாங்கிப் போகும்ங்க...எவ்வளவு யோசிச்சும் பாட்டுக்கள் என்னன்னு ஞாபகம் வரமாட்டேங்கு. சில பிள்ளைகள் கோலாட்டக் குச்சிகளை தாங்களே கொண்டும் வரும்ங்க...அந்தப் பிள்ளைகள் எல்லாம் எங்க வீட்டு கோலாட்டை திரும்பி வச்சிட்டாங்களான்னு பாக்கிறது சின்னக்காவுக்கு தினசரித் தும்பம்.எனக்கு அவங்களுக்கு கொடுத்ததுக்கு அப்புறம் என் நண்பர்களுக்கு சுண்டல் மிஞ்சனுமேன்னு கவலையாயிருக்கும்..’அவங்க என்னலே பாடவா செய்யிதாங்க’ என்று அக்கா கேட்ட ஒருநாள் ஃப்ரெண்ட்ஸ் யாரோ இரண்டு பேர் “சத்தியமே லச்சியமாய்க் கொள்ளடா..தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா....”என்று குதிரைக் குளம்பொலி சத்தமெல்லாம் நாக்கை மடக்கி அடித்து கஷ்டப் பட்டு பாடும் போது,பாதியிலேயே போதும் நிறுத்துங்கடா என்று பெரிய அக்கா சிரித்தபடியே சொல்லி சுண்டல் கொடுத்து அனுப்பினாள்...
தெருவில் எல்லா வீட்டுக் கொலுவையும் பார்த்து முடிச்சுட்டு..கடைசியா தளவாய் முதலியார் வீட்டுக் கொலு. அங்கே கொலுப் பொம்மையெல்லாம் ஒன்னும் விசேஷமாய் இருக்காது..அதுவும் பெர்மனெண்டா அடுக்கி வச்சு ஒரு கம்பிக் கூண்டுக்குள்ள இருக்கும். நவராத்திரி இல்லாத சமயங்களில் சுத்தி திரை போட்டு வச்சிருக்கும்..வீடு அரண்மனை மாதிரிப் பெரிசு. பேரே மேல அரண்மனை தான். கீழ அரண்மனையிலும் கொலு உண்டு. அங்கே நாங்கள் போவதில்லை. மேல அரண்மனையில் கொலுவுக்கு பக்கத்திலேயே. வீட்டுக்குள்ளேயே பிள்ளையார் கோயிலும் உண்டு. அதுக்கு பூஜை செய்கிறவர்தான் கொலுவுக்கும் பூஜையெல்லாம் பண்ணி ராத்திரி ஒம்பது ஒம்பதரைக்கு சுண்டல் தருவார்..ஒரு பெரிய தாம்பாளம் நிறைய வச்சுக்கிட்டு குத்துக் குத்தா தருவாரு.அதுக்காக வேண்டி நாங்க ஒரு பெரிய கூட்டமே ஏழரை மணியிலிருந்து அங்கேயே விளையாடிக் கொண்டிருப்போம்.முதல்ல ஓடிப்பிடிச்சு விளையாடறது.. அப்புறம், கள்ளம் போலீஸ்...ஓடியாடிச்சலித்த பிறகு, வட்டமா உக்காந்து சினிமா பேர் போட்டு விளையாடறது...அதிலேயே ரெண்டு விதமான விளையாட்டு உண்டு.
ஒரு படத்தின் பெயருடைய முதல் எழுத்தை ஒருவன் ஆரம்பிக்க வேண்டும். அடுத்த எழுத்தை அடுத்தவன் சொல்ல வேண்டும். இரண்டாவது உள்ளவன் இவன் நினைத்த அல்லது நினக்காத படப்பெயரையே மாத்தி விடலாம்.முதலில் ஆ சொல்லப்பட்டிருக்கும்..அவன் ஆலயமணியை நினைத்து சொல்லியிருப்பான்..இரண்டாவது ஆள் ’யி’ என்பான்..மூன்றாவது ஆள் ’ர’ என்பான், விள்யாட்டு தொடரும்..நாலாவது ஆள் ’த்’ என்பான் ஏய் ஆயிரத்தில் ஒருவன் சொல்லியாச்சு...என்று கோரஸாக குரல் எழும்...நாலாலவது ஆள் வேறு ஏதாவது எழுத்து சொன்னால் அவுட் ஆக மாட்டான். அவுட் ஆனால் வட்டத்தை சுற்றி வர வேண்டும். முதலில் நினைத்த பெயரில் எத்தனை எழுத்தோ அத்தனை முறை சுற்ற வேண்டும்..பெரும்பாலும் ‘ஆ’ வில் ஆரம்பித்தால் ’ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி”யை நினைத்தேன் என்று வேண்டுமென்றே சொல்லுவோம்.அத்தனை (19)தரம் சுற்ற வேண்டும்.. அப்போது வேண்டுமென்றே வட்டத்தை அகற்றிக் கொள்வோம்...இந்த விளையாட்டுக்கு நான் சற்றுப் பேர் போனவன். சற்று அபூரவமான படப் பெயரெல்லாம் எனக்குத் தெரியும்..