அந்த வீடு, சம்முவத்திற்குச் சொந்தமான வீடு. சம்முவம் வசிக்கும் வீடு அதற்கு அடுத்த தெருவில் இருந்தது..அநேகமான தெருக்களில் வீடுகளின் பின்புறமும் அடுத்த தெருவின் பின்புறமும் இணைகிற இடத்தில் ஒரு சந்து இருக்கும். அது பீ முடுக்கு என்றழைக்கப் படும்.அதன் வழியாக பல வீட்டின் உலர் கக்கூஸ்களுக்குப் போக முடியும்.சில சமயங்களில் அதன் அருகில் நல்ல வீடுகளும் அமைந்து விடும்.அப்படி எடுப்புக் கக்கூஸ் போகிற வழியில் அமைந்தது தான் சம்முவத்தின் இந்த வீடு.இரட்டை வீடு முன்னால் பெரிய முற்றம்.ஒரு தலைவாசல்.தலை வாசலக் கதவு சாற்றியே இருக்கும், நாற்றத்திற்குப் பயந்து. வீடு உறுதியாகவும் குளுமையாகவும் இருக்கும்.இதே வீடு வேறு இடத்தில் இருந்தால் அதன் மதிப்பே தனி.சம்முவத்தின் அப்பா, பாப்புலர் டாக்கீஸில் சம்பந்தமுள்ளவர். சினிமாக் கொட்டகைக் காரர் வீடு என்று அது பிரபலம். அந்த வீட்டின் இன்னொரு பிரபலம், அதில் ஒரு மாததிற்கு மேல் யாரும் இருந்தது கிடையாது.அது காலியாகுகிற சமயத்தில் சம்முவம், என்ன வேலையாயிருந்தாலும், போய் விடுவான்.காலி செய்து போகிறவர்கள் ஏதாவது காசு விட்டுச் சென்றிருப்பார்கள்.ஆறாம் வகுப்பு பெயிலாகி, என்னோடு இரண்டாம் தடவையாகப் படித்தான். பொதுவாக இந்த மாதிரிப் பையன்களைத் தான் கிளாஸ் லீடராக ஆக்குவார் வாத்தியார். சம்முவம் கிளாஸ் லீடர்.
என் அப்பாவுக்கு சம்முவத்தின் அப்பாவை நன்றாகத் தெரியும்.காலையில் போத்தி ஓட்டலில் ரெண்டு பேரும் சந்தித்து `சில’ விஷயங்களைப் பேசிக் கொள்ளுவார்கள்.அப்படிப் பேசுகிற நாட்களில் நான் சமயத்தில் அவர்களுடன் இருப்பேன். சில நாள் சாயந்தரம் போத்தி ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, அப்பா என்னை தன்னுடன் அழைத்துப் போவது வழக்கம்.பக்கத்து வீட்டு அமீனாப் பிள்ளை கூட சொல்லுவார், `வேய் அவனை எதுக்கு கூடக் கூடக் கூட்டீட்டு வாரேறு,’ என்றாலும் அப்பா என்னை தவிர்த்ததில்லை. ஒரு நாள் அவர்களுடன் பேசிக் கொண்டே நயினார் குளம் கரைக்கு வந்து அரச மரத்தடியில் உட்கார்ந்திருந்தோம்.பேச்சு எப்பவோ பாளையங்கோட்டையில் நடை பெற்ற பாம்பே ஷோ பற்றி இருந்தது.`இதெல்லாம் என்னவே பொருட்காட்சி, அந்தக் காலத்துல பாம்பே ஷோ பாத்திருக்கேரா என்று அமினாப் பிள்ளை இன்னொரு சிநேகிதரிடம் பேசிக்கொண்டிருந்தார், பத்து ரூபாய் டிக்கெட் கட்டணும், அழகழகான குட்டிகள்,வரிசையா வந்து நிக்கும்,முதல்ல போகஸ் லைட்ல்லாம் பிரமாதமா இருக்கும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா லைட்டெல்லாம் அணைச்சிருவான். இதுக்குள்ள நூறு ரூபாய் டிக்கெட்ட வச்சுக் கிட்டு நம்ம சீட்டுக்கே வந்திருவானுக. நூறு ரூபாய் கொடுத்து வாங்கினா மேடைக்கே கூட்டீட்டுப் போயிருவானுக,மேடையிலதான் பார்ட்டீல்லாம் நிக்கும், ஓரமா.
