Tuesday, June 8, 2010

ஓடும் நதி-35


முத்துமாரி


மதுரைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அதன் மாணவர் விடுதியில், தமிழ் நிஜ நாடக இயக்குநர், முனைவர் மு.ராமசாமியின் அறையில் பெரும்பாலும் தங்கிக் கொள்வேன், அவர் அப்போது ஆராய்ச்சி மாணவர்.சுப்புராஜ், கண்ணன், ராஜாசங்கர், மு.சிவலிங்கம், சந்திரபோஸ், ஜி.பாலச்சந்திரன்(தற்போது பிரபல ஐ.ஏ.எஸ் அதிகாரி, இஸ்ரோவில் பணி புரிகிறார், அவருடைய சஃபாரி உடையொன்றை பெரும்பாலும் நான்தான் அணிந்து கொள்வேன்.) என்று சகமனதுக்காரக் கூட்டம் எங்களைச் சுற்றி இருக்கும். காலை நேரம், டாய்லட் அருகே, ஒரே கலாட்டாவாக இருக்கும். இதில் ஒருவர் மட்டும் ’உள்ளே’ போனால், வருவதற்கு நேரமாகும். வந்ததும் புதுப் புது ஐடியாக்களாகச் சொல்லுவார்.பாலச்சந்திரனும் நானும் அவர் செல்லும் ’அறைக்கு’ “ஞானபீடம்” என்று பெயர் சூட்டி, எழுதியும் வைத்தோம்.

உண்மையில் இங்கேயும் சரி, முடி திருத்தகத்திலும் சரி, திடீர் மழைக்கு சாலையோரம் எங்காவது ஒதுங்கி நிற்கும் போதும் சரி, நம்மால் எதையாவது, யோசனை செய்வதை விடுத்து வேறு ஏதாவது செய்ய முடியுமா. சலூனில், கண்ணாடி., கண்ணாடிக்குள் கண்ணாடி என்று பிம்பங்களை சற்று நேரம் வேடிக்கை பார்க்கலாம். அல்லது ஏதாவது ஒரே காலண்டர் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்க்கலாம். சிறு வயதில் அப்பா கொண்டு விட்டு விட்டு சென்று விடும், ’திருமலை சலூனி’ல் என் முறையை விழுங்கி, பெரியவர்கள் எல்லாம் சிகை திருத்திச் சென்று கொண்டேயிருக்க, நான் சிறிதாக ஒட்டியிருக்கும் ”தாயுள்ளம்”-டைரக்‌ஷன், ராம்னாத் சினிமா விளம்பரத்தையே அதில் ஆடிக் கொண்டிருக்கிற மாதுரிதேவியையே பார்த்துப் படித்துக் கொண்டேயிருப்பேன். கொஞ்சம் வளர்ந்த பின், பாலன் கடையில்” சொந்த ஊரே சொர்க்க பூமி” டப்பிங் பட போஸ்டர். பாலன், நன்றாக முள் எடுப்பான்.அதற்கென்றே அவ்வப்போது அவன் கடைக்கு, வெதனத்தோடு காலை நொண்டிக்கொண்டே பெண்கள் உட்பட பல ஆட்கள் வருவார்கள்.

