”கட்டணம், ரூல்ஸ் வழக்கம் போல..”
1960-களில் 13- பேய்கள் (THIRTEEN GHOSTS) என்று ஒரு ஆங்கிலப் படம் வந்தது.அதைப் பார்ப்பதற்கு
ஒரு கண்ணாடி தருவார்கள்.படத்திற்கு தரை டிக்கெட் 18 பைசா கண்ணாடி 12
பைசா.கண்ணாடியைத் திருப்பித் தந்தால் 10 பைசா திரும்பத் தருவார்கள். முதல் தடவை
பார்வதியில் போடும் போது. படம் பார்க்கும் கண்ணாடி 12 பைசா என்று பிரமாதமாக
விளம்பரப்படுத்தியிருந்தார்கள். ஏகக் கூட்டம்.எப்போதுமே குறைந்த கட்டணப் படத்திற்கு
தரைடிக்கெட் 18 பைசா.பெஞ்சு 31 பைசா. தரை டிக்கெட் கிடைக்கவில்லை.பெஞ்சுக்கும்
கண்ணாடிக்கும் காசில்லை. இருப்பவர்கள் போனார்கள்.எனக்கு கடன் திருப்பித் தர
வேண்டிய ஒரு சிலரிடம் கேட்டுப் பார்த்தேன். ”போடா நான் படம் பார்க்க வேண்டாமா.வேணுன்னா உன் துட்டை
சாயங்காலம் தூர நின்னு வாங்கிக்கலெ...”என்று மறுத்து விட்டார்கள்.சாயந்தரமும் தரவில்லை. ”போடா, படத்தில ஒரு மயிரும் இல்லை,
புளுபுளுத்தான் உன் கடனையாவது அடைச்சிருக்கலாம்,” என்றார்கள். கண்ணாடிக் காசு 10பைசாவை திரும்ப வாங்க
இன்னும் கஷ்டப்பட வேண்டி இருந்தது என்றார்கள்.
மறு வாரம் ரத்னா டாக்கீஸில் போட்டார்கள்.கூட்டம் இல்லை.ரிசல்ட் நல்லா இல்லை
என்றாலும் போனேன், கண்ணாடிக்காகவே போனேன். கண்ணாடி என்றால்,மூக்குக் கண்ணாடி போல்
அணிந்து கொள்ள முடியாது.திரு விழாவில் முகமூடி போல் விற்பார்களே, அப்படி ஒரு
அட்டையில் இரண்டு கண்ணாடித் தாள்கள் ஒட்டி இருக்கும்.ஒன்று சிகப்புக் கலர்த்
தாள்.இன்னொன்று ஊதாக் கலர்த்தாள்.சிகப்புப் பகுதியில் “USE VIEWER” என்று அச்சிட்டிருக்கும்.
ஊதாப் பகுதியில் “USE REMOVER” என்று அச்சிட்டிருக்கும்.படம் கருப்பு வெள்ளையில் ஓடும்.அவ்வப்போது 12 பேய்கள்
ஒரு இண்டிகோ நீலத்தில் வரும். சிகப்புக் கலர் வழியே பார்த்தால் பேய்கள் சிகப்பாகத்
தெரியும்.ஊதாக்கலர் வழியே பார்த்தால் பேய்கள் தெரியாது. அதனால் பயமில்லாமல்
பார்க்கலாமாம்.ஆனால் படம் அப்படியொன்றும் பயமாயில்லை.ஏதாவது புரிந்தால்தானே..
பயப்பட.கடைசியில் வில்லன்13வது பேயாக மாறி, எல்லாப் பேய்களும் வீட்டை விட்டுப்
போய் விடும்.வீட்டிலுள்ளவர்களுக்கு ஒரு புதையல் கிடைக்கும்.இரண்டாம் முறை வந்த
போது கண்ணாடியைத் திரும்ப வாங்க மாட்டேனென்று சொல்லி விட்டார்கள். நானும் ரொம்ப
நாள் அதை பத்திரமாக வைத்திருந்தேன்.ரகசியமாய் ராத்திரி அதை வைத்து, ஒரு நாள் வேப்பமரத்துப்
பேய் தெரிகிறதா என்று கூடப் பார்த்தேன்.
