எத்தனை கவிதைகள் எத்தனை முகங்கள் - கலாப்ரியா
அன்பார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
சுகுமாரன் 38 ஆண்டுகளாக எழுதி வருகிறார். சற்றேறக் குறைய அதே ஆண்டுக் காலமாக என் நண்பராயுமிருக்கிறார்.அவரது கோடை காலக் குறிப்புகள் நூல், அப்போதைய, ட்ரடில் அச்சகத்தின் உச்ச பட்ச சாத்தியங்களுடன் அழகான அச்சு, ஓவியங்களுடன் ஒரு நிறைவான பதிப்பாக வந்தது. 1979ல் தொடங்கிய என் புத்தகச் சேகரிப்பின் 39-ஆவது புத்தகம் அது. (அப்படி எண்களெல்லாம் போட்டு வைத்திருக்கும் காலம் அது.) அதற்கு முன்னரே அவரது கவிதைகளை கணையாழி, ழ, ஸ்வரம், மீட்சி என்று படித்திருக்கிறேன். அவற்றைத் தொகுப்பாகப் படிக்கும்போது அந்தக் கவிதைகள் அவர் மீது ஏற்படுத்திய ஒரு சவாலான மதிப்பு இன்னும் குறையவே இல்லை. கிட்டத்தட்ட அதே நேரத்தில் என்னுடைய கவிதைகள் குறித்து ‘பாலியல் மற்றும் வன்முறை’ (செக்ஸ் அண்ட் வயலன்ஸ்) சார்ந்து விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. சுகுமாரனின் மொழியையும், அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் கவிஞர் பிரம்மராஜன் வன்முறை சார்ந்த ஒரு மொழியாகக் குறிப்பிட்டிருந்தார்.அதனாலும் அவர் கவிதைகளின் பால் ஒரு அதிக ஒட்டுதல் ஏற்பட்டது. அதற்கு இன்னொரு காரணமும்உண்டு. சுதந்திரத்தை நோக்கி நகரும் கவிதைப் போக்கில் அவ்வப்போதையை மொழியை மீறியும் மறுத்துமே புது மொழி அமைவது சரிதானா என்ற வாதப் பிரதிவாதத்தில், என்னுடன் சேர்ந்து நிற்க, அல்லது சேர்ந்து வாங்கிக் கட்டிக் கொள்ள, இன்னொருவர் இருக்கிறார் என்று நினைத்ததும் ஒரு காரணம்..
ஆனால் சுகுமாரன் கவிதைகள் மிகுந்த தர்க்க அடிப்படை கொண்டவை. அவர், தோன்றியவுடன் பதிவு செய்து உலவ விட்டு விடுகிறவரில்லை.தர்க்கச் செறிவுடனும், இறுக்கமான வார்த்தைச் சேர்க்கையுடனும் கவிதை தன் பூரிதமான உருவை எட்டும் வரை காத்திருப்பவர். அவரது சில கட்டுரைகளில் கவனித்தால் தெரியும். அவர் சொல்ல வருகிற ஒரு செய்தி தர்க்கத்திற்கு அப்பாற் பட்டதோ என்று தோன்றினால், ”சற்று குதர்க்கமாக யோசித்தால், அல்லது வகைப்படுத்தினால்” என்று குறிப்பிட்ட பின்தான் செய்தியைச் சொல்வார். தர்க்கத்திலும் குதர்க்கத்திலும் அவ்வளவு கவனமானவர். அவரது ’இசை தரும் படிமங்கள்’என்ற கவிதையின் நான்கு கவிதைகளில், முதலாவதாக உள்ள ஒரு கவிதை மட்டுமே முதலில் கணையாழியில்,வெளிவந்தது. ஆனால் அந்தத் தலைப்பின் கீழ் மீதமுள்ள மூன்றும் ’கோடை காலக் குறிப்புக்கள்’ தொகுப்பில் சேர்ந்து வெளி வந்தன. அவை எல்லாம் கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளியில் எழுதப் பட்டவை.( சில தொகுப்பில் அவர் கவிதை எழுதப்பட்ட வருடம் மாதங்களைக் குறிப்பிடுவார்) இன்று அவற்றை வாசிக்கும் ஒருவருக்கு அந்தக் கால இடைவெளி தெரியாது.அதன் தொனி ஒரே தளத்தில் அமைந்திருக்கும். காரணம், இசை. துயரமும் பச்சாதாபமும் புகையாய்ப் படிந்த தன் சுயத்திலிருந்து அவரை மீட்டு வெளிக்காற்றின் மணங்களுக்கும் அற்புதங்களுக்கும் அவரை ஒப்புக் கொடுக்கும் இசை. அந்தப் படிமங்களை அவர் மீட்டியிருந்த அல்லது இசைத்திருந்த விதம்தான் கால வேறுபாடு எதுவும் தோன்றாமையின் காரணமாயிருக்கும். என்றைக்குமான ஸ்வர சுத்தமான மொழி சுகுமாரனுடையது.
