Sunday, May 10, 2009

வீழும் கண்ணீர் துடைப்பாய்....







டி.என். ஹரிகரன். இரண்டே முக்கால் ஆண்டுகள் என்னுடன் கல்லூரியில் படித்தான்.அப்புறம் பம்பாயில் அவனது சகோதரன் வேலை வாங்கி வைத்திருப்பதாகச் சொன்னதும் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டுப் போய் விட்டான்.ஜங்ஷனிலிருந்து சைக்கிளில் தான் வருவான்.கிட்டத்தட்ட ஏழு மைல்.அநேகமாக பேட்டை மீனாட்சி டாக்கீஸ் அருகே அவனுடன் நான், பல்லவன் நடராஜன், அருனாசலம் எல்லாம் சேர்ந்து கொள்வோம்.அல்லது `புட்டு ரெடி ஓட்டல்’ அருகே சேர்ந்து கொள்வோம். ஓட்டலுக்கு பெயர் எதுவும் கிடையாது. சிறியதாக புட்டு ரெடி என்று ஒரு போர்டு இருக்கும்..அதுவும் யாரும் தேர்ந்த ஓவியன் எழுதியதில்லை. பொதுவாகவே, பேட்டையில் விளம்பர போர்டுகளோ, கடையின் பெயர்ப் பலகைகளோ, இருக்கவே இருக்காது.
ஜங்ஷனில் அப்போது ஜாலி ஆர்ட்ஸ் சைன் போர்டுகள் பிரபலம்.அவருடைய லெட்டரிங் புது விதமாக இருக்கும் அவரிடம் நடையாய் நடந்து, நானும் நெல்லை லாட்ஜ் கணேசனும் அன்பே வா படம் வெளியாகிற அன்று `இத்திரைப் படம் காண வந்துள்ள ரசிகப் பெருமக்களை வரவேற்கிறோம்.’ நிருத்தியச் சக்கரவர்த்தி, எம் ஜி ஆர் ரசிகர் மன்றம் நெல்லை-1 என்று ஸ்லைடு தயாரித்து வாங்கி வந்தோம். இலங்கையில் கொடுத்த பட்டம் அது. எம் ஜிஆரின், 1960 களில் உள்ள மேக் அப் போடாத, படம், பார்டர், கொச கொசவென்ற டிசைன், எதுவும் இல்லாமல், பளீரென்று இருந்தது. ஸ்லைடை நேராகப் பார்க்கையில் எனக்கு திருப்தியாய் இல்லை. ஆனால் ஆர்டிஸ்ட் சொன்னார், ஸ்க்ரீனில் பிரமாதமா இருக்கும் தம்பி என்று.அவரிடம் அப்பப்ப கோபுலு படங்கள்,குமுதத்தில் வர்ணம் அவர்களின் வாஷ் டிராயிங்க் பற்றி, அதில் புதிதாய் வரைந்து கொண்டிருக்கிற ஜெயராஜ் பற்றி இருவரும் ஒரே நேரத்தில் வியப்பைப் பகிர்ந்து கொண்டது, சினிமா விளம்பரங்கள் பற்றிப் பேசியதில் அவருக்கு என் மீது ஒரு பிரியம் உண்டாகி இருந்தது.எல்லாவற்றையும் விட பாலஸ் டி வேல்ஸ் தியேட்டரில், பிரமாதமாக தட்டி போர்டு எழுதுகிறவர் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததும் அவருக்கு என்னை ரொம்பப் பிடித்துப் போயிற்று.,`அவரதான் என் குருநாதர் மாதிரீ’, என்று சொன்னார்.
