“அடுப்படியில் குழந்தைகள் பண்டம் திருடும்
அம்மாவின் மதியத் தூக்கம் கெடுக்கும்
நழுவிய பாத்திரமூடி உருளும் பழகிய ஓசை.”
கிரேக்க எழுத்து ‘ஒமேகா’ போல, கழுத்தில் அணியும் தங்கச் சங்கிலியை இணைக்கும் கொக்கியான ’மாகாணி’ போல -தமிழில் மாகாணி என்ற எண்ணுக்கான குறியீடு- இருக்கும். உத்திரக் கட்டையில் பொருத்தி அதில் தூக்குப் போணியை மாட்டி வைத்திருப்பார்கள், தவளக்கொத்து என்று பெயர். (இந்தப்பெயரைச் சொல்ல இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதிருக்கிறது.) இரண்டு படி (அல்லது நான்கு லிட்டர்) பிடிக்கும் ஒரு தூக்குச் சட்டி. பெரும்பாலும் அதில்த்தான் அதிரசம் சுட்டு வைத்து, அறைவீட்டு (ஸ்டோர் ரூம்) தவளக் கொத்தில் மாட்டியிருப்பாள், அம்மா. சப்பாட்டுக் கடையெல்லாம் முடித்து, பாத்திர பணடங்களை, கழுவுவதற்கு ஒழித்துப் போட்டு விட்டு அவள் மத்தியான வேளை லேசாகக் கண்ணயர்வாள். நாங்கள் நைசாக அறை வீட்டிற்குள் புகுந்து பெரிய குத்துப் போணி ஒன்றைக் கவிழ்த்து, அதன் மேலேறி தூக்குப் போணியைக் கழற்றி அதிரசம் திருடுவோம்.அவசரமாக அதன் மூடியைத் திறக்கையில், அது கை நழுவி விழுந்து “சுற்றி, நிற்கப் போகும் பம்பரம் போல” தலையாட்டி ஒரு ஓசை எழுப்பி அமையும்.”ஏல அங்க என்ன அதிரசத் தூக்கை உடைக்கிறியா...”என்று அரைத் தூக்கத்தில் கேட்பாள்.
ஒவ்வொரு வீட்டிலும், பெரும்பாலும் கை நழுவி விழும்போது, ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு ஓசை இருக்கும்.அதே போல் ஒவ்வொரு கதவுத்தாழ்ப்பாள், ஒவ்வொரு வீட்டுத் தோசைச் சட்டுவத்திற்கு, அரிவாள்மனைக்கு என பிரத்யேக ஓசை இருக்கும். கோடை காலத்தில் வெங்காய வடகம் போடுவதென்றால் பக்கத்து வீடுகளில் அரிவாள்மனை இரவல் வாங்கி வந்து நிறைய பேர் உட்கார்ந்து கூட்டாக, அரிவார்கள்.இந்த மாதிரி நேரங்களில் பெண்கள் ஒன்று சேர்வதே ஒரு அழகு. ஜக்கி வாசுதேவ் என்று நினைக்கிறேன், ஃப்ளாட்டுகளில் வசிக்கும் வேலைக்குப் போகும் பெண்கள் இந்த மாதிரி ’கூட்டுச்சமையல்’ செய்யப் பழகினால் நேரமும் பெண்களின் வீட்டுப் பளுவும் மிச்சமாகும் என்று கூறியிருப்பார். (’அருவாமனை’யை சரியான நேரத்தில் திருப்பி தராததற்காக, வெட்டுப்பழி, குத்துப்பழியாய் ஒரு சண்டை வரும், அது வேற கதை..) ”இரவல் கொடுத்திருந்த அகப்பை மாறி விட்டால், அது சட்டியுடன் மோதுகிற ஓசையை வைத்தே சொல்லி விடுவார்கள்,”ம்ஹும் இது நம்ம அகப்பை இல்லை, அது
’ஜாடையே’ வேறு அல்லவா” என்று.
