Tuesday, November 22, 2011




தகவமைப்பு



கனத்த சொற்களை

இரையெடுத்திருந்தது

எந்த விமர்சனக்

கல்லோ கழியோ

வசமாய்

நடூஉக் குறுக்கில்

ஒரு காயம் வேறு

நெளியமாட்டாமல் கிடக்கிறது



செரிமானமோ நகர்வோ

இனிச் சாத்தியமில்லையென

நம்பிக்கையின்றி

பருந்துப் பார்வைக்குப் பயந்து

மேகம் பார்த்து

மதில்ச் சுவரொட்டிக் கிடக்கிறது.



பூ நாடி வரும்

பறவைகள் வண்டுகள்

பட்டாம் பூச்சிகள் யாவும்

மகரந்தப் புரளல்

மறந்து விலகிப்பறக்கின்றன



பச்சைப் பாம்பு

என்பதால் நீங்கள்

பயமின்றி

வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்

                                -கலாப்ரியா




Monday, November 21, 2011

ராஜாராணிக் கப்பல்





ராஜாராணிக் கப்பல்

கப்பல் கத்திக்கப்பல்
செய்யத்தெரியும்
காகித விளையாட்டின்
பால பாடமது
அவளிடம் கொஞ்சம் கற்றுக்கொண்டு
மைக்கூடு ஏரோப்ளேன்
செய்து காண்பித்தபோது
முட்டாள்த் தொப்பித்தாளொன்று
சதுரமாகி
மடிந்து மடிந்து விரிந்ததுன்
முதிர்ந்த விரல்களில்
ராஜாராணிக் கப்பலாய்

எடுத்து வந்து தனியே சுயமாய்
மடிப்பு மாறாமல் பிரித்து
மறுபடி மடித்து முயற்சிக்கையில்
சதுரம் கிழிந்து கைக்கொன்றாய்
இரு நீள் சதுரம்

காகித மடிப்புகளை வெறித்த
பார்வையில் நிலைத்தன
கருப்பை அண்டத்துயிர்
உள்ளொடுங்கிக் குவித்த
கை மடிப்புகள்

ரேகைகள்
யார் செய்து பிரித்த
ஒரிகாமி
-கலாப்ரியா

Visitors