சின்னஞ்
சிறு உலகம்-கலாப்ரியா
இடது
கால் முட்டியில் ‘மைக்கூரு’-புண் வந்து வேதனை
கடுமையாக இருந்தது. மைக்கூரு எல்லாம் இப்போது சிறுவர்களுக்கு வருகிறதில்லை என்றே
நினைக்கிறேன். அந்தப் பாக்டீரீயாக்கள் காலத்தால் அழிந்திருக்கும். சிறிய கூம்பு
போல் கனத்து வீங்கி, நடுவில் காம்பு போல் மஞ்சளாகப் பழுத்து வலி ‘விண் விண்’ என்று தெறித்தது. சாயங்காலம் விளையாடக் கூடப் போகவில்லை. ராத்திரி நான் அணத்திய
அணத்தலைப் பொறுக்காமல்,அம்மா நடு ராத்திரியில் எழுந்து அதற்குப் பக்குவம்
பார்த்தாள். தலையிலிருந்து இரண்டு முடியை எடுத்து அதை தீயிலிட்டுக் கருக்கி
விளக்கெண்ணையில் கலந்து அதை இரும்புக் கரண்டியில் (ஆலக்கரண்டி) விட்டுத் திரும்பச்
சுட வைத்து இளஞ்சூட்டோடு புண்ணின் மீது தடவினாள். சூட்டினாலோ என்னவோ, கொஞ்சம் ’வெதனம்’ (வலி) கேட்டது போலிருந்தது. காலையில் அம்மாவே அப்பாவிடம்
சொல்லி விட்டாள்’ அவன், இன்னக்கி பள்ளிக்கூடம் போலேன்னா விடுங்க, சவம்
சின்ன மூதிட்ட போராடிக்கிட்டு நிக்காதீங்க’ என்று. போகவில்லை. கொஞ்சம் வீக்கமும் வலியும்
குறைந்திருந்தது. ஆனால் பொழுதே போகவில்லை.
வளவின் (காம்பவுண்ட்) பின் வீட்டிலிருந்த அக்கா வந்து அம்மாவிடம்
விசாரித்துக் கொண்டிருந்தாள். ’ஏன் ஆச்சி, தம்பியா புள்ளை பள்ளிக் கூடம் போகலை..’ என்று.அம்மா இது ஐந்தாவது ஆளுக்குப் பதில் சொல்கிறாள். ‘காலில் மைக்கூரு
வந்து ராத்திரி பூரா துடிச்சிட்டான்’. அக்கா அப்படியான்னு கேட்டுவிட்டு.நேற்று, தான் போய்
வந்த ’சபரிமலை ஸ்ரீ ஐயப்பன்’ படத்தைப் பற்றிச்
சொல்லிக் கொண்டிருந்தாள். ரொம்ப நல்ல படம் ஆச்சி. ஐயப்பனா நடிக்கிறவன் ஃபர்ஸ்ட்டா
நடிச்சிருக்கான்,அந்தப் பையன் விரதம் இருந்துதான் நடிச்சானாம்,ஆனாலும், படம்வந்த அன்னக்கி அவன் செத்துப்
போய்ட்டானாம்ழா...” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அக்காவுக்கு குழந்தைகள்
இல்லை, வீட்டுக்காரருக்கு பேட்டை மில்லில்
வேலை. அவருக்கு நைட் ஷிஃப்ட் வரும் போதெல்லாம் அக்கா ஒரு படம் விடாமல் பார்த்து
விடுவாள். ஆஹா காலு சரியா இருந்தா போயிருக்கலாமே என்று தோன்றியது. ஆனால் ஜங்ஷன்
பாலஸ் டி வேல்ஸ் தியேட்டரில் போட்டிருக்கிறார்கள்.இந்தக் குறைக்காலை வச்சுக்கிட்டு
அவ்வளவு தூரம் எப்படி நடக்க என்று யோசனை வேறு. பஸ்ஸில் போனா காசு வீண். அங்கே படம்
ஆரம்பிக்கிறதும் விடுவதும் ரொம்ப லேட்டாகும்.
