Saturday, July 18, 2009

உறவை எண்ணிச் சிரிக்கின்றேன், உரிமை இல்லாமல் அழுகின்றேன்....

எல்லாரும் பார்சல் வாங்கி வந்திருந்த சாப்பாட்டைப் பற்றி, நலாருக்கில்லா என்று பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு விபத்தில் அடிபட்டு இறந்த அண்ணனின் மூக்கில்லாத முகமே நினைவில் வந்து கொண்டிருந்தது.
இது புது நாவிதன் போலிருக்கிறது.. இப்போது இவன்தான் காரியங்களைச் செய்கிறான் போலிருக்கிறது.பட்டதாரி வாலிபன். இவனும் கேரளாவிலிருந்து வந்தவனாம். சாதாரண சவப் பெட்டிக்குள் இருந்தது உடல். அதுவே அவன் உடலுக்கு, பெரிய பெட்டியாய் இருந்தது

ஒப்பாரிச் சொந்தத்தை
சத்தமிட்டு விலக்கி
கையையும்
காலையும்
மடித்துக் கட்டினான்
சவப் பெட்டிக்கு
அவளால்
சங்கடம்
வரக் கூடாதென்று.-
`சிலுவையின் நீள அகலங்கள்’ என்ற என் கவிதை நினைவுக்கு வந்தது.லீலாக்காவின் நினைவாக எழுதப் பட்டது அது.ஒவ்வொரு குடும்பங்களிலும்,அது போல் தைரியமும் காரியார்த்தமுமான ஒருவர் இருப்பார். காரியார்த்தம் என்று சொல்ல முடியாது.அவர்கள் போல் ஒருவர் இல்லையென்றால் கடைசியில் அதைக் காணும் இதைக் காணும் என்று விசேஷங்களின் போதும், துஷ்டி வீடுகளிலும் சங்கடப் பட நேரிடும்.அப்பதான் யாராவது கேட்பார்க்ள், `எங்கடே அந்த பைண்டிங் ஆபீஸ் கல்யாணி’, என்று.அவர் அதற்கெல்லம் பிரசித்தம், குடும்பத்தோடு, தற்கொலைக்கு முயன்று, தப்பித்த பின் அவர் எங்குமே போவதில்லை.
எப்போதும் சிரித்துக் கொண்டே பேசுகிற லீலாக்காவின் மரணத்துக்கு ஏகக் கூட்டம்.தெருவே திரண்டு அழுது கொண்டிருந்தது.. வில்வாதி சனி, உளுவாஞ்சன்னி, என்றெல்லாம் அழைக்கப் படுகிற டெட்டானஸ் வந்து இறந்து போயிருந்தாள்.உடம்பை பொது மருத்துவ மனையிலிருந்து தரவே மறுத்தார்கள்.ப்ளாஸ்டிக் பேப்பர் சுற்றித்தான் தந்தார்கள்.அப்படியே கொண்டு போய் காரியம் செய்யுங்கள், யாரையும் தொடவிடக் கூடாது என்று.ஒரு டாக்டர் உறவினர் இருந்ததால் உடலைப் பெற முடிந்தது.தன்னை மறந்து பெண்கள் உடலின் மீது விழுந்து அழுவதும், அரற்றுவதுமாக இருந்தார்கள்.வெளியே முற்றத்தில் இருந்த ஆண்களும் வாய் விட்டு அழுது கொண்டிருந்தார்கள்.