ஒரு தீக்குச்சியக் கொளுத்துவான், அது அணையறதுக்குள்ள நமக்குப் புடிச்ச குட்டிய என்ன வேண்ணாலும் செய்யலாம், பாதீல குச்சி அணைஞ்சா விலகீரனும். இல்லேன்னா இன்னொரு நூறு தெண்டம் அழனும்.நாமளே குச்சிய கொளுத்திக் கொள்ளலாம் அதுக்கு டபுள் அமவுண்ட்..’ எங்கிருந்தோ `ஒரே ஊரிலே ஒரே ஒரு ராஜா’... பாட்டு கேட்டுக் கொண்டிருந்தது.நான் பாட்டைத்தான் கேட்டுக் கொண்டிருந்தேன், எப்ப இந்தப் பேச்சில் கலந்தேன் தெரியவில்லை,`இவரு அதிலெல்லாம் வில்லாளகண்டன்’ என்று அப்பாவைப் பார்த்துச் சொன்னார். நான் `ஷோவா அப்படீன்னா’ என்றதும் தான்,அமீனாப்பிள்ளை சித்தப்பா விழித்துக் கொண்டார், `பாத்தேரா அவன்ல்லாம் சூடிகையானவங்கென், அவனைக் கூட்டியாராதீரும் இன்னமே’,என்றார்.தர தர வென இழுக்காத குறையாக என்னை இழுத்துக் கொண்டு கிளம்பினார்.அவர்கள் அங்கேயே இருந்தார்கள்.போனவர் வீட்டுக்குப் போகவில்லை, தெரு முனை வந்ததும் நீ வீட்டுக்குப் போறியா என்றார்,அப்பா.நான் மறுத்தேன்.சரி வா என்று பாப்புலர் டாக்கீஸ் பக்கம் போனோம்.டாக்கீஸை அடுத்து ஒரு பீடி கம்பெனி இருந்தது.ஏ.ஜெ. பீடி கம்பெனியோ என்னவோ பேர்.அதற்குள் போனோம்.முதலில் ஒரு அலுவலகம் போல் இருந்த அறையில் பெரிய மேஜை போட்டிருந்தது.பத்மினி,குமாரி கமலா, சந்திர பாபு,சூரிய கலா, குசல குமாரி என்று சினிமா நடிகைகளின் பெரிய போட்டோக்கள், ஒரே அளவில் ஒழுங்காக மாட்டியிருந்தது.சூர்யகலாவை சமீபத்தில்தான் அன்பு எங்கே படத்தில் பார்த்திருக்கிறேன். `மின்னல் பூச்சி ஜாக்கெட்டு, மேலே பறக்கும் ராக்கெட்டு, ஆளை மயக்கும் ஃபேஸ்கட்டு, அதுதான் இப்போ மார்கெட்டு..’`பூவில் வண்டு போதை கொண்டு , தாவும் நிலை தாளேன் ஐயா’ என்று பாலாஜியும், சூர்ய கலாவும் பாடி ஆடும் பாட்டுக்கள் நினைவில் வந்தது.(பாலாஜி இறந்து போனாராமே இன்று- ரொம்ப வருடங்களுக்கு முன் பாலாஜி இறந்து போவதாக ஒரு கனவு கண்டேன்.)படங்களின் கீழ் எல்லாம் செரியன் ப்ரோஸ், மெட்ராஸ் என்று போட்டிருந்தது.அதே போல் ஒழுங்காக அடுக்கப்பட்ட போட்டோக்கள், செண்ட்ரல் தியேட்டரில் பின்னாளில் உண்டு.
அப்பாவைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் கல கலப்பாக வரவேற்றார்கள். ஒருவர், கொஞ்ச நேரப் பேச்சுக்கு அப்புறம் பெரிய ஆல்பம் போல் ஒன்றை அப்பாவிடம் கொண்டு வந்து கொடுத்தார்..நான் சுவரை ஒட்டி போடப் பட்டிருந்த ஒரு ஸ்டூலில் உட்கார்ந்திருந்தேன்.அப்பா மேஜையை ஒட்டி உட்கார்ந்திருந்தார்.இங்கிருந்து அதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.ஆனால் அந்தப் பதினோரு வயதில் நிறையத்தான் தெரிந்திருந்தது.சம்முவத்தின் அப்பாவும் அங்கே இருந்தார்.கொஞ்ச நேரத்தில் வீடு வந்து சேர்ந்ததும் .நான் ஏ.ஜே பீடிக் கம்பெனிக்குப் போனதைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். அம்மா அக்கா போன்றோர் அதை ரசிக்கவில்லை,திரும்பவும் சொல்ல முயன்றபோது போடா அதிகப்பிரசங்கி.. என்று சத்தம் போட்டார்கள்.
