Thursday, January 21, 2010

ஓடும் நதி-15

தாத்தாவும் ஆச்சியும்தான் அந்த வீட்டில்.காலை பத்து மணிக்கு தாத்தா வெளியே கிளம்பி விடுவார். கையில் ஒரு குடை.அதை அபூர்வமாகவே விரிப்பார். காந்திமதி அம்மன் கோயில் ஊஞ்சல் மண்டபம் முன்பாக அவருடைய ஜமா. மதியம் உச்சி வெயிலில் வீடு திரும்புவார்.அப்போது பக்கத்துச் சித்தர் தெரு வழியாக வருவார். அங்கே உயர்ந்த, தெரு நீளத்துக்குமான தளவாய் முதலியார் அரண்மனை உண்டு. அங்கே வெயில் அவ்வளவாகத் தெரியாது.அதன் வழியாக வரும்போது குடையை மடக்கி வைத்துக் கொள்ளுவார்.
ரொமபக் கண்டிப்பான ஆள். குடையில் இனிஷியலை நூலால் அழகாகப் போட்டு வைத்திருப்பாள் ஆச்சி.. சிறிய கிழிசல் ஏற்பட்டாலும் உடனே தைக்கச் சொல்லிவிடுவார்.`உடனே தைத்தால் ஒன்பது கிழிசலைத் தவிர்க்கலாம்’ என்பார்.ஆங்கிலப் பழமொழிகள் நிறையச் சொல்லுவார்.குடை, ஏர் ஸ்டவ், அடிபம்பு ரிப்பேர் செய்வதற்கு உரிய அத்தனை சாதனங்களும் அததற்கான சின்னச்சின்ன மரப்பெட்டிகளில் வைத்திருப்பார்.குறடு, சாமணம், ஸ்க்ரூட்ரைவர், ஸ்பானர் எல்லாம் விதவிதமாய் வைத்திருப்பார்.எதையும் இரவல் தரமாட்டார்.
எந்தக் கடனும் தர மாட்டார். ”இல்லைன்னு சொல்லீட்டா ஒரே கெட்ட பேரோட போயிரும்”, என்பார். எங்கள் வீட்டுக்கு வந்தால் நடைக் கூடத்தின் வாசலில் உட்கார்வார். அவர் ஹார்வீ மில்லிலிருந்து ஓய்வு பெற்றவர்.வருடம் தவறாமல் ஒரு பெரிய காலண்டர், நீள அட்டைக் குழலில் சுற்றி வரும்.வராவிட்டால் சர்ட்டிஃபிகேட் ஆஃப் போஸ்டிங்கில் ஒரு கடிதம் எழுதிப் போட்டு விடுவார்.எனக்கு அவர்தான் மணி ஆர்டர் நிரப்ப, V.P.P, மற்றும் பல தபால் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தவர். ஒரே ஒரு ஆணிதான் வீட்டுச் சுவரில் அடித்திருக்கும்.அதில் காலண்டரை கொஞ்ச நாள் மாட்டி வைத்திருப்பார். அப்புறம் அதை அப்பாவிடம் கொடுத்து விடுவார். ஃப்ரேம் போட்டு மாட்டிய பல ரவிவர்மா காலண்டர்கள் ,அவர் தந்தவை எங்கள் வீட்டில் உண்டு.
தவிரவும் ரூபாய் நாணய மதிப்பு வீழ்ச்சி போன்ற தினமணி கட்டுரைகளை விளக்குவார்.பத்து நிமிடம்தான் உட்காருவார்.என்ன தந்தாலும் சாப்பிடமட்டார். அப்புறம் பத்து நிமிடம், எப்போதும் சாத்தியே இருக்கும் வீட்டிலிருந்து ஊஞ்சல் சத்தம் கேட்கும்.அதற்குப் பின் சிலோன் ரேடியோ வழங்கும் செய்தி கேட்க மாடிக்குப் போய் விடுவார்.எல்லாமே உலகச் செய்திகள். இரவானால் அந்த பழைய காலத்து ஹாலண்ட் பிலிப்ஸ் ரேடியோ பி.பி.சி நியூஸை கரகரப்புகிடையே வழங்கும்.அந்த வால்வு ரேடியோ சுமாராகப் பேசுமே தவிர ரிப்பேரானாதாக சரித்திரமே கிடையாது.
ஆச்சி தானுண்டு தன் அடுக்களையுண்டு என்று இருப்பாள்.வீட்டை சாணியிட்டு மெழுகி ஒரு தூசியில்லாமல் வைத்திருப்பாள்.எந்த வேலை செய்தாலும் கச்சிதமாக இருக்கும். மரப் பொடி அடுப்பில் மரத்தூள் அடைத்தால், ஒரு நியூஸ் பேப்பரை விரித்து அதன் மேல் அடுப்பை வைத்து அடைப்பாள். வெளியே சிதறுகிற தூளை எண்ணிவிடலாம். கை தகடாய் இருக்கும், வீட்டைப் பெருக்கி, தூசியை, இடது கையில் அள்ளிவிடுவாள், முறமெல்லாம் தேவையே கிடையாது. பலகாரம் செய்தாலும், சமைத்தாலும் அப்படித்தான்.அவர் பேச்சுக்கு கட்டுப்பாட்டவள் அவள். அவள் பேச்சுக்கு அடுப்படி கட்டுப்படும். ஒரு துளி புகைய வேண்டுமென்றாலும் பயப்படும் விறகு.அவர் ஊஞ்சல் ஆடும்போது மட்டும் பட்டாசலில் ஓரமாய் அமர்ந்திருப்பாள்.அந்தக் கால் மணி நேரத்தில் தன் தேவை, வீட்டுத் தேவை எல்லாவற்றையும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாகச் சொல்லி விடுவாள்.