சவரம் செய்து தேய்ந்து போன கத்திகளை, நகம் வெட்டவும், முள் எடுக்கவும், தோதுவான வகையில் வைத்திருப்பான். இடுப்பின்,வெள்ளி அரைநாண் கொடியில் ஒரு முள் வாங்கியும், சாவிகளுடன் எப்போதும் தொங்கும்..முள்ளை எடுத்து விட்டு, அந்த இடத்தில் உப்புத்தூளை வைத்து நன்றாக அழுத்தி அடைப்பான்.அப்புறம் பீடியைப் பற்றவைத்து உற்சாகமாய் ஒரு இழுப்பு வலித்து விட்டு, அதில் கனியும் கங்கை, உப்பை யொட்டி, பட்டும் படாமலும் காட்டுவான்.முதலில் ஒன்றும் தெரியாது,அரை நிமிஷத்தில், அவன் முள்ளுக்காக கிளர்ந்த இடத்தில் சுரீரென்று சூடு தைத்து, செய்தி மூளையில் உணரப்பட்டு ”ஸ்ஸ்ஸ்” என்று காலை, இழுத்துக் கொள்வோம்.”இப்ப முள்ளுமுனை எதுவும் இருந்தாலும் செமிச்சுப் போயிரும்” என்பான், பாலன்.இந்த வேடிக்கைகள் தவிர்த்தால், சிகை திருத்தகத்தில் “சிந்தித்துக் கொண்டிருப்பதை”த் தவிர ஒன்றும் செய்ய முடியாது.சில சமயம் ஒரே நினைவுகள் சொல்லி வைத்தாற்போல் வரும். பிரபல எழுத்தாளரும், தோழியுமான இந்துமதி, ஒரு சமயம் சொன்னார், ‘பெண்களுக்கு சில அனுபவங்கள் வாய்ப்பதில்லை, அதில் ஒன்று இந்த மாதிரி சிகையலங்காரக் கடை அனுபவம்” என்று. அவள் சொன்ன நாளிலிருந்து, சுமார் முப்பத்திஐந்து வருடமாக எப்போது சலூனுக்குப் போனாலும் ’இந்துமதி’தன் அழகிய கண்களுடன், நினைவுக்கு வரத் தவறியதே இல்லை.

ஒரு திடீர் மழைச் சமயம்,சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள், ஒரு சிறிய பெட்டிக்கடைக்கு முன்பிருந்த ஓலைச் சாய்ப்பில் அவசர அவசரமாக ஒதுங்கினோம்.என்னருகே ஒருவன், வர்ணம் சொட்டும் ஒரு அரையங்குல ப்ரஷ்ஷுடன் நின்றான்.எதிர்த்த சுவரில் அவன் பாதியில் விட்டு வந்திருந்த தேர்தல் (வாக்குறுதி)வாசகங்களை மழை கரைத்துக் கொண்டிருந்தது..அவன் அமைதியாயொரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்தான். கொஞ்சமே புகைத்திருப்பான், சாய்ப்பிலிருந்து சொட்டிய மழைத்துளி, சிகரெட்டில் பட்டு முழுதும் வீணானது. அர்த்த புஷ்டியுடன் இருவரும் பார்த்துக் கொண்டோம் ஒன்றும் பேசிக்கொளவில்லை,

வர்ணத் தொலைக் காட்சி வந்த புதிது. ராமானந்த் சாகரின் மெகா சீரியலான ‘ராமாயணம்’ ஒளி பரப்பாகிக் கொண்டிருந்தது.எங்கள் இடைகால் கிராமத்தையெல்லாம், அப்போது டி.வி எட்டிக்கூடப் பார்க்கவில்லை.மதுரையில் நண்பன் வீட்டில் ’விருந்துக்கு ஒதுங்கிய’ நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்றையக் கதைப் பகுதியில் சீதை அசோகவனத்திலிருக்கிறாள், மழையைப் பார்த்தபடி.’விருந்து வந்தால் என்ன செய்வானோ ராமன்’ என்று கம்பன் சொல்வதை நினைத்துக் கொண்டிருக்கிறாளோ என்னவோ. ராமன்,சபரியின் பர்ணசாலையில், லக்‌ஷ்மணன், சுக்ரீவன், அனுமன் புடை சூழ, ஆனால் அமைதியாய்ப் பெய்யும் மழையை, சோகமாய்ப் பார்த்தபடி. அடுத்த காட்சி, பரதன் நந்தியம்பதி அரண்மனையில்; அவனும் மழையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.....இப்படிப் பல காட்சிகள். அந்த எபிஸோட் முழுக்க ஒரு வசனம் கூடக் கிடையாது...எல்லாமே, எல்லாருமே மழையைப் பார்த்து ஏதோ சிந்தனை வயப்பட்ட படியே, சோகமாய் இருக்கிற மாதிரி அற்புதமாய் அமைந்திருந்தது. வள்ளுவரும் ஒரு மழைநாளில்த்தான் சிந்தை பறி கொடுத்து ’வான் சிறப்பு’ பற்றி ஒரு அதிகாரமே எழுதியிருப்பாரோ...யார் கண்டது, ”எடுப்பதூஉம் கொடுப்பதூஉம்” எல்லாம் மழையல்லவா.

