Monday, September 22, 2008

அந்த வயதுக்கு அவ்வளவு விஷயங்கள் அதிகமோ அதிகம் என்று தோன்றுகிறது.ஆனாலும் முழுதுமாக வெம்பி விடாமல் எதோ (ஏதோ இல்லை) ஒரு சக்தி காப்பாற்றி வந்திருப்பதாகவே படுகிறது.சேர்மானம் சரியில்லாமல் கெட்டுப் போகாம அப்பப்ப ஒரு ராக்கெட் என்னிலிருந்து கழன்று சுமாரான சுற்று வட்டப் பாதையில் ஆளைக் கொண்டு செலுத்தியிருக்கிறது.ஆனலும் சில சங்கதிகளை நினைச்சுப் பார்த்தா வெட்கம் பிடுங்கித் திங்கத்தான் செய்யும். சங்கரநாராயணன், ஆள் நரம்பு மாதிரி இருப்பான்..நல்லாப் படிப்பான்.ஆனா அவனுக்கு எங்கே இருந்து விஷயங்கள் தெரியுமோ.... காலைலே பாடசாலைக்கு வந்ததுமே வாய்ப்பாடு கிளாஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால ரீசஸ் போக ரெண்டு பேரும் போகும் போது ஏதாவது ஆரம்பிச்சுருவான்.ஏல பொம்பளைங்க பழைய துணியெல்லாம் சதுரஞ் சதுரமா கிழிச்சு வச்சுருப்பாங்க தெரியுமால என்பான். விடை சொல்றதுக்கு முன்னால மணியடிச்சுரும்,,, வாய்ப்பாடு கிளாஸ் ஆரம்பிச்சுரும்.சீக்கிரம் போனா சின்ன வாய்ப்பாடா சொல்லி தப்பிச்சிரலாம். ஆறாம் வாய்ப்பாடு வரைக்கும் ரொம்பக் கஷ்டமில்லை பத்தாம் வாய்ப்பாடுன்னா ஈஸி. ஒரு நாள் பதிமூணாம் வாய்ப்பாடு சொல்லும்படியாயிட்டு.வாய்ப்பாடு சொல்றதுன்னா, மொத்த ஸ்கூலும் உக்காந்திருக்கும், நாம மட்டும் எந்திரிச்சி நின்னு ஒரு பதிமூனு பதிமூனுன்னு சொன்னா மத்த பிள்ளைகளெல்லாம் பின்னாலாயே சொல்லும். பத்து பதிமூனு நூத்தி முப்பது சொல்லியாச்சு....பதினோரு பதிமூனு......திக்க ஆரம்பிச்ச சமயம் சங்கர நாராயணன் காலுக்கு அருகிலிருந்து நூத்திநாப்பத்தி மூனு என்று சொல்லிக் கொடுத்தான். பிடிச்சது வினை.வாத்தியார் ஏல நீ சொல்லுலே இன்னமே என்று என்னை உட்கார வைத்து விட்டு அவனை எழுப்பி விட்டார்...காணாததுக்கு பத்து தடவை எழுதிட்டுவரணும்ன்னார் எனக்கு சிரிப்பாணிய அடக்க முடியல.கக்கா பிக்கான்னு சிரிக்கவும் வாத்தியார் நீ பதிமூனு தடவை எழுதிட்டு வாலேன்னார்.எல்லாரும் சிரிச்சாங்க. மூஞ்சி இஞ்சி தின்ன குரங்காயிட்டு எனக்கு. இப்ப நினைச்ச்சாலும் ஒரு மாதிரியா நளுக்குது. மீனாட்சி மட்டும் சிரிக்கவே இல்லை.இத்தனைக்கும் எப்பவும் சிரிச்ச முகம் அவளுக்கு அப்பவே மூக்குத்தி போட்டிருப்பா. நல்ல உயரமுங்கூட. நாராயணன் ரெண்டு மூனு நாள் பேசவே இல்லை....துணி விவகாரம் தெரிவது தள்ளிப்போனது. இப்பல்லாம் பத்தாம் வாய்ப்பாடு வரை தெரிஞ்சா போதுமே....இவ்வளவுக்கும் அப்போ நயா பைசா வந்தாச்சு.1957-ல் அது வந்த சமயம் தெப்பக் குளத்தெரு போத்தி டிரஷரியில் வேலை பார்த்தார், அப்பாவுக்கு சினேகிதம். நூறு, இரு நூறு ரூபாய்க்கு அப்பா புதூ சில்லரையா மாத்திட்டு வாந்தார். அப்பா வரும் வரை அன்றிரவு ரொம்ப நேரம் விழித்தே இருந்து விட்டு எப்படியோ தூங்கிப் போனேன். திடீர்ன்னு முழிச்சுப் பாத்தா எல்லாரும் பட்டாசலில் அமர்ந்து மஞ்சள் வெளிச்சத்தில் புது நாணயத்தை எண்ணியும் துழாவியும் பாத்துக்கிட்டுருக்காங்க...அம்மா மட்டும் தள்ளி இருந்து என்ன இது சல்லிய விட சிறுசால்ல இருக்கு என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்...அந்த மஞ்சள் வெளிச்சமும்..(அப்பல்லாம் டியூப் லைட் ஏது) செக்கச் சிவந்த ஒரு பைசாக்களும் தள்ளியே இருக்கிற அம்மாவும், நல்லா நினைவிருக்கு...அப்ப உள்ளது எதுதான் மறக்கும்....வகுப்பில் (மூனாம் வகுப்பு) சத்தம் கூடிப்போன ஒரு நாள் கடேசிப் பீரியடுல, சார், கிளாஸ்ஸையே மாத்தி விட்டார்..ஒரு ஆம்பிளப் பையன்..ஒரு பொம்பிளப் பிள்ளை..என்று உட்கார வைத்து விட்டார்...மீனாட்சிக்குப் பக்கத்தில் சங்கரநாராயணன். அவ உயரத்துக்கும் இவன் நறையான் மாதிரி இருக்கிறதுக்கும் ஏழாம் பொருத்தமாய் இருந்தது.மறு நாள் காலையில நாராயணன் சேக்கா போட்டு விட்டான். நைசா,”ஏடே மீனாக்ஷி பக்கத்துல நீ உக்காந்துக்கயேன் ”என்றான். தட்டமுடியவில்லை. எங்க மறுபடி பேசாம இருந்துருவானோன்னு பயம்தான்.ஆனாலும் வாத்தியார் என்னமுஞ் சொன்னா, என்ன செய்யறதுன்னும் யோசனைதான்.அவர் கண்டுக்கிடலை.மீனாட்சியும் ஒன்னும் சொல்லலை எனக்கும் அவ கிட்ட உட்கார்றது கூச்சமாய்த் தானிருந்தது.நானும் அவ அளவுக்கு உயரமானவனில்லை.மத்தியானம் பள்ளிக்கூடம் முடியப் போற நேரம். சங்கர நாராயணன் முகத்தை அஷ்ட கோணலா வச்சுகிட்டு எந்திரிச்சு சுட்டு விரலை கொஞ்சம் வளைச்சு சாரிடம் காமித்தான். அதுக்குள்ள மொத்த கிளாஸுமே கோரஸா சார் இவன் ஓன்னுக்கிருந்துட்டான் சார் என்று பாடியது..அவன் பாவப்பட்ட பையன். டிராயர் விறைப்பான துணியில் இருக்காது,,ட்ராயர் சுத்தமா நனைஞ்சு வகுப்பறையில் தரையில் ஒரு செம்புத் தண்ணியக் கவுத்தமாதிரி ஓடுது. சார் ஏல ஏல ஒடுல என்றதும் அவன் ஓடவும் பள்ளிக் கூட மணி வீட்டுக்கு விடவும் சரியா இருந்தது. மத்தியானம் மொத்த கிளாசையும் மீனாட்சி கழுவி விட்டுக் கொண்டிருந்தாள்.பயலை ஆளையே காணும்.மீனாக்ஷி மத்தியானம் சொன்னாள், நல்ல வேளைப்பா நீ பக்கத்துல உக்காந்திருந்தே என்று. மறுநாள் அப்பா புதிதாய் எடுத்திருந்த ராஜா ராணி வேஷ்டியைச் சுற்றியிருந்த தங்கத்தாளை அவளுக்கு கொடுத்தேன்.முன்பே அவள் சசியிடம் கேட்டு ஏமாந்திருந்தாள்.
1976 பொங்கலுக்கு ஊரும் தெருவும் தயாராகிக் கொண்டிருந்த சமயம் என் துயரங்களுக்கும் 26 வயசு முடிந்து போன சமயம்.நடுப்பகல் கழிந்து ஒரு மணி வாக்கில் தெருவில் ஆள் அரவமே இல்லை ஒரு இண்டர்வியூவுக்கு கிளம்பி பாதித்தெரு வந்திருப்பேன் இடது புறமிருந்து தெருவில் இணையும் ஒரு சின்னச் சந்திலிருந்து மீனாட்சி வந்தாள்.கையில் பழைய சேலைத் துணியில் வெயில் சற்றும் தாக்கி விடாமல் சுற்றிய, செம்பஞ்சுக் குழம்பிட்ட மாதிரி கால்கள் மட்டும் லேசாக வெளித் தெரியும் தன் சிசுவுடன் வந்தாள். திடீரென்று என்னைப் பார்த்ததில் நாணம் முகம் முழுக்க ரத்தம் பாய்ச்ச, பழைய சிரிப்பு மின்னலாய் சுழித்தது....பத்தொன்பது வருடங்கழித்து பழைய குரல் கேட்டது. ”பொம்பளப்பிள்ளை” என்று நான் கேட்காமாலே சொல்லி பதிலுக்கு காத்திராமல் தன் அம்மாவுடன் கடந்துபோனாள்.அவள் அம்மாவும் ஆமாய்யா என்று சொல்லிப் போனாள்.மனசுக்குள் சொல்ல முடியாத சந்தோஷம். அந்த வேலை கிடைத்து இன்று ஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.
அந்நியம்
அம்மாவின்
‘சகுனம் பார்த்துப் போ’
வாசல்ப் படியில் விட்டு விட்டு
தெருவுக்கு வந்த போது
நீ தங்கத் தாள் தந்து
வாத்சல்யம் கொட்டின
பால்ய கால ஸ்னேகிதி
பெயரிடப் படாத தன்
சிசுவுடன் எதிர்ப் படுவாள்
கண் முழுக்க
கானல்ப் பிரியம் குளமிடும்.
......................................................
.......................................................


(ஞான பீடம் –குறுங்காவியம்)
1976

Monday, September 15, 2008

அன்று இரவில் நெடு நேரம் தூங்கவில்லை. அப்போதெல்லாம் தொலைபேசி தெருவுக்கு இரண்டு வீட்டில் தான் இருக்கும். நீண்ட நேரம் பத்மனாப அண்ணாச்சியின் ஆஸ்பத்திரியில் காத்திருந்தோம் அவர் ஒரு எல் எம் பி டாக்டர்.அங்கே ஒரு தொலை பேசி உண்டு,அவர் 14 -வது வார்டு தி.மு.க உறுப்பினர்.திருநெல்வேலியின் முதல் தி.மு.க சேர்மன் ஆக வேண்டியவர். ஆக முடியவில்லை. பின்னாளில் 71-ல் எம் எல் ஏ ஆனார். சென்னை கர்ப்பரேஷன் தேர்தல் முடிவோ, செ.கந்தப்பன் இடைத் தேர்தல் முடிவோ அங்கே தான் காத்துக்கிடப்போம். தினமலரில் என் அண்ணன் ஒருவர் நிருபராய் இருந்தார் அவன் டெலி பிரிண்டர் செய்தி பார்த்து விட்டு எப்போதாவது சொல்வான்.அவன் தான் எம் ஜி ஆர் குண்டடி பட்டதும் தகவல் சொன்னான்.ஆனால் அவன் அவருக்கு காலில் குண்டு பட்டிருப்பதாகச் சொன்னான்.அதிலிருந்து அவனிடம் போய் கேட்பதில்லை.ரேடியோவிலும் கடைசி ஆங்கிலச் செய்தி இரவு 11 மனிக்கு. அதிலும் அண்ணாவுடைய உடல் நிலை பற்றி ஒன்றும் விசேஷ மாகச் சொல்லவில்லை.காலை ஐந்து மணிக்கு தூக்கம் விழித்து ஒரு கோஷ்டியாக சந்திப் பிள்ளையார் முக்கு டீக் கடைகளில் ரேடியோ செய்தி கேட்கப் போனோம்.பாதித் தெருவில் கிருஷ்ணன் வைத்த வீட்டில் ஆல் இந்தியா ரேடியோவின் ‘கையெழுத்து இசை'(signature music) கேட்டது.எல்லாரும் அங்கே போனோம். வீட்டில் பெண்களும் குழந்தைகளும் படுத்துறங்கும் பட்டாசலினுள் தயங்கித் தயங்கி நுழைந்தோம்.வீட்டில் வாடகைக்கு இருந்தவர் தி மு க அனுதாபி அதனால் அவர் வாங்கடே என்று சோகமாக அழைத்தார். ரேடியோ தன் வழக்கமான- சக வருஷம் ச்ராவண மாதம் போன்ற வழக்கமான- முகமன்களுக்குப் பின் ஒரு முக்கிய செய்தி என்று குரல் கம்மத்தொடங்கியது.வீட்டின் பெண்களும் பிள்ளைகளும் அந்நிய ஆண்களை அப்போதுதான் உணர்ந்தார்களோ என்னவோ வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கத் தொடங்கும் போது “அண்ணா அமரரானார்....”என்று பட்டாபி ராமனோ பஞ்சாப கேசனோ அறிவிக்கத் தொட்ங்கியதும் வீட்டுக்காரர் அழத் தொடங்கினர்..வீட்டின் பெண்கள் கலவரம் அடையத் தொடங்கிய போது நாங்கள் நம்ப முடியாமல் வீட்டை விட்டு கிளம்பினோம்.சிவசங்கரனோ யாரோ பொறுப்பாகஅவரிடம் நன்றி சொல்லி விட்டு வந்தார்கள் . அழுதோம் என்று சொல்ல முடியாது, ஆனால் தொண்டைக்குள் ஏதோ அடைத்தது. தெரு முனைக்கு வரவும் யாரோ ஒரு ஜவுளிக் கடை அட்டையும் சாக் பீஸுமாக வரவும் சரியாக இருந்தது.”பேரறிஞர் அண்ணா மறைவு” என்று எழுதி தி மு க கொடிக் கமபத்தில் எட்டும் உயரத்தில் கட்டி விட்டு. எதிர்த்த மெடிக்கல் ஸ்டோரின் உயர்ந்த படிகளில் உட்கார்ந்து பேசத் தொடங்கினோம்.அண்ணாவின் பல் மேடைப் பேச்சுகள், எழுத்துக்கள் பற்றித் தான் பெரும்பாலான பேச்சு அமைந்திருந்தது.1967 தேர்தலுக்கு முந்திய நெல்லைக் கூட்டத்தில் அவர் பேசிய நகைச் சுவையும் நளினமும் மிக்க பேச்சு,”பக்காக் காங்கிரஸ் காரரும் சொக்காக் காங்கிரஸ்காரரும்....” பற்றிய பேச்சு. இந்துக் கல்லூரியில் மதியத்திலிருந்து இரவு 9 மணி வரை கலையாமல் காத்திருந்து கேட்ட ஆங்கில உரை....என்று காலையில் ஆறு மணி சுமாருக்கு ஆரம்பித்த பேச்சு பத்து மணியாகியும் முடியவில்லை.அப்பொழுதுதான் காய் கறி மார்க் கெட்டிலிருந்து தி மு க தோழர்கள் சிலர் வந்து நாங்கள் சென்னை செல்ல ஒரு பஸ் ஏற்பாடு செய்திருக்கிறோம் போக வர முப்பத்தி ஐந்து ரூபாய். நீங்கள் யாரும் வருவதாக இருந்தால் பன்னிரெண்டு மணிக்குள் சொல்லுங்கள் என்றார்கள்.அவர்கள் சொல்லி விட்டுப் போன நேரத்திலிருந்து பிடித்துக் கொண்டது ஆசை.முப்பத்தி ஐந்து ரூபாய் என்பது ரொம்பக் குறைவுதான்.ஆனாலும் அது எங்களுக்கு கிடைப்பது சுமார் நாற்பது வருடத்துக்கு முன்னால் ரொம்பக் கடினமான் விஷயம்.நான் பெரிய கோபால் செல்வகணபதி, ராமு என்று நலைந்து பேர் எப்படியோ பணம் பெறட்டி விட்டோம். ஒருத்தர் வைத்திருக்கும் ரூபாய் இன்னொருவருக்கு தெரியாது.ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.ஆனால் அதெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். அப்பா எப்படியும் ஒழி காசு கீசெல்லாம் கிடையாதுஎன்று சொல்லி விட்டார்.அம்மாவிடம் காசு இருந்த நாளே கிடையாது.பழைய பேப்பர், புஸ்தகம் எல்லாம் பொறக்கினாலும் ஐந்து பத்துக்கு மேல் தேறாது.அப்படியும் அந்தப் பழைய பேப்பர் கடைக்காரர் கட்சிக் காரர்தான், அடைத்த கடையைத் திறந்து பேப்பரை வாங்கிக் கொண்டு ஒன்பதோ என்னவோ தந்தார். அவர் விஷயத்தைக் கேட்டு கூட ஒன்றோ இரண்டோ தந்த நினைவு.ஒன்றும் ஒப்பேறாத நிலையில் வீட்டுக்கு வந்த போது பெரிய அண்ணன் சிரிச்ச மானிக்கே கேட்டான் என்ன துட்டு கிடக்கலையா. எனக்கு சரியான கோவம். ”ஆமா இவரு முடிஞ்சு வச்சிருக்காரு தரப் போறாரு”என்று திட்ட ஆரம்பித்தேன். அவன் வேலை வெட்டி எதுவும் இல்லாத மூத்த பிள்ளை.அவனுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் மதினி சமீபத்தில்தான் இறந்து போயிருந்தாள்.என்ன செய்தானோ தெரியவில்லை கொஞ்ச நேரம் கழித்து தெருவில் அமர்ந்து சேக்காளிகளுடன் போக முடியாத பயணத்தைப் பற்றி ப்ளான் பாண்ணிக் கொண்டிருந்த போது அண்ணன் வந்து கூப்பிட்டான்.எனக்கு எரிச்சல். அவன் முகத்திலோ ஒரு கேலிப் புன்னகை ”வாடே இங்கே” என்றான். கையில் முப்பது ரூபாய் தந்தான் .எனக்கு பெரிய ஆச்சரியம். என் வாழ்க்கையில் அவன் எனக்கு காசு தந்ததே கிடையாது. ஒரே ஒரு சமயம் சாரிடான் வாங்கி வந்த போது அரையணா தந்த நினைவு.அது பத்து வயது வாக்கிலிருக்கும்.தெருவில் எல்லாருக்குமே அது ஆச்சரியம்.அவனைப் பற்றிய அபூர்வக் குறிப்புகள் என்னை விட என் வயது தோழர்களுக்கே நன்கு தெரியும். அதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்கள்.என்னிடம் அப்படியும் இப்படியுமாக நாற்பது ரூப்பய்க்கு மேல் தேறியது. அதற்குள் பஸ் ஏற்பாடு செய்தவர்கள் வந்து முப்பது ரூபய் இருந்தாலும் போதும். சீதாபதி நாய்னா பஸ் தான். அவரும் கூட வாராரு. என்றார்கள். ரெண்டு நாள்தானே. அழகாப் போதும் வா என்று பெரிய கோபால்தான் சொன்னான்.அதற்கிடையில் வராத ரெண்டு மூன்று பேர் மொத்ததில் கடன் தர முன் வந்தார்கள். கணபதியோ யாரோ அதை வங்கி வைத்துக் கொண்டார்கள்.ஒரு துண்டு, ஒரு சட்டை. அவசரத்தில் மாற்று ஜட்டி கூட எடுக்க வில்லை. பஸ்ஸில் ஏறியதும் குனிந்து தான் நடமாட முடிந்தது. பஸ்ஸுக்குள் எங்கு பார்த்தாலும் வாழைத்தார் காயும் பழமுமாக கட்டி இருந்தது. எல்லாரும் சாப்பிடுவதற்குத் தான் என்றாகள், மார்க்கெட் தோழர்கள்

எங்களுக்கு “பின்ன என்னடே” என்று தோன்றியது. . பஸ்ஸில் ஏறியதும் குனிந்து தான் நடமாட முடிந்தது. பஸ்ஸுக்குள் எங்கு பார்த்தாலும் வாழைத்தார் காயும் பழமுமாக கட்டி இருந்தது. எல்லாரும் சாப்பிடுவதற்குத் தான் என்றாகள், மார்க்கெட் தோழர்கள். எங்களுக்கு “பின்ன என்னடே” என்று தோன்றியது.
மதுரை தாண்டும் போது சற்று கண்ணசந்தது. ஒன்றிரண்டு பழம் தின்றிருந்தோம். இன்னும் நன்றாகக் கனியவில்லை சில.திருச்சி நெருங்கும் போது பஸ் நின்றிருப்பது தெரிந்து விழிப்பு வந்தது.ஒரே டிராபிக் ஜாம். நெடுஞ்சாலையில் சேரும் எந்த சிறிய சாலையிலிருந்தும் வாகனங்கள் வந்து கொண்டே இருப்பாதாக பஸ் முதலாளி சீதாபதி நாய்னா சொல்லிக்கொன்டிருந்தார். அவர்தான் பஸ்ஸை அப்போது ஓட்டிக் கொண்டிருந்தார்.பசி வயிற்றைக் கிள்ளியது. மெதுவாக கீழே இறங்கினோம். எல்லாக் கடைகள், வீடு எங்கும் அண்ணா படம் மாலை போட்டு ஊதுவத்தி எரிந்த வண்ணம்...... இருந்தது. பத்து பதினோரு மணியிருக்கும்.சாப்பிட எதுவுமில்லை. கையிலும் ஒன்றும் கிடையாது. அம்மா கொஞ்சம் தயிர்ச் சோறாவது கொண்டு போ என்றிருந்தாள்.அவசரத்தில் யார் எதைக் கேட்க. ஒரு பெஞ்ச் மாதிரிப் போட்டு ஏதோ வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். உப்புமா. விலை கேட்ட போது தலை சுற்றியது. மூன்று பேரும் சேர்ந்து ஒரு பொட்டலம் வாங்கினோம். பொட்டலத்தைப் பிரித்தால் கொழு கொழுவென்று கஞ்சி மாதிரி இருந்தது. ருசியாவது ஒன்றாவது.... தூர எறியும் போதுதான் பார்த்தோம். அங்கே நிறையப் பொட்டலங்களை.நல்ல வேளை ஒன்றோடு நிறுத்தினோம். சரி பஸ்ஸுக்குள் வந்து பழம் தின்னலாம் என்று ஏறினோம். குலை இருந்தது, தொலி இருந்தது. பழம் இல்லை.
அவ்வளவு பசி மக்களுக்கு.அதற்குள் பஸ் நகர ஆரம்பித்தது. தூக்கமும் சுழற்றியது. பசியோடு சென்னையை ஊர்ந்து ஊர்ந்து அடைவதற்குள், மணி பகல் பன்னிரெண்டு வாக்கில் ஆகி விட்டது. குளிக்கவோ பல் விளக்கவோ நேரமேயில்லை. சித்ரா டாக்கீஸ் அருகே பஸ்ஸை நிப்பாட்டி விட்டு. சாயந்தரம் ஆறு மணிக்குள் இங்கே வந்து விட வேண்டும் என்று சொன்ன நினைவு.அங்கிருந்து ராஜாஜி ஹால் வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. ஆனால் யாரைப் பார்த்தாலும் அவர்கள் தங்கள் சொந்த சோகத்தில் அமிழ்ந்து போனவர்கள் போலவே இருந்தனர். யாரும் வேடிக்கை உணர்வுடன் இருந்தது போல் இல்லவே இல்லை. கணபதிக்குத்தான் சென்னை நன்றாகத் தெரியும். எனக்கு ஓரளவுக்கு மவுண்ட் ரோடு ஏரியா தெரியும். இருந்தாலும் யாரும் யாரையும் பிரிந்து விடாமல் ராஜாஜி அரங்கம் அருகே நெருங்கிவிட்டோம். அதற்குள் ஊர்வலம் தொடங்க ஏற்பாடுகள் தொடங்கி, குதிரைப் போலீஸார் விரட்ட ஆரம்பித்து விடவே ஸ்டார் தியேட்டரா காசினோவா நினைவில்லை அதற்கருகே ஒதுங்குமாறு கணபதி சொல்ல ஒதுங்கி நின்று ஊர்வலத்தைப் பார்த்தோம்.ஊர்வலம் தங்களைக் கடக்கும் போதெல்லம் அழுகையும் கூக்குரலுமாய் இருந்தது. கொஞ்ச தூரம் கூடவே போனோம்.ஒரு மகத்தான மனிதனின் மறைவில் இவ்வளவு சோகமா என்று புரியவில்லை. அம்மா, காந்தி இறந்தபோது திருநெல்வேலி அல்லோல கல்லோலப் பட்டதை சொன்னபோதெல்லாம் அதன் சாத்தியம் எனக்கு புரிந்திருக்கவில்லை....இன்று கூட. இதை எழுதும் இந்த வினாடி கூட நான் சம்பந்தப் பட்டிருந்த அந்த இறுதிப் பயணத்தை சரியாகச் சொல்கிறேனா தெரிய வில்லை. கணபதி சில விஷயங்களில் கெட்டிக்காரன். ஊர்வலம் எங்களைக் கடந்து போய் சிறிது நேரத்தில் பசி நினைவுக்கு வரத் தொடங்கி விட்டது.மதுரைக்கு அருகில் இரண்டு பழம் சாப்பிட்டது. ஒரு கடை கூட கிடையாது.கடற்கரைக்குப் போக வேண்டுமென்று சிலர் விரும்பிய போது கணபதி சொன்னான் அவன் தங்கை வீடு
தாம்பரத்தில் இருந்தது..மின்ரயிலில் போய் சாப்பிட்டு விட்டு திரும்பினால் சரியாக இருக்கும். அவனது யோசனைப்படியே போனோம். ரயிலிலும் கூட்டம் கூட்டம். பயங்கர நெரிசல்.அவன் தங்கை வீட்டுக்குப் போனதும் அவனது மாமா எல்லோரையும் பார்த்து, ”போய் உங்க மூஞ்சிய கண்ணாடில பாருங்கடா...”என்று ஒரே ஏச்சு. அவர் ரொம்ப அன்பானவர்.உரிமையில் ஏசினாலும் அவருக்கும் ஊர்வலத்தைப் பற்றிக் கேட்க ஆசையாக இருப்பது புரிந்தது.அவர் சொன்னார் உங்க ஒரு பயகிட்டயும் காசு இருக்காது பேசாம இங்க தங்கிட்டு ரெண்டு நாள் கழிச்சுப் போங்க.ரயிலில் அனுப்பி வைக்கிறேன்,என்று.நாங்கள் தட்டிக் கழித்துப் பேசிக் கொண்டிருப்பதற்குள் தங்கை சமையலை முடித்து விட்டாள்.சமையல் சிம்பிளானதுதான். ஆனால் பசி.....சாப்பிட்டு முடித்து மறுபடி ரயில் இப்போது கூட்டம் அவ்வளவு இல்லை.எட்டு மணிக்குள் சித்ரா டாக்கீஸ் பக்கம் வந்து சேர்ந்து விட்டோம். பாதிப்பேர் பசி மயக்கத்தில் இருப்பது போலிருந்தாலும் எல்லோருமே சம்பவத்தின் துயரிலிருந்து விடுபடாமலிருப்ப்பது தெரிந்தது.பஸ் மறுபடி நத்தை போல் பயணத்தை தொடர... நான் தூங்கி விட்டேன். மறு நாள் பகல்



பன்னிரெண்டு மணி அளவில் ஸ்ரீ ரங்கம் ஆற்றில் ஒரு அற்புதமான குளியல் போட்டு , இருக்கிற காசுக்கு சாப்பிட்டுவிட்டு ஏறி உட்கார்ந்ததுதான் தெரியும் நடு ராத்திரி போல் ஊர் திரும்பினோம்.நல்ல வேளை அப்பா விழித்திருக்க வில்லை.

1) புகழ் வாழும் தமிழ் நாட்டில்
பொய் வாழும் என்றறிந்தே-பொன்
துகள் விளையும் எழில் மண்ணில்
துயர் விளையும் என்றறிந்தே
பொய்யாப் புலவனவன்
பொன் மொழிகள் தந்திட்டான்
மெய்யான வழி கூறி
மேன் மாட விளக்கானான்
2) சோர்வுற்ற தமிழகத்தில்-தமிழ்ச்
சொல்லழிப்பார் புகக் கண்டு
பேரற்ற வடவரினம்
பெருக்கிடும் துயர் கண்டு
தாயவள் மானங்காக்க
தமிழ் மண்ணில் வீரஞ்சேர்க்க
சேயொருவன் மலர்ந்திட்டான்
சிந்தனைச் சிற்பி”அண்ணாவாய்”
3) வள்ளுவப் பெரியோன்
வகுத்திட்ட வழி நின்றான்
தெள்ளு தமிழ்க் குடில்களில்
தீரமாய் ஒளிர்கின்றான்
அறம் பொருளின் பமென முப்பாலாய்
அன்னவன் மொழிந்திட்ட
திறம் வழியே அண்ணன்
திகழும் விதம் காண்போம்
4) காட்சிக்கு எளியனாய்
கடுஞ்சொல்லன் அல்லனாய்
காட்டுகின்றான் ஆள்பவனை
கன்னித் தமிழ்ப் புலவனவன்
அறிவுக் கடலின் மணற் பரப்பாய்
அகன்றிருக்கும் நெற்றியும்
அறிவொழுகும் கண் மலரும்
அன்பாய் முகிழும் புன்னகையும்

5) அடுத்தார் மனம் மதிக்கும்
அரசியல்ப் பண்புகளும்-கணை
தொடுத்தார் வாய் கைக்க
பொறுத்திடும் மாண்பும்
காஞ்சியின் மைந்தனுக்கு
கை வந்த கலையன்றோ

6) அறிவுடை மூத்தோர் கேண்மை
அன்னவன் கொள்ளச் சொன்னான்
அறிஞனோ ஈரோட்டுப் பெரியாரின்
அரவணைப்பைப் பெற்றிட்டார்
கேளாரும் வேட்ப மொழிவதில்
கேட்டாரைப் பிணிப்பதில்
நேராரோ அறிஞருக்கு
நிகராரோ அண்ணனுக்கு
7) சொல்வல்லான் சோர்விலான்
சோமசுந்தர பாரதியை
சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளையை
சொற்போரில் சொக்கவைத்தார்
இணரூழ்த்தும் நாறா மலராயின்றி
எல்லோரையும் சிக்க வைத்தார்
துணை நின்றோர் நெஞ்சிலெல்லாம்-தமிழ்ச்
சொல்லாய் நிறைந்திட்டார்
8பணியுமாம் என்றும் பெருமை
பகர்ந்திட்டான் வள்ளுவன்
அணியானதே அண்ணனுக்கிந்த
அருமையான மொழிச் சிதறல்
வாழ்வெல்லாம் வள்ளுவமாய்
வடிவெல்லாந் தமிழுருவாய்
ஆழ்கடல் நித்திலமாய்
அண்ணா இருந்திட்டார்

9)உ வப்பத் தலைக் கூடி
உள்ளப் பிரிதலை
உரைத்திட்டார் வள்ளுவர்
ஓர் புலவன் கடமையென
இன்று நாம் அழுகின்றோம்
எதையும் தாங்கும் இதயமே
இதயமுறைத் தெய்வமே-இனி
என்றுன்னைக் காண்போமோ
23-2-1969