பாத்திரம் துலக்கும் பெண், ஏதாவது பாத்திரத்தை தவறவிட்டால் அது எழுப்பும் ஓசையை வைத்தே, இங்கிருந்தே அம்மா சொல்லுவாள், “ஏழா, அந்த வாழைக்காய்ச் சட்டியைக் கொஞ்சம் மெதுவாத் தேயுங்க”, என்று.-அங்கிருந்து ஒரு முணுமுணுப்பு வரும், ”ஏத்தா,ஆச்சியோட பாம்புக் காதுல விழுந்துட்டா..” என்று.- ஒவ்வொரு சட்டிக்கும் ஒவ்வொரு பெயர். கத்திரிக்காய்ச் சட்டி என்றால், போணிக்கு அரை சைஸில் இருப்பது. பச்சடிச் சட்டி என்றால் அது ஒரு சைஸில் இருக்கும்.அப்புறம் அதனதன் உபயோகத்தைப் பொறுத்துப் பெயர்கள் வந்திருக்கும். ‘தோசைக்கரைக்கிற சட்டி’, ’காபி போடுகிற குட்டித் தேக்ஸா’,’பருப்புக் குண்டான்’,’உப்பு மரவை’,ஊறுகாய் ஜாடி என்று.....அடுக்களை மொழி, அது ஒரு விதம். ”கணிதம் தன்னளவிலேயே ஒரு தனி மொழி என்கிற மாதிரி
ஒரு நண்பனின் அப்பா வாடகைச் சமையல் பாத்திரக் கடை வைத்திருந்தார். நிறைய பாத்திரங்கள் உண்டு,ஒரே நேரத்தில் பத்து கல்யாணத்திற்கு சமையலுக்கு வாடகைக்குத் தரலாம்.அவர்கள் கடையில் பல சைஸ்களில், வட்டப் பரிசல் போல, அண்டாக்கள் உண்டு. அண்டா பெரும்பாலும், சோறு பொங்கவும், பாயாசம் வைக்கவும் உபயோகமாயிருக்கும். அம்மாவைப் போலவே என் மனைவியும், ”ஆமா, அவசரத்தில அண்டாவுக்குள்ள கூட கை நுழையாது” என்பாள்.வருடம் ஒரு முறை அவர்கள் வாடகைக்கு விடுகிற பித்தளைப் பாத்திரங்களில் ஈயம் பூசுவார்கள். எங்கள் வீட்டின் எதிரே ஒரு பெரிய காலிமனை.மாடியிலிருந்து, ஜன்னல வழியே பார்த்தால் நன்றாகத் தெரியும். அங்கேதான் எங்கள் பல விளையாட்டுகளும், ’திரு விளையாடல்களும்’ நடக்கும்.அதன் நடுவில் ஒரு மரம். சோப்புக்காய் மரம் என்று பெயர். அதனடியில்த் தான் அந்தப்பெரிய பெரிய பாத்திரங்களைப் போட்டு ஈயம் பூசுவார் ஒருவர், வழக்கமாக. அவர் உலையிலும், வாய்ப் பீடியிலும், எப்போதும் கங்கு கனிந்த படியே இருக்கும். அப்படி அவரும் அவர் மனைவியும் சேர்ந்து காலையிலிருந்து கருக்கல் வரை வேலை பார்ப்பார்கள். இடையே அவள் மட்டும் போய், வண்டிப்பேட்டை சாயுபு ஓட்டலில் பிரியாணி வாங்கி வருவாள்.எங்க வீட்டுக்கு ரெண்டு பாத்திரம் ஈயம் பூசணும் என்று யாரேனும் கூப்பிட்டால், அவர்களால் முடியாது.அவ்வளவு ‘நெறிபறியாய்’ இருக்கும்.
அப்புறம் காலம் எவ்வளவோ மாறிப் போச்சே, கல்யாண மண்டபங்கள், வாடகைப் பாத்திரங்களுடன் வந்து விட்டன.பித்தளைப் பாத்திரங்களின் காலமும் மலையேறி எவர்சில்வர், நான்ஸ்டிக் டஃப்லான் கோட்டட், பாத்திரங்கள் எல்லாம் வந்து விட்டன.ஈயம் பூசுகிறவரை யார் நாடுவார்.