Tuesday, June 1, 2010

ஓடும் நதி-34



ஒரு பொன் மொழி, நினைவுக்கு வருகிறது. ’‘ராணுவ இசையும்,ராணுவ நீதியைப் போன்றதே”. பொன் மொழிகள் எல்லாமே அனுபவ மொழிகள் என்பதே பொருந்தும்.

ராணுவ ஒழுங்கு, கட்டுப்பாடு என்பதே சுவாரஸ்யமான விஷயம். உணவு வேளையில் ”உணவுஅறை’க்குள் சாப்பிடச் சென்றால், முதலில் வரும் வீரர், கடைசி வரிசை மேசையின் கடைசி இருக்கையில்தான் சென்று அமர வேண்டுமாம். முதல் இருக்கையில் அமர்ந்து கொண்டு, காலகளைச் சற்றே விலக்கி, ‘நீ நுழைந்து, கடைசிக்குப் போ’ என்றெல்லாம் சொல்ல முடியாதாம்.ராணுவ இசையும் இசைதான்,ஆனால் இஷ்டப்படியெல்லாம் ’சஞ்சாரிக்க’ முடியாது , அதில் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.

குழந்தைகள் விடுகதைகள் போடுவார்கள்,இரண்டு கேள்விகள் கேட்டு, இரண்டுக்கும் ஒரே பதில் விடையாய் வரும்.ரசம் மணப்பது ஏன்?, ரத்தம் சொட்டுவது ஏன்? -’விடை’-’பெருங்காயத்தால்’. ஏப்ரல் வருவது ஏன்?, போர் வீரர் கலைவது ஏன் ?-’விடை’- ‘மார்ச்’ முடிவதால். போர் வீரர்கள் அணி வகுத்து

(MARCH PAST) நடக்கும் போது, ஒரு இசையொழுங்கு, தாள ஒழுங்கு இருக்கும். இந்த ஒழுங்கு, ஒரு பாலத்தைக் கடக்கும் போது இருக்கக் கூடாது. ஒழுங்கான தாள அதிர்வின் எதிரொலியால் பாலம் உடைந்து விடும்.அதனால் வீரர்கள் அணிவகுத்துச் செல்லும் பாதையில் ஒரு பாலம் வருகிறதென்றால், ஒழுங்கை கைவிட்டு, இயல்பான நடையில் நடக்க ‘கட்டுப்பாடான’ உத்தரவு வருமாம்.

அவர் பட்டாளத்திலிருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின் ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். வரிசையாகக் குழந்தைகள் உண்டு.ஒரு சின்னக் குச்சு வீட்டில் இருந்தார்கள்.அவர் விருப்பமாக விசிலடித்துப் பாடும் பாட்டு, ”வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே நாடி நிற்குதே அநேக நன்மையே..”அதைக் கேட்கிறபோதே பட்டாளத்து வீரர்கள் அணிவகுத்து நடப்பது போல் இருக்கும். இரவு ஷிஃப்ட் முடிந்து சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பும் போது, மில்லில் ஆரம்பித்து வீடு வரை, சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரம் வரை இதையே பாடிக் கொண்டு வருவார் என்று அவருடன் வேலை பார்க்கும் ஒரு நண்பர் கேலி செய்வார்.அந்த நண்பர் ரொம்ப தமாஷான ஆள். இருவரும் அருகருகே பக்கத்து வீடுகளில் குடியிருந்தார்கள். பட்டாளத்துக்காரரின் ஆறு குழந்தைகளை, ’ஒரு படி’, ‘முக்கால்ப் படி’, ’அரைப்படி’, ’கால்ப்படி’,’அரைக்கால்ப் படி,’ ’மாகாணிப் படி’என்று, ’பட்டப்பெயர்’ வைத்துக் கேலி செய்வார்.குழந்தைகள் பட்டாளத்துகாரரைப் போல் இருக்காது, நண்பர் கேலி செய்வதற்கொப்ப, நண்டும் சிண்டுமாக இருக்கும்.மூத்தவன் மட்டும் கொஞ்சம், பெரியவனாக இருப்பான்.கடைக்குட்டி ’பட்டப்பேரு’க்கேற்றாற் போல அசல் மாகாணிப் படி உழக்கு மாதிரியே இருப்பான். உண்மையான பெயர் ராமசாமி.