அது போலவே நாங்களே எதிர்பார்க்காத தருணத்தில், படம் ஆரம்பிக்க மணியடித்து,அரங்கம் இருளில் மூழ்கியதும் திரையில் ஸ்லைட் பளீரென்று விரிந்தது.கை தட்டல் காதைப் பிளந்தது.இப்படி ஸ்லைடு போடுவது திருநெல்வேலியில் அதுதான் முதல் முறை. ஹரிகரன் (`சிலர்’ எதிர்பார்ப்பது போலவே) சிவாஜி ரசிகன்.அவனுக்கு புட்டு ரெடி ஓட்டலில் தயாரிக்கிற கடலை மிட்டாய் ரொம்பப் பிடித்தம்.அதில் லேசான சாக்லெட் வாசனை இருக்கும்.ஹரி நோட்டுத்தாளை கிழித்து கவிதைகள் எழுதி வருவான்.எல்லாமே காதல் கவிதைகள்., மணமகள் படத்தில் வி என் சுந்தரம் பாடுகிற உன் கண்ணில் நீர் வழிந்தால்.. பாட்டையொற்றி ஒரு காதல்ப் பாட்டு எழுதி இருந்தான்.நான் சொன்னேன், இது பாரதியார் பாட்டு. இதை வைத்து, ஆனந்த விகடனில் தொடர் கதை வந்திருக்கிறதே தெரியாதா என்று.அவனுக்கு சற்று வருத்தமாகப் போயிற்று.அதைச் சமாதானம் செய்யும் முயற்சியில், அன்று மாலை ஜங்ஷன் கைலாச புரம் கோயிலுக்கு அவன் ஆளைப் பார்க்க வருவதாகச் சொன்னேன்.ரொம்ப நாளாகக் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அன்றுதான் அந்தக் கோயிலுக்குப் போனேன், சிறு வயதில் போன நினைவு.கோயில் பெரிதாக இருந்தது.வெளிப் பிரகாரத்தில் தளமெல்லாம் சுத்தமாக சிமெண்ட் போடப் பட்டு அழகாயிருந்தது.வெளிப் பிரகாரத்தில் தட்சணா மூர்த்தி சன்னதியாய் இருக்கலாம், அதன் அருகில் காத்திருந்தோம். வெளிச்சம் பிரமாதமாயில்லை.ஒடிசலாய் இரண்டு பெண்கள் வந்தன.அவனில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.அவன் எப்போதும் சட்டை காலருக்குள் கைக்குட்டையை வைத்திருப்பான். சற்று ரவுடித்தனமாக இருக்கும்.அதை அவசரமாக எடுத்தான், அவளுக்குப் பிடிக்காது என்றபடியே. அதில் ஒரு பெண், வேகமாக அருகே வந்தது.இடுப்பில் இருந்து எதையோ எடுத்துக் கொடுத்ததது. நான் என்னை அறிமுகப் படுத்துவான் என்று ஆசையாய் இருந்தேன்,அதற்குள் போய்விட்டது.நான் சற்றுத் தள்ளியே இருந்தேன்,இடுப்புப் பாவாடையைத் தளர்த்தி,எதையோ அவனிடம் காண்பித்த படியே போய் விட்டது.
ஒரு நோட்டுத்தாளில் இரண்டு மூன்று கொழுக்கட்டைகள் சுடச் சுட இருந்தது.கொழுக்கட்டைகளை அவசரமாக மடியில் சுருட்டி வைத்து எடுத்து வந்ததில் இடுப்பு பொத்து விட்டதாகச் சொன்னாளாம்.என்னிடம் ஒன்றை கொடுத்தான்.எனக்கு என்னவோ போலிருந்தது.வேண்டாம் அது முறையில்லை என்பது போல் மறுத்து விட்டேன்.அவனுக்கு சந்தோஷம். நீ உண்மையிலேயே வாத்தியார் ரசிகன் தான் என்றான்.எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருந்தது.என்ன கேட்டும் அந்த நோட்டுத்தாளைக் காண்பிக்க மறுத்து விட்டான்.ஒரு காதல் கடிதத்தை நான் அது வரை படித்ததே இல்லை.சைக்கிளில் லைட் கிடையாது.அதனால் உருட்டிய படி வந்தேன். ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷன் தாண்டினால் சைக்கிளில் ஏறிக் கொள்ளலாம். அதுவும் கூட பயந்து பயந்துதான் வர வேண்டும்..பேலஸ் டி வேல்ஸில் விவசாயி ஓடிக் கொண்டிருந்தது.`காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது...’பாட்டு.அப்படியே ஒரு இந்திப் பாட்டின் காப்பி. நாமும் யாரையாவது காதலிக்கலாம் போலிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன், முதன் முதலாக.காதலும் கவிதையும் தோன்ற, ஹரி தான் காரணம், என்று தோன்றுகிறது.