அப்போதுதான் ஒரு கல்த்தூணுக்குப் பின் செத்துப் போனவளின் கடைசிக் கைக் குழந்தையை கையில் வைத்த படி, அவன் ஏழாவதோ எட்டாவதோ, நின்று அழுது கொண்டிருந்த என்னை அந்தச் சித்தப்பா, கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே பெண்கள் நடுவே அழைத்துப் போனார். பிள்ளையை யாரோ வாங்கிக் கொண்டார்கள் குழந்தையின் பெயர் குமரனோ என்னவோ.அவன் யார் கையை நீட்டினாலும் போனான்.உள்ளே நுழைந்ததும் படு சத்தமாக வேலைக்காரர்களைக் கங்காணி விரட்டுகிற மாதிரி, கையைத் தட்டி தட்டி பெண்களை தள்ளிப் போங்க தள்ளிப் போங்க, என்று விரட்டினார் அவரது கண்ணில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது,பெண்கள் ஏதோ என்னவோ என்று சற்று விலகியதும் தான் உடலின் ஒரு கையை மடித்த படி, என்னை அந்தா அந்தக் கையை மடி என்றார்.என்னை ஏன் அதற்குத் தேர்ந்தெடுத்தார் என்று யோசித்த படியே நான் இடது கையை மடிக்க முயன்றேன் கட்டை போலிருந்தது, மடக்க முடியவில்லை, ஆனால் அவர் வலது கையையும், மணிக்கட்டையும் வேகமாகவும் வலுவாகவும் மடித்து விட்டார், என்னிடம், `தள்ளு, அந்த வெள்ளைத்துணியக் கிழி’ என்றபடியே, இடது கையையும் மடித்தார். நான் ரெண்டு விரற்கடை அளவில் துணியைக் கிழித்துக் கொடுத்தேன், எப்படியோ எனக்கு அதைத் தான் சொல்கிறார் என்று புரிந்தது.அதை வாங்கி கைகளை அவசரமாகக் கட்டினார்.அதற்குள் நாவிதன் காலை மடித்துக் கட்டி விட்டான், பெண்களின் கூப்பாடு இப்போது ஹோவென்று கூடியது.உடலின் வாசனை தாங்க முடியாததாயிருந்தது.சித்தப்பா விடு விடுவென்று தலையைப் பிடி என்றார், நானும் யாருமோ பிடித்தோம், நாவிதன் ஒதுங்கிக் கொண்டான்.முற்றத்தில் குளிப்பாட்டக் கிடத்தி விட்டு ஒதுங்கினோம், சித்தப்பா அழுதது, தாங்க முடியாமல் இருந்தது.நான் தெருவுக்கு வந்து விட்டேன்.நாவிதன், கொச்சக் கயிற்றை துண்டு துண்டாக வெட்டி, சுருட்டி, கொள்ளி தயாரித்துக் கொண்டிருந்தான்.என்னைப்பாத்ததும்,
உங்க பாட்டு அழுதுகிட்டெ இருந்தா காரியம் ஆக வேண்டாமா, மணி நடு ராத்திரி ஆகப்போதுல்லா, யாரு, பாடையக் கட்டினவன் ஒழக்கு அண்ணனா,(ஆள் கட்டையாய், உழக்குப் போலிருப்பான்) அவன் அவனுக்கு ஏத்த மாதிரிக் கட்டி இருப்பான் போல்ருக்கு நேரமாயிட்டெ போனா விரைப்புக் குடுத்துருமே, மடக்கவே முடியாதெ,பாடை கொள்ள வேண்டாமா என்று சொல்லிக் கொண்டிருந்தான், நாங்க உள்ள வந்து செய்ய முடியுமா, என்று பீடியைக் கொள்ளியில் பற்ற வைத்தவாறே சொன்னான்.அது அவள் கதை.அது என் கவிதை.