சம்முவத்தின் அந்த வீடு கொசவந்தட்டித் தெருவில் இருந்தது.இப்போது அதன் பெயர் சிவா தெரு.அதில் எங்கள் ஆறாம் வகுப்பு சார் ஜான் ஆசிர்வாதம் குடியிருந்தார்.அவருக்கு அப்போதுதான் கல்யாணம் ஆகி இருந்தது.அவர் மனைவி அவருக்குச் சேல்லை கட்டிய மாதிரியே இருக்கா என்று போட்டோ ஸ்டுடியோ ராதாகிருஷ்ணன் சொல்லுவான்.அவன் தான் சார் வீட்டுக்கு ஹெட் மாஸ்டர் ஆசிர் வாதமும் அவர் மனைவியும் விருந்துக்கு வந்த போது போட்டோ எடுத்தான்.அவன் தம்பி முரளி என் வகுப்பு.ஃபைன் துட்டையெல்லாம் அவந்தான் வைத்திருப்பான்.சர்வ சாதாரணமாக ஆட்டை போட்டு விடுவான்.அதை சாரிடம் சொல்லப் போவதாக நான் சொன்ன போது, கனத்த ILFORD பிலிம் டப்பா, பிலிம் ரோலைச் சுற்றி, வெளியே இருக்கும் கருப்பும் ரோஸும் கலந்த தாள் , ஸ்பூல் எல்லாம் தந்து என்னை அமுக்கிவிட்டான்.இல் ஃபோர்ட் ஃபிலிம் டப்பாவை அக்கா, ட்ரேசிங் பேப்பர் கார்பன் தாள், பெருமாள் செட்டி பென்சில் எல்லாம் போட வைத்துக் கொண்டாள். அவளுக்கு அது பிரயோஜனமாய் இருந்தது எனக்கு ரொம்ப பெருமையாயிருந்தது.
அதற்கப்புறம் அந்த வீட்டிற்கு யார் யாரெல்லாம் வந்து போனார்கள், தெரியாது.பேட்டை ரோட்டில், ரூலிங் அண்ட் புக் பைண்டிங் ஆபீஸ் வைத்திருந்த கல்யாணி அண்ணாச்சி நொடித்துப் போய்,கட்டிங் மிஷின், ரூலிங் மிஷினெல்லாவற்றையும் விற்று விட்டு, வெறும் குத்தூசியும், கத்திரிக் கோலும் கலிக்கோவுமாக கடையை திறந்து வைத்து உட்கார்ந்திருப்பார்.அவர் ஒரு நாள் என்னை அழைத்து ஒரு ரீம் போல கட் பண்ணிய பேப்பரைக் கொடுத்து, இதைக் கொண்டு போய் இந்த அயூப் பாய் வீட்ல கொடுத்து பெர்ஃபொரேஷன் போட்டு வாங்கிட்டு வாறியா என்றார். கொஞ்ச நாளைக்கு முன்தான் அவர் மனைவியோடு விஷம் குடித்து, இரண்டு பேரும் தப்பிப் பிழைத்திருந்தார்கள்.என் இரண்டாவது அண்ணன் அவருக்கு ரொம்ப நெருக்கம்.எப்போதும் ஒரு காலத்தில் நண்பர்கள் கூட்டத்துடன் அந்தக் கடை கல கலவென்று இருக்கும்.அங்கே பெர்ஃபொரேஷன் மிஷின் இருக்கும், அதில் போய் நான், வீட்டில் பிலிம் வைத்து விளையாடும் விளயாட்டுக்கு டிக்கெட் தயாரித்திருக்கிறேன்.அவர் சொன்ன லெக்கில் போனேன்.அது சம்முவம் வீடு என்று தெரிய ரொம்ப நேரம் ஆகவில்லை.
கதவை ரொம்ப நேரம் தட்டிக் கொண்டு இருந்தேன்.ஒரு பெண் வந்து கதவைத் திறந்தாள்.என் வயது இருக்கும்.ரொம்ப அழகாய் இருந்தாள்.விஷயத்தைச் சொன்னதும் அப்பா இல்லையே, அண்ணனிடம் வேணுன்னா கேளு என்றாள். சொல்லிவிட்டு நாகூரண்ணேன் என்று சத்தமிட்டுக் கொண்டே உள்ளே போனாள்.வாசலிலேயே மிஷின் இருந்தது.உள்த்தார்சாலில் நீளாமாக ரூலிங் மிஷின் வைத்திருந்தார்கள். அங்கங்கே நீலமும், திக்கு ரோஸுமாக பீங்கான் கிண்ணங்களில் மை இருந்தது.அகலமான ப்ரஷ் கிடந்தது அந்த வீட்டின் அமைப்பு எனக்கு அத்துப்படி.கிழக்கு ஓரத்தில் மாடிப்படி. மாடியில் தான் ஜான் ஆசிர்வாதம் சார் இருந்தார்,அங்கிருந்து பாட்டும், தாளமும். சத்தமாய் வந்து கொண்டிருந்தது.அது யாரு புள்ள, என்று கேட்ட படியே நாகூர் மீரான் மாடி அறையிலிருந்து எட்டிப் பார்த்தான்.அவன் எனக்கு ரெண்டு செட் சீனியர். ஸ்கூலில்.வே, வாரும் என்றபடியே இறங்கி வந்தான்.அவனிடம் விஷயத்தைச் சொல்லி பேப்பரைக் காட்டியதும், இதுக்கு அப்பாதான் வரணும்.`ஓட்டல் பில்’ பாத்தேரா, சிறிசா இருக்கும், மைன்யூட்டா வேலை கேட்கும், வாரும் மாடில இருப்போம், அப்பா இப்ப வந்திருவாக என்றான்.அவனும் அழகாக இருப்பான்.பாலும் பழமும் சிவாஜி ஸ்டைலில் தலை சீவி கூடு வைத்திருப்பான்.அப்பொழுதே அவனுக்கு அருமையான மீசை.
