Tuesday, June 1, 2010

ஓடும் நதி-34ஒரு பொன் மொழி, நினைவுக்கு வருகிறது. ‘ராணுவ இசையும்,ராணுவ நீதியைப் போன்றதே. பொன் மொழிகள் எல்லாமே அனுபவ மொழிகள் என்பதே பொருந்தும்.

ராணுவ ஒழுங்கு, கட்டுப்பாடு என்பதே சுவாரஸ்யமான விஷயம். உணவு வேளையில் உணவுஅறைக்குள் சாப்பிடச் சென்றால், முதலில் வரும் வீரர், கடைசி வரிசை மேசையின் கடைசி இருக்கையில்தான் சென்று அமர வேண்டுமாம். முதல் இருக்கையில் அமர்ந்து கொண்டு, காலகளைச் சற்றே விலக்கி, ‘நீ நுழைந்து, கடைசிக்குப் போஎன்றெல்லாம் சொல்ல முடியாதாம்.ராணுவ இசையும் இசைதான்,ஆனால் இஷ்டப்படியெல்லாம் சஞ்சாரிக்க முடியாது , அதில் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.

குழந்தைகள் விடுகதைகள் போடுவார்கள்,இரண்டு கேள்விகள் கேட்டு, இரண்டுக்கும் ஒரே பதில் விடையாய் வரும்.ரசம் மணப்பது ஏன்?, ரத்தம் சொட்டுவது ஏன்? -விடை-பெருங்காயத்தால். ஏப்ரல் வருவது ஏன்?, போர் வீரர் கலைவது ஏன் ?-விடை- ‘மார்ச்முடிவதால். போர் வீரர்கள் அணி வகுத்து

(MARCH PAST) நடக்கும் போது, ஒரு இசையொழுங்கு, தாள ஒழுங்கு இருக்கும். இந்த ஒழுங்கு, ஒரு பாலத்தைக் கடக்கும் போது இருக்கக் கூடாது. ஒழுங்கான தாள அதிர்வின் எதிரொலியால் பாலம் உடைந்து விடும்.அதனால் வீரர்கள் அணிவகுத்துச் செல்லும் பாதையில் ஒரு பாலம் வருகிறதென்றால், ஒழுங்கை கைவிட்டு, இயல்பான நடையில் நடக்க ‘கட்டுப்பாடானஉத்தரவு வருமாம்.

அவர் பட்டாளத்திலிருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின் ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். வரிசையாகக் குழந்தைகள் உண்டு.ஒரு சின்னக் குச்சு வீட்டில் இருந்தார்கள்.அவர் விருப்பமாக விசிலடித்துப் பாடும் பாட்டு, வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே நாடி நிற்குதே அநேக நன்மையே..அதைக் கேட்கிறபோதே பட்டாளத்து வீரர்கள் அணிவகுத்து நடப்பது போல் இருக்கும். இரவு ஷிஃப்ட் முடிந்து சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பும் போது, மில்லில் ஆரம்பித்து வீடு வரை, சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரம் வரை இதையே பாடிக் கொண்டு வருவார் என்று அவருடன் வேலை பார்க்கும் ஒரு நண்பர் கேலி செய்வார்.அந்த நண்பர் ரொம்ப தமாஷான ஆள். இருவரும் அருகருகே பக்கத்து வீடுகளில் குடியிருந்தார்கள். பட்டாளத்துக்காரரின் ஆறு குழந்தைகளை, ஒரு படி’, ‘முக்கால்ப் படி, அரைப்படி, கால்ப்படி,அரைக்கால்ப் படி, மாகாணிப் படிஎன்று, பட்டப்பெயர் வைத்துக் கேலி செய்வார்.குழந்தைகள் பட்டாளத்துகாரரைப் போல் இருக்காது, நண்பர் கேலி செய்வதற்கொப்ப, நண்டும் சிண்டுமாக இருக்கும்.மூத்தவன் மட்டும் கொஞ்சம், பெரியவனாக இருப்பான்.கடைக்குட்டி பட்டப்பேருக்கேற்றாற் போல அசல் மாகாணிப் படி உழக்கு மாதிரியே இருப்பான். உண்மையான பெயர் ராமசாமி.

