Monday, July 19, 2010

ஓடும்நதி-41


ஆக்ராவின் வெறுமையில்

காதலின் பசுமையாய்

தாஜ்மஹால் சிரிக்கிறது... என்று., தாஜ்மகாலைப் பார்த்தேயிராத நாட்களில், நாட்குறிப்பில், ஒரு கவிதையில் நான் எழுதி வைத்திருந்தேன்.

இந்தக் கவிக் குறிப்பிற்கு இன்று வயது நாற்பதாகிறது. அதை எழுதி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப் பின் தாஜ்மகாலை நேரில் பார்த்த போது, ரொம்பச் சரியாகவே எழுதியிருப்பது போலிருந்தது.ஒரு அவசர அவசரமான பயணம் அது.டெல்லியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் (பின்னாள் அமைச்சர்) திரு. அருணாசலம் அவர்கள் இல்லத்தில் தங்கி இருந்தேன். எனது ஆசையை வெளியிட்டபோது அவரது தனி உதவியாளர், முத்துராமலிங்கம்,ஒரு டூரிஸ்ட் பஸ்ஸில் ஏற்றி அனுப்பி விட்டார், துணைக்கு பட்டேல் என்று ஒரு இளைய நண்பர்.இருவருக்குமே தாஜ்மஹால் புதிது.அங்கே ஒன்றுமே கிடையாது நீங்கள் ஏமாற்றத்துடன் திரும்புவீர்கள் என்று சிலர் சொல்லியிருந்தனர், சிலர் அது அற்புதம்தான் என்றிருந்தார்கள்.

ஒரு கலவையான எதிர்பார்ப்புடனும், ஒரு மணிநேரத்தில் பஸ்ஸிற்குத் திரும்ப வேண்டும் என்ற பயத்துடனும் தாஜ்மஹாலை நெருங்கினோம். அதன் தலைவாசலின் நிழலில் இருந்து, தூரத்து வெயிலில் மின்னும் அதைப் பார்த்த உடனேயே பிரமிப்பு சூழ்ந்து கொண்டது. யார் சொன்னது ஏமாற்றமென்று, மகாப் பெரிய அதிசயமேதான், தாஜ்மஹல்’. பட்டேலிடம் காமிராவைக் கொடுத்து, தாஜ்மகாலுடன் என்னை, முடிகிற அளவு படம் எடுத்து விடு என்று சொல்லி ரசித்தவாறும், படம் எடுத்தவாறும் அதைப் பார்த்து முடித்தோம். முடிப்பது என்பதற்கு அர்த்தம் கிடையாது..திடீரென்று அவன் சொன்னான், சார் கிட்டத்தட்ட ஐம்பது படம் எடுத்தாச்சு, இன்னும் கால் மணி நேரமிருக்கிறது, திரும்பலாமா. என்னது ஐம்பதா, முப்பத்தி ஆறுக்கு மேல் வராதே என்று காமிரவைச் சரிபார்த்தேன். என்ன செய்திருந்தானோ, பிலிம் சுழலவே இல்லை..ஒரே பிலிமில் ஐம்பதையும் எடுத்திருப்பான் போலிருக்கிறது. காமிராவைச் சரி செய்து விட்டு “ஓடி வா, மீண்டும் எடு, அதே இடங்களிலிருந்து, என்று ஐந்து நிமிடத்தில் தாஜ்மஹாலை மறுபடி ஒரு சுற்று சுற்றினோம். ஊருக்குத் திரும்பியதும் ப்ரிண்ட் போட்டுப் பார்த்தேன், நல்லவேளை நான் தாஜ்மகால் பார்த்ததற்கும், ரசித்ததற்கும் நண்பர்கள், உறவினர்களிடம் சொல்லிக் கொண்டாட அழகான சாட்சியங்கள் அதில் இருந்தன.

உண்மையில் பயணம் போவது என்பதே ’’பத்திரமாய்த் திரும்பி வந்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத்தான்.சீனப்பழமொழி ஒன்று சொல்கிறது பத்தாயிரம் புத்தகங்களைப் படிப்பதைவிட பத்தாயிரம் மைல் பயணம் செய்வது மேல்என்று அது கிரேக்க கவி ஹோமரின் காவியநாயகனான யுலிஸ்ஸஸுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். யுலிஸ்ஸஸும், சிந்துபாத்தும் உயிரைப் பணயம் வைத்து பயணங்கள் செய்ததெல்லாமே, கதைகளாக காவியங்களாக நிலைக்கத்தான்.ஏழு கடல் சென்றாலும் ஏலேல சிங்கன் கப்பல் திரும்பி வரும்என்று தமிழ் முதுமொழி கொண்டாடுவதும் இதைத்தான்.அந்த டெல்லிப் பயணத்திற்குப் பின்னர் இனி குடும்பத்தோடு பயணம் செல்லவேண்டுமென்று முடிவெடுத்தேன்.அடிக்கடி போனோம். ஒவ்வொரு முறையும்,

