Monday, June 28, 2010

ஓடும் நதி-38


தேசீயச் சின்னமான அசோக ஸ்தூபியில் நான்கு சிங்கங்கள் உண்டு. நாம் தினமும் புழங்குகிற நாணயத்திலோ ரூபாய் நோட்டிலோ மூன்று சிங்கங்கள் இருப்பதாகவே நம் –இரு பரிமாண-“ஒரு தளப்பட்ட பார்வை”க்கு தெரியும். முப்பரிமாணத்தில் நான்கு சிங்கங்கள் இருக்கின்றன.அதே போல காந்திஜியின் பிரபலமான மூன்று குரங்குகள், ”தீயவற்றைப் பார்க்காதே, தீயவற்றைப் பேசாதே, தீயவற்றைக் கேட்காதே”, உணமையில் நான்கு. நான்காவது குரங்கு தனது அடிவயிற்றருகே பிறப்பு உறுப்பை மறைத்தது போலிருக்கும். அதன் பெயர் ’ஷிஸாரு’. ஏதோ ஒரு ‘நாகரிகம்’ கருதி அதை மறைத்து வைத்து விட்டார்கள். உண்மையில் அதைவிடச் சிறந்த “பிராண்ட் அம்பாசடர்” எய்ட்ஸ் கட்டுப்பாட்டு விழிப்புணர்வுக்கு இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.

கண்களைப் பொத்திக் கொண்டிருக்கும் குரங்கின் பெயர், ’மிஸாரு’, காதுகளைப் பொத்திக் கொண்டிருப்பதின் பெயர், ‘கிகாஸாரு’, வாயைப் பொத்திக் கொண்டிருப்பதன் பெயர், ’இவாஸாரு’.இவை, ஜப்பானில் உள்ள ‘தோஷோ-கோ’ என்ற விஹாரையின் மரக்கதவில் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்திலிருந்து உலகெங்கும் பரவியது. இதன் ஆதி ஊற்று, கன்பூஸியஸ் காலத்தது; சீனாவிலிருந்து புறப்பட்டது என்கிறார்கள்.உலகின் பல மதங்களிலும் இந்தத் தத்துவம் இருக்கிறது.

நமது ஊர்களில் காணப்படும் சிகப்பு முகக் குரங்குகள் செய்யும் அட்டகாசம் சொல்லி முடியது.” பாபநாசத்துக் குரங்கு படியை விட்டு இறங்கு, குற்றாலத்துக் குரங்கு கொப்பை விட்டு இறங்கு..” என்று, குரங்கை முதன்முதலில் அல்லது அபூர்வமாய்ப் பார்க்கும் குழந்தைகள், தவறாமல் பாடும். எதையாவது பிடுங்க வந்தால் “ராம ராம’’ என்று கூக்குரலிட்டு விரட்டும். இவை படுத்தும் பாடு சாதரணப் பயணிகளையும், ஊர்க்காரர்களையும் மட்டும் என்றில்லை. குடியரசுத் தலைவர் மாளிகையிலும் அட்டகாசம் செய்தனவாம். அவற்றை விரட்ட, கருப்பு முகம் கொண்ட சிங்க வால்க் குரங்குகளை காவலுக்கு நியமித்து அடக்கினார்களாம்.”பிளாக் கேட்ஸ்” போல ”பிளாக் மன்கீஸ்’.

சமீபத்தில் கான்பூர் ஈ.எஸ்.ஐ கார்ப்பரேஷன் அலுவலகத்தில் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு, அங்கு அட்டகாசம் செய்யும் சிகப்பு முகக் குரங்குகளை விரட்ட ’மங்கல் சிங்’ என்றொருவர் நியமிக்கப் பட்டு, அவரும் வெற்றிகரமாக பணியை நிறைவேற்றி வருகிறார். அவர் வேறு யாருமல்ல, லங்கூர் இனத்தைச் சேர்ந்த கருப்பு முகக் குரங்கு. அதன் பயிற்சியாளர், ”முகம்மது ஃபரீத்”. குற்றாலத்துக் குரங்குகள், ’கேட்டாபுல்ட்’ என்கிற உண்டிவில்லுக்கு அநியாயமாய்ப் பயப்படும். எவ்வளவு பெரிய ‘தாட்டான்’ குரங்காய் இருந்தாலும்சரி, நேற்றுப் பிறந்த குட்டிக் குரங்காய் இருந்தாலும் சரி, உண்டிவில்லைக் கையில் எடுத்ததைப் பார்த்தாலே பயந்து ஓடி விடும்.அதன் ஜீனிலேயே ’அந்தப் பயம்’ இருக்கும் போல. அதே போல், தண்ணீரைக் கோதி ஊற்றினாலும் பயப்படும்.