மாடியில் அநேகமாகத் தெரிந்த முகம் நிறைய இருந்தது.படி ஏறிக் கொண்டிருக்கும் போது, எண்ணன், டீ என்று குரல் கேட்டது.கீழே பார்த்தேன் அவன் தங்கை டீயுடன் நின்று கொண்டிருந்தது.போரும், டீ சாப்பிட்டுட்டு வாரும் என்று அனுப்பினான்.நான் மறுபடி கீழெ வந்து டீயை வாங்கிக் கொண்டேன்.அது ஒரு அசாதாரண அழகாயிருந்தது.அலட்டாமல் இருந்தது,இன்னும் மனசை என்னவோ செய்தது.டீ தம்ளரின் விளிம்பில் புதுப் பேப்பரின் மணம் வீசியது. டீ குடிக்கும் போது கீழே குனிந்தபடி குடித்தேன்.டிராயர் அணிந்திருந்தது வெட்கமாய் இருந்தது.அதுவும் ஸ்கூல் யூனிபாரம் டிராயர்.நீங்க ஷாஃப்டர் ஸ்கூலா என்று கேட்டது.ஆமா லெவெந்த் என்றேன், நானும் என்றது, கேட்காமலே.கல்லணை ஸ்கூல் தானே, எங்க அக்கா அங்க தான் படிச்சா என்றேன்.கண்களும் காவடிச் சிந்தாகட்டும் என்று எல். விஜயலட்சுமி மனசுக்குள் பாடிக் கொண்டிருந்தாள் காரணமின்றி.இப்ப எங்க அக்கா படிக்கலை கல்யாணமாயிட்டு என்றேன்.அப்படியா என்னும் போது முகம் சிவந்தது.நாகூர் மீரான் மேலே இருந்து எட்டிப் பார்த்தான்.மெதுவா குடிச்சுட்டு வாரும் என்றான். நான் இந்தா வாரேன் என்று மேலே போனேன்.
நாகூர் மீரானைச் சுற்றி இருந்தவர்களுடன் நானும் அமர்ந்து கொண்டேன்.ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா என்று பாட்டை பாதியிலிருந்து தொடர்ந்தான். அற்புதமான குரல்.கண்டசாலா குரல் மாதிரியே பாடினான்.நான் சாவகாசமாக உட்கார்ந்து கொண்டேன்.
ஒருமுறை பார்த்தாலே போதும்,
உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்,.....
ஏ எல் ராகவனின் அருமையான பாட்டு . அடடா அற்புதமான நேரத்தில் தான் வந்திருக்கிறோம் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.பாட்டு தடைப் பட்டது.ஸ்டான்சா மறந்து விட்டது...பூங்குயிலே என்று திரும்ப திரும்ப பாடிக் கொண்டிருந்தான்.நான்,
மாந்தளிரைக் காணும் போது-உன்
வண்ண மேனியதில் தோன்றுதே
பூங்குயிலே உன்னை எண்ணும் போது
புதிய உணர்வலைகள் தோன்றுதே..
என்று எடுத்துக் கொடுத்தேன்.சபாஷ் ஃப்ரெண்டு, என்றான் மீரான்.பாடலை முடித்து விட்டுக் கேட்டான், இது எந்தப் படத்துல ஃப்ரெண்டு,நான் பாஞ்சாலி என்றேன்.சபை என்னை மரியாதையாகப் பார்ப்பது போலிருந்தது.
மீரானே ஒரு சின்ன ஸ்டூலில் அழகாகத் தாளம் போட்டுக் கொண்டிருந்தான்.நினைத்தாற் போல் மன்னாடேயின் ஹம்மிங்கை ஆரம்பித்தான்.
