இன்று
புது வார்த்தைகள்
கிடைக்கவில்லை
இதுவரை அதிகம் புழங்காத
வார்த்தையொன்றைத்தவிர
அதுவும்
அகராதியில்
உள்ளதென்பார்
மெலிந்த விரலுக்குள்
சிக்கமறுக்கின்றன
சில அரிசி போன்றே
பொடிக்கற்கள்
இதற்கென்று
காப்பாற்றி வைத்திருக்கும்
கழச்சிக்கற்களைப் போட்டு
அரிசி களைகிறாள்
உலை கூப்பிடுகிறது
சிந்தாமல் சிதறாமல்
நகக்கண் மோதிரம் வளையல்
எதிலும் ஒற்றை அரிசிகூட
ஒளிந்து கொண்டுவிடாமல்
எல்லாவற்றையும் போடுகிறாள்
கழச்சிக் கற்களைப் பத்திரப் படுத்துகிறாள்
எடுத்துக் கொள் அந்தத்
தெரிந்த வார்த்தைகளை
போடு களை கல் நீக்கு
கவிதை சமை
**** **** ****
எப்போதாவது
பொங்கி வழிந்து விடுகிறது
பால்
எப்போதாவது
உடைகிறது
எண்ணெய்க் கலயம்
எப்போதும் ஏச்சு
மனைவி குழந்தை
கவிஞனுக்கு
**** **** ***
சுமந்து சுமந்து
அலுத்த(அ)வை
என் குறிப்புகளிலிருந்துதான்
என் கவிதை எழுதப்படணுமா
குறிப்புணர்ந்தவர்கள்
கொஞ்சம் சொல்லுங்கள்
**** **** ****
எப்போது எடுத்தாலும்
புரட்டிப் பார்த்துவிட்டு
வைத்துவிடுகிற
புத்தகத்தை
இப்போதும் எடுத்தேன்
அடையாள நூலை
அப்புறப் படுத்தி விட்டு
அப்படியே வைத்தேன்
ஏதோ ஒரு நிம்மதி
**** **** *****
மேடையில் நின்று
பேசிக் கொண்டிருக்கிறார்கள்
அவையில் அமர்ந்து
கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஓடி ஓடிப்
படம் எடுக்கிறான்
ஆண்டிப்பட்டி முருகன்.
1 comment:
ஒவ்வொன்றையும் படிக்கும் போது ' விஷுவலாக ' மனதினுள் ஓடுகிறது உங்கள் கவிதை.
Post a Comment