ரத வீதியின் அந்த சந்தியில் தான்.,பெரும்பாலான அரசியல்க் கூட்டங்கள் நடக்கும். யார் கூட்டம் நடத்தினாலும் கேட்பதற்கு அங்கே ஆள் இருக்கும் என்பது தான் முதலான காரணம். எங்கள் தலை முறையில், காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்திற்குக் கூட கூட்டம் கூடிவிடும். 1967 வரை அங்கே கூட்டம் நடத்த அனுமதி இல்லாமல் இருந்தது.ரயில்வே பீடர் ரோட்டில் தான் நடத்த வேண்டும்.அருகேயே பிள்ளையார் கோயில்.அதற்கு சூடன் ஏற்றுவதாக வேண்டிக் கொண்டால் வாத்தியார் படத்திற்கு முதல் நாள் டிக்கெட் கிடைத்து விடும். தந்தை பெரியார் பேசும் கூட்டமோ, வீரமணி உரையாற்றும் கூட்டமோ, எதுவானாலும் அர்த்த சாம பூஜைக்கு மணி அடிக்க ஆரம்பித்ததும்,பேசுவதை சற்று நேரம் நிறுத்தி வைப்பார்கள்..பூசை முடிந்ததும் தான் மறுபடி துவக்குவார்க்ள். பொதுக்கூட்டம் எதுவுமே நடைபெறவில்லையென்றால் கூட அந்த இடம் கல கலப்பாகவே இருக்கும்.டவுணுக்கு வருகிற பஸ்கள் அனைத்தும், நிற்கும் கடைசி இடம் அது தான்.அங்கிருந்து தான் மேற்கே உள்ள அனைத்துத் தெருக்களுக்கும் போகவேண்டும்.எங்கள் தெரு அந்த ரத வீதியிலேயே ஆரம்பித்து விடும்.அதனால் சற்று வாலைப் பருவம் வந்த பிறகு எங்கள் சாயந்தர இருப்பிடமே அதுதான்.அசைவ ஓட்டல் என்று ஒரே ஒரு `இந்தியா ஓட்டல்’என்று ஒன்று உண்டு. அதுவும், வெவ்வேறு கை மாறி அவ்வளவு நன்றாய் நடக்கவில்லை. அப்புறம் அதுவும் போய் அங்கே பிலிப்ஸ் ரேடியோக் கடை வந்து விட்டது.
டாக்ஸி ஸ்டாண்டும் அதுதான். அதிகம் போனால் ஐந்து அல்லது ஆறு டாக்ஸிகளே நிற்கும்.. எல்லாமே கறுப்பு மஞ்சள் அம்பாஸடர்.அதில் ஒன்றை அமர்த்திக் கொண்டு, பி எஸ் சியில் இடம் வாங்க சாவடி அத்தானை இந்து காலேஜுக்கு அழைத்துப் போனேன். நம்பர் MDT 6716.பி.யு.சி யில் பாஸ் பண்ணினதே பெரிய புண்ணியம்.அதே கார் அதே டிரைவருடன் பத்து வருடம் அப்படியே இருந்து, அதில்த் தான் கல்யாணம் ஆன கையோடு அம்மாவை செப்பறைக் கோவில் கும்பாபிஷேகத்துக்கு அழைத்துப் போனேன். டிரைவர் பழைய விஷயத்தை நினைவு கூர்ந்தார்.