ஹரியை தினமும் சந்தித்தாலும். நெருக்கம் ஏற்பட்டதென்னவோ இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதுதான். இது இரண்டாவது போராட்டம்.தி.மு.க, ஆட்சிக்கு வந்த பின் திடீரென்று மத்திய அரசு, ஆல் இந்தியா ரேடியோவின் சென்னை வானொலி நிலையம் என்பதை, ஆகாஷ் வாணி என்று மாற்றியது.அதை எதிர்த்து பெரிய போராட்டம் வெடித்தது.மாணவர் போராட்டமென்றால், எப்போதுமே இந்துக் கல்லூரி முன்னால் நிற்கும். 67-இல் காங்கிரஸ்ஸை வீழ்த்திய தேர்தல் போராட்டம் முடிந்து, மாணவர்களிடையே, எதையாவது செய்ய வேண்டுமென்று ஒரு வேகம் இருந்தது.மத்திய அரசு தன் சுய ரூபத்தைக் காட்ட ஆரம்பித்ததும். மறு படி ஒரு போராட்டம் வெடித்தது.மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம். ரயில் மறியல் என்று இரண்டு நாட்கள் தொடர்ந்தது.மூன்றாம் நாள் ரயிலில் சென்று ஸ்டேஷனில் உள்ள இந்தி எழுத்துக்களையெல்லாம் தார் பூசி அழிப்பது என்று கிளம்பினோம்.பதினோரு மணிக்கு ரயில், பேட்டை ஸ்டேஷனுக்கு வரும்.காலையில் அதில் தான் ட்ரெயின் ஸ்டூடண்ட்ஸெல்லாம் கல்லூரிக்கு காலையில் வருவர்கள். அதுவே ஜங்ஷன் வரை போய் திரும்பிவரும்.அதில் செங்கோட்டை வரை போய் வருவதென்று தீர்மானித்தோம்.பல்லவன் நடராஜனும், அருணாசலமும் தயங்கி நின்று விட்டார்கள்.நனும் ஹரியும் உற்சாகமாகக் கிளம்பிவிட்டோம்.ஹரி, சைக்கிளை அவன் பக்கத்து வீட்டுப் பையனிடம் கொடுத்து விட்டான்.எனக்கு சைக்கிளை என்ன செய்வது என்று தெரியவில்லை. கல்லூரி விடுமுறை அறிவித்து விட்டார்கள்.
ஹரி சொன்னான். கல்லூரிக்கு அருகில், ஆனால் சற்றே தள்ளி, ஒரு பர்மா அகதி கடை போட்டிருக்கிறார்.வகுப்பு இல்லாத நேரங்களில் அங்கே ஒரு கூட்டம் இருக்கும். டீ காபி சிகரெட் இத்தியாதி....இத்தியாதி. கொஞ்சமாக சாப்பாடும் போட்டு வந்தார்கள்.பக்கத்து கூட்டுறவு மில்லிலிருந்தும் ஆட்கள் வந்து சாப்பிடுவர்கள்.அங்கே சைக்கிளைப் போட்டுப் போகலாம், என்றான் ஹரி.ரயிலில் போய் விட்டு, அதே ரயிலில் மாலை திரும்பி விடலாம் என்று திட்டம். சைக்கிளை, அங்கே கொண்டு போய் விட்டோம்.புறம் போக்கு இடத்தில் கூரை போட்டு கடை நடந்து வந்தது.அந்தப் பகுதியில் நிறைய அகதிகள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் கொஞ்சம் தள்ளி சுத்தமல்லி பகுதியில் வசித்தார்கள்.சைக்கிளை குடிசைக்குப் பின்புறமாக வைக்கச் சொன்னார் அந்த ஆள்.சேதுபதியோ என்னவோ பேர் சொன்னான் ஹரி.நான் பின் புறம் சென்றபோது அவர் மனைவி கல்லுரலில் ஏதோ அரைத்துக் கொண்டிருந்தாள்.இரண்டு மூன்று தகர ட்ரம்களில் தண்ணீர் தளும்ப நிறைந்திருந்தது.பெரிய உரலில் கொஞ்சமாக மாவு சத்தத்துடன் அரை பட்டுக் கொண்டிருந்தது. நான் சைக்கிளை நிறுத்திப் பூட்டினேன். காலேசு கிடையாதாமில்லா அதனாலதான் ஊறப்போட்டதில பாதிப் பருப்பை எடுத்துக் காய வச்சிட்டென் என்று கேட்காமலே சொன்னாள்.புறங்கையால் நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்தாள்.அதற்குள் சேதுபதி கூப்பிடவே மாவை ஒதுக்கி குழவியை ஒட்டி வைத்து விட்டு ஒரு நார்ப் பெட்டியால் மூடினாள், மரத்தடி பார்த்தீங்களா,ஏதாவது எச்சம் போட்டுரும் என்ற படி முன் பக்கம் நகர்ந்தாள்.நானும்.