இதே மாதிரி இன்னொரு விளையாட்டு: படத்தின் முதல் எழுத்தையும் கடேசி எழுத்தையும் சொல்ல வேண்டும். படத்தின் முழுப்பெயரையும் எதிராளி சொல்ல வேண்டும். இதில் இரண்டு பேர் அல்லது இரண்டு குரூப் விளையாடுவோம்.”பாபு” என்றால் பாவமன்னிப்பு. ’பார்’ என்றால் பார் மகளே பார். இதில் மகேஸ்வரி (மரி) பாதைதெரியுது பார். இவன் அவனேதான், தங்கம் மனசு தங்கம். மணமுள்ள மறுதாரம்,பெற்ற ம்கனை விற்ற அன்னை, நகரத்தில் ஜிம்போ ,ஹனுமான் பாதாள விஜயம், பெற்றவள் கண்ட பெரு வாழ்வு, ஆண்டி பெற்ற செல்வம், அழகர் மலைக் கள்வன்,
இப்படி பேர்கள் எல்லாம் ஐயாவுக்குத்தான் அத்துப் படி...ஆனால் இந்த விளையாட்டை கொஞ்சம் பெரிய தலைகளெல்லாம் சீக்கிரமே கலைத்து விட்டு விடுவார்கள்..இல்லேன்னா சண்டை வ்ந்து விடும்..
தளவாய் முதலியார் வீட்டுக் கொலுவில் ரொம்ப சுவாரஸ்யமான விஷயமே சண்டை போட்டு பேசாமலிருப்பவர்களை சேர்த்து ”சேக்கா”போட வைப்பதுதான்.இதில் அப்பர் ரொம்ப கில்லாடி ரெண்டு பேரிடமும் தனித்தனியாய்ப் பேசி அழகாக negotiate பண்ணி வைப்பான். 1962 தீபாவளிக்கு மறுநாள் ’முத்து மண்டபம்’ படம் பார்க்கையில் உண்டான சண்டை..அதுவும் விக்கிரமாதித்தன் படம் டப்பா என்று எல் எஸ் மணி சொன்னதால் உண்டான சண்டை. இரண்டு வருடம் கழித்து புதிய பறவை வரும் வரை நான் அவனுடன் பேசவே இல்லை. இதக் கேள்விப் பட்ட அப்பர் உண்மையிலேயே துடித்துப் போய் விட்டான்.எப்படியோ இரண்டு பேரையும் சமாதானப் படுத்தி சேக்கா போட வைத்து விட்டான்.(.சேக்கா போட்ட மறுநாள் மாட்னி புதிய பறவை போனோம்) அதற்குப் பின் அவனுடன் சண்டை போட்டதே கிடையாது. தளவாய் வீட்டு கொலுவுக்கு பொம்பளைப் பிள்ளைங்க வராது. அதனால சமயத்தில பேச்சு,’கெட்ட வார்த்தை’ நோக்கிப் போயிரும்..இதிலும் அப்பர் கில்லாடி.
எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவில் தான் தளவாய் முதலியார் வீடு.அதே தெருவில் ராஜம்மா என்று ஒரு அழகான பொம்பளை. அவ ஒரு மாதிரி. ஆனா யாராவது ஒரே ஆள்ட்ட தான் இருப்பா. மர்க்கெட்ல பெரிய கமிஷன் வியாபாரி அவளை வைத்திருந்தார்...அவர் பைக் வெளியே நிற்கும் அதன் காற்றை ஒரு நாள் திறந்து விட்டு விட்டு ஓடினோம் அப்பரின் தலைமையில்.அன்று சுண்டல் வாங்கவில்லை..அப்படியே எங்கள் தெருவுக்கு ஓடி வந்து ஒரு நீள நடையில் உட்கார்ந்து கதை தொடர்ந்தது..ராஜம்மா, .மாடத்தெரு, சொக்கலிங்க முடுக்குத் தெரு (ஜி.நாகராஜனின் குறத்திமுடுக்கு இதுவாய்த்தான் இருக்கும்)க்களில் இதற்கென்றே இருக்கும் பெண்கள்.,என்று கதை நீண்டது.அப்பர் உய்ரமான பையன் டிராயர் சற்று நீளமாகப் போட்டிருப்பான்.பேச்சு முடியப் போகும் தருவாயில் டிராயர் பையிலிருந்து சினிமாப் பாட்டுப் புத்தகம் போல ஒரு புத்தகத்தை எடுத்தான்.”வாழு வாழ விடு ”- சரோஜா தேவி என்று போட்டிருந்தது. இதைப் பார்த்ததும் பழனி போல் அது பற்றிக் கேள்விப் பட்டிருந்தவர்கள் வாயில் எச்சில் ஊறாத குறையாய் எனக்கு எனக்கு என்று கேட்டர்கள். நான் அதுவரை அது பற்றிக் கேள்விப் பட்டிருக்க வில்லை.... அவன் யாருக்கும் தரவில்லை..பொதுவாகவே அப்பர் ரொம்ப பயந்தவனும் கூட அவன் வீடு அடுத்த தெருவில் இருக்கிறது. இருட்டி விட்டால் தனியே போக மாட்டான்.யாரையாவது துணைக்கு அழைப்பான். யாரும் வர மாட்டார்கள். ஏனென்றால் திரும்பும்போது தனியால்ல வரணும். அவனே பெருங்குரலெடுத்துப் பாடிக் கொண்டோ இரண்டு கைகளாலும் சொடக்குப் போட்டுக் கொண்டோ ஒரே ஓட்டமாய் ஒடி விடுவான்..அன்று மட்டும் அப்பரை வீட்டிற்குக் கொண்டு போய் விட எல்லாருக்கும் ஆசையாய் இருந்தது....ஒன்றிரண்டு பேர் புறப்படவும் செய்தார்கள்.