ஐந்து ஐந்தரை ஆனதும் நொண்டி நொண்டிக் கிளம்பி விட்டேன். தரை டிக்கெட்டிற்குக்
கூட்டம் நெருக்கியது. யாரும் புண்ணில் இடித்து
விட்டால் அவ்வளவுதான். கையில்,போக வர பஸ்ஸுக்கென்று வைத்திருந்த14+14= 28காசு
இருந்தது, பெஞ்சு டிக்கெட்டுக்கு கூட்டமில்லை ஈசியாகப் போய் விட்டேன். அங்கே
பெஞ்சு என்பது சிமெண்ட் பெஞ்சு. மேலே தகரக் கூரைக்குக் கீழே தட்டி அடித்திருக்க
மாட்டார்கள்.அதனால் கொட்டகை முழுக்க வெக்கை. சூடு, உக்கார முடியாமலிருந்தது. அந்தத் தியேட்டருக்கு மதியக் காட்சிக்கு அனுமதி
கிடையாது. இரண்டு மைல் நடந்து வந்ததால் புண் வேதனை வேறு. பக்கத்தில் பின் வீட்டு
அக்காவின் கணவர் வந்து உட்கார்ந்தார். ”வே வாரும் தம்பியா பிள்ளை, நீர்தானா,என்னவே
சாமி படம்ன்னு அப்பா போகச் சொல்லிட்டாகளா... நானும் அதனாலதான் வந்தேன்.இந்தக்
கொட்டகைல ‘சம்பூர்ண ராமாயணம்’ பார்த்தது, ரெண்டு வருஷம் இருக்கும் வே....” அப்புறம் ஒரு படம் கூடப் பாக்கலை.” முன்னால எல்லாம் பூரா சாமி படம்தானே, ஸ்ரீ
வள்ளி என்ன,கிருஷ்ணபக்தி என்ன, ஹரிதாஸ் என்ன..ஸ்ரீ வள்ளின்னா சிவாஜி படமில்லவே,அது
வெறும் கேலிக்கூத்துல்லா, ”என்று பேசிக் கொண்டே இருந்தார்.
“நல்ல வசதியா, ’சிலாவத்தா’ உக்காரும் வே ஏன் அரை சீட்ல உக்காந்த மாதிரி
இருக்கேரு.’என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவர்
நெருங்கித்தான் இருந்தார். படம் போட்டதும் சங்கீதம் எஸ்.எம்.சுப்பையா நாயுடு
,டைரக்ஷன் ஸ்ரீராமுலு நாயுடு என்றெல்லாம் ‘எழுத்து’ போடும் போது, ‘வே
மலைக்கள்ளன் எடுத்தவம்லா’ என்றார். முறுக்கெல்லாம் வாங்கித் தந்தார். படம்
பார்க்கிற விறு விறுப்பில் வலி தெரியவில்லை. படத்தின் கடைசியில் கதைப் பகுதி
முடிந்து ஓரிரண்டு ரீல்கள், சபரி மலைப் பயணம்,கோயிலமைப்பு பற்றி ஒரு டாகுமெண்டரி
போல ஓடும்.இதே போல ஸ்ரீனிவாச கல்யாணம் என்று 1960ல் வந்த படத்திலும், கடைசியில்
திருப்பதி ஊrர்,மலைப்பாதை, கோயில் சில திருவிழாக்கள் எல்லாவற்றையும்
காண்பிப்பார்கள். அதே போல்தான் இதிலும். அது ஒரு ட்ரெண்ட். அதை நிறையப் பேர்
விரும்பிப் பார்த்தார்கள்.அண்ணாச்சி கூட, ”இங்கேயெல்லாம் நாம போகமுடியுமா,எட்டணா துட்டுல
எல்லாத்தையும் பார்த்திரலாம், என்னவே தம்பி, இது நல்ல ஐடியா என்னவே” என்று புலம்பிக் கொண்டிருந்தார். எனக்கு எப்படி வீடு போய்ச் சேருவது, அண்ணாச்சி
சொல்லி அப்பாவுக்குத் தெரிந்தால் தொலைத்து விடுவாரே என்று கவலை கூடிக் கொண்டே
போயிற்று. அழுது விட்டேனோ என்னவோ. அண்ணாச்சி விசாரித்தார்,”ஏம் வே அழுதேரு
படம் இண்ட்ரஸ்டாப் போச்சே..” என்று. சொன்னேன்.’காலில் புண்,
அப்பாவுக்குத் தெரியாது..’ என்றெல்லாம். “கவலைப் படாதீரும் நான் சைக்கிள்ள
கூட்டிட்டுப் போயிருதேன்..”என்றார். அப்பாடா என்றிருந்தது.ஆனால் சைக்கிளில்
முன்னால்தான் உட்கார வேண்டும் என்று ’அடம்’பிடித்தார்,” பேசிக்கிட்டே
போயிரலாம்வே..”
