Sunday, October 18, 2009

ஓடும் நதி.....


பாளையங்கோட்டை இலந்தைக் குளத்தை இப்போது மூடப் போகிறார்களாம்.அதில் மாநகராட்சியில் இருந்து, ஏதோ கட்டப் போகிறார்களாம். ஏற்கெனவே வேய்ந்தான் குளத்தை மூடி புதுப் பஸ்ஸ்டாண்ட் கட்டியாயிற்று..ஜன நெரிசல் நம்மை பல வழிகளில் சிந்திக்க வைக்கிறது.ஊர் என்ற ஒரு வட்டத்தை விட்டு, கூட்டுக்குடும்பம் என்ற ஒருவகையான பாதுகாப்பை விட்டு, சிதற வைக்கிறது. ஆற்றோரச் சுடுகாடு என்பதெல்லாம் போய், இப்போது அந்தந்த ’குடியிருப்புகள்’ அருகேயே, பம்ப் செட், குளியல் தொட்டி இத்யாதிகளுடன் அங்கங்கே சுடுகாடுகள் வந்து விட்டன.இப்போ என்ன வேலை பார்க்கிறாய் என்றால்,’ரியல் எஸ்டேட்’ என்று சொல்லி ஒரு விசிடிங் கார்டை நீட்டுகிறார்கள் பலர்.
எனக்கு தோன்றுவதுண்டு. இந்த புதுப் பஸ் ஸ்டாண்டுகளை சாலையின் இரு புறமும் இரட்டை பஸ் ஸ்டாண்டாகக் (twin bus stand) கட்டலாமே என்று.போவதற்கு ஒன்று, வருவதற்கு ஒன்று. நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள கிராமங்களில் இப்படித்தானே பஸ்ஸ்டாப்புகள், தானாகவே அமைந்துள்ளன. மக்கள் அதைத் தெளிவாகத்தானே புரிந்து வைத்திருக்கிறார்கள்.ஆனால் நாம் ஏறுகிற வழியையும் இறங்குகிற வழியையும் அததற்கெனறே உபயோகிக்கிறோமா என்ன. அதனால் நம்மை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. நகுலன் ஒரு கவிதையில் சொன்னது மாதிரி
.’’......இந்த மனதை வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது. ‘’
அப்போது நான் தூத்துக்குடியில் வேலைக்கு சேர்ந்த புதிது. வார விடுமுறையில் ஊர் வந்திருந்தேன். வண்ணதாசனை அந்த ஞாயிற்றுக் கிழமைக் காலை வீட்டிற்குப் போய் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கையில் காண்பிதார். ஒரு பெரிய அட்டைப் பெட்டி நிறைய புத்தகங்கள், இருந்தன. கிட்டத் தட்ட இரண்டு வருட காத்திருப்பிற்குப் பின், வண்ண தாசனின் முதல் கதைத் தொகுதி,’’கலைக்க முடியாத ஒப்பனைகள்’’, அஃக் பரந்தாமனால் பிரமாதமாக அச்சாக்கம் செய்யப்பட்டு வந்திருந்தது. அந்த அசாத்தியத் தாமதம் அந்த மகிழ்ச்சியை சற்று மழுங்க வைத்திருந்தது. இரண்டு வருடம் முன்பு, நான் தான் அந்த ஸ்க்ரிப்டையும், ஆயிரத்திச் சொச்சம் பணத்தையும் சேலத்தில் நேரில் கொண்டு போய் பரந்தாமனிடம் கொடுத்து வந்திருந்தேன். அதை எப்படி விற்பனை செய்வது,எதில் விளம்பரம் செய்வது, என்று எங்களுக்கு தெரியவில்லை. அப்போது இலக்கியப் பத்திரிக்கை என்று கணையாழியும் தீபமும்தான் வந்து கொண்டிருந்தன. நான் மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தில் கொண்டு போய் கொஞ்சம் கொடுத்து வருகிறேன் என்று சொன்னேன்.விஜயா பதிப்பகம் கூட அப்போது இல்லை.
ஒரு பிரதியை வாங்கிக் கொண்டு வந்தேன். அன்று காலையில் மழை பெய்து வெயிலின் உருக்கம் தெரியாமல் சற்று ரம்மியமாய் இருந்தது.புத்தகம் கையில் இருப்பது, ஏதோ கடன் கேட்ட பணம் கிடைத்தது போல் சந்தோஷமாயிருந்தது. எங்காவது வெளியே போகலாம் என்று தோன்றியது.கையில் புத்தகத்துடன் சந்திப் பிள்ளையார் முக்குக்கு வந்து, நின்று கொண்டிருந்த ஒரு டவுண் பஸ்ஸில் ஏறினேன்.அது பாளை பஸ் ஸ்டாண்டில் நின்றது. இறங்கினேன், எங்கே போவது எனறு தெரியவில்லை. ஒரு சிகரெட் பற்ற வைத்தேன்.என்னுடன் மதுரைப் பல்கலையில் வேலை பார்த்த ஒரு சிநேகிதி, தன் டாக்டர் கணவருடன் பெருமாள் புரத்தில் இருப்பதாக கடிதம் எழுதியிருந்தாள்.இலந்தைக் குளம் கரை வழியாக பெருமாள் புரத்திற்கு நடந்து போய் விடலாம். அங்கே ஒரு தந்தி அலுவலகத்தில் தினக் கூலியாக 3.ரூபாய்30பைசாவுக்கு வேலை பார்த்த போது அப்படி நடந்து போவது வழக்கம். உமாவின் நினைவோடு நடக்கத் தொடங்கினேன். பாதிக்கு மேல் நடக்க முடியவில்லை.பசியோடு புகைத்த சிகரெட் காரணாமாய் இருக்கலாம். ஒரு பனை மரத்தின் அடியில் நின்றேன்.குளத்தில் குறைவான தண்ணீரே கிடந்தது. ஒரு வட்டாக்கை (ஓட்டாஞ்சல்லி) எடுத்து தண்ணீரில் தவளைபோல் சாய்த்து எறிந்தேன். அது குபுக்கென்று முங்கி விட்டது.
கொஞ்சம் தள்ளி நாலைந்து சிறுவர்கள் செம்புலப் பெயல் நீரில் ஒரு பழைய துணியை வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.அவர்கள் பை, பனை மூட்டில் கிடந்தது.இன்று ஏது வகுப்புகள் என்று நினைக்கும் போது, பொட் பொட்டென்று தூரல் விழுந்தது. குளத்தில் ஆங்காங்கே துளி விழுந்து சிறு சிறு நீர் வட்டங்கள் உண்டாயிற்று. மழை வலுத்தது. புத்தகத்தை இடுப்பில், வேஷ்டிக்குள் சொருகிக் கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு மரத்தடிக்கு ஒடினேன். பெரிய மழையாயில்லை, நனையாமலிருக்க மரமே போதுமானதாய் இருந்தது. புத்தகத்தை எடுத்துத் திறந்தேன், தற்செயலாக ‘தனுமை’ கதை விரிந்தது. உமாவிடம் பகிர்ந்து கொண்ட கதை. மூடி விட்டு எதிரே பார்த்தேன். இலந்தைக் குளம் மகாப் பெரிய அர்த்தங்களோடு விரிந்து கிடப்பதாகப் பட்டது.
அதை மூடப் போகிறார்களாம்.