அம்மாவை விட நாலைந்து வயது பெரியவள்.அம்மாவின் ஒரே சிநேகிதி. குழந்தைகள் இல்லையென்றாலும், குழந்தைகளுக்கான எல்லாப் பக்குவமும், மருந்தும் தெரியும்.அவள் ஆலோசனை கேட்டே எங்கள் ஒன்பது பேரைப் பெற்று, மூன்றைப் பறி கொடுத்து ஆறு பேரை அம்மா வளர்த்தாள்.கோயில் திருவிழா என்றால், தெருவையொட்டியுள்ள எங்கள் அடுப்படிச் சன்னல் எட்டிக் கூப்பிடுவாள்.”ஏய் கோமு, வா சப்பரம் பூதத்தான் முக்கு தாண்டிட்டாம்” என்பாள். இருவரும் போனால் நெல்லையப்பர்,காந்திமதி சமேதராய், சரியாக சந்திப்பிள்ளையார் கோயிலருகில் நின்று காட்சி தருவார்.
துஷ்டி வீட்டுக்கும் ஆச்சிதான் அம்மாவைக் கூப்பிடுவாள்.கரெக்டாக பிணத்தை எப்போது எடுக்கப் போகிறார்கள் என்று தெரியும். அப்போது சன்னலைத் தாண்டி ”ஏட்டி, கோமு வாறியா”, சத்த்மாய்க் குரல்தான் வரும். அவள் வீட்டுக்குள் வரவே மாட்டாள்.அங்கேயும் பிணத்தருகே போய் சம்பிரதாயமாய் தலையை விரித்துப் போட்டு அழுவாள். ஒரு கட்டத்தில் பிணத்தை லேசாகத் தொட்டு அதன் சூட்டையோ குளிர்ச்சியையோ உணர்ந்து அம்மாவிடம் நைசாக கண்ணைக் காண்பித்து, ”இன்னமே பேனெல்லாம் செத்தவள் தலையிலிருந்து இறங்க ஆரமிச்சுரும் தள்ளி வா” என்று சொல்லி விடுவாளாம்.ஆச்சிக்கு தலைமுடியெல்லாம் ரொம்பவும் கொட்டிப் போயிற்று. கல்யாண வீட்டுக்கு இல்லேன்னாலும், எழவு வீட்டுக்காச்சும் ரெண்டு முடி வேண்டாமாட்டி என்பாள். அம்மாவின் தலை முடி உதிர்ந்ததை வாங்கி வைத்து குளுவப் பெண்ணிடம் கொடுத்து ஒரு சவுரி கட்டி வைத்திருப்பாள்.
எனக்கு கண்ணில் ஒருதரம் ஒரு திடீர்க் காற்று மண்ணை வீசியெறிந்து விட்டது.இடது கண்ணைத் திறக்கவே முடியவில்லை, ஆச்சி ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணையை எடுத்துக் கொண்டு, வலது முதுகில் ஒரே திசையில் கடிகாரச் சுற்றாய்த் தேய்த்து தேய்த்து மண்ணைப் பூராவும் எடுத்து விட்டாள்.கண்ணெரிச்சல் மாயமாகி விட்டது. யார்ட்டயும் இதைச் சொல்லிரக் கூடாது என்று என்னிடம் சொன்னாள்.நான் சொல்லவேயில்லையே.
தாத்தா வருடம் தவறாமல் குற்றாலம் போய் மூன்று மாதம் இருப்பார்.தனியாய்த்தான். அப்படிப் போனவர் அங்கேயே மாரடைப்பில் செத்துப் போனார். உடல்தான் வந்தது. அம்மா ஊரில் இல்லை.செய்தி கேட்டு ஓடோடி வந்தாள். அம்மா வரும் வரை ஆச்சி அழவே இல்லை,எல்லோருமே பயந்து போயிருந்தார்கள்.அம்மாவைக் கண்டதும், ”ஏட்டி கோமு ஒங்க அத்தானைப் பாத்தியா” என்று அழுதாள், அழுதாள் அப்படி அழுதாள். ஆச்சியும் ரொம்ப நாள் இருக்கவில்லை. சீக்கிரமே போய்ச் சேர்ந்து விட்டாள். இப்போது அம்மாவின் முறை ஆச்சியயைக் கட்டிக்கிடந்து அழுதாள். அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா, ”கோமு தள்ளிப் போ ஏந்தலைப் பேன் உனக்கு வந்திராமேன்னு” ஆச்சி சத்தம் காதுக்குள்ள சொல்லுத மாதிரி.



