மதுரைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் போது, ஆல்ஃப்ரெட் என்றொரு நண்பர் அறிமுகமானார். உயிரியல் துறையில், முனைவர் பட்டம் பெற்ற கையோடு ஆய்வு உதவியாளராகச் சேர்ந்தார். அற்புதமான மனிதர். `ஆல்ஃபி’ என்று அழைப்போம். சாப்பாடு, கொண்டாட்டம்,அரட்டை எல்லாவற்றிலும் சம ரசனை உள்ளவர்.முக்கியமாக மாதக் கடைசியில் கேட்காமலேயே ஐந்து, பத்து கொடுத்து உதவுவார்.இருவரும் சேர்ந்து மூன்றாவது பீர் வாங்கினால் முக்கால் வாசியை எனக்கே கொடுத்து விடுவார்.
அந்த வருட கிறிஸ்துமஸுக்கு ஊருக்குப் போய் வந்தவர், சில அருமையான வாழ்த்து அட்டைகள் கொண்டு வந்தார்.அதில் ஒன்று ரொம்ப அற்புதமாக இருந்தது. தளர்ந்த இரண்டு கரங்கள் தொழுதபடி இருந்தது.செம்பழுப்பு நிறத்தில் இருந்த அந்த ஓவியம் மனதை என்னவோ செய்தது.அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆல்ஃபி என் முகத்தைப் படிக்காது இருந்திருந்தால்தான் ஆச்சரியம். இதன் பின்னணி உனக்குத் தெரியுமா, இந்தக் கைகளின் சொந்தக்காரன் பெயரும் ஆல்பெர்ட் தான் என்றார்
ஜெர்மனியில், நூரம்பெர்க் அருகேயுள்ள ஒரு சின்ன கிராமத்தில் `பெரிய’ஆல்ப்ரெக்ட் ட்யூரருக்கு பதினெட்டு குழந்தைகள். அவர் ஒரு நகைத்தொழிலாளி. 18 குழந்தைகளின் சாப்பாட்டிற்காக நாள் முழுதும் கடுமையாக உழைக்க வேண்டும்.அவருடைய இரண்டு மகன்கள், `சின்ன’ஆல்ப்ரெக்ட் ட்யூரர், ஆல்பெர்ட், இருவருக்கும் ஓவியப் பள்ளியில் சேர்ந்து ஓவியம் கற்பதுதான் ஒரே கனவு. ஆனால் குடும்பப் பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்காதென்று நன்றாகத் தெரியும்.தினமும் இரவில் நெருக்கியடித்துக் கொண்டு எல்லோரும் தூங்கும் போது இவர்கள் இருவரும் கண் துஞ்சாது, ஓவியம் கற்பது பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆல்பெர்ட்டுக்கு ஒரு யோசனை வந்தது. நாம் பூவா தலையா போட்டுப் பார்ப்போம். வெற்றி பெற்றவன் ஓவியம் பயில ஓவிய அகாடமியில் சேரவேண்டும், மற்றவன் அருகிலுள்ள சுரங்கத்தில் உழைத்து அதற்கான கட்டணங்களைச் செலுத்தவேண்டும்.நான்கு ஆண்டுகள் பயிற்சி முடிந்ததும் இரண்டாமவன் ஓவியம் பயில முதலாமவன் எப்படியாவது உழைத்து உதவ வேண்டும். காசு, ஆல்ப்ரெக்டுக்கு சாதகமாக விழுந்தது. அவன் ஓவியக் கல்லூரிக்குப் போனான். ஆல்பெர்ட் சுரங்கத்தின் கடின உழைப்பில் தன்னை அமிழ்த்திக் கொண்டு சகோதரனின் கலை வளர உதவினான். கனவு நனவானது, ஆல்ப்ரெக்ட் மிகத் தேர்ந்த ஓவியனாகி பேரும் புகழும் பணமும் பெற்றான்.
