சுந்தரத் தெலுங்கினில்....
அந்த அண்ணனுக்கு இறக்கிற வயசில்லை. வசதிக்கும் எந்தக் குறைவும்
கிடையாது.சிறு வயதில் நீலக் குழந்தையாய் இருந்தவராம்.thanl அதனால் ஜாக்கிரதையாக
வளர்க்கப்பட்டவர் என்பார்கள். ஆனால் பிற்பாடு எல்லாம் சரியாக ஆகி விட்டது
என்றார்கள். பேச்சு சற்றே குழறுவது போல் இருக்கும்.திடீரென சின்ன வயதிலேயே இறந்து
விட்டார்.அவரை மயானத்திற்கு எடுத்துச் செல்லும்போது ஆச்சரியமான கூட்டம்
வந்தது.வந்தவர்களில் நிறையப்பேர் அவருக்காகவே வந்திருந்தது சிலரின் ’’’’’ ‘வாப்பாறிய’ பேச்சிலிருந்தும், பெரும்பாலரின் அசாதரண
அமைதியில் இருந்தும் தெரிந்தது. பொதுவாக மயானக்கரை போகும் வரைதான் அமைதியாய்
இருப்பார்கள்.வெட்டியான் காரியங்களை ஆரம்பித்த பின் ஆளாளுக்கு குழு குழுவாகப்
பிரிந்து சகலத்தையும் பற்றிப் பேசிக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். ஆனால்
தில்லைத்தாண்டவராய சுப்ரமணிய அண்ணன் இறந்த அன்று அவரை எரியூட்டி ஆற்றில் குளித்து
கரையேறிய பின்னர் கூட அனைவரிடமும் சோகம் கலந்த அமைதி இருந்தது. ஆற்றில்
குளிக்கும்போது மழை பெய்தது.முன் மாலை நேர ஆற்று நீர் சூடாகவும் மழை நீர்
குளிராகவும் இருந்த ஒரு அபூர்வக் கணம் அது. அருகில் வண்ணதாசன் குளித்துக்கொண்டிருந்தார்.இருவரும்
அர்த்த பூர்வமாகப் பார்த்து அதைப் பகிர்ந்து கொண்ட நினைவு.
தில்லைத்தாண்டவராயசுப்ரமணியனுக்கு அற்புதமான ஞாபகசக்தி.
ஒவ்வொரு வருஷமும் தேரோட்டம் என்ன தேதிக்கு வந்தது,பொருட்காட்சி என்று ஆரம்பித்தது என்று
மறக்காமல் சொல்லுவார். ஆனி மாசம் ஏதாவது ஒரு திதிப்படித்தான் ஆனித்திருவிழா
கொடியேறி நடக்கும். ஆனால் ஆங்கில வருடப்படி என்றைக்கு வந்தது என்று சரியாய்ச்
சொல்லுவார். அக்டோபர் மாத வாக்கிலோ என்னவோ தேரடியில் நடக்கும் ராமலிங்க வள்ளலார்
ஒரு வார விழாவின் இறுதிநாள்க் கச்சேரிக்கு, நட்சத்திரப் பாடகராக எந்த வருடம் யார் வந்தது என்று சரியாகச் சொல்லுவார்.வீட்டில்
ரேடியோ கிராம் உண்டு. நிறைய ரிக்கார்டுகளும் இருக்கும். பாடல்கள் பற்றியும்
பாடியவர்கள் பற்றியும் எல்லா விஷயங்களும் அத்துப்படி.அவரிடம் நான் இரண்டு முறை
மாட்டிக் கொண்டேன்.பொதுவாக தெருவில் சினிமா சந்தேகங்களை என்னிடம்
கேட்பார்கள்.புதையல் படத்திற்கு இசை யார் என்று ஒருநாள் ‘சபை’க்கு
சந்தேகம் வந்து விட்டது. என்னை சபைக்கு அழைத்து, கேட்டார்கள் நண்பர்கள். நான்