அவனைத் தவிர மற்ற குழந்தைகள் எல்லாம் அப்பாவைக் கண்டால் அப்படிப் பயப்படும்.அதை விட அம்மாவுக்கு அதிகம் பயப்படும்..அப்பாவிடம் அடிபட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில், அவள் அடித்துத் துவைத்து விடுவாள்.ராமசாமி காலையில் பல் தேய்த்து விட்டு, விரலைச் சூப்ப ஆரம்பித்தால், இருபத்திநாலு மணி நேரமும் அது ஒன்றுதான் வேலை.வகுப்பிலும் யார் என்ன சொன்னாலும் கேட்டாலும் கை சூப்பிய வாயைத் திறக்கமாட்டானாம், நண்பர்சொல்லுவார். ஆனால் ஒரு வேடிக்கை. ஸ்கூல் முடிய இரண்டு மூன்று நிமிடம் இருக்கும் போது,புத்தகங்களை எல்லாம் பைக்குள் மூட்டை கட்டி விட்டு ரெடியாக இருப்பானாம், மணி அடிக்க வேண்டியதுதான் தாமதம்,முதல் ஆளாக ஸ்கூலை விட்டு,தலை தெறிக்க ஓடி வருவான்.ஏய், வீட்டுக்கு விட்டாச்சு” (ஏஏய்... வீட்டுக்கூ விட்டாஅச்சூ....”)என்று சந்தோஷமாக அலறியபடி. பத்து இருபது அடி, தள்ளி வந்ததும், விரல் மறுபடி வாய்க்குள் போய் விடும்.

ராமசாமி என்னை விட பத்து வயது சிறியவன்.ஒரு நாள் பீச் ரெட்என்று ஒரு அற்புதமான -60களின் இறுதியில் வந்த மிகச் சிறந்த படம்.-சினிமாவுக்குப் போயிருந்தேன் ஒரு நண்பருடன். நாங்கள் போகும் போது படம் சற்று ஆரம்பித்து, கொட்டகை இருளாயிருந்தது. படத்தில் ராணுவ வீரர்கள், வீட்டையும் மனைவி,குழந்தைகளையும் நினைத்து உருகுவது போன்ற காட்சியின் போக்கில், அருகே யாரோ விசும்பி அழுவது கேட்டது. என்னடா வேடிக்கை,ஆங்கிலப் படத்தில் அழுகையா என்று பார்த்தால், பட்டாளத்துக்காரரும் ராமசாமியும். அவர் வாய் விட்டு விசும்புகிறார். அவரைப் பார்த்து ராமசாமி விரலைச் சூப்பியபடியே அழுகிறான்.

காற்றில் கரைந்த இசை மாதிரி நானும் அவர்களும் எங்கெங்கோ பிரிந்து போய் நீண்ட காலத்துக்குப் பின், பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்ட ஒரு பாட்டுப் போட்டி.மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகளானேன்என்ற மாதிரியில், வேடிக்கை பார்க்கப் போயிருந்த என்னை ஒரு நடுவராக உட்கார்த்தி வைத்து விட்டார்கள்.இரண்டு மூன்று பள்ளியின் குழந்தைகள், பாடியதும் சிறிய இடைவேளை விட்டார்கள். வெளியே ஒரு மரத்தடியில் ஒரு ஆசிரியர்,தன்னுடன் வந்த குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். ரொம்ப அழகாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.அவரே ஒரு பெரிய மாணவனைப் போலத்தான் இருந்தார்.அவர் பாடிய விதம் என்னை இழுக்க அருகே போனேன். வாதாபி கணபதிம் பஜே.. என்று ஹம்சத்வனியில் சஞ்சாரித்துக் கொண்டிருந்தார்.....கூர்ந்து பார்த்தால்...அட நம்ம ராமசாமி! பாட்டை மீறி வீட்டுக்கு விட்டாச்சு...என்று யாரோ சிரிப்பாகக் கூவும் சத்தம் மூளைக்குள் கேட்டது.

5 comments:

இரா. பாலா said...

அருமையான பதிவு. நான் படித்த பள்ளியில் கடைசி மணி அடித்ததும் மாணவர்கள் அனைவரும் ராணுவ வீரர்களைப்போல வரிசையாகத்தான் செல்லவேண்டும்.இதை கண்காணிக்க ஒரு ஆசிரியர் கம்புடன் நிற்பார்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இந்த ஒழுங்கு, ஒரு பாலத்தைக் கடக்கும் போது இருக்கக் கூடாது. ஒழுங்கான தாள அதிர்வின் எதிரொலியால் பாலம் உடைந்து விடும்//
இது எனக்கு செய்தியாக இருந்தது. கட்டுரைக்கு விருது கொடுத்தது ரொம்ப பொருத்தம் . சொல்லும் விஷயத்தை அழகாகச் சொல்லுகிறீர்கள்.

பத்மா said...

நல்லதொரு இடுகை .எங்களுடன் சில ex service men வேலை செய்கிறார்கள் .அவர்கள் rules க்கு தரும் முக்கியத்துவம் எங்களை எல்லாம் பிரமிக்க வைக்கும் .அப்பா! என்ன ஒரு ஒழுங்குமுறை ...
ரொம்ப அழகிய வாசிப்பனுபவம்

ராம்ஜி_யாஹூ said...

nice thanks for sharing

இனியாள் said...

தொடர்ந்து உங்கள் பதிவுகளில் எவ்வளவோ தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் வாசிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது இவை எல்லாம் தேவையான நேரம் நியாபகம் வருவது ஆச்சர்யமான அதிசயம், அற்புதம் கலாப்ரியா.

Visitors