9 வது வகுப்பு படிக்கும் போதுதான் செல்லத்துரை சாரிடம் அதைக் காண்பித்த போது,
அது கண்களின் மாயத் தோற்றம்டா என்று விளக்கினார்.நான் அதுவரை (சுமார் இரண்டு
வருஷம்) பத்திரமாக வைத்திருந்தேன்.செல்லத்துரை சார், (பட்டப்பேர் நாகேஷ்) கொஞ்சம்
ஆங்கில சினிமா பற்றி விளக்குவார்.அவர்தான் சைக்கோ கதையைச் சொன்னார். சைக்கோ படம் திருநெல்வேலிக்கு
வரும் போது ஏகப்பட்ட கதைகள் உலாவின. ”ஏல மெட்ராசில் இந்தப் படம் போடும் போது ஏழு கொலை சீன்
உண்டாம்ல, மதுரையில கூட அஞ்சு கொலைக் காட்சிகள் இருந்துதாம்லே...இதைவிடப் பயங்கரமா
இருக்குமாம்லெ...”என்றெல்லாம் கதைகள் உலாவின.
செல்லத்துரை சார்தான்,அதெல்லாம் டூப்புடா..படத்தில ஒரு கட் கூட இல்லை, என்று.
உண்மையிலேயே திகில் படத்திற்குப் பயந்தது அதற்கும் ’பீஸ் ஸால் பாத்’ இந்திப்
படத்திற்கும்தான்.பொதுவாக திகில்ப் படங்களில்
பயங்கரக் காட்சி வரும் போது,பெரும்பாலும் ’ப்பேய்’ மாளிகையில் கதாநாயகன்
தனியே நுழையும் போது, நாங்கள் “ஹூய்..ஊய்...ஏல், இந்தா ப்பேய்லே..அந்தா
வாராம்லே...”என்று, ஊளையிடுவதன் மூலம்
எங்கள் பயத்தைப் போக்கிக் கொள்ளுவோம். அப்புறம்தான் தெரிந்தது நிறையப் பேர்
அப்படித்தான், தன்னைப் பயந்தவர்கள்தான் என்று. ஹிட்ச்காக்கிடம் அதெல்லாம்
எடுபடவில்லை.அநேகமாக நான் முகத்தை கையால் மூடிக் கொண்டு விரல்கள் வழியாகப்
பார்த்தேன்.
’சைக்கோ’வைத் தொடர்ந்து, தேடிப் பிடித்து,
பல ஹிட்ச்காக் படங்கள் போட்டார்கள் .டயல் எம் ஃபார் மர்டர், கவுச், ரியர் விண்டோ,
சபோட்டேஜ்...சபோச்செர், ஐ கன்ஃபெஸ், (தமிழில், ’பரமபிதா’ என்று எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்தது, என்பார்கள்.) என்று
எல்லாமே பழைய்ய படங்கள். ‘ரியர்விண்டோ’வின் கடைசிக்காட்சி இன்னும் நினைவிருக்கிறது. சைக்கோ வந்த
உடனேயே கிறிஸ்டோபர் லீ நடித்த டிராகுலா- ரத்தக் காட்டேரி என்ற பெயரில்
போட்டார்கள்..பெயரே பயமாயிருந்ததால் நான் பார்க்கவில்லை. அதைத் தொடர்ந்து
ஹோமிசைட், மம்மி(பழைய்ய ’மம்மி’) என்று நிறையப் படங்கள் போட்டார்கள், ரத்னா,
பார்வதி,செண்ட்ரல்,லட்சுமி , பாளை அசோக் என்று தியேட்டர் தியேட்டராய்க் காவடி எடுத்தோம்.
தமிழில் இந்த அளவுக்கு பயங்கரப் படங்கள் வரவில்லை என்றே நினைக்கிறேன்.தமிழில் திகில் படங்களைக் காட்டிலும் துப்பறியும் படங்களுக்கே வரவேற்பு இருந்ததுவோ என்னவோ.தமிழில், அந்தக்காலத்தில் ’மர்ம யோகி’சற்று பயம் தரக் கூடிய படம்.அதனாலேயே முதல் ’ஏ’ சர்ட்டிஃபிகேட் படமாகவும் அமைந்தது.ஆனால் வேடிக்கை என்னவென்றால், படத்தின் தலைப்பு ‘மர்மயோகி’ மர்மமாய் ஒரு ஆவி வந்து போகும்.அது யாரென்பது சஸ்பென்ஸ்.ஆனால் டைட்டிலில் யார் யார் என்னென்ன பாத்திரங்கள் என்று முதலிலேயே ’க்ரெடிட்’போட்டுவிடுவார்கள்.ராஜா & மர்மயோகி- செருகளத்தூர் சாமா..என்று போடுவார்கள்.அப்புறம் என்ன சஸ்பென்ஸ் வேண்டிக் கிடக்கிறது.பிமல் ராயின் ’மதுமதி’ இந்திப் படமே தமிழ் நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் நன்றாக ஓடியது. அப்போது இந்தியாவெங்கும் வைஜயந்தி மாலாவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது.வாழ்க்கை படத்தில் அவரை முதன் முதலில் திரையில் பார்த்து “ஒரு குரல் எழுந்ததாம், ஏல, கட்டினா இவளைக் கட்டணும் இல்லேன்னா கட்டினவன் காலைக் கழுவிக் குடிக்கணும்..” என்று. இது கொஞ்சம் அவையடக்கமான கமெண்ட்.