தயங்காமல் ‘சுதர்சனம்’ என்று சொன்னேன்.’விஸ்வநாதன்
ராமமூர்த்தி இல்லையா’, என்ற மணி அண்ணனின் குரல் அமிழ்ந்தே போனது. ஏ.வி.எம்
படத்திற்கு வேறு யார் இருக்க முடியும் என்று நான் வாதிட்டதில். இதைப் பேசிய கொஞ்ச
நாளிலேயே புதையல் படம் சென்ட்ரல் டாக்கீசில் போட்டார்கள்.கூட்டத்தோடு போய்
டைட்டிலில் சங்கீதம்: விஸ்வனாதன் – ராமமூர்த்தி என்று போட்டதும்,
முதுகிலும்,பொடதியிலும் சரமாரியாய் செல்லஅடி விழுந்தது.” பாருல
கண்ணை நல்லா அவிச்சுகிட்டு பாருலே” என்று. அதே போல் மகாதேவி படத்தில் வரும்”மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்வது நமது சமுதாயம்..”என்ற பாட்டு யார் பாடியது என்று சந்தேகம். நான் ஜமுனாராணி என்று அடித்துச்
சொன்னேன்.அன்றும் மணி அண்ணன் இருந்தார். அவர் டி.எஸ்.பகவதி என்றார்.”காமுகர் நெஞ்சில் நீதியில்லை..”பாடல்தான் ஜமுனாராணி
என்றார். நான் சற்று பம்மினாலும் என் பக்கத்திலும் சிலர் பேசினார்கள்.ஆமா ஜமுனா
ராணி குரல் மாதிரிதான் இருக்கு என்றார்கள்.
மறுநாள் காலையில், வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.முன்
தார்சாலில்,வாங்க தம்பி வாங்க என்று ஏக உபசாரமாய் சத்தம் கேட்ட்து. நான் யாராய்
இருக்கும் என்று யோசிக்கும் முன்னரே என் அப்பாவே அடுப்படிக்கு வந்து,”டேய், ஜமீந்தார் ரத்னசபாபதி பையன் உன்னைத்
தேடிட்டு வந்திருக்கானே என்னெடா.. ”என்றார். என்னமும் வம்பிழுத்து வச்சிருக்கியா
என்ற தொனி அதில் இருந்தது.நான் பாதிச் சாப்பாட்டிலேயே எழுந்து போனேன். மணி அண்ணன்
கையில் ஒரு ‘கொலம்பியா’ இசைத் தட்டுடன் உட்கார்ந்து பெரிய அண்ணனுடன்
பேசிக் கொண்டிருந்தார்.”வே, இந்தா பாரும் இந்த மகாதேவி ரிக்கார்டிலயே
போட்டிருக்கு, ம்யூசிக் விஸ்வனாதன் ராம மூர்த்தி, பின்னணி டி.எஸ். பகவதி என்று ரிக்கார்டைக் காண்பித்தார்.வீட்டில்
எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள்.என்னவோ போலிருந்தது. இந்தப் பாட்டை போட்டுக்
கேட்கலாமா அண்ணன், என்று ஏதோ கேட்டு வைத்தேன். மத்தியானம் வாருமே வீட்டுக்கு என்று
சொன்னார்.போனேன்.நிறைய கலெக்ஷன் வைத்திருந்தார்.பாடல்களைக் கேட்டுக் கொண்டே
பேசிக் கொண்டிருந்தார்.
“ வேய், விட்டலாச்சார்யா ஒரு சமூகப்படம் எடுத்திருக்காரு
தெரியுமா உமக்கு,” என்றார். ”ஆமா,
’பெண்குலத்தின் பொன் விளக்கு’, ஆனால் பார்த்ததில்லை” என்றேன்.
அந்த அண்ணனுக்கு ரொம்ப மகிழ்ச்சி. சொந்த ஊரே சொர்க்க பூமி, திருட்டு ராமன், சுமங்கலி,
தெய்வபலம் என்று தெலுங்கு டப்பிங் படங்கள், இந்தி டப்பிங் படங்கள், எல்லாம் பற்றி
உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.கூச்சத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.ஸ்ரீ ராம
பக்த ஹனுமான் ரிக்கார்டு ஒன்று வைத்திருந்தார்.”பாடு
பாடு பாடு குயில் போல அன்புப் பேரைப் பாடு, பாடு ஸ்ரீராம் எனவே....”சுசிலாவின் அழகான பாடலைப் போட்டார்.இசை - விஜய பாஸ்கர். பின்னால்
எஸ்.பி.முத்துராமன் பஞ்சு அருனாசலம்,ஜெய்சங்கர் காம்பினேஷனில் வந்த பல
பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார். நல்ல பாடல்கள். அப்புறம்தான் தெரிந்தது, அவர்
தெலுங்கில் பிரபலமானவரென்று. மணி அண்ணன இது சம்பூர்ண ராமாயணத்தை விட நல்லாருக்கும்
என்றார்.சரிதானே என்று தோன்றியது.ஆனால் சம்பூர்ண ராமாயணத்தின் பிரம்மாண்டம் வேறுதான்
என்று சொன்னார்.”வே, வீரத்திலகம் பார்த்தீரா,” என்றார்.ஆமா பார்த்தேனே என்றேன். ’குருவுனி மிஞ்சின
சிஷ்யலு’ என்று தெலுங்கில் பிரமாதமாக ஓடியதின்
டப்பிங்தான் வீரத்திலகம். விட்டலாச்சார்யா படம்.காந்தாராவ், கிருஷ்ண குமாரி
நடித்தது.கிருஷ்ணகுமாரி சௌகார்ஜானகியின் தங்கை.தெலுங்கில் அப்போது பிரபலமான
நடிகை.வீரத்திலகம் படத்தில் காந்தாராவின் வாள்ச் சண்டைக் காட்சிகள் பிரமாதமாய்
இருக்கும். எம்.ஜி.ஆர் அப்போது வாளை கீழே வைத்துவிட்டு சமூகப் படங்களில்,
திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, பணத்தோட்டம், என்று “டிஷ்யூம், டிஷ்யூம்” படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.(திருடாதே படத்தில்தான் ”டிஷ்யூம்..டிஷ்யூம்...”என்று சண்டைக்காட்சிக்கு பின்னணி இசை தமிழில்
வந்தது. அதற்கு முன்னால், ”டொக்..டொக்.. என்று சிரட்டையை தட்டுவது
போலத்தான் ஒலியமைப்பு இருந்த்து.) அதனால் வீரத்திலகத்தை மிகவும் ரசித்தார்கள்.
எம்.ஜி.ஆரை விட பிரமாதமாக்ச் சண்டை போடுகிறாரே என்று பேசிக் கொண்டதை வாத்தியார்
ரசிகர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டே ஜீரணிக்க வேண்டியதிருந்தது.. காந்தாராவ் பழைய
நடிகர்தான், அவர் படங்கள் நிறைய டப்பிங் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. இது ஹிட்டாகி
திருநெல்வேலி ரத்னா தியேட்டரில் நான்கு வாரம் ஓடியது.
இதன் வெற்றியைப் பார்த்த பின் விட்டலாச்சார்யா தனது
முந்தைய படமான ‘மதன காமராஜன் கதையை ’விஜய குமாரன்’
என்ற பெயரில்( வீர விஜயன் என்றுமிருக்கலாம்) டப் செய்து வெளியிட்ட நினைவு. அதுவும்
நன்றாக ஓடியது.டப்பிங் படங்கள் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் தரும். ஆனால்
“க்ளிக்” ஆக வேண்டும்.சிலசமயம் அதீத நம்பிக்கையுடன்,
சிலர் ‘பைலிங்குவலாக’ தயாரிப்பார்கள். சமயத்தில் ஓடும். பாதாளபைரவி,
மாயாபஜார், அஞ்சலி தேவியின் கண்வனே கண்கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம்,
எல்லாம் நன்றாக ஓடியது. சில சமயம் ஓடாது. ’ராஜ மகுடம்’என்று ஒரு படம். பேசும் படம் பத்திரிக்கையில் விளம்பரமெல்லாம் அடிக்கடி
வந்தது. ஆனால் ஓடவில்லை. அதே சமயத்தில் ‘ ராஜ சேவை’ என்று
ஒரு டப்பிங் படம் என்.டி.ராமாரவ் நடித்தது. நன்றாக ஓடியது. நான் அதை மூன்று முறை
பார்த்தேன், ஒரு முறை என் அண்ணனுடன், அப்புறம் அப்பாவுடன், அப்புறம் மொத்தக்
குடும்பத்துடன்.பாப்புலர் தியேட்டரில் அப்பாவுக்கு எப்போதுமே ஃப்ரீதான்.
நாகேஸ்வர்ராவின் அன்னபூர்னா பிகசர்ஸ் படங்கள் பிரபலம்.
“எங்கள் வீட்டு மகாலட்சுமி” 50 நாள் வரை ஓடியது. அதைத் தொடர்ந்து அவர்து ’மஞ்சள் மகிமை’ படமும் நன்றாக ஓடியது( இரண்டும் 1959-).அடுத்து
வந்த ’தூய உள்ளம்’
( 1961) சுமாராகப் போயிற்று. நாக பஞ்சமி என்று ஒரு டப்பிங் படம் அது நன்றாக
ஓடியது. அதே அச்சலசான கதை, சம்பவங்களுடன் ஏ.வி.எம் படமான நாக தேவதை ( கே. சங்கர்
இயக்கம் அல்லது எடிட்டிங்),. ஓடவில்லை. பீமனை மையமாக வைத்து, ’மகா வீர பீமன் அல்லது சம்பூர்ன மகாபாரதம்’
என்று ஒரு டப்பிங் படம். அதுவும் மூன்று வாரங்கள் வரை ஓடியது.எம்.ஆர்.ராதா
சிசுபாலனாக நடித்திருப்பார். இரண்டாவது வார போஸ்டரில் அவர் படத்தைத்தான் பெரிதாகத்
தனியாகப் போட்டிருந்தார்கள். அதில்,கௌரவர்களை அழிப்பதற்கே சகுனி அவர்களுடன்
சேர்வதாக கதை ஆரம்பமாகும்.மகாபாரதக் கதையைத் தெளிவாகச் சொல்வதில் தெலுங்குப்
படங்கள் நன்றாக இருக்கும்.’நர்த்தனசாலா’
என்று விராட பர்வத்தை மட்டும் சொல்லும் ஒரு படம். சுமாராக இருக்கும். அதற்கு தேசீய
விருது கூட கிடைத்தது. ( ராஜாஜிக்கு, ’சக்கரவத்தி திருமகன்’ என்று
ராமாயணக் கதையை எழுதியதற்கு சாகித்ய அகாடமி கொடுத்தது மாதிரி)
இந்த டப்பிங் அலை கொஞ்சம் ஓய்ந்திருந்தது.விட்டலாச்சார்யா
சற்று தளர்ந்திருந்தார் என்று நினைக்கிறேன்.அவரது மகன் பி.வி.ஸ்ரீனிவாசன்
சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றினார்.மாய மோதிரம் என்று ஒரு படம். படம் பழைய ’ரத்ன குமார்’ தமிழ்ப்படத்தின் ரீமேக் தான்.எம்.ஜிஆர்
துப்பாக்கி சூட்டில் அடி பட்டு படுக்கையில் இருந்த போது..வந்தது. காந்தாராவ்
கதநாயகன், ‘பாரதி’ கதாநாயகி. பாரதி எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட
நடிகை. நாடோடி, சந்திரோதயம், எங்க பாப்பா போன்ற படங்களில் நடித்திருந்தார்.
பாரதியின் தாராளமான ஆடைக் குறைப்புடன் ஒரு பாடல்க் காட்சி வரும். ’லவ் இன் டோக்கியோ’படத்தில் மொஹம்மத் ரஃபி பாடும் “ஜாப்பான்...
லவ் இன் டோக்கியோ....” http://www.youtube.com/watch?v=UNxPGHJr9vk மெட்டில் ”பெண்ணே
பருவ வயதுப் பெண்ணே..”. என்று ஒரு பாடல், அப்புறம் விஜயலலிதாவின்
அதிகத் தாராளமான காதல்க் காட்சி என்று படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மதுரை
தங்கம் தியேட்டரில் நான்கு வாரங்களில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வசூல் செய்து
‘ஒரிஜினல்’ தமிழ்ப்பட சாதனைகளை எல்லாம் முறியடித்தது. டப்பிங்
படங்களுக்கு பிரிண்டுகள் குறைவாகவே எடுப்பார்கள். அதனால் இப்படிப் படங்கள் எல்லாம்
மதுரையில் ஓடிய பிறகே திருநெல்வேலிக்கு வரும். ஆனால் இதற்கு அடிஷனல் பிரின்ட்
எடுத்து திருநெல்வேலியில் வெளியிட்டார்கள். முதல்நாள் அன்று பயங்கரக் கூட்டம்.
சுப்பு ஃபிலிம்ஸ் வெளியீடு. அதன் மேனேஜர் சொக்கலிங்கத்திடம் அநியாய வெட்கத்துடன்
டிக்கெட் கேட்க வேண்டியாதாயிற்று. அவருக்கு, வாயெல்லாம் பல். ஒரே சிரிப்போ
சிரிப்பு.”ஒங்க நேரம்ய்யா என்று பேசிக் கொண்டோம்”.இங்கேயும் படம் ஓடோ ஒடென்று ஓடியது, பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியது.
அதற்கப்புறம், ’கன்ஃபைட் காஞ்சனா’, ’ரிவால்வர் ரீட்டா’ சீஸன்
தொடங்கி விட்டது. விஜயலலிதா, ஜோதி லட்சுமியெல்லாம். வெளுத்து
வாங்கினார்கள்.ஒரிஜினல் தமிழ்ப் படங்களை விட இவை நல்ல பொழுதையெல்லாம் படம்
பார்த்துக் ’கழிக்க’ உதவின. அவ்வப்போது,
ஜி.வி.அய்யரின் “தாயின் கருணை” போல நல்ல கன்னடப் படங்களும் டப் செய்யப் பட்டு
வந்தன. தாயின் கருணை கல்யாண் குமார் நடித்தது.ஜி,கே வெங்கடேஷ் இசையில் பாடல்கள்
மிக நன்றாயிருக்கும்.” பூந்தென்றல் இசைபாட புகழ்ப் பாணர் கவி பாட,
சான்றோர்கள் மடி வளர்ந்த தமிழ் வாழ்க..” என்ற பி.பி.ஸ்ரீனிவாஸ்
பாடல் அருமையானது. http://thiraipaadal.com/album.php?ALBID=ALBOLD01220&lang=ta ( அவசியம் கேளுங்கள்)
ஏ.எல் ராகவன் -ஜானகி பாடும் “நேற்று நடந்தது
நினைவாகும்....” பாடல் அவ்வளவு இனிமையாய் இருக்கும்....”. http://thiraipaadal.com/album.php?ALBID=ALBOLD01217&lang=ta (இதையும் அவசியம் கேளுங்கள்)
இந்தக் கதையின் அப்பட்டமான தழுவல்தான் சிவாஜி கணேசன்
நடித்து பிரமாதமாகப் பேசப்பட்ட ‘தெய்வமகன்’ படம். ஆனால் எந்த
விதமான ‘நன்றி’யும் தெரிவிக்கப்படவில்லை.
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் ஏகப்பட்ட தழுவல்கள் டப்பிங்
படங்கள் வந்தன. ‘கோவாவில் சி.ஐ.டி’. என்றொரு கன்னட டப்பிங். உண்மையில் லக்ஷ்மி
நடித்த முதல்ப் படம் இதுதான். ஜீவனாம்சம் பின்னால் எடுக்கப் பட்டதுதான்.’PANIC
IN BANGKOK’ என்றொரு ஆங்கிலப் படம்
வந்தது. கெர்வின் மேத்யூஸ், மற்றும் பியர் ஆங்லி நடித்தது. இதை காப்பியடிக்காத
மொழிகளே இல்ல எனலாம்.ஹிந்தியில் ‘FAARZ’
ஜிதேந்திரா நடித்த்து. இயக்கம் தந்திரக்காட்சிகள் மன்னன், கேமரா மேன் ரவிகாந்த்
நகாய்ச், வெள்ளி விழா கண்ட படம். தெலுங்கில், ’கூடாஞ்சாரி
116’, கிருஷ்ணா-ஜெயலலிதா நடித்து, இதுவும் வெள்ளிவிழா
கண்ட படம். இதையே தமிழாக்கம் செய்து உரிமையை மாடர்ன் தியேட்டர்ஸார், போட்டி போட்டு
வாங்கி வைத்துக் கொண்டனர்.காரணம் அவர்கள் தமிழில் அதே கதையை “ வல்லவன் ஒருவன்” ஆகப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். வல்லவன் ஒருவன் பாட்டுப் புத்தகத்தின்
பின் அட்டையில் எமது அடுத்த படம் ரகசிய போலீஸ் 116 என்றோ என்னவோ விளம்பரம் வேறு
கொடுத்துக் கொண்டார்கள்.பட்த்தை வல்லவன் ஒருவன் படம் நன்றக ஓடிய பின் வெளியிடவும்
செய்தார்கள். எல்லா எழவையும் நாங்கள் பார்த்தோம். கூடாஞ்சாரி 116 –பாதிப்படம்
ஓடும் போதே ஏகப்பட்ட கலாட்டாவாகி மறுநாளே எடுத்து விட்டார்கள். தமிழ்
ரசிகனென்றாலும் பொறுமைக்கு எல்லையுண்டு இல்லையா.
இதே போல ’பீஷ்மா கர்ணா’ என்று
ஒரு டப்பிங் படம். கர்ணனுக்கு சற்று முன்னால்
வந்தது.அதன் தமிழக உரிமையை, ’கர்ணன்’ எடுத்துக் கொண்டிருந்த
பந்துலு வாங்க முயற்சித்தார், முடியவில்லை
என்று ஒரு செய்தி உலவியது. படம் உண்மையிலேயே நன்றாயிருக்கும்.இது தவிர இந்தில்யிலிருந்து
‘மாய மோகினி அல்லது ஹாத்திம்தாய், ஜிம்போ, நகரத்தில் ஜிம்போ என நிறய வந்து நன்றக
ஓடியது. ஜிம்போவில் “ என் நெஞ்சம் உன்னை அகலாது, என் அன்பையசைக்க முடியாது....” என்று சுஇசில்லவின் பாடல் பிரமாதமயிருக்கும். தமிழ் வசனம் பாடல்கள் குயிலன்
. குயிலன் பாடல்கள் மெட்டுக்கு எழுதினாலும் பிரமாதமாய் இருக்கும். அவரையெல்லாம்
தமிழ் சினிமா கொண்டாடவேயில்லை. அரபு நாட்டு அழகி என்றொரு படம் ‘வடநாட்டு
எம்.ஜி.ஆர்’
மஹிபால் நடித்த்து.இவருக்கும் எம்.ஜி.ஆரைப் போல நாடியில் ஒரு வெட்டு
இருக்கும். வாள்ச் சண்டையும் நன்றாகப் போடுவார்.இதில் குயிலனின் பாடல் ஒன்றை
அடிக்கடி இலங்கை வானொலியில் போடுவர்கள்.
”என்
அன்பைத் தேடுகின்றேன்
மாது எந்தன் மாறன் வா வா
என்னுள்ளத் தாமரைச்
செந்தேன் சுவைக்க ராணி வா வா”. ஏ.எம்
ராஜா, சுசிலா குரலில் இனிமையான பாடல்.
தமிழ்ப் படங்களை இயக்கிய டைரக்டர் வரிசைகளைப் பார்த்தால்
நிறைய தெலுங்கு இயக்குநர்கள் நல்ல படங்களைத் தந்துள்ளது தெரியும்.கே.வி.ரெட்டி,
நாகிரெட்டி, பி.என்.ரெட்டி, எல்.வி பிரசாத், வேதாந்தம் ராகவைய்யா கே.பி.நாக
பூஷணம், நாகேந்திர ராவ்,யோகானந்த், டி..பிரகாஷ்ராவ், கே.எஸ்.பிரகாஷ்ராவ், ஆதுர்த்தி
சுப்பாராவ், சேஷகிரிராவ், தாபி.சாணக்யா,(எங்க வீட்டுப்பிள்ளை, காலம் மாறிப்
போச்சு),புல்லையா, சி.ஹெச். நாராயணமூர்த்தி, சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் என்று நீளமான
பட்டியல் இருக்கிறது. உண்மையில் தமிழின் மிகச் சிறந்த இயக்குநர் ஸ்ரீதரின் தாய்
மொழி சுந்தரத் தெலுங்குதான்.
4 comments:
அந்தக் காலத்துக்கே போய்விட்டேன். இப்படி ஏங்க வைத்துவிட்டீர்களே:). நல்லவேளை லின்க்
கொடுத்திருக்கிறீர்கள்.கேட்டு மகிழ மீண்டும் ஒரு வாய்ப்பு. காந்தராவின் கம்பீரம் மனதுக்குப் பிடித்த கம்பீரம்.பல மஹாபாரத் நிகழ்ச்சிகள் தத்ரூபமாக எடுத்த வல்லுனர்கள் தெலுங்குத் திரைத் தொழிலைச் சேர்ந்தவர்கள். ராஜசேவை படம். அதில் கண்டசாலாவின் குரல்
முடியாது சொல்ல முடியாது என்று ஒரு பாடல் வரும்.அதில் கண்டசாலாவின் மழலையில் முதியாது என்றே ஒலிக்கும். உங்களுக்கு இவ்வளவு அருமையான நண்பர்கள் கிடைத்திருப்பது மிகவும் அருமை.
நானும் இந்தப் பாடலை நினைவுக்குக் கொண்டு வர முயன்றேன்...யார் இதைப் படிக்கப் போகிறார்கள் என்று நினைவு படுத்தும் முயற்சியைக் கை விட்டேன்.. உங்கள் வரிகள் மகிழ்ச்சியாக இருக்கிறது.. நடக்காது ஜம்பம் பலிக்காது.. என்னை ஏமாற்றவே உன்னால் முடியாது.. லீலாவின் குரல் என்று நினைவு..
//முன் மாலை நேர ஆற்று நீர் சூடாகவும் மழை நீர் குளிராகவும் இருந்த ஒரு அபூர்வக் கணம் அது.//
ஆற்று குளியலோடு மழை அபூர்வம் தான்
நல்ல அலசல்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_30.html) சென்று பார்க்கவும்...
நன்றி…
Post a Comment