பாடல் பெறாத
பாடலாசிரியர்கள்.....
அவர் யாருடனும் பேசி யாரும் பார்த்ததில்லை. ’மெட்ராஸ்’ சட்டக் கல்லூரியில் படிக்கிறார்
என்பார்கள். பாதியில் விட்டு விட்டார் என்பார்கள். வருவதும் தெரியாது போவதும்
தெரியாது. சந்திப் பிள்ளையார் முக்கில் இருந்த மூன்று நான்கு ஷாப் கடைகளில் ஆண்டியப்ப
அண்ணாச்சி கடையில் மட்டும் எல்லா புத்தகங்களும் வரும். ஒரு அணா விலையில் கலைமகள்
கம்பெனியின் சினிமா பாட்டுப் புஸ்தகங்களும் கிடைக்கும். புத்தகங்களையும், பாட்டுப்
புஸ்தகங்களையும் நாலுக்கு நாலு மரச்சட்டம் ஒன்றில் நூல் கட்டித் தொங்க விட்டு
கிளிப் போட்டிருப்பார். அதற்கு அருகில்தான் வெற்றிலை அடுக்கிய தட்டும் இருக்கும்.
தினமும் வெற்றிலைக்காரர் வந்து தேவைப்படுகிற கவுளிகளை (கட்டுகளை) எடை போட்டு – அது என்னவோ 60களில்க் கூட பழைய
சேர், வீசை கணக்கில்தான் எடை போடுவார் அண்ணாச்சி- ஒன்னு போல வெற்றிலையக் காம்பு
அரிந்து, கை கொள்ளும் அளவு இலகளை எடுத்து தண்ணீரில் முக்கி, அதிகத் தண்ணீரை உதறி, சின்னத் தாம்பாளம் போன்ற தட்டில் வட்டமாக அடுக்குவதே
அவ்வளவு நறுவிசாய், பெண்கள் சேலைக் கொசுவம் மடிப்பது போல் அழகாயிருக்கும். நைசாக
நேற்றைய வெத்திலையையும் நடுவில் நுழைத்து அடுக்கி விடுவார். அவர் அடுக்குவதை
வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றால் என் மேல் கொஞ்சம் உதறுவார், ‘ வேய் மைனரு
எதையும் பெரிசாப் பார்த்து பயந்து சீர் தட்டியிருந்தாலும் சரியாப் போய்ரும் வே’ என்பார். ’அது என்ன பெருசு..”என்று கேட்டால், அருகே ரொம்ப காலமாகத் தொங்கும் ’என்னைப்பார்’ படப் பாட்டுப் புஸ்தகத்தில் மார்பு காட்டி நிற்கும் எல்.விஜயலட்சுமியைக்
கண்ணால் காட்டுவார். அண்னாச்சி, ’நீ நகரு போ போ,’ என்று என்னை விரட்டுவார். கூடவே, ’யோவ்
வெத்தலக்காரரே தெனமும் அந்தப் பாட்டுப் புஸ்தவத்தில பூராவும் தண்ணியத் தெளிச்சு
வைச்சா நான் என்னன்னு வித்து அழட்டும்..ஒரணா புஸ்தவத்தை வித்தா காலணா கெடைக்கும் .” என்று புலம்புவார். அநேகமாக லாயர் அண்ணாச்சி
வருகிற நேரமும் அதுவாகத்தான் இருக்கும்.
நாலரைமணி வாக்கில் போத்தி ஓட்டலில் காஃபி
சாப்பிட்டு விட்டு வருவார். புத்தகங்கள் வாங்கிக் கொண்டு போவார். பாட்டு
புஸ்தகங்களும் வாங்குவார். நான் பார்த்த அளவில் அவர் வழக்கமாக விகடன், குமுதம், கல்கண்டு வாங்குவார்.