அன்று திருமலை அண்ணன் தான் அந்த டாக்ஸியைப் பேசி அழைத்து வந்தான்.அவன் எனது மூன்றாவது அண்ணன்.ஈஸ்டர்ன் பிராஞ்ச் ஸ்கூலில், எட்டு வரை படித்தான்.ஹெர் மாஸ்டர் ராகவையங்கார் அடித்தார் என்று கிளாஸை விட்டு ஓடி வந்தவன்தான்,அப்புறம் பள்ளிக் கூடமெ போகவில்லை.ராஜமார்த்தாண்டனைப் போல் கூர்மையான மூக்கு.ஆளும் சிகப்பாக இருப்பான்.அவன் ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து வந்தான்.அவன் சரியானபடி தொழில் கற்றுக் கொண்டிருந்தால் என்றோ அச்சகம் ஆரம்பித்திருப்பான்.மீரானியா அச்சுக் கூடம், ஹிலால் அச்சியந்திர சாலை, செண்பகாதேவி பிரஸ், என்று எல்லாவற்றிலும் குப்பை கொட்டிவிட்டு, கடைசியாக ஹமீது பிரஸ்ஸில் வேலைக்கிருந்தான். அதில் பெரிய முதலாளிக்கு இவன் வேலை மீது திருப்தியே இருக்காது.அவரது மகன், சின்னவர் கனி பாய்க்கு இவன் தான் செல்லப் பிள்ளை.ஒரு நாள் பெரிய முதலாளி, ஃபோர்மேனிடம் ஏதோ சத்தம் போட்டுக் கொண்டு இருந்தான் என்று, இவனை வேலையை விட்டு நிற்கச் சொல்லி விட்டார்.காலையிலேயே சொல்லி விட்டார், கனி அண்ணச்சி வெளியூர் போயிருந்தார், அவரிடம் சொல்லி விட்டுப் போகிறேன் என்று பிரஸ்ஸிலேயே இருந்தான்.பிரஸ்ஸில் இவன் இல்லாமல் யாருக்குமே பொழுது போகாது.இவனுக்கு வேலையே அச்சடித்து முடிந்த பாரங்களைக் கழுவி, எழுத்துகளை பிரித்து அதற்கான கேஸில் போட வேண்டியது மட்டும்தான்.மற்றவர்கள் ஒன்னுக்கு எட்டு சைசில் ஒரு பக்கம் கோர்த்திருந்தால், இவனது ஸ்டிக்கில். மூன்று வரி கூட கம்போஸ் ஆகியிருக்காது..
நிர்மால்யம் என்றொரு ``இலக்கிய இதழை” நாங்கள் நடத்திய போது முதலும் கடைசியுமான அந்த இதழை ஹமீது பிரஸ்ஸில்தான் அடித்தோம்.அதில் கார்லோஸ் (தமிழவன்) நாடகம் ஒன்று வெளியானது. அது ஒரு அப்சர்ட் நாடகம். தவிரவும் தமிழ்நாடன்,ஓவியர் பால் க்ளீ பற்றி ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அதைப் பார்த்துவிட்டு கசடதபற மகாகணப்தி கூட கிண்டலாகக் கேட்டார், உமக்கு பால் க்ளீ எல்லாம் தெரியுமா என்று. மஹாகணபதி நன்றாக வரைவார், லினோ கட், பன்வர் கட் எல்லாம், வரைவார்.அவரது எமிலி டிக்கின்ஸன் மொழிபெயர்ப்பு முக்கியமானது. அப்போது பக்கத்திலிருந்த ஞானக் கூத்தன், அவரைக் கடிந்து கொண்டார்.அப்படியெல்லாம் எதிர் பார்க்கக் கூடாது என்று.ஆனால் கட்டுரையைப் புரிந்தே, கொண்டு வந்திருந்தேன்..
விளையாட்டாக தமிழவன் நாடகத்தை நான் கம்போஸ் செய்தேன்.நான் ¼ சைசில் அரைப் பக்கம் கம்போஸ் செய்து முடித்து விட்டேன், அண்ணன், பெரிய சினிமா நோட்டீசை மர எழுத்துக்களால் கம்போஸ் செய்து முடிக்க முடியவில்லை.பிரஸ்ஸில் தொழிலாள நண்பர்கள் எல்லாம் என்னவே தீனா., ஓம்ம தம்பி ரெண்டு நாள்ல வேலை படிச்சிட்டாரு, நீரு எத்தனை வருஷமா இன்னும் கேலில இருந்து டைப்ப பிரிச்சுப் போட்டுக்கிட்டே இருக்கேரு,என்று கிண்டல் செய்தார்கள்.என் திருமண அழைப்பிதழையும் அங்கேயே நான் தான் கம்போஸ் செய்தேன். . இது முதல் சம்பவத்திற்கு பத்து வருடம் கழித்து. என் திருமணத்திற்கு அவன் தொழிலாளத் தோழர்கள் வாங்கிப் பரிசளித்த நிலைக்கண்ணாடி இன்னும் இருக்கிறது. இன்ஷா அல்லா, என் கடைசி வரை அது இருக்க வேண்டும்.