அநேகமாய் அதுதான் கொலுவுக்குப் போன கடைசி சீஸன்.அதன் பின் எல்லாருக்கும் வயது வந்து விட்ட்து. சரோஜா தேவி புஸ்தகங்கள் நிறையப் புழங்க ஆரம்பித்து விட்டது.கே ஆர் விஜயா, இன்னோரன்ன பிரபலங்கள் பெயரில் எல்லாம் புற்றீசல் போல் வரத்தொடங்கி விட்டது..ஆனாலும் முதல் புஸ்தகம் படித்த 64-65 த்ரில் வரவே வராது...அதற்கு முன்னேயே செல்வ கணப்தி, கல்யாணி அண்ணன் ஆகியோருடன் கலைப் பொன்னி வாங்கிப் படிப்போம். அதில் ”ராஜா”வின் வர்ணப் படங்கள் பிரசித்தம். மதுரையில் இருந்து வந்தது. சிவகாசியில் அட்டை அச்சடித்திருப்பார்கள். ராஜாவின் பொங்கல் வாழ்த்துக்களும் பிரபலம்.குமாரவேல் இண்டஸ்ட்ரீஸ் தயாரித்தது.கே. மாதவன் படம் போட்ட பொங்கல் வாழ்த்துக்கள் ரொம்ப அழகு..அதிலும் சகுந்தலை அருகில் பரதன் சிங்கக் குட்டிகளுடன் விளையாடுவது போன்ற படங்களும்.திராவிடர் திருநாள் என்ற எழுத்தும்...எனது நடுவுள்ள அண்ணனுக்கு(தி.க.மீனாக்ஷி சுந்தரம்) தூத்துக்குடி நணபர் ஒருவர் அனுப்புவார்.திராவிட நாடு திரவிடருக்கே என்று எழுதி ”சேது” என்று கையெழுத்து போட்டிருப்பார்.அண்ணன் என்னவோ ம.பொ.சியின் தமிழரசுக் கழக அனுதாபி தான்..
வீடும் க்ஷீணமடையத் தொடங்கி கொலு வைப்பதெல்லாம் நின்று போய் பொம்மைகளெல்லாம் பீரோலிலேயே அடைந்து கிடந்தது..பொம்மைகளைத் தவிர அதில் இருந்த எல்லாமுமே விற்கப் பட்டிருந்தன. பீரோல் பாதி காலியாகி விஸ்தாரமாய் இருந்தது. அப்பா சாகப் போகும் தருவாயில் கடைசி வருடம் பீரோலைத் திறந்து வைத்த மாதிரியே வைத்துபொம்மைகளை சுற்றி வைத்திருந்த துணிகளை மட்டும் நீக்கி அப்படியே கொலு வைத்தோம். (ஒவ்வொரு நாளும் ஒரு விதமாய் சுண்டலும் சித்ரான்னங்களும்கொலுவுக்குப் போட்ட வீடு) ஒரு கல்கண்டுத் துண்டு அல்லது அச்சு வெல்லம் வைத்து சாமியைப் பட்டினி போடாமல் வைத்தாள் அம்மா. நாங்கள் பட்டினிக்குப் பழகியிருந்தோம்.. நாளைநமதே படம் பார்த்து விட்டு அதே கையோடு மோதிரம் அடகு வைத்து கும்பகோணம் போய் சாமிமலையில் சுப்ரமணிய ராஜு கல்யாணம் முடித்து திரும்பும் போது அப்பாவின் பிணம்தான் வரவேற்றது.....

திறங்கெட்டு

கொலு வைக்கும்
வீடுகளில்
ஒருகுத்துச் சுண்டல்
அதிகம் கிடைக்குமென்று
தங்கையைத்
தூக்க முடியாமல்த்
தூக்கி வரும்
அக்காக் குழந்தைகள்

........ .......... .......
........ .......... ..... ..........

(உலகெல்லாம் சூரியன் -1992)

2 comments:

Babu Syed said...

சப்பரம், அழகாக...

Anonymous said...

பிரமாதம். உங்களது எழுத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். நிறைய பேச வேணடும். உங்களது மின்னஞ்சலை தெரிவிக்க முடியுமா.. அன்புடன் ராம்கி ramkij@gmail.com

Visitors