அவர் மில்லு விட்டு வரும்
போது அது எந்த ராத்திரின்னாலும் பாட்டுபாடிக் கொண்டோ விசிலடித்துக் கொண்டோதான்
வருவார் என்பார்கள்.நல்ல வேளை இன்று பாடவில்லை.
புராணக் கதைகளில் ஆரம்பித்து புராணப் படங்களில் செழித்த, சினிமாவில் சமூகக்
கருத்துகளுடன் கதைகள் வர ஆரம்பித்ததும், ஏ.எஸ்.ஏ சாமி, அண்ணா, கலைஞர்
எழுத்துகள்,டி.கே.எஸ்.சகோதரர்கள் படங்கள், ஸ்ரீதர் வருகை என்று தமிழ் சினிமாவில்
புராண இதிகாசப் படங்களின் தாக்கமும்,வருகையும் குறைந்தது. எம்.ஜி.ஆர்.
ஸ்ரீமுருகன்(1946) படத்தில் சிவ நடனம், அபிமன்யு படத்தில்(1948) அர்ஜுனன்
பாத்திரம் தவிர , புராணப்படங்களில் நடிக்கவில்லை. சிவாஜியும் 1958ல் சம்பூர்ன
ராமாயணம் படத்தில் பரதன், 1961ல் ஸ்ரீவள்ளி படத்தில் முருகனாக நடித்தார். வேறு
புராணப் படங்களில் இருவரும் நடிக்கவில்லை.இந்த இரண்டு சக்கரங்களில் உருண்ட தமிழ்
சினிமா, இந்த இருவரையும் விட்டு விட்டு வேறு யாரையும் வைத்து புராணப் படங்கள் தயாரிக்க நினைத்திருக்க மாட்டார்களோ என்னவோ. அதை
விட எளிதாக இந்தி,தெலுங்கு டப்பிங் புராணப் படங்களை எடுத்து, அவை நன்றாக
ஓடியதுண்டு.’பஸந்த் பிக்சர்ஸ்’ ஸ்ரீ ராம பக்த
ஹனுமான், பாபு பாய் மிஸ்திரி தந்திரக் காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவு செய்ய,ஹோமி
வாடியா இயக்கிய இந்திப் படத்தின் தமிழ் டப்பிங், 1956 வாக்கில் வந்து பிரமாதமாக
ஓடியது.நான் ஒன்றாம் வகுப்போ இரண்டோ படித்துக் கொண்டிருந்தேன். இந்த பெயர்கள் எல்லாம்
ஜிம்போ, நகரத்தில் ஜிம்போ,மஹிராவணன் போன்ற படங்கள் மூலம் பசுமையாய்
நினைவிருக்கிறது. 1961-ல் திருடாதே படத்திலிருந்து எம்.ஜி.ஆர் தன் ராஜ அலங்காரத்தைக்
கலைத்து விட்டு,பேன்ட் சர்ட்டுடன் வந்தவர், தாய்சொல்லைத் தட்டாதே படத்தில் கோட்டும்
சூட்டுமாக சி.ஐ.டி ஆக வந்தார். சிவாஜியின் பதி பக்தி, பாகப்பிரிவினை
பாவமன்னிப்பு,பாசமலர் என ‘பாம்’சிங்கின் குடும்பப் பாங்கான படங்கள், தமிழின் சமூகப்
படப் போக்கை பலமாக நிறுவின.
