Saturday, June 23, 2012

கண்ணதாசன் விருது ... உரை(1)


aஅன்பார்ந்த நண்பர்களே
அனைவருக்கும் என் வணக்கம்.
கண்ணதாசன் என்ற பெயர் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம்பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஏன் எழுபது ஆண்டு என்று கூடச் சொல்லலாம். அரசியலிலும் ஆன்மீகத்திலும்,இயல், இசை நாடகம் என்று முத்தமிழிலுமந்த அகரக் கவிஞனின் பெயரைத் தவிர்த்து விட்டு எந்த தமிழ் வரலாறும் இருக்க முடியாது. அவர்பெயரும் கவித்துவமும், அவர் பாடல் வரிகளிலேயே சொல்வதானால்
          கல்லில் வடித்த சொல் போலே -அது        
                 காலம் கடந்த இன்பநிலை..
பொதுவாக பெயர்கள் அகராதியில் இடம் பெறுவதில்லை. அதற்கு ஏதேனும் இலக்கண வரையறைகள் இருக்கிறதோ என்னவோ. கண்ணதாசன் இலக்கணமில்லை , மீண்டும் அவர் வரிகளிலேயே சொன்னால்
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ..என்று அவர் இலக்கணம் மீறிய இலக்கியமானவர்
கண்ணதாசன் என்ற பெயர் தமிழ் அகராதியில்,இருக்கிறதாஇல்லையா என்பதல்ல விஷயம். ஒரு வேளை தொடையகராதியில் கண்ணதாசன் பெயர் இருந்தால் அதற்கு எதுகையாக வண்ணதாசன் என்ற பெயரும் கண்டிப்பாய் இடம் பெறும்.இந்த நேரத்தில் என்னையும் என் வரிகளையும் வளர்த்தெடுத்த வண்ணதாசன் என் நினைவுக்கு வருவதில் வியப்பொன்றும் இல்லை. இந்த விருதை அவருக்கே நான் சமர்ப்பிக்கிறேன். அந்த வகையில் கண்ணதாசன் கழகம் தரும் இந்த பெருமை மிக்க விருதை வண்ணதாசன் இரண்டு முறை பெற்றவராகிறார்.
     சக இருதயர்கள் உவப்பத் தலைக்கூடி,ஒன்று சேர்ந்து, சங்கம் அமைப்பது தொன்று தொட்டு வரும் மரபு போலிருக்கிறது..அதற்கு ஆண்டவனும் அரசனும் தலைமை ஏற்றதாகவும் சொல்லுவார்கள்.ஆனால் இந்த மாதிரியான மன்றங்களும், சங்கங்களும் அந்தக் காலத்திலேயே மக்கள் மத்தியில் முதலில் தோன்றி பின்னரே அரசப்பிரதானிகளின் கவனத்திற்குச் சென்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் சாதாரணர்களாகவும் நாடோடிகளாகவும் இருந்த பாணர்களே நல்ல கவிதைக்காரர்களாக இருந்திருப்பதாக சமீப ஆய்வுகள் சொல்கின்றன. பின்னரே ஏதோ ஒரு அரசியல் மாற்றம் காரணமாக புலமை மேட்டிமைக்காரர்களின் சொத்தாகிறது.கண்ணதாசன் நிச்சயமாக ஒரு பாணணாகத்தான் இருக்க வேண்டும். அவன் பாடல்களும் பாடு பொருளும் அதைத்தான் சுட்டுகின்றன. அவனைக் கொண்டாடுவோரில் பலதரப்பினரும் இருப்பினும் அவனிடம் அதிக அந்நியோன்யம் காட்டுபவர்கள் கனக ராஜும் காளிதாஸும், சிங்கை முத்தும்,முத்தையாவும் கிருஷ்ணகுமாரும்,போன்ற அற்புதமான ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்.
     அவர்களால் ஆதுரத்துடன் ஆரம்பிக்கப் பட்ட இந்த ‘கண்ணதாசன் கழகம்இன்று கண்ணதாசனைக் கொண்டாடும் விதமாக அவரில் தோய்ந்த அவரது வழித்தோன்றல்களை விருதளித்துக் கௌரவிக்கிறது.அவர்கள் அத்தனை பேருக்கும் என் நன்றியைப் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன்.என்னுடன் விருது பெறும் திரு ஆர்.பி. சங்கரன் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்கிறேன். அவருடன் விருது பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த அற்புதமானவர்களின் சங்கப்பலகையில் ஒரு ஓரமாகவேனும் நான் அமரும் தகுதி கொண்டவன்.