“பயணம் குறித்த

கனவுகளுடனும் பயங்களுடனும்

பயணத்திற்குத்

தயாராகிக் கொண்டிருந்தோம்...மனைவி குழந்தைகளுடன் செல்வதால், பயணத்தின் போது தேவைப்படும் முன்னெச்சரிக்கைகளை, மூளையெங்கும் நிரப்பிக் கொண்டு,அவர்களுக்கும் அது குறித்து அறிவுறுத்தி, அதை அவர்கள் ‘அதே பயத்துடன் ஏற்றுக்கொண்டார்களா என்று நான் மட்டும் அதிகமாய் ஒரு பயத்தை, மூட்டையுடன் சேர்த்துக் கட்டிக் கொள்வேன்.இத்தனைக்கும் எங்களுடன், குழந்தைகளுக்கு இஷ்டமான சேகர் மாமாவை எப்போதும் உடன் அழைத்துக் கொள்வேன். அவன் என் டீச்சர் மனைவியின் மாணவன், மற்றும் கலகலப்பானவன்.அவனைப் பார்த்தாலே குழந்தைகளுக்கு உற்சாகம் பிறந்து விடும். அவன் உடன் வருவதில் எனக்கு இரண்டு சௌகரியங்கள். குழந்தைகளை, என் பயம் கலந்த கோபத்திலிருந்து, சின்னக் குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான் பாணியில் சிரிப்புடன் காப்பாற்றிக் கொள்வான், அவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாய் புகைபிடிக்க எனக்கும் ‘கம்பெனி தருவான். வாடகைக்கார் டிரைவருடன் அந்நியோன்மாய் இருப்பான்.திட்டமிட்டபடி எல்லா இடங்களையும், கோயில்களையும் பார்த்துவிட வேண்டுமென்ற நினைப்பில் டிரைவரைக் கடிந்து கொண்டால், சாதுர்யமாக அவரைச் சமாதானப்படுத்தி விடுவான்.

என்ன இருந்தாலும் என் கவலையெல்லாம் பத்திரமாகத் திரும்பவேண்டுமே என்றுதான் இருக்கும்.திரும்பியதும்,பயணம் விசாரிக்க வரும் அண்டை வீட்டாரிடம் சந்தோஷமாய் அனுபவம் பகிர்ந்து கொள்வார்கள், உடன் வந்தவர்கள்.இதற்குப் போய் இவ்வளவு பயந்தோமே என்று விழித்தபடி கேட்டுக் கொண்டிருப்பேன்.நல்லவேளை, ஒரு டூத் ப்ரஷ்ஷையும், தலையணைக்கடியில் வைத்த சவுரி முடியையும்தான் எடுக்க மறந்து போச்சு,சின்னவ ஒரு துண்டை எடுக்கமாலே வந்துட்டாஎன்று சொல்லும் போது, அவர்கள் “பழைய துணியை தொலைச்சிட்டு வந்தா நல்லதுதான், நம்ம புடிச்ச சனியன் தொலஞ்சுதுன்னு அர்த்தம் என்பார்கள். நான் மட்டும்“அடப்பாவிகளா நான் அல்லவா ஒவ்வொரு ஊரிலும் பயந்து பயந்து, தொலைந்து போனேன், ஆனாலும் சனியன் மறுபடி கூடவே வந்து விட்டேனோஎன்றும் நினைத்துக் கொள்வேன்.

3 comments:

பத்மா said...

அப்பாக்கள் எப்போதுமே டென்ஷன் பார்ட்டிகள் தான் .அதன் நாங்க ரொம்ப கண்டுகறது இல்ல ....
நல்ல இடுகை ..ரசித்தேன்

உயிரோடை said...

எப்போ வந்தீங்க டெல்லி. சொல்லி இருந்தா நாங்க வந்து பார்த்திருப்போம் உங்களை :(.

வல்லிசிம்ஹன் said...

இரண்டு பக்கமும் டென்ஷன் பார்ட்டிகள் உண்டு.:)
எங்க பசங்க சொல்வாங்க.சந்தோஷமா ட்ராவல் செய்மா. என்ன டென்ஷன் அப்படின்னு.இத்தனை வருடங்களா மாற்றிக்கொள்ள முடியவில்லை.
உங்கள் இடுகை மனதுக்கு மிகவும் சந்தோஷம் கொடுத்தது. நம்மைப் போல இன்னோரு ஜீவன்.