ஒரு நாள் மட்டும் தாளில் பொதிந்து ஒரு புத்தகம் வாங்கிப் போனார். புத்தகச்
சட்டத்தைப் பார்த்தவுடன் அங்கே எது ‘மிஸ்’ ஆகியிருக்கிறது என்று கண்டு பிடித்து விட்டேன்.
‘கலைப்பொன்னி’. பதின் பருவ வயசு இருக்கும் எனக்கு. ஆனால் எங்களுக்கு ஞானஸ்னானம்
எப்போதோ நடந்து விட்டது. ஆச்சரியமாய் தெருவுக்கு வந்து சொன்னேன்,” நம்ம லாயர் அண்ணாச்சி கலைப்பொன்னி வாங்கிட்டுப் போறாருடா,”. சபையிலேயே மூத்தவரான் ஒருவர், “ அப்படியா, வாங்கலே” என்று அழைத்துக்கொண்டு போய் மார்க்கெட்
பக்கமிருக்கும் ’மகிழ்ச்சி மன்றம்’ கடையில் கலைப்பொன்னி வாங்கி வந்தார். கலைப்பொன்னி
கொஞ்சம் பலான பத்திரிகை. அதில் ‘ராஜா’ வரையும் கவர்ச்சி ஓவியங்கள் அழகாக இருக்கும்.
அதில் ஆடவர் அஞ்சல் என்று ஒரு பகுதி வரும். அதில் குட்டி குட்டியாக ’ஆடவர்கள்’ தங்கள் பலான அனுபவங்களை எழுதுவார்கள். பார்த்தால், ’ஹைதராபாத் காதலி’ என்ற தலைப்பில், ”நான் ஹைதராபாத்தில்
கட்டைப் பிரம்மச்சாரியாக வேலை பார்க்கும் போது....” என்று ஆரம்பித்து,
ஒரு ஆண்ட்டியை டாவ் அடித்த கதை ஒன்றை விட்டிருந்தார்,லாயர்
அண்ணாச்சி. ஏ.எஸ். சங்கரன். பி.ஏ.பி.எல், திருநெல்வேலி டவுண் என்று விலாசம் வேறு
தெளிவாக. ஒருத்தர் தலை மேல் ஒருத்தர் தலை நீட்டிப் படித்தோம். ஆச்சரியம் தாங்கலை.
லாயர் அண்ணாச்சி வீட்டில் மூன்று பேர்.
பெண்கள் கிடையாது. அப்பா, இரண்டு மகன்கள். அங்கே ஃபியெஸ்டா ரெக்கார்ட் ப்ளேயர்
புதுசாக ஒன்று உண்டு. லாயரின் அண்ணனுக்கு அப்போதைய எலக்ட்ரிக் பொருட்களில் ஆர்வம்
அதிகmmம். அநேகமாக முதல் டிரான்சிஸ்டர், டேப்ரெக்கார்டர் எல்லாம் அவர்தான்
வாங்கினார். வீட்டுக்குள்ளிருந்து ஒரு
நாள் அழகாக “தண்ணிலவு தேனிரைக்க” பாடல் மறுபடி மறுபடி தொடர்ந்து கேட்டுக்
கொண்டிருந்தது. வீட்டுக்கு வெளியே அழகான
திண்ணை meeமேல் க்ரீப்பர் நிழல் படர்ந்து இருக்கும். போகன் வில்லாக் கொடியும் மரம்
போலப் படர்ந்து அதிகக் குளிர்ச்சி தரும். நானும் கணவதி என்கிற சேக்காளியும் பாட்டு
கேட்டுக் கொண்டிருந்தோம். திடீரென்று தம்பிகளா உள்ள வாங்களேன்பா என்றார் லாயர்.
நானும் கணவதியும் அந்தப் பாட்டு யார் எழுதியது என்று சண்டை போட்டுக்
கொண்டிருந்தோம். கண்னதாசந்தாம்ல வேற எவன்லெ என்று சொல்லிக்கொண்டிருந்தான் கணவதி.