இப்போது.உடலை சவப்பெட்டிக்குள்ளிருந்து எடுக்க மிகுந்த யோசனையாய் இருந்தது, எல்லோருக்கும்.எல்லோரும் என்றால் என்ன, நாலைந்து பேர் தான் இருந்தோம்.பிரஸ்ஸில் வேலை பார்ப்பவர்கள் ஆறு ஏழு பேர் இருந்தார்கள். கனிபாயின் பையன் மூன்றாவது தலை முறை முதலாளி வந்திருந்தார்.அவங்க பழக்கம் வேற என்பதால் தள்ளியே நின்றிருந்தார்கள். சிதை தயாராய் இருந்தது.நான் கை வைக்கக் கூடாது பாருங்க,ஒரு ஆள் தலையைப் புடியுங்க ஒரு ஆள் நடுவில, ஒரு ஆள் காலைப் புடிச்சு அப்படியே இது மேல வச்சுருங்க என்றான்.தலையைப் பிடிக்க முடியாது, அது நசுங்கிக் கிடந்தது. பெட்டியோட வச்சுரலாமெ என்று சொன்னதும் அது கூடாது, சிதை ஒலைஞ்சிரும் என்றான்.

இன்றாவது நாலைந்து பேராவது இருந்தோம்.இன்னொரு அண்ணன் பெண், தீயை வைத்துக் கொண்டு இறந்து போனது.அதுவும் ஆஸ்பத்திரியில் படுக்கையில் கிடந்து இறந்து போனது. அதை `அமரர் ஊர்தி’யில் வைத்து அங்கிருந்தெ நேரே மயானத்துக்கு கொண்டு போய்விட்டோம். அப்போது பிணம் அறுக்கும் இடத்தில் நீண்ட நேரம் காத்துக் கிடக்க வேண்டி இருந்தது.திருநெல்வேலி ஆஸ்பத்திரியில் போஸ்ட் மார்ட்டம் நடக்கும் கூடத்திற்கு, டெம்பிள் ஆஃப் சர்ப்ரைஸ் (TEMPLE OF SURPRISE) என்று எழுதி வைத்திருந்தார்கள். அதையே மூன்று நான்கு மணி நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அமரர் ஊர்தியில் நானும்,மஞ்ச மஞ்சேர் என்று மஞ்சள் பிடித்த பல்லுடன் உடலும், இன்னொரு மருமகனும் இருந்தோம்.கூடவே லீலாக்காவின் கடைசி மகன் குமரனும் இருந்தான்.அவன் காலையிலிருந்து கூடவே இருக்கிறான். அவனுக்கு அப்போது பதினைந்து பதினாறு வய்திருக்கும்.நான் நினைத்துக் கொண்டேன், உன்னை அன்று தூக்கி வைத்திருந்ததற்கு இது பதிலியா என்று.நசு நசுக்கிற அந்த உடலை நான் அவன் இன்னும் ஒருவர் தூக்கி வைத்தோம்.கையெல்லாம் ரத்தமும் சலமும்.அங்கிருந்த கல்த்தூணில் துடைக்க இயலாமல் துடைத்தேன்.
இப்போதும் ஒருவர், முத்தையா பிள்ளை என்றார்கள், அவரெல்லாம் எங்கள் காலத்தில் தெருவில் இருந்ததில்லை.இப்போதுதான் வந்திருக்கிறார்.அவர் லாவகமாக தோளைப் பிடித்து தூக்கி சிதையில் வைத்தார்.அவன் எரிந்து கொண்டிருந்திருப்பான்.
சாப்பாடு நல்லாருக்குல்லா, பொன்னாகுடியா மருமக விடி கடை போட்டிருக்கா, அங்க வாங்கி வந்தது, என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.அவள் என்ன கடையெல்லாமோ போட்டாயிற்று., என்ன கதையெல்லாமோ நடத்தியாயிற்று.இவர்கள் என்னத்தைக் கண்டார்கள்.பேருக்கு சாப்பிட்டு விட்டு, படுத்திருந்தேன்.இப்போது பொன்னா குடியாள் எந்தத் தெருவில் இருக்கிறாளோ தெரியவில்லை.இப்போது தெருதான் இருக்கிறது.பழையவர்கள் யாருமே இல்லையோ என்று யோசனை ஓடிக் கொண்டிருந்தது.