பிரம்மராஜன் குறிப்பிடுவது போல, ”பொதுப் பார்வையிலிருந்தும், தனி மனிதப் பார்வையிலிருந்தும் கவிதைகளுக்குள் பெறப்படும் வாழ்வின் அம்சங்கள் சுகுமாரனின் மனச் சூறாவளியில் இடம் மாறிப் போகின்றன; உருமாற்றம் அடைகின்றன. இந்த உருமாற்றம் விளைவிக்கும் கவிதை வரிகள் வேறு எவரைப் போலவும் இவரை இல்லாதிருக்கச் செய்கின்றன.”
அவர் 1983 மார்ச்சில் எழுதிய ’பின் மனம்’ என்று ஒரு கவிதை.தனது முன் மனத்தையும் –பின் மனத்தையும் எதிர் எதிராக வைத்து ஒரு கவிதா உரையாடலை நிகழ்த்தியிருப்பார். அந்தக் கவிதையை வாசிக்கலாம் என்று நினைக்கிறேன்.
பின் மனம்
சிலசமயம்
பெருங்காற்றுக்கும் பயப்படாமல் ஒரு இலையுதிர் கால மரம் போல
( கிளைகளில் சொற்களாய் தளிர்த்து மிரள்வேன் பின்பு)
சிலசமயம்
வரும் போகும் கால்களில் மிதிபட
டீக்கடைக்காரன் உலரப் போட்ட ஈரச்சாக்கு போல
(பரிவற்று வறண்டும் போவேன் பின்பு)
சிலசமயம்
பிரயாண நோக்கங்கள் துறந்த இலவஞ் சிறகு போல
( மூலைச் சிலந்தி வலையின் தனிமையில் தவிப்பேன் பின்பு)
சில சமயம்
சகல துக்கங்களையும் இறைக்கும் சங்கீதம் போல
(தற்கொலையில் தோற்றவனின் மௌனமாவேன் பின்பு)
சில சமயம்
கண்ணாடியில் காத்திருக்கும் என் புன்னகை
(கால்களை விழுங்கிய விலங்கின் வாயிலிருந்து கையுதறி அலறும் குழந்தை முகம் பின்பு எனக்கு)
டீக்கடைக்காரன்,வீதியில் காயப் போடும் சாக்கு என் காலிலும் மூளையிலும் பல சமயங்களில் ஈரத்தை அப்பியிருக்கிறது. பல வேளைகளில் சாக்கு எடுக்கப்படாமல் வீதியோடு வீதியாக ஒட்டப்பட்டது போலக் கூடக் கிடக்கும். என் சிந்தனையிலும் அது ஒற்றைப் படிமமாய் ஒட்டிக் காய்ந்து கிடந்ததும் உண்டு. ஆனால் சுகுமாரனிடம் அது இப்படியொரு அற்புதமான கவிதையில் வித்தியாசமாக வெளிப்பட்டிருப்பதைத்தான் அவர் மீதான என் சவாலான மதிப்பு என்கிறேன். ”சில தருணங்களை நிலை நிறுத்தி காலத்தின் பகுதியாக்குவதும் அனுபவப் பொதுமையாக்குவதுமே கவிஞனின் பணியாகிறது.” என்று கவிதையில் பேருலகைத் தரிசிக்கும் சுகுமாரனை நான் கொண்டாடுவது இதனால்த்தான்.இந்தத் தொகுப்ப்ல் “அதற்குள்...” என்று ஒரு கவிதை.நான் அனுபவித்த தற்கொலை முயற்சி அவருக்கு இருந்ததோ என்னவோ தெரியாது..