5 comments:

துபாய் ராஜா said...

தாத்தாவும் ஆச்சியும் கண்முன் வந்து சென்றார்கள்.

//எந்தக் கடனும் தர மாட்டார்.
”இல்லைன்னு சொல்லீட்டா ஒரேகெட்ட
பேரோட போயிரும்”, என்பார்.//

உண்மையான உண்மை.இது புரியாமல் தான் நாட்டுல பலபேரு கொடுத்தும் கெட்டபேர் வாங்குறோம்.

//ஹார்வீ மில்லிலிருந்து ஓய்வு பெற்றவர்.வருடம் தவறாமல் ஒரு பெரிய காலண்டர், நீள அட்டைக் குழலில் சுற்றி வரும்.//

நம்ம ஊரு பக்கம் நிறைய வீடுகள்ல்ல ஹார்வீ மில் சாமி பட காலண்டரை பிரேம் பண்ணி மாட்டியிருப்பாங்க.

//பிணத்தை லேசாகத் தொட்டு அதன் சூட்டையோ குளிர்ச்சியையோ உணர்ந்து அம்மாவிடம் நைசாக கண்ணைக் காண்பித்து, ”இன்னமே பேனெல்லாம் செத்தவள் தலையிலிருந்து இறங்க ஆரமிச்சுரும் தள்ளி வா” என்று சொல்லி விடுவாளாம்//

இதுவரை கேள்விப்படாத நுணுக்கமான விஷயம்.

//யார்ட்டயும் இதைச் சொல்லிரக் கூடாது என்று என்னிடம் சொன்னாள்.நான் சொல்லவேயில்லையே.//

இப்போ இந்த ரகசியத்தை எங்ககிட்டே சொல்லிட்டிங்களே... :))

குப்பன்.யாஹூ said...

பதிவு அருமை.

அப்படியே நான்கு ரத வீதிகளையும் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்

ஆயிரம்தான் நட்சத்திர உணவக மாநாட்டு அறை இருந்தாலும் (five star hotel conference rooms), அமெரிக்கா, லண்டன் போய் இருந்தாலும், காந்திமதி அம்பாள் கோயில் ஊஞ்சல் மண்டபம் முன்னால் இருக்கும் பிரகார திண்ணையில் உக்காந்து அரசியல், இலக்கியம் பேசும் சுவையே தனி, ஈடு இணை இல்லாதது.

மேல ரத வீதியில் எது சித்தர் வீதி, தளவாய் அரண்மனை பக்கம் உள்ள தெரு பெயர் சித்தர் வீதியா (டிப்டாப் ஜவுளிக்கடை எதிர் புறம் உள்ள தெருவா)
.

ப்ரியமுடன் வசந்த் said...

ஏந்தலைப் பேன் உனக்கு வந்திராமேன்னு//

இதுபோல என்க அப்பத்தா அய்த்தைமார்கள் நிறைய பேசி கேட்டிருக்கேன்... மதுரை கண்முன்னாடி வந்து போவுது...

அட நம்மூர் வாசம் வீசுது பதிவில்

இனியாள் said...

நீங்கள் சொல்லி இருப்பதை போல சுத்தமான தாத்தாக்களும் ஆச்சிகளும் காணாமல் போய் கொண்டிருக்கிறார்கள். நல்ல பதிவு.

உயிரோடை said...

பதிவு நல்லா இருக்குங்க தாத்தாவும் பாட்டியும் ஐடியல் ரோல்மாடல் போல இருக்கின்றார்கள். அந்த கண்தூசி எடுக்கும் வித்தை எல்லாம் நாமும் கத்திருந்தா நல்லா இருக்கும். ம்ம் நாகரிகம்,படிப்பு,நகரமயமாதல் என்று நாம் இழந்தது நிறைய விசயங்கள்