வேலையை விட்டு நிறுத்திய அன்று கனி பாய் வர இரவு எட்டு மணி ஆகி விட்டது.இவன் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தானாம். என்ன திருமலை, வா, போய் டீ வாங்கீட்டு வா என்றாராம் கனி அண்ணாச்சி. நான் ஒன்னும் வேலையில இல்லை என்றிருக்கிறான். அப்ப ஏன் நின்னுட்டு இருக்கே, என்று விளையாட்டாகக் கேட்டிருக்கிறார். வேய் பண்ணையாரே உக்காரும் உமக்கும் சேத்து டீ வாங்கீட்டு வரச் சொல்லுதேன் என்று சிரித்திருக்கிறார்.இங்க பாருங்க இவங்க எப்படி நோட்டீசை அடிச்சுக் கட்டி வச்சுருங்காங்கன்னு, நாளக்கழிச்சு படம் ரிலீஸ்,என்று பொறிந்திருக்கிறான். என்னவே கொண்டாரும் பாப்போம் என்று இவன் சட்டைப் பையில் இருந்து எடுத்து நீட்டியதை வாங்கிப் பார்த்திருக்கிறார். -என்று ரெட்டைக் கொம்பை வி’க்கு முன்னதாகக் கம்போஸ் செய்து, ஒண்ணுக்கு ரெண்டு சைசில் வாலமாக ஐயாயிரம் நோட்டீஸ் `கலைக் கோவில்’ படத்துக்காக, அடித்துக் கட்டி வைத்திருக்கிறார்கள்.அதைப் பார்த்ததும், கனி பாய்,ஏ பாவிகளா கெடுத்திட்டியளே காரியத்தை, ராமாபிலிம்ஸ் அய்யரு உண்டு இல்லேன்னு ஆக்கிருவாரே, கோபாலகிருஷ்ணா ப்ரஸ்ஸிலே இருந்து சினிமா ஆர்டர வங்க முடியாமல்லா வாங்கீட்டு வந்திருக்கேன், என்று அங்கலாய்த்திருக்கிறார். ஜங்ஷன் கோபால கிருஷ்ணா பிரஸ்,சினிமா நோட்டீஸ் அடிக்க மட்டுமே சாமி பிக்சர்ஸ் காரர்களால் நடத்தப் படுவது.
ஃபோர்மேன்ட்ட .இதைச் சொல்லத்தான் வந்தேன், பெரிய முதலாளி சத்தம் போட்டு வேலைய விட்டு நிக்கச் சொல்லிட்டாக என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வந்து விட்டான்.கனி அண்ணாச்சி ஆள் விட்டு என்னைக் கூப்பிட்டார், சிரித்துக் கொண்டே விஷயத்தை சொன்னார்.போ இன்னக்கி திருமலையால ஒரு அருமையான கச்சேரி போச்சு என்றார்.உள்ளே மும்முரமாக மறுபடி நோட்டீஸ் அடிக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது.
மறு நாள் காலையில் அண்ணாச்சி, வேலைக்குப் போனார் ஞாபக மறதியாய். பெரியவர், அன்னா திருமலை வந்துட்டான், திருமலை, போய் ராஜவெல்லி கம்பெனில பில் ரூவா வாங்கீட்டு வந்திரு, நீ போனாத்தான், உக்காந்து வாங்கிட்டு வர முடியும் என்று சொல்லி இருக்கிறார். எல்லாரும் சிரித்திருக்கிறார்கள்,கனி பாய் உட்பட. அப்பத்தான் பெரிய முதலாளிக்கும் தன் ஞாபக மறதி புரிந்திருக்கிறது..
