Monday, July 19, 2010

ஓடும்நதி-41


“ஆக்ராவின் வெறுமையில்

காதலின் பசுமையாய்

தாஜ்மஹால் சிரிக்கிறது...” என்று., தாஜ்மகாலைப் பார்த்தேயிராத நாட்களில், நாட்குறிப்பில், ஒரு கவிதையில் நான் எழுதி வைத்திருந்தேன்.

இந்தக் கவிக் குறிப்பிற்கு இன்று வயது நாற்பதாகிறது. அதை எழுதி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப் பின் தாஜ்மகாலை நேரில் பார்த்த போது, ரொம்பச் சரியாகவே எழுதியிருப்பது போலிருந்தது.ஒரு அவசர அவசரமான பயணம் அது.டெல்லியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் (பின்னாள் அமைச்சர்) திரு. அருணாசலம் அவர்கள் இல்லத்தில் தங்கி இருந்தேன். எனது ஆசையை வெளியிட்டபோது அவரது தனி உதவியாளர், முத்துராமலிங்கம்,ஒரு டூரிஸ்ட் பஸ்ஸில் ஏற்றி அனுப்பி விட்டார், துணைக்கு பட்டேல் என்று ஒரு இளைய நண்பர்.இருவருக்குமே தாஜ்மஹால் புதிது.”அங்கே ஒன்றுமே கிடையாது நீங்கள் ஏமாற்றத்துடன் திரும்புவீர்கள்” என்று சிலர் சொல்லியிருந்தனர், ”சிலர் அது அற்புதம்தான்” என்றிருந்தார்கள்.

ஒரு கலவையான எதிர்பார்ப்புடனும், ஒரு மணிநேரத்தில் பஸ்ஸிற்குத் திரும்ப வேண்டும் என்ற பயத்துடனும் தாஜ்மஹாலை நெருங்கினோம். அதன் தலைவாசலின் நிழலில் இருந்து, தூரத்து வெயிலில் மின்னும் அதைப் பார்த்த உடனேயே பிரமிப்பு சூழ்ந்து கொண்டது. யார் சொன்னது ஏமாற்றமென்று, மகாப் பெரிய அதிசயமேதான், ’தாஜ்மஹல்’. பட்டேலிடம் காமிராவைக் கொடுத்து, தாஜ்மகாலுடன் என்னை, முடிகிற அளவு படம் எடுத்து விடு என்று சொல்லி ரசித்தவாறும், படம் எடுத்தவாறும் அதைப் பார்த்து முடித்தோம். முடிப்பது என்பதற்கு அர்த்தம் கிடையாது..திடீரென்று அவன் சொன்னான், ”சார் கிட்டத்தட்ட ஐம்பது படம் எடுத்தாச்சு, இன்னும் கால் மணி நேரமிருக்கிறது, திரும்பலாமா.” ”என்னது ஐம்பதா, முப்பத்தி ஆறுக்கு மேல் வராதே” என்று காமிரவைச் சரிபார்த்தேன். என்ன செய்திருந்தானோ, பிலிம் சுழலவே இல்லை..ஒரே பிலிமில் ஐம்பதையும் எடுத்திருப்பான் போலிருக்கிறது. காமிராவைச் சரி செய்து விட்டு “ஓடி வா, மீண்டும் எடு, அதே இடங்களிலிருந்து,” என்று ஐந்து நிமிடத்தில் தாஜ்மஹாலை மறுபடி ஒரு சுற்று சுற்றினோம். ஊருக்குத் திரும்பியதும் ப்ரிண்ட் போட்டுப் பார்த்தேன், நல்லவேளை நான் தாஜ்மகால் பார்த்ததற்கும், ரசித்ததற்கும் நண்பர்கள், உறவினர்களிடம் சொல்லிக் கொண்டாட அழகான சாட்சியங்கள் அதில் இருந்தன.