`மானச மைனே வரூ
மதுரம் நுள்ளி தரூ...
கடலிலே ஓலவும்
கரளிலே மோகவும்
அடங்குகில் ஓமலே
அடங்குகில்லா..’
பாடி முடிக்கவும் நாலு பேரும் தன்னை மறந்து கையைத் தட்டினோம்.செம்மீன் வந்த புதிது.
கீழே வந்த போது பெர்ஃபோரேஷன் போட்டு தயாராயிருந்தது.அவனுடைய அப்பா எப்போது வந்தார் எப்போது முடித்தார் தெரியவில்லை.பெண் தார்சாலில் ஒரு ஓரமாக உட்கார்ந்து செக்ஷன் தையல் போட்டுக்கொண்டிருந்தது.நான் கிளம்பும் போது எழுந்து வந்து, உங்க ஸ்கூல் சயின்ஸ் கொஸ்டின் பேப்பர் இருந்தா அண்ணண்ட குடுத்துவிடு, என்று சொல்லி விட்டு நான் தெருவில் இறங்கியதும் கதவை மெதுவாகச் சாத்தியது.
பொன்னம்மேயை நான் முதன் முதலில் பார்த்தது, 1967 ஜனவரி கடைசியாயிருக்கும் அல்லது பிப்ரவரி முதல் வாரமாயிருக்கும்.வருத்தெடுக்கிற வெயிலில் நாங்கள் பத்துப் பேர் இன்ன தெரு, இன்ன வீடு என்றில்லாமல் ஓட்டு சேகரித்துக் கொண்டிருந்தோம்.செக்கச் சிவந்த சின்னப் பெண்ணாக நின்று கொண்டிருந்தாள்.அவளோடு நாலைந்து பெண்கள் அவளை விட எல்லாருமே மூத்தவர்கள்.மற்றவர்கள் கண்ணில் தூக்கம் இருந்தது.குளப்பிறைத் தெரு, `அதற்கு’ப் பிரபலமாகி இருந்தது.ஒன்றிரண்டு வீடுகளில் `குடும்ப வீடு’ என்று எழுதிவைத்திருந்தார்கள்.நாங்கள் அந்த வீட்டிற்குள் நுழைந்ததுமே அந்தப் பெண்கள் கலைந்து உள்ளே ஓட ஆரம்பித்தார்கள்.ஒரு முற்றம்.சற்று உள்த் தள்ளி வீட்டு வாசல். வாசலுக்கு இரண்டு புறமும் உயர்ந்த திண்ணைகள்.திண்ணையில் மூங்கில் அழி அடைத்திருந்தது.திண்ணையில் தான் அவர் உட்கார்ந்திருந்தார்.மூக்கு சுத்தமாக சப்பி விட்டது. காது பழுத்துக் கொண்டிருந்தது.லுங்கி மட்டும் உடுத்தியிருந்தார்.சட்டையில்லாத மார்பில் அங்கங்கே புண்கள்.விரல்கள் அழுகிப் பெருத்திருந்தது.ஆனால் மூன்று விரல்களில் அகல அகலமான மோதிரங்கள்.ஏல சோமு, இங்க போகணுமா என்று யாரோ கேட்டார்கள்.போவோம்லெ என்று யாரொ சொன்னார்கள். நான் அதற்குள் முற்றத்தில் இறங்கியிருந்தேன்.
அவர் வாங்க தம்பிகளா என்றார். உச்சி வெயில். வீட்டுக்குள் இருப்பது வெளியே தெரியவில்லை.உட்காருங்க என்று திண்ணையைக் காட்டினார்.வாக்குச் சீட்டின் மாதிரியைக் கையில் வைத்திருந்தோம்.அதை எப்படி மடிக்க வேண்டும், எங்கே எப்படி முத்திரை வைக்க வேண்டும் என்று விஸ்தாரமாகச் சொல்லிக் கொண்டிருந்தோம்.ஒவ்வொரு பெண்களாக அவர் அருகில் வந்து நிற்க ஆரம்பித்தன.பொன்னம்மே அவர் கையிலிருந்த மோதிரத்தைக் கழற்றுவதும் திரும்ப மாட்டுவதுமாக விளையாடிக் கொண்டிருந்தாள்.அவர் தோளைப் பிடித்த படி நின்று கொண்டிருந்தாள்.வோட் லிஸ்டில், அந்த முகவரியில் இரண்டு ஓட்டு இருந்தது.ஸ்ரீரெங்கன்,மூக்கம்மாள்.மூக்குத்தி போட்டு, சற்று மாறு கண்ணுடன் இருந்தவள் தான் மூக்கம்மாவாயிருக்க வேண்டும்.சேலை ஒரு பக்கத்து மார்பை மூடவேயில்லை.மார்பு தெறித்துக் கொண்டிருந்தது.இங்க யாருக்கு ஓட்டு இருக்கு, ஓட்டைதான் இருக்கு என்று ஒரு பெண் சொன்னது.என்னட்ட்டி பொன்னம்மா உனக்கு இருக்கா, என்றது.இல்ல சேச்சி என்று சொன்ன படியே மோதிரத்தை தன் சிறிய விரலில் போட்டாள். பொன்னம்மாஇங்கன்னு இல்லை, இந்த தெருவில, யாரும் காங்கிரஸ்ஸுக்குப் போட மாட்டோம்,போய்ட்டு வாங்க என்று அனுப்பினார் அந்த ஆள். மோர் குடிக்கீங்களா என்று மூக்கம்மா கேட்டாள்.அப்போதுதான் முற்றத்தின் ஓரத்தில் இரண்டு மாடு கட்டி இருப்பதைப் பார்த்தேன்.வெளியே வரும் போது ஓ மிஸ்டர் சோமு, இங்கே வா மிஸ்டர் கேளு என்று ஒரு பெண் பாட எல்லாரும் சிரித்தார்கள்.