அவனை அங்கே மைனா என்று கிண்டலாகக் கூப்பிடுவார்கள். அவன் மைனாவதி ரசிகன். மைனாவதிக்கு உலகிலேயே இவன் மட்டும் தான் ரசிகனாயிருந்திருக்க முடியும்.ஆரவல்லி படத்தின் பாட்டுப் புத்தகத்தில் வந்த மைனாவதி ஸ்டில்லை அட்டையில் ஒட்டி அதற்கு கண்ணாடிப் பேப்பரெல்லாம் ஒட்டி அழகாக ஃப்ரேம் போட்டது போல் செய்து தன் பீரோலுக்குள் வைத்திருப்பான்.எனக்கு சாரதா பட ஸ்டில்களை அப்படி ஒட்டி வாங்கி வந்து தந்தான்.அதுதான் என்றில்லை சில்பியின் படம் என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.மீனாட்சி, அபிராமி,என்று சில்பி வரைந்த படங்களை தடிமனான அரை பவுண்டு அட்டையில் ஒட்டி கண்ணாடிப் பேப்பர் சுற்றி வீட்டில் போட்டிருப்பான்.அவைகளைத்தான் அப்பா போன பிறகு எங்களால் விற்க முடியவில்லை, மற்ற போட்டோ ஃப்ரேம், கண்ணாடிகள் எல்லாம் விலையாகி விட்டன.வீடு இருக்கும் நிலையில் அவனுக்கு கல்யாணமும் வாய்க்கவில்லை.எனக்கு வேலை கிடைதததும், என் கல்யாணம் முடியட்டும் உனக்கும் ஒரு பெண்ணைப் பார்ப்போம் என்று சொல்லியிருந்தார்கள் என்று பின்னால் தெரிந்தது.
அவன் எப்போது சிவாஜி ரசிகனாக மாறினான் என்று தெரியாது. ஒரு தீபாவளிக்கு மன்னாதி மன்னன் படத்திற்கு போய்வந்த பின் என்று யாரோ சொன்ன நினைவு.அவனுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது.பழநி படம் 1965 பொங்கலுக்கு வந்த போது நான் தான் அவனுக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து கொடுத்தேன்.அதே போல் கௌரவம் படத்துக்கு நான் தான் டிக்கெட் வாங்கி அனுப்பி வைத்தேன்.ராஜ ராஜ சோழன் படத்திற்கு, பெரிய எதிர் பார்ப்பிருந்தது., தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம், ஜி.உமாபதி தயாரித்தது என்று. பூர்ணகலா என்று ஒரு புது தியேட்டரில் வந்தது.அதன் உரிமையாளர்களின் தம்பி பாபு என்கிற சிவராஜ்,என் கல்லூரித் தோழன். அண்ணன் அதற்கு டிக்கெட் கிடைக்குமா என்று என்னிடம் தயங்கித் தயங்கி கேட்டான்.அவன் இரண்டு வார்த்தை பேசுவதற்குள் ஒன்று வெகுளித் தனமாய் சிரிப்பான் அல்லது காச் மூச்சென்று கத்துவான்.படம் ரிலீசாகும் மறு நாள் எனக்கு எம்.எஸ் சி தேர்வு இருந்தது. சரி போய்க் கேட்டுப் பார்க்கலாம் என்று.முதல் நாளே சைக்கிளில் போய் பாபுவிடம் சொல்லி வைத்தேன். அவன், ஏய் நீ எங்கப்பா, இங்க வந்தெ என்று கிண்டலடித்தான்.பக்கத்திலேயே டி எஸ்.எஸ்.மணி நின்ற நினைவு, அவனும் பாபுவும் ஸ்ரீபுரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள். எனக்கு வேண்டாம்ப்பா நம்ம அண்ணன், கணேசன் ரசிகன்,அவனுக்கு மட்டும் ஒரு டிக்கெட் தா என்று விஷயத்தைச் சொன்ன பின், சரி வா ஒரு டிக்கெட் தானே ஒனக்கு இல்லாததா என்றான்.