உண்மையில் பயணம் போவது என்பதே ’’பத்திரமாய்த் திரும்பி வந்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத்தான்.” சீனப்பழமொழி ஒன்று சொல்கிறது பத்தாயிரம் புத்தகங்களைப் படிப்பதைவிட பத்தாயிரம் மைல் பயணம் செய்வது மேல்” என்று அது கிரேக்க கவி ஹோமரின் காவியநாயகனான யுலிஸ்ஸஸுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். யுலிஸ்ஸஸும், சிந்துபாத்தும் உயிரைப் பணயம் வைத்து பயணங்கள் செய்ததெல்லாமே, கதைகளாக காவியங்களாக நிலைக்கத்தான்.”ஏழு கடல் சென்றாலும் ஏலேல சிங்கன் கப்பல் திரும்பி வரும்” என்று தமிழ் முதுமொழி கொண்டாடுவதும் இதைத்தான்.அந்த டெல்லிப் பயணத்திற்குப் பின்னர் இனி குடும்பத்தோடு பயணம் செல்லவேண்டுமென்று முடிவெடுத்தேன்.அடிக்கடி போனோம். ஒவ்வொரு முறையும்,

“பயணம் குறித்த

கனவுகளுடனும் பயங்களுடனும்

பயணத்திற்குத்

தயாராகிக் கொண்டிருந்தோம்...”மனைவி குழந்தைகளுடன் செல்வதால், பயணத்தின் போது தேவைப்படும் முன்னெச்சரிக்கைகளை, மூளையெங்கும் நிரப்பிக் கொண்டு,அவர்களுக்கும் அது குறித்து அறிவுறுத்தி, அதை அவர்கள் ‘அதே பயத்துடன் ஏற்றுக்கொண்டார்களா’ என்று நான் மட்டும் அதிகமாய் ஒரு பயத்தை, மூட்டையுடன் சேர்த்துக் கட்டிக் கொள்வேன்.இத்தனைக்கும் எங்களுடன், குழந்தைகளுக்கு இஷ்டமான சேகர் மாமாவை எப்போதும் உடன் அழைத்துக் கொள்வேன். அவன் என் டீச்சர் மனைவியின் மாணவன், மற்றும் கலகலப்பானவன்.அவனைப் பார்த்தாலே குழந்தைகளுக்கு உற்சாகம் பிறந்து விடும். அவன் உடன் வருவதில் எனக்கு இரண்டு சௌகரியங்கள். குழந்தைகளை, என் பயம் கலந்த கோபத்திலிருந்து, ”சின்னக் குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான் பாணியில்” சிரிப்புடன் காப்பாற்றிக் கொள்வான், அவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாய் புகைபிடிக்க எனக்கும் ‘கம்பெனி’ தருவான். வாடகைக்கார் டிரைவருடன் அந்நியோன்மாய் இருப்பான்.திட்டமிட்டபடி எல்லா இடங்களையும், கோயில்களையும் பார்த்துவிட வேண்டுமென்ற நினைப்பில் டிரைவரைக் கடிந்து கொண்டால், சாதுர்யமாக அவரைச் சமாதானப்படுத்தி விடுவான்.

என்ன இருந்தாலும் என் கவலையெல்லாம் பத்திரமாகத் திரும்பவேண்டுமே என்றுதான் இருக்கும்.திரும்பியதும்,பயணம் விசாரிக்க வரும் அண்டை வீட்டாரிடம் சந்தோஷமாய் அனுபவம் பகிர்ந்து கொள்வார்கள், உடன் வந்தவர்கள்.இதற்குப் போய் இவ்வளவு பயந்தோமே என்று விழித்தபடி கேட்டுக் கொண்டிருப்பேன்.”நல்லவேளை, ஒரு டூத் ப்ரஷ்ஷையும், தலையணைக்கடியில் வைத்த சவுரி முடியையும்தான் எடுக்க மறந்து போச்சு”,சின்னவ ஒரு துண்டை எடுக்கமாலே வந்துட்டா” என்று சொல்லும் போது, அவர்கள் “பழைய துணியை தொலைச்சிட்டு வந்தா நல்லதுதான், நம்ம புடிச்ச சனியன் தொலஞ்சுதுன்னு அர்த்தம்” என்பார்கள். நான் மட்டும்“அடப்பாவிகளா நான் அல்லவா ஒவ்வொரு ஊரிலும் பயந்து பயந்து, தொலைந்து போனேன், ஆனாலும் ’சனியன்’ மறுபடி கூடவே வந்து விட்டேனோ” என்றும் நினைத்துக் கொள்வேன்.

