ஒவ்வாமை
முந்தும் கெட்டிக்காரத்தனம்
வாய்க்கப் பெறாதவர்கள்
வரிசைகளைத் தவிர்க்க
விரும்புவது இயல்புதான்
யோனித் திரவத்திடையே
விரையும் உயிரணுக்களுக்கே
வரிசைச் சாமர்த்தியம்
உண்டுமா தெரியவில்லை
ஆனால் அம்மாவுடன்
மருத்துவ மனையில்
கருப்பை அண்டத்துயிராய்
காத்திருப்பதில் துவங்கும்
வரிசை வாழ்வு
அன்று வேறு யாரேனும்
சாகாவிட்டால் மயானத்தில்
காத்திருக்க வேண்டியதில்லை
பாடையில் நீ
அமர்ந்து கொண்டோ
அடுக்குப் படுக்கையில்
தூங்க முயன்று கொண்டோ
புகைவண்டியில்
போகும் போதும் நீ
ஒரு வரிசையில் இருக்கிறாய்
போக்குவரத்து நெரிசலில்
நிற்பதுவும் நடப்பதுவும்
நகர்வதுவும் தாமறியாமல்
வரிசையையே மேற்கொள்கின்றன
தவிர்க்க முயன்றாலும்
கவி வரிகள்
கால வரிசையொன்றைக்
கைக்கொள்கின்றன
வரிசை ஒவ்வாமை தவிர்க்க
வழி உபதேசிக்கிறார்களாம்
வரிசையில் நில்.
-கலாப்ரியா
9 comments:
அன்றாட வாழ்வின் கசப்பாகிவிட்ட விசயத்தை, சுவையான எள்ளலாக சொல்லியிருக்கிறீர்கள்.
வரிசை பற்றிய கவிதையில் இதுதான் முதலா!அல்லது இதுவும் வரிசையிலா?
பின் தொடர...
ஒழுங்கு சார்ந்தும் அதிகாரம் சார்ந்தும் நிர்பத்திக்கப்படும் வரிசையை எள்ளளாக்கி கலைத்துப்போடுகிறது கவிதை.
@முத்துவேல்: வரிசை பற்றிய கவிதைகளில் இது பின்னாலேயே வருகிறது நிறைய கவிதைகள் முன் நிற்கின்றன...நன்றி
ரொம்பப் பிடிச்சிருக்கு..
அழகு சார், வித்தியாசமான வாழ்வின் தத்துவங்கள் ...
மயானத்திலும் வரிசையில் காத்திருக்கும் பாடையின் நிலை சொன்னது உச்சம். வாழ்க்கையில் வரிசை இல். வரிசையில் வாழ்க்கை இல். அழகான கவிதை. பாராட்டுகள்.
இந்தக் கவிதையினைப் படித்தபிறகு எப்படி யோசித்தாலும் ஏதோ ஒரு வரிசையில் நாம் நின்று கொண்டே இருப்பது போல்தான் தோன்றுகிறது.
கவிதையின் ஒவ்வொரு பத்தியும் கலக்கல். வாழ்வின் எதார்த்தத்தை நகைச்சுவையாய் சொன்ன கவிதை. பகிர்விற்கு நன்றி.
Post a Comment