மறுநாள் நாங்கள் போன போது டிக்கெட்டெல்லாம் காலி. கூட்டம் கடுமையாக இருந்தது.தியேட்டரும் சின்னத் தியேட்டர். பாபுவை தாமதமாகத்தான் பார்க்க முடிந்தது.அவன் மறந்தே போயிருந்தான். அவன் தம்பியிடம் கேட்டான், ஒரு டிக்கெட் இருந்தா குடுறா என்று.இல்லை.இப்பத்தான் சி டி ஓ ஆஃபீஸ் காரங்க கிட்ட குடுத்தேன், என்றான். அண்ணன் முகம் வாடி விட்டது. முணு முணுவென்று தனக்குத்தானே பேசிக் கொண்டான். இதுவும் அவனுக்கு வழக்கம்.அதைப் பார்த்ததும் பாபு கேட்டான் ஏய், அண்ணாச்சி பெஞ்சு டிக்கெட்டுக்குப் போவாரா என்று. ஆஹா அதுக்கென்ன என்று என்று சத்தம் போடாத குறையாய்ச் சொன்னான்.சரி நீ வெளியெ போய் சைக்கிள் டிக்கெட் வழியா வா என்றான். நான் அண்ணனை இழுத்துக் கொண்டு அந்தவழியாகப் போனேன். பாபு உள் வழியாக அந்தக் கேட்டிற்கு வந்தான். நான் தான் முதலில் நுழைய வேண்டி வந்தது, அவன் பின்னால் தட்டுத் தடுமாறி வந்தான்.சரி நீயும் போ என்று உள்ளே உட்கார வைத்து விட்டுப் பாபு போனான். டிக்கெட்டும் கிடையாது கட்டணமும் கிடையாது.ஓசியில் படம்.அண்ணனுக்கு சந்தோஷம்.
அதே போல் அவன் சந்தோஷமய் இருந்தது இன்னொரு சமயம். கேரளா டூர் போய் வந்த லட்டுக்குசு தம்பி, திரவியம் ரெண்டு மேக் டவலை தள்ளிக் கொண்டு வந்து விட்டான்.அதை கொடுக்க ஆள் தேடிய போது நான் எதிரே வந்திருக்கிறேன்.எண்ணன் இதை வச்சுக்கிடுங்க கைக்காசாவது மிஞ்சட்டும் என்றான்.நான் திருநெல்வேலிக்கு மாறுதலாகி வந்திருந்த சமயம்.வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். புகை துயரமாய்ப் படிந்த ரெண்டு கட்டு வீட்டில்,கரி படிந்த டியூப் லைட் அழுது கொண்டிருந்தது.பெரிய கொலு பொம்மை பீரோல், சின்ன பட்டாசலை ரெண்டாய் தடுத்து சுவர் போல் இருந்தது.பாட்டிலை எங்கே ஒளித்து வைக்க என்று பீரோல் பின்னே நின்று யோசித்துக் கொண்டிருந்த போது, காலடிச் சத்தம் கேட்டது. சுப்பு அரங்க நாதனும் நம்பியும் வந்தார்கள். கூட லயனலா என்று நினைவில்லை.நான் பாட்டிலை இன்னும் பத்திரப் படுத்தவில்லை.பட்டும் படாமலும் பேசிக் கொண்டு இருந்தேன். ரங்க நாதன் கண்டு பிடித்து விட்டார், புள்ள முழிக்கிற முழி பேளறதுக்குத்தான் என்று. என்ன விஷயம், என்று நைசாக உள்ளே பார்த்து விட்டார். சொள்ள மாடன் மாதிரி ரெண்டு நிக்கி தரையில. நம்பி, நீங்க கிளம்புங்க, இந்தாவந்திருதேன், என்று நம்பியைக் கிளப்புவதில் குறியாய் இருந்தார். நம்பீ அப்பொழுது இவ்வளவு குடிக்க மாட்டார்.நம்பிக்கும் புரிந்து விட்டது ஆனாலும் தெரு முனையில் காத்திருப்பதாகச் சொல்லி விட்டு கிளம்பினார். அய்யோ, இதுக்கு என்ன இருக்கு மிக்ஸ் பண்ண என்று கையைப் பிசையத் தொடங்கினார் ரங்க நாதன்.அழகான தேன் இருந்தது.அதையும் தண்ணீரையும் சேர்த்து ஆளுக்கு ஒரு மடக்கு சாப்பிட்டிருப்போம். திருமலை வந்தான்.நான் வீட்டில் வைத்து சாப்பிட்டதே கிடையாது.