Wednesday, July 14, 2010

ஓடும் நதி-40


ஏழாம் வகுப்பில்,ஓரியண்ட் லாங்க்மேன் பதிப்பித்த, “DAWN READER”, என்று நினைவு, ஆங்கிலப் பாடப்புத்தகமாக இருந்தது. ”,ஸ்டீபன் பாலையா சார், ”எல்லோரும் புதுப் புத்தகமாகவே வாங்கிருங்கடா அப்பத்தான் படிக்க நல்லது, பழைய புத்தகமென்றால் கேள்விகளுக்கு விடையெல்லாம் முந்தின வகுப்பு மாணவர்கள் எழுதி வைத்திருப்பார்கள்” என்று சொல்லி எல்லோருக்கும் அவரே புதிதாய் புத்தகம் வாங்கித் தந்தார்.மொத்தமாக வாங்கினதால், விலையும் சௌகரியமாய் இருந்தது.சார் ரொம்ப நல்ல மாதிரி,ஸ்கூலெல்லாம் முடிந்த பின்னும் பணம் வாங்காமல் டியூஷன் சொல்லித் தருவார்.நான் போக மாட்டேன், ”மாலை முழுதும் விளையாட்”டில்லாவிட்டால் தெருவும் புழுதியும் என்னாவது.

அந்தப் புத்த்கத்தில், ஒரு பாடம் ‘அராக்னி’ (ARACHNE) என்ற கிரேக்க கதை.அது பரிட்சைக்கு கிடையாது என்பதால், வகுப்பில் நடத்துவதில்லை.அந்தக் கதையை தட்டுத் தடுமாறிப் படித்துப் பார்த்தேன்.பாதி புரிந்தது.அன்று மாலை, சாரிடம் கேட்கலாம் என்று வீட்டுக்குப் போகாமல் இருந்தேன்.சார், ”என்னடே காரணமில்லாம நீ இருக்கமாட்டியே”என்றார். நான், ”இந்த ’அராச்னே’ கதையைச் சொல்லுங்களேன்” என்றேன்.”அதை அராக்னின்னு வாசிக்கணுண்டா” என்று கதையைச் சொன்னார்..

”அராக்னி அற்புதமான சித்திர வேலைப்பாடுகளுடன், பிரமாதமாகத் துணி நெய்வாள். அவளது புகழ் பெருமளவில் பரவியிருந்தது. (இப்பொழுது பட்டுச் சேலைகளில் “ராமாயண, மகாபாரதக் கதைகள் எல்லாம் வருவது போல்,) அராக்னி பல கிரேக்க புராணக் கதைகளை அவள் நெய்யும் துணிகளில் தீட்டுவாள்.அவளது அசாத்தியத் திறமையும் புகழும் அவளது அகங்காரத்தை வளர்த்தது.”என்னை வெல்லுவதற்கு இந்தக் கலையின் அதிதேவதையான ’மினர்வா’வினாலும் முடியாது” என்று சவால் விடுத்து வந்தாள்.இதைக் கேள்விப்பட்ட தேவதை மினர்வா ஒரு வயதான பெண்ணாக உருவெடுத்து அராக்னி முன் தோன்றினாள். ”நீ, உன் திறமைக்காக சந்தோஷப்படலாமே தவிர,கடவுளர்களிடம் சவால் விடக்கூடாது” என்று அறிவுரை சொன்னாள்.அராக்னி பதிலுக்கு மறுபடியும் சவால் விட்டாள்’ உடனே சுய உருவம் அடைந்த ‘மினர்வா” சவாலை ஏற்றுக் கொண்டாள். இருவருக்கும் போட்டி நடந்தது. மினர்வா தான் ’பொசைடன்’ என்ற் சமுத்திரக் கடவுளுடன் நடத்திய வெற்றிப் போரை சித்திரமாக சேலையில் நெய்தாள். அராக்னி, தலமைக் கடவுளான ’ஜீயஸ்’ஸின் -அவர், நம்ம புராணத்து இந்திரனுக்கு அண்ணன் போல- ‘பலான’ இருபத்தியோரு திருவிளையாடல்களை நெய்திருந்தாள். உண்மையிலேயே அராக்னியின் சித்திரமே பிரமாதமாக இருந்தது. தோற்றுப் போன மினர்வா, நம்மை ஒரு மானுடப் பெண் வெல்வதா என்ற கோபத்தில் அராக்னியின் தறியை உடைத்து, அவள் நெய்தவற்றை கிழித்தெறிந்தாள்.அராக்னியையும் நீ “சிலந்திப் பூச்சியாகக் கடவது என்று சபித்தாள்.அன்றிலிருந்து சிலந்தி நெய்து கொண்டே இருக்கிறது. அராக்னியின் கதை, சிலந்தியின் கதை, பல ஓவியர்களைப் பெரிதும் பாதித்த புனைவு. அதைப் பல விதமாக சித்தரித்துத் தள்ளியுள்ளார்கள்.