எனது எட்டுவயதில் இருந்து நான் கண்ணதாசனை யாரென்று அறிவேன்.நாடோடிமன்னனும் அதைத் தொடர்ந்து ‘மாலையிட்ட மங்கையும்கண்ணதாசனை என் பால பாடத்தில் சேர்த்தன.அதற்கு என் சொந்தச் சகோதரர் மீனாட்சி சுந்தரம் தான் முக்கிய காரணம்.அன்று நான்காம் வகுப்பில், எங்கள் திராவிடப் பொன்னாடே பாடலை..... அபஸ்வரமாகப்பாடி அதற்காகவும், அதன் அப்போதையத் தீண்டாமைத் தன்மைக்காகவும் பாதியிலேயே நிறுத்தச் சொல்லி விட்டார் ஆசிரியர்
இந்த நேரத்தில் நான், கண்ணதாசனின் தீராப்புதையலைத் தேடித்தேடிப் பதிப்பிக்கும் திரு ஆர்.பி சங்கரனிடமொரு வேண்டுகோளை வைக்க நினைக்கிறேன்.கண்ணதாசனின் திரைப்படங்களின், திரைக்கதை வசனங்களை நூலாகக் கொண்டு வரவேண்டும். எனக்குத் தெரிந்து,பெரும்பாலான சிவாஜி சினிமாக்களைத் தவிர “சிவகெங்கைச் சீமையும் மதுரை வீரனும்,ஒலிச்சித்திரங்களாக இசைத்தட்டு வடிவில் வந்துள்ளன.அவையெல்லாம் இப்போது கிடைப்பதில்லை.இரண்டுமே திரைக்கதை அமைப்பின் உச்சம் என்று சொல்லுவேன்.சிவகங்கைச் சீமைதான் தமிழில் வெளிவந்த உண்மையான ஒரே ஒரு வரலாற்று சினிமா. மற்றவையெல்லாம் ஜெய்ப்பூர் மாளிகைகளில்,ஜோத்பூர் ஆடை அணிகலன்களுடன் தமிழ்க் கலாச்சாரத்தை அடகு வைத்தவை.கண்ணதாசன் தமிழ் உரை நடைக்கு ஆற்றியிருக்கும் பெரும் பங்களிப்பை அவை இன்னும் உறுதிப் படுத்தும்.அந்தக் காரியத்தைதிரு சங்கரன் அவர்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கண்ணதாசனின் திரைக்கதைகள நான் ஏன் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அவர் ஒவ்வொரு பாடலையுமே அந்தப் படத்தின் திரைக்கதையை மனசுக்குள் ஓடவிட்டுக் கொண்டே எழுதியிருக்கும் அதிசயத்தைக் கண்டு கொண்டவன் என்றுதான்.எந்த படத்தின் பாடலாக இருந்தாலும், அதன் காட்சி விளக்கத்தைக் கேட்டபின், அவர் பல்லவியும் சரணமும் சொன்னால் அதுவே கதையை விளக்கியும் நகர்த்தியும் விடும். ஆயிரக்கணக்கான பாடல்களைச் சொல்லலாம்.ஆனால் ரசம் மிக்க சிலவற்றைச் சொல்ல வேண்டும்.
சூடிக்கொடுத்தவள் நான் தோழி
சூட்டிக் கொண்டவளே நீ வாழி
பாடிக் கொடுத்தவள் நான் தோழி
பாட்டை முடித்தவள் நீ வாழி.- டீச்சரம்மா என்ற படத்தின் பாடல்.கதைக் கேற்ற பாடல் என்பதிருக்கட்டும். அதற்குள் தொன்மமான படிமமாக ஆண்டாளை நினைவு படுத்திவிடுகிறார்.இதே போல் அபூர்வ ராகங்களில்,
தலைவன் திருச்சானூர் வந்து விட்டான்
மங்கை தருமதரிசனத்தைத் தேடுகின்றான்.
அலமேலு அவன் முகத்தைப் பார்ப்பாளோ
 அவனோடு திருமலைக்குச் செல்வாளோ-என்று ஸ்ரீனிவாச புராணத்தை நடத்திக் காட்டிவிடுவார்.இதில் அற்புதமென்னவென்றால் ஆண்டாளின், அலர்மேல் மங்கையின் நிறவேறாக்காதலை கவிஞர் எப்போதும் அசை போட்டுக் கொண்டிருப்பதுதான்.
அந்தப் பெண்களுக்காக இவர் உருகுவது ஒரு பாட்டிலா இரண்டு பாட்டிலா,,,(பாட்டில் பாட்டிலாக உருகுவார், எங்களைப்போல் கைக்கிளையான்களையும் பருக வைப்பார் உருக வைப்பார் அது வேறு விஷயம்)
கனியை மரமறியும் காதலை மனமறியும்
கனிவிருந்தால் அல்லவோ கன்னியர் நிலைதெரியும்
ஆண்டவனுக்கொரு மனது ஆண்களுக்கிரு மனது
தோன்றிய நாள்முதலாய் துடிப்பதுதான் பெண் மனது.

என்று ஒரு சாதாரணப் பெண்ணையும்,  “சித்திரத்துல் பெண்ணெழுதி சீர் படுத்தும் மாநிலமே ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயோ.....”/ அன்னையென்றும் தந்தையென்றும் ஆர்ப்பரிக்கும் பெரியோரே/இன்னமுத தெய்வமெல்லாம் ஏட்டில் வரும் தேன் தானோ/மன்னர் குல கன்னியரும் கண் கல்ங்க நேருமென்றால்/ மண்டலத்தில் பெண்களுக்கே வாய்த்த விதி இதுதானோ..என்று ராணி சம்யுக்தைக்கும் குரல் கொடுப்பது கண்ணதாசனே.ராணி சம்யுக்தா படத்தின் வசனமும் ராஜா தேசிங்கு பட வசனமும் ‘மாநில சுயாட்சி என்று முழங்குபவர்கள் மனப்பாடம் செய்ய வேண்டியவை.
ஆனால் உண்மையில் இந்த காதல்ச் சோகம் பெண்களுக்கு மட்டும்தானா ஆண்களுக்கில்லையா. பெண் அடக்கமாய் இருந்து விடுவாள் ஆண் அழுது அரற்றி அவளைப் பற்றிக் காவியம் பாடுகிறான். காலம் மாறினும் தேகம் அழியினும் கதையில் கவிதையில் கலந்தேவாழவைக்கிறான்.கண்ணதாசன் அப்படி ஒரு  ஆத்மா.
பழகிய காதல் எண்ணிப் பள்ளியில் தனியே சாய்ந்து
அழுவது சுகமென்பேன் நான், அறிந்தவர் அறிவாராக...என்று எங்களையெல்லாம் கூட்டணி சேர்த்துக் கொள்கிறார்.இது அவரது தனிப்பாடல்.திரையிசையில் கேட்கவே வேண்டாம்.அவரது நெஞ்சில் குடியிருக்கும் காவேரி எங்கெல்லாம், எல்லா அணைகளையும் மீறிப் பாய்கிறாள் தெரியுமா.
நாயகியே எனது காவிய எல்லை /நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை என்றும்,
உதயமாகும் நேரமென்று கிழக்கினில் சென்றேன்/ அவள் பொழுது போகும் நேரமென்றுமேற்கினில் சென்றாள்/ அஸ்தமனச் சூரியன் என்று அவளைச் சொல்லலாம் –நான் அவளை வெல்ல முடியவில்லை விதியை வெல்லவா.என்று விதியையும் அவளையும் நினைத்து ஏங்கும் எத்தனையோ கவிஞர்களைப் படைத்து தனக்கு பதிலியாய் உலவவிட்டுச் சென்றிருக்கிறான் அரை நூற்றாண்டே வாழ விதிக்கப்பட்ட இந்த அற்புதக் கவிஞன்.
கண் போல் வளர்ப்பதில் அன்னை-அவள் கவிஞனாக்கினாள் என்னை என்றும்
இங்கு
நானும் கவியாக யார் காரணம் அந்த நாலும் விளையாடும் விழிகாரணம்.... என்று என் கல்லூரி நோட்டுப்புத்தகத்தின் மூலை முக்கெல்லாம் அவனது வரிகளே ஆட்சி செலுத்தின அந்தப் பதின் பருவத்தில்...அப்போது நான் எழுதிக் குவித்தவை ஏராளமாக நாட்குறிப்பில் மக்கிப் போய்க் கிடக்கிறது.
நாங்கள் எழுதிய புத்தகம் /நானே சொன்ன தத்துவம்/ இங்கே அந்தப் புத்தகம்/ எங்கே அந்தத் தத்துவம்/
ஒரு பக்கம் பார்த்தால்கற்பனை/மறு பக்கம் பார்த்தாலற்புதம்/
அதை முற்றும்பார்க்கும்முன்னமே/ ஏன்மூடச்சொன்னாய் தெய்வமே
என்று கண்ணதாசன் எழுதிய பாடலைப் போல அந்த மகா கலைஞனை முற்றும் பார்க்கும் முன்பே....ஏன் மூடச் சொன்னாய் தெய்வமே என்று பேராசை பிடித்த தமிழ் மனம் தவிக்கிறது.
கண்ணதாசனின் பன்முக ஆளுமையைப்பற்றி அவனது திரைப்படப் பாடல்களிலிருந்து மட்டுமே நிறுவிக் கொண்டேபோகலாம்.அப்படியொரு ஆளுமையின் பெயரால் வழங்கப் படும் இந்த விருதுனைப் பெறுவதில் உள்ளபடியே நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இதை வழங்கும் “கண்ணதாசன் கழக “ அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. கண்ணதாசன் சொல்வாரே கண்கள் அருகே இமையிருந்தும் கண்கள் இமையைப் பார்த்த்தில்லைஅது போலவோ இல்லை எங்கள் பக்கத்தில் சொல்வார்களே,நல்ல மாடு உள்ளூரிலேயே விலை போகும் என்று, அது போலவோ, உள்ளூரில் அடையாளமே தெரியாத என்னை, கவிஞர் தேவமகள் இலக்கிய விருது,கவிஞர் சிற்பி இலக்கிய விருது என விருதுகள் வழங்கி எப்போதும் அடையாளப்படுத்துகிற கொங்கு மண்டலத்திற்கும் குறிப்பாகக் கோவை நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி வணக்கம்.


3 comments:

Unknown said...

மறுபடியும் வாழ்த்துகள் ஐயா.

Tadrupa said...

வணக்கம் சார்,
நேரில் கேட்ட உரை என்பதால் படிக்கும் போதும் உங்கள் குரலே ஒலிக்கிறது
அன்புடன்
தேவ.சீனிவாசன்

Tadrupa said...

வணக்கம் சார்,
தங்கள் கவனத்திற்கு
சிவகங்கை சீமை திரைக்கதை புத்தகமாக ஏற்கனவே வெளியாகி விட்டது
அன்புடன்
தேவ சீனிவாசன்