அப்போது திருநெல்வேலிக்கும் தூத்துக் குடிக்கும் தனியார் மின் விநியோகம்.டி டி ஈ எஸ் என்று பேர். வாகையடி முக்கில் தான் பணம் கட்டுகிற இடம். பத்தாம் தேதிக்குள் கட்ட வேண்டும்.
பணம் கட்ட வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.மூக்கம்மாவும் பொன்னம்மாவும் பெண்கள் வரிசையில்.அங்கே கூட்டமே இல்லை ரொம்ப நேரமாக அவர்கள் கட்டிக் கொண்டிருந்தார்கள். அப்புறம்தான் தெரிந்தது, அவர்கள் மற்றவர்களுக்குக் காசு வாங்கிக் கொண்டு கட்டுகிறார்கள், என்று.இன்னொரு கிழவி லச்சுமி என்று அவளும் அப்படிப் பணம் வாங்கிக் கொண்டு பில் கட்டித் தருவாள்.பொன்னம்மேயைப் பார்த்து ஒரு வருடமிருக்கும்.அளவுக்கு அதிகமான போகத்தின் பாதிப்பு உடலில் தெரிந்தது.நன்றாகவே கறுத்திருந்தாள்.மூக்கம்மாவிடம் மூக்குத்தி இல்லை.
தசரா. பக்கத்துக் கோயிலில் ஆரம்பித்து, பத்துப் பதினைந்து கோயிலுக்கு வேக வேகமாய்ப் போய் விட்டு வந்தேன்.வருடந்தோறும் அது வழக்கம்.ஐந்தாறு வருடமாய் இந்தப் பழக்கம்.நான் போகிற போது அநேகமான கோயிலில் அலங்காரம் ஆகிக் கொண்டிருக்கும்.நான் காத்திருப்பதில்லை.புட்டாரத்தி அம்மன் கோயில் தான் கடைசி. அங்கே, திரை போட்டு சந்தனக் காப்பு நடந்து கொண்டிருந்தது. திரையின் ஊடாகப் பார்த்த போது மார்பில் சந்தன அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.ஒரு கும்பிடு போட்டுவிட்டு,ஸ்தல புராணப் பாட்டை முனு முனுத்து விட்டு , வெளியே வந்தேன்.அதோடு அன்றைய விரதம் முடிந்தது.நாக்கு சரக்குக்கு பரபரத்தது. அப்படியொன்றும் தினசரி குடிக்கிறவனில்லை.தசரா என்றால் சமீபமாக இது வழக்கம்.சரக்கடித்து விட்டு, பாளையங்கோட்டையைப் பார்க்க கிளம்பி விடுவோம்.நான் தெருவுக்கு வந்த போது கோஷ்டிகள் எதுவுமே இல்லை.எல்லாரும் சரக்கை தேடிப் போயிருந்தார்கள்.திரும்பவும் மது விலக்கு அமலாகியிருந்தது.கண்ணில் நட்டு அருணா தென் பட்டான். ஏல எங்கல ஒருத்தரையும் காணும் என்றேன், எல்லாம் போயாச்சு, நம்மட்ட படுவல் இல்லை அதான் வாப்பாறிட்டுக் கிடக்கேன் என்றான்.அவன் அப்பா பலசரக்கு கடை வைத்திருக்கிறார்.ரொம்ப நல்ல பையன்.என்ன பதினைந்து வயசிருக்கும். வீட்ல தண்ணி தெளிச்சு அனுப்பியாச்சு. சோறு மட்டும் வீட்ல.ராத்திரி கூட அவன் வீட்டுக்கு போகும் முடுக்கில் படுத்துக் கொள்வான்.