(குங்குமம்-19.12.2009 தமிழ் வார இதழ்.)

5 comments:

era murukan said...

நல்லா வந்திருக்கு சோமு. வாழ்த்துகள்

குப்பன்.யாஹூ said...

அற்புதம் நல்ல கட்டுரை,

குளத்தை மூட வில்லை நாம்.

நம் பெற்ற தாயை மூடுகிறோம்., இயற்கை நம் வளர்ச்சிக்கு தண்ணீர் அளிக்கும் குளம், ஆறுகளை படைத்தது உள்ளது, நாம் நன்றி மறந்து அவற்றிற்கு மூடு விழா நடத்துகிறோம்.

kalapria said...

இரண்டு பேருக்கும் என் நன்றி

தமிழினிமை... said...

Ennayum ilandhai kulam engaeyoe izhuththu selhiradhu..naan unmayaahavae kadandhu vandha paadhai idhu...Natpai,vaazhkayin oru pahudhiyai izhappadhu poel thoendruhiradhu.mooLayaal sindhikkaamal idhayaththai vaithu sindhiththadharkaai nandri..Nalla padhivu.

உயிரோடை said...

க‌ட்டுரை/சிந்த‌னை ந‌ல்லா இருக்கு.

குள‌ங்க‌ள்/ஏரிக‌ள் வ‌ற்றி கிட‌ந்தாலும் அவை இருக்க‌ வேண்டும். ம‌னிதனை கொன்றால் என்ன‌ த‌ண்ட‌னை ஒருவ‌ருக்கு கிட்டுமோ அதே த‌ண்ட‌னை த‌ர‌ வேண்டும் நீர்நிலைக‌ளை அழிப்ப‌வ‌ர்க‌ளுக்கு.

Visitors