அவன் கிராமத்துக்குத் திரும்பியதை ஊரே கொண்டாடிற்று. பெரிய விருந்து. விருந்து மேஜையில் நடுநாயகமாக ஓவியன் ஆல்ப்ரெக்ட் ட்யூரர். அவன் எழுந்து, மதுக் கோப்பையை உயர்த்தி, ”என் அன்புச் சகோதரன் ஆல்பெர்ட்டின் தியாகத்திற்காக” என்று அறிவித்து; ”என் சகோதரனே இனி நீ ஓவியம் கற்கப் போ நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன்” என்றான். எல்லோரும் மேசையின் கடைசியில் இருந்த ஆல்பெர்ட்டையே பார்த்தனர். அவனது குனிந்த தலை, இல்லை இல்லை என்று ஆடிற்று. திரும்பத் திரும்ப அதையே சொல்லியபடி அமர்ந்திருந்தவன் கடைசியாய் எழுந்து,சுரங்கத்தில் கல் உடைக்கும் போது பட்ட பல அடிகளால் எலும்பெல்லாம் நொறுங்கி விரல்கள் வளைந்த கரங்களைச் சிரமத்துடன் சேர்த்து உயர்த்தி வணங்கியபடிச் சொன்னான்,”இனி என்னால், முடங்கிவிட்ட இந்தக் கரங்களால் ஓவியம் வரைய முடியாது.” “சுரங்கம் பலி வாங்கிய கரத்தால் என்னால் என் மதுக்கோப்பையை உயர்த்தி உனக்கு வாழ்த்துச் சொல்லக்கூட முடியாது” என்று..
ஆல்ப்ரெக்ட் ட்யூரெர் எத்தனையோ புகழ் பெற்ற ஓவியங்களை வரைந்துள்ள போதும் (அப்போகலிப்ஸின் நான்கு குதிரை வீரர்களின் –THE FOUR HORSEMEN OF APOCALYPSE- ஓவியம் மிக பிரபலமானது) அவர் வரைந்த, அவரது சகோதரன் ஆல்பெர்ட்டின் நலிந்த தொழும் கரங்கள் ஐந்து நூற்றாண்டுகளாகப் `பிரார்த்தனை புரியும் கைகள்’ என்று பெயர் பெற்று விளங்குகிறது. இது தியாகத்தைச் சொல்லும் கதை
.இங்கே இது போலவே ஒரு கர்ண பரம்பரைக் கதை ஒன்று நிலவுகிறது.ஆனால் நேர் எதிரானது. மகாபாரத்ததில் இல்லாத, `செவி வழி’ பாரதக் கதைகள் நிறைய உண்டு. அவற்றில் இது ஒன்று.
‘உண்மையில் சகுனி துரியோதனின் நன்மைக்காக அவனுடன் சேர்ந்திருக்கவில்லை’. `பகையாளி குடியை உறவாடிக் கெடு’, என்கிற மாதிரி துரியோதனனுக்கு முந்திய தலைமுறை ஏதோ ஒன்றில் சகுனியும் அவனைச் சேர்ந்தவர்களும் அனுபவித்த துயரங்களுக்குப் பழி வாங்க சகுனியின் சகோதரர்கள் பாதாளச் சிறையில் திட்டமிடுகிறார்கள்.அவர்கள் ஐந்து பேருக்கு தினமும் ஒரு கவளம் சோறு மட்டுமே தரப் படுகிறது. இது ஒருவருக்குக் கூடக் காணாது. அதனால் அவர்கள் ஒரு முடிவு செய்கிறார்கள். அந்த ஒரு கவளம் சோற்றை சகுனி மட்டும் சாப்பிட்டு எப்படியாவது தப்பித்து, திருதராஷ்ட்ரன் வம்சத்தை அழிக்க வேண்டும்.அப்படியே மற்றவர்கள் பசியால் இறந்து விட சகுனி தப்பித்து, துரியோதனனை உறவாடிக் கெடுத்தான் என்றொரு கதை உண்டு.
மகாபாரதத்தில் இல்லாத இது போன்ற செவி வழி கதைகளைச் சேகரிக்க, கி.ராஜநாராயணன் மாமாவும் நானும் கை கோர்த்த முயற்சி நிறைவேறாமலேயே இருக்கிறது. அது ஒரு தனிக் கதை.
4 comments:
அன்பினை அழுத்தமாகச் சொல்கிறது, சகோதரர்களின் கதை. மனம் கணக்கிறது,
பகிர்ந்தமைக்கு நன்றி
nice post thanks for sharing
கதை கேட்க ஆவலாய் இருக்கு, இன்னும் நிறைய சொல்லுங்களேன். இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
கதை நன்றாக இருக்கின்றது. மேலும் கதை கேட்கும் ஆவலுடன்
Post a Comment