1963-ல் பழைய படி ஒரு மாற்றம் நிகழ்ந்தது. முழு நீளக் கேவாக்கலர் படமாக
தெலுங்கு டப்பிங் படமான, அல்லது இரு மொழித் தயாரிப்பான ‘லவகுசா’ வந்தது. என்.டி.ராமாராவுடன், ஜெமினிகணேசன்,அஞ்சலி
தேவி,எம்.ஆர்.ராதா நடித்திருந்தார்கள். ஏ.கே. வேலன் வசனம். ( ஒரு சிறந்த தமிழ்க்
கதை வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர். ’கட்’, ஸ்டார்ட்’ ஆகியவற்றைக் கூட
தமிழில்தான் ’நிறுத்து, ஆரம்பி’ என்பாரென்று
சொல்லுவார்கள். அருனாசலம் ஸ்டுடியோஸ் என்று ஒன்றை நடத்தி வந்தார்.) லவகுசா
பிரமாண்டமாக ஓடியது,தமிழகம் எங்கும். 1964 ல் வந்த கர்ணன்,காவியத் தன்மையுடனேயே
இருந்தது, ’கடவுள் மேஜிக்’ சமாச்சாரம் இல்லவே இல்லை. சிறந்த தயாரிப்பு
என்றாலும் அப்போது நன்றாக ஓடவில்லை. 1964 பிப்ரவரியில் வெளியான காதலிக்க நேரமில்லை
படம் ஏற்படுத்திய பிரம்மாணடம் போலவே 1965 ஜனவரியில் வந்த எங்க வீட்டுப் பிள்ளையின் அசாதரணத்துக்குப் பதில் சொல்ல சிவாஜிக்கு ஒரு
படம் தேவையாக இருந்தது.அதற்குத் தோதாக ‘திருவிளையாடல்’ வந்தது.
ஏற்கெனவே சம்பூர்ண ராமயணத்தைத் தொடர்ந்து அடுத்து வருவதாக,முழுப்பக்க
விளம்பரமெல்லாம் வந்து, அறிவிக்கப்பட்ட ’சிவலீலா’ வின் திரைக்கதையாளரான ஏ.பி.நாகராஜன் அதையே ’திருவிளையாடல்’ என வெள்ளி விழாப் படமாக எடுத்தார். இடைப்பட்ட
காலத்தில் அவரின் குருநாதரான கே.சோமு இயக்கிய பட்டினத்தார், சுந்தரமூர்த்தி
நாயனார் எதுவும் ஓடவில்லை. திருவிளையாடல் வெற்றியைத் தொடர்ந்து அவர் எடுத்த
சரஸ்வதி சபதம் பெரிய வெற்றி பெற்றது. முதல்ப் படம் ஓடினால் இரண்டாவதிற்கும் அதே
ஃபார்முலா என்பது தானே திரையுலகின் எழுதப்படாத சட்டம். பெரிய நடிகர் பட்டாளம், தனித்தனியான
கதைகள், மாமா மகாதேவனின் இசை, அடிச்சரடாக ஒரு கதை என்கிற பாணியில் இரண்டு படமும்
அமைந்தது. அடுத்து வந்த கந்தன் கருணை, திருவருட் செல்வர் ஆகியவை சுமாராக ஓடியது.
திருமால் பெருமை ஓடவில்லை. நாகராஜனும் தன்னை புராணப் படங்களிலிருந்து விடுவித்து தில்லானா
மோகனாம்பாள் போன்ற தளத்திற்கு மாறி விட்டார். அவரை வைத்து ஜெமினி ஆசையுடன்
தயாரித்த ‘விளையாட்டுப்பிள்ளை’ சரியான அடி வாங்கியது. அதே யூனிட் என்றாலும் தமிழ்
ரசிகர்கள் உஷாரானவர்கள். திருவிளையாடல் வெற்றி பெற்றதும், எ.வீ பிள்ளையின் காமிரா
மேன்களான வின்செண்ட்-சுந்தரம் இவர்களினை வைத்து, தெலுங்கிலும் தமிழிலும் ஏ.வி.எம்
நிறுவனம், பிரம்மாண்டமாக ’பக்த பிரஹலாதா’ எடுத்தது,இயக்கம் சி.ஹெச் நாராயணமூர்த்தி
என்கிற பிரபலமான தெலுங்கு புராணப்பட இயக்குநர்.1966 இறுதியில் வந்த இந்தப் படம்
ஓடவே இல்லை. பாலமுரளி கிருஷ்ணா இதில் நாரதராக நடித்திருந்தார். அதெல்லாம்
ரசிகர்களுக்கு ஒரு பொருட்டில்லை. அதை ஒரு டப்பிங் படமாகவே பார்த்தார்கள்.