ஆவி பறக்கும் சாப்பாட்டைக் கண்டால் பெரிய குரங்கு,தானே தொடாது, தன் குட்டியின் கையைப் பிடித்து அதற்குள் வைக்கும் அது ’வ்வீய், வ்வீய்’ என்று கத்தினால், “ஓஹோ சுடுகிறது” என்று தெரிந்து கொள்ளும்.அதே போல ஒரு குரங்கு, மற்ற குரங்கின் மீதிருந்து பேனை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும், திடீரென்று சுகமாய்ப் பேனெடுக்கக் கொடுத்துக் கொண்டிருக்கும் குரங்கின் காதைப் பிய்த்து விடும். அதனால்த்தான் “குரங்கு பேன் பர்த்தலும் பார்க்கும், காதை அ(று)த்தாலும் அ(று)க்கும்” என்று ஒரு பழமொழி இருக்கிறது. குரங்கு, எல்லா மரத்து இளநீரையும் விரும்பிக் குடிக்காது.அது தேர்ந்தெடுத்துக் குடிக்கிற தென்னையின் இளநீர் அவ்வளவு சுவையாய் இருக்கும்.

அலெக்ஸ் என்று ஒரு அண்ணன். வீட்டிற்கு அவ்வப்போது வருவார். பெரும்பாலும் மதியம் பன்னிரெண்டே முக்காலுக்கு தவறாமல் பார்க்கலாம். வேலை தேடிக் கொண்டிருக்கும் காலங்கள் அவை. அந்த நடுப்பகலில் அப்போது ஒலிபரப்பாகும் சிலோன் தேசீய சேவையின் உலகச்செய்தி,(இப்போது இலங்கையின் செந்நீர்ச்செய்திகள் நான்கு திசையிலும் பிரசித்தம்.) அப்போது பிரபலம். அலெக்ஸுக்கு அதைக் கேட்பது ரொம்ப விருப்பமான செயல். அதே போல் காடும் வேட்டையும். குரங்கு பிடிப்பவர்கள் பற்றி விஸ்தாரமாகச் சொல்லுவார்.ஒரு இளநீரைக் கண் சீவிக் குடித்த பின், அதனுள் பொறி கடலைய அடைத்து, காட்டில் போட்டு விட்டால், குரங்கு அதை எடுத்து கடலைக்காகக் கையை நுழைத்து அள்ளும். கடலையை அள்ளிய கைப்பிடி பெரிதாகி, சிறிய துவாரத்தின் வழியே வெளியே வராது. கடலையையும் விட மனசிருக்காது, கையை நுழைத்த படியே இளநீரைத் தூக்கிக் கொண்டு ஓடும். அப்போது அதைச் சுடுவதும், பிடிப்பதும் எளிது.அதே போல் ஒரு செத்த தண்ணீர்ப் பாம்பை இலையில் சுற்றி, தாளில் பொதிந்து போட்டு விட்டால், அதை எடுத்துப் பிரிக்கும் குரங்கு, பாம்பைக் கணடதும்’ குரங்குப் பிடியாய்’ அதன் தலையைப் பிடித்துக் கொள்ளும். தான் செத்தாலும் விடவே விடாது.அப்போது அதைப் பிடிப்பது எளிது என்பார்.

நிறையச் சொல்லுவார். சொல்லும் போதே வேட்டையாடுகிற உத்தியும்,மூர்க்கமும் வார்த்தையிலும் உடல் மொழியிலும் வெளிப்படும். மற்றப்படி ரொம்ப அன்பானவர். ”குரங்கைச் சுட்டால், அது கைகளைக் ‘கும்பிட்டபடியே’ மரத்திலிருந்து விழுவது பரிதாபமாக இருக்கும்” என்பார். “அது சாபம் கொடுத்த படியே செத்து விழும், குரங்கு ரத்தத்திற்காக அப்படிச் செய்தவன் குடும்பம் இதுவரை விளங்கியதே இல்லை” என்பார்.குரங்கிலிருந்து பிறந்த மனிதரில் சிலர் விலங்குகளைக் கொன்று பழகி, இன்று சக மனிதனையே கொன்று கொண்டிருக்கிறார்கள்.... (சொந்தச் சகோதரர்களையிழந்தும் சிந்தையிரங்காமல் சிலர்.குரங்காகவே இருந்திருந்தால் இன்னொரு...தகனம் சாத்தியப்பட்டிருக்குமோ)