சந்தனத்தக்கா இப்போது வீரவநல்லூரில் இட்லிக் கடை நடத்திக் கொண்டிருக்கிறாள் என்று கொஞ்ச வருடம் முன்பு ராமுவோ, கோபாலோ சொன்ன நினைவு.நாராயணன் ப்ரதர்ஸ் என்று போஸ் மார்க்கெட்டில் காய்கறிக் கடை நன்றாக நடந்து கொண்டிருந்தது.பெரியவர், சூரி அண்ணாச்சி, சுருண்ட முடியும், மைனர் செயினுமாக ஆள் நன்றாக இருப்பார். வீடு தெருவின் நடுப் பாகத்திலிருந்தது.தெருவின் கிழக்கு முனையிலும் மேற்கு முனையிலும், இரண்டு `அடி பம்ப்’ உண்டு. இன்னும் தண்ணீர் வற்றாமலிருக்கிறது.தண்ணீர் உலை வைக்க, பாத்திர பண்டங்கள் கழுவ, என்று உபயோகமாய் இருக்கும். பெரும்பாலான வீட்டில் அப்போது பம்பு கிடையாது.தெரு பைப்தான். பொட்டல் புதுர்ர் தர்கா யானை எப்பவாவது வந்தால் தானாகவே இந்த பைப்பிற்கு அருகே வந்தது நின்று விடும்.நாங்கள் போட்டி போட்டுக் கொண்டு தண்ணீர் அடிப்போம்.அது தும்பிக்கையை வாகாக குழாயில் பொருத்திக் கொள்ளும்.அடித்து மாளாது., தும்பிக்கை நிறைந்ததும், வாயில் ஊற்றிக் கொள்ளும்.ஒரு ராத்திரி செகண்ட் ஷோ பார்த்துவிட்டு வரும் போது தூரத்தில் இருந்து பார்த்தோம், பைப்படியில் சிவக் கொழுந்தது அந்தரங்க சுத்தி செய்தி கொண்டிருந்தான்.அவன் மிலிட்டரியிலிருந்து ஓடிவந்தவன்.ஏய் அங்க பாருங்கப்பா, நடு ராத்திரி பொட்லபுதூர் யானை தும்பிக்கை கழுவுது என்று யாரோ சொன்னார்கள்.அதிலிருந்து அவர்./ன் பேரே அதுவாகிப் போனது.
சந்தனத்தக்கா சூரி அண்ணாச்சிக்கு மனைவியாகி புதுப்பெண்ணாக வந்திருந்தார்கள், தெருவுக்கு.நிறைய நகை போட்டிருப்பார்கள்.அவள் தெரு பம்பில் தண்ணீர் பிடிக்க வருகிற போது, அதைப் பார்க்க பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து ரகசியமாகவும் தெரிந்தும் எட்டிப் பார்ப்பார்கள்.அக்கா, வட்ட முகம், கனத்த உடம்பு.சிரித்த படித்தான் பைப்படிக்கு வந்து போவாள்.எதுக்கு எல்லா நேரத்திலும் நகை போட்டிருக்கிறார்கள் என்று தோன்றும். நாங்கள் நீண்ட காடினா நடையிலிருந்து பேசிக் கொண்டிருப்போம். பெண்கள் எங்களைக் கடக்கும் போது பேச்சின் வால்யூம் குறைந்து விடும்.சூரி அண்ணாச்சி கடையில் இருந்தால் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார்.அவரது தம்பி சொக்கலிங்கமோ என்னவோ பேர், அவர் சற்று சிடு மூஞ்சி.