எங்கல போயிருக்காங்க, எங்கேன்னா என்ன அண்ணேன், வாங்க, நான் கூட்டீட்டுப் போறேன்.தம்பியக் கொஞ்சம் கவனிச்சுருங்க,நமக்கு ஒரு மூனு ரூவா கட்டளை செய்யக் கூடாதா என்றான். சரி வாடா என்று கிளம்பினோம்.சம்முவம் வீடு.ஏல இங்க...... என்று இழுத்தேன். அதற்குள் கதவை தட்டி இருந்தான்.கதவு ஒருக்களித்து திறந்தது.இருட்டில் கண்ணாடி வளையல் சத்தம். உள்ள வாங்கண்ணேன்,என்று சொன்ன படியே அவன் ஒரு கதவு வழியாக நுழைந்தான்.உள்ளே வீட்டில் லேசான வெளிச்சம்.யாரு, நட்டா, என்னலே என்று கேட்டாள், கதவைத் திறந்தவள், கதவை மறு படி சாத்திக் கொண்டே.எக்கா கொஞ்சம் இஞ்சி வேணும் என்றான்.போலே நட்டுக் கூதியான்,ஏதாவது தரைப் படம் பாக்க ஆளாயிருக்கும்ன்னு பார்த்தா போயும் போயும் மூனு ரூபாய்க்கி ஆளைக் கூட்டீட்டு வந்திருக்கான் என்றாள். இப்போது வெளிச்சத்திற்கு வந்திருந்தோம்.பொன்னம்மே.ஏய் இவரு மிஸ்டர் ஸோமு சாருல்லா என்றாள்.எனக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. நட்டூன்னா சரியாத்தானே இருக்கு, மாட்டி விட்டுட்டானே,பேசாம பாளையங்கோட்டை சம்சு கடைக்கே போயிருக்கலாமே என்று நினைத்தேன். அதற்குள், நட்டு வீட்டுக் குள்ளேயே போயிருந்தான்.
ஒரு பெரிய ஹார்லிக்ஸ் பாட்டிலோடு வந்தாள் பொன்னம்மே.அதில் பூராவும் கொத்தமல்லி.அதற்குள் கையை விட்டு துளாவிக் கொண்டிருந்தாள். மார்பில் சேலையே இல்லை. அந்த மங்கலான 15 வாட் வெளிச்சத்தில், இறுக்கமான சட்டையினூடாக வெளிப் பிதுங்கும் மார்பைக் கவனிப்பதை அவள் கண்டு கொள்ளவில்லை.சற்று முன் திரையினூடாகக் கும்பிட்டது என்று தோன்றியது.அதற்காக ஞானமெல்லாம் வரவில்லை.இரண்டு சின்னப் பாட்டில்களில் தேடிப் போன திரவம்.குடிச்சிருதீங்களா என்றாள்.தலையை ஆட்டினேன்.ஒரு பெரிய தம்ளாரில் விட்டு, தண்ணீரும் கொடுத்தாள்.குடித்து விட்டு வெளியே வந்தோம். நட்டு, ரெண்டு அரிசி கொடுக்கா என்றான். `மயிரு’ என்றபடி அவள் கொஞ்சம் மல்லியைக் கொடுத்தாள். ஏற்கெனெவே சரக்கே தன் வாடையை மீறி மல்லி வாசம்தான் வீசிக் கொண்டிருந்தது.அன்று பாளையங்கோட்டை தசரா வேறு விதமாக இருந்தது.