ஏனோ எனக்கு ஒப்பவில்லை. அபோதுதான் லாயர் கூப்பிட்டார். “அண்ணாச்சி அந்த
ரெக்கார்ட்ல என்ன போட்ருக்கு.’என்று கேட்ட படியே உள்ளே போனோம். மாயவநாதன்னு ஒருத்தர்
புதுசா எழுதிருக்கார் என்றார்.
’என்ன அவன் கண்ணதாசன்னு சாதிக்கானோ...
நீங்கள்ளாம் தி.மு.கா ல்லா என்னடே,’ என்றார். அப்போதும் கண்ணதாசன் தி.முகவில்தான் ஊசலாடிக்
கொண்டிருந்தார் என்று நினைவு. சம்பத் போய் விட்டார். இதனாலோ என்னவோ திருடாதே
படத்திற்குப் பின் கண்னதாசனை விட எம்.ஜி.ஆருக்கு மருதகாசி , சபாஷ் மாப்பிள்ளே
மாடப்புறா என நிறையப் படங்கள் எழுதினார்.பட்டுக்கோட்டையும் அப்போது இல்லை.ஆனால்
அரசிளங்குமரி போல ஏற்கெனவே பட்டுக்கோட்டை பாடல் எழுதிய படங்கள் வந்தன.கண்னதாசன் –சிவாஜி-பீம்சிங்-
விஸ்வநாதன் ராமமூர்த்தி- கூட்டணி திரையிசையைக் கலக்கிக் கொண்டிருந்த காலம். ராஜாக்
கதைகளை விட்டு சமூகக் கதைப்படங்களும் 1960லிருந்து தொடங்கின. சரித்திரப்
படங்களிலும் சரி,சமூகப் படங்களிலும் சரி 1960களுக்கு முன் ஒரு படத்தில் நிறையப்
பேர் பாடல் எழுதுவார்கள். பாடல்களும்
பத்துக்கு குறையாமலிருக்கும். 1960-61 லிருந்து கண்ணதாசன் முழு ஆக்கிரமிப்புச்
செய்தார். ஏழு பாடல்கள் என்பது செண்டிமெண்ட் மாதிரி ஆனது. திருடாதே படம் நீண்ட
நாளாக தயாரானது. அந்த சரோஜாதேவிக்கும் அதற்குப்பின் தயாராகி அதற்கு முன் வந்த
விடிவெள்ளி படத்தின் சரோஜாதேவிக்கும் உருவத்தில் அவ்வளவு வித்தியாசம்
இருக்கும்.திருடாதே படத்தில் ஐந்து ஆறு பேர் பாடல் எழுதியிருப்பார்கள். பட்டுக்
கோட்டை, கண்ணதாசன்,கு.சா. கிருஷ்ண மூர்த்தி,கு.மாபாலசுப்பிரமணியம், முத்துக்
கூத்தன், எம்.கே.ஆத்மனாதன் அப்புறம் பழனிச்சாமி என்று ஒருவர். இவரெல்லாம் என்ன
ஆனார் என்றே தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது இருக்கலாம்.
இடைகால் ஊரைச் சேர்ந்த மம்மது என்ற நண்பர் மிகச்சிறந்த தமிழிசை அறிஞர்.
அவருடன் பேசிக் கொண்டிருந்த போது ஒரு சம்பவம் சொன்னார். அவரது நண்பர் ராஜா
முகம்மது மற்றும் நண்பர்களுடன் தேர்ந்தெடுத்த அவைகளில் அவர் தமிழிசையை விளக்கும்
முகமாக சில நிகழ்ச்சிகள் நடத்துவார். அப்படி மதுரை அருகே கிராமத்தில் ஒரு நிகழ்ச்சியில்
தங்கரத்தினம் படத்தில் வரும், ‘சந்தனப் பொதிகையின் செந்தமிழ்ப் பெண்ணாள்......’ பாடலைப் பாடியதும் கடைசி வரிசையில் ஒருவர் ஆர்வமாகக் கவனித்தாராம். ரசிகர்கள்
ஒன்ஸ் மோர் கேட்க, சற்று இடைவெளி விட்டு அந்தப் பாடலை மறுபடி பாடிய போது அவர் முன்
வரிசைக்கு வந்து விட்டாராம். நிகழ்ச்சி முடிந்ததும் மம்மதுவிடம் தன்
பாராட்டுக்களைச் சொல்லிவிட்டுச் சொன்னாராம், இந்தப் பாடலை எழுதியது நான்தான் என்று.
அவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி. அதற்குப் பிறகு அவர்பாடல் எழுதவில்லயாம். தன் ஊருக்கே
வந்து, தான் எழுதிய ஒரு அற்புதமான பாடலைப் பாடிக் கேட்பது என்பது அவருக்கு
மகிழ்ச்சியாக இருந்திருக்குமா இல்லை... பதில் சொல்வது கடினம்.
இன்னொரு கிருஷ்ணமூர்த்தி உண்டு. கு.சா.கிருஷ்ணமூர்த்தி என்று 1960களுக்கு
முந்திய படங்கள் பலவற்றில் நிறைய எழுதியிருக்கிறார்..சிவாஜி எம்.ஜி.ஆர்
படங்களுக்கு எழுதியிருக்கிறார். 1980 வாக்கில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலையில்
நடக்கும் முதல்க் கவிதைக் கருத்தரங்கத்திற்கு என்னையும் அழைத்திருந்தார்கள்.
மேற்சொன்ன கு.சா.கி, புத்தனேரி சுப்ரமணியன், போன்றவர்களுடன் கோவை ஞானி,சி.சு
செல்லப்பா, ந.காமராசன்,மீரா என்று பல பேர். இறுதி நாளின் போது கோவை ஞானி, ‘மரபுக்
கவிதை செத்து விட்டது..’ என்று ஆரம்பித்து விளாசித் தள்ளி விட்டார். கு.சா.கி
யும் சுப்ரமனியமும் கடுமையாக எதிர்த்தார்கள். அப்புறம் சந்திக்கையில் பல்கலையின்
பதிவாளர் சொன்னார், “நீங்க எல்லாம் பேசிட்டுப் போயிட்டீங்க, அவர்கள் நேரா முதல்வர்
எம்.ஜி.ஆரிடம் போய் புகார் செய்து விட்டார்கள். எங்க தலையை உருட்டிட்டாங்க ” என்றார்.
கு.சா.கி யைப் போலவே கு.மா.பாலசுப்ரமணியம் பழைய காலத்தில் பல
படங்களுக்கு எழுதியுள்ளார்.கட்டபொம்மன் படத்தின் பாடல்கள் அனைத்தும்
அவரெழுதியதுதான்.கொஞ்சும் சலங்கையிலும். சிங்கார வேலனே தேவா என்ற பாடல் அவர்
எழுதியதுதான். ஒரே ஒரு பாடல் எழுதிப் பிரபலமுமான பின் வாய்ப்பு கிடைக்காமலோ எழுதாமலோ
போனவர்களில் ஏற்கெனவே ஒருவரைப் பார்த்தோம். அடுத்தவர்,
தொழிலாளி படத்தில் ‘கலை வந்த விதம் கேளு கண்ணே...’ பாடலெழுதிய
கூத்தன்பூண்டி சுந்தரம். அருமையான பாடல். இந்த வரிசையில் குடியிருந்த கோயிலில்
‘குங்குமப் பொட்டின் மங்கலம் ..’பாடல் எழுதிய ரோஷனரா பேகம் ஒருவர். யானைப்பாகன் படத்தில்
கோவை ‘குமாரதேவன்’ எழுதிய ’பதினாறும் நிறையாத பருவமங்கை..’ஒரு கிளாஸிக்
பாடல். அப்புறம் அவர் எழுதவேயில்லை போலும் . இன்னொரு கிளாசிக் பாடலான ‘எத்தனைக்
காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடலை எழுதிய கவிஞர் கோவை ஆனைமுத்து. ஆனால்