உண்மையில் இந்த மாதிரி புனைவுகள் எல்லாம், பல நாடோடிக் கதைகளின் தொகுப்பென்றே நினைக்கிறேன்.எந்த நாட்டின் புராணமாக இருந்தாலும் இப்படிக் கதைகள், புராணத்தில் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.ஆதாரமான ‘கடவுள்’ என்கிற விஷயத்தை மட்டும் லேசாகத் தொட்டுக் கொண்டால் போதும்.

உலகின் பல ஜீவராசிகளும், சிவபெருமானிடம் சென்று ,”எங்களுக்கெல்லாம் உறைவிடம் என்று எதுவும் இல்லை, எங்களுக்கு உறைவிடம் வேண்டுமென்று முறையிட்டனவாம். உடனே அவரும் ஒவ்வொரு உயிருக்கும், ஒவ்வொரு வாழ்விடத்தை ஒதுக்கிக் கொடுத்தாராம்.எல்லா உயிரினங்களுக்கும் தகுந்த இடமாக யோசித்து யோசித்துக் கொடுத்து அலுத்துப் போய் இருக்கும்போது, தாமதமாக வந்த ’பேன்’, ”எனக்கு ஒரு இடமும் இல்லையே நான் எங்கே இருக்க” என்று கேட்டதும்,கோபத்தில் அவர்,”நீ என் தலையில போய் இருந்துக்கோ”, என்று சொல்லி விட்டாராம்.அதிலிருந்துதான் பேன்கள் தலையில் இருந்து கொண்டு உயிரை எடுக்கின்றனவாம்.

இதே போல் பாம்பு சட்டை உரிப்பதற்கு ஒரு கதை,தேள் கொட்டி விட்டு, ‘டபக்’கென்று ஒளிந்து கொள்வதற்கு ஒரு கதை, என்று ஏகப்பட்ட கதைகள் உலவுகின்றன.இங்கே, வெள்ளகால் என்ற ஊரில் தேளே கிடையாதாம். கொண்டு போய் விட்டாலும் அவை இறந்து விடுமாம். வழக்கமாக தைப் பொங்கலுக்கு வெள்ளை அடிக்க வரும் ஒருவர் சொன்னார்.அதே போல வெள்ளையடிக்கும் முன் வீட்டை ஒதுங்க வைக்கும் போது, புழங்காமல் கிடக்கிறவைகளிலிருந்து பூரான்கள் வரும். அவர் அதை அடிக்க மாட்டார். யாராவது பெண்களைத்தான் கூப்பிடுவார்.நான் அடிக்கிறேன் என்றால், ”பூரானை, ஆண்கள் அடிக்கக் கூடாது சார், நான் பாம்புக்கே பயப்படாதவன், பூரானுக்கா பயப்படுவேன்” என்பார், ஆமா அதுல என்ன விஷயம்ன்னு கேட்டா, “அதுல பாருங்க, யாரோ ஒரு பொம்பளை,புருஷனுக்கு பாலில் விஷம் வச்சுக் கொடுத்திருக்கா,அவன் கோமதியம்மனைக் கும்பிடுறவன், அதனால அம்மன் என்ன செஞ்சா, ஒரு பூரானை அனுப்பி நீ பாலில் விழுந்து கிட என்றாள். அதுவும் விழுந்து செத்து மிதந்ததாம். பூரான் விழுந்து கிடந்த பாலை அவன் குடிக்காமல் தூரக் கொட்டினானாம்.நல்லவேளை அவனும் தப்பிச்சான், பொம்பளையாள் பேரும் கெட்டுப் போகலை. அதனாலதான் நம்ம ஊர்ல ஆண்கள் யாரும், பூரானை அடிச்சுக் கொல்றதில்லை”, என்றார், அந்தப் பிரம்மச்சாரித் தொழிலாளி.