ரங்க நாதன் சமாளித்து அண்ணாச்சி இந்தாங்க கொஞ்சம் சாப்பிடுங்க என்று அவனிடம் நீட்டினார்.ஹேஹ் ஹே வேண்டாம் என்றான், ஆனால் வாங்கிக் கொண்டான். ஆளுக்கு ஒரு தம்ளர். அவனே போய் ஏதாவ்து தொட்டுக் கொள்ள வாங்கி வருகிறேன் என்று கிளம்பினான். ரங்க நாதன் தடுத்து விட்டார்.எனக்கு அதுவே போதுமானதாக இருந்தது.அண்ணன் சந்தோஷமாய் இருந்தான்.மூன்று பேரும் ஆபிரகாம் ஓட்டலுக்குப் போய் ரங்கநாதன் செலவில் சாப்பிட்டோம். ரங்கநாதன் மீதியைத் தன்னிடமே தருமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.எனக்கு, வேற சரக்கு கிடைக்காதே என்று யோசனையாய் இருந்தது. அண்ணனோ ஏயப்பா வாங்கிக் கிடலாம் என்றான்.மூன்று பேரும் மறுபடி வீட்டுக்கு வந்தோம் ரங்க நாதன் இன்னொரு அரையை எடுத்துக் கொண்டார்.அவரும் அண்ணனுமே அதிகம் பேசிக் கொண்டிருந்தார்கள்.ரங்கநாதன் அற்புதமான ஆள்.அதன் எதிரொலி அண்ணன் முகத்தில் தெரிந்தது.
ராஜ ராஜ சோழன் அரு. ராமனாதன் எழுதி ஆயிரம் முறை மேடை ஏறிய கதை.படத்தில் கங்காவின் ப்ரம்மாண்டமான செட் இருந்தது. அகலத்தையும், நம்பியாரையும் தவிர ஒன்றுமில்லை..திருமலையே சொல்லிக் கொண்டு வந்தான், இதுக்கு தங்கப் பதுமையே பரவால்ல போல்ருக்கே என்று. எப்பொழுதோ பார்த்த தங்கப் பதுமை நினைவுக்கு வந்தது. அதற்கும் அரு. ராமனாதன் தான் கதை வசனம்.அவர் ஆசிரியராய் இருந்த `காதல்’ என்ற பத்திரிக்கை ஒன்றிரண்டு திருமலை பீரோவில் இருக்கும்.அதில் கணேசன் வரைந்த படங்கள் கிளு கிளுப்பபூட்டுவதாய் இருக்கும்.
இப்போது சந்திப் பிள்ளையார் முக்கு சுருங்கி விட்டது.அங்கே கூட்டமெல்லாம் நடை பெறுகிறதா தெரியவில்லை. ஏகத்திற்கு ரொட்டி சால்னா கடைகள் பெருத்து விட்டன.போக்கு வரத்து ரொம்ப நெருக்கடியாகிவிட்டது.சந்திப் பிள்ளையாருக்கு எதிரே நின்று பழையபடி பேசிக் கொண்டிருக்க முடியுமா தெரியவில்லை.
முடியாது. இனி அந்தப்பக்கமே நடக்கக் கூட முடியுமா தெரியவில்லை.
பதினைந்து நாளாகிறது. டீ குடித்துவிட்டு ஓரமாய் நின்று கொண்டிருந்த திருமலையின் மீது லாரி ஏறி முகமே தெரியாமல் நசுங்கிச் செத்துப் போய் விட்டான், சந்திப் பிள்ளையார் சாட்சியாய்.ஆனால் அந்நேரம் அவர் நடையடைத்து உள்ளே இருந்திருக்கிறார்.
மூன்று கிலோ பஞ்சைத் திணித்து முகம் போல செய்திருந்தார்கள்.காற்றில் பறந்து வந்த பாலிதீன் பையில், சிதறிக் கிடந்த மூளையை அள்ளி எடுத்துப் போட்டு, அறுக்கக் கொண்டு போனார்களாம்..
முந்தின நாள் இரவுதான் பழைய பாட்டுக்களைப் பாடி, ஸ்ரீ ரங்கம் கண்ணனும் , சி மோகனும், நண்பர்களும் மதுரையில் கொண்டாடிக் கொண்டிருந்தோம்.கண்ணனிடம் தங்கப் பதுமை பாடலை பாடக் கேட்டேன், லிரிக்ஸ் ஞாபகம் இல்லை என்று சிறிது பாடினான்.`கண்ணிலே ஊறும் நீரும் இனி நம் நிலை காண நாணும்....’என்று எடுத்துக் கொடுத்தேன்.யாரோ ஆஹா என்றார்கள்.
