Wednesday, March 2, 2011

நன்றி: உயிர் எழுத்து-மார்ச்சு 2011

சுமை-1

நினைவுக்கான தீனி

வாழ்க்கையிலிருந்து விளைகிறது

கனவு தன் தீனியை

உறக்கத்தின் வெளியெங்கிலுமிருந்து

துளிர் நீட்டி உண்ணுகிறது


அந்த வாக்கியம் மறுபடி

கனவில் வந்தது

இம்முறை மறந்து விடாதென்ற

நம்பிக்கையுடன்

கனவைத் தொடர

கண்களை அனுமதித்தேன்


கனவு கனவுக்குள் புதைய

வாக்கியம்

வைரமாகிக் கொண்டிருக்கிறது


தோண்டுகிற ஒவ்வொருவரிடமும்

கனவு தன் இறுக்க

அடுக்கைச் சொல்லித் தோற்று

ஒரு தலைப்பை

நட்டு வைக்கிறது


தலைப்பின் சுமையை

கவிதை

காரணமில்லாமல்

சுமந்து கொண்டிருக்கிறது


சுமை-2

கனவு

உங்கள் கனவுதான்

உங்கள்

சொற்படி கேட்கிறதா

வாழ்வு நம்

வாழ்வுதான்

நம் விருப்பத்திற்கு

வாழ முடிகிறதா

பிறகேன்

கவிதையைத்

தோளில் சுமந்து

தூங்க வைத்து

தொட்டிலில்

இடுகிறோம்

வழிமயக்கம்

பாதை நொடியின்

ஒவ்வொரு

குலுக்கலுக்கும்

நொதித்த திரவம்

பீப்பாயின்

பக்கவாட்டில் வழிந்து

பாளைச் சொட்டை

சுவைத்து

மயங்கியிருந்த வண்டுகளை

வெளித்தள்ளின.

கிறக்கம் நீங்க நீங்க

வண்டியின் வேகத்திற்கு

ஈடு கொடுத்து

அவை பறந்து

பறந்து விழுந்தன

நிழலில் நிறுத்தி

முற்றாய்ச் சுடாத

கலயத்தில் சாய்த்த

திருட்டுக்கள்ளை

மாந்தி மாடுகளுக்கும்

தந்தான்

இப்போது பாதையில்

நொடியே இல்லை

வண்டிக்கும் மாடுகளுக்கும்

வண்டியோட்டிக்கும்


1 comment:

உயிரோடை said...

ந‌ல்ல‌ க‌விதைக‌ள். ப‌கிர்விற்கு ந‌ன்றியும்.