ஹரி ஒரு வடை தின்று கொண்டிருந்தான். எனக்கும் ஒன்றை எடுத்துத் தந்தான். சீக்கிரம் ரெண்டு டீ போடுங்க என்றான்.இன்னும் ரெண்டு வடை வேணும்ன்னா எடுங்கோ என்று அவர் மனைவி சொன்னாள். டீயைக் குடித்துக் கொண்டிருந்த ஹரி இன்னும் இரண்டு வடையை எடுத்து ஒரு தாளில் சுற்றிக் கொண்டான்.டிரெயின் வரும் ஓசையும் மாணவர்களின் கூச்சலும் கேட்டது.நாங்கள் இரண்டு பேரும் ஓடத் துவங்கினோம். சேதுபதி சைக்கிள் சாவியை வேணும்ன்னா குடுத்துட்டுப் போங்க மேக்காம போறீங்காள்ளா., என்றார்.நானும் அது நல்ல யோசனை என்று கொடுத்து விட்டு ஓடினேன்.
ட்ரெயின் நிரம்பி வழிந்து விட்டதுஸ்டேஷன் பக்கத்து இந்தியன் ஆயில் டிப்போ அப்போதுதான் நிறுவிக் கொண்டிருந்தார்கள்.அங்கிருந்து ஒரு பெரிய தார் டின்னையே தள்ளிக் கொண்டு வந்து விட்டார்கள்.அதை கடைசி கார்டு வண்டியில் ஏற்றினார்கள்.அவர் தடுத்த போது, பெரும் கூச்சல் எழுந்தது.அவர் அமைதியாகி விட்டார்.முதலில் ஹரி தான் மற்றவர்களுடன் ஒவ்வொரு ஸ்டேஷனாக இறங்கி தார் பூசி அழித்துக் கொண்டிருந்தான். நான் அவன் வேஷ்டியை மடித்துக்கட்ட, கைக்குட்டையை கழுத்தில் நன்றாக வைத்து விட, உதவிக் கொண்டிருந்தேன்.டிரெயின் கிளம்பினால் சங்கிலியை இழுத்து நிறுத்தி விடுவோம், எல்லாரும் ஏறி கார்டு வண்டியிலிருந்து கருப்புக் கொடியை எங்களில் யாராவது காண்பித்தால்தான் வண்டி ஓடும்.ஆழ்வார்குறிச்சி காலேஜ் பின்புறமாக ரயில் வந்த போது கல்லூரிக்குள் கற்கள் பறந்தது.
பாதி தூரத்தில் மாணவர்களின் கூட்டம் குறைந்து விட்டது. அநேகமான ட்ரெயின் ஸ்டூடண்ட்கள் அவரவர் ஊர் வந்ததும் இறங்கி விட்டனர்.ஹரி வைத்திருந்த தோசையையும் என் சாப்பாட்டையும் சேர்த்துச் சாப்பிட்டோம், நான் தான் அவனுக்கும் ஊட்டினேன்.அவனுடைய வேஷ்டியெல்லாம் தார் அப்பி இருந்தது.