அவர்கள் கடையில்தான் வீட்டுக்கு கறி காய் வாங்குவோம். கடன் கணக்குத்தான், அறுவடை முடிந்ததும் ஆறு மாதத்திற்கொருக்க அப்பா கணக்கைமுடித்து விடுவார்.பெரும்பாலான கடைகளில் அப்படித்தான் அப்பாவுக்கு வழக்கம்.நான் காய்கறி வாங்கி வந்தால் நன்றாக வாங்கி வருகிறேன் என்று பேர்.எனக்கு முதலில் சூரி அண்ணாச்சி கடையில் வாங்குவது பிடித்திருந்தது. அவர் என்னைக் கண்டதும், `வேய் வாரும்,டீ சாப்பிடுதேரா, என்பார். அவர் கடைக்கு அருகே ஒரு பெண் கூறு கட்டி வைத்து காய் விற்பாள், அவள் நடிகை விஜய குமாரி ஜாடையில் இருப்பாள். ஒரு காலத்தில் பக்கத்து `குறத்தி முடுக்’கில் தொழில் செய்தவள். வயதான பின், அந்த மாதிரி ஆட்களுக்கு இதுதான் பிழைப்பு.ஒரு நாள் பேச்சு வாக்கில், அண்ணாச்சியிடம் சொல்லி விட்டேன், உங்க கடையில விலைல்லாம் கூட இருக்கே,கத்திரிக் காய்க்கு விலை கேட்டா கடைக்கே வெலை சொல்லுதேங்களே, விஜய குமாரி கடையில வாங்கீரலாம் போல இருக்கே என்று.அண்ணாச்சி ஏய் இங்க பாரு இவளே, நீ விஜயகுமாரி மாதிரி இருக்கியாம் தம்பியாபுள்ள சொல்லுதாரு என்று போட்டுக் கொடுத்து விட்டார்.ஏன் தேவிகா மாதிரி இல்லையாமா என்று கேட்டாள், அவள் சிரித்த படியே.
அதற்குள் அருகே இருந்த அவரது தம்பி ஏம்டே காய்கறி வாங்க வந்தா வாங்கிட்டுப் போவியா, கடைய உன்னால வாங்க முடியுமாடே என்று சண்டைக்கு வந்து விட்டார்.பெரியவருக்கு சங்கடமாய்ப் போய்விட்டது., சும்ம இருப்பா, அவன் விளையாட்டுக்குத் தானெ சொல்லுதான் என்று சமாதனப் படுத்தினார்.அதிலிருந்து தம்பி கடையிலிருந்தால் சற்று கஷ்டமாயிருக்கும்.
கொஞ்ச நாள் கழிந்திருக்கும், ராத்திரி முதல் ஷோ விட்டு வந்து கொண்டிருந்தேன்., `அழகு நிலா; என்று நினைவு, `மூங்கில் மரக் காட்டினிலே கேட்கும் ஒரு நாதம், முத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம்...’ என்று பாடிக் கொண்டிருந்தார் மனசுக்குள் சீர்காழி. தெரு முனையில் சுடலை கோயிலின் முன், தெரு விளக்கடியில், சூரி அண்ணாச்சியின் தம்பி நின்று கொண்டிருந்தார்.எனக்கு சற்று வெறுப்பாய் இருந்தது.அவரே, வே திருமலை தம்பி, வீட்டுக்கா, இரும் நானும் வாரேன் என்று என்னை ஒட்டியவாறு கிளம்பினார்.தெருவில் அப்போதெல்லாம் டியூப் லைட் கிடையாது, சாதாரண குண்டு பல்புதான்.