Saturday, February 11, 2017

அன்பார்ந்த நண்பர்களே
வணக்கம்.

தமிழின் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான சி.மணியின் இடையீடு என்ற ஒரு கவிதையுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன், சற்றே நீளமான அது, இப்படி  முடியும்:
எண்ணம் / வெளியீடு / கேட்டல்/ இம்முன்றும் ஒன்றல்ல:/ ஒன்றென்றால் மூன்றான காலம் போல் ஒன்று.
 காலம் என்பதை ஒன்றாகவும் அதாவது ஒரே கருத்தியலாகவும் உணர முடியும். இறந்த காலம் நிகழ்காலம் எதிர் காலம்  என்ற பகுப்புக்களுடன் மூன்றாகவும் உணர முடியும். காலத்தால் முந்திய எண்ணங்கள், ஆதி வெளிப்பாடுகள், கானகப் புரிதல்கள் இவை மொழி மூலமாக காலத்தால்  இன்றைய மனிதனுக்குக் கடத்தப் பட்டு வந்திருக்கிறது. பிந்திய காலத்து மனிதனைப் பொறுத்து  இது மூன்றும் எண்ணம் வெளியீடு கேட்டல் இது மூன்றும் ஒன்று.
  ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள ஏதுவான மொழியை ஒரு சமூகக் கருவி, social tool,  என்பார்கள். உணர்வுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் முயற்சியில் மொழி என்பது ஆதியில் ஒரு வகையான  கதை சொல்லிகளால் கதை சொல்லிகளுக்காகவே உருவானதோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு. கூடவேமொழிக்கு முந்திய அனுபவங்களை மொழியில் சொல்லுவது எங்ஙனம் என்றும் தோன்றுவதுண்டு. அதற்கு ஒரு விடையாக காட்டில் வாழ்ந்த ஆதிமனிதன், தன் கானக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முதலில் சித்திரங்களைப் பயன் படுத்தியிருக்கிறான் என்கிற ஒரு செய்தி.  இன்றைக்கும் கூட, பேருந்து நிலையம் திரை  அரங்குகள் போன்ற பொது இடங்களில்ஏன் பல மொழிகளையும் பேசுவோர் கூடும் பன்னாட்டு விமான முனையங்களில்க் கூட பொதுக் கழிப்பிடங்களைக் காட்டுவதற்கு படங்கள் தேவையாக இருக்கிறது. அந்நிய நிலத்தில் அந்நிய மொழி பேசுவோர் மத்தியில் ஒவ்வொருவரும் ஆதி மனிதன் தான் போல.  அது ஒரு புறம் இருக்கட்டும். மொழியின் வரலாற்றைப் பார்த்தோமானால்,
கி.மு 3000 வாக்கில்தான் சுமேரிய மொழியில் உலகின் முதல் புராணக்கதையானகில் காமேஷ்எழுதப் பட்டிருக்கிறது. ஆனால் உலகின் முதல்  குகை ஓவியம் என்று சுமார் 32000  ஆண்டுகளுக்கு முன்னதானஃப்ரான்ஸ்  குகை ஓவியங்களைச் சொல்லுகிறார்கள். இது கி.மு 30000 வாக்கில் தீட்டப்பட்டவைஅந்தக் குகை ஓவியங்களில் தீட்டப் பட்டிருப்பவை பெண்ணின் பிறப்பு உறுப்புகளும், மிருகங்களும் என்பது கூடுதல் தகவல்கள் மட்டுமல்ல, தன்னுடைய ஆசாபாசங்களை, ஆதார உணர்ச்சிகளை, பயங்களை வெளிப்படுத்த ஓவியங்கள் மூலமாகவே அவன் முயற்சித்திருக்க வேண்டும். இந்த ஆதார உணர்ச்சிகள், அதாவது பாலுணர்ச்சியும், மிருகங்களால் ஏற்பட்ட பயங்களும், அவற்றிடமிருந்தே கற்ற எதையும் யோசிக்காமல் செய்யும்   மிருகக் குணமாகிய வன் முறையும், மனிதனின் நினைவிலி மனதில் அடித்தளமாகப் பதிந்திருப்பதை  தொல்லியல்ப் படிமங்கள் என உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.  நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம். இந்த நினைவிலி மனதின் படிமங்கள் தொடர்ந்து  இன்றளவும் நம் கனவில் எந்த சட்ட ஒழுங்குமற்ற சித்திரங்களாகத் தோன்றி திகைப்பை உண்டாக்குகின்றன. இந்த மொத்தப் பிரபஞ்சத்தில் எவ்வளவு புதிர்கள் இருக்கின்றனவோ அவ்வளவு புதிர்களைக் கொண்டது நம் கனவுகளும். “Freud’s unconscious is a daemonic realm. In the day we are social creatures, but at night we descend to the dream world where there is no law but sex, cruelty, and metamorphosis”  என்று Camille Paglia கூறுவது போல அதாவது, ஃப்ராய்டின் நினைவிலி மனம் என்பது குட்டி துர்த் தெய்வங்களின் உலகம். பகலில் நாம் சமூக மனிதர்களாய் இருக்கிறோம். ஆனால் இரவில் கனவுலகிற்குள் நழுவுகிறோம், அங்கே பாலியல், குரூரம், மற்றும் உரு மாற்றங்கள் மட்டுமே சட்டங்கள் ஆக இருக்கின்றன, என்கிறார். மொழி வளர்ந்து நமக்கு அதன் மீது ஒரு ஆளுமை உண்டான பிறகு இப்படியெல்லாம் இன்று நம்மால் கனவுகளைப் பகுத்து உணர முடிகிறது.   இந்தக் கனவுச் சித்திரங்களே தொல்லியல் படிமங்களின் ஆதாரம் எனலாம்.   ஆதியில் பகுத்து உணர முடியாத காலத்தில்,     இந்தக் கனவுச் சித்திரங்களே மனிதனைப் புனைவு நோக்கித் திருப்பி இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
       குகைச் சித்திரங்கள் மூலமாக, தன்னால் இன்னதென்று அறிய முடியாத உணர்வுகளை, அனுபவங்களைக் கடத்த முயன்றிருக்கிறான் மனிதன் என்று பார்த்தோம். இந்த ஓவிய மொழி என்பது மனித சமுதாயம் முழுமைக்கும் பொதுவானது. அதன் மூலம்,  பூமியின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள ஆதி மனிதர்களுக்குப் பொதுவான, மிக மிக அடிப்படையான மனித குணங்களைக் காட்சிப் படுத்த முயன்றிருக்கிற அவனின் ஆதி மூளை ஒரு அற்புதமான செயலாகவே தோன்றுகிறது.  என்னுடைய ஓவியங்கள் என்பது பிறரை எதிர் பார்க்கிற ஒரு செயல் என்று சொல்லுகிறார் பிக்காஸோ. தாகூர் சொல்லுவார்சிறந்தவைகளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை, சிறந்தவைகள் நம்மைத் தேந்தெடுக்கின்றனஎன்று. இரண்டுமே உண்மைதான். பிக்காஸோ சொல்வது போல ஆதி மனிதனின் குகை ஓவியங்கள் அவன் தனது சக மனிதனை எதிர்நோக்கிச் செய்த, அவனுடைய வெளிப்பாட்டு உணர்ச்சியின் ஒரு செயலே.  தாகூர் சொல்வது போல அந்தச் சிறந்த அவன் சந்ததியை தேர்ந்தெடுத்துக் கவர்ந்து கொண்டதாலேயே  மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக மொழியைக் கண்டு பிடித்து உருவாக்கியிருக்கிறான். அப்போது,  இந்த அனுபவப் பங்கீடு என்பது   நாடோடிக் கதைகளாகப் பரிணாமம் ஆகிப் பின்னரே விரிவான கற்பனையும் புனைவுகளும் சேர்ந்து இருக்க வேண்டும். அதனாலேயே மொழி இயல் அறிஞர்கள் உலகெங்கிலும் உள்ள நாடோடிக் கதைகளில், கற்பனைக் கதைகளில் இல்லாத பல பொது அம்சங்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஏனெனில் நாடோடிக் கதைகளின் பாத்திரங்கள் யாரென்று பார்த்தால் மிருகங்கள், பறவைகள் மற்றும் மிக மிக எளிமையான, ,நாகரீகம் இன்னும் பாதித்திராத  மனிதர்கள். பஞ்சாபில் உள்ள நாடோடிக் கதை செவ்விந்தியர்களின்  தொல் கதையுடன் சம்பந்தம் கொண்டிருக்கும் என்கிறார், லெவி ஸ்ட்ராஸ் என்னும் மானுடவியல் அறிஞர்.  பல கதைகளை நாம் ஒப்புமைப் படுத்த முடியும். காகம் நரி கதை உலகின் பல மொழிகளிலும் சிற்சில மாறுதல்களுடன் வழங்கி வருகிறது.  பாரிஸில் இந்தக் கதையில் காகத்தை ஏமாற்றி நரி பாலாடைக்கட்டியை ஆட்டை போடுவதாக உள்ளது. இதை ஒரு சிலையாக  லா போந்தேன் பூங்காவில்  வடித்து வைத்திருகிறார்கள். ஸ்பெயினில்  ஒரு தேவாலயத்தில் சித்திரமாக உள்ளது. சீனாவில் பீங்கான் பாத்திரங்களில் சித்திரமாகத் தீட்டி இருக்கிறார்கள்ஆனால் அங்கே எல்லாம் பாட்டி இல்லை. தமிழில்தான் பாட்டி வடை சுடுகிறாள். ஓஜிப்வே வானவில் கதையும் கோழி குப்பையைக் கிளறும் கதையும். மொழியை மீறி மொழியே இல்லாத காலத்து உணர்வுகள் கூட நாம்முடைய மூளையில் பதிவாகியிருக்கின்றன என்கிற உளவியல் பகுப்பாளர்கள் அவற்றைத் தொல் படிமங்கள் என்கிறனர்.
சரி நாம் இப்போது தொன்மங்களுக்கு வரலாம்.
Myths are public dreams, dreams are private myths – Joseph Campbell அதாவது தொல் கதைகள் அல்லது தொன்மங்கள் அல்லது புராணங்கள் என்பவை பொதுக் கனவுகள் என்கிறார் ஜோசப் கேம்பெல் என்ற அறிஞர். அதே நேரத்தில் கனவுகள் என்பது தனிப்பட்ட தொல்கதை அல்லது தொன்மங்கள் என்கிறார்.  பொதுக்கனவு என்பதை சமூகக் கனவு, கூட்டுக் கனவு என்று கூடச் சொல்லலாம்.  
அது என்னது பொதுக் கனவு,  அதைச் சற்று பார்க்கலாம். நம்ம ஊர்களில் சொலவடை அல்லது பழமொழி என்று சொல்லுவார்கள். (சொலவடை என்பதுதான் சரி. பழமொழி பொன் மொழில்லாம் வேறப்பா யென்று கி.ரா சொல்லுவார்.) சொலவடைகள் காலத்தால் முந்தியது. எப்போது முதலில் சொல்லப்பட்டன என்பதே தெரியாது. ”அவசரத்தில அண்டாவுக்குள்ள கூட கை போகாது.  இது  எல்லோரின் பொது அனுபவம், இதை உணர்ந்து ஒருவன் அவன் வார்த்தைகளில் சொல்லுகிறான். பலபேரின் அனுபவம் ஒருவனின் வாக்கில் வருவதே சொலவடை. One man’s wit and all men’s wisdom என்கிறார் ஆங்கில சொலவடை ஆராய்ச்சியாளர் ஜான் ரஸ்ஸல்.  நீங்கள் எந்தச் சொலவடையையும் குறித்து யோசித்துப் பாருங்கள்.   அது ஊரார் ஒவ்வொருவரின் அனுபவமாக, உங்களின் அனுபவமாகவே இருக்கும். இவற்றில் ஒரு கனவுத்தன்மை இருப்பதை உணர முடியும்.
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை நின்னு கூத்தாடிக்கிட்டு இருந்துதாம் என்பது ஒரு சொலவடை, நாய்க்கு வேலையும் இல்லை உட்கார நேரமுமில்லை, என்பது ஒன்று. இன்னொன்று, மொட்டைச்சி மூணு பெத்தா, ஒண்ண ஆட விட்டா, ஒண்ணைப் பாட விட்டா, ஒண்ணைக் கட்டில்க் காலில் கட்டிப் போட்டாள் என்று ஒரு சொலவடைஅது எதுக்கு கட்டில் காலில் கட்டிப் போட்டாள் என்று யோசிப்பதில்த்தான் ஒரு கனவுத் தன்மை வருகிறது.  
     இது போலவே, இன்ன காலகட்டம் என்று சொல்ல முடியாத காலத்து நாடோடிக் கதைகள் காலகாலமாக உலவி வருகின்றன. இன்னொரு சுவாரஸ்யமான கதை. ஆதியில் மனித குலத்தில் சாவே இல்லை. பூமியில் பாரம் அதிகமாகி பூமாதேவி பரமனிடம் போய் முறியிடுகிறாள். தன்னால் தாங்க முடியவில்லை என்று. அவனும் முரசறிப்போனை அனுப்பி, “ பழமுதிர பழமுதிர என்று முரசறைந்து வரச் சொல்கிறான்.”பழமுதிர பழமுதிர…” என்று முரசு அறைந்து போகப் போக வயதான பழங்கள், கிழங்கள் செத்துச் செத்து விழுகின்றனர். பாரமும் குறைகிறது. மீண்டும்   காலமாகக் காலம் மீண்டும் பாரம், மீண்டும் வேண்டுகோள், மீண்ரும் முரசறைபவன் வருகிறான். பழைய அனுபவம் நினைவில் உள்ளவர்கள், பயந்து போய் குழந்தைகளை உசுப்பி விடுகிறார்கள்,” ஏல, அவன் முரசடிச்சிட்டுப் போனா உங்க தாத்தா பாட்டிகள் எல்லாம் செத்துப் போவோம்டா அவனை விரட்டுங்கடா,” என்கிறார்கள். குழந்தைகள் கல்லெறிந்து விரட்டுகிறார்கள். அவன், கோபத்தில் , “பழம் உதிர காய் உதிர, பிஞ்சுதிர பூ உதிர….” என்று அறைந்து சொல்லி விட்டுப் போகிறான். அன்றிலிருந்துதான் சாவு வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் வருகிறது என்று ஒரு நாடோடிக் கதை.
 இது மரண பயம் எப்படி நம்மிடையே ஊடாடிற்று என்பதாகச் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். இதை என்னுடைய கவிதை ஒன்றில் பயன் படுத்தியிருப்பேன்.தொல் கதைகள் ஒரு வித மனித வாழ்க்கை பற்றிய ஒப்பற்ற சித்திரங்கள்ஆதிவாசி நிலையில் எளிமையாய் வாழ்ந்த ஜனங்களின், விஞ்ஞானம்- கலையியல் எனப் பிரிவுபடாச் சிந்தனை முறையின் பெயரே தொல்கதை என்பது, என்கிறார் அமைப்பியல் வாதியான திரு தமிழவன். இந்தத் தொல்கதை பற்றிய அறிவு, அமைப்பியல் வாதமாக விரிவடைந்து இன்று பல இலக்கிய ஓவிய இசைத் துறைப் புதிர்களை விடுவித்துள்ளது. கதைகள் என்றில்லை, மரணம் பல மூட நம்பிக்கைகளையும் நிமித்தங்களையும் மனித மனதில் ஏற்படுத்தி இருக்கின்றன.  தன் நிழலில் ஓட்டையைப் பார்த்தால், கண்ணாடியில் பார்க்கையில் தலை மட்டும் காணாமல் போயிருப்பது போல் தோன்றினால் சீக்க்ரம் அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று மூட நபிக்கை. எல்லாம் மரணத்தின் அறிகுறி என்று சில மூட நம்பிக்கைகள். கனவுகள் பற்றி நிறையத் தொன்மங்கள் இருக்கின்றன. மௌனியின் பிரபலமான யாருடைய கனவின் நடமாடும் நிழல்கள் நாம் என்கிற வாசகங்கள் மிகவும் பிரபலமானவை. இவை இரண்டையும்   வைத்து எனது  நடமாடும் நிழல்கள் என்ற தலைப்பிலான கவிதை.
பனிக்கரடியின் தூக்கத்தில் உலவும் பேராசை உனக்கு
கூட்டுப் புழுவின் கனவெனினும் பரவாயில்லை என்கிறாய்

உன் நிழலில்  ஓட்டைகள்
பார்க்காமலிருக்க பாம்பின் புழைகளும்
சம்மதம் உனக்கு// வெட்கமற்று கருச் சிசுவின்
கனவுக்குள் புகுந்து விடாதே//

 உன் அனுபவ அழுக்குப்
படிந்த நிழல்களுடன்
வெளியேயே இரு
     கனவும் கவிதையும் பிழைத்துப் போகட்டும்
 நாடோடிக் கதைகள், சொலவடைகளின் காலத்திற்கு முந்திய,  தொன்மம் அல்லது புராணக்கதைகள் என்பது,  பலருடைய புனைவு ஒன்று சேர்ந்ததாக இருக்கும்  கம்பனது ராம காதையை வையாபுரிப்பிள்ளை இப்படிப் பல சிறு கிராமக் கதைகளின் இணைவாகக் கூறுகிறார். .-இங்கே சிலப்பதிகாரம் பல நாடோடிச் சிறுகதைகளின் இணைவு என்று சிலர் கூறும் கருத்துகளையும் பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன். சிலம்பின் 30 காண்டங்களும் 30 தனித்தனிக் கதைகளின் தொகுப்பே என்று தொ., கூறுவார். புத்தரின் தம்ம பதச் சிந்தனைகளே மகாபாரதத்தில் கீதோபதேசமாக வருவதாக பீட் ரவேர்ஸ் போன்ற அறிஞர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். அது ஒரு புறம் இருக்கட்டும்  ராமாயணத்தில் இல்லாத ராமாயணக் கதைகள், மகாபாரதத்தில் இல்லாத மகாபாரதக் கதைகள் என்று நிறைய வழங்குகின்றன.   நாமெல்லாம் அறிவோம் பெருஞ்சோற்று உதிய சேரலாதன் என்ற மன்னன் பாரதப் போரில்  படைகளுக்குச் சோறு அளித்தானென்று. இதே போல ‘உடுப்பிமன்னனும் இரண்டு புறமும் சாராமல் இரண்டு படையினர்க்கும் சாப்பாடு அளித்தானாம். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு நாளையப் போருக்கு அவன் தயாரிக்கும் உணவு ஒரு பருக்கை அளவும் மிஞ்சாதாம். ஒரு நாள்ப் போரின் இறுதியில் இத்தனை பேர் மட்டுமே மிஞ்சுவார்களென்று எப்படி அவனுக்குத் தெரியும்.ஒவ்வொரு நாளும் இரவில் உடுப்பி மன்னன், கிருஷ்ணர் விரும்பி உண்ணும் அவித்த வேர்க்கடலையுடன் கிருஷ்ணரின் கூடாரத்திற்குச் செல்வானாம். அவர் எத்தனை கடலைகளை உண்ணாமல் மிச்சம் வைக்கிறாரோ அத்தனை ஆயிரம் பேர் மறு நாள் போரில் இறந்து போவார்கள் என்று கணக்கெடுத்துக் கொள்வானாம். பத்து கடலைகள் மிச்சம் வைத்தால் பத்தாயிரம் பேர் நாளை இறந்து போவார்கள்.அவர்கள் போக மிச்சமுள்ளவர்களுக்கு உணவு தயார் செய்யச் சொல்வானாம். இதனாலேயே இன்று பல உடுப்பி ஓட்டல்கள் நாடெங்கிலும் இருப்பதாகக் கூறுகிறது கன்னட நாட்டிலுள்ள பாரதக் கதைகள். அப்படியானால் பாரதப் போரில் உடுப்பி ஓட்டல் சைவ உணவே வழங்கப் பட்டதா என்று கேட்கத் தோன்றுகிறதா...இதுக்குத்தான் ‘கதைக்குக் கண்ணு மூக்கு கிடையாதுன்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க.
 இவையெல்லாம் மக்களின் கதைகள் அதனாலேயே அவை மீண்டும் மீண்டும் மக்களிடையே புழங்குகின்றன, கதைஞர்கள், கவிஞர்களால் எடுத்தாளப்படுகின்றன. புராணக்கதைகள் ஒருவர்  சொல்ல பலர் கேட்க,  சொல்லிச் சொல்லிப் பரவியவை. அப்படிப் பரவுவதற்கு ஏற்ற வகையில் அவை பாக்களாக சுலோகங்களாகச் சொல்லப்பட்ட போது அங்கே கவிதை உருவாகியது. கூடவே நாகரீகம் உருவாகி, மொழி  என்பது வெறும் சமூகக் கருவி என்பதிலிருந்து புனைவுகளால் மேம்பட்டு பண்பாட்டு அந்தஸ்தை அடைந்தும் விடுகிறது. அதற்கு ஆன்மீக அந்தஸ்தையும் சிலர் வழங்கி விடுகிறார்கள்.
     தமிழ் நவீன கவிதை பாரதியிலிருந்து தொடங்குகிறது. இன்றைக்குப் பார்ர்த்தீகளானால் எந்தக் கட்சியின் அதிகார பூர்வ  தொடர்பாளர்கள்  தொடங்கி மேடைப் பேச்சாளர்கள் வரை உபயோகிக்கிற ஒரு வாசகம் தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்”. இதை இன்று பாரதியார் கேட்க நேர்ந்தால் அவரே சொல்லுவார் இது யாருய்யா சொன்னது ரொம்ப நல்லாருக்கேஎன்று. அந்த அளவுக்கு இதைத் தங்களுடையது போல, எடுத்தாளாதவர்கள் கிடையாது. பாரதியார் பல புராணக் கடவுள்களையும் பாடியுள்ளார். கண்ணன் மீது அவருக்கு அபார பக்தி. காதலன் காதலி ஆண்டான் அடிமை தோழன் சேவகன், ஈசன் என்று எல்லா பாவத்திலும் அவனைப் பாடியிருக்கிறார். கூடவே அவர் சக்தி வெறியரும் கூட. அவர்  அன்றைய  ஆட்சிக்கு எதிரான கருத்துகளை முன் வைக்க பாரதக் கதையின் சூதாட்டச் சருக்கத்தையும் பாஞ்சாலி கதையையும் எடுத்தாண்டிருக்கிறார். “பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்.” என்று ஆங்கிலேய அடக்குமுறையைச் சாடி இருகிறார். இதில் என்னைக் கவர்ந்த வரிகள் துரியோதனின் இரண்டாவது தம்பியான விகர்ணன் மட்டும், தன்னையிழந்த பின் என்னையிழக்க இவருக்கு என்ன உரிமை என்று பாஞ்சாலி கேட்பதில் உள்ள நியாயத்தை எடுத்துரைக்கிறான் அப்படிச் சொல்லும் போது
பெண்டிர் தம்மை எண்ணமதில் விலங்கெனவே கணவரெண்ணி ஏதெனிலுஞ்செய்திடலா என்று பாட்டன் சொல்லுவது
தகாது என்கிறான். ஆணாதிக்கத்தை அன்றே ஒரு ஆண் வாயால் சாடுவதற்கு பாரதக் கதையினை எடுத்துக் கொண்டு நவீன கவிஞர்களுக்கு முன்னோடியாய் நிற்கிறான். பாரதியின்  அந்தக் குறுங்காவியத்தைய ஒற்றை தொல் படிமமாய்ப் பார்க்க முடியும்.  
     திரைப்பாடல்கள் கவிதையாகுமா என்கிற விவாதத்திற்குள் நாம் செல்லாமல்ப் பார்த்தோமானால், பல காவியநாயகிகளையும் பலரும் தங்கள் நாயகிக்கு ஒப்பாக எடுத்தாண்டிருக்கிறார்கள். நாயகியே எனது காவிய எல்லை என்று பின்னாளில்பாடுகிற கண்ணதாசன், முன்பே,
கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உந்தன் சேயல்லவா
அம்பிகாபதி அணைத்த அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி.
என்று புராணத் தொன்மத்தையும் வரலாற்றுத் தொன்மத்தையும் கவிதைக்குள் கொண்டு வருகிறான். இங்கே அமராவதியை மட்டும் சென்றவளாகக் காட்டுவதில்த்தான் அவனது கவித்துவம் இருப்பதாக நான் நினைக்கிறேன். மகாதேவி திரைப்படத்தில் அபிமன்யு கதையினை மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்வது நமது சமுதாயம் என்று தொடங்கும் பாடலில் கதைக்கேற்றாற்போல மிக அற்புதமாக இணைத்து எழுதியிருப்பார், கண்ணதாசன். அந்தக் காட்சி போல தமிழ்ப் படத்தில் வேறு பாடல்க் காட்சி அமைந்த்து இல்லை என்று சொல்லும் அளவுக்கு திரை அரங்கமே அமைதியில் மூழ்கி இருக்கும். இந்தப் பாட்டு வேண்டாமென்று எம்.ஜி.ஆர் சொன்னபோது கண்ணதாசன் இருக்கட்டும் மிகப் பிரமாதமாக வரும் என்று வாதாடினாராம், எம்.ஜி.ஆர் கோபமாக என்னமாவது பண்ணித் தொலையுங்க என்று சத்தமிட்டுவிட்டு வெளியேறினாராம். பின்னர் அந்தப் பாட்டுக்காகவே படம் ஓடுமளவுக்கு ஹிட் ஆனது. இன்னொரு திரைப்படத்தில்
காட்டில் ஒருவன் மாரா என்றான் காற்றில் வந்தது ராமா என்று சேரும் துன்பங்கள் வருகையிலே திருப்பிப் போடுங்கள் வாழ்க்கையிலே என்று கவிஞர் எழுதியிருக்கிறார்.
     மகாபாரதம் ஒரு மகத்தான புனைவு என்றால் அது மக்களிடையே சிறு சிறு புனைவுகளை உண்டாக்கி இருக்கிறது என்றும், மகாபாரதத்தில் இல்லாத பாரதக் கதைகள் என்று நிறைய உண்டு என்றும் ஏற்கெனவே பார்த்தோம். நானும் கி.ராஜநாராயணனும் இவற்றைச் சேகரிக்கும் முயற்சியில் இறங்கினோம் அவ்வளவாய்க் கூடி வரவில்லை. என்னுடைய பல கவிதைகளிலும் மகாபாரத ராமாயணத் தொன்மங்களை எடுத்தாண்டிருக்கிறேன். à
சுயம்வரம் என்கிற என்னுடைய குறுங்காவியத்திலிருந்து ஒரு கவிதை
அம்மணப் பூக்களின்
கற்பைப் பற்றி
கனவைப் பற்றி யாருக்கென்ன கவலை
அடீ பாஞ்சாலிகளே
நீங்கள் கர்ணன்களைக் காதலித்தென்ன:  
உங்கள் சுயம்வரத்தில்
வெல்லப் போவது
ஐந்து பேர் கூறு போட அர்ஜுனர்கள்தானே.
இந்தக் கவிதையின் பின்னணியில் இருப்பது ஒரு வழங்கு கதைà
இதே போல
அதே குறுங்காவியத்தின் மையக்கருத்தான நாம் சுயம்வரித்திருக்கிற வாழ்க்கை என் தவிர்ப்புகளின் மீது உருவானது என்பதற்குச் சான்றாக
அடி சீதைப் பெண்ணே /உன் சுயம் வரத்தில் கௌசிகனே வில்லொடித்திருக்கலாம்/ உன் பர்ணசாலைப் பிரவேசம் / முதலிலேயே நிச்சயிக்கப்பட்டு/ உன் ராமராஜ்யம் பற்றின தாலாட்டுகள் / உப்பரிகைகளில் எதிரொலிக்கிற சில கனவுகளாவது மிஞ்சியிருக்கும்/ மூலஸ்தானம் புக முடியாத தாழம் பூக்களின் சாபம் அலை பாய்கிற அரளிகளுக்கில்லை à தாழம்பூ படிமம். இதெற்கெல்லாம் முன்னோட்டமாக, உந்துதலாக அமைந்தது டி.எஸ் எலியட்டின் வேஸ்ட் லேண்ட்.
     ஒரு விஷயம், இப்படிப் பழைய தொன்மங்களைக் கையாளுகிற நவீன கவிஞன்   நடப்பு உலகின் சிக்கல்களால், உலகிலிருந்தே அந்நியப்பட்டு தன் வெறுப்பையும்  கோபத்தையும் காட்ட அதன் மீது கேள்விகளை வைக்கிறான். அதற்கு பல அப்பாவி புராணப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் வழியாகத் தன் கேள்விகளைப் புனைவாக வைக்கிறான். உதாரணமாக ராமாயணத்தில் வருகிற அகலிகை பாத்திரம். இந்திரனின் கயமைத்தனத்தினால்தானே அவள் கல்லாக நேர்கிறது. நடந்த நிகழ்ச்சியில் அவளது தவறு என்று ஒன்றும் இல்லையே உண்மையில். கௌதம முனிவர் இந்திரனையும் கல்லாகப் போகும்படி சபித்திருக்கலாமே. அவனுக்கு வேறு விதமான
நீ விரும்பியது உன் உடல் முழுவதும் ஆகுகஎன்று கவிஞர் தேவதச்சனின் ஒரு நவீன கவிதை சொல்வது போல ஒரு சாபம் அளிக்கிறாரே ஏன்  என்ற  பல கேள்விகளை  வாசகனிடம் காலகாலமாக எழுப்பி வருகிறது.  அதே கேள்விகளின் நீட்சியாக, பெண்களுக்கு எதிரான  இன்றையப் பல கொடுமைகளைக் குறித்து  பலரும் பல கேள்விகள் எழுப்புகிறார்கள். சிறுகதையாக புதுமைப்பித்தன் மு. தளையசிங்கம் போன்றோரும் கல்லிகை என்ற நீள் கவிதையில் நம்முடைய கோவை ஞானியும் நல்ல படைப்புகளைத் தந்திருக்கிறார்கள். பாரதத்தில் வருகிற அம்பை கதாபாத்திரம் பீஷ்மரைக் கொல்வதாக சபதம் எடுத்து சிகண்டியாகப் பிறப்பெடுக்கிறாள். அவளுக்கு அவமானம் ஏற்படக் காரணமாக இருந்தது அவள் சால்வன் மேல் கொண்ட காதல் மட்டுமே. இந்தப் பாத்திரத்தின் போர்க் குணம் காரணமாகவே  பிரபல எழுத்தாளர் சி.எஸ்.லக்ஷ்மி தன் பெயரை அம்பை என்று வைத்துக் கொண்டு எழுதி வருகிறார். மிக எளியதும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக் கூடிய கவிதை:
ராமர் தீண்டி அணில் கோடு பெற்றதெனில்/ சீதையை அவர் தொட்ட்தே இல்லையா? என்கிற நீலமணியின் கவிதையினை உதாரணமாகச் சொல்லலாம். என்னுடைய ஒரு கவிதையில் கவசம் தானம் வழங்கிய கர்ணன் மார்பில் புதுக் காமம் துய்ப்பாள் அவன் மனைவி என்று வரிகள் வரும் .முத்தையா மிகவும் சிலாகித்துச் சொல்கிற வரிகள் இவை.

     புராணக் கதைகள் என்றில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த வரலாற்றுச் சம்பவங்களைக் கூட தொன்மமாக எடுத்தாளலாம்.
  ஒரு கவிதையைப் பார்ப்போம்

முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே  à
என்ற பட்டினத்தாரின் தாய் மீதான கரிசனத்தில் ஒரு கேள்வி எழுகிறது. இது தாயைத் தவிக்க விட்டு சந்நியாசம் போனதின் காரணமாக்க் கூட இருக்கலாம்.

நீயுமிட்ட தீ
     சித்தியாகியிருந்த
சக்தி நிரூபணமானது
அம்மாவை எரிக்க
வாழைத்தண்டு அடுக்கி
வாக்குச் சொன்னதில்

எனினும்-
மூண்டதும்
ஊனை உருக்கி
எலும்பை எரித்ததும்
தீ தானே
      திருவெண்காடரே. இதுவும் என்னுடைய கவிதைதான்
 இன்னொன்று பார்க்கலாம். தாகூர் சொல்லுவார் கண்ணீர் விட வசதியில்லாத சொர்க்கம் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று.ஆனால்  கவிதைகளின் ஊடாக தொன்மங்களைப் பயன் படுத்தும் போது கவிஞனுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் இடையே நிகழும் உரையாடல் வாசகனை அதிகமும் வியப்பிலாழ்த்துகிறது.
புத்தனே
ஞானம் வாய்த்தபின்
அழக்கூடுமோ உன்னால்
தெரியலைதான்
சித்தார்த்தனே.

கேள்விகளை எப்படி வேண்டுமானாலும் எதன் மீது வேண்டுமானாலும் எழுப்பலாம். ஒரு கேள்வி இப்படி எழுகிறது.
 பிரம்மாண்டமானவன்
பிரகதீஸ்வரன்
பிரம்மாண்டமானவள்
பெரியநாயகி
வழி மறித்து
கலவரப்படுத்தும் பெரும் நந்தி
எங்கே போகும்
எளிய உயிர்கள்
ஒரு மகாப் பெரிய கலைக்கோவில் எழுப்பும் இந்த எளிய கேள்வியைக் கேட்கிறவர் விகிரமாதித்யன்.

பிரமிள் என்கிற மகா கவிஞனை ஒரு அகவயக் கவிஞராகவும் தத்துவக் கவிஞராகவுமே அறிந்திருக்கிறார்கள். அவர் மக்கள் கவிஞரும் கூட என்று நிறுவும் ஒரு கவிதை. சில தொழிற்சங்கத்தலைவர்களின்  உள் அரசியலை விமர்சிக்கிற ஒரு கவிதை,
குரு க்ஷேத்திரம்
இன்று வேலை நிறுத்தம்
கடமையைச் செய்
பலனை எதிர் பார்க்காதே
என்று சொல்லிவிட்டு
காரில் நழுவப் பார்த்த
கண்ண பிரானுக்கு
கல்லடி

சுவரெங்கும்
பசி வேத சுலோகங்கள்
அர்ச்சுனன் கிளைத்து
கார்த்த வீர்யாச்சுனனாய்
தலை ஆயிரம்
கை இரண்டாயிரம்
கண்ணபிரான் நெற்றியிலே
உதிரத்தின்
நாமக் கோடுகள்

விஸ்வரூபத்துக்கும்
முயற்சிக்க வலுவில்லை
இருந்த கால்களில்
எழும்ப முயன்றான்
கீதையைக் கேட்க
அர்ச்சுனன் இல்லையென்றால்
கூப்பிடு கவுரவரை என்றான்

பறந்தது போன் செய்தி
போலீசுக்கு

*
சில நம்பிக்கைகள் தொன்மையானவை. பித்ருக்கள் காக்கை வடிவில் வருவார்கள். என்ற ஒரு நம்பிக்கையை எவ்வளவு அழகாகக் கவிதையாக்கி இருக்கிறார் என்.டி. ராஜ்குமார். அவருடைய பல கவிதைகளில் தொன்மமும் மாந்ரீகமும் இழையோடும். தனியே படித்து மகிழ வேண்டியவை அவை. ஒரு சின்ன உதாரணக்கவிதை
அப்பன் வாழ்ந்தகாலத்தில்/ நாய்களோடுதான் அதிகம் வாழ்ந்திருக்கிறர்/ ஒவ்வொரு நாய்களுக்கும்/உங்களுக்குப் பிடித்தமான தலைவர்களின்/ பெயர்களை வைத்தே/ செல்லமாக அழைத்து வந்தார்.// உங்களுக்குப் பிடித்தமானதென்றால்/அது அப்பாவிற்கு எதிரானதென்று அர்த்தமில்லை// அப்பன் தீவிர சிகிச்சையிலிருந்தபோது/ நோய்வாய்ப்பட்டுப் போன நாய்/ பிறகு அவரின் உருளைச்சோற்றையும்/ உள்ளங்கை மணத்தையும் உண்டு/தன்னைத் தேற்றிக் கொண்டது/ அப்பன் இறந்த சில நாட்களில்/ காணாமல் போன நாய்/ யாருக்கும் தொல்லை கொடுக்காமல்/ ஆளரவமற்ற தொலைதூரத்தில் சென்று/ இறந்து கிடந்தது./ அப்பன் இறந்த நினைவு நாளில்/தேக்கிலை ஒன்றில் சோறு வைத்து / கா..கா..சொல்லி அழைத்தால்/இரண்டு காகங்கள் வந்து கொத்திதின்று விட்டு பறந்து விடுகிறது.
     பல கவிஞர்கள் விவிலியத் தொன்மங்களை, தங்கள் கவிதைகளில் எடுதாண்டிருக்கிரார்கள்.  ஈழக்கவிஞர் வில்வரத்தினத்தின் கவிதையொன்று காயம் என்ற தலைப்பில்
காயம் பட்டவனின்
குருதி கதறிற்று
கல் எங்கிருந்து?/
யேசுவின் சொல்லிற்கு
கை நெகிழ்ந்தோர்
விட்டுச் சென்ற குவியலிலிருந்து.
இஸ்ரேலியர்களின் வான்வெளித் தாக்குதல்களினால் பாலஸ்தீனப் பகுதியின் கிறித்துவ தேவாலயம் ஒன்று சிதைந்து அதன் உயரத்து சிலுவை உடைந்து தொங்குவதாக அந்த நாளைய பத்திரிகைகளில் படமும் செய்தியும் வந்திருந்தது.அந்தப் படத்தைப் போட்டு, புவியரசு  ஒரு அருமையான நீண்ட கவிதை எழுதியிருந்தார் வானம்பாடியில், அதன் தலைப்புஏலி ஏலி லாமா சபக்தானிஎன் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்.” என்றிருக்கும். இயேசு கிறிஸ்துவின் கடைசி வாக்கியமான இதனை நிறையப் பேர் உலகெங்கும் கூட பல கவிதைகளில் பயன் படுத்தி இருக்கிறார்கள்.
  ராஜ சுந்தரராஜனின்  பல கவிதைகளில் விவிலிய, கிறித்துவத் தொன்மங்கள் காணப்படுகிறது. பரலோக ராஜ்யம் என்ற தலைப்பில்
 வான பரியந்தம் உயர்ந்த கோபுரத்தில் ஏறி,/ இல்லை என்று கை விரித்து நிற்கிறது/ சிலுவை
இன்னொரு கவிதை
விசுவாசம் என்ற தலைப்பில்- அடுப்பு பற்றவில்லை அழைக்கிறார்கள் ஆலயத்தில் மணியடித்து/ வெந்தும் வேகாமல் பாதியில்/ விட்டு விடவா முடியும் ?/ அவசரமாய்/ அழைக்கிறார்கள் ஆலயத்தில் மணியடித்து/ / ஏசுவே இது என்ன சோதனை/ படிப்பறிவற்ற அன்ன மேரிக்கு ஒரு வழியாய்/ பற்றிக் கொண்டது அடுப்பு / ஒத்தாசையாய்/ தன் தாளைக் கிழித்துத் தந்ததோ/ பைபிள்
இஸ்லாமியத் தொன்மங்களைப் பயன்படுத்தி ஹெச் ஜி. ரசூல் மிக நல்ல கவிதைகள் எழுதியுள்ளார். ஏன் ஒரு பெண் நபி கூட தோன்றவில்லை என்று தன் மகள் கேட்பதாக எழுதியிருக்கும் கவிதை மிக அற்புதமானது அதை ஹைதரபாத்தில் ஒரு அகில இந்தியக் கவியரங்கில் அவர் வாசித்த போது கிடைத்த கைதட்டல்கள் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.
பயானில் கேட்டது
திசையெங்கும் உலகை உய்விக்க வந்துதித்தது
ஒரு லட்சத்து இருபத்துநான்காயிரம்
நபிமார்களென்று.
திருகுரான் காட்டியது
கல்லடியும் சொல்லடியும் தாங்கி
வரலாறாய் மாறியது
இருபத்தைந்து நபிமார் என்று.
ஆதம் நபிஅய்யூப்நபி..
………… ………
ஈசாநபிமூசாநபி
இறுதியாய் வந்துதித்த
அண்ணல் முகமது நபி
சொல்லிக் கொண்டிருந்த போதே
செல்லமகள் கேட்டாள்
இத்தனை இத்தனை
ஆண் நபிகளுக்கு மத்தியில்
ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி..?

     காலத்தாலும் வரலாற்றாலும் முந்தியவைதான் கவிதைகளில் தொன்மங்களாக, தொல் படிமங்களாக வரவேண்டும் என்பதில்லை. நம்முடைய பழைய இலக்கியங்களும் அதன் மனிதர்களும் கூட கவிதையின் கருத்துக்கும் அழகுக்கும் துணை நிற்கிறமாதிரி இடைவெட்டாக வருவார்கள். நம்முடைய பாட்டன் கணியன் பூங்குன்றன் அப்படி ஒருவன். கவிஞர் இசையின் கடைசியாக வெளிவந்த ஆட்டுதி அமுதே தொகுப்பின் கவிதைகள் பலவற்றில் தமிழ் செவ்விலக்கியத்தின் வரிகள் வந்து போகின்றன. குறிப்பாக குட்டி ஒடிசா என்கிற கவிதை.
கோயமுத்தூர் மாநகராட்சியின்/ 93 வது வார்டில்/ புதிதாக உருவாகியிருக்கிற மைதானத்தில்/ மட்டையாட்டம் நிகழ்கிறது/ அங்கு ஒரிய மொழி ஒலி வீசுகிறது/ ஆட்ட்த்தின் முசுக்கரத்தில் கிளம்பும் புழுதியில்/ ஒருகுட்டி ஒடிசாஎழுந்து வருகிறது/ ஒரு புளியமரம் பலதலை முறைகள் காண்பது/ இன்று/ அம்மரத்தடியில் அமர்ந்திருக்கும் ரசிக்க் கூட்டம்/ மாரோ….. மாரோ என்று கத்துகிறது/ அந்த இடது கை ஆட்டக்காரன் / இறங்கி ஒரு இழு இழுக்கிறான்/ மகிழ்ச்சியின் கூச்சலின் ஊடே பறந்து செல்லுமப்பந்து/ மைதானத்தைத் தாண்டி/ ஒரு மூமுதுகிழவனின் தோளில் விழுகிறது/ அவன் அப்பந்தைத் தூக்கி/ அதே மகிழ்ச்சியின் கூச்சலினூடே .திரும்ப எறிகிறான்/ அவனை கணியன் பூங்குன்றன் என்றறிக.
என் பங்குக்கு நானும் அவனை வைத்து ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்
ஏதோ ஒரு ஊரில்/ நின்றது பேருந்து/ அருகில் அதுவரை /வாளாது இருந்தவன்/இறங்கிப் போனான்/ நான் தான் கணியன் பூங்குன்றன்/
இதுவும் எனது ஊரல்ல/என்றபடி
கவிஞர் வில்வரத்தினம்  நிலவின் எதிரொலி என்ற கவிதையில் அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எகிற பிரபலமான புறநானூற்று வரிகளை எடுத்தாண்டு எழுதியிருக்கிறார். இதில் கபிலர் அங்கவை சங்கவை இருவரையும் அவ்வையிடம் ஒப்படைக்க அவர் பரம்பு மலையை அழித்த மன்னர்களிடமே அவர்களை ஒப்படைக்கிறார். அவர்கள் அந்தப்புரங்களில் விடும் கண்ணீரை ஈழப் பெண்களின் கண்ணீருக்கு ஒப்புமைப் படுத்துகிறார்.

     அதிகமும் பேசப்படாத ஆனால் தவிர்க்கப் பட முடியாத நவீன கவிஞர்களில் ஒருவர் ந.ஜெயபாஸ்கரன். அவரது கவிதைகளில் ஆலவாய் அழகனும் அங்கயற்கண்ணியும்  தங்களுடன் ஆங்கிலக் கவி எமிலி டிக்கின்ஸனையும் காரைக்கால் அம்மையையும், திருப்பூவனத்துப் பொன்னணையாளையும் திருவில்லிப்புத்தூர் ஆண்டாளையும் அழைத்துக் கொண்டு, வையை என்னும் குலக்கொடியின் கரைகளில் புதிய அறுவருலா வருவதைக் காணமுடியும்.
அவள் என்கிற அவரது  தொகுப்பொன்றை அவர் இப்படிச் சமர்ப்பிக்கிறார்.
மூன்றாம் முலை நாயகி தடாதகை/ முலை சுருங்கிய வையை/ திருப்பூவணத்துப் பொன்னணையாள்/ திருவாலங்காட்டு காரைக்கால் அம்மை/ சிரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் எமிலி டிக்கின்ஸன் ஆகிய அவள்களின் சாயைக்கு சமர்ப்பணமாய் இருபதாம் நூற்றாண்டின் விளிம்பில்  என்று குறிப்பிடுகிறார்.
அந்தத்  தொகுப்பில் திருவிழா என்கிற ஒரு கவிதை
புராணம் தொலைந்து போய் விட்டது/ சில சமிக்ஞைகளை மீதமாய் விட்டு//
கூடல் அழகனைக் கூடாத கோடை/ நெடிது விரிகிறது இருத்தலின் முன்னே/
ஆரமத்துக் குளத்தில் நீர் சுமந்த/ புத்த பிட்சுவின் சாயை மட்டும் தொடர்ந்து வருகிறது/கள்ளழகனின் பின்னே./ ஆறும் அழகனும் பிட்சுவின் நிழலும்/காணாத மக்கள் திரள்/ சோறு கழிந்த தூக்குப் போணியும்/பலாப்பழமும்/ தன்னுணர்வின்றிக் கோடைச் சூரியனும்///சுமந்து செல்லும்
     இன்னும் அழகர் மலை ராக்காச்சியும் கொல்லிமலை கொல்லிப்பாவையும், வனப்பேச்சிகளும், சொள்ள மாடன்களும், நீலிகளும் கொற்றவைகளுமாகப் பல நாட்டார் தெய்வங்கள் பல  நவீன கவிதையில் சர்வ சுதந்திரமாக ஆட்சி புரிந்து அதன் அர்த்தச் செழுமைக்கு வளம் சேர்க்கிறார்கள். கொல்லிப்பாவை என்கிற தொனமம் புதுமைப்பித்தனையும், நகுலனையும், பிரமிளையும் பாடாய்ப் படுத்தியபின் என்னிடம் வந்து சேர்ந்தது.
பேரருவிகள் இரண்டை/ ஏந்தி மகிழும்/ அகலத் தடாகம்/ தேக்கஞ்சருகுகள்/ மிதக்கவிட்டு/காலம் நகர்த்துகிறாள்/ ஆழம் அதிகமோ/ அருவிகளின் பேரென்ன/ கருப்பருவியாய்ச் சிகை தோள் புரள/ நீந்திக் களித்தபடி/பதில் சொல்லுகிறாள்/ கொல்லிப்பாவை/ ஒன்று பொருநன்/ ஒன்று பாணன்.
தீச்சூழ்ந்த மதுரை/ மண்டும் புகையழல்  பார்த்து/ நூபுர கங்கைக்கு நடுவேயும்கொதித்துப் போய் நிற்கிறாள்/ அழகர் மலை ராக்காயி/ நிலமே புதைந்திடினும்/ நலஉறு மாயாத/ கொல்லிப்பாவை/ சொல்லொண்ணாத் துயரில்// வெந்து தணியுமோ தன் நதியும் மலையும் எனச் /சந்தேகத்தில்/ பொதியைச் சீர் மகள்/ வெற்றுக்கால்/ஒற்றை மார்பு/ கொற்றவை ஒருத்தி/ கோலம் கண்டு

சொல்லுவதானால் கதைகளையும் கவிதைகளையும் இணைத்துச் சொல்லிக் கொண்டே போகலாம்.ஆனால் நேரம் குறைவு. என் அறிவும் குறைவு, கண்ணோட்டமும் குறைவுஇவை எல்லாமே எளிய கவிதைகள்தான். இன்னும் ஆழமான கவிதைகள் தமிழ்ப் பரப்பில் எண்ணற்று விரிந்து கிடக்கிறது. ஆனால், என்னால் நடந்து தீராதது அந்த தொன்ம வனம், பறந்து கடக்க முடியாத விரிவு கொண்டது கவிதை வானம். வாருங்கள் யாவரும் சேர்ந்து அந்தப் பாற்கடலைக் கடைவோம். தேவர் அசுரர் பேதம் நம்மிடையே இல்லை, எல்லோரும் இணைந்து தமிழ் அமுதம் பருகுவோம். அன்பும் நன்றியும்.












    
      



7 comments:

Uma said...

வியக்கிறேன்.... வாசிக்க வாசிக்க விரிகிறது..
இப்போதுதான் புரிகிறது நான் வாசிப்பின் முதல் படியில் கூட இன்னும் காலெடுத்து வைக்கவில்லை என்று..

Uma said...

வியக்கிறேன்.... வாசிக்க வாசிக்க விரிகிறது..
இப்போதுதான் புரிகிறது நான் வாசிப்பின் முதல் படியில் கூட இன்னும் காலெடுத்து வைக்கவில்லை என்று..

Sampathkumar said...

எவ்வளவு இருக்கிறது இன்னும் அறிய இப்போதுதான் தொடங்குகிறேன் என் வாழ்வின் இறுதியில் என்று முடிப்பேன் என தெரியவில்லை

Buy Instagram Followers India said...

Nice post and keep posting helpful article. Most of instagram users finding best website to Buy Instagram Followers India and other country social media services, so i would suggest to go with the trusted site only SNK Creation.

Buy instagram followers India said...

Thanks for sharing the comprehensive post, your post having informative&valuable content,it will be helpful. Looking for real active followers for instagram profile, then i would recommend to Buy instagram followers India

rosaiah said...

வாழ்த்துக்கள் அண்ணா

rosaiah said...

வாழ்த்துக்கள் அண்ணா