ஒளிப்பதிவு: வின்செண்ட் - சுந்தரம் என்று டைட்டிலில் போடப்பட்ட கடைசிப் படம்
இதுதான்.
காரைக்கால் அம்மையார், அகத்தியர் படத்தின் தோல்விகளுக்குப் பின்னர்
அருட்செல்வர் நாகராஜன், வா ராஜா வா, திருமலை தென்குமரி, மேல் நாட்டு மருமகள் என்று
வேறு திசைக்குப் போய் விட்டார். என்றாலும் எல்லாவற்றிலும் ‘கடவுள் அருள்’ லேசாகவேனும் கமழ்ந்துகொண்டிருந்தது.முருக பக்தரான சாண்டோ சின்னப்ப
தேவர்,தன் முருகர் பக்தியை வெளிப்படையாகப் படங்களில் காட்டமுடியவில்லை என்றாலும்
அவ்வப்போது ஒரு முருகர் படத்தை வழக்கமாகக் காட்டி, அதற்குக் கீழே கதாநாயகனின்
அம்மா கும்பிடுவதாகக் காட்டி விடுவார். (அப்பா, எல்லா படத்திலும் நினைவில் வாழும்
அப்பாவாகவே இருப்பார்). தொழிலாளி (1964) படத்தில் கதைப்படி, எம்.ஜி.ஆர்
கலெக்டருக்கு ஒரு கடிதமெழுத உட்காருவார். அப்போது தலைக்கு மேலே மாட்டியிருக்கும்,
தேவர் ஃபிலிம்ஸ் ’செட் பிராப்பர்ட்டி’யான முருகன் படத்தை
லேசாக நிமிர்ந்து பார்த்து விட்டு எழுத ஆரம்பிப்பார்.அப்புறம் தனிப்பிறவியில் ஒரு
பாடலில் முருகனாக வந்து போனார்.
புராணப் படங்களுக்கான மவுசு குறைய ஆரம்பித்த போது தேவர் 1969ல், கலியுக
அதிசயம் புரிபவராகக் கடவுளை சமூக வேடம் புனைய வைத்தார், துணைவன் படத்தில். படம்
ஒரு மாபெரும் ஹிட் ஆனது. உண்மையில் அவர் தண்டாயுதபாணி ஃபிலிம்ஸ் கம்பெனி ஆரம்பித்ததே நஷ்டக் கணக்கு
காண்பிக்கத்தானென்று சொல்லுவார்கள். ஆனால் துணைவன் படம் அப்படி ஓடியது. ஏகப்பட்ட
முருகன் கோயில்களை பெரும்பாலும் பேக் புரொஜக்ஷனில் ஓடவிட்டு ரசிகர்களை,
ஏ.வி.எம்.ராஜன் ,சௌகார் ஜானகி, துணியில் சுற்றிய ஒருகுழந்தை ஆகியோருடன் கோயில்
கோயிலாகச் சுற்றிக் காண்பித்தார். அத்தனை திருத்தலங்களையும் அதனதன் தல புராண
வரிகளுடன் கண்ணதாசன் அழகாகப் பாடல் எழுத ,மகாதேவன் ராக மாலிகையில் டியூன் போட, வி
ராமமூர்த்தி ஒளிப்பதிவில் அழகாகக் காண்பித்தார். படம் ஓடும் தியேட்டர்களில்
எல்லாம் திருச்செந்தூர் முருகன் போல ப்ளாஸ்டர்
ஆஃப் பாரிஸ் சிலை ஒன்றை வைத்து அதற்கு தினமும் பூசையெல்லாம் செய்ய
வைத்தார். மக்கள் விசாகம் பார்க்கப் போவது போல கிராமங்களில் இருந்தெல்லாம் வண்டி
கட்டிக் கொண்டு வந்தனர். புராணப் படமெடுக்க புது வழி ஒன்றைக் காட்டினார்
கதாசிரியர் பாலமுருகன்.
துணைவன் படம் கடைசிச் சில காட்சிகள் கலரில் வரும். அடுத்த படமான தெய்வம் (போஸ்டரில்
எல்லாம் ’தேவரின் தெய்வம்’ என்று வாசிக்கிற மாதிரி
அச்சிட்டிருப்பார்கள்.) முழுக்கலரில் எடுத்தார். ஆறுபடை வீடுகளுக்கும் ஆறுகதை.
மதுரை சோமு, பெங்களூர் ரமணியம்மாள்,பித்துக்குளி முருகதாஸ், சூலமங்கலம் சகோதரிகள்,
சீர்காழி,டி.எம்.எஸ் என்று ஆறு பிரபலமான கர்னாடக இசைக் கலைஞர்கள் பாடும் பாடல்கள்.
பட்டாளமாய் நடிகர் நடிகைகள். படத்தை கிருபானந்தவாரியார் கதை சொல்வது போல
ஆரம்பிப்பார்கள். படம் திவ்வியமாய் ஓடியது. எல்லாம அப்பன் திருவருள் என்று சொல்ல
அப்புறம் எடுத்த படம், ’திருவருள்’, முருகன் அடிமை என்று அதே ஃபார்முலாக்களில்
படங்கள். ரசிகர்களும் மார்க்கைக் குறைத்துக் கொண்டே வந்தனர்.தேவர் ஆட்டுக்கார
அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம் என்று பழைய்ய்ய ஆடு, பாம்பு, என மிருகங்கள்
ஃபார்முலாவுக்குப் போய்விட்டார். துணைவன்,படத்தை,முருகனைக் கிருஷ்ணன் ஆக்கி
இந்தியிலும் ’மாலிக்’ என்ற பெயரில் வாசு மேனன் தயாரித்தார். பீம்சிங்
இயக்கினார். ஓடவில்லை என்றே நினைக்கிறேன்.
இதே ஃபார்முலாவைப் பயன் படுத்தி, டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன், அன்னை
வேளாங்கண்ணி எடுத்தார். கமல் உதவி இயக்குநர். படம் நன்றாக வந்திருந்தது. மாதா
தோன்றி ஊனக் குழந்தைக்குக் கால் தரும் போது மாதாவின் உருவத்தை நன்றாகப் பார்க்க
முடியாதபடி, கண்கூசும் வெளிச்சத்திற்கிடையே காண்பித்தார். கிங் ஆ கிங்ஸ் படத்தில்
சிலுவையில் அறையப்படும் ஏசுவை அப்படித்தான் காண்பிப்பார்கள்.ஜி.கே ராமுவின்
காமிராவும், தேவராஜ் மாஸ்டரின் இசையும் நன்றாக இருந்தது. ”நீலக்கடலின்
ஓரத்தில் நீங்கா இன்பக் காவியமாம்..”””..”” என்ற டைட்டில் சாங்கின் மெட்டு அபாரமானது.
(மோகனம்..?) இதே மெட்டில் அநேகமான பாடல்களைப் பாடி விடலாம் என்பார்கள். ஐயப்பன்
பஜனைப் பாடல்கள் பலவற்றை இந்த மெட்டில் பாடுவார்கள்.கிறிஸ்தவ (புராண)க் கதைகளைப்
பொறுத்த வரை,ஜெனோவா, ஞான சௌந்தரி(கள்), மகதல நாட்டு மேரி (1957), (இதில்த்தான்
எஸ்.ஜானகி பாடிய பாடல் முதலில் வெளியானது)ஆகியவை ஏற்கெனவே வந்திருந்தன.
சிட்டாடலின் ஞானசௌந்தரி நன்கு ஓடியது.ஜெமினியின் ஞானசௌந்தரி ஓடவில்லை.மலையாளத்தில்
ஸ்நாபக யோகனன் என்ற பைபிள் கதை படமாக்கப்பட்டு,நன்றாக ஓடியது.அதன் தமிழ் வடிவம்,’ஸலோமி’ என்ற பெயரில் வந்தது. எல் விஜயலட்சுமி ‘சலோமி’யாக நடித்து ஒரு டான்ஸாடுவார். அதற்காகப் போய்ப் பார்த்தேன். பின்னாளில்
குழந்தை ஏசு, புனித அந்தோணியார், வில்லியனூர் மாதா என்றெல்லாம் வந்தது. ஓடவில்லை.
தேவர் முருகபக்தர், ‘கௌமார வழிபாட்டுக்காரர் என்றால்,’ சக்தி வழிபாடான
சாக்தம் சார்ந்து, ’நம்ம வீட்டுத் தெய்வம்’ படம் வந்தது.வியட்நாம்
வீடு சுந்தரம் கதை வசனம். இயக்கம்,தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி. ஆனால்
சுந்தரம்தான் உண்மையான இயக்குநர் என்பார்கள். படம் ஹிட் ஆகி விட்டது. கே.ஆர்.விஜயா,
தமிழ் சினிமாவைக் காக்க, அம்மன் அவதாரம் எடுத்துவிட்டார்.பொருத்தமான நடிப்பாகவும்
இருந்தது.அவர் படம் முடியும் வரை கடுமையான விரதம் இருந்தார் என்று பேட்டிகளில்
சொல்லி இருக்கிறார். மற்றப்படி விரதம் கிடையாதா என்று கேட்கக் கூடாது. தொடர்ந்து
வேலுமணி அன்னை அபிராமி என்று எடுத்தார். கே ஆர் விஜயாவே தயாரித்த படங்கள் இவை. பல படங்களில்
அம்மன் வேடம் விஜயாவுக்கு நன்றாகப் பொருந்தி வந்தது. திடீரென்று கே.எஸ்
கோபாலகிருஷ்ணன் இந்தக் களத்தில் குதித்தார். சாக்த வழிபாட்டின் ஆதாரமான
பராசக்தியிலிருந்துதான் பல தெய்வங்களும் தோன்றினர் என்கிற கருத்தைக் கெட்டியாகப்
பிடித்துக் கொண்டார். குல
விளக்கு,மாலதி,தபால்காரன் தங்கை என்று பல படங்களின் தோல்விக்குப் பின் ஆதிபராசக்தி
படம் எடுத்தார். படத்தின் ஹை லைட் ‘எஸ் வரலட்சுமி’யைப் பராசக்தியாகக்
காண்பித்ததுதான். ரொம்பப் பொருத்தமாக இருந்தது. கே.ஆர்.விஜயாவைப் போட்டிருக்கலாமே
என்று எதிர் பார்த்தவர்கள் கூட இதை ஏற்றுக் கொண்டார்கள்.எஸ்.வி. சுப்பையாவின்
அபிராமி பட்டர் நடிப்பும்.சொல்லடி அபிராமி என்று ‘பாரதி’ பாணியில்
பராசக்தியை விளிக்கும் பாடல்களும் படத்தைத் தூக்கி நிறுத்தி விட்டன. தொடர்ந்து
தசாவதாரம், காஞ்சி காமாட்சி என்றெல்லாம் எடுத்துப் பார்த்தார்.”சார்,உங்களுக்கு ஒரு படத்துக்குத்தான் மார்க்”, என்று ரசிகர்கள்
மறுத்து விட்டார்கள்.
பெரிய இயக்குநர் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் களத்தில் குதித்தால் மற்றவர்கள்
சும்மா இருப்பார்களா.டி.ஆர்.ராமண்ணா தன் இழந்த மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்த
‘சக்திலீலை’என்று எடுத்தார்.பழைய விஷயங்களை எடுக்கப் பழைய ஆட்களைத்
தேடுவதுதான் இயல்பு.கே.எஸ் ஜி, உடுமலை நாராயணகவி போன்ற பாடலாசிரியர்களைப்
பிடித்தால்,ராமண்ணா துறையூர் கே. மூர்த்தி என்ற கதை வசனகர்த்தாவைப் பிடித்தார்.
பாசம் படத்திற்கு இவர்தான் கதை, வசனம்.மனோகரின் சில புராண நாடகங்களுக்கும் இவர்
கதை வசனம் எழுதியிருக்கிறார். என்ன இருந்தாலும் சக்தி, சாதகமாக லீலை புரிய மறுத்து
விட்டாள்.
1975ல் மறுபடி சுவாமி ஐயப்பன் மெரிலாண்ட் கே.சுப்ரமணியன் தயாரிப்பு இயக்கத்தில்
வந்தார்.மலையாளம் தமிழ் இரு மொழிகளில் தயாரிக்கப்பட்ட படம், இரண்டு மொழிகளிலும்
சூப்பர் டூப்பர் ஹிட். கேராளாவில் நான்கு மாநில விருதுகள் வாங்கிக் குவித்தது.
அப்படி ஒன்றும் பிரமாதமான படமில்லை.கண்ணதாசனின் பாடல்களும்,தேவராஜன் மாஸ்டரின்
இசையும் நன்றாக இருந்தது. வயலாரின் பாடல்கள் மலையாளத்தில் பிரமாதமாயிருந்தது
என்பார்கள். இந்தப் படம் வெளிவந்த நேரம் ஐயப்ப பக்தி பெரிய இயக்கம் கண்டிருந்தது ஒரு
காரணம். அப்புறம் ஏ.பி.நாகராஜனிடம் உதவியாளராக இருந்த மாஸ்டர் தசரதன்,’சரணம் ஐயப்பா போன்ற படங்கள் எடுத்தார். அய்யப்பன் கலியுக அற்புதங்கள்
புரியும் எல்லாமே முதலுக்கு மோசமில்லாமல் ஓடியது. கொஞ்சம் தாமதமாக இந்தக் களத்தில்
குதித்த இன்னொரு இயக்குநர் கே.சங்கர், ஏற்கெனவே பக்த ராவணா போன்ற ஏ.வி.எம் படங்களை ஆதியில் இயக்கியவர் இவர். வருவான்வடிவேலன்
மூலம் ஒரு ஹிட் கொடுத்தார்.அப்புறம் தாய் மூகாம்பிகை,சுப்ரபாதம் என பத்து இருபது
புராணப் படங்களை 2000 வரை கொடுத்துக்
கொண்டிருந்தார்.அம்மன் படங்களுக்கு ராமநாராயணன் காலம் வரையிலும்,அதாவது இன்று வரை
மவுசு குறையவில்லை. சுமை படம் மூல நல்ல இயக்குநராக மலர்ந்தவர்...பல அம்மன் படங்கள்
மூலம் வசூல் குவிந்து 125 படங்கள் வரை தயாரித்தார்.எல்லாம் அம்மன் அருளோ என்னவோ.
’வருவான் வடிவேலன்’ படம் வந்த சமயம்
எனக்குத் திருமணம் ஆகி இருந்தது. நல்ல ’சாமி படங்க’ளுக்கு அழைத்துப்
போவது நல்ல கணவனின் கடமையில்லையா.போயிருந்தோம். பின்னாலிருந்து யாரோ பேசிக் கொண்டே
இருந்தார்கள். ஒரு சிறுவனுக்கு அப்பா படத்தை வரி வரியாக விளக்கிக் கொண்டிருந்தார்.
அம்மா,’செத்த நேரம் சும்மதான் இருங்களேன்..”என்று பிரயோஜனமில்லாமல் அடக்கிக் கொண்டிருந்தார். இடை வேளையில் திரும்பிப்
பார்த்தேன். மில்லுக்கார அண்ணாச்சியும் அவர் வீட்டு அக்காவும். அடையாளம்
கண்டுபிடித்தது அக்காதான். “இன்னா, இது நம்ம தம்பில்லா,” என்றாள். ”இது என் மகன்ப்பா, உங்க வீட்ல இருந்து மாத்தி பேட்டைக்குப் போனமா
அங்கேருந்து இவுக வருஷந் தவறாம மலைக்குப் போயிருவாகளா... ஆறு ஏழு வருஷம்
போனப்புறம் இவன் பொறந்தாம்ப்பா...பேரு மணிகண்டன்...”என்று சொல்லி
விட்டு எல்லா கதைகளையும் மறுபடி மனைவியிடம் சொல்ல ஆரம்பித்தாள்.எனக்கு உலகமே
சிறுத்து, பழைய காலம் திரும்பியது போலிருந்தது. சினிமா உலகம் அதிலும் சின்னஞ்சிறு உலகம் தானே. அதனால்த்
தானோ என்னவோ, சில கதைகளே மீண்டும் கொஞ்சகாலம் கழித்து மறுபடி வருகிறது, சின்னச்
சின்ன விஷய மாற்றங்களுடன்.
No comments:
Post a Comment