அதுவும் தெரு முனையை விட்டால், அடுத்து இருபது வீடு தள்ளி,சாவடிப் பிள்ளை வீட்டருகே ஒன்று. அதைவிட்டால் இருபது வீடு தள்ளி, சூரி அண்ணாச்சி வீட்டருகே ஒன்று. இடையில் கிருஷ்ணன் வைத்த வீட்டருகே நல்ல இருட்டாய் இருக்கும். அங்கே தான் பெரிய கோபால் வீட்டின் முன்,சுடலை கோயில் வாளும் கேடயமும் புதைத்து வைத்திருக்கும்,ஒவ்வொரு கொடையின் போதும் அதை எடுத்து சாற்றிவிட்டு. கொடை முடிந்ததும் மறு படி பெட்டியில் வைத்து, அங்கே புதைத்து விடுவார்கள். அதை நெருங்கும் போது அவர் என் தோள் பட்டையை, ஒரு கையால் கட்டிப் பிடித்துக் கொண்டார். எனக்கு வேறு விதமாய் பயமாயிருந்தது.ஆனால் சமாளித்துக் கொண்டேன்.அன்னக்கி ரொம்ப சத்தம் போட்டூட்டேனோ கோவிச்சுக்கிடாதயும் என்றார். என்னடா இவ்வளவு பெரிய ஆள்,இப்படிச் சொல்லுதாரே என்றிருந்தது. இப்போது சற்று வெளிச்சம் வந்திருந்தது. கையையும் தோளை விட்டு எடுத்திருந்தார்.அவர் வீட்டருகே வரும் போது சிகரெட்டைப் பிடித்தவாறு சூரி அண்ணாச்சி,நின்று கொண்டிருந்தார்,அதான இவனைக் காணுமே, மூதேவி முக்கிலேயே பயந்து போய், யாராவது துணைக்கி ஆளைத் தேடிக் கிட்டிருப்பானே, வீட்டுக்கு வர , நாமளே போய்ப் பாப்பமான்னு நெனச்சுகிட்டு நிக்கென், என்றார்.இங்க பாரும் தம்பி, அடுத்த மாசம் கல்யாணம் வச்சாச்சு,என்றார். அப்ப அவரது மனைவி, சந்தனத்தக்கா,அப்ப, என் ஓப்படியா கூட வருவாக, என்ன தம்பி என்று என்னைப் பார்த்துச் சொன்னார்.
அவரோ `பயமென்ன பயம்,அந்த வாளு கேடயமும் இருக்கற இடம் தாண்டுறதுன்னா கொஞ்சம் பயம், அதுவும் அந்த சிவா பய சுவர் இடிஞ்சு விழுந்து செத்துப்போனானே அதுக்கப்புறம்தான் பயம் என்றார்.ஆமா போடா இப்ப கக்கூஸ் போகறதுக்கு ஆளு வரணும் உனக்கு,என்று சூரி அண்ணாச்சி கேலி செய்தார்.சந்தனத்தக்கா, தம்பி வாங்களேன், ரெண்டு இட்லி சாப்பிட்டுட்டு போகலாம் இவகளுக்காக வேண்டி இப்பதான் ஊத்தியிருக்கென் என்றாள்.தெருவை ஒட்டி சமையலறை. வீட்டுக்கு முன் வாசல்,பக்கத்து சந்து வழியாக வரவேண்டும். இந்த பக்கத்தில், தெருவில் நடைப்படி கிடையாது.சூரி அண்ணாச்சியும் வாரும்வே என்றார். போனேன்.மதினி தளர்வான உடைகள் அணிந்திருந்தாள்.இடுப்பில் பாவாடை கட்டிய இடம் சற்று கருப்பாய் தெரிந்தது.அப்போதும் நகைக்கு ஒன்றும் குறைவில்லை.அடுக்களை எங்கும் தண்ணீர்க் குடமும் பானையுமாய் இருந்தது. அதற்கடுத்த ரூமில், ஒரு படுக்கை விரித்திருந்தது.காலால் அதை ஒதுக்கி போட்ட படியே வாரும் இங்க உக்காரும் என்றார் அண்ணாச்சி,நான் உட்கார்ந்தேன்.