அவனைத் தவிர மற்ற குழந்தைகள் எல்லாம் அப்பாவைக் கண்டால் அப்படிப் பயப்படும்.அதை விட அம்மாவுக்கு அதிகம் பயப்படும்..அப்பாவிடம் அடிபட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில், அவள் அடித்துத் துவைத்து விடுவாள்.ராமசாமி காலையில் பல் தேய்த்து விட்டு, விரலைச் சூப்ப ஆரம்பித்தால், இருபத்திநாலு மணி நேரமும் அது ஒன்றுதான் வேலை.வகுப்பிலும் யார் என்ன சொன்னாலும் கேட்டாலும் கை சூப்பிய வாயைத் திறக்கமாட்டானாம், ’நண்பர்’ சொல்லுவார். ஆனால் ஒரு வேடிக்கை. ஸ்கூல் முடிய இரண்டு மூன்று நிமிடம் இருக்கும் போது,புத்தகங்களை எல்லாம் பைக்குள் மூட்டை கட்டி விட்டு ரெடியாக இருப்பானாம், மணி அடிக்க வேண்டியதுதான் தாமதம்,முதல் ஆளாக ஸ்கூலை விட்டு,தலை தெறிக்க ஓடி வருவான்.”ஏய், வீட்டுக்கு விட்டாச்சு” (ஏஏய்... வீட்டுக்கூ விட்டாஅச்சூ....”)என்று சந்தோஷமாக அலறியபடி. பத்து இருபது அடி, தள்ளி வந்ததும், விரல் மறுபடி வாய்க்குள் போய் விடும்.

ராமசாமி என்னை விட பத்து வயது சிறியவன்.ஒரு நாள் ’பீச் ரெட்’ என்று ஒரு அற்புதமான -60களின் இறுதியில் வந்த மிகச் சிறந்த படம்.-சினிமாவுக்குப் போயிருந்தேன் ஒரு நண்பருடன். நாங்கள் போகும் போது படம் சற்று ஆரம்பித்து, கொட்டகை இருளாயிருந்தது. படத்தில் ராணுவ வீரர்கள், வீட்டையும் மனைவி,குழந்தைகளையும் நினைத்து உருகுவது போன்ற காட்சியின் போக்கில், அருகே யாரோ விசும்பி அழுவது கேட்டது. ”என்னடா வேடிக்கை,ஆங்கிலப் படத்தில் அழுகையா” என்று பார்த்தால், பட்டாளத்துக்காரரும் ராமசாமியும். அவர் வாய் விட்டு விசும்புகிறார். அவரைப் பார்த்து ராமசாமி விரலைச் சூப்பியபடியே அழுகிறான்.

காற்றில் கரைந்த இசை மாதிரி நானும் அவர்களும் எங்கெங்கோ பிரிந்து போய் நீண்ட காலத்துக்குப் பின், பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்ட ஒரு பாட்டுப் போட்டி.”மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகளானேன்” என்ற மாதிரியில், வேடிக்கை பார்க்கப் போயிருந்த என்னை ஒரு நடுவராக உட்கார்த்தி வைத்து விட்டார்கள்.இரண்டு மூன்று பள்ளியின் குழந்தைகள், பாடியதும் சிறிய இடைவேளை விட்டார்கள். வெளியே ஒரு மரத்தடியில் ஒரு ஆசிரியர்,தன்னுடன் வந்த குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். ரொம்ப அழகாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.அவரே ஒரு பெரிய மாணவனைப் போலத்தான் இருந்தார்.அவர் பாடிய விதம் என்னை இழுக்க அருகே போனேன். ”வாதாபி கணபதிம் பஜே..’ என்று ஹம்சத்வனியில் சஞ்சாரித்துக் கொண்டிருந்தார்.....கூர்ந்து பார்த்தால்...அட நம்ம ராமசாமி! பாட்டை மீறி ” வீட்டுக்கு விட்டாச்சு...”என்று யாரோ சிரிப்பாகக் கூவும் சத்தம் மூளைக்குள் கேட்டது.