ஆனால் அது பற்றி என்னால் யோசிக்கக் கூட முடியாத வரிகளைக் கொண்டது இக்கவிதை. சாவா/ சாவுக்கு விரட்டும் கணங்களின் வாழ்வா/காரணம் எது? தெரியவில்லை./ இருப்பினும்/இரண்டாவது தற்கொலை/ முதலாவதைப் போல அரைகுறையாய் முடியாது/ அபத்தமாக இருக்காது/அது/ கனவின் பனியற்றதாக இருக்கும்/ அது/ நம்பிக்கையின் கானலற்றதாக இருக்கும்/அது/ மரணத்தின் நிச்சயமாக இருக்கும்.அது/ வெஞ்சினத்தின் கருணையாக இருக்கும்....இப்படி நீளும் இக்கவிதையில் ’வெஞ்சினத்தின் கருணை’ என்ற சொற்சேர்க்கை அபாரமானது, என் மதிப்பீடு சரியாமல் பர்த்துக் கொள்பவை இப்படியான அற்புதங்கள்தா
இதிலிருந்து
முப்பதாண்டுகள் கடந்தும் அவர் எனக்குச் சவாலானவராகவே தெரிகிறார்.ஏனெனில் “அவரது
கவிதைகளில் புதிய அனுபவங்களுக்கான நிரந்தர வேட்கையுடன் இயங்கி வருபவர்,” அவர். இந்தத் தொகுப்பின் முன்னுரையில் அவர்
குறிப்பிட்டிருக்கிறார்.,”அனுபவங்களை முன் வைப்பதில் காட்டிய மெல்லிய தயக்கங்களை இந்தத்
தொகுப்பிலுள்ள கவிதைகள் கடந்திருக்கின்றன. என்னை நானே மீறிச் செல்லும் செயல் அது”. என்று. எனக்குத் தெரிந்து அவர் ஒவ்வொரு தொகுப்பிலும்
தன் முந்திய கவிதைகளை மீறியும் தாண்டியும்,மேலும் சிறப்பான கவிதைகளை நோக்கிய
பயணியாகச் செயல் படுவதாகவே தெரிகிறது. ஆனாலும் அவர் சொல்வதற்கேற்ப இந்தத்
தொகுப்பில் உள்ள ‘ஆணொரு பாகினி என்ற கவிதையை அவர் அவரை மீறிச் செயல்
பட்டிருப்பதற்கு உதரணமாகக் குறிப்பிடலாம்.
இன்னொன்று அவருடைய ’இடக்கரடக்கல்’ காரணமாகக் கூட அவர் இவ்வாறு சொல்லியிருக்கலாம்.
அவருடைய
இடக்கரடக்கல் பற்றி ஒன்றைக் குறிப்பிட வேண்டும். காலச் சுவடு இதழில் அவர்
புதுக்கவிதைகளின் எழுபதாவது ஆண்டையொட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். “அறுபதாயிரம்
காதல் கவிதைகளும் உதிரியான சில குறிப்புகளும்” என்று ஒரு கட்டுரை. இந்தக் கட்டுரையை வேடிக்கையான
பார்வையுடன் எழுத ஆரம்பித்து அது காரியார்த்தமான எல்லைகளுக்குள் சென்றிருப்பதாக
அவரே குறிப்பிட்டிருக்கிறார். இந்த நீண்ட கட்டுரையில் அவரது ‘காதல் கவிதைகள்’ பற்றி அவர் குறிப்பிடவில்லை. அதை அவர் செய்ய
முடியாது.வேறு யாராவது இதே கட்டுரையை எழுதியிருந்தால். முதலில் வரும் குற்றச்
சாட்டு ‘சுகுமாரனை’
விட்டு விட்டீர்கள் அல்லது
குறிப்பிடத்தகுந்த விடுபடல் சுகுமாரனின் கவிதைகள் என்று சொல்லியிருக்கலாம்.
Music is a moral law. It
gives soul to the universe, wings to the mind, flight to the imagination, and
charm and gaiety to life and to everything. ~Plato~ என்று ப்ளேட்டோ சொல்வதை காதலுக்கும்
பொருத்திப் பார்க்கலாம்.குறைந்த பட்சம் சுகுமரனின் காதல் கவிதைகளுக்கு கட்டாயம்
பொருத்திப் பார்க்கலாம்.ஏனெனில் இரண்டைப் பற்றியும் அவர் தோய்ந்து தோய்ந்து
கவிதைகள் எழுதியுள்ளார்.
நீருக்குக்
கதவுகள் இல்லை என்கிற இந்தத் தொகுப்பின் தலைப்பு தன்னுள் ஒரு வரியாய் வரும்
கவிதையைக் கவனிக்கலாம்.
நீராலானவள்
எந்தத் தடையும் இல்லாமல்
உள்ளே புக முடிகிறது
ஒரு மீனைத்
தண்ணீர் வரவேற்பது போல்
அனுமதிக்கிறாய்
எந்தத் தயக்கமும் கொள்ளாமல்
வெளியில் வர முடிகிறது
ஒரு நீர்த்தாவரத்திற்குத்
தண்ணீர் விடை கொடுப்பது போல
வழியனுப்புகிறாய்
மீண்டும் நுழைந்து
மீண்டும் வெளியேறித்
தெரிந்து கொண்டவை
இரண்டு உண்மைகள்
மீனுக்கும் தாவரத்துக்கும்
நீரின்றி வாழ்வில்லை
நீருக்கு கதவுகளும் இல்லை.
பெண்ணுறவை இயற்கை மீதான மோகமாகக் காட்டிய கவிஞர்கள் எனச் சிலரை சுகுமாரன்
குறிப்பிட்டு தன்னையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். முதலில்
சேர்க்கப் படவேண்டியது அவர்தான்.
இத்தொகுப்பில் ’நந்தனும் மானஸியுமாக’ அவரது காதல் உலகே விரிந்திருக்கிறது என்று
கொள்ளலாம்.இத்தொகுப்பின் முதல்க் கவிதையான மழையில் திளைக்கும் பெரு நிலம் கவிதையை,
அதிவீரராம பாண்டியன் மொழியில் சொன்னால். “சாயுஜ்யம்”, (அல்லது இடக்கரடலுக்காக ஆங்கிலத்தில்சொன்னால் ’ஆர்காஸ்ம்’) பற்றிய
கொஞ்சம் வலி சேர்ந்த ஒரு காதல்க் கவிதையாகக் கொள்ளலாம். ‘உடன் படுக்கை விதிகள்’ கவிதையையும் சொல்லலாம். ஆனால் இதிலும், கவிதை முடியும்
போது ஒரு முரணைச் சுட்டி முடிக்கிறார். இது அவருக்கே கை வந்த கலை.
புது உலகின் தொன்மரபுகளை
உருவாக்கும் ஒரு கவிஞர் சுகுமாரன்.மூட்டைப் பூச்சியை தன்னுடன் எடுத்துச் செல்லும்
ஒரு கவிதையில் (இங்கு எளிமையான அனுபவம் அழகான கவிதையாகி இருக்கிறது. ஒருவேளை முன்
காலங்க்ளென்றால் சுகுமாரன் இந்த எளிய அனுபவத்தைக் கவிதையாக்காமல் விட்டிருப்பாரோ
என்னவோ).இதில் வருகிற மூட்டைப் பூச்சி வெளிப்படுத்தும் தற்காப்பு வாடை ஒரு புதிய
தொன்மமாகத் தோன்றுகிறது. (நரியும் தன்னைப் பிடிக்க வருபவர்களிடமிருந்து தப்பிக்க
கெட்ட வாடையை காற்றில் கரையவிட்ட படியே ஓடும் என்பார்கள்.என் பாஷையில் இதைச்
சொல்லியிருப்பேன் ஆனாலும் சுகுமாரன் கவிதைகள் படித்ததால், கவிதைகள் பற்றிப்
படிப்பதால் கொஞ்சம் அவையடக்கம் பேண வேண்டியிருக்கிறது.)
அது போலவே ‘சிந்துபாத்தின்
கடற்பயணம்’ கவிதை. இதில் வருகிற ‘கன்னித்தீவு’ ஒரு புதிய தொன்மரபு. இது சற்றே எளிமையான, குழந்தை உலகை
விவரிப்பது போல நகர்ந்தாலும். முடிவில் ஆறே ஆறு வார்த்தைகள், பெரியவர்கள் உலகினதாகத்
திருப்பிப் போட்டு விடுகிறது கவிதையை.(கவிதை பக் 19) இத்தாலிய நடிகை மோனிகா பெலூசியையும் மலேனா திரைப்படத்தையும் கூட ஒரு
வகையில் தொல்லியல்ச் சித்திரமாக ஆக்கி விடுகிறார். ‘PAASSION OF CHRIST’ படத்தில் மகதல நாட்டு மேரியாக மோனிகாவை பார்க்கும்போது
இந்தக் கவிதை நினைவுக்கு வந்தது.இந்தக் கவிதையில் தொன்மமும் நவீனமும் மாறி மாறி
வந்து ஒரு அபூர்வ அனுபவமாக கவிதை முடியும். கவிதையாக்கத்தின் பூடக வசீகரங்களை
நன்கு அறிந்தவர் சுகுமாரன்.கலாச்சாரத்தின் பகுதியாக மொழியைக் கருதுபவர் அவர்.
கவிதை புதிய அனுபவங்களுக்கான
நிரந்தர வேட்கையுடன் இயங்குவது என்றும், என்னால் உணர முடியாத, அடைய முடியாத
அனுபவம் எனக்கு உணர்வாக மாறுகிற போது ஒரு பெரிய மானுடத் தொடர்ச்சியின் பகுதியாக
நானும் என்னுடைய படைப்பும் மாறுகிறோம் என்று தெளிவாகப் பிற படைப்புகள் குறித்துச்
சொல்கிற போதும் கவிதையின் பேருலகைத் தரிசிக்கிறவாராக அவரை நான் அடையாளம் காணுகிறேன்.
அவருடைய சிலைகளின் காலம் தொகுப்பில் ஒரு கவிதை ’பாட்டியின் மணம்’ என்று அதில்
சில வரிகள்.
பாட்டியிடம்
சொற்களின் வானம் இருந்தது.
ஒரு சூரியனும் இருந்தது.
அவ்வப்போது சூரியன் விடிந்து
எனது சின்ன உலகில்
அநேக முகங்களை அடையாளம் காட்டியது
எத்தனை முகங்கள்...
எத்தனை நபர்கள்.....
இதே வியப்புடன் விடை பெறுகிறேன். சுகுமாரனது கவிப்பேருலகிலும் எத்தனை
கவிதைகள், எத்தனை முகங்கள்.நன்றி சுகுமாரன், நன்றி நண்பர்களே..
6 comments:
அருமையான உரை. நன்றி ஐயா.
சுகுமாரன் கவிதைகளின் தீவிர வாசகன் நான். அவருடைய மொழி எப்போதும் தன் வசீகரத்தால் என்னை மனதின் ஆழ்கடலில் சிறகுகள் விரித்து பறக்க வைக்கிறது. உங்கள் கருத்துரை அற்புதம்!
நன்றி ஜெகதீசன், நன்றி உதயசங்கர்
சுகுமாரன் தமிழுக்கு ஆற்றி இருக்கும் பணி, கொடை மீண்டும் மீண்டும் பேசப்பட வேண்டியவை. அதற்கொரு வாய்ப்பளித்த மனுஷ்யபுத்திரனுக்கும் அதைப் பயன்படுத்தி சுகுமாரனுக்கு உரியதைச் செய்து சிறப்பித்த உங்களுக்கும் நன்றி!
மேடைப்பேச்சில் இவ்வளவு சுருக்கமாகத்தான் பேசமுடியும். என்றாலும், அவர் எழுதத் தொடங்கிய காலம்தொட்டு இன்றுவரையிலான அவரது வெளிப்பாடுகளை எடுத்துப் பேசி இருக்கிறீர்கள். முக்கியமாக, அவரது கவனம் முங்கி எடுக்கும் முத்து இன்ன வகையானது என்று மிகச் சரியாக வெளியரங்கப்படுத்தி இருக்கிறீர்கள். நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள், கவிஞரே, வாழ்க!
Wow...!
Post a Comment