ஒத்தி ரூவாய கழிக்கமாட்டேன், கொஞ்சம் சீர்திருத்தம் பண்ணிக்கிடுதேன்னா வீட்டுக்காரன் விடமாட்டெங்கான்.. என்று சொல்லிக் கொண்டே அவரும் உட்கார்ந்தார், ஏல நீயும் உக்காரமலெ, என்று தம்பியைச் சொன்னார். இல்ல, நான் பொறவாசல் போயிட்டு வாரேன் என்றார், போயிருவியா, துணைக்கி வரணுமா என்று சந்தனத்தக்கா கேட்டாள், வெட்கமாய் சீச்சி அதெல்லாம் வேண்டாம் மதினி நீங்க என்ன ஒரேயடியா என்று சொல்லிவிட்டு செம்பும் கையுமாக கிளம்பினார்.ஏழுகுழித்தட்டு இட்லி, நல்ல உருளையாய், அடுப்பில் இருந்து எடுத்து, பக்கத்தில் இருந்த அம்மியிலலேயே தட்டினாள்.அடுப்படி சிறியது. அடுப்பை ஒட்டியே அம்மிக்கல்.சூடான இட்லியும், நல்ல வெள்ளைப் பூண்டும் தேங்காயும் மணக்கிற, மொளாவத்தச் சட்னியும் ருசியாயிருந்தது.எங்கள் வீட்டில் பூடு உபயோகிக்க மாட்டர்கள்.தாத்தா காலத்தில் வெங்காயமே கிடையாதாம்.அடுப்பு முன்னால் இருந்த படியே அக்கா எல்லாவற்றையும் எட்டி எட்டிப் பரிமாறினாள்.ஆமா தம்பி, ஒரு நாளு இவுகளும் இல்லை,கொழுந்தனைக் காணும், என்னாச்சோன்னு முக்குக்குப் போனா அங்கயே நிக்காக, சரி வாங்கன்னு கூட்டிட்டு வந்தா, கிட்டண்ணன் வீட்டு கிட்ட ஏங்கய்யை இறுக்கப் புடிச்சுகிட்டாக, எனக்கு அய்யோன்னுதான் இருந்துச்சு, ஆனா பாக்கறவங்க என்ன சொல்லுவாங்க, என்ன தம்பி, என்றார்கள் என்னிடம். சூரி
அண்ணாச்சி, விழுந்து விழுந்து சிரித்தார்.
ஊரை விட்டு வந்து ரொம்ப காலத்திற்கப்புறம் அந்த வீட்டருகே போன போது வீடு சற்று உயர்த்திக் கட்டி, புது பெயிண்ட் எல்லாம் அடித்திருந்தது.என்ன, சூரி அண்ணாச்சி வீட்டை வாங்கிட்டாகளா என்றேன். இல்லை அவங்கள்ளாம் இங்கயே இல்லியே. வீரவநல்லூருக்கெ அந்த அக்கா வீட்டுக்கே போய்ட்டாங்க.அங்கே இட்லிக் கடை நடத்திப் பொழைக்காங்களாம் என்றார்கள்.பூண்டு மணம் நாசி நிறைது நினைவில் ஆடியது.

3 comments:

குப்பன்.யாஹூ said...

அருமை, வாசித்த என்னை வீரவநல்லூர் பஸ் ச்டண்டிர்க்கே கொண்டு சென்று விட்டீர்கள். இட்லி கடை பஸ் ஸ்டாண்டில் இருந்ததா அல்லது ஊருக்கு உள்ளே பஜாரில் இருந்ததா.,

பதிவில் சில பத்திகள் இரண்டு முறை வருகிறது.

குப்பன்_யாஹூ

kalapria said...

அன்புச் சகோதரருக்கு,
உங்கள் வாசிப்பின் கவனத்திற்கு என் கனிவான நன்றி.இரவு நெடு நேரமாகி விட்டது, அஞ்சலை முடிக்க, அதனால் எப்படியோ இரண்டுமுறை வந்து விட்டது.வீரவநல்லூருக்கு இடம் பெயர்ந்ததுதான் தெரியும்.எங்கே என்று தெரியாது.

Vidhoosh said...

http://vidhoosh.blogspot.com/2009/07/blog-post_3187.html

please visit here. There is a small gift for you:)

-vidhya