Tuesday, June 22, 2010

ஓடும் நதி-37


.’காந்த லாரி’ ரதவீதியில் போவதாக அவன், ஓடியே வந்து சொன்னான். தேரோடும் ரத வீதியிலிருந்து பிரியும் தெருக்களில் ஒன்று எங்களுடையது. சுமார் ஐநூறு, அறுநூறு அடி தூரம் இருக்கும், நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து, இரண்டு நிமிடத்தில் வீதிக்கு ஓடிச் சென்று விடலாம். விளையாடிக் கொண்டிருந்த ’கம்புத்தட்டி’ விளையாட்டை அப்படியே விட்டு விட்டு.,ஓடினோம்.நான்தான் தெரு நடுவில் கிடக்கும் சிறிய கம்பைக் காத்துக் கொண்டிருந்தேன்.மற்றவர்கள் அதைத் தட்டுவதற்கு நீளக்கம்பை வைத்திருந்தார்கள்.தட்டி விட்டுவிட்டு அவர்கள் கம்பை ஏதாவது கல்லில் வைத்து விடவேண்டும்.அதற்குள் நான் அவர்களைத் தொட்டுவிட்டால் அவர்கள் நடுவிற்கு வந்து கம்பைக் காவல் காக்க வேண்டும்.சட்டையைத் தொட்டால், “ஐயா, சட்டை வண்ணானுக்கு, நான் அவுட் கிடையாது” என்று வாதிடுவான்.”அப்படீன்னா உடம்பு வெட்டியானுக்கு...நீ அவுட்தான்” என்று எதிர்வாதம் வரும். யாராவது தலையிட்டு வழக்கைத் தீர்ப்பார்கள். அதிலும் ஏதாவது அரசியல் இருக்கும்.இதற்காக விளையாட்டு ஆரம்பிக்கும் போதே ‘ரூல்ஸ்’ பேசிக்கொள்வோம்.

நான் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஓடினேன். விளையாட்டில் தெரியாத்தனமாக அகப்பட்டுக் கொண்டிருந்ததிலிருந்து விடுதலை கிடைத்ததே,என்று. சொல்ல முடியாது, திரும்பி வந்ததும் விளையாட்டை மறுபடி ஆரம்பித்தால், “ரூல்ஸ்” என்ன சொல்கிறதோ. நாங்கள் ரதவீதியை அடைந்தபோது, தெருமுனையில் ‘காந்தலாரி’யைக் காணோம்.பள்ளிக்கூட சிநேகிதன், வாசமுத்து எதிரே வந்தான்.”ஏலே காந்த லாரியையா தேடுதீங்க, அது இந்நேரம் தெப்பக் குளத்துக்கிட்ட போயிருக்கும்...ஏயப்பா என்னமா இரும்பை இழுக்கு தெரியுமா, லாரிக்கு முன்னால பெரிய காந்தம் இருக்கு, அதில ஆணி, லாடம், நட்டு, ஸ்க்ரூ, ஒத்தைரூவா துட்டு, சப்புச்சவரு (கண்டது கழியது) எல்லாம் ஒட்டிக்கிட்டிருக்கு. ஒரு பையன், அரைநாண் கயிற்றில் ஊக்கு தொங்க விட்டுருப்பான் போல, அவனையே இழுத்துட்டு...” என்று புருடா வேறு விட்டான். வாசமுத்துவின் அப்பா ரயில் டிரைவர். நன்றாகப் பாட்டுப் படிப்பான். ஆள் என்னவோ என்னைவிட ’நரையானாக’ (ஒல்லியாக)த்தான் இருப்பான், ஆனால் சவடால் பலமாக இருக்கும்.”ஏல எங்கப்பாட்ட சொன்னேன்னா ஒன்னைய ரயில் இஞ்சினை ஏத்தி நசுக்கிருவாரு” என்று அடிக்கடி பயமுறுத்துவான்.”போடா நான் தண்டவாளம் பக்கமே போக மாட்டேனே.., எங்க அப்பா யாரு தெரியுமாலே, ரோட்டு இஞ்சின் டிரைவர், நீ ரோட்டுப் பக்கமே போக முடியாதுலே..” என்று யாரோ பதிலடி கொடுத்தப்புறம்தான் அடங்கினான்.’காந்தலாரி’ அதைவிட ’பயங்கரமானதாக இருக்குமோ’ என்று கோயில் வழியாக ஓடினோம். கடைசியில் ரத்னா டாக்கீஸ் பக்கம் ’கண்டு கொண்டோம்’.ரத்னாவில் ’வீரக்கனல்’ சினிமா ஓடிக் கொண்டிருந்தது.