தமிழில் இந்த அளவுக்கு பயங்கரப் படங்கள் வரவில்லை என்றே நினைக்கிறேன்.தமிழில் திகில் படங்களைக் காட்டிலும் துப்பறியும் படங்களுக்கே வரவேற்பு இருந்ததுவோ என்னவோ.தமிழில், அந்தக்காலத்தில் ’மர்ம யோகி’சற்று பயம் தரக் கூடிய படம்.அதனாலேயே முதல் ’ஏ’ சர்ட்டிஃபிகேட் படமாகவும் அமைந்தது.ஆனால் வேடிக்கை என்னவென்றால், படத்தின் தலைப்பு ‘மர்மயோகி’ மர்மமாய் ஒரு ஆவி வந்து போகும்.அது யாரென்பது சஸ்பென்ஸ்.ஆனால் டைட்டிலில் யார் யார் என்னென்ன பாத்திரங்கள் என்று முதலிலேயே ’க்ரெடிட்’போட்டுவிடுவார்கள்.ராஜா & மர்மயோகி- செருகளத்தூர் சாமா..என்று போடுவார்கள்.அப்புறம் என்ன சஸ்பென்ஸ் வேண்டிக் கிடக்கிறது.பிமல் ராயின் ’மதுமதி’ இந்திப் படமே தமிழ் நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் நன்றாக ஓடியது. அப்போது இந்தியாவெங்கும் வைஜயந்தி மாலாவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது.வாழ்க்கை படத்தில் அவரை முதன் முதலில் திரையில் பார்த்து “ஒரு குரல் எழுந்ததாம், ஏல, கட்டினா இவளைக் கட்டணும் இல்லேன்னா கட்டினவன் காலைக் கழுவிக் குடிக்கணும்..” என்று. இது கொஞ்சம் அவையடக்கமான கமெண்ட்.
’மதுமதி’ 1958 வாக்கில் வந்தது.(திருநெல்வேலிக்கு
60-ல் வந்தது).ஐந்து வருடங்கள் கழித்து ஸ்ரீதர், மதுமதியைத் தழுவி, நெஞ்சம்
மறப்பதில்லை படம் வெளியிட்டார். அது ஓரளவு திகில்ப் படமாயிருந்தது.அதற்கான
பெருமையெல்லாம் நம்பியாரின் நடிப்பையே சேரும். ’பீஸ் ஸால் பாத்’ இந்திப் படம், பிஸ்வஜித்தின் முதல்ப்படம்.ஏராளமான
வில்லன் நடிகர்கள் நடித்த படம்.ஆனால் அவர்கள் யாருமே கொலையாளி கிடையாது. இந்த
உத்தி பின்னர் பல தமிழ்ப் படங்களில் (என்கடமை-வில்லன் நம்பியார் என்று
நினைப்பார்கள்,ஆனால் பாலாஜிதான் வில்லன். பாலாஜி எம்.ஜி.ஆரோடு நடித்த ஒரே படம்.
பறக்கும் பாவை- இதில் நம்பியார், மனோகர், ஓ.ஏ.கே.தேவர்,என்று ஏகப்பட்ட வில்லன்
நடிகர்கள்.ஆனால் காஞ்சனா தான் வில்லி.)ஹேமந்த் குமார் இசையும் தயாரிப்பும்.
லதாமங்கேஷ்கரின் குரலில் ’கஹின் தீப் ஜலே கஹின்
தில்....”என்று ஒரு
பாடல்..பீம்ப்ளாஸ் ராகம் என்று இசை தெரிந்தவர்கள் சொல்லக் கேள்வி. (நெஞ்சம்
மறப்பதில்லை- பாடலில் இதன் சாயல் தெரியும்.) இப்படி ஒரு பாட்டு இருந்தால் மட்டுமே
அது திகில்ப் படமென்று இந்திய சினிமாவின் எழுதப்படாத சட்டத்தை மதுமதி-இசை –சலில்
சௌத்ரி- ஏற்படுத்த, ’பீஸ் ஸால் பாத்’ அழுத்தம் கொடுத்தது. ’யார் நீ’ படத்தில் அதன் இந்தி மூலமான ’ஓஹ் கௌன் தி’ படத்தின் எல்லாப் பாடல்களையும், பின்னணி இசையையும் கார்பன்
பிரதி எடுத்திருப்பார் வேதா. ”நானே வருவேன்....”பாடலின் மூல இசை, மதன் மோகன். ‘பீஸ்சால்
பாத்’ ஏனோ தமிழில் ரீமேக்
செய்யப் படவில்லை. அந்தப் பாட்டு மட்டும் ரீமேக் ஆனது. அம்மா எங்கே என்று மாடர்ன்
தியேட்டர்ஸ் படம், முத்துராமன், சந்திரகாந்தா நடித்தது. கதை வேறு ஆனாலும்
காட்சிகள்,பீஸ்ஸால் பாத் படத்தின் சாயலிலிருக்கும். அதில் சில பாடல்கள் இந்திப்
பாடல்களின் கார்பன் காப்பி. ”நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா..என்று பி.பி.எஸ், சுசீலா பாடும் பாடல் அதில் ஒன்று.டி.கே.ராமச்
சந்திரன் என்றொரு வில்லன் நடிகர்.முண்டக்கண் ராமச்சந்திரன் என்று சின்னப்
பிள்ளைகள் கூப்பிடும். ‘முதலாளி’,’தை பிறந்தால்வழி பிறக்கும்’, ’மதுரைவீரன்’, ’ராஜாதேசிங்கு’ படங்களில் வில்லனாக வருவார். சொந்தமாக நாடகக்
கம்பெனியெல்லாம் வைத்திருந்தார்.
இரண்டுநாடகங்களைப் படங்களாகத் தயாரித்தார் (சிங்கப்பூர் சீமான்,
நினைப்பதற்கு நேரமில்லை). நினைப்பதற்கு நேரமில்லை படம் நன்றாக இருக்கும். திருநெல்வேலியில்
இரண்டு வாரங்கள் ஓடியது. அதே ஒரு சாதனைதான். அதில் பி.பி ஸ்ரீனிவாஸ் பாடும், ”நினைப்பதற்கு நேரமில்லை,, நினைத்துவிட்டால்
மறப்பதில்லை...” என்று ரிப்பீட் பாடலாக வரும்.
இதன் கதை சற்றே ’பீஸ் ஸால் பாத்’ மாதிரி இருக்கும். படத்தில் கதை
வலுவாக இருந்து விட்டால், தமிழ் ரசிகர்கள் வரவேற்புத் தரத் தயங்க
மாட்டார்கள்.ஸ்டார் வேல்யூவெல்லாம் முக்கியமில்லை. ’ஒரு விரல்’ படம் அப்படித்தான். பிரேம் நாத் என்று தெலுங்கு நடிகர், வி.ஆர் திலகம் எல்லாம் நடித்தது.வேதா இசை.எல்லாம் ஒரிஜினல்
டியூன். மூன்றே பாட்டுத்தான். படம் நன்றாக இருந்து நன்றாக ஓடியது. தேங்காய் சீனிவாசனும்,
’ஒரு விரல்’ கிருஷ்ணா ராவும் அறிமுகமானது
இந்தப் படத்தில்தான்.நல்ல திகில்ப் படம்.
’கண்ணாடி மாளிகை’ என்றொரு படம் வந்தது. ராதாராணி என்றொரு நடிகையும் அவர்
தங்கையும் தயாரித்து நடித்தது. அசோகன் கதாநாயகன்.எம்.ஆர்.ராதா ஒரு ’’”’ஸ்க்ரீம் (scream)’ முகமூடியுடன் வந்து பயமுறுத்துவார்.”சிரித்த முகம் வேணுமடி பெண்ணே/ அதுதான் சேவை செய்யும்
பெண்களுக்கு அழகு தரும் கண்ணே...” என்று சுசீலாவின் அழகான
பாட்டு ஒன்று உண்டு. சிலோன் ரேடியோவில் அடிக்கடி போடுவார்கள்.இசை டி.ஆர்.பத்மன்
என்று ஒருவர். இவரெல்லாம் என்ன ஆனார்கள்.ராதாராணி என்ன ஆனார்.அவரின் தங்கை பெயர்
நளினி என்று நினைவு.அவர் தேவர் ஃபிலிம்ஸின் இரண்டாந் தரத் தயாரிப்புகளில்
நடித்தார். இந்தியில், பீஸ் ஸால் பாத் படத்திற்குப் பின் சற்றே நின்றிருந்த திகில்ப்
படங்கள்,’கும் நாம்’ படத்திலிருந்து மறுபடி வரத்
தொடங்கின.மனோஜ் குமார் அதில்த்தான் அறிமுகம் என்று நினைவு. கும்நாமின் விலகித்
தழுவிய பதிப்பாக ’அதே கண்கள்’தமிழில் வந்தது. கதை –தழுவல்
மன்னன் டி.என்.பாலு. (”தோ கலியான்”- இந்தி குழந்தையும்
தெய்வமும் படத்திற்கோ எதற்கோ போட்ட செட் வீணாகிறதே என்று ஏவி.எம், தமிழ்ப்படம் எடுக்க யோசித்து ’அதே கண்கள்’ கதையைப் பண்ணியதாக ஒரு செய்தி உண்டு. தமிழ்
ரசிகர்கள் காதில் எப்படியெல்லாம், ரீல் ரீலாகப் பூச் சுற்றியிருக்கிறார்கள்
பாருங்கள்.அன்பே வா ஹிட் ஆனதால் அதே ‘அ’ வில் ஆரம்பிக்கிற செண்டிமெண்ட் வேறு. ஆனால் வேதாவின்
ஒரிஜினல் டியூன்ஸில் பாட்டுக்கள் பிரமாதமாய் இருக்கும்.அதிலும் படத்தில் வராத
“சின்னப் பெண்ணொருத்தி சிரிக்கிறாள்/ கண்ணுக்குள் மயங்கி நடக்கிறாள்....” என்று டி.எம்.எஸ்-சுசிலா டூயட் அருமையாக
இருக்கும்.வாலி எழுதிய நல்ல பாடல்களில் அது ஒன்று.”கை வளையலுக்கெல்லாம் நான் முத்தம் தரவேண்டும்/உன்னைப்
படைத்த கடவுளுக்கும் முத்தம் தரவேண்டும்...”என்கிற
சரணம் அற்புதம்.
அதே பாணியில் வீணை
எஸ்.பாலச்சந்தர் தயாரித்து இயக்கிய “ நடு இரவில்” நன்றாக ஓடியது.எஸ்.பாலச்சந்தர் ஒரு மகத்தான கலைஞன்.அந்த
நாள். டாக்டர்.சாவித்ரி, அவனாஇவன், பொம்மை, நடு இரவில் என்று அருமையான துப்பறியும்
படங்கள் தந்தவர்.அவரும் வித்துவான்.வே.லட்சுமணனும் கூட்டுத் தயாரிப்பாக வந்தவை
கடைசி மூன்றும்.எல்லாமே குறைந்த பட்ஜட் படங்கள். கதைக்காவே ஹிட் ஆனவை.எம்.ஜி.ஆர்.,
சிவாஜி திகில் படங்கள் எதுவும் இருப்பதாக நினைவில்லை.சிவாஜிக்கு புதிய பறவையை
சொல்லலாம்.அதுவும் துப்பறியும் படமான ’சேசிங்
ஆஃப் எ க்ரூக்கட் ஷேடோ’வின் தழுவல்தான்.திகில்ப்படங்கள் பொதுவாகவே இன்றும்
கூட சின்ன நடிகர்கள் நடிகளை வைத்து சின்ன பட்ஜட்டிலேயே எடுக்கப்படுவதாகத்
தோன்றுகிறது.
திகில்ப் படம் பார்க்க கொஞ்சம் சிறிய வயதோ, சிறிய வயதின் மனமோ வேண்டும். இப்போது வந்த பேய்ப்படங்கள்
அருந்ததீ,லாரன்ஸின் முனி சீரிஸ்கள் எல்லாம் பயமே ஏற்படுத்தவில்லை. தவிரவும் ‘ஓமன்’ ’எக்ஸார்ஸிஸ்ட்’ கதைகளுக்குப் பின் அது மாதிரி பேய் பிடிக்கிற கதைகள் வந்து
விட்டது.ஹாலிவுட்டில் எது ஹிட் ஆகிறதோ அது இந்திய மணத்தோடு வடக்கிலும் அப்புறம்
திராவிட மணத்தோடு மலையாளம் தமிழிலும்
வந்து விடும்.மலையாளத்தில் லிசா, பதிமூனாம் நம்பர் வீடு மாதிரிப் படங்கள் சக்கை
போடு போட்டன.
சைக்கோ அளவுக்கு,மனோதத்துவப் பின்னணியுள்ள கதைகள் தமிழில்
வரவில்லையென்றாலும். சிகப்பு ரோஜா, சந்திர முகி என்று என்று சில டிஸார்டர்
சமாச்சாரங்களை எடுத்திருக்கிறார்கள். தமிழில் திகில்ப் படங்கள் என்றால் குறைந்த
பட்ஜெட், குட்டி நடிகர்கள், வேதாவின் இசை,இந்திப் படக் காட்சிகள், பாடல்களின்
தழுவல் என்று ஒரு வழக்கமே இருந்தது
தர்ட்டீன் கோஸ்ட் எடுத்த இயக்குநர் அவரது
படங்களில் அந்தப் படத்தில் கண்ணாடி தந்தது போல ஏதாவது மக்களைக் கவரும் வேடிக்கைகள்
செய்வார் என்று கேள்வி.க்ளைமாக்ஸ் நெருங்கும் போது படத்தில் வரும் ஒரு
குரல்(வாய்ஸ் ஓவர்) க்ளைமாக்ஸைப் பார்க்க திராணியில்லாதவர்கள் இப்போது வெளியேற
விரும்பினால் செல்லலாம்,டிக்கெட் பணம் வாபஸ் தரப் படும். என்றெல்லாம் gimmicks செய்வாராம். முடிவை
யாருக்கும் சொல்லாதீர்கள்.படத்தின் ஆரம்ப காட்சிகளைக் காணத் தவறாதீர்கள்
என்றெல்லாம் அறிவிப்புகளைப் படத்தில் காட்டுவாராம். இதெல்லாமே தமிழ்
திரைப்படங்களில் கையாளப் பட்டிருக்கின்றன. பணம் வாபஸ் சமாசாரம் கிடையாது. இங்கே
பாகவதர் காலத்தில் ஒரு வழக்கமுண்டு, பிட்
நோட்டீஸ்களில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒன்ஸ்மோர் அனுமதிக்கப்பட மாட்டாது,
என்று அச்சிடுவார்கள். அதற்குப் பின் நானறிய,கரண்ட் தவறினாலோ.இயந்திரம்
பழுதடைந்தாலோ பணம் வாபஸ் கிடையாது என்பது போன்ற ’ரூல்ஸ்’.,கட்டணங்களைக் குறிப்பிடாமல்
பொதுவாக”கட்டணம், ரூல்ஸ் வழக்கம்
போல்..”என்று பிட் நோட்டீஸ்களில்
அச்சிடுவார்கள்.நாங்கள் செல்லாங் குச்சியோ, பம்பரக் குத்தோ, பேந்தாக் கோலிக்காயோ,
எந்த விளையாட்டையும் ஆரம்பிக்கும் போது சொல்லுவோம், எல்லோருக்கும் கேட்கும்
படியாக, “ அய்யா, கட்டணம் ரூல்ஸ் வழக்கம் போல..” .
1 comment:
பேய் கட்டுரை
பேய் படங்களில் பேய் காட்சி வரும்போது ஆ ஊ ஈய் ஊய் என்று சவுண்ட் வரும். அதே போல் வெள்ளி கிழமை விரதம் நெல்லை பார்வதி யில் 100 நாட்கள் ஓடிய நினைவு . தேவர் படம் . பாம்பு வரும் காட்சிகளில் ஸ்ஸ்ஸ் என்று ரசிகர்கள் மத்தியில் சவுண்ட் வரும்
எல்லோரும் காலை தரையில் இருந்து தூக்கி மேலே வைப்பார்கள்
அப்போது தான் அருகில் இருக்கும் மணி ரைஸ் மில் இல் இருந்து குழம்பு பொடி ரச பொடிஅரைக்கும் வாசனை மூக்கை தூக்கும் பக்கத்தில் இருக்கும் நொண்டி சோமு ஏலே மக்க பாம்பு வாசனை அடிக்கில்ல
Post a Comment