படத்தில் இவர் பெயர் இல்லை. எம்.ஜி.ஆர் நாடக மன்றத்திலிருந்து எழுத வந்ததில் முத்துக்
கூத்தனைப்போல ஆனால் அவரை விட சீனியர், கவி.இலக்குமணதாஸ். நாடோடிமன்னன் படத்தில்
இவர் எழுதிய “உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என்
தோழா...”மிகப் பிரமாதமான,பிரபலமானபாடல்.இந்தப் பாடலை
எம்.ஜி.ஆர். இன்னும் சிறப்பாக எழுதுங்கள் என்று இலக்குமண தாஸிடம் மேலும் மேலும்
சொல்ல, அவர் “ அண்ணேன் இதுக்கு மேல என்னால
முடியாதுண்ணேன், வேற யாரை வேணுன்னாலும் வச்சு எழுதிக்ககங்க...” என்று சொன்னாலும்.”இல்லை நீங்கதான் எழுதணும்...” என்று எழுத
வைத்தாராம். பாடல் இவ்வளவு திருப்தியாக வந்ததும் கவிராயர் அப்படியே உணர்ச்சி
வசப்பட்டு கண்ணீர் மல்க நின்றாராம்.அவரே நாடோடி மன்னன் வெற்றி விழா மலரில் சொல்லி
இருக்கிறார். நாடோடி மன்னனில் நாடோடி, மன்னனானதும் வாழ்த்திப் பாட, திராவிட
மொழிகளான நான்கு மொழிப் பாடல்கள் வரும். மலையாளம்- பாஸ்கரன், தெலுங்கு –
நாராயணபாபு, கன்னடம்- விஜயராகவலு, தமிழ்- சுரதா ஆகியோர் எழுதியிருப்பார்கள். பாரத
விலாஸ் படத்தில் வரும் பல மொழிப்பாடல் எல்லாமே வாலிதான். நீரும் நெருப்பும்
படத்தில் முறையே வயலார், கொசராஜு,விஜயநரசிம்மா. பல மொழிப் பாடல்கள்
எழுதியிருக்கிறார்கள்
ஒரு பாடல் எழுதியதாகத் தெரிய வருவோருள் ‘உன்னைப் போல் ஒருவன்’(கமல்) படத்தில் எழுதிய மனுஷ்யபுத்திரனைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அவர்
தொடர்ந்து எழுதும் சாத்தியங்களும் அவசியங்களும் இன்னும் அடை பட்டு விடவில்லை.
கவிஞர் சிற்பி கிழக்கே போகும் ரயில் படத்திற்காக எழுதிய ’மலர்களே நாதஸ்வரங்கள்...’பாடல் படத்தில்
இடம் பெறவில்லை. ஆனால் அவர் எழுதிய ‘ சின்னஞ்சிறு துளியில் ஒரு உலகம்
உருவாகும்....என் சிந்தை இனி கங்கா நதி பொங்கும் இடமாகும்..” என்கிற வரிகள்தான்
கதாநாயகனுக்கு பாடலாசிரியன் வாய்ப்பையே வாங்கித் தரும். சிற்பியின் சக
வானம்பாடியான மு.மேத்தா பல படங்களுக்கு நல்ல பாடல்களெழுதினார். இயக்குநராகும்
ஆசையில் அதைப் பலி கொடுத்து விட்டார். இலக்கியவாதியாக இருந்து பாடல் எழுதியவர்கள்
வரிசையில் நா.காமராசன் முக்கியமானவர். ஜெயகாந்தன், பாதை தெரியுது பார் படத்தில்
எழுதினார்.பின்னர் அவரது கதைகள் படம் எடுக்கப்படும் போதும் யருக்காக அழுதான்,
சிலநேரங்களில் சில மனிதர்கள் போன்றவற்றில் எழுதினார். கல்கி மீராவில், வசனத்துடன்
காற்றினிலே வரும் கீதம் பாடல் எழுதியிருக்கிறார். புலமைப்பித்தன் எம்.ஜி.ஆர்
படங்கள் மூலமாக சிறப்பாகப் பாடல் எழுதி பல்வேறு படங்களுக்கும் எழுதியது போல
நா.காமராசன் எழுதவில்லை. புலமைப்பித்தன் போலவே முத்துலிங்கம் எல்லோருக்கும்
எழுதினார்.இருவரும் கண்ணதாசன் போல அரசவைக் கவிஞராக வேறு இருந்தார்கள். தமிழ்
நாட்டின் முதல் அரசவைக் கவிஞரான நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் பாடல்,
“தமிழனென்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு.....” அவரது கதையை
வைத்து எடுக்கப்பட்ட மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்றது. ஆர்.எம். வீரப்பன்
எம்.ஜி.ஆரின் அணுக்கமானவரான வித்வான்.வே.லட்சுமணன்,ச்த்யா மூவீஸ் படங்களுக்கு
உரையாடலும் பாடலும் எழுதியிருக்கிறார்.
அவரே வீணை எஸ் பாலச்சந்தர் படங்களான அவனா இவன்,’பொம்மை’படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதியுள்ளார்..’நீயும் பொம்மை
நானும் பொம்மை...’பாடல் –ஜேசுதாஸின் முதல்ப் பாடல்,பிரபலமானது.அப்புறம்
அவரே மணியனுடன் சேர்ந்து தயாரிப்பாளராகி விட்டார். அதைவிட எம்.ஜி.ஆருக்கு மட்டுமே
ஆஸ்தான ஜோஸ்யராக இருந்தவர் பிரபல ‘பால ஜோசியராகியும் விட்டார்.
கலைஞர் கதை வசனத்துடன் பராசக்தி தொடங்கி சில படங்களில் பாடல்
எழுதியுள்ளார். காகித ஓடம் கடலலை மேலே... வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற
பாடம்..என்று சில முத்துகள். பின்னது மாயவனாதன் எழுத வராததால் எழுதியது
என்பார்கள். அற்புதமான கவிஞனான மாயவநாதன் குடியால் அழிந்ததாகச் சொல்வார்கள். அப்படி ஆன இன்னொருவர் கம்பதாசன். அக்பர்- மொகலே
ஆஜம் தமிழ் - படத்தின் ’ வசனம் பாடல்கள் அற்புதமானவை. ’கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே’ பாடல் அப்படி உருகவைக்கும். பிரபல வசனகர்த்தா அபூர்வமாகப் பாடல் எழுதிய
பட்டியலில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஒருவர். முதலில் அவர் பாட்டு எழுத்த்தான்
வந்தார் என்றும் சொல்லுவார்கள். தெய்வப்பிறவி போன்ற படங்களில் வசனத்துடன் பாடலும்
எழுதியுள்ளார்.
பிரமாதமாக வருவாரென்று எதிர்பார்க்கப்பட்ட
சிலர் ஒன்றிரண்டு படங்களோடு வாய்ப்பின்றிப் போய் விடுகிறார்கள்.பூவை செங்குட்டுவன்
அதில் ஒருவர். திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், ’நான் உங்கள்
வீட்டுப் பிள்ளை போல....’ என சிவாஜி எம்.ஜி.ஆர் படங்களில் எழுதியும் மேலே
வரமுடியாமல் போனது சோகம்தான். இதே போல் பல எம்.ஜி.ஆர்.படங்களில் பாடல்களும்,உதவி
இயக்கமும் செய்த கவிஞர் நெ..ம.முத்துக்கூத்தன், நல்ல துணை நடிகரும் கூட ,சோபிக்க
விடவில்லை விதி என்றுதான் சொல்ல வேண்டும். நடிகர்கள் பாடல் எழுதியதில்
கே.டி.சந்தானம், - ரகசிய போலீஸ் 115 நினைவில் நிற்கும் ஒருபடம் - முக்கியமானவர். பல பாடல்கள் ஏ.பி நாகராஜனின்
பிந்திய படங்களில் நடிக்கவும் பாடல் எழுதவும் செய்துள்ளார். திருமலை தென்குமரி,வா
ராஜா வா போன்றவை சில உதாரணங்கள்.ஏ.பி.என் படங்களில் கவி கா.மு. ஷெரிப் எழுதியவை
மேதைமை நிறைந்தவை. திருவிளையாடலில் வருகிற பாட்டும் நானே, பார்த்தா பசுமரம்
இரண்டுமே இவர் எழுதியதாக சொல்லப் படுபவை. ஏ.பி.என்,சிவாஜியை விட்டு விலக ஆரம்பித்த
சமயங்களில், மேல் நாட்டு மருமகள் போன்ற படங்களில், நெல்லை அருள்மணி, உளுந்தூர்ப்
பேட்டை சண்முகம் ஆகியோர்கள் பாடல்கள் எழுதினார்கள். உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் பல
பக்திப் பாடல்களும் எழுதியவர். முனைவர் பட்டம் பெற்று அரசு அதிகாரியாக இருந்தவர்.
மேல் நாட்டு மருமகளில், உஷா உதுப் பாடிய ஒரு ஆங்கிலப் பாடலை நெல்லை அருள் மணி
எழுதியிருப்பதாக நினைவு. தேவி என்றொரு படம்.மலையாளத்தில் பிரபலமான காவிய மேளா
படத்தின் தமிழ்வடிவம். இசை மலையாளத்தின் அற்புதமான இசை இயக்குநர்
வி.தக்ஷிணாமூர்த்தி(சுவாமிகள்) தமிழிலும் அவர் தான் . பாடல்கள் அத்தனையும் தேனாய்
இனிக்கும் வரிகள் காவியத்தன்மை கொண்டவை. புலவர் வேதா போல் ஒரு பெயர். ஆனால் புலவர்
வேதா என்று ஒருவர் மிகப் பிரபலமான பாடல் எழுதியிருக்கிறார். அது அ.தி.மு.க வின்
இயக்க கீதம்(!) உ.சு.வாலிபன் படத்தில் வரும் நமது வெற்றியை நாளை சரித்திரம்
சொல்லும் பாடல்தான் அது. அவரது இன்னொரு (உ.சு.வா)
படத்தில் வராத பாடல்,’நினைக்கும் போதே தனக்குள் சிரிக்கும் மாது..”
தமிழ்ப் படங்களில் ஆங்கிலப் பாடல்கள் எழுத
வேண்டுமென்றால் உடனடியாக எல்லோரும் தேர்வது ’ரண்டார் கை’ அவர்களைத்தான். பாடுவதற்கு உஷா உதூப், எழுதுவதற்கு ரண்டார் கய்.
தவப்புதல்வன், (love is fine darling when you mind…) இதயக்கனி ( I’m gonna to tell you a story..”) இரண்டும் அவர் எழுதியவைதான்.
ராண்டார் கய் ஹிண்டுவில் பழைய படங்களைப் பற்றி நிறைய எழுதுகிறவர். மதன மாளிகை
படத்தில் ( under the mango
tree, on the banks of Cauvery….) அழகான
பாடலை எழுதியவர் அதன் இசை அமைப்பாளரான தோழர் எம்.பி. சீனிவாசன்.
இசையமைப்பாளர்களில் பாடல் எழுதிய இளையராஜா கங்கை அமரன் போன்ற தற்காலப் புலவர்கள்
பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ”வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார் போவார்
பூமியிலே வானத்து நிலவாய்ச் சிலர் இருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி ” என்று தொழிலாளி படத்தில் அருமையான பாடல் எழுதிய ஆலங்குடி சோமு சிறந்த
பாடலாசிரியர். 1959 களிலேயே எழுதியிருக்கிறார். பத்தாம் பசலி திரைப்படம் எடுத்து
வரிசையை இழந்து விட்டவர். அவினாசி மணி அடிமைப்பெண் போன்ற படங்களுக்கு பாடல் எழுதி,
லேடி எம்.ஜி.ஆர் என்று கோடம்பாக்கம் அழைத்த கே.ஆர்.விஜயா தயாரித்த, நடித்த படங்களையும் இயக்கினார். பாபனாசம் சிவன்
ஆரம்பித்து இன்றைய நா.முத்துக்குமார் வரை எத்தனையோ பாடலாசிரியர்கள் தமிழ்த்
திரையுலகில். சிலர் தோன்றியும் தோன்றாமலே போய் விட்டார்கள். பாடல் பெற்ற திருத்தலம், மங்களா சாஸனம் பெறாத
தலங்கள் போல. மாயவனாதன் அப்படி ஒருவர்.
லாயர் அண்ணாச்சி சொன்னதும்தான் தண்ணிலவு
தேனிறைக்க பாடல் மாயவனாதன் பாடல் என்று தெரிந்தது.அவரை நெருக்கமாகக் கவனித்தோம்.
தொழிலாளி படத்தில் அவரது பாடல்கள் பிரமாதமாய் அமைந்தது. சீக்கிரமே இறந்து விட்டார். அவரது ஊரான
பூலாங்குளம் – நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரத்திற்கு அருகில் உள்ள- கிராமத்தில்
அவருக்கு ஒரு சிலை வைத்திருக்கிறார்கள். லாயர்
அண்ணாச்சிக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. அவர் அறையில் ஒரு மேஜை மேல்
பாட்டுப் புஸ்தகங்களை அடுக்கிக் கட்டி வைத்திருந்தார்.அது போக நியூஸ்
பேப்பருக்குள் பொதிந்து கட்டுகளாகச் சில புத்தகங்கள் அலமாரியில் இருந்தன. நான்கு கண்கள்
அதைக் குறும்பும் திருட்டுத்தனமும் பொங்கப் பார்த்தன. தம்பி இந்தப் பாட்டுப்
புஸ்தகமெல்லாம் இடத்தை அடைச்சுட்டுக் கிடக்கு நீங்க வேணும்ன்னா எடுத்துக்குங்க,
இங்க கல்யாணத்திற்கு வீட்டை ஒதுங்க வைக்கப் போறாங்க....’ என்றார்.
அதையெல்லாம் எடுத்து வந்திருந்தால், இப்போது பெரிய பொக்கிஷமாக இருந்திருக்கும். நல்ல
சான்ஸை விட்டுட்டமே என்று எங்கள் அதிகப்பிரசிங்கித் தனத்தை இப்போது நினைத்தாலும்
வேடிக்கையும் ஏமாற்றமுமாய் இருக்கிறது .
ஆனால் நாங்கள் பிஞ்சில்
பழுத்தவர்களாயிற்றே..அந்த வயதிற்குள் கொஞ்ச சினிமாவா பாத்திருக்கோம். ””’’”அண்ணாச்சி அப்படியே அந்த கலைப் பொன்னி புஸ்தவங்களும் தாங்களேன்..’ என்று சொன்னதும் அவரது முகம் சுண்டி விட்டது. ஒருகணம் தான், நாங்கள்
sonnathu ஏதாவது சொல்லிச் சமாளிப்பதற்குள் ..”ஏய் நீங்க முதல்ல நடையக் கட்டுங்க... ஒங்களை
வீட்டுக்குள்ள விட்டதே தப்புல்லா...” என்று விரட்டாத குறையாகச் சொன்னார்.
1 comment:
சினிமா கதைகளை விட லாயர் அண்ணாச்சி கதை நல்லா இருக்கு.
Post a Comment