சாலையோரமாக நின்றது. அப்போதுதான் பிரபலமாகியிருந்த ”சப்பைமூக்கு” லாரி மாதிரித்தான் இருந்தது. முன்னாலும் பின்னாலும், லாரி அகலத்துக்கு கனமான இரும்புச் செவ்வகம். அதில் முன்னாலிருந்ததில் மண்ணிலேயே இருக்கிற இரும்புத்துகள் கொத்தாக முடி மாதிரி அப்பியிருந்தது, அதனிடையே நிறைய நிறைய பழைய இரும்பு ஆணி, தேய்ந்து போன மாட்டு, குதிரை லாடங்கள்,தகர டப்பா மூடிகள், ஏகப்பட்ட துருப்பிடித்த சாவிகள் இருந்தன.”எவெரவர் தொலைத்துத் திண்டாடிய சாவிகளோ’’ தேய்ந்து போன குதிரை லாடங்களை வீடு, கடை வாசலில் மாட்டி வைத்தால் நல்லது என்பதால் அதை கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார்கள் சிலர். ரொம்பத் தேய்ந்து போயிருந்ததை அதிலேயே மறுபடி போட்டார்கள்.அவை ஒட்டவில்லை. டிரைவர் போலிருந்தவர் டீ சாப்பிட்ட படியே, ”போங்கய்யா” என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். ஒன்றிரண்டு ஒரு ரூபாய், கால் ரூபாய் நாணயங்களும் இருந்தன....அவையெல்லாம் ராஜா தலைத் துட்டு. அவையும் கள்ள நாணயம் என்றும் யாரோ சொன்னார்கள்.”ஏல, ஊக்கு மாட்டீருக்கனுவங்கள்ளாம் பக்கத்தில போகாதீங்கலே...” என்று யாரோ கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். என் டிரவுசர் பையில் ஒரு ஓரணா நாணயம் இருந்தது. சொன்னேன்.’’ஏல காந்தம் அதையெல்லாம் இழுக்காதுலே, சும்மா பக்கத்துல போடா” என்று லேசாகத் தள்ளிவிட்டார்கள்.நான் தடுமாறி, டிரவுசர்ப் பையை இறுகப் பிடித்துக் கொண்டபடி தள்ளி நின்று கொண்டேன்.. அது பயனில்லை என்று கடைசியில் தெரிந்தது.

”டி.வி.எஸ். கம்பெனிக்காரங்க ஏற்பாடு” இது என்று பேசிக் கொண்டார்கள். அப்போது தென் மாவட்டங்களில்,அவர்கள் பஸ்தான் நிறைய ஓடியது. (கலைஞர்தான் தனியார் பஸ்களை நாட்டுடைமை ஆக்கினார்.) லாரி கிளம்பியதும்,மறுபடி காந்தம் வேலை செய்ததோ என்னவோ, கீழே கிடந்த லாடங்கள் ’சப்பக்’ என்று ஒட்டியது..கொஞ்ச தூரம் கூடவே ஓடினோம்.பெரும்பாலும் லாடமும் ஆணிகளும் வந்து ஒட்டிக் கொண்டன.லாரி வேகமெடுத்தவுடன் நின்றுவிட்டோம்..அப்புறம்தான் உரைத்தது. எங்களில் பாதிப்பேர் சட்டையே போட்டிருக்கவில்லை. திரும்பி ரத்னா டாக்கீஸ் அருகே வரும்போது, வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்தார்கள்...”ஏல ஒரணாவுக்கு, கடலை வாங்குடா” என்று சொன்னார்கள். நான் மறுத்தபோது, ”இப்போ போனதும் கம்புத்தட்டி விளையாட்டை ஆரம்பிச்சுருவோம்..” என்ற மிரட்டடலுக்குப் பணிய வேண்டியதாயிற்று. “ஒரணா ‘காந்த லாரியில’ ஒட்டிக்கிட்டுலே” என்று கேலியையும் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இன்னும் கொஞ்ச நாளைக்கு எனக்கு விளையாட்டு ரூல்ஸ்கள் தளர்த்தப்படலாம்.

இப்போது சென்னையில் பழைய இரும்புகளைப் பொறுக்க தனியே காந்தம் விற்கிறார்கள் என்று எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரையில் படித்தேன்...’எந்த ’ரூல்ஸுக்கும்’ கட்டுப்படாமல் சமூகம் தன் போக்கில் உண்டாக்கும் அடுத்தடுத்த தருணங்களைத் துருவி யெடுத்து, வயிறு கழுவுவதும், வெற்றி காண்பதும்தானே வாழ்க்கை.