ராத்திரியெல்லாம் விழித்து சுவரில் ஆலடி அருணாவுக்கு ரெட்டை இலை வரைந்த அலுப்பு. மத்தியானம் சாப்பிட்டு விட்டு, ஆஃபிஸ் போகும் போது படுத்துக் கொள்ள மாட்டோமா என்றிருந்தது. பாய் கடை முன், வேனல்ப் பந்தல் போட்டு நன்றாக தண்ணீர் தெளித்து,சர்பத் கடை போட்டிருந்தார். அங்கே நின்று இரண்டு சிகரெட் வாங்கி ஒன்றை பையில் வைத்துக் கொண்டு ஒன்றப் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டுக் கொண்டிருந்தேன், ஒரு ரூவா இருக்கு பாய், இதை வச்சுகிட்டு குடுங்க, இப்ப படம் போடறதுக்கு முன்னால தந்திருதேன்.என்னாத்த படம் போட, அட மூத்தவளே படம்ல்லாம் அப்பவெ போட்டாச்சு, அங்கயே கூட்டமில்லை, அங்க டிக்கெட் காலியாகி, இவட்ட டிக்கெட் போட வாரான் இவ பேத்தியான், இடத்தைக் காலி பண்ணு,யாவாரத்தைக் கெடுக்காத., என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார் பாய்.யோவ் தாரும்ன்னா, ரொம்ப கிராக்கி பன்னுதேரே என்று சற்று குரலை உயர்த்தினாள் அந்தப் பெண். அப்புறம் அவளே திரும்பவும் தழைந்தாள்.நான் தந்த ஐந்து ரூபாய்க்கு பாய் நீட்டும், மீதிச் சில்லறை மூனு சொச்சத்தையே அவள் பார்த்தாள். நானும் முகத்தைப் பார்த்தேன். பொன்னம்மே. கறுத்து, மேலெல்லாம் தேமல்.ஒரு கத்திரி சிகரெட்டாவது குடுங்க பாய் என்று கெஞ்சினாள்.பாய் குடுங்க என்றேன்.பாய் அழுத்தமான ஆள்.அந்தா அங்க படில போய் உக்காரு என்று ஒதுக்குப் புறமான படியைக் காண்பித்தார்.சர்பத் பெட்டிக்குள் குனிந்து ஒரு கிளாஸ்ஸில் விட்டு, பின் புறமாக நீட்டினார், இந்தா நன்னாரிப் பால் சாப்பிடு என்றபடி. அவசர அவசரமாக அதை வாங்கி ஒரே மூச்சில் குடித்தாள். அதை ரசிச்சா குடிக்க முடியும்.
நான், இருபதடி தள்ளி இருக்கும் அலுவலகத்திற்கு நடந்தேன்.அலுவலகத்தை ஒட்டிய சந்தில் போய் பின்புறப் படிக்கட்டு வழியாகப் போனால் ஆபீஸில் என் ஸீட்டுக்கே போய் விடலாம்.போய்க் கொண்டிருந்தேன். ஒரு டாக்சி என்னை ஒட்டிய படிப் போய் ஸ்ரீரெங்கன் வீட்டு முன்னால் நின்றது. அவன் வீடு இப்போது மாறி இருந்தது.அதிலிருந்து ஒரு பெண்ணை இறக்கிக் கொண்டிருந்தார்கள்.நிற்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது.தோளில் ஒரு ஏர் பேக்.வண்டி வந்து நின்றதும் மூக்கம்மா மாட்டுக்கொட்டிலில் இருந்து தலையை முடிந்த படி ஓடி வந்தாள். இப்போது மாட்டுக் கொட்டில் தெருவில், வீட்டு முன்னால் இருந்தது.திடீரென்று அந்தப் பெண் சுதாரித்து ஓட முயன்றது.அதைப் பார்க்கவும் ஒரு மாதிரியான பெண் போலத்தான் இருந்தது.பெண் ஓடியது, சந்திலிருந்து மெயின் ரோட்டைப் பார்க்க,எதிரே பொன்னம்மே வந்தாள்.ஏட்டி புடிடி, பொன்னம்மே பதினஞ்சாயிரம்டி என்று மூக்கம்மா கத்தினாள்.போட்டுண்டி தேவடியாளே என்று கத்தியபடி மூக்கம்மாவை மறித்தாள்.அதற்குள் இன்னொரு புறமாக வந்த ரெண்டு பேர் புதியவளது ஏர் பேக்கைப் பிடித்துப் பின்புறமாக இழுத்தபடி வந்தனர்.அது வசமாக கழுத்தில் கிடந்தது.பொன்னம்மே நிலை கொள்ளாமல் ஆடிக் கொண்டிருந்தாள்.மூக்கம்மா புதிய பெண் பின்னால் போய்க் கொண்டிருந்தவள், பொன்னம்மாவை ஒரு மிதி மிதித்தாள்.சுவரோடு மோதி விழுந்தாள்.அலுவலகம் முச்சூடும் கிழே இறங்கி வந்திருந்தது.பொன்னம்மே எழுந்து மறுபடி போட்டுண்டி ரூவா, போட்டுண்டி சக்கரம், என்று மூக்கம்மா வீட்டை நோக்கியே போனாள்’அதற்குள் அங்கே கதவுகள் எல்லாம் சாத்தப் பட்டிருந்தது.
ஜன்னல் வழியாக ஏதோ ரூபாய் மாதிரி விழுந்தது. பொன்னம்மே தள்ளாடியபடி அதைப் பொறுக்கிக் கொண்டு அடைத்துக் கிடந்த வாசலிலேயே உட்கார்ந்தாள். நான் மாடியேறினேன்.
Sunday, May 3, 2009
கடலிலே ஓலவும் கரளிலே மோகவும்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment