Monday, December 12, 2011


கேணி....

நீரிறைத்துத் தொட்டி

நிறைத்து விட்டு

ஞாபகக் கிணற்றினுள்

மறுபடி இறங்கும் வாளி

இரு கைப்பிடி தழுவி  

நழுவி விரையும்

நனைந்த கயிற்றிலிருந்து

தெறிக்கும் பொடீ நீர்ச்சிதறலில்



கேணியின் எதிரெதிர்ச்சுவர்

இணைத்து வரையும்

கிழக்கு வெளிச்சமோர்

குட்டி வானவில்.....



அக்கா  ஒருத்தியின்

”சிட்டுக் குருவி முத்தங்கொடுத்து……

ராக முணுமுணுப்பிற்கோ

முதுகமரும் குருவி விரட்டவோ

காது கொம்புகளசைத்துக் கொண்டு  

சுற்றிலும் அசை போடும் ஆவினம்

அவளைப் புளியரையிலும்

மாடுகளை அது தாண்டி

மலையாளத்திற்கும் 

அனுப்பிய கையோடு

கிணறு தூர்ந்து போனது.



சாக்காடுக்குப் பின் விரியும்

உடையாத நீளக் கனவு போல்

இப்போதங்கேயொரு காற்றாலை

இடம் பெயர்ந்த எச்சங்களுக்கேதோ 

சீவனோபாயமாய்

                           -கலாப்ரியா




2 comments:

உயிரோடை said...

கதை போல விரியுது கவிதைக்குள்

rvelkannan said...

கவிதைக்குள் கதையும்
கதைக்குள் ஒரு தூர்த்தலும்
வலியும் தெரிகிறது.
//அக்கா ஒருத்தியின்//
சார், பல ஒருத்தியில் இந்த அக்காவும் ஒருத்தி தானே ?