காலையிலேயே வந்து, சோப்புக்காய் மரத்தடியில்-அது மட்டும் இன்னும் இருக்கிறது.- மண்ணைத் தோண்டி குழைத்து துருத்தி செய்து கொண்டிருந்தார், ஈயம் பூசுகிறவர். அவள் மனைவி வீடு வீடாய்ச் சென்று, ”ஈயம் பூச பாத்திரம் இருக்கா” என்று கேட்டு விட்டு, வெறுங்கையுடன் வந்தாள்.துருத்தியில் பற்றவைத்து வலித்துத் தூரப் போட்ட, கட்டை பீடிகளில் சற்றே பெரிதான ஒன்றைப் பொறுக்கி,மறுபடி பற்றவைத்தபடியே கேட்டான், ’கணவன்’, ”எல்லா வீட்லயும் கேட்டியா”. ”ஆமாமா, கேட்டாச்சு, நீ உலையிலே பீடி பத்த வைக்கிறத நிப்பாட்டினாத்தான வீடு விளங்கும் என்று சலித்துக் கொண்டாள்.”
’’இந்தா எதித்த வீட்டில ஏதோ ரெண்டு யேனம் (பாத்திரம்) இருக்குன்னாங்க, வாங்கீட்டு அப்படியே கொஞ்சம் சோறு வடிச்ச கஞ்சித் தண்ணி வாங்கீட்டு வா” என்றான்.அவள் எங்கள் வீட்டுக்குள் நுழைவதை மட்டும் மாடி ஜன்னல் வழியே பார்க்க முடிந்தது.ஜன்னலின் சாத்தியம் அவ்வளவு மட்டும்தானே.
8 comments:
அப்பா! பாத்திரம் பற்றி எத்தனை விபரம் ..எனக்கும் இந்த ஈயம் பூசுபவர்கள் ஞாபகம் இருக்கு .அவர்களின் அந்த தோலினால் ஆன காற்றூதி ...என் மாமியாருக்கு ஏனம் என்றால் உயிர் .ஒரு சின்ன வட்டாவைகூட வெளியே தரமாட்டார் .இப்போது அவர் பாத்திரங்களை நான் புழங்கும் போது அவருடைய எச்சரிக்கை காதில் விழுந்து கொண்டே இருக்கும் .
மிக அழகிய வாசிப்பனுபவம் சார் .நன்றி
ஜன்னலின் சாத்தியம் அது வரை மட்டும் தானே!//
முத்தாய்ப்பான வரிகள்.
ஒட்டு மொத்த தொழிலாளிகளின் உழைப்பை பறித்து விட்ட நவீன உலகம் அல்லவா இது?
தூக்கு போணி, ஏல ஈயம்பூசுதல் சோப்புக்காய் மரம் நெல்லை தமிழ் இனிமையோ இனிமை
ஒரு வாழ்க்கையையே படிச்சது போல இருக்கு. கே.பி போல பாத்திரத்தை எல்லாம் கதை பேசிகளாக்கிட்டீங்க. உதாரணத்துக்கு தூக்கு பேணியின் மூடி “சுற்றி, நிற்கப் போகும் பம்பரம் போல” பேசியது.
நிறைய பாத்திரங்களுக்கு அவற்றின் கதா பாத்திரம் பொருத்து பெயர். இடையே "ஆமா, அவசரத்தில அண்டாவுக்குள்ள கூட கை நுழையாது" நிறைய பரிமாணங்களை தந்தது.
ஜன்னலின் சாத்தியம் அவ்வளவு மட்டும்தானே. இதையும் இங்கே குறியீடாக கொண்டு இந்த பின்னூட்டத்தின் சாத்தியம் இவ்வளவு தான்.
உங்களை போல எனக்கு எப்போது எழுத வாய்க்குமென்று ஆயாசமாக இருக்குங்க சோமு சார்.
தூக்கு போனி, குத்து போனி, வாழக்காய் சட்டி அப்படியே ஒரு வீட்டையே கண் முன்னே கொண்டு வந்து விட்டர்கள் உங்கள் எழுத்தில்.
இன்னும் நெல்லை நகர வீடுகள் பற்றி எழுதுங்கள், திண்ணை, தார்சாலை, கொட்டில்...
ஏழா, அந்த வாழைக்காய்ச் சட்டியைக் //
ம்ம்..
தேக்ஸா - ரொம்ப பெரியதாக இருக்கும்..
தேக்சாவைப் போல சின்னஞ்சிறிய செம்புப் பாத்திரமும் உண்டு.பொதுவாக அதை கருப்பட்டி காபி போட உபயோகிப்பர்கள்.அதில் கபி போட்டு கொடி அடுப்பில் வைத்து விடுவார்கள். அப்பப்ப அதிலிருந்து குடித்துக் கொள்வோம். காலை பதினோரு மணி வரை காபி இருக்கும்...
Post a Comment