அமபை வந்த போது அநேகமாக பாதிப்பேர் இறங்கி விட்டனர்.அதற்குப் பிறகு நானும் தார் வாளி தூக்க ஆரம்பித்து விட்டேன்.தார் வாளியும் வாழைத்தாரின் தடித்த காம்பை வெட்டி கல்லால் ஒரு முனையில் நைத்த ப்ரஷ்ஷுமாக நானும் அழிக்க ஆரம்பித்தேன்.கை காலெல்லாம் தார். என் வேஷ்டியில் பெரும்பாலான இடங்களில் தார்.ஒரு வழியாக ட்ரெயின் செங்கோட்டை ஸ்டேஷனில் நின்றது. ஸ்டேஷனில் இருந்து ஊர் தூரமாக இருந்தது. இரு நூறு பேருக்கு குறையாமல் ஊர்வலம் போனோம். ஒரு நோக்கமும் இல்லை.யாரொ செங்கோட்டை தபால் நிலையம் போகலாம் என்றார்கள். அங்கே போவதற்குள் ஏற்கெனெவே அங்கே இந்தி எழுத்தை அழித்திருந்தார்கள். எங்களுக்கு வேலையில்லை.ஸ்டூடண்ட் சேர்மன் எல்லாரும் ஏழு மணிக்குள் திரும்ப ஸ்டேஷன் வந்து விட வேண்டும் என்றார்.கையில் ரெண்டு மூன்று ரூபாய் இருக்கும் வரும் போது ஆயிரக் கணக்கில் வந்ததனால் டிக்கெட் பிரச்னையில்லை. இப்ப டிக்கெட் கேட்டா என்ன செய்யறதுன்னு பயம் வந்து விட்டது.
பசி. சாப்பிடப் பயம்., ஆயிரங்காத்தான் என்று நினைவு.ஒரு ஏத்தம் பழம் வாங்கித் தந்தான். அவந்தான் கிளாசிலெயே அதிக உயரம்.அவன் மேல்த்தான் அதிக தார், அவனே அட்டக் கறுப்பு.ட்ரெயின் ஒரு மாதிரிக் கிளம்பியது.செங்கோட்டை ஸ்டேஷனில் வயிறாரத் தண்ணீர் குடித்தோம்.யாரும் டிக்கெட் கேட்கவில்லை.எங்களைத் தவிர மற்ற பயணிகள் உட்காரவே இல்லை. சீட், ஜன்னல், கதவு, கைப்பிடி என்று கேரேஜ் முழுக்க தார்..
பேட்டை வந்த போது, ட்ரெயின், சிக்னலுக்காக சேதுபதி கடைக்கு அருகேயே நின்றது. ஹரி கேட்டான், நான் வரவா இல்லேன்னா நீயே சைக்கிள எடுத்துக்கிடுவியா என்று. நான் அப்படியே ஜங்ஷன் போயிருவேன் என்று.நானும் அவசர அவசரமாக இறங்கினேன். கடை சாத்தி இருந்தது.உள்ளே சிம்னி விளக்கு எரிவது தென்னந்தட்டி வழியே தெரிந்தது. அண்ணாச்சி, அண்ணாச்சி என்று பலமாக சத்தம் கொடுத்தும் யாரும் வருவதாயில்லை.எனக்கு பயம் தொற்றிக் கொண்டது. அதற்குள் ட்ரெயின் தூரத்தில் ஸ்டேஷனை விட்டு கிளம்பியது தெரிந்தது.சரிதான் இன்று அம்பேல், ஏற்கெனெவே வீட்டில் போட்டுத் துவைப்பதற்கு ஏகப்பட்ட விஷயமிருக்கு, இதில சைக்கிள் வேற இல்லேன்னா வேற வினையே வேண்டாம்.நானே பின் பக்கம் போய்ப் பார்த்தேன் சைக்கிள் எதுவும் தென்படவில்லை.இருட்டாய் வேறு இருந்தது. அங்கிருந்தும் அக்கா அக்கா என்று கூப்பிட்டேன்.மறுபடி வாசல் புறமாக வந்து கூப்பிட்டேன். கதவு என்று இருந்தாலும் தட்டியாவது பார்க்கலாம்.இங்கே வெறும் மூங்கில் படல்தான் இருந்தது.
கொஞ்ச நேரம் கழித்து அது யாரு என்று அவர் சத்தம் கேட்டது.அண்ணாச்சி சைக்கிளை எடுக்கணும். என்றேன்.படலைச் சுற்றி இருந்த சங்கிலியைத் திறந்து கொண்டு வந்தார்.சைக்கிளைத் தர முடியாது அவன் நிறைய பாக்கி காசு தர வேண்டி இருக்கு என்றார். அதுக்கு நான் என்ன செய்ய, அவன் நாளைக்கி வந்து தருவான் என்றேன், நாளைக்கா, இன்னும் ஒரு வாரத்துக்கு காலேசு கிடையாது.அவனைக் கூட்டீட்டு வந்து சைக்கிளை எடுத்துக்கொ என்றர். எனக்கு அழுகை வராத குறை.எவ்வளவு தரனும் என்றேன். நீ எவ்வளவு வச்சிருக்கே என்றார். அதைச் சொல்லவும் பயம் இருக்கிற மூனு ரூபாயக் குடுத்துட்டு அப்புறமும் சைக்கிளைத் தரலைன்னா,,,முதல்ல சைக்கிளைக் குடுங்க இல்லேன்னா போலீஸோட வாரேன் என்றேன்.
அதற்குள் அவன் மனைவி வந்தாள். என்ன கருமம் செஞ்சோமோ இங்க வந்து கஷ்டப் படுதோம்.நம்மள ஒத்தது அந்தா அங்க சுத்தமல்லிலே தசைய வித்துப் பொழைக்குக நாம மரியாதையா இருக்கோம், ஏற்கெனெவே கச்சேரிக்காரன் தொந்தரவு தாங்கலை..அவன்கிட்ட குடுங்க, எப்பா எவ்வளவு இருக்குப்பா கையில என்றாள். ரெண்டு ரூபா இருக்கு என்றேன். அதைக் குடு என்றாள்.கொடுத்தேன். வீட்டிற்குள்ளிருந்து சைக்கிளைக் கொண்டு வந்தான்.ஒன்றுமே பேசவில்லை. புடுங்காத குறையாய் சைக்கிளை வாங்கிக் கொண்டு ஏறி மிதித்தேன். லைட், போலீஸ் பற்றியெல்லாம் எந்த பயமும் தனியாய் இல்லை.
ராத்திரி அப்பா கண்ணில் படவில்லை.மறு நாள் காலையில் மாடிக் கதவைச் சாத்திக் கொண்டு மண்ணெண்ணையைத் தொட்டுத்தொட்டு வேஷ்டியின் தாரை போக்கிக் கொண்டிருந்தேன்.அது போகிற வழியாயில்லை. கீழிருந்து கதவை யாரோ பலமாகத் தட்டினார்கள்.நான் எல்லாவற்றையும் சற்றே ஒளித்து வைத்து விட்டு படியிறங்கி கதவைத் திறந்தேன்.ஹரி. வா மேலே போவோம் என்று மாடிக்குப் போனோம்.இது என்னடா சவம் வேட்டிய தூரப் போடாம, என்ன செய்யறே, இன்னிக்கி பேப்பரைப் பாத்தியா, அண்ணா சட்ட சபையைக் கூட்டி இரு மொழித்தீர்மானம் கொண்டு வந்திருக்காரு என்றான்.அவன் அண்ணா என்றது ஆச்சரியமாய் இருந்தது.
ஹரி பம்பாய் போனபின், ஒரு தரம் வந்தான். ஒரு கதை எழுதி எடுத்து வந்திருந்தான்.அவனுடைய சொந்தக் கதை. அவன் சிநேகிதியைப் பற்றியது தான்.நான் என்னுடைய கவிதை நோட்டை அவனிடம் காண்பித்தேன்.ரொம்ப ஆச்சரியப் பட்டான்.என் தற்கொலை முயற்சி பற்றி திரும்பத் திரும்பக் கேட்டான். என் கவிதைகள் ஒன்றிரண்டு அப்போது பிரசுரமாகியிருந்தது.விகடன், கல்கிக்கெல்லாம் அனுப்பு என்றான்.
ஒரு வாரம் கழித்து அவனை வழிஅனுப்ப வருவதாகச் சொல்லியிருந்தேன்.போகவில்லை. பம்பாய் போய் எழுதியிருந்த கடிதத்தில் வியட்நாம் வீடு படத்தின் பாட்டை ஒரு பக்கம் முழுதும் எழுதியிருந்தான்.1`வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி...’ என்பதை சற்றே சாய்த்து துடிப்பாகத் தெரியும் படி எழுதியிருந்தான். அதில் கடைசியில் இரண்டு கண்ணீர்த் துளிகள் வேறு....ரொம்ப நாள் அந்தக் கடிதத்தைப் பத்திரமாய் வைத்திருந்தேன்.

No comments: