இரண்டாம் இடம்.....
தி-லி சந்திப்பின் பெரிய லாட்ஜ் அது. உருப்படியான பிரபலமான லாட்ஜும் அதுதான்.நெல்லையப்பர் நெடுஞ்சாலையை
ஒட்டிய அதன் முகப்பு பூராவும் கீழே கடைகளும் மேலே சினிமாக் கம்பெனிகள், மாத
வாடகைக்கு குடியிருக்கும் அநேகமான மருந்துக் கம்பெனிகளின் பிரதிநிதிகள் தங்கும்
அறைகளும்.கணேசன் அங்கே ரூம் பாய் ஆக வேலை பார்த்தான்.சாயங்காலம் எப்படியாவது எம்.ஜி.ஆர்
படம் ஓடும் தியேட்டருக்கு ஐந்து நிமிடமாவது வந்து விடுவான்.வருவதும் போவதும்
தெரியாது.இத்தனைக்கும் சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது.லாட்ஜிலுள்ள எல்லா சினிமாக்
கம்பெனிகளிலும் நல்ல பழக்கம் உண்டு.சில சினிமா தியேட்டர்களில் வசூல் கணக்கைத் தர
மாட்டார்கள்.குறிப்பாக ரத்னா பார்வதி திரை அரங்குகளில்.,மன்றத்தினரை எதற்குமே
அனுமதிக்க மாட்டார்கள். அப்போழுதெல்லாம்
கணேசன்தான், பட
விநியோகஸ்தர்களிடம் அவற்றை வாங்கித் தருவான்.
கணேசனுக்கு அவசரமாக ஒரு தந்தி அடிக்க
வேண்டி இருந்தது. அவனுடைய சிலோன் பேனா நண்பன் இந்தியா வந்தார். அவரை வரவேற்க
திருச்சி போக வேண்டும்.முடியவில்லை.அவர் விமானம் ஏறி விட்டார்.சேது ஃபிலிம்ஸ்
கம்பெனியின் ஃபோன் நம்பரை அவருக்கு தெரிவிக்க வேண்டும்.”
ON ARRIVAL INFORM KATHIRKAMANATHAN OF CEYLON FLIGHT TO CONTACT THIS
PHONE NUMER 1391 P.P GANESAN..”என்று ஒரு தந்தியை
திருச்சி விமான நிலைய அதிகாரிக்கு அனுப்பினேன்.RECEPTIONIST, TRICHY
AIRPORT என்று விலாசம் எழுதிய ஞாபகம்.அதை அனுப்பிய ஜங்ஷன்
தந்தி அலுவலர் ஐய்யர், கிண்டல் செய்தபடியேதான் அனுப்பினார், என்னடா அம்பி
இதெல்லாம் என்னடா இங்க்லீஷ்...இதையெல்லாம் யாரும் ரிஸ்க் எடுத்து
கொடுப்பாளோ...திண்டாடப் போறான் அந்தப்பயலென்றார்.ஆனால் தந்தி முறையாக அவர் கைக்கு
கிடைத்து அவரும் ஃபோன் பண்ணி,விவரம் கேட்டு தானே தி-லி வந்து சேர்ந்து
விட்டார்.அவருக்கு பி.பி கணேசன் என்று போட்டதுதான் புரியவில்லை.விமானநிலையத்தில்
உதவினார்களாம்.பி.பி என்றால் பர்டிகுலர் பெர்சன்.அப்போதெல்லாம் ஒரு நம்பருக்கு
டிரங்க்கால் புக் பண்ணினால், எக்சேஞ்சில் நம்பர் காலா, பி.பி காலா என்று
கேட்பார்கள்.பி.பி. கால் என்றால் அந்த ஆள் அங்கே ஃபோன் அருகே காத்திருக்க
வேண்டும்.மணிக்கணக்கில் கூடக் காத்திருக்க வேண்டும். ‘பி.பி’
ரெடியா என்று கேட்க கொஞ்சநேரம் ,பி.பிரெடி என்றாலும், அதன் பின்ன்னும் கொஞ்ச நேரம்
கழித்துத் தான் லைன் கிடைக்கும்.”இந்தாங்க திருநெல்வேலி கால், பி.பி ரெடி பேசுங்க” என்று நம்மிடம் தொலை பேசியைத் தருவார்கள்.அவர் வந்த இரவு மூன்று பேரும் செகண்ட்
ஷோ ‘பாதுகாப்பு’ படம் போனோம். நகரில் மூன்று பேரும் பார்க்க வாத்தியார்
படம் ஒன்று கூட ஓடவில்லையே என்று அந்த ரசிகர் அலுத்துக் கொண்டு பாதியில் தூங்கிப்
போய்விட்டார்.அதிலிருந்து கணேசன் என்னுடன் நெருக்கமாகி விட்டான். லாட்ஜ் பக்கம்
போனால் காஃபி வாங்கித் தருவான்.லாட்ஜ் காஃபி நன்றாயிருக்கும்.டி.டி.கே கம்பெனி
ரெப்பிடமிருந்து காட்பரீஸ் சாக்லேட், பாண்ட்ஸ் க்ரீம்( பாதி உபயோகித்தது) எல்லாம்
வாங்கித் தருவான்.அவர் அவ்வப்போது ரூமில் நடத்தும் மன்மத லீலைகளை பக்கத்து ரூம்
வழியே ‘பிக்ச்சர்’ பார்க்க அனுமதிப்பான்.
லாட்ஜில் தங்க வரும்
சினிமாக் காரர்களைக் காண அழைத்துப் போவான்.எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளர் குமாரசாமி,வசனகர்த்தா
சக்தி கிருஷ்ணசாமி,பின்னாளில் புலமைப்பித்தன் எல்லோரையும் அங்கே பார்த்திருக்கிறேன்.பறக்கும்பாவை
படம் ஓடிக் கொண்டிருந்தபோது அதன் டைட்டில் கார்ட்டூன் ஓவியங்கள் வரைந்த (குமுதம்,கல்கண்டு
இதழ் கார்ட்டூனிஸ்ட் ‘ராகி’, ஆர் ஆர் பிக்சர்ஸ் மேற்பார்வையாளர் மாப்பிள்ளை
விஜயரங்கம் என்று, நிறையப்பேர்.எல்லோரையும் பார்ப்போம் சிலர் நன்றாகப்
பேசுவார்கள், சிலர் ரசிகக் குஞ்சுகளுக்கு என்ன தெரியும் என்பது போல் தலையை மட்டும்
ஆட்டி விட்டு விடை கொடுப்பார்கள். நான் சற்று அதிகப் பிரசங்கமாகப் பேசி ஆளைக்
கொஞ்சம் கவர்ந்து விடுவேன். சக்தி.கிருஷ்ணசாமியிடம் நீங்க பாரதிதாசன் மாதிரி
இருக்கீங்க என்றேன்.”மீசை அவர் மாதிரித்தான் வைப்பேன்” என்று சிரித்துக்
கொண்டார்.
ஒருநாள் கணேசனைப்
பார்க்கப் போயிருந்த போது,”வாங்க ஒரு புரொட்யூசர் வந்திருக்காரு...பார்க்கலாம்” என்று அழைத்துப் போனான்.நாங்கள் அருகே போனதும் அவர் ‘அருந்திக்
கொண்டிருந்ததை’ ஒளித்து வைத்தார். கணேசன் தானென்றவுடன் எடுத்துக்
கொண்டார். பொத்தாம்பொதுவாக “பிஸ்கட் பிராண்டி,இங்கேயெல்லாம் கெடைக்கவே மாட்டேங்கே..” என்றார். பெயரே இனித்தது.அப்போதெல்லாம் பாளையங்கோட்டை ‘எட்வர்ட் அன் கோ’ மெடிக்கல் ஸ்டோரில் ஒரு போர்டு
தொங்கும்,” டாக்டர்கள் சீட்டின் பேரில்,பெர்மிட் உள்ளவர்களுக்கு
மட்டும் பிராந்தி , விஸ்கி, ஒயின் கிடைக்கும்.’‘அதை வாசிப்பதே
பெரிய கிக் ஆக இருக்கும்.பின்னாளில் எல்லாமே தெரிந்து விட்டது. முக்கியமாக பிஸ்கட்
பிராண்டி இனிக்காது என்று.அவர் எம்.ஜி. ஆரை வைத்து ஒரு படம் தயாரித்தவர்.படம் ஓடவே
இல்லை.மிகப் பெரிய நிறுவனத்தின் அதிபருக்கு மச்சினர் என்றான் கணேசன்.கதை, நல்ல கதை
சார் இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி எடுத்திருக்கலாமென்றேன். ”என்னத்த கதை”,அதில் நடித்த இரண்டாவது கதாநாயகி பேரைச்
சொல்லிக் கொண்டு “சதையை”த்தான் பார்த்தேன். அதையும் எங்க மச்சான் எங்க
விட்டாரு... ”கொண்டா,கொண்டான்னு”ருவாரு. அவருக்குத்தான்
எல்லாரும் வருவாங்களே...” என்று புலம்ப ஆரம்பித்தார். அடிக்கடி பாட்டில் காலியாகி
விடுமோ என்று பார்த்துக் கொண்டிருந்தார்.இரண்டாவது கதாநாயகிகளைப் பற்றி நிறையச்
சொன்னார்.”ஒரு படம், ரெண்டு படம் செகண்ட் ஹீரோயினா நடிக்கலாம்: அப்புறம்
முதல் இடத்துக்கு பிக் அப் ஆயிரணும் இல்லேண்ணா கஷ்டம்தான், எங்கப்பூ, விட
மாட்டாங்கப்பூ....அது......கொலைகார உலகமப்பூ...” என்று
சொல்லியபடியே படுத்து விட்டார்.கணேசன் ரூம் கதவைச் சாத்தி விட்டு கீழே அழைத்து
வந்தான்.”பாத்தீங்களா சார் இதுதான் சினிமா.இப்ப இவரு
வந்திருக்கிறதே..அடுத்த படத்துக்கு ஃபைனான்ஸ் புரட்டத்தானாம் வெளங்குமா....” என்றான்.
வீட்டுக்கு வரும்
வழியில் ’ பொம்மை’சினிமா இதழ் வாங்கிவந்தேன்.எல் விஜயலட்சுமியும் கே.ஆர்.விஜயாவும்,
ஊட்டி வரை உறவு ஸ்டில் அட்டைப்படம் போட்டிருந்தார்கள். எல்.விஜயலட்சுமி அதோடு
கல்யாணம் செய்து கொண்டு மணீலாவுக்குக் கிளம்பி விட்டார். ரொம்ப அழகான படம். எங்களில் சிலருக்கு எல்.விஜயலட்சுமியை ரொம்பப் பிடிக்கும்.நல்ல டான்ஸர். திருநெல்வேலி
அக்ரஹாரத்துப் பெண்(ணாம்), கவலை இல்லாத மனிதன் படத்தில் சேரிப் பெண்ணாக அறிமுகமாகி
சந்திரபாபுவுக்கு ஜோடியாக நடித்தார்.’கொடுத்து வைத்தவள்’ படத்தில்
எம்.ஜி.ஆருக்கு இரண்டாவது கதாநாயகி. (சிலப்பதிகார காலம் தொட்டே தமிழ்க் கதைகளில்
ஒரு கதாநாயகனுக்கு இரண்டு கதாநாயகி என்பது சினிமாவிலும் ‘ஊழ்வினையாக உறுத்து வந்து
ஊட்டுகிறதோ’ என்னவோ). படத்தில் இரண்டு டூயட் ’எல்.வி’யுடன் எடுத்தார்கள்.
”தள தள வென ஜொலிக்குது-உடம்பு
தக்காளிப்பழம் போல்
சிவக்குது
குறு குறு வெனப்
பாக்குது – மனசு
கொல்லாமலே என்னைக்
கொல்லுது”................என்று ஒரு பாடல் ‘ஹம்பி’யில் ஷூட்
பண்ணினார்கள். பேசும்படம் இதழில் அருமையான ஸ்டில் எல்லாம் வந்தது. படத்தில்
வரவில்லை.படத்தில்,
“பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது..
காதல் தேனாற்றில் நீராடுது
அழகுத் தேரோடுது
மனது போராடுது”
-(மேனிப் பாலாற்றில்.....)
என்று இதுவும் ஒரு
அழகான பாடல்.இது மட்டும் படத்தில் இருந்தது. ஈ.வி சரோஜா தான் முதல்க் கதாநாயகி.
படமும் அவர் சகோதரர் தயாரிக்க ராமண்ணா இயக்கினார்.எம்.ஜி.ஆருக்கு ஈ.வி. சரோஜாவுடன்
இணையாக நடிக்க இஷ்டமேயில்லை என்பார்கள். ’என் தங்கை’ படத்தில் தங்கையாக
நடித்த குழந்தை(!) நட்சத்திரத்துடன் நடிக்க விருப்பமில்லை என்றும், தமிழ்
ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் சொன்னாராம்.அவர் சொன்னதில் ஒரு உண்மை
இருந்தது.பாச மலர் படத்தின் வெற்றிக்குப் பின்
உடனேயே ‘எல்லாம் உனக்காக’
படம் வந்தது. சாவித்திரி அதில்
சிவாஜியின் ஜோடியாக நடித்ததை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதனால் படம் படு தோல்வி
என்று ஒரு பேச்சு உலவியது.
தவிரவும் ராமண்ணாவின்
(மூன்றாம்) மனைவியான ஈ.வி சரோஜாவுடன் அவர் இயக்கத்தில் நடிக்க எம்.ஜி.ஆர்
தயங்கியதாகவும்....அதனால் காதல் காட்சிகளை ப.நீலகண்டன் இயக்கினார் என்றும் ஒரு
கதை.இந்த மாதிரிக் கதைகள் சினிமா கதையை விட சுவாரஸ்யம் மிக்கவை.
ஈ.வி.சரோஜாவே இரண்டாம்
கதாநாயகியாகவோ நாட்டிய நடிகையாகவோதான் நிறையப் படங்களில் நடித்தார். இவரும்
அருமையாக நடனம் ஆடுவார்.சந்திர பாபுவுடன் ஆடும் நடனங்கள் அழகாய் இருக்கும்.அருமையான
கண்கள். ‘கைதி கண்ணாயிரம்’ படத்தில் இரண்டு ‘கிளப் டான்ஸ்’ ஆடுவார்.அப்படியே
இந்தி நடிகை போலிருக்கும். எல்.விஜயலட்சுமி, ஜெய்சங்கர் சகாப்தத்தில் கதாநாயகியாக
நடித்து கொஞ்சம் வெளிச்சத்தில் இருந்தார். இதே போல கன்னட நடிகை பாரதி, தன்
அபூர்வமான நடு மார்பு மச்சத்துடன் நாடோடி படத்தில் எம்.ஜி.ஆருடன் அறிமுகமானார்.
முதல் ரீலில் ஒரு டூயட் பாடி விட்டு இரண்டாவது ரீலில் தற்கொலை செய்து
கொள்ளுவார்.சந்திரோதயம் படத்தில் உடன் பிறவாச் சகோதரியாக நடித்து, எம்.ஜி.ஆர் ராஜ்ஜியத்தை
விட்டு வெளியேறி விட்டார். அவரும் ஜெய்சங்கர் ரவிச்சந்திரனுடன் கொஞ்ச காலம்
நடித்து, அவளுக்கென்று ஒரு மனமாக விஷ்னு வர்த்தனை மணம் முடித்துக் கொண்டு
திரையுலகுக்கு டாட்டா காட்டி விட்டார்.
பாசம் படத்தில் ஷீலா
அறிமுகமானார், இரண்டாம் கதாநாயகியாக. கண்ணதாசன் படங்கள் ஒன்றிரண்டில் தலை
காட்டினவருக்கு தன் சொந்த தேசமான கேரளமே கடவுளாகியது.கிட்டத்தட்ட 500 மலையாளப்
படங்கள் நடித்தார்.நூற்றிச் சொச்சம் படங்களில் பிரேம் நசீருடன் மட்டுமே நடித்தார்.’வாழ்க்கை வாழ்வதற்கே’ படத்தில் அறிமுகமான சாரதா அதில் பேசிய வசனம் நாலைந்து வார்த்தைகள்
கூட இருக்காது.கிருஷ்ணன்-பஞ்சுவின் பிரியத்துக்குரியவரான இந்த அற்புதமான நடிகை
குங்குமம் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார்.அவ்வளவுதான்.ராஹேல் என்ற பெயரில்
மலையாளத்தில் அறிமுகமாகி நூற்றுக் கணக்கில் நடித்து இரண்டு முறை ஊர்வசி பட்டம்
வாங்கினார்.அந்தக் கையோடு எம்.ஜி.ஆர் தங்கையாக நினைத்ததை முடிப்பவன் படத்திலும்,சிவாஜிக்கு
ஒரு ஜோடியாக ’என்னைப் போல் ஒருவன்’ படத்திலும்
தோன்றியதோடு சரி.
’பெரிய இடத்துப் பெண்’ படத்தில்
அறிமுகமான ‘மணிமாலா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக முடியாமற் போவது போலவே
எந்தப் படத்திலும் ஜோடியாக முடியவில்லை.இரண்டாவது படத்தில் (பணக்காரக் குடும்பம்)
நாகேஷுக்கு ஜோடியாகி விட்டார். ’தெய்வத்தின் தெய்வம்’ படத்தில் மணிமாலா
என்று இன்னொரு நடிகையை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தினார். முதல் ரீலில்
டூயட், அடுத்த ரீலில் விதவை.பெயர்க் குழப்பம் வரவே இரண்டாவது (கே.எஸ்.ஜி).
மணிமாலா, தன் பெயரை கீதாஞ்சலி என்று மாற்றிக் கொண்டார்.ஒரிஜினல் மணிமாலா நிஜ
வாழ்க்கையில் ’வெண்ணிற ஆடை’மூர்த்திக்கு மனைவியாகி விட்டார். எல்லாம் அந்த
ஏழுமலையான் பாலாஜி செயல்.வெண்ணிற ஆடை நிர்மலா ‘காதலிக்க நேரமில்லை’படத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டவர்.அவரை வைத்து சில காட்சிகள் கூட
எடுத்தார் ஸ்ரீதர்.( ஒரு காட்சி, “அனுபவம் புதுமை....” பாடல்க் காட்சி.
இந்த ஃபிலிம் கூட கடைகளில் கிடைத்தது. )சுத்தமாய் நடிப்பே வரவில்லை.’ஒப்பந்த நடிகை’ வேறு. அதனால் அடுத்த படமான வெண்ணிற ஆடையில் பயன்படுத்திக்
கொண்டார்.வெண்ணிற ஆடையிலும் ஹேமமாலினிதான் ஜெயலலிதா ரோலுக்கு தேர்வானவர். வைகை
அணைக்கட்டில் ”கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல...” பாடல்க் காட்சியை அவரை வைத்துப் படமாக்கினார். அப்புறம் அவருக்கும் நடிப்பு
வரவில்லை என்று வடக்கே வெற்றிக் கொடி நாட்ட அனுப்பி வைத்து விட்டார், ஸ்ரீதர்.ராஜ்ஸ்ரீக்கு
ராசியான நடிகை என்று ஒரு பேர். குடியிருந்த கோயிலில் காஞ்சனா நடிப்பதாக இருந்த்து.
பறக்கும்பாவை தோல்வி கண்டதால் அவரைத் தவிர்த்து ராஜ்ஸ்ரீயைப் போட்டார்கள்.ஆனால்
வேலுமணியின் அடுத்த படமான நான் ஏன்
பிறந்தேன் பட்த்தில் காஞ்சனா நடித்தார்.வெற்றியும் பெற்றது.அவர்தான் நிலைக்க
முடியவில்லை.
இன்னும் விஜய குமாரி,
புஷ்பலதா, ராதா,(அம்பிகா-ராதா இல்லை, நீதிக்குப் பின் பாசம், யார் நீ போன்ற
படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இடையிலேயே செத்துப் போகிற ரோல், அதுவும்
ரத்தம் சிந்தி) குமாரி பத்மினி,எம்.ஜி.ஆர். சங்கீதா, சிவாஜி சங்கீதா, என்று அந்தக்
காலம் தொடங்கி இந்தக் கால ’தங்கைகள்’ வரை நிறையப் பேர் இரண்டாம் இடத்திலிருந்து இல்லாமல்ப் போய்
விடுகிறார்கள். லலிதா பத்மினி ராகினி மூவரில் கூட பத்மினி அளவுக்கு மற்றவர்கள்
சோபிக்க முடியவில்லை.ராகினியாவது பத்மினி நடிக்கும் படங்களில் காமெடியனுக்கு
ஜோடியாக வந்தார். லலிதாவை கொலையும்
செய்வாள் பத்தினியாகக் ’கொன்டே’போட்டு விட்டார்கள். பத்மினிக்காக தியேட்டரை எழுதித் தந்தவர்களும்,
பீடிக் கம்பெனியை அடகு வைத்தவர்களும் உண்டு என்பார்கள். இவர்கள் ஏன் லலிதாவையோ
ராகினியையோ. இரண்டாம் பட்சமாகக் கூட கணக்கெடுக்கவில்லை என்று தெரியவில்லை.என்ன
அழகான ’ஐஸ்கிரீம்’ நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா,அவர் இன்சால்வெண்ட்
ஆனாரே ஒழிய பாவம் எம்.எல்.சி.யாகக் கூட ஆக
முடியவில்லை.அதற்கப்புறம்,அவரால் யாருமே இன்று வரை எம்.எல்.சியாக முடியவில்லை.
தமிழ் சினிமாவில்
தங்கையாக அறிமுகமானால் ஆகப் பாரிய சங்கடங்கள் உண்டு.எப்படியும் படத்தின் பாதியில்
வில்லனால் கொடூரமாகச் சிதைக்கப்பட்டு செத்துப் போக வேண்டும். அதிலும் கூடுதல்
செண்டிமெண்டுக்காக கர்ப்பஸ்திரீயாக வந்து வயிற்றில் உருட்டுக் கட்டை அடி வாங்கிச்
சாக வேண்டும்.லட்சுமி, விஜயநிர்மலா, சுமித்ரா போல கதநாயகி அந்தஸ்துக்கு உயர்ந்து ஒன்றிரண்டு
பேர் தப்பித்திருக்கிறார்கள்.
பெண்கள்தான் என்று
இல்லை.எம்ஜி.ஆர், சிவாஜி தவிர அவர்கள் காலத்து நடிகர்கள் யாருமே இரண்டாம்
இடத்திலிருந்து மேலே வர முடியவில்லை.காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன் இரண்டாவது
படமான கல்யாண மண்டபத்தில் வில்லனாக நடித்தார்,.ஜெய்சங்கர் இரண்டாம் படமான ‘பஞ்சவர்ணக்கிளி’யில் வில்லனாக ஒரு ரோல் நடித்தார். சரி இருவரும் காலி என்று நினைத்தோம்,நல்லவேளை தப்பித்தார்கள். ஆனால் கடைசி காலத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் இருவருமே வில்லனாக
நடிக்க நேர்ந்தது.ஸ்ரீகாந்த் இரண்டாவது படமான செல்வமகள் படத்தில் இருந்து வில்லனாகி,
வில்லனாகவே உணரப் பட்டு விட்டார்.எம்.ஜி ஆர் படத்தில் இரண்டு கதாநாயகி என்றால்,
சிவாஜி படங்களில் இரண்டு கதாநாயகர்கள், ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., ஏவி.எம்.ராஜன்,
விஜயகுமார்,முத்துராமன் என்று.எல்லாப் படத்திலும் சிவாஜியின் நடிப்பில் இவர்கள்
அமிழ்ந்து போவார்கள்.எம்.ஜி.ஆர் இரண்டாம் கதாநாயகனைப் பெரிதும் விரும்பமாட்டார்.
தானே இரட்டைவேடம் போட்டு விடுவார்.நாளை நமதே படத்தில் ஒரு தம்பியின் பாகத்திற்கு
நல்ல நடனமாடக்கூடிய இளம் நடிகராக கமல்ஹாசனைப் போடலாம் என்று பேச்சு அடிபட்டபோது
ஒரு தெலுங்கு நடிகரைப் போட வேண்டியாதாயிற்றாம்.இயக்குநர் சொல்லியும் கேட்கவில்லை
என்று ஒரு பேச்சு.
’காதல் வாகனம்’ படம் ஊத்திக் கொண்டு விட்டது.ஆனாலும் அந்த
தியேட்டர் முன் கொஞ்ச நேரம் நின்று விட்டு, ’ஒளிவிளக்கு’ தியேட்டர் நோக்கி நடந்து கொண்டிருந்தோம். கணேசன் பின்னாலேயே வந்தான். ”சார் வேகமா வாங்க, ஒரு நடிகை வந்திருக்காங்க லாட்ஜுக்கு,” என்று சொன்னான். என்னை மட்டும் கூப்பிட்டாலும் இன்னும் இரண்டு மூன்று பேர்
போனோம். கொழுக் மொழுக் என்று சிகப்பாய், நன்றாய்த்தான் இருந்தார், சி.ஐ.டி
சகுந்தலா. கையை அசைத்தபடி காரில் ஏறிக் கொண்டிருந்தார்.இருபது முப்பது பேர் நின்று
விசிலடித்துக் கை தட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லார் முகத்திலும் சொல்ல முடியாத
மகிழ்ச்சி.
2 comments:
//இந்த அற்புதமான நடிகை குங்குமம் படத்தில் சிவாஜிக்கு *ஜோடி*யாக நடித்தார்//
இதில் *ஜோடி* என்னும் வார்த்தை, *தங்கை* என்று இருந்திருக்கவேண்டுமோ?
இல்லை...ஜோடியாகத்தான் நடித்தார்....” தூங்காத கண்ணென்று ஒன்று... துடிக்கின்ற சுகமென்று ஒன்று...பாடலை சிவாஜியும் சாரதாவும்தான் பாடுவார்கள்.
Post a Comment