காலையில் தள்ளாட வைக்கிற நீரிழிவுப் பசியுடன் மீனாட்சி கோயிலைச் சுற்றி வந்தேன்.இன்னும் தன் நிலைக்கு வரமாலேயே மேடையில் உட்கார்ந்திருந்த போது அலை பேசி அழைத்து தகவல் வந்தது.நான் பேசத் துவங்கும் போது பார்வையாளர்களில் ஒருவர் அலை பேசியில் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார். சற்று இடைஞ்சலாய் உணர்ந்தவன், பேச்சை நிறுத்தினேன். அவர் எழுந்து வெளியே போனார். நான் நினைத்தேன், நாமும் அலை பேசியை அணைத்து விட வேண்டும், நினைத்து முடிக்கும் முன் அழைப்பு வந்தது.திருமலை இறந்து விட்டான், பத்து நிமிடம் முன்.அவசரமாய்க் கிளம்பி வந்தேன்.
அந்திச் சூரியன் மறையும் முன், நான் வைத்த நெருப்பில், அவனது சிதை கனலத் தொடங்கி விட்டது.கிளம்பினோம். திரும்பிப் பார்த்த போது, திரும்பிப் பாக்காமப் போங்க ஐயா, என்று யாரோ சொன்னார்கள்.
ஆழி அலையாழி, பனி தீராத வீடு என்று மலையாளப் படங்களாக நினைவுக்கு வந்தது.ஓரிடத்து ஜனனம் ஓரிடத்து மரணம் என்று ஜேசுதாஸ் குரல் கேட்டது.துலாபாரம் நினைவுக்கு வந்தது.
``கண்ணு நீர்க் கடலின் களிமண் த்வீபிது- பண்டு நீ
ஞங்ஙள்க்கு எந்தினு தந்து....’’ வயலாரின் வரிகள் நினைவுக்கு வந்தது...அதற்குச் சற்றும் வலிமை குறையாத கண்ணதாசன் வரிகள் நினைவுக்கு வந்தது.
ஆண்டவனும் கோயிலில் தூங்கி விடும் போது
யாரிடத்தில் கேள்வி கேட்பது
ஏழைகளின் ஆசையும்
கோயில் மணி ஓசையும்
வேறு பட்டால் என்ன செய்வது
தர்மமே மாறு பட்டால் எங்கு செல்வது
ஆடுவது நாடகம்
ஆளுக்கொரு பாத்திரம்
இறைவனுக்கு வேலை என்னவோ
ஆடவிட்டுப் பாடுவான்
மூடு திரை போடுவான்
மேடை அவன் மேடையல்லவோ
வாழ்க்கையின் பாதை அவன் பாதையல்லவோ...
நினைவுகள்...... நினைவுகள்........
வீடு வந்து சேரும் போது ஏற்கெனவே தெருவெங்கும் அச்சகத் தோழர்கள் ஒட்டியிருந்த அஞ்சலி நோட்டிஸைப் நன்றாகப் பார்த்தேன்.கூரிய நாசியும் வெகுளிச் சிரிப்பும்.... அது வரை வராத அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.
3 comments:
நெல்லை டவுனில் சந்தி பிள்ளையார் முக்கை சொல்கிறீர்களா. ரயில்வே பேடர் சாலை வாகையடி முக்கு தாண்டி லச்சுமி திரை அரங்கு தாண்டி மந்திர மூர்த்தி பள்ளிகூட சாலையில் உள்ளது.
டவுன் கீழ ரத வீதி தேரடி திடலும் பிரபலமான அரசியல் மேடை களம். வீ பி சிங், ராஜிவ், வாஜ்பாய், வைகோ, யஸ்வந்த் சின்ஹா, த்தீபொறி ஆரும்குஅம், காளிமுத்து என்று பலர் மேடை ஏறிய இடம் அது.
பதிவு அருமை
நன்று
அருமையான பதிவு
ரொம